World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

Tensions deepen as NATO begins Macedonia mission

நேட்டோ மசடோனியாவுக்கு இராணுவத்தை அனுப்புவதுடன் பதட்டநிலை ஆழமடைந்துள்ளது

By Chris Marsden
25 August 2001

Back to screen version

நேட்டோ கூறியுள்ள பணிக்கான சாத்தியம் பற்றி கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஐயுறவாதம் இருந்தபொழுதும், மசடோனிய தலைநகர் ஸ்கோப்ஜிக்கு நேட்டோ துருப்புக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வரத்தொடங்கி உள்ளன.

நேட்டோ வல்லரசுகளுக்குள்ளே அப்பணிக்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இருக்கிறது. அது, ஒரு மாதம் என வரையறுக்கப்பட்ட மற்றும் அல்பானிய பிரிவினைவாதிகளான தேசிய விடுதலை இராணுவத்திடம் (NLA) இருந்து ஆயுதங்களைச் சேகரிக்கும் பணி என மட்டுப்படுத்தப்பட்டதைக் காட்டிலும், முடிவே இல்லாத இராணுவ ஆக்கிரமிப்பு என ஆகிவிட்டதாக பலர் நம்புகின்றனர்.

"அத்தியாவசிய அறுவடை நடவடிக்கை" யில் பங்கேற்பதற்கு திட்டமிட்டிருந்த துருப்புக்களை கிட்டத்தட்ட இரட்டிப்பாக ஆக்குவதற்கு பிரிட்டன் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் உள்ளுறைரீதியில் ஆபத்தான பணிக்காகத் தேவைப்படும் சிறப்புத் தேர்ச்சி வாய்ந்த படைப்பிரிவுகளை ஏனைய நேட்டோ நாடுகள் வழங்கத் தவறியதால் ஆகும். 3500 பலமான துருப்புக்களில் 2000ஐ பிரிட்டன் வழங்கும். நேட்டோ தலைமையகத்தால் அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், "ஆனால் ஒருவரும் முன்வரவில்லை" என்றும் பாதுகாப்பு வட்டாரம் கூறியது.

கெஹார்ட் சுரோடரின் சமூக ஜனநாயகக்கட்சி தலைமையில் உள்ள ஜேர்மன் அமைச்சரவை புதன் கிழமை அன்று 500 துருப்புக்களை அனுப்புவதற்கான திட்டங்களை அதன் ஏற்பிசைவு வழியாக தள்ளியது, ஆனால் அது சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதிகளினால் தலைமை தாங்கப்படும் அதிருப்தியாளர் குழுவின் எதிர்ப்பை பாராளுமன்றத்தில் எதிர்கொள்கிறது. மசடோனியா பணியில் ஜேர்மன் பங்கெடுப்பதை எதிர்க்கும் சமூக ஜனநாயகக் கட்சியினருள் ஒருவரான டீற்றர் மாஸ் (Dieter Maass) பின்வருமாறு கூறினார்: "வன்முறை பதுங்கிக் கொண்டிருக்கும் பொறியின் ஆபத்தை நான் பார்க்கிறேன். நாம் தலையிட்டு மீண்டும் சண்டை வெடித்தால் என்ன செய்வது?"

NLA போர்நிறுத்தத்தை மேலோட்டமாகக் கடைப்பிடித்தாலும், நேட்டோ பணி கூறப்பட்ட விதிமுறைகள் தொடர்பாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை அல்லது குறைவான சந்தர்ப்பமே இருக்கிறது. NLA ஆனது இரண்டாயிரத்துக்கும் நான்காயிரத்துக்கும் இடையிலான ஆயுதங்களை ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது அவர்களின் ஆயுத தளவாடத்தில் சிறிதளவு தான். மசடோனிய அரசாங்கமானது NLA வைத்திருக்கும் ஆயுதங்கள் 85,000க்கு நெருக்கமாக இருக்கும் என்று வலியுறுத்துகிறது, ஆனால் இதனை பெருப்பிக்கப்பட்ட எண்ணிக்கையாகக் கொண்டாலும்கூட, கடந்த இரண்டு மாதங்களில் நேட்டோ இராணுவம், கோசோவா எல்லையில் 600துப்பாக்கிகள், 49,000 சிறிய துப்பாக்கி ரவைகள்,1000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்,650 மோர்ட்டார் குண்டுகள் மற்றும் 1,400கை எறி குண்டுகள் மற்றும் கண்ணி வெடிகள், அதேபோல 500 அளவில் ஆட்கள் 24 குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள் ஆகியனவற்றை பறிமுதல் செய்திருக்கின்றது. இதற்கு மேலாக, NLA உடைமையாகக் கொண்டிருக்கும் குறைந்த பட்சம் T35 ரஷ்யன் டாங்குகள், 600,000 அளவிலான ஆயுதங்கள் ஆகியன அல்பானியாவில் கள்ளச் சந்தையில் விற்பனைக்காக இருக்கின்றன. கடந்த காலங்களில் NLA, பின்னால் பயன்படுத்துவதற்காக எல்லைகளைக்கடந்து கொசோவாவுக்கு கட்டுமீறி ஆயுதங்களை அனுப்பி இருந்திருக்கிறது.

இதற்கு மேலாக, வெளிப்பார்வைக்கு பிரிந்து சென்று அமைக்கப்பட்டதான, அல்பானிய தேசிய இராணுவமானது (ANA), போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளது. கடந்த வாரம் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட நாள் அன்று 10 போலீசாரைக் கொன்றதற்கு தாமே பொறுப்பு என்று ஏற்கனவே உரிமை கோரியது. முறையான NLA ன் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான வெறும் புனைப்பெயர்தான் ANA என்ற குற்றச்சாட்டை மேற்கத்திய ராஜதந்திரி ஒருவர் மேற்கோள் காட்டினார். "யாராவது அதைச் செய்தார்கள் என்றால் அது NLA வாகத்தான் இருக்கும்" என்றார் அவர். "அவர்கள் அதனைத் திட்டமிட்டார்களோ அல்லது இல்லையோ, நான் அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றே சந்தேகப்படுகிறேன், NLA தான் வெற்றியாளராக வரும்."

நேட்டோ வல்லரசுகள் குறிப்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் தலையிடுவது, அவர்களின் அல்பானிய பொம்மைகளை, NLA மற்றும் அதன் தாய் அமைப்பான கொசோவா விடுதலைப்படை (KLA) ஆகிய இவற்றைப் பலப்படுத்தும் பொருட்டே ஆகும் என்று பெரும்பான்மையான மசடோனியர்கள் நம்புகிறார்கள். அத்தியாவசிய அறுவடை நடவடிக்கையை, மசடோனியாவை சீர்குலைப்பதற்கான மற்றும் இதன் மூலம் நிலையாக நேட்டோ இராணுவத்தை அங்கு வைத்திருப்பதற்கான திட்டவட்டமான முயற்சி என அவர்கள் கருதுகின்றார்கள். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரம்ஸ்பெல்ட் (Rumsfeld) பத்திரிகைச் செய்தி ஸ்தாபனங்களிடம் பின்வருமாறு கூறினார்: "நாட்டை பொறுப்பில் எடுக்க நேட்டோ அழைக்கப்படவில்லை. அவர்களுக்கு அரசாங்கம் இருக்கின்றது. அவர்களுக்கு கட்டமைப்பு இருக்கிறது. அவர்கள் நேட்டோவை வந்து ஆக்கிரமிக்கும்படி கேட்கவில்லை." ஆனால் துல்லியமாக அத்தகைய கைப்பற்றல் முன்னணி இராணுவ நபர்கள், சர்வதேச நெருக்கடி குழு போன்ற உயர் கொள்கை மன்றம் மற்றும் மேற்கத்திய பத்திரிகை செய்தி ஸ்தாபனத்தின் பகுதிகள் ஆகியவற்றால் வெளிப்படையாக ஆதரிக்கப்பட்டது.

கொசோவா பிரச்சாரத்தின் போது நேட்டோவின் உயர் படைத்தளபதியாக இருந்த வெஸ்லி கிளார்க், இந்தவாரம் நியூயார்க் டைம்ஸில் மேற்கத்திய இராணுவம் நிலையாக நிலைகொண்டிருப்பதற்கான ஏற்பாட்டை ஆதரித்து எழுதினார். "ஐரோப்பாவின் இந்த உடைந்து போன மூலையில் ஜனநாயகம் வேலைசெய்ய வேண்டும் என்பதில் நேட்டோ சீரிய அக்கறை கொண்டிருந்தால், எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரம் மேற்கத்திய படைகள் நுழைவதும், எவ்வளவு விரிவாகவோ அவ்வளவு விரிவாக ஈடுபடலும் மற்றும் எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலத்திற்கு தங்கி இருக்க வேண்டியதும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது."

மீண்டும் பெயரளவில் தாராண்மை பத்திரிக்கைகளாக இருப்பவைதான் இராணுவத் தலையீட்டிற்கு மிக ஆர்வமாக சார்பு நிலை எடுக்கின்றன. பிரிட்டனின் இண்டிபெண்டன்ட் பத்திரிகையும் கூட துருப்புக்கள் போவதற்கு," 'அது எடுக்கும் வரைக்குமாக' என, கொசோவா பற்றி ரொனி பிளேர் பயன்படுத்திய சொற்றொடரில்", அழைப்புவிடுத்திருந்தது. தற்போதைய நடவடிக்கையை வரவேற்கும் விதமாக, "நேட்டோவுக்குள்ளே ஐரோப்பிய பாதுகாப்புப் படை தேவை என்பதற்கு நல்ல உதாரணம்" என்றது. இந்த முரண் உரையை விட்டுவிட்டுப் பார்ப்போமாயின், கொன்சர்வேட்டிவ்களைக் காட்டிலும் தாராண்மைவாதிகளே பதுகாப்புச்செலவு அதிகரிப்புக்காக வாதிடுகின்றனர், மிகத்திறமான வளங்களின் சேர்மத்தின் ஊடாக ஐரோப்பிய செலவிடும் ஆற்றலை மேலும் தூண்டி விடுவதாக இந்நடவடிக்கை செயல்புரியும்" என்று அப்பத்திரிகை முடித்தது.

மேற்கத்திய தலையீட்டிற்கு மசடோனிய அரசாங்கத்தின் எதிர்ச்செயலானது, ரஷ்யாவுடன் மூலோபாய கூட்டை அமைப்பதற்கான முயற்சிகளை ஏற்படுத்த இருக்கிறது. மசடோனியா, ரஷ்யா மற்றும் உக்ரேனுடன் தனது சொந்த ஆயுத அளிப்புக்களைக் கட்டி எழுப்பி வருகிறது.

மசடோனியாவுக்கு கவச பீரங்கி ஹெலிகாப்டர்களைக் கொடுத்ததற்காக மேற்கத்திய வல்லரசுகளால் உக்ரேனிய அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது. அவர்களது ஆயுத விற்பனையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு தாங்கள் எண்ணிவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இருப்பினும், உக்ரேனிய அன்டோநோவ் சரக்கு வானூர்தியில் ஏற்றப்பட்ட கணிசமான ஆயுதங்கள் மசடோனியாவின் பெட்ரோவாக் விமானத் தளம் வழியாக இன்னமும் வந்து கொண்டிருப்பதாக மேற்கத்திய பாதுகாப்பு வட்டாரங்களால் கூறப்படுகின்றன.

வியாழன் அன்று, மசடோனிய ஜனாதிபதி பொரிஸ் டிராஜ்கோவிஸ்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரெய்னில் சந்தித்தார். புட்டின், நேட்டோ பணி பற்றி தனது சொந்த "பெரும் சந்தேகங்களை" வெளிப்படுத்தியதுடன் அதற்குப் பதிலாக பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அழைத்தார். நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மசடோனியாவிற்கு உதவும் ரஷ்யாவின் பங்கு பற்றி டிராஜ்கோவிஸ்கி வலியுறுத்தினார்: "நமது கணிப்பீடு பொருந்திப்போகிறது. ஜனாதிபதி புட்டின் மற்றும் நான், இருவரும் இந்தப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான இரந்தம் வழிந்து கொண்டிருக்கும் இடமான கொசோவால் தான் இந்த பிராந்தியத்தின் பிரச்சினைகளுக்கான மூலம் இருக்கின்றது என்று நினைக்கிறோம்" என்றார்.

1999ல் நேட்டோ சேர்பியா மீது குண்டுகளைப் பொழிந்து கொசோவாவைக் கட்டுப்பாட்டில் எடுத்த பின்னர் உடனே மேற்கத்திய வல்லரசுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பதட்டங்கள் வெடிக்கும் நிலையை எடுத்தன. பிரிஸ்டினா விமான தளத்தை ஆக்கிரமித்திருந்த நேட்டோ துருப்புகளுக்கும் ரஷ்யத் துருப்புக்களுக்கும் இடையில் திடீர் கைகலப்பு அபிவிருத்தி அடைந்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வல்லரசுகளிடமிருந்து தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் பால்கன்களில் அதன் சொந்த மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்கும் ரஷ்யா அதன் படைகளை முன் ஏற்பாடாகவே அங்கு அனுப்பி நிலைகொண்டது. பால்கன்கனில் புதிய பிரிவினைகளில் யார் ஆதாயம் அடைவது என்பதில் மேற்குடனான எந்த விதமான பேரத்திலும் தனது கரத்தைப்பலப்படுத்த ரஷ்யா நாடுகிறது. அது பின்வருமாறு வெளிப்பட்டது. நேட்டோவின் உச்ச படைத்தளபதி வெஸ்லி கிளார்க், பிரிஸ்டினா விமான தளத்தை ரஷ்ய துருப்புக்கள் கட்டுப்பாட்டில் எடுத்த பொழுது அதனைத் தடுக்க இராணுவத் தாக்குதலைத் தொடுக்குமாறு பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுத் துருப்புக்களுக்கு ஆணையிட்டதாக அறிவிக்கப்பட்டது. கொசோவாவில் உள்ள பிரிட்டனின் மூத்த இராணுவப் பிரதிநிதியான ஜெனரல் சர் மைக்கேல் ஜாக்சன் அதற்கு மறுத்ததால் மட்டுமே அது தடுக்கப்பட்டது. ஜாக்சன், கிளார்க்கிடம் கூறினார்: "உங்களுக்காக நான் மூன்றாவது உலக யுத்தத்தைத் தொடங்கப் போவதில்லை."

ரஷ்ய ஆளும் தட்டானது பால்கன்கனில் வளர்ந்து வரும் அமெரிக்க ஆதிக்கத்தை, எண்ணெய் வளம் மிக்க கஸ்பியன் எண்ணெய்ப்படுகை போன்ற பகுதிகளில் தமது மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தல் என்று கருதுகிறது. கொசோவா பிரச்சாரம் முடிந்த பின்னர், செச்சென்யாவில் ரஷ்யா தனது சொந்த இரத்தம் தோய்ந்த யுத்தத்தைத் தொடுத்தது மற்றும் பால்கன், காஸ்பியன் எண்ணெய்ப்படுகைகள் மற்றும் காகசஸ் பகுதிகளில் அமைக்கப்படும் எந்த அரசுகளிலும் மேற்கத்திய செல்வாக்கை விலக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அது எடுத்துக்கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved