World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைLSSP acts as chief apologist for Sri Lankan president's autocratic moves லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு பிரதம பரிந்துரையாளராக தொழிற்படுகின்றது By Nanda Wickremasinghe இலங்கையின் இன்றைய அரசியல் நெருக்கடியில் 1940பதுகளிலும் 1950பதுகளிலும் ட்ரொட்ஸ்கிச முன்நோக்குக்காகப் போராடிய லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததையும் அவரின் ஏனைய ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஆதரித்துப் பேசியுள்ளது. இங்ஙனம் செய்வதன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை அப்பட்டமான சோவினிச பாஷையில் நியாயப்படுத்திக் கொண்டுள்ளனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் காரணமாக அத்தகைய நடவடிக்கை அவசியமாகியுள்ளதாக அவர்கள் வலியுறுத்திக் கொண்டுள்ளனர். 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி குமாரதுங்கவின் தாயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினதும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் (SLFP) தலைமையிலான ஒரு முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதன் மூலம் சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளை வெளிப்படையாக கைவிட்டது. லங்கா சமசமாஜக் கட்சி இன்று ஒரு பாராளுமன்றவாத எச்சமேயன்றி வேறொன்றும் அல்ல. அது ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான பொதுஜன முன்னணி அரசாங்கத்தை தூக்கிப் பிடிப்பதற்காக தனக்கு தொழிலாளர் வர்க்கத்தினுள்ளே எஞ்சியுள்ள ஆதரவையும் அதனது சோசலிச கடந்த காலத்தையும் சிடுமூஞ்சித் தனமாக சுரண்டிக் கொள்கின்றது. சமீபகால அரசியல் நிகழ்வுகள் சமசமாஜக் கட்சித் தலைவர்கள் எந்த ஒரு நிலைப்பாட்டையும் தாண்டிச் செல்ல தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஜூலை 10ம் திகதி அரசாங்கத்தின் பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாதுபோன நிலைமைக்கும் எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பது ஊர்ஜிதமான ஒரு நிலைமைக்கும் முகம் கொடுத்த நிலையில் குமாரதுங்க பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் வரையறுத்துக் கூறப்படாத அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு அங்கீகாரம் பெறவும் ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தப் போவதாகவும் அறிவித்தார். அவர் தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பாவித்து நாட்டின் நீண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் (PTA) பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தையும் (PSO) கணிசமான அளவு தூக்கிப்பிடிக்க நடவடிக்கை எடுத்த ஒரு சில நாட்களின் பின்னரே பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். நீதியமைச்சரும் லங்கா சமசமாஜக் கட்சித் தலைவருமான பற்றி வீரக்கோன் இந்த சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் குமாரதுங்கவின் முக்கிய அரசியல் பரிந்துரையாளராக மாறியுள்ளார். குமாரதுங்க வீரக்கோனை உண்மையில் ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமான தளபதியாக காண்கிறார். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஐந்து முன்னணி அமைச்சர்களைக் கொண்ட குழுவுக்கு அவரையும் நியமனம் செய்துள்ளார். ஜூலை 13ம் திகதி அரசுடமை ரூபவாஹினி தொலைக் காட்சி சேவையில் குமாரதுங்கவிற்கு சற்று பின்னர் அமைச்சர் பற்றி வீரக்கோன் தோன்றினார். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை உண்மையிலேயே ஒரு ஜனநாயக ரீதியான முன்னோடிப் பாய்ச்சல் என வீரக்கோன் வாதிட்டார். கருத்துக் கணிப்பு ஒரு "நிஜமான ஜனநாயக அரசியலமைப்பை" சிருஷ்டிப்பதற்கும் "ஒரு பாராளுமன்ற அமைப்பு நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகார அம்சங்களை சிருஷ்டிக்கவும்" செய்யும் எனவும் அவர் வாதிட்டார். இந்த அறிக்கைகளை வெளியிடும் போது வீரக்கோன் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் குமாரதுங்கவின் தீர்மானம் "நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் சர்வாதிகார அம்சத்தை" நேரடியாகப் பிரயோகிப்பதாகும் என்ற உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டார். மேலும் உத்தேசிக்கப்பட்டுள்ளபடி கருத்துக் கணிப்பு எந்தவிதமான அரசியலமைப்பு மாற்றங்களையும் திட்டவட்டமாகப் பிரேரிக்கவில்லை. வெறுமனே ஒரு புதிய அரசியலமைப்பு அவசியம் என்பதை பொதுமக்கள் பொதுவில் ஒத்துக்கொள்கிறார்களா என மட்டுமே கேட்கிறது. ஒரு ஜனநாயகப் பாய்ச்சலுக்கான ஒரு முன்னோடியாக அமையாமல் குமாரதுங்கவின் நடவடிக்கை ஒரு பெரிதும் எதேச்சதிகார ஆட்சி முறையை நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கையாகும். "இன்றைய தேர்தல் முறை பொதுஜனங்களின் அபிப்பிராயத்தை சரியான முறையில் பிரதிபலிக்காததால்" வீரக்கோன் பெரிதும் வஞ்சனையான முறையில் நாட்டின் தேர்தல் சட்டங்களில் மாற்றங்கள் அவசியம் எனவும் கூட வாதிட்டார். பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள் இன்றைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை தமிழ் முஸ்லீம் சிறுபான்மையினக் கட்சிகள் உள்ளடங்களாலான சிறிய கட்சிகளுக்கு கூடுதலான எடைய கொடுத்து விடுவதாகவும் இது மாற்றப்பட வேண்டும் எனவும் வாதிட்டுள்ளனர். ஜூலை 13ம் திகதி குமாரதுங்கவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்ட பொதுஜன முன்னணி ஆதரவு தொழிற்சங்கங்களால் கொழும்பில் கூட்டப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்துக்கு வீரக்கோன் தலைமை தாங்கினார். அவர் பழமைவாத யூ.என்.பி.யை வலதுசாரி கோணத்தில் இருந்து தாக்கினார். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து லஞ்சம் பெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார். "(எதிர்க் கட்சித் தலைவர்) ரணில் (விக்கிரமசிங்க) தனது துரும்புச் சீட்டின் மூலம் ஜனாதிபதியை ஆட்டிப்படைக்க முடியாது என்பதை இப்போது உணர்ந்து கொண்டுள்ளார். அதை அங்ஙனம் செய்ய அவர் மாற்றுவழிகளைத் தேடுகின்றார். அவர்கள் எம்.பீ.க்களை விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இந்த நோக்கில் அவர்கள் விடுதலைப் புலிகளிடம் இருந்து நிதி பெற்று வருகின்றார்கள்." இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பொதுஜன முன்னணி யூ.என்.பி. அரசாங்கங்கள் 18 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு காட்டுமிராண்டி யுத்தத்தை நடாத்திக் கொண்டுள்ளன. இந்த இலட்சணத்தில் வீரக்கோனின் வார்த்தைகள் -யுத்த முயற்சிகளை யூ.என்.பி. காட்டிக் கொடுப்பதாக குற்றம் சாட்டுவதன் மூலம் பேரினவாத உணர்வுகளைத் தட்டி எழுப்ப மட்டுமே துணை போகின்றது. வீரக்கோனின் குறிப்புக்கள் ஒரு கிழமைக்கு முன்னர் நாட்டின் அவசரகால நிலைமையை நீடிக்க ஆதரவு வழங்கத் தவறியமைக்காக அவர் எதிர்கட்சிகளுக்கு எதிராகத் தொடுத்த கர்ண கடூரமான தாக்குதல்களுடன் பூரணமாக ஒத்துப் போகின்றது. அவசரகால நிலை யுத்தத்தின் பெரும் பகுதியில் நடைமுறையில் இருந்த பரந்த அளவிலான அவசரகால அதிகாரங்கள் மாதாமாதம் பாராளுமன்றத்தில் புதுப்பிக்கப்பட வேண்டியவையாக விளங்கியது. பெரும்பாலான கட்சிகள் வழக்காறான முறையில் இதற்கு முத்திரை குத்தி வந்தன. ஆனால் ஜூன் மாதத்தில் இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புக்களான ஜே.வி.பி.யும் சிங்கள உறுமயவும் (SU) அவசரகாலச் சட்ட பிரேரணையை எதிர்த்து வாக்களித்தன. அந்தச் சட்டங்கள் வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடாத்த அவசியமாக இருந்த போதும் தெற்கில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை துன்புறுத்தவே பயன்படுத்தப்பட்டு வருவதாக அவை வாதிட்டன. இந்த விடயம் ஜூலை 6ம் திகதி வாக்கெடுப்புக்கு வந்த போது யூ.என்.பி. இதையே தானும் செய்யப்போவதாக அச்சுறுத்தியது. லங்கா சமசமாஜக் கட்சி பத்திரிகையான 'சமசமாஜய' வில் ஜூன் 14ல் வெளியான ஒரு ஆசிரியத் தலையங்கம் -யுத்தத்தை உக்கிரமாக்க வக்காலத்து வாங்கி வரும்- சிங்கள உறுமயவும் ஜே.வி.பி.யும் (JVP) இராணுவ நடவடிக்கைகளை அச்சுறுத்துவதாக கடிந்து கொண்டது. "அவசரகாலச் சட்டம் இல்லாது போனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையும் கூட பலனற்றுப் போய்விடும்... அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் அளித்த வாக்கு, யுத்தத்தைத் தொடர்வதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தொடர்ச்சியான தடை இரண்டையும் எதிர்ப்பதாக விளங்கியது. சிங்கள உறுமய கட்சியின் நிலைப்பாடு இடைவிடாது யுத்தத்தை தொடர வேண்டும்; விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருப்பின் சிங்கள உறுமய அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிப்பதை எப்படி அது நியாயப்படுத்த முடியும்" என்றது. ஏனைய கட்சிகள் அவசரகாலச் சட்ட பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் பயமுறுத்தலைத் தொடர்ந்து தேசிய தொலைக் காட்சியில் தோன்றி எதிர்க்கட்சிக்கு எதிரான பிரச்சார இயக்கத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை வகுத்துக் கூறினார். அவசரகால நிலைக்கு எதிராக வாக்களிப்பதானது "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதற்கு திட்டவட்டமாக இட்டுச் சென்றிருக்கும்" என்றார். சோவினிச பரிபாசையில், எதிரிக்கு கைகொடுப்பதில் குற்றவாளிகளாகியிருக்கும் எனவும் தெரிவித்தார். கடந்த காலத்தில் ல.ச.ச.க. இலங்கை மீதான ஏகாதிபத்திய சக்திகளின் செல்வாக்கை எதிர்த்து வந்துள்ளது. ஆனால் ஜூன் 25ம் திகதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPSL) சேர்ந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் ல.ச.ச.க. அதற்கு எதிர்மாறாக வாதிட்டது. ஏகாதிபத்திய சக்திகளின் பக்கத்தில் தொடர்ந்து நின்று வருவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை கட்டிக் காப்பது அவசியம் என்றது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டு அல்லது நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்குவதற்கு வாய்ப்பு இல்லை" என இவை குறிப்பிட்டன. குமாரதுங்க ஜூலை 3ம் திகதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு இன்றுள்ள அடக்குமுறைச் சட்டங்களைப் பலப்படுத்த தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தினார். அவற்றை தீவு பூராவும் திணிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யவும் நடவடிக்கை எடுத்தார். லங்கா சமசமாஜக் கட்சி "யூ.என்.பி.யின் சதியை" தோற்கடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமைக்காக அவரைப் பாராட்டியது. இதே நாளன்று லங்கா சமசமாஜக் கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் இடையே ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும்படி பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு பகுதியினரால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு பதிலிறுக்கும் வகையில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு முன்னர் லங்கா சமசமாஜக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சகல கட்சிகளும் ஒரு பொது நிலைப்பாட்டை வகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தது. சமீபத்தில் -ஜூன் 25அளவில்- இக்கட்சி "விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டை இளக்கிக் கொள்ளும் விதத்தில் மேலும் நெருக்குவாரத்தை உருவாக்கும் பொருட்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவும் பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் ஒரு பொதுவான இணக்கப்பாட்டு அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்" என அழைப்பு விடுத்தது. ஆனால் சமசமாஜக் கட்சி தேசிய அரசாங்கத்துக்கான பிரேரணைக்கு ஒரு புதுவிதமான நடுக்கத்தை காட்டிக் கொண்டது. "ஒரு யுத்தம் போன்ற ஒரு தேசிய அவசரகால நிலையில் அரசாங்கமும் எதிர்க் கட்சியும் ஒன்றாகச் செயற்படத் தீர்மானம் செய்தால்" மட்டுமே அது சாத்தியம் என அது கூறிக்கொண்டது. அந்த அறிக்கை மேலும் கூறியதாவது: "இந்நாட்டில் உள்ள யுத்த நிலைமை ஒரு தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிதம் செய்வதற்கான தருணமானால் யூ.என்.பி. பொதுஜன முன்னணியின் -சிறப்பாக ஸ்ரீ.ல.சு.க.வின் பகுதியினருடன் யுத்தம், ஒரு சமாதானத் தீர்வை எட்டுதல் சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக இணங்கிப் போகின்றதா என்பதை அறிய மக்கள் உரித்துடையவர்கள்." உண்மையில் லங்கா சமசமாஜக் கட்சி தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க முன்நிற்கும் ஆளும் வர்க்கத்தில் உள்ளவர்களின்அரசியல் தர்க்கத்தை புரிந்து கொண்டுள்ளது. இரு பெரும் கட்சிகளுக்கு இடையேயான ஒரு கூட்டு இல்லாமல் அரசியல் பாரிசவாதம் தொடரும். ஒரு புறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தச் செய்யும் எந்த ஒரு முயற்சியும் ஜே.வி.பி., சிங்கள உறுமய போன்ற சிங்கள பேரினவாத அமைப்புக்களிடமிருந்து எதிர்ப்பைத் தூண்டிவிடும். மறுபுறத்தில் யுத்தத்தை உக்கிரமாக்குவது தமிழ் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு இட்டுச் செல்லும். இதே சமயம் பெரும் வர்த்தக நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிப்பதற்கும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்குமான வழியாக சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அமுல் செய்யும்படி அரசாங்கத்தை கோரி வருகின்றன. பல தசாப்த காலங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு விசுவாசமான பங்காளராக இருந்துவிட்டு முதலாளி வர்க்கத்தின் உத்தரவுகளை அமுல் செய்யாமல் இருப்பது என்பது லங்கா சமசமாஜக் கட்சியின் மனச் சாட்சிக்கு ஒத்துப் போகாததாக உள்ளது. ஆனால் யூ.என்.பி.யுடன் நேரடியாக ஒரு கூட்டரசாங்கத்துள் நுழைந்து கொள்வதை நியாயப்படுத்த லங்கா சமசமாஜக் கட்சி கூறிவந்த சந்தர்ப்பவாத அடிப்படைக் காரணங்களை -இலங்கை ஆளும் வர்க்கத்தின் பாரம்பரியக் கட்சியான யூ.என்.பி.யுடன் ஒப்பிடும்போது ஸ்ரீ.ல.சு.க. (SLFP) "குறைந்த கெடுதியை" கொண்டுள்ளது- பாதிப்பதாக உள்ளது. ஜூலை 3ம் திகதி ல.ச.ச.க.வும் இ.க.க.யும் வெளியிட்ட தமது அறிக்கையில் யூ.என்.பி.யுடனான எந்த ஒரு கூட்டரசாங்கத்தையும் எதிர்த்துள்ளனர். அது "பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் மத்திய -இடது கால குணாம்சத்தை தீவிரமாக மாற்றமடையச் செய்து விடும்" என்றுள்ளனர். ஆதலால் இவ்விரு கட்சிகளும் யூ.என்.பி. அதனது இரத்தம் தோய்ந்த கரங்களுடன் எந்த ஒரு அரசாங்கத்திலும் ஒரு பாகமாக இருக்கும் எண்ணத்தை நிராகரிக்கின்றன." இதே வேளையில் ல.ச.ச.க, இ.க.க. கட்சிகளின் தலைவர்கள் யூ.என்.பியுடன் கூட்டாக இருப்பது என்பது தமது சொந்த சந்தர்ப்பவாத அவசியங்களை வெளிப்படையாக அம்பலப்படுத்திவிடும் என்பதையிட்டும் பெரிதும் கவலை கொண்டுள்ளனர். அவர்களது எதிர்ப்புக் கூட ஆளும் வர்க்கத்துக்கு ஒரு பெரிதும் அடிப்படையான விடயத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. ல.ச.ச.க.வும் இ.க.க.வும் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு மாபெரும் கூட்டரசாங்கத்தில் சேர்ந்து கொள்ளும் போது அத்தகைய அரசாங்கத்துக்கு எதிராக தவிர்க்க முடியாத விதத்தில் பொதுஜன வெறுப்பு ஒரு புரட்சிகரப் பாதையில் பயணம் செய்யும் போது அதைத் தடுப்பதற்கான இடிமின்னல் பிரம்பு தடியாக செயற்படுவது யார்? எந்தளவுக்கு ல.ச.ச.க. நாற்றம் கண்டு போயிற்று என்பதை அதனது இன்றைய நடவடிக்கைகளை நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அது எடுத்த நிலைப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும். 1958ல் இக்கட்சி அன்றைய பிரதமரும் குமாரதுங்கவின் தந்தையுமான சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் அவசரகாலச் சட்டத்தை திணிக்க வாய்ப்பளிக்கும் பொருட்டு பொதுசன பாதுகாப்பு சட்டத்தை திருத்தும் முடிவை எதிர்த்து தீவு பூராவும் தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இத்திருத்தங்கள் சிங்கள தீவிரவாதிகளுக்கு எதிரானவை என்ற பண்டாரநாயக்கவின் நியாயப்படுத்தல்களை ல.ச.ச.க. தலைவர்கள் நிராகரித்தனர். இன்று மோசமான அரசியல் நெருக்கடி நிலைமையின் கீழ் ல.ச.ச.க. தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராகத் தவிர்க்க முடியாத விதத்தில் பயன்படுத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை திணிப்பதை ஆதரிப்பதன் மூலம் முதலாளித்துவ அரசின் விசுவாசமன காவலனாக செயற்படுகின்றது. ல.ச.ச.க.வின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பற்றி வீரக்கோன் தனது ஆசனத்தை தொழிலாளர்களிடம் இருந்து கிடைத்த வாக்குகளின் மூலம் அல்லாது குமாரதுங்கவின் நல்லெண்ணம் மூலமே பெற்றுக் கொண்டார். ல.ச.ச.க.வின் ஆதரவு தொழிலாளர் மத்தியில் பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு விட்டதை இது எடுத்துக் கடடுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் வீரக்கோன் தேசியப் பட்டியலின் மூலம் பொதுஜன முன்னணியின் ஒரு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் இதற்காக தனது கோழைத்தனமான ஆதரவை குமாரதுங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஆதரவு வழங்குவதன் மூலம் காட்டிக் கொண்டார். லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் 1964ல் தமது சோசலிசக் கொள்கைகளை அப்பட்டமாகக் கைகழுவிவிட்டதோடு இலங்கை முதலாளி வர்க்கத்தின் சகல அவசியங்களுக்கும் எதிரில் அரசியல் ரீதியில் விலைமகளாக தொழிற்பட்டு வந்துள்ளனர். இன்றைய அரசியல் குழப்ப நிலைமையில் இருந்து தலையெடுக்கும் சர்வாதிகார வடிவிலான அரசாங்கத்துக்கு பரிந்துரையாளர்களாக லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் இன்று தமது சேவைகளை வழங்கி வருகின்றனர். |