World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : ஜப்பான்

Mass layoffs underway in Japan

ஜப்பானில் பரந்த அளவிலான வேலைகள் குறைப்பினால் ஏற்படும் வேலை இழப்பு நடந்து கொண்டிருக்கிறது

By James Conachy
27 August 2001

Back to screen version

உள்நாட்டு மற்றும் பூகோள பொருளாதாரம் மெதுவாகக் கீழிறங்கிக்கொண்டிருக்கையில், பெரும் ஜப்பானிய உயர் தொழில்நுட்ப நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் இலாபகரத்தில் வீழ்ச்சியை அறிவித்துள்ளதுடன் பெரும் எண்ணிக்கையில் வேலையில் வெட்டுக்களையும் அறிவித்துள்ளன. வார இறுதியில், ஜப்பானின் பெரிய கணினி சில்லுகள் உற்பத்தியாளர்களுள் மிகப் பெரிய உற்பத்தியாளரான ரொஷிபா (Toshiba), அதனது பூகோள ரீதியான உழைப்போர் தொகையான 1,90,000 ல் இருந்து 20,000 வேலைகளை வெட்டப்போவதாக அறிவித்துள்ளது. அதேவேளை மின் எந்திரங்கள் உற்பத்தியாளர்களுள் மிகப்பெரிய உற்பத்தியாளரான ஹிட்டாச்சி (Hitachi) பிரதான மறுசீரமைப்பு செய்யப் போவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தி உள்ளது.

ரொஷிபாவின் வேலை வெட்டுக்கள், வருகின்ற ஆண்டிற்கான அதன் இலாபம் பற்றி முன்கூட்டிய கணிப்பிடல் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலாபத்திலிருந்து 958 மில்லியன் டாலர்கள் இழப்பிற்கு குறைக்கப்பட்டுள்ளதுடன் இணைந்ததாக இருக்கிறது. 14,000 வேலைகள் ஜப்பானிலும் மீதம் உள்ளவை சர்வதேச ரீதியாகவும் அழிக்கப்படவுள்ளது. மியெ ஆட்சிப்பகுதியில் உள்ள நினைவு- சில்லு (memory-chip) நிறுவனம் முழுவதுமாக மூடப்பட இருக்கின்றது. ரொஷிபாவின் தலைவர் டடாஷி ஒக்காமுரா (Tadashi Okamura) தகவல் தொழில்நுட்பத் தொழில்துறை தேறாது என்பது "2003 அல்லது பின்னும்" வரை எதிர்பார்க்கப்பட்டது என அறிவித்தார்.

ஜப்பானிய தினசரி பத்திரிகையான யொமியூரி சிம்பன் படி, ஹிட்டாச்சியானது "அதன் செமிகண்டக்டர் பிரிவில் வேலைகளை சீர்படுத்துவதன் மூலமும் வெளி நடவடிக்கைகளை முழுமையாக மறு ஒழுங்கமைப்பதன் மூலமும் நிலையான செலவுகளை குறைப்பதற்கு" திட்டமிடுகின்றது. அந்நிறுவனமானது உலகம் முழுவதும் 3,40,000 தொழிலாளர்களை அமர்த்தி உள்ளது மற்றும் சில்லுகள் (Chip) விலை வீழ்ச்சியாலும் மின்னணுவியல் சாதனங்கள் விற்பனை வீழ்ச்சியாலும் பெரும் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை ஆனால் 20,000 க்கும் மேல் வேலையில் வெட்டுக்களை செய்யப்போவதாக மதிப்பிடப்படுகிறது.

ரொஷிபா மற்றும் ஹிட்டாச்சியால் மறுசீரமைப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 20ல் செமி கண்டக்டர் மற்றும் வன்பொருள் (Hard-drive) உற்பத்தியாளர் புஜிட்சு, மார்ச் 2002க்கான ஆண்டில் 1.83 பில்லியன் டாலர்கள் இழப்பை அது எதிர்பார்த்திருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அதன் பூகோள உழைப்போர் தொகையில் கிட்டத்தட்ட பத்து சதவீதம் அளவு 16,400 வேலைகளை அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஜப்பானிலேயே மூன்று தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு செமி கண்டக்டர் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தொழிலாளர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றால் ஊக்கத்தொகை அளிக்கப்படுவதன் மூலம் 3000 வேலைகள் அழிக்கப்பட்டன மற்றும் 4,700 பணியாளர்கள் நிறுவனத்தின் பாரம்பரியமான வன்பொருள் உற்பத்தி துறைகளில் இருந்து இணைய மென்பொருள் (Internet software) அபிவிருத்தி போன்ற புதிய பகுதிகளுக்கு மாறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். புதிய ஆள் எடுப்பு சக்திமிக்க வகையில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில், ஒரிகனில் உள்ள அக் கம்பெனியின் கை தொலைபேசி பிளாஷ் நினைவு சில்லுகள் (Mobile phone flash memory chip) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பெரும் இழப்பை எதிர் நோக்கிய நிலையில், 3000 வேலைகள் வெட்டப்பட இருக்கின்றன. பிரிட்டனில் புஜிட்சுவின் கிளை நிறுவனமான, கணினி உற்பத்தி செய்யும் மிசிலி நிறுவனத்தில் இருந்து1000 வேலைகள் வரையிலும் மேலும் பேர்மிங்காமில் தொலைத்தொடர்பு மையத்தில் 220 வேலைகளும் போகவிருக்கின்றன. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாமிலுள்ள புஜிட்சு ஹார்ட் டிரைவ் அசெம்பிளி நிறுவனங்களில் இருந்து 4,200 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அனுப்பப்பட இருக்கிறார்கள்.

பனசோனிக் (Panasonic) மற்றும் நாஷனல் (National) தொழிற் சின்னத்தைக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும், ஜப்பானின் இராட்சத மின்னணுவியல் நிறுவனங்களான NEC மற்றும் மாட்சுஷிட்டா (Matsushita) விலும் கூட வேலை வெட்டுக்கள் நடக்க இருக்கின்றன.

மாட்சுஷிட்டா மின் நிறுவனம் முதன்முறையாக அதனது முதலாவது காலாண்டு இழப்பை பதிவு செய்த பின்னர், பிரதானமாக ஜப்பானில் 5,000 வேலைகளை அழிக்கின்றது. அந்நிறுவனத்தின் இயக்குநர் டெட்சுயா கவகாமி செய்தியாளர் மாநாட்டில் பின்வருமாறு கூறினார்: "தகவல் தொழில் நுட்ப சந்தையில் தேறும் காட்சியை நாம் பார்க்க முடியவில்லை."

NEC ஆனது இலாபத்தில் 73 சதவீதம் பொரிவு ஏற்பட்டதை பதிவு செய்த பின்னர், அதன் சர்வதேச நடவடிக்கைகள் மூலம் 4,000 வேலைகளை அகற்றப் போவதாக ஜூலை 31 அன்று அறிவித்தது. ஜப்பானில் 3, சில்லுகள் இணைப்பு தொழிற்சாலைகள் (chip assembly plants) ஒன்றாக இணைக்கப்பட இருக்கின்றன மற்றும் ஒன்று 2,500 வேலைகள் அழிப்பில் மூடப்பட இருக்கிறது. மீதமுள்ள 1,500 வேலைகள் கலிபோர்னியா, பிரிட்டன் மற்றும் ஆசியாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து நீக்கப்படப் போகின்றன.

தீர்க்க முடியாத பெரும் கடன் சுமைகளால் கீழ் தள்ளப்படும் பிரதான ஜப்பானிய வங்கிகளும் கூட மறு சீரமைப்புத்திட்டங்களை மளமளவென ஆரம்பித்து வைத்திருக்கின்றன. உலகின் மிகப் பெரிய நிதி குழுமமான, மிஜூகோ 2006 ஆண்டு அளவில் ஜப்பானில் 153 கிளைகளையும் 58 வெளிநாட்டுக் கிளைகளையும் மற்றும் 7,400 வேலைகளையும் அகற்ற இருக்கிறது. UFJ பங்குகள் வைத்திருக்கும் நிறுவனம் 2007 ஆண்டு அளவில் ஜப்பானில் 108 கிளைகளையும் 33 வெளிநாட்டுக் கிளைகளையும் மூடவிருப்பம் கொண்டுள்ளதுடன் 8,100 வேலைகளையும் வெட்ட இருக்கிறது.

ஜப்பானிய கார் தொழிற்சாலைகள் நிஸ்ஸான், மிட்சுபிஷி, மஸ்டா மற்றும் இசுசு ஆகியன, கார் சந்தைகளில் தேக்கம் மற்றும் இலாபங்களில் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்ச்செயலாக அவற்றுக்கிடையில் 42,000 வேலைகளை தற்போது அகற்றுகின்றன.

அத்தகைய அறிவுக்குப் பொருத்தமான செயல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் முழு பகுதியிலும் மளமளவென நடைபெறுகின்றன. ஜூலையில் 14,916 பேர்களை பணியில் அமர்த்தி இருந்த இன்னும் 1,567 வர்த்தக நிறுவனங்கள், திவால் என்று அறிவிக்கப்பட்டன. 10,000 க்கும் மேலான தொழிலாளர்களைக் கொண்ட திவாலான நிறுவனங்கள் வரிசையில் இது 19வது மாதமாகும்.

ஜப்பானின் மிகப் பெரிய சில்லறை விற்பனை நிலையமான டாய்யே (Daiei), இம்மாத தொடக்கத்தில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் 30 நிலையங்களை மூடிக்கொண்டிருப்பதாக அறிவித்தது. ஜப்பானின் முன்னாள் அரசுடைமை தொலைத்தொடர்பு ஏகபோக நிறுவனமான, நிப்பொன் டெலிகிராப் மற்றும் டெலிபோன் (N I T), தொழிற்சங்கத்தின் உடன்பாட்டோடு 1,10,000 தொழிலாளர்களை நிறுவனத்தின் பிராந்திய பகுதிகளுக்கு மாற்றுதல் செய்ததுடன் இந்நிகழ்ச்சிப் போக்கில் அவர்களது சம்பளத்தை 20 வீதத்திலிருந்து 30 வீதம் அளவில் வெட்டின. கடந்த வாரம் ஒலிக்கருவிகள் உற்பத்தியாளரான சன்சுய் நிறுவனம் கடந்த வர்த்தக ஆண்டிற்கான 4 மில்லியன் டாலர்களிலிருந்து 7.2 மில்லியன் டாலர்கள் இழப்பை மீளாய்வு செய்கையில் --அதனது இரண்டாவது ஆண்டு இழப்பு வரிசையில் இருக்கையில்--- அடக்கச் செலவை வெட்டும் நடவடிக்கைகள் முன்குறித்துக் காட்டப்படுகின்றன.

பிரதான கார்ப்பொரேட் கம்பெனிகளது வேலைகள் குறைப்பு பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே, அதிகாரப்பூர்வ வேலையின்மை வீதம் போருக்குப் பிந்தைய புதிய 5 சதவீத உயர்வுக்கு அல்லது 3.3 மில்லியனுக்கு சென்றுள்ளது. உண்மையான அளவு இன்னும் அதிகமாகும். கடந்த நான்கு மாதங்களில் ஒட்டு மொத்தமாக 9,80,000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர் ஆனால் 1,20,000 பேர் மட்டுமே வேலை இல்லாதோர் என்று அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

போருக்குப் பிந்திய பெரும்பான்மையான காலப்பகுதியைப் பொறுத்தவரை, உண்மையில் முழு வேலைவாய்ப்பை அளிப்பது மற்றும் மக்கள் தொகையில் பெரும்பான்மை பகுதியினரின் வாழ்க்கைத் தரத்தினை சீராக உயர்த்துவதுடன் ஆளும் வர்க்கம் சமூக மற்றும் வர்க்கப் பதட்டங்களை சீர்செய்து வந்துள்ளது. இப்பொழுது, தசாப்தகால பொருளாதார தேக்க நிலைக்குப் பின்னர், உண்மைக் கூலிகளின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்துவரும் விரக்தி ஆகியன தொழிலாளர்களுக்கு மோசமான நிலையைக் கொண்டு வரப்போகின்றன.

வட்டிவீதங்கள் உண்மையில் பூச்சியமாக இருக்கின்றபோதும் பொருளாதார நடவடிக்கை அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் தொடர் முயற்சிகள் இருக்கின்றபோதும், பிரதமர் ஜுனிச்சிரோ கொய்ஜுமி (Junichiro Koizumi) யின் அலுவலகத்தினால் அளிக்கப்படும் ஆகஸ்ட் பொருளாதார அறிக்கை பின்வருவனவற்றை ஒப்புக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது: "ஏற்றுமதிகளும் தொழில்துறை உற்பத்திகளும் கணிசமான அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன, மற்றும் வர்த்தக முதலீடு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீடு கட்டுமான வேலைகள் சரிந்துள்ளன. வேலை அளிப்பு மற்றும் கூடுதல் வேலை நேர அளிப்பு கீழே சரிந்துள்ளன. தனியார் நுகர்வானது அப்படியே இருக்கின்றது."

இந்த சூழ்நிலைகளுக்குள்ளே நிதி அமைப்பு முறையின் கடன் சுமைகளை குறைக்க பிரதான வங்கிகளுடன் வேலை செய்யும் அழுத்தத்தின் கீழ் கொய்ஜுமி இருக்கிறார். இது கடன்களை திருப்பி செலுத்த முடியாத, கடன்களை நிலுவையாகக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கம்பெனிகளின் திவாலுடன் சம்பந்தப்பட்டுள்ளது. மோசமான 109 பில்லியன் டாலர்கள் உடைய கடனாளிகளின் பொருளாதாரத்தை சுத்திகரிப்பு செய்தால் 1.1 மில்லியன் வேலைகள் அழிக்கப்படும் என மதிப்பிடப்படுகின்றது. அதேவேளை வங்கிகள் 270 மில்லியன் வராக் கடனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோல்ட்மன் சக்ஸ் (Goldman Sachs) போன்றவர்கள் நம்புகிறவாறு இது 1.9 டிரில்லியன் டாலர்களாக அதிகமாக இருக்கூடும்.

கோல்ட்மன் சக்ஸ் ஆசியாவின் துணைத்தலைவர் கென் கூர்ட்டிஸ் (Ken Courtis): "ஜப்பான் கடன் பொறியில் மாட்டிக் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து மூழ்கிப்போனதை நினைவு கூருவீர்களா? இறுதியில் வோல்ஸ்ட்ரீட்டை ஆட்டங்காணச்செய்த நெருக்கடியை அது அமைத்துக் கொடுத்தது. ஜப்பானின் பொருளாதாரமோ தாய்லாந்தினதை விட 42 மடங்கு பெரியது, எனவே ஜப்பான் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நாளை தள்ளிப்போட முடியாது என்ற விஷயத்தை அது உணரும் பொழுது, நான் நினைக்கிறேன், நாமெல்லாம் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என." ஆகஸ்ட் 2 ம் திகதி எச்சரித்தார்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved