World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Iran-Contra gangsters resurface in Bush administration

ஈரான்-கொன்ட்ரா கும்பல்கள் புஷ் நிர்வாகத்தில் மறுபடியும் மேலுக்கு வருகிறார்கள்

By Patrick Martin
1 August 2001

Back to screen version

ஜூலை 27 அன்று புஷ் நிர்வாகம், மத்திய அமெரிக்காவில் வலதுசாரி சர்வாதிகாரங்களிலும் கொலைப்படைகளிலும் அவர்களின் பாத்திரம் காரணமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், ராஜதந்திர வட்டாரத்துக்கு மனுச் செய்துள்ளோர் இருவரையும் உறுதிப்படுத்தி முன்செல்லுமாறு செனட் சபையின் ஜனநாயகக் கட்சியினரைக் கேட்டுக் கொண்டது.

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதராக முன்மொழியப்பட்ட ஜோன் நெக்ரோபோன்ட்டு (John Negroponte) க்கான விசாரணை அடுத்த வாரத்தில் எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரம் நடக்கவிருக்கிறது என்று செனட்டின் வெளிவிவகாரக்குழு தலைவர் ஜோசப் பைடன் (D-Del) பேச்சாளர் மூலம் குறிப்பிட்டார். மேற்கு பூகோள பாதியின் விவகாரங்களுக்கான அரசாங்கத் துணைச் செயலருக்காக முன்மொழியப்பட்ட ஒட்டோ ரைஷ் (Otto Reich) க்கான விசாரணை இன்னும் அமைக்கப்படவில்லை.

நெக்ரோபோன்ட் மற்றும் ரைஷ் ஆகியோர் 1980களில் மத்திய அமெரிக்க எதிர் எழுச்சி பிரச்சாரங்களில் நேரடிப்பாத்திரம் வகித்த, புஷ் நிர்வாகத்தின் மூன்று நியமன ஆட்களில் இருவராவர். மூன்றாமவர் எல்லியட் ஆப்ராம்ஸ் (Elliott Abrams) செனட் உறுதிப்படுத்தலின் கீழ்வராத தேசிய பாதுகாப்பு சபையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நடவடிக்கைளின் இயக்குனராக பெயர் குறிப்பிடப்பட்டவர். ஆப்ராம்ஸ் காங்கிரசிடம் ஈரான்- கொன்ட்ரா (Iran-Contra) விவகாரம் பற்றி பொய்களைச் சொன்னதாக ஒப்புக்கொண்டவர், ஆனால் பின்னர் 1992ல் புஷ்ஷின் தந்தையால் மன்னிக்கப்பட்டவராவர்.

வலதுசாரி நிகராகுவா படைகள் தெற்கு ஹோண்டுராஸ் (Honduras) இல் தங்கி இருந்தபொழுது, நிகராகுவாவில் இருந்து எல்லைகளைத் தாண்டி, றீகன் நிர்வாகத்தால் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் வழங்கப்பட்டபோது நெக்ரோபோன்ட் ஹோண்டுராசுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தார். அந்தக்காலகட்டத்தில் ஆப்ராம்ஸ் மேற்கு பூகோள பாதியின் விவகாரங்களுக்கான அரசின் துணைச்செயலராக இருந்தவர் மற்றும் கொன்ட்ரா கும்பலுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்குவதை ஏற்பாடு செய்ததில் ஒலிவர் நோர்த்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வேலை செய்தவர். அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் உள்ள கொன்ட்ரா ஆதரவுப் பிரச்சாரத்துக்கு சட்டத்திற்குப் புறம்பாக நிதியூட்டும் அரசாங்க ஏஜன்சியான பொதுஜன ராஜதந்திர நடவடிக்கைக்கான அலுவலகத்திற்கு தலைமை வகித்தவர்.

பொய்யன் என்று குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்டவர்

ஜோன் அஷ்க்ரொப்ட் (John Ashcroft) அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட பின்னர், புஷ்ஷால் நியமிக்கப்பட்ட மிக ஆத்திரமூட்டும் நியமனம் ஆப்ராமின் தேர்வாகும். 1980களில் செய்தியாளர் கூட்டங்களிலும் காங்கிரசின் விசாரணைகளிலும் அடிக்கடி தோன்றிய ஆப்ராம், கொன்ட்ரா பாசிஸ்டுகளை ஆயுதபாணி ஆக்கும் றீகனின் கொள்கைகளை அடாவடித்தனமாகப் பாதுகாப்போருள் ஒருவராக இருந்தார். கொன்ட்ரா பாசிஸ்டுகள் நிக்ராகுவா மக்கள்மீது கிட்டத்தட்ட தசாப்தகாலமாக பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர் மற்றும் அவர்கள் 10,000 பேர்களைக் கொன்றதாக மதிப்பிடப்படுகின்றது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி ஆளர் மேரி மக்ரோரி நினைவு கூறுகிறவாறு, "கமிட்டி விசாரணைகளில், ஆப்ராம் கொலைப்படை பிரிவு மற்றும் சர்வாதிகாரிகளை பாதுகாப்பதிலும், படுகொலைகளை மறுப்பதிலும் மற்றும் நிக்ராகுவா கான்ட்ராக்களுக்கு ஆதரவான சட்டவிரோத அமெரிக்க நடவடிக்கைகளைப் பற்றி பொய் கூறுவதிலும் ஆப்ராமின் உறுமல் தோற்றங்களை காங்கிரசின் உறுப்பினர்கள் நினைவு கூறுவார்கள். ஆப்ராம்ஸ் அவரை விமர்சித்தவர்களை குருட்டுத்தனம் அப்பாவித்தனம் என்பதுபோல் ஏளனம் செய்தார் அல்லது அவர்களை 'நச்சுப்பாம்புகள்' என்றார்.

ஆப்ராம் வெறுமனே ஒரு ஊதுகுழல் அல்லது வக்காலத்து வாங்குபவர் அல்ல மாறாக ஆயிரக்கணக்கானோரைக் கொல்வதற்கும் மற்றும் பரந்த அழிவிற்கும் வழிவகுத்த சட்டவிரோத நடவடிக்கைகளில் செயலூக்கமான ஒத்துழைப்பாளர். கொன்ட்ராக்களை ஆயுதபாணி ஆக்க திட்டமிட்ட அரசுத்துறை அலுவலர்களுடன் சிஐஏ மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றவராவார். காங்கிரஸ் அத்தகைய ஆயுத அளிப்புக்களை தடுக்கும் போலண்ட் திருத்தங்களின் (Boland amendment) அடுத்தடுத்த இரு மாதிரிகளை நிறைவேற்றிய பொழுது, அந்நடவடிக்கையானது சட்டத்திற்கு எதிராக, றீகனின் வழிகாட்டலில், தேசிய பாதுகாப்பு சபை அலுவரான லெப்.கேர்னல் ஒலிவர் நோர்த் பொறுப்பில் தொடரப்பட்டது.

இலத்தின் அமெரிக்காவுக்கான றீகனின் உயர்மட்ட வெளிவிவகாரக் கொள்கை அலுவலரராக, ஆப்ராம்ஸ் காங்கிரஸ் முன்னர், அரசாங்கம் போலண்ட திருத்தத்திற்கு ஒத்துப்போயிருந்தது மற்றும் "மனிதாபிமான" உதவி மட்டுமே கொன்ட்ராக்களுக்கு அளிக்கப்பட்டதாக திரும்பத் திரும்ப சான்றளித்தார். அவரது நடவடிக்கைப் பாத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில், ஆப்ராம் மற்றைய அலுவலர்களால் தவறாக வழி நடத்தப்படவில்லை மற்றவர்களைப் பாதுகாக்க பொய் சொல்லவும் இல்லை, ஒலிவர் நோர்த்தைப் போல தானே நேரடியாகப் பங்கெடுத்த சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றி காங்கிரசிடம் பொய்கூறினார்.

நான்கு ஆண்டுகளாக ஈரான் கொன்ட்ரா விசாரணைகள் பற்றிய பொதுமக்களின் பழிப்புக்களுக்கு பின்னர், 1991ல் இறுதியாக ஆப்ராம்ஸ், பெரும் குற்றங்களை தவிர்ப்பதற்காக, உறுதிமொழியின் கீழ் காங்கிரசுக்கு இரு தவறான நடத்தைகளைய் பொய் கூறியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகை பேச்சாளர் அரி பிளெய்ச்சர் (Ari Fleischer) ஆப்ராமை "மிகச் சிறந்த ராஜதந்திரி" என்று அழைத்தார் மற்றும் ஜனாதிபதி அவரது சட்ட தொந்தரவுகளை "கடந்த காலத்து விஷயம்" என்று கருதுகிறார் என்றார்.

ஆப்ராம்ஸ் அவரது நிலைச்சான்றுகளுடன் (Record) உயர் பதவிக்கு நியமிக்கப்படமுடியும் என்ற புஷ் நிர்வாகம் மற்றும் காங்கிரசின் குடியரசுக் கட்சியினரின் சிடுமூஞ்சித்தனத்தின் அளவாக, அது இருக்கிறது. அவர்கள் கிளிண்டன் மொனிக்கா லெவின்ஸ்கி தொடர்பாக உறுதி மொழி எடுத்ததன் கீழ் பொய் சொன்னதற்காக ஜனாதிபதி என்ற வகையில் உச்ச பேரவை மன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டுதற்கு விருப்புடன் இருந்தார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சட்ட விரோத அமெரிக்க யுத்தத்தைப்பற்றி பொய் கூறியதற்கு அத்தகைய நிலை பொருந்தாதாம். கொலைப்படைப் பிரிவுகளுடன் ஒத்துழைத்த ஆப்ராம்ஸ் இப்பொழுது மனித உரிமை விஷயங்கள்! பற்றி பேசுவதற்கான உயர் பொறுப்பில் வைக்கப்பட இருக்கிறார்.

காஸ்ட்ரோ எதிர்ப்பு வெறித்தனம்

நெக்ரோபோன்ட் மற்றும் ரெய்ச் ஆகியோர் ஈரான்-கொன்ட்ரா பாதுகாப்பாளராக ஆகாததால் பொதுமக்களுக்கு குறைந்த அளவே அறிமுகமாயிருந்தாலும் கூட, அதே அளவு வெறுக்கத் தக்கவர்களே.1960ல் தனது 15வது வயதில் கியூபாவை விட்டு வெளியேறிய ஒட்டோ ரைய்ஷ் (Otto Reich) மியாமியில் உள்ள தாயகம் நீங்கி நீண்டகாலம் வாழும் கியூப எதிர்ப்பு பாசிச சக்திகளுள் முக்கியமானவர். அவரது நியமனம் மியாமியில் இருந்து வந்த இரு கியூப-அமெரிக்க காங்கிரஸ் காரர்களாலும் ரெய்ச் மனுச் செய்த நேரம் செனட் வெளிவிவகாரத்துறையின் தலைவராக இருந்த செனட்டர் ஜெசி ஹெல்ம்ஸாலும் ஆதரிக்கப்பட்டது. ஈரான்-கான்ட்ரா தொடர்பான பிரதிநிதிகள் சபை- செனட் இணைந்த கூட்டுக் குழுவானது, அரசாங்கத்துறையின் ரைய்ஷ் அலகானது கொன்ட்ராக்கள் சார்பில் "தடைசெய்யப்பட்ட, மறைமுக பிரச்சார" வேலைகளில் ஈடுபட்டதுடன் அரசாங்கத்துறைக்கு ஒதுக்கப்பட்டதில் கட்டுப்பாடுகளை மீறியது, ஆனால் ரைய்ஷ் தன்னை எந்த ஒரு குறிப்பிட்ட குற்றத்திற்காகவும் குற்றம் சாட்டப்படாதவாறு, சட்டவிரோத நடவடிக்கையை ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்து வைத்தது. அந்த ஏஜன்சி ரத்துச் செய்யப்பட்டது மற்றும் இந்த ஊழலில் மேலும் சம்பந்தப்படாதவாறு மூன்று ஆண்டுகள் இதனை விட்டொழித்து, அவர் வெனிசுலாவிற்கு அமெரிக்கத் தூதராக வாஷிங்டனை விட்டு வெளியேற்றப்பட்டார்.

கடந்த பத்தாண்டில் அவர் அமெரிக்க-கியூப வர்த்தக சபை மற்றும் அமெரிக்கவால் நிதியூட்டப்பட்ட மையமான சுதந்திர கியூபா உட்பட காஸ்ட்ரோ எதிர்ப்பு நலன்களின் வாஷிங்டன் ஆதரவாளராகப் பணியாற்றி இருக்கிறார். அவர் மது உற்பத்தி நிறுவனமான பக்கார்டி அண்ட் கப்பெனியையும் கூட பிரதிநிதித்துவப்படுத்தினார். கியூபாவில் உள்ள அதன் மது வடிசாலை காஸ்ட்ரோ அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டது. ஹவானா கிளப் ரம் தொடர்பான வர்த்தகப் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான உரிமைகள் தொடர்பாக கியூபாவுடனும் பிரெஞ்சு நிறுவனமான பெர்னாட்-ரிக்கார்ட்டுடனும் பக்கார்டிக்கு நீண்டகாலமாக சட்டத்தகராறு இருந்து வருகிறது.

ரைய்ஷ் இன் நியமனம் ஒரு விமர்சகர் குறிப்பிடுவதுபோல அது இலத்தின் அமெரிக்காவில் அமெரிக்கக் கொள்கையினை "கியூப மயப்படுத்தல்" என்று, இந்நிலவுலக அரைக்கோளத்தின் அனைத்து அரசியல் பிரச்சினைகளும் ஃபிடல் காஸ்ட்ரோ வெறுப்பால் ஆட்டி அலைக்கழிக்கப்படும் முப்பட்டகக் கண்ணாடி வழியாக குவிமையப் படுத்தப்படும். கியூபாவுடனான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும் எந்த நடவடிக்கைக்கும் பிடிவாதமான எதிராளியாக ரைய்ஷ் இருக்கிறார். அவர் பால்டிமோர் ஓரியல்ஸ் மற்றும் கியூப தேசிய அணிக்கும் இடையிலான பேஸ்பால் பந்தாட்டத்தைக்கூட கண்டித்தார். அதனை "ஆச்ட்விட்ஜில் கால்பந்தாட்டம் ஆடுவது" என ஒப்பிட்டார். வெனிசுலாவில் அவரது ராஜதந்திரப் பணியின்போது, வெனிசுலா சிறையில் இருந்து கியூப அமெரிக்க பயங்கரவாதி ஒர்லாண்டோ போஷ் (Orlando Bosch) சை விடுதலை செய்ய திட்டம் தீட்டினார். அந்த பயங்கரவாதி 1976 குண்டு வெடிப்புக்கு சதி செய்தார், அது கியூப விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட் ரக பயணிகள் விமானத்தை அழித்தது மற்றும் அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். அதன் பின் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச். டபிள்யு. புஷ். (George H.W. Bush) போஷ்சுக்கு முழுமன்னிப்பை அளித்தார்.

ரைய்ஷ் இன் மற்றைய ஆதரவு வாடிக்கையாளர்கள் பிரிட்டிஷ் - அமெரிக்க புகையிலை நிறுவனம் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் ஆகும். அவர் அதனுடன் ஒத்துழைத்து இலத்தின் அமெரிக்க நாடுகளுக்கு உயர் தொழில் நுட்ப ஆயுதங்களை விற்கக்கூடாது என்ற 20 ஆண்டுகால அமெரிக்க கொள்கையை மீறி, எப்-16 ரக ஜெட் போர்விமானங்களை சிலி நாட்டுக்கு விற்பதில் அந்நிறுவனங்களுக்கு உதவி செய்தார்.

குற்றவாளித்தனத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்

இம் மூன்று நியமனங்களிலும் மிக முக்கியமானது நெக்ரோபோன்ட்டை ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்புவதாகும். வியட்னாம் யுத்தத்தின்போது ஒன்பது ஆண்டுகள் அரசுத்துறை அலுவலராகவும் ஐந்து ஆண்டுகள் மத்திய அமெரிக்காவிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பல இரத்தம் தோய்ந்த குற்றங்களில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவையில் தமது முழு பணி வாழ்க்கையையும் நெக்ரோபோன்ட் செலவழித்தார். அவர் மேற்கொண்ட வழிகாட்டு நெறி எதிர்கால யுத்த குற்ற விசாரணைக் குழுவிற்கான வரலாற்று ஆவணப் பத்திரங்களாக இருக்கின்றன:

*1964-68, சைகோனில் அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் அலுவலர்;

*1964-71, வியட்னாமியர்களுடனான பாரிஸ் பேச்சுவார்த்தைகளில் ஹென்றி கிஸிஞ்சருக்கு உதவியாளர்;

*1971-73, தேசிய பாதுகாப்பு சபையில் கிஸிஞ்சரின் கீழ் வியட்னாமிற்கான பொறுப்பு அதிகாரி;

*1973-75, ஈக்வடோரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு ஒதுக்கப்பட்டார் (பாரிஸ் உடன்பாடு வியட்னாமியருக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகக் கூறி கிஸிஞ்சரின் பணியாளராக இருப்பதில் இருந்து வெளியேறினார் என அறிவிக்கப்பட்டது);

*1980-81, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரத்திற்கான அரசாங்க துணை செயலாளர்;

*1981-85, ஹோண்டுராஸூக்கான தூதர்;

*1987-89, தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஜனாதிபதிக்கு துணை உதவியாளர், கொலின் பாவெலுக்கு அறிவிக்க வேண்டும்;

*1989-93, மெக்சிகோவுக்கு தூதர்;

*1993-97, பிலிப்பைன்ஸூக்கு தூதர்.

ராஜதந்திர படைத்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றதற்குப் பிறகு, அவர் பெரிய புத்தக வெளியீட்டக நிறுவனமான McGraw-Hill பூகோளச் சந்தைக்கான உதவி தலைவராக நல்ல சம்பளத்துடன் கூடிய ஸ்தானத்தைப் பெற்றார்.

நெக்ரோபோன்ட் பாத்திரம் அவர் ஹோண்டுராஸூக்கு தூதராக இருந்த காலத்தில் நன்கு பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாடு அமெரிக்க கம்பெனிகளால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தது மற்றும் அது அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அமெரிக்க அரசாங்கத்தை முழுமையாக சார்ந்திருந்தது. டெகுசிகால்பாவில் உள்ள அமெரிக்கத் தூதர் சட்டரீதியாக எவ்வாறாயினும், மெய்நடப்பில் மாகாண ஆளுநராக ஜனாதிபதியினதையும் படைத் தளபதிகளினதையும் நிறைவேற்றுதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ இயலக்கூடியவராக இருந்தார். நெக்ரோபோன்ட்டின் வழிகாட்டலின் பேரில், ஹோண்டுரான் இராணுவம் கொன்ட்ரா பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கியது. செயலூக்கத்துடன் இல்லாவிட்டால், அவரது மெளன அனுமதியுடன், ஹோண்டுரான் இராணுவம் போர் பீடித்த எல்சால்வடோரில் இருந்து வரும் அகதிகளையும் ஹோண்டுராஸிலேயே உள்ள அவர்களின் எதிராளிகள் மத்தியிலும் படிப்படியாகக் கொலைகளைச் செய்தனர்.

நெக்ரோபோன்ட் பதவிக் காலத்தின் பொழுது, ஹோண்டுராஸூக்கான அமெரிக்க இராணுவ உதவி 4 மில்லியன் டொலர்களில் இருந்து 77.4 மில்லியன் டொலர்களாக வளர்ந்தது. இந்த உதவியைப் பராமரிக்க, ஹோண்டுராஸ் அமெரிக்க சட்டங்களின்படி அமைக்கப்பட்ட மனித உரிமைகளின் தேவைகளுக்கு ஒத்ததாக நடக்கிறது என்று அமெரிக்கத்தூதரகம் தொடர்ந்து நற்சான்றிதழ் கொடுப்பது தேவையாக இருந்தது. நெக்ரோபோன்ட்டுக்கு முன்னதாக தூதராக இருந்த ஜாக் பின்ஸ் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி எடுத்துக்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளைப்பற்றி எச்சரித்திருந்த போதும், நெக்ரோபோன்ட் கொலை படைப்பிரிவு மற்றும் அரசியல் கைதிகள் இருப்பதையோ அல்லது ஹோண்டுரான் இராணுவத்தால் நடத்தப்படும் அரசியல் நோக்கத்துடனான படுகொலைகள் பற்றியோ தொடர்ச்சியாக மறுத்தார். ஹோண்டுரான் படை வீரர்களை அமெரிக்காவின் அமெரிக்கா நடத்தும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் ஹோண்டுரான் ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் கஸ்டாவோ அல்வாரெஸ் மார்ட்டினெஸ் உடன் அவர் நெருக்கமாக வேலை செய்தார். அங்கு அவர்கள் சித்திரவதை மற்றும் ஆள் கடத்தல் உட்பட, பலவகையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அழிவு வேலை, மனவியல் யுத்தங்களில் பயிற்றுவிக்கப்பட்டனர். 1983ல் ஜெனரல் அல்வாரெஸ்க்கு அமெரிக்க அரசாங்கம் Legion of Merit விருது கொடுத்து கெளரவித்தது.

சிஐஏ நடத்தும் கொலைப்படை

நிகராகுவாவுக்கு எதிரான கொன்ட்ரா யுத்தத்தை எதிர்க்கும் ஹோண்டுரான் அரசியல் எதிர்ப்பாளர்களை கொலை செய்வதற்காக 3-16 என்ற இழிபுகழ் கொண்ட படைப்பிரிவை அமெரிக்க சிஐஏ உருவாக்கியது. அமெரிக்கப் பள்ளியின் பட்டதாரி ஜெனரல் லூயிஸ் அலோன்சோ டிஸ்குவா எல்விர் 3-16 பட்டாலியனின் நிறுவனராகவும் கொமாண்டராகவும் இருந்தார். பால்டிமோர் சன் பத்திரிக்கையின் ஆழமான ஆய்வின்படி, 3-16 பட்டாலியனால் நூற்றுக்கணக்கான ஹோண்டுரான்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அந்த அலகானது, "விசாரணைகளின்போது அதிர்ச்சி மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்தியது. கைதிகள் எப்போதும் நிர்வாணமாகவே வைக்கப்பட்டனர் மற்றும் இனி அவர்கள் பயனில்லை எனும் நிலையில் கொல்லப்பட்டு அடையாளம் குறிப்பிடாத புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர்."

பால்டிமோர் சன் செய்தியாளர்கள் 1982ல் மட்டும், நெக்ரோபோன்ட் தூதராக இருந்த முதல் முழு வருடத்தின் போது, இராணுவத்தால் சட்டத்திற்குப் புறம்பானவகையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றிய குறைந்தபட்சம் 318 சம்பவங்களைப் பற்றி ஹோண்டுரான் பத்திரிகைகள் எழுதின என்பதைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டனர். இருப்பினும் அமெரிக்க தூதரகம் மனித உரிமைகள் தொடர்பான அந்நாட்டின் நடத்தைக்கு நற்சான்று கூறியது. நெக்ரோபோன்ட்டின் உதவியாளர்கள், அவர்கள் நோர்வேயைப் பற்றி எழுதியிருந்தார்கள், ஹோண்டுராஸ் பற்றி அல்ல என்று நகைச்சுவையாகக் குறிப்பிடும் அளவுக்கு புகழ்பாடும் வார்த்தைகளில் நற்சான்று கூறியது. ரிக் சைட்ஸ்டர் எனும் முன்னாள் உதவியாளர்,1982 ன் மனித உரிமைகள் பற்றிய தமது அறிக்கையில் சித்திரவதை மற்றும் மரணதண்டனை நிறைவேற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை அகற்றுமாறு தனது மேலதிகாரிகள் தனக்கு உத்தரவிட்டதாக சன் பத்திரிக்கையிடம் கூறினார். ஒரு ஹோண்டுரான் சட்டமன்ற உறுப்பினர் ஒடுக்குமுறையை கண்டனம் செய்ய அமெரிக்கா மறுப்பது பற்றி புகார் கூறியபோது, "நீங்களும் மற்றவர்களும், நீங்கள் முன்வைப்பது என்னவென்றால் கம்யூனிசம் இந்த நாட்டை கைப்பற்றட்டும்" என்பதுதான் என நெக்ரோபோன்ட் அவரிடம் குறிப்பிட்டார் .

குறிப்பாக, நெக்ரோபோன்ட் மனுதாக்கல் அறிவிக்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் நீண்ட காலம் வசித்து வந்த பட்டாலியன் 3-16ன் உறுப்பினர்கள் உடனடியாகவும் வேகமாகவும் திருப்பி அனுப்பப்பட்டனர். பிப்ரவரியில் அரசாங்கத்துறை பட்டாலியன் 3-16ன் நிறுவனரும் ஐக்கிய நாடுகள் அவைக்கான ஹொண்டுராஸின் உதவி தூதராக இருந்தவரும், பதவிக்காலம் முடிந்ததும் அமெரிக்காவிலேயே தங்கி இருந்தவருமான ஜெனரல் டிஸ்குவாவின் விசாவை இல்லாமற் பண்ணியது. தனது கொலைப்படைப்பிரிவு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததை பகிரங்கமாக உறுதிப்படுத்தியதன் மூலம் டிஸ்குவா அதற்கு பதில் கொடுத்தார்.

சிஐஏ ஆல் பயிற்றுவிக்கப்பட்ட சித்திரவதையாளர் ஜூவான் எஞ்சல் ஹெர்ணாண்டஸ் லாரா, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் அமெரிக்காவுக்குள் மறுபடியும் நுழைந்ததற்காக புளோரிடா நீதி மன்றத்தில் இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார். தண்டனை முடிந்த பிறகு அவர் மீண்டும் வெளியேற்றப்படலாம். தாயகம் நீத்த நீடித்தவாழ்வில் உள்ள இவர் ஹோண்டுராஸிற்கு திரும்பினால், அமெரிக்க ஆதரவு பெற்ற கொலைப்படைக்கு விசாரணை செய்பவராக இருந்த தமது பாத்திரம் தெரியவந்துள்ளதால், அதில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் தன்னைப் பழிக்குப் பழி வாங்கலாம் என்று விவாதம் செய்து, தமக்கு அரசியல் புகலிடம் அளிக்குமாறு கோரினார். புளோரிடாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்க்கி பெர்குசன், மே மாதம் பட்டாலியன் 3-16ல் ஹெர்ணாண்டஸ் லாராவின் பாத்திரம் பற்றிய ஆதாரங்கள் அனுமதிக்கப்பட முடியாதவை என கூறினார்.

நெக்ரோபோன்ட்டின் அச்சுறுத்தும் வரலாற்றுக்கான பேரளவு சான்றுகள் இருந்தபோதும், மனுத்தாக்கலானது ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் அதேபோல குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் கணிசமான அளவு ஆதரவைப் பெற்றுள்ளது. கிளின்டனின் ஐ.நாவுக்கான கடைசி தூதர் ரிச்சர்ட் ஹோல்புரூக், நெக்ரோபோன்ட்டை புகழ்ந்து அவரது மனுத்தாக்கலை, "ஐ.நாவுக்கு, அயல்நாட்டு சேவைக்கு பயங்கரமான நன்மை பயக்கும், அது அமெரிக்காவுக்கு நன்மை பயக்கும் என நான் நம்புகிறேன்" என்றார். ஹோல்புரூக் வியட்நாமில் நெக்ரோபோன்ட்டின் அறை நண்பர் மற்றும் கிசிஞ்சரின் தேசிய பாதுகாப்பு சபையில் சக பணியாளராக இருந்தவர் ஆவார். நெக்ரோபோன்ட், மத்திய அமெரிக்காவிலும் வியட்நாமிலும் ஆற்றிய அவரது நிலைச்சான்றுகளால் எதிர்ப்பு தூண்டி விடப்பட்டபோதும், ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரசில் 1989 மற்றும் 1993ல் ஏற்கனவே பல தடவைகள் அவர் உறுதிப்படுத்தப்பட்டவர் என்பதை ஹோல்புரூக் சுட்டிக்காட்டினார். "அவர் இதற்கு முன்னர், கூடிய தாராண்மை உள்ள காங்கிரசில் விசாரித்து சரி என விடப்பட்டவர், ஆகையால் இப்போது அவருக்கு ஏன் தொந்தரவு வரப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, என்று கிளிண்டனின் நிர்வாக அலுவலர் ஒருவர் கூறினார். மேலும், "வேலைக்கு தேர்ச்சி பெற்ற ஆள் நமக்குத் தேவை. ராஜதந்திர சேவையைத் தொழிலாகக் கொண்டவர்கள் தங்கள் அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றியதால் தண்டிக்கப்பட்டால், பின்னர் நாம் எல்லோரும் சிக்கலில் மாட்டிக்கொள்வோம்" என்றார்.

கம்யூனிச விரோத இந்த மூவர் கும்பலைத் தேர்வு செய்தல், குறிப்பாக இலத்தின் அமெரிக்காவில் அமெரிக்க "தொழில் முறையாகக் கொண்ட ராஜதந்திரிகளின்" உண்மையான முகத்தைக் காட்டுகிறது. இது, 1980களின் வழிமுறைகளான --கொலைப்படை, அழிவு பயங்கரவாதம்--ஆகியவை, கொலம்பியாவில், ஈக்வடோரில், ஆர்ஜெண்டினாவில் மற்றும் இந்தப்பிராந்தியம் முழுவதிலும் அதேபோல சர்வதேசரீதியிலும் பெருகிவரும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்மையினை சந்திக்க புஷ் நிர்வாகத்தால் மீண்டும் புதுப்பிக்கப்படவிருக்கின்றன என்பதை முன்கூட்டி அறிவிக்கும் எச்சரிக்கை ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved