World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Campaign to free Hatton six

Sri Lankan prison officials refuse to release two detainees freed by court

அட்டன் அறுவரையும் விடுதலை செய்வதற்கான பிரச்சாரம்

இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இரண்டு கைதிகளை விடுதலை செய்ய மறுப்பு

By Vilani Peiris
14 August 2001

Back to screen version

கண்டி உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்வதற்கு தீர்ப்பளிக்கப்பட்ட நான்கு கைதிகளில் இருவரை நீதிமன்றத் தீர்ப்பை வெளிப்படையாக மறுதலித்து இலங்கையின் சிறைச்சாலை அதிகாரிகள் நொண்டிச் சாட்டுகளின் அடிப்படையில் ஒரு மாதத்துக்கு மேலாக தடுத்து வைத்துள்ளனர். இவர்கள் நால்வரும் மத்திய தோட்டப் பிரதேசமான அட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) உறுப்பினர்கள் எனும் போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு 1998 ஜூன் மாதத்தில் இருந்து நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பேரில் நால்வராகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) நடாத்திய உடனடி நிபந்தனையற்ற விடுதலைக்கான பிரச்சாரத்தைத் தொடர்ந்து அடுத்த ஜனவரியில் விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நிர்ப்பந்தத்திற்குள்ளானது. ஜூலை மாதம் 3ம் திகதி அரசதரப்பு சட்டத்தரணி இவர்கள் அறுவரில் நால்வருக்கான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினார்.

"அவர்கள் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபோது சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படியே இந்தக் குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக காரணம் கூறப்பட்டது." அரசதரப்புச் சட்டத்தரணியின் இந்த வாபஸ் பெறும் நடவடிக்கை அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. அவர்களுக்கு எதிராக இருந்த ஒரே ஒரு சாட்சியம் சித்திரவதையின் கீழ் அவர்களிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் அவர்களுக்குத் தெரியாத சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமாகும். சட்ட வைத்திய அதிகாரி சித்திரவதைக்கான அடையாளங்களைக் கண்டுள்ளார்.

இந்த இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும் அட்டன் தேயிலைத் தொழிற்சாலைக்கு குண்டு வைத்தார்கள் எனவும் ஜூன் 1998ல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் இலங்கையின் மோசமாக பிரசித்தி பெற்ற குரூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னரே குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டு தவிர்க்கப்பட்டு ஒரு தொடரான வேறு குற்றச்சாட்டுக்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அவர்களுடைய வழக்கு விசாரணைகள் பல்வேறு காரணங்களைக் காட்டி தொடர்ச்சியாக அரசதரப்பு சட்டத்தரணிகளாலும் நீதிபதிகளாலும் பின்போடப்பட்டு வந்தது.

இந்த அறுவரில் நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டமை சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி என்பதோடு நூற்றுக்கணக்கான தமிழர்களை சட்ட விரோதமாக தடுத்து வைத்துள்ள முழு அமைப்பிற்கும் ஒரு பாரிய தாக்கமாகும். எனவே இந்த அரச இயந்திரம் நால்வரில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டவருமான சுப்பு உதயகுமார் உட்பட இருவரை விடுதலை செய்யாது தடுத்து வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியது அல்ல.

சிறைச்சாலை அதிகாரிகள் இவர்கள் நுவரெலியா நீதிமன்றத்தில் இன்னுமொரு வழக்கிற்கு தேவைப்படுவதாக கூறி உதய குமாரையும் சோலமலை லோகநாதனையும் விடுதலை செய்ய மறுத்தனர். அவர்கள் இருவரும் 1998ல் கைது செய்யப்படுவதற்கு முன்னரேயே இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்ட போது சிறை அதிகாரிகள் அதிகாரபூர்வமான அறிக்கைகளைக் கேட்டனர். அவ்வாறான அறிக்கைகளை வைத்திருக்க வேண்டியது பொலிஸ், நீதிமன்றம், சிறைச்சாலைகளின் நிர்வாகப் பொறுப்பே அன்றி கைதிகளுடைய பொறுப்பல்ல.

இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை சமர்ப்பித்த போது சிறைச்சாலை அதிகாரிகள் அந்த ஆவணத்தை நிராகரித்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவினை கேட்டனர். மறுபுறத்தில் மாவட்ட நீதிபதி அவ்வாறான ஒரு புதிய உத்தரவு தேவையில்லை எனவும் முன்னைய பதிவே போதுமானது எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ச்சியாக சிறை அதிகாரிகள் விடுதலை செய்ய மறுத்தமையினால் சோசலிச சமத்துவக் கட்சியின் சட்டத்தரணி ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நிர்ப்பந்தித்தார். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களை களுத்துறைச் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு வாகனங்கள் கிடையாது என நீதிபதிக்கு அறிவித்து இருந்தனர். ஒரு விடுமுறை வருவதால் நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 13ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

நேற்று இந்த இரு கைதிகளும் நுவரெலியா நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டபோது மாவட்ட நீதிபதி அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார். சிறை அதிகாரிகள் இவர்களை விடுதலை செய்ய அட்டன் நீதிமன்றத்தில் இருந்து கட்டளை கிடைக்கவில்லை எனக்கூறி உதயகுமாரையும் லோகநாதனையும் விடுதலை செய்வதற்கு மறுத்தனர். அட்டன் நீதிமன்றமே இவர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கண்டி மேல் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த இருவரும் உடனடியாக விடுதலை செய்யப்படாவிடில் சட்ட நடவடிக்கை எடுக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சட்டத்தரணி தயாராகி வருகிறார்.

உதயகுமாருக்கும் லோகநாதனுக்கும் எதிராக அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டவை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரியத் தாக்குதலாகும். அவர்களின் சட்ட வரையறைக்குள் செயற்படும் பொலிஸ், நீதிமன்றம், சிறைச்சாலை போன்றவையே சட்ட வரையறைகளையே கணக்கில் எடுக்காமை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலாகும். குறிப்பாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரானதாகும். சோசலிச சமத்துவக் கட்சி அனைத்துலக மற்றும் இலங்கை தொழிலாளர்களையும் இளைஞர்களையும் புத்திஜீவிகளையும் அட்டன் அறுவர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை இரட்டிப்பாக்குமாறு கேட்டுக்கொள்கின்றது.

ஆகஸ்ட் 29ம் திகதி நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படவுள்ள பொன்னையா சரவணகுமாருக்கும் அருணாசலம் லோகேஸ்வரனுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னமும் வாபஸ்பெறப்படவில்லை. இந்த இருவருக்கும் எதிரான வழக்கு ஏனைய நால்வரது வழக்கை விட எந்த விதத்திலும் அதிகம் ஆதாரம் நிறைந்தது அல்ல. அதற்கிடையிலான ஒரே ஒரு வித்தியாசம் சட்ட வைத்திய அதிகாரியினால் சித்திரவதையை உறுதிப்படுத்தும் சட்ட வைத்திய அறிக்கை இன்னும் பெறப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்படாமையேயாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் சட்டத்தரணி அந்த அறிக்கையின் பிரதியை பெற்றுள்ளதால் அவர்களை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

இந்த அட்டன் அறுவருக்கும் எதிரான வழக்கு அரசாங்கம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக அவர்களது ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு மேற்கொண்டு வரும் பிற்போக்கு யுத்தத்தை தொடர்வதின் விளைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின்றி சட்ட விரோதமாக பரந்த அளவில் தடுத்து வைப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறான முறைகளை மத்திய மலையகப் பிரதேச மாவட்டங்களில் வாழும் தொழிலாளர் சக்தியின் முதுகெலும்பான தமிழ் பேசும் தொழிலாளர்களை பயமுறுத்தி பயங்கரவாதத்தை பிரயோகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இம்மக்களின் சம்பளமும் வாழ்க்கை நிலைமைகளும் நாளாந்தம் மோசமடைந்து வருகின்றன.

வழமையாக பொலிசார் தமிழ் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நிறுத்தி தொந்தரவு செய்கின்றனர். பலர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பொலிசாரினதும் விசேட பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினராலும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி தடுப்புக் காவல் கைதிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் மூன்று மாதங்கள் தொடக்கம் 18 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளலாம். இந்தச் சட்டம் அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரமே சாட்சியமாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கின்றது. இது பாதுகாப்புப் படையினரின் முழுமையான துஷ்பிரயோகத்துக்கு வழிசமைக்கின்றது. தற்போது 2000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, அட்டன் அறுவரும் விடுதலை செய்யப்படும் வரை தனது பிரச்சாரத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. சோ.ச.க. கைதிகளின் சட்ட பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான நிதியாக 100,000 ரூபாவை ($1,100) பாதுகாப்பு நிதியாக திரட்டத் தீர்மானித்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி நிதி உதவிகளையும், உதயகுமார், லோகநாதன் ஆகியோரை விடுதலை செய்வதற்கும் பொன்னையா சரவணக்குமார் அருணாச்சலம் லோகேஸ்வரன் ஆகியோரின் குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறக்கோரியும் ஆட்சேபனைக் கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றது.

உங்களது நிதி உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி:

The Treasurer,
Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.

ஆட்சேபனைக் கடிதங்களை பின்வரும் முகவரிக்கும் அனுப்பவும்:

The Attorney General,
Attorney General's Department,
Colombo 12, Sri Lanka.
Fax: 0094-1-436421

வழக்கு இலக்கங்கள்: NJ1290/99, NJ1291/99, NJ1292/99, NJ1295/99 கண்டி உயர் நீதிமன்றம்

இக்கடிதங்களின் பிரதிகளை:

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka

உலக சோசலிச வலைத் தளம்

மின்னஞ்சல்: editor@wsws.org


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved