World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : சீனாChina's public education system in decay சீனாவின் பொதுக் கல்வி முறை சீரழிவு By Carol Divjak பெய்ஜிங் ஆட்சியினால் 1949 புரட்சியின் சாதனைகளுள் ஒன்றாகப் போற்றப்பட்ட, சீனாவின் பொதுக் கல்வி முறை நிதிப்பற்றாக்குறையின் காரணமாக பெருங்குழப்பத்திலும் அழிவிலும் இருக்கின்றது. இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மட்டும் சமரசம் செய்யப்படவில்லை, நொறுங்கி விழும் உட்கட்டுமானம், அளவுக்கு அதிகமான கூட்டம் மற்றும் பற்றாக்குறையான ஊழியர் மட்டங்கள் இவற்றால் அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் வாழ்க்கை கூட ஆபத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில், வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள் ஆகியன கொடுத்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக போராடியதால், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு அளிக்கப்படும் அளவு 2.4 சதவீதமாக குறைந்தது. இது மற்றைய வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் சராசரி அளவான 4.1 சதவீதத்தை விட மிகவும் குறைந்ததாகும். தேசிய அரசாங்கத்தின் கல்விக்கான வரவு-செலவு திட்டமானது 204.7 மில்லியன் மாணவர்கள் பயிலும் நாட்டின் தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கு செலவு செய்வதைக் காட்டிலும் நகர்ப்புற பல்கலைக் கழகங்கள மற்றும் கல்லூரிகள் இவற்றுக்கு பிரதானமாக செலவிடுகின்றது. 1990களின் நடுப்பகுதிக்குப் பிறகு, அரசாங்கத்தின் கீழடுக்குகள் உள்ளூரில் சொந்தமாக வசூலிக்கப்படும் வரிகளைப் பயன்படுத்தி இந்த கல்வி செலவுகளின் பெரும் பங்கு சுமையை தங்களுடைய தோள்களில் சுமப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், சீனாவின் பிராந்திய மற்றும் கிராமப்புற பகுதிகள் பலவற்றால் முதலீட்டை ஈர்க்க முடியாதிருக்கிறது மற்றும் அரசு உடைமைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன, இது வேலை இன்மையை அதிகரித்திருக்கிறது மற்றும் விவசாயிகளின் வருவாய்களில் வீழ்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. உள்ளூர் அரசாங்கங்கள் கடனால் முடமாக்கப்பட்டு திவாலின் விளிம்பில் உள்ளன. சீனச் செய்தி ஸ்தாபனத்துடன் இணைந்துள்ள (Chinese news weekly) சீன வார இதழின்படி, 50,000 மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் இவற்றின் கடன் 200 பில்லியன் யுவான் அளவுக்கு (24 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) வந்திருக்கின்றது. இது பொருளாதார வளர்ச்சியையும் கல்வி போன்ற பணிகள் நடைபெறுவதையும் பாதித்துவருகின்றது. பெய்ஜிங் வழமையான பல்கலைக் கழகத்தின் கல்வி நிபுணர் ழூ யுக்சியான்படி: "கல்விக்கு நிதியூட்டலில் நாட்டுப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்குமான இடைவெளி பெரிதாகும். சில கிராமப்புற பகுதிகளில் ஒரு குழந்தைக்கான ஆண்டு செலவீனம் ஒரு டொலருக்கும் குறைவானது." ஏழைநாடுகளில் கல்வி ஆனது, ஆண்டு வரவு- செலவு திட்டத்தின் அரைப் பகுதியை விழுங்கி விடுகிறது. அதில் பெரும்பாலான பகுதி ஆசிரியர்களுக்கு சம்பளங்களுக்கே போய்விடுகிறது. இதற்கு பொறுப்பாளர்கள் பராமரிப்பை கவனியாது விடல், குறைந்த சம்பளத்தில் தகுதி இல்லாத ஆசிரியர்களை பனிக்கு அமர்த்தல், வகுப்பின் அளவை அதிகரித்தல் மற்றும் கட்டணங்களை வரிசையாக வசூலித்தல் ஆகியவற்றின் மூலம் எதிர்ச் செயல் புரிந்துள்ளனர். கல்வியானது இலவசம் என்று கூறப்பட்டாலும், அவர்கள் தங்களின் குழந்தைகளது தாள், அறிக்கை அட்டை மற்றும் மின்கட்டண ரசீது வரை எல்லாவற்றையும் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஜூனில் வெளியிடப்பட்ட கல்வி அமைச்சகத்தின் அறிக்கை சீன பள்ளிக்கூடங்களின் மோசமடைந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொருநாளும் பள்ளி தொடர்பான விபத்துக்களில் சராசரியாக 40 மாணவர்கள் மரணம் அடைகின்றனர். கடந்த ஆண்டு சாவு எண்ணிக்கை 14,400 ஆகும். இவற்றுள் திகைக்கவைக்கும் அளவில், 1400 பேர் பள்ளிக் கட்டிடங்கள் அவர்கள் மேல் இடிந்து விழுந்ததால் கொல்லப்பட்டவர்கள் ஆவர். ஜூன் மாதம் ழெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்காய் மாநகரில், சிமெண்டினால் ஆன உத்தரம் இடிந்து விழுந்தபொழுது, 16 வயது இளைஞர் கொல்லப்பட்டார் மற்றும் ஏனைய 14 மாணவர்கள் காயம் ஆடைந்தனர். நான்கு அடுக்கு கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் வகுப்பறையில் மாணவர்கள் இருந்தனர். உள்ளூர் போலீஸ் அதிகாரி கட்டிடம் சரியாகக் கட்டப்படாததாயும் தரம் குறைத்த சிமெண்ட் பயன்படுத்தப் பட்டிருப்பதாயும் குற்றம் சுமத்தினார். இறப்புக்கான மற்றைய காரணங்கள் பணியாளர்கள் குறைவு மற்றும் கண்காணிப்புக் குறைவு பற்றிய பிரச்சினைகளை எழுப்புகிறது. 3,600 குழந்தைகள் பள்ளி நேரத்திலேயே மூழ்கி இறந்துள்ள அதேவேளையில், போக்குவரத்து விபத்து 2400 பேர்களின் வாழ்க்கையை பலி கொண்டது. நஞ்சூட்டப்பட்ட உணவால், வாயுவினால் இயங்கும் வெப்பமூட்டிகளில் (ஹீட்டர்ஸ்) இருந்து கசிந்த கார்பன் மோனாக்கசைடை சுவாசித்ததால் மற்றும் தீயினால் கூட மரணங்கள் நேர்ந்துள்ளன. ஜூனில் மழலையர் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது பணியாளர் ஒருவர் கொசுவர்த்தி சுருள் ஒன்றை அவர்களின் படுக்கைக்கு அருகே கொளுத்தி வைத்ததால், பள்ளி தீப்பிடித்ததில் தளர்நடையிடும் பிஞ்சுகள் 13 பேர் இறந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. கல்விக்கான நிதிகுறைவு சீர்கேட்டை சரிசெய்வற்கான மத்திய அரசின் மூலோபாயம், சீன சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் முதலாளித்துவ சந்தையை மீளமைப்பதற்கான உந்துதலுடன் ஒத்ததாக இருந்தது. அது பள்ளிகளை வர்த்தகத்துக்குள் செல்ல ஊக்குவித்தது. 1999ல் பள்ளிகள் நடத்தும் வணிகங்கள் 15 பில்லியன் டொலர்களை வாரிக்கொட்டின, அது கிட்டத்தட்ட அரசின் முழு கல்வி வரவு - செலவு திட்டத்துக்கும் சமமானது. பொம்மைகளைப் பொருத்துதல் மற்றும் சிறிய கைத்தொழிற் பொருட்களை உருவாக்குதல் தவிர, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் குழந்தைகளை சுரங்கத்தில் வேலையில் ஈடுபடுத்துவது பற்றி, பன்றிப் பண்ணைகளில் மற்றும் கடுமையான மற்றும் ஆபத்தான உழைப்பில் ஈடுபடுத்துவது பற்றி தெரிந்து வைத்துள்ளன. மார்ச்சில் ஜியாங்க்சி மாகாணத்தில் உள்ள ஃபாங்லின் கிராமத்தில் அழிவுகரமான வெடிவிபத்தில் நான்கு பெரியவர்களும் 50 குழந்தைகளும் கொல்லப்பட்ட பொழுது இந்த கொள்கையின் விளைவுகள் உலகுக்கு அம்பலமாகின. பள்ளிக்கு பணம் திரட்டும் பொருட்டு இந்தக் குழந்தைகள் உள்ளூர் வர்த்தகத்துக்காக அவர்களின் வகுப்பு அறையில் பட்டாசுகளை செய்து கொண்டிருந்தனர். நகர்ப்புறங்களில், பள்ளிகள் வாடகைக்கு விடப்படுகின்றன. அரசின் தொலைக்காட்சி ஒன்றில் அறிவிக்கப்பட்டபடி வகுப்பு அறை ஒன்று சூதாட்ட விடுதியாக வாடகைக்கு விடப்பட்டது. பள்ளிகளில் இயங்கும் ஏனைய நிறுவனங்கள் சிற்றுண்டி விடுதிகள், வாடகை கார்களின் பணிமனைகள் மற்றும் அங்காடிகள் ஆகியனவாகும். "குருவிக்கூட்டுப் பள்ளிகள்" வியாபாரத்திற்காக பள்ளிக்கூடங்களை வாடகைக்கு விட்டும் கூட, பல பெருந்திரளான அளவுக்கு அதிகமான கூட்டத்தால் தொல்லைகளுக்கு ஆளாகின்றன. செளத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் "குருவிக்கூட்டு" பள்ளிகளின் தோற்றம் பற்றி செய்தி ஒன்று விவரிக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் கட்டிடங்களில் நெருக்கித்தள்ளி அடைக்கப்படுவதுடன் விளையாடுவதற்கான இடம் அவர்களது உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் தீங்கிழைக்கும் வண்ணம் மிகச்சிறியதாக இருக்கின்றன. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகர் குவாங்ழூவில் உள்ள மக்கள் சாலை தொடக்கப்பள்ளியில், 820 குழந்தைகள் 1700 சதுரமீட்டர்கள் பரப்பளவு உள்ள இரண்டு சிறிய கட்டிடங்களில் திணிக்கப்பட்டிருக்கின்றனர். சிறிய கூடைப்பந்தாட்ட விளையாட்டுக் களம் தான் அவர்களின் ஒரே விளையாட்டு மைதானம். காலை உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு மாணவர்கள் நேர முறை எடுக்கும் அதேவேளையில் ஏனைய மாணவர்கள் அவர்களின் மேசைகளுக்குப் பின்னால் நின்று கொண்டு டிஸ்கோ இசைக்கு ஏற்றறவாறு சுழலும்படி அறிவுறுத்தப்படுவர். அருகில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஏழு பள்ளிகள் மிகவும் மோசமானவை. எடுத்துக்காட்டாக, மின்க்சிங்க்லி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தங்களது காலை உடற்பயிற்சிகளை நடைபாதையில் செய்கின்றனர். குவாங்ழூவில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகள் 323ல் 96 பள்ளிகள் "குருவிக்கூட்டுப்பள்ளிகள்" என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் அர்த்தம் அவை 2000 சதுர மீட்டர்களுக்கும் குறைவான பரப்பளவை உடைய இடத்தை தொடக்கப்பள்ளிகளுக்கும், 4000 சதுர மீட்டர் பரப்பளவை உடைய இடத்தை இடைநிலைப்பள்ளிகளுக்கும் கொண்டிருக்கின்றன என்பதாகும். 2000 சதுரமீட்டர் பரப்பளவு என்பது 100மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட துண்டு நிலத்திற்கு சமமானது. குவாங்ழூவின் எண்100 இடைநிலைப்பள்ளி என்பது ஒரு "சூப்பர்" குருவிக்கூட்டுப் பள்ளி ஆகும். அங்கு 1000 மாணவர்கள் வெறும் 1700 சதுர மீட்டர் நிலத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். பள்ளியின் ஓடுபாதையே வெறும் 22 மீட்டர் நீளம்தான். மாணவர்களின் வேகமான ஓட்டத்தின் போது அவர்கள் சுவற்றில் மோதுவதால் ஏற்படும் ஓடுபாதை முடிவில் நுரை மெத்தையால் (Foam) ஆன உறை மெத்தையை வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலைகளின் சரீரரீதியான மற்றும் மனோரீதியான பாதிப்புக்கள் மிக அதிகமானவை. லிவானில் உள்ள குருவிக்கூட்டுப் பள்ளியின் தலைமை ஆசிரியை செளத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கையிடம் பின்வருமாறு கூறினார்: "எந்த தொடக்கப்பள்ளி கூடைப்பந்தாட்ட விளையாட்டிற்கும் சென்று பாருங்கள், லிவான் மாவட்ட குழுவில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்ற நகர்ப்புறத்து பள்ளிகளின் குழுக்களைவிட குட்டையாக மற்றும் மெல்லியராக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்." கல்வி நிதியில் வெட்டுவதற்கான பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் முகமாக, அதன் பொறுப்பாளர்கள் சீனாவின் நகர்ப்புற மக்கள் தொகையின் பெரும் வளர்ச்சியின் பேரில் அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்தலைக் குற்றம் சாட்டுகின்றனர். வரலாற்றில் மிகப் பெரிய புலம் பெயர்தலில் ஒன்றாக, கடந்த 20 ஆண்டுகளில் 120 மில்லியன் பேர்கள் சீனாவின் கிராமப்புற நகர்கள் மற்றும் கிராமங்களில் இருந்து மாநகர்களுக்கு வேலை தேடி புலம் பெயர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப் படுகிறது. இருப்பினும், பல பள்ளிகள் நகராண்மைக்கழக வேலைகளுக்கோ அல்லது ஆசிரியர்களின் வீட்டு வசதிக்கோ நிலம் வழங்குவதை கைவிட்டு விடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. புதிய மாவட்டங்களில், வீடு, மணை, நில விற்பனையாளர்கள், அந்தப் பகுதியின் மக்கள் தொகை 10,000 அடைந்ததும் 6,500 சதுர மீட்டர்களில் ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் 8000 சதுர கிலோமீட்டர்களில் ஒரு இடைநிலைப்பள்ளி கட்ட வேண்டும் என்ற அத்தியாவசிய ஒழுங்குமுறை விதிகளை அலட்சியம் செய்து வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை விதிகளை அலட்சியம் செய்வோரை தண்டிக்க சட்டங்கள் ஏதும் இல்லை. மேலும் சீனாவின் வசிப்பிட விதிமுறையானது, தங்களின் பிறந்த இடத்தை விட்டு நகரும் மக்களின் திறமைகளை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. அதன் அர்த்தம் மாநகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர் பலருக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து இல்லை. தற்காலிக வசிப்பிட அந்தஸ்துடன் மட்டும் ஒருவர் நகராண்மை அரசாங்கத்தால் அளிக்கப்படும் கல்வி உட்பட்ட எந்த சேவைகளுக்கும் தகுதி உள்ளவராக ஆகமுடியாது. வசிப்பிட சட்டங்களின் காரணமாக, புலம் பெயர்ந்த குழந்தைகள் ஒன்றில் உள்ளூர் பள்ளிகளில் கல்வி பெற தடைவிதிக்கப்பட்டனர் அல்லது அதிக கல்விக்கட்டண வசூலிப்புக்களால் கல்வி பெறாது வைக்கப்பட்டனர். இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் முகமாக, ஹேனான் மாகாணத்தின் கிராமப்புறத்தில் இருந்து பெய்ஜிங்கிற்கு புலம் பெயர்ந்தவரான லி சுமெய் என்பவர் 1994ல் க்சிங்ழி புலம்பெயர்ந்தோர் பள்ளி என்ற பள்ளியை நிறுவினார். அது தொடக்கத்தில் காய்கறி பயிரிடும் துண்டு நிலப்பகுதியில் அமைந்தது. அப்பள்ளியானது 600 யுவான் முதல் 1000 யுவான் வரை (72 டாலர்கள் முதல் 120 டாலர்கள் வரை) கட்டணமாக வசூலிக்கிறது. இது பெய்ஜிங்கில் உள்ள வழக்கமான பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது. அப்பள்ளி 9 மாணவர்களுடன் தொடங்கி 2000 க்கும் மேலான மாணவர்களைக் கொண்ட பள்ளியாக, இப்போது 100 பணியாளர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது. இத்தகைய புலம்பெயர்ந்தோர் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சுய நிதி ஊட்டப்பட்டுள்ள பள்ளிகளாகும். இவை போன்றவை சீனா முழுவதும் திடீரெனத் தோன்றி வருகின்றன. பெய்ஜிங் 7 வயது முதற்கொண்டு 15 வயது வரையிலான புலம்பெயர்ந்த 10,000 குழந்தைகளின் இல்லமாக இருக்கின்ற போதும், மாநகர் அரசாங்கம் எந்த ஒரு புலம் பெயர்ந்தோர் பள்ளிக்கும் சட்ட ரீதியான அந்தஸ்தை வழங்க மறுத்து வருகிறது. அவர்கள் அதிகாரிகளின் கருணைக்கு விடப்பட்டுள்ளனர். அவ்வதிகாரிகள் அவர்களின் கட்டிடங்களை வேறு நோக்கங்களுக்காக தேவைப்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் அடிப்படையிலோ அதனை மூடக்கூடிய அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். செளத் சீனா மார்னிங் போஸ்ட் படி, க்சிங்ழி பள்ளியானது அதன் ஏழு ஆண்டு கால வரலாற்றில் ஐந்து முறை இடம் மாற்றத்திற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. பொதுக்கல்வி முறை சீரழிந்ததற்கு தீர்வாக, சீனாவின் புதிய வர்க்கத்தினரான
வர்த்தகர்கள் மற்றும் மேலாளர்கள் தங்களின் குழந்தைகளை பணக்காரத் தட்டினரின் தனியார் பள்ளிகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கு
அனுப்பி படிக்க வைப்பதற்கோ பதிவு செய்து வருகின்றனர். அத்தகைய விருப்பத் தேர்வுக்கு இயலாத நாட்டின்
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட பெரும் ஜனத்திரளைப் பொருத்தவரையில், இது பெய்ஜிங் ஆட்சிக்கும்
அதன் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்திற்கும் எதிராக தொடர்ந்து பெருகி வரும் அவர்களின் மனக்குறைகளின் பட்டியலில்
இன்னும் ஒன்றாகும். |