WSWS
:செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா
: இந்தியா
Indian court supports astrology as a university science subject
சோதிடத்தை பல்கலைக்கழக விஞ்ஞான பாடமாக்குவதற்கு
இந்திய நீதிமன்றம் ஆதரவு
By Ram Kumar
16 August 2001
Use this version to print
இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த
முடிவானது, பாரதிய ஜனதாக் கட்சியின் (பிஜேபி) தலைமை வகிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், இந்திய
கல்வி முறையும் மற்றும் சமுதாயம் ஒட்டு மொத்தமாகவும் இந்து தீவிரவாதிகளின் தேசிய தப்பெண்ணங்களுக்கும்
பிற்போக்கு மூடத்தனங்களுக்கும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைப் பற்றி நன்கு சான்று காட்டுவதாய் இருக்கின்றது.
இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஜ்யோதிர் விஞ்ஞான் அல்லது வேத
சோதிடம் என்பதை ஒரு விஞ்ஞான பாடமாக அறிமுகப்படுத்துவதை எதிர்த்து, பிரபல அணும உயிரியலாளர் டாக்டர்
பி.எம்.பர்காவா மற்றும் இருவராலும் சேர்ந்து போடப்பட்ட ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்கலைக்
கழக மானியக் குழுவால் (UGC)
நியமிக்கப்பட்ட இருவர் குழு சோதிடத்தில் இளநிலை அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் (BSc
and MSc) படிப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு பரிந்துரைகள் பற்றி
ஜனவரியில் அறிக்கை அளித்த பின்னர் குளறுபடி உச்சநிலையை அடைந்திருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் இந்த
படிப்புக்களை தொடங்குவதற்காக மனுச்செய்ய வேண்டி பல்கலைக் கழகங்களுக்கு பிப்ரவரியில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.
இந்த முன்மொழிவின் பிரதான சிற்பி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர்
ஜோஷி ஆவார். கல்வி ரீதியில் ஜோஷி ஒரு இயற்பியல் (பெளதீகவியல்)
பேராசிரியராய் இருக்கின்ற அதேவேளை, அரசியல் ரீதியாக இந்து அடிப்படைவாத ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தின்
(ஆர்.எஸ்.எஸ்) நீண்டகால உறுப்பினராவார். அது "ஒரே நாடு, ஒரே மதம் மற்றும் ஒரே கலாச்சாரம்- இந்துத்வ"
எனும் பதாகையின் கீழ், இந்து பிரத்தியேகவாதத்தை முன்னெடுத்து வருகிறது. 1991ல் உத்திரப்பிரதேசத்தில் பாபர்
மசூதி இடிப்புக்கு வழிவகுத்த மதவகுப்புவாத பிரச்சாரத்திற்கு பொறுப்பான பிஜேபி தலைவர்களுள் ஜோஷியும் ஒருவர்.
கடந்த டிசம்பரில் ஒரு மாநாட்டில், நவீன விஞ்ஞானம் "தீர்ந்த முடிபாகக் கொள்ள இயலாத மற்றும் ஆதலால்
நம்பத்தகாததாக" இருக்கின்றது என கூறி, அவர் விஞ்ஞானிகளை இந்திய தத்துவத்தையும் சமஸ்கிருதத்தையும் படிக்க
வேண்டும் என வலியுறுத்தினார்.
பிஜேபி ஆட்சிக்கு வந்தபின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசாங்கமானது பல்கலைக்கழக
மானியக் குழுவிலும் மற்றைய கல்விப்புல அங்கங்களிலும் தமது சொந்த நியமனங்களால் நிரப்பி வைத்துள்ளது. பிஜேபி
ஆதரவாளரான பல்கலைக் கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஹரி கெளதம், சோதிடப் படிப்பை தொடங்குவது
தொடர்பான சாத்தியங்கள் பற்றி அறிக்கை தருவதற்காக ஒரு குழுவை அமைப்பதற்கு கடந்த ஆண்டு முடிவெடுத்தார்
மற்றும் அதனை நியாயப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று
நோபல் பரிசுபெற்ற இந்திய விஞ்ஞானி சி.வி. இராமன் கூறியதாக கெளதம் கூறினார்--இந்த வலியுறுத்தல் பொய்
என்று உடனடியாக இராமனின் குடும்ப உறுப்பினர்களாலும் சக விஞ்ஞானிகளாலும் கண்டனம் செய்யப்பட்டது.
அதனது ஐரோப்பிய எதிர்த்தரப்பினதைப் போலவே, வேத சோதிடமும் வானத்துக்
கோள்களின் ஸ்தானங்களின் அடிப்படையில் வருவதை முன்கணிப்பீடு செய்யமுடியும் என்று கூறுகின்றது. கண்ணுக்குத் தெரிகின்ற
சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து கோள்களுடன், இந்திய சோதிட வடிவமானது இராகு, கேது என்கின்ற இரண்டு கற்பனை
கோள்களையும் சேர்க்கிறது. இந்து மத புராணப்படி, கண்ணுக்குத் தெரியாத இராகு மற்றும் கேது என்ற பாம்புகள்
சூரியனையும் சந்திரனையும் விழுங்கும்போது சூரிய கிரணமும் சந்திர கிரணமும் நிகழ்கின்றன. அப்படிப்பட்டதை
"விஞ்ஞானம்" என பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று பிஜேபியும் ஆர்எஸ்எஸ் ம் வலியுறுத்துகின்றன.
சோதிடப்படிப்பை அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்தல் ஆகியன
விஞ்ஞானிகள் மற்றும் ஏனையோர் மத்தியில் கோபத்தைக் கிளப்பி இருக்கிறது. பைனான்ஷியல் டைம்ஸின் படி,
100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் 300 அரசியல் மற்றும் சமூக விஞ்ஞானிகள் தங்களது எதிர்ப்பை எழுத்து
வடிவில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி உள்ளனர். அவர்களது கடிதங்கள் புகழ்பெற்ற வான்கோள்களின் இயற்பியல்
மற்றும் வேதி இயல் பண்புகளை ஆராயும் அறிஞரான ஜயந்த் நாரிக்கரின் விமர்சனங்களை- "சோதிடத்தை பல்கலைக்
கழகங்களில் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கும் அளவுக்கு உயர்த்துவது இந்தியாவை மத்திய காலங்களுக்கு எடுத்துச்
செல்லும்" என்பதை மேற்கோள் காட்டின. டாக்டர் பர்காவா, சோதிடப்படிப்பை அறிமுப்படுத்துவதை சட்டவிரோதமானது
மற்றும் அரசியற்சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்குமாறு ஆந்திரப்பிரதேச உச்சநீதி மன்றத்தைக் கோரி ரிட் மனு
செய்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: "சோதிடமானது ஒருபோதும் விஞ்ஞானமாகக் கருதப்படவில்லை மற்றும்
ஒருபோதும் விஞ்ஞானமாகக் கருதப்பட முடியாது. அரசியற் சட்டத்தின் 51வது பிரிவின்படி, குடிமகனின் அடிப்படைக்
கடமைகளுள் ஒன்று விஞ்ஞான மனோபாவத்தை வளர்த்தெடுப்பது. பல்கலைக் கழக மானியக் குழுவின் நடவடிக்கையானது,
விஞ்ஞான மனோபாவத்தை உருவாக்குவதிலிருந்து விலகி, மாறாக மூடநம்பிக்கைகளை பலப்படுத்தும். பாதுகாப்பான
குடிநீர், அடிப்படை கழிவக வசதி, அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக்கல்வி, சாலை வசதி போன்ற அத்தகைய
அடிப்படை மனிதத் தேவைகளுக்குக்கூட போதுமான நிதிகளை இந்தியா பெற்றிராதபொழுது, வரிசெலுத்துவோரின் பணமானது
அத்தகைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படக்கூடாது."
ரிட் மனுவை தள்ளுபடி செய்யும்முகமாக, நீதிமன்றமானது முக்கியமான விஷயங்களைத்
தவிர்த்தது. முதலாவதாக அதற்குத் தலைமைதாங்கிய நீதிபதி, இறுதி முடிவு செய்யப்படாது இருக்கின்றபடியால்
பல்கலைக்கழக மானியக்குழுவின் முடிவு எடுக்கும் நிகழ்ச்சிப்போக்கில் தாம் தலையிட முடியாது என்று வாதிட்டார். இரண்டாவதாக,
19ம் நூற்றாண்டின் முதற் பாதியில் பிரசுரிக்கப்பட்ட பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் இரண்டாவது பதிப்பில் இருந்து
அவர் ஒரு மேற்கோளைக் காட்டினார். அது சோதிடத்தின் விஞ்ஞானத்தன்மை பற்றிய இரட்டுற மொழிதலாக
இருந்தது. வல்லுநர்களின் கருத்து காலத்திற்குகாலம் வேறுபடுகிறது என்று அவர் முடித்தார். இத்தகைய விஷயங்கள்
தொடர்பாக போதுமான தகைமை அற்றதாக இருக்கின்ற நிலையில், நீதி மன்றமானது "சுய கட்டுப்பாட்டு தத்துவத்தை"
செயல்படுத்தும் மற்றும் இந்த விஷயத்தை பல்கலைக்கழக மானியக்குழுவின் நிபுணர்கள் குழுவிற்கு அது விட்டுவிடுகிறது--அதாவது,
சோதிட படிப்பிற்கு வக்காலத்து வாங்கும் அதே குழுவிற்கு விட்டுவிடுகின்றது.
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின்கீழ், கல்வி மற்றும்
கலாச்சாரம் ஆகியவற்றின் ஏனைய பகுதிகளில் அதேவிதமான மற்றும் அதற்கு சமமான பிற்போக்கான திருத்தல்கள்
இடம் பெறுகின்றன. பள்ளி வரலாற்றுப் பாடத்திட்டங்கள், 1600லிருந்து 1900 வரையிலான 300 ஆண்டுகளை
மும்முரமாய் அகற்றும் வண்ணம் மாற்றப்படுகின்றன. இந்திய உபகண்டத்தை முஸ்லிம் மொகலாய ஆட்சியாளர்கள் மற்றும்
பிரிட்டிஷ் மேலாதிக்கம் செய்தபொழுதான பகுதிகள் அகற்றப்படுகின்றன. இப்பொழுது முதல், உயர்நிலைப் பள்ளியின்
இளைய தரத்தினர் "புராதன இந்திய வரலாறும் உலகின் மீதான அதன் கலாச்சாரத் தாக்கங்களும்" என்பதைக் கற்பர்,
அதேவேளையில் முதுநிலை மாணவர்கள் இருபதாம் நூற்றாண்டில் இந்தியா பற்றி ஆய்வு செய்வர்.
மேலும், இந்து மகாசபா போன்ற இனவாதஅமைப்புக்களின் காலனித்துவ ஆட்சியாளர்களுடனான
பகிரங்க ஒத்துழைப்பை நீக்குவதற்காக பிஜேபியும் ஆர்எஸ்எஸ் ம் பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய விடுதலைப்
போராட்ட வரலாற்றை திருத்தி எழுத விரும்புகின்றன. காந்தியை சுட்டுக் கொன்றவன் ஆர் எஸ் எஸ் இன் உறுப்பினன்
ஆவான். ஆர் எஸ் எஸ் அந்த நேரம் காந்தி இந்துக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்றது. வரலாறு பற்றிய
தனது வகுப்புவாத கண்ணோட்டத்தை திணிப்பதற்காக, பிஜேபி ஏற்கனவே பிரபல வரலாற்று ஆசிரியர் ரோமிலா தப்பாரை
செய்தி மற்றும் ஒலிபரப்பு சேவை வாரியத்தில் இருந்து நீக்கி உள்ளது, இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில் இருந்து
18 அறிஞர்களை அகற்றி பிஜேபி ஆதரவாளர்களை நியமித்துள்ளது, மற்றும் கே. என். பணிக்கர் மற்றும் சுமித் சர்க்கார்
ஆகியோரால் தொகுக்கப்பட்ட, விடுதலைப் போராட்டத்திலிருந்து வரலாற்று ஆவணங்களைக் கொண்ட "சுதந்திரத்தை
நோக்கி" என்ற நூல் பிரசுரமாகாமல் தடுத்துள்ளது.
கலாச்சார அரங்கில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, உத்திரப் பிரதேசத்தில்
உள்ள பிஜேபி அரசாங்கத்துடன் கூட்டாக ஒத்துழைத்து, இந்தியாவில் பிறந்த கனடிய திரைப்பட இயக்குநர் தீபா மேத்தாவினால்
எடுக்கப்பட்ட "வாட்டர்" திரைப்பட படப்பிடிப்பு தடுக்கப்பட்டது. அப்படம் 1930களில் காசியில் வாழ்ந்த இந்து
விதவைகளின் துயரங்களைப் பற்றி அலசுகிறது. இந்து உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று கூறிக்கொண்டு பூச்சு
ஓவியங்கள் மற்றும் கலை கண்காட்சிகளை தணிக்கை செய்வதற்குகூட அது முயற்சித்திருக்கிறது.
இந்திய சமூகத்தின்மீது இந்து தீவிரவாத நிகழ்ச்சி நிரலைத் திணிப்பது ஒரு திட்டவட்டமான
அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது நடைமுறைப்படுத்திவரும்
பொருளாதாரக் கொள்கைகள் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தரவர்க்கப் பகுதியினரின் வாழ்க்கைத்தரங்கள் மீது அழிவுகரமான
விளைவுகளை கொண்டிருப்பதனால், அது வளர்ந்து வருகின்ற அதிருப்தியையும் குரோதத்தையும் வகுப்புவாத மற்றும் சாதிய
அரசியல் எனும் முட்டுச் சந்துக்குள் தள்ளுவதற்கு அவர்களை திசைதிருப்ப விரும்புகிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களும்
சுரண்டியது அதே தத்துவத்தில்தான் --பிரித்தாளும் கொள்கையால்தான். சுதந்திரத்திற்குப் பின்னர் அரைநூற்றாண்டிற்கும்
மேலாக மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் எழுதப்படிக்கத் தெரியாதிருக்கின்ற அதேவேளையில், சோதிட
மூடத்தனத்தை விஞ்ஞானம் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கு பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதற்கு அதைத்தவிர
வேறு எந்தக் காரணமும் இல்லை.
|