World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS : ICFI

Stalinism in Eastern Europe: The Rise and Fall of the GDR

ஐரோப்பாவில் ஸ்ராலினிசமும் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் எழுச்சியும் முடிவும்

Use this version to print

பின்வரும் விரிவுரை 1998, ஜனவரி 6ம் தேதி, சர்வதேச கோடை பள்ளியில் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில் வழங்கப்பட்டது. சிட்னியில் ஜனவரி 3 லிருந்து 10 வரை இடம் பெற்ற இச்சொற்பொழிவுகள், (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பீட்டர் சுவார்ட்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் காரியதரிசியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பகுதியின் தலைவருமாவர்.

இந்த விரிவுரையின் முதல் பகுதியை இங்கே பிரசுரிக்கிறோம். இரண்டாம் பகுதி அடுத்தவாரம் பிரசுரிக்கப்படும்.

பகுதி-1

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட ஸ்ராலினிச அரசுகள் கலைக்கப்பட்டு இன்று எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. 1989ம் ஆண்டு முழுவதும் கிழக்கு ஐரோப்பாவில் மாத்திரமல்ல சீனாவிலும், சோவியத் யூனியனிலும் கூட எதிர்ப்பு இயக்கமும், வேலை நிறுத்தங்களும், பாரிய ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

சீனாவில் டெங்சியாவோ பிங்கின் தலைமையிலான அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. இது சர்வதேச ரீதியாக தியனமென் சதுக்கத்தின் நிகழ்வுகள் என தெரிய வந்தது. இப்படியான நிகழ்வு நாடு முழுவதிலும் நிகழ்ந்தது. சோவியத் யூனியனில் நாடு பரந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஒரு சில தற்காலிக சலுகைகளை கொர்பச்சேவ் வழங்கியிருந்தார். அவர் தனது அரசை மேலும் இரண்டு வருடங்களுக்கு பாதுகாக்க முடிந்ததுடன் பின்னர் ஜெல்ட்சின் தலைமையிலான வலதுசாரி சக்திகளிடம் அதிகாரத்தைக் கையளித்தார்.

கிழக்கைரோப்பாவில் ஸ்ராலினிச அரசுகளுக்கான மொஸ்கோவின் ஆதரவு பறிக்கப்பட்டதுடன் கடுதாசி வீடுகள் உடைவதுபோல் தொடராக உடைந்தன. ஹங்கேரியில் கம்யூனிஸ்ட் கட்சி தன்னைக் கலைத்துக் கொண்டது. போலந்தில் சொலிடாநோஸ்க் எதிர்ப்பாளரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது. கிழக்கு ஜேர்மனியில் 20 வருடங்களாக அரசில் அதிகாரம் மிக்க மனிதரான எறிக் கோனேக்கர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, கட்சியிலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

கோனெக்கரின் ரூமேனியக் கூட்டாளியான நிக்கோலா செஸ்செஸ்கோவ் இன் நிலைமை மேலும் மோசமானதாக இருந்தது. அவர் தனது மனைவியான எலேனாவுடன் சேர்ந்து கமராக்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1989ல் யூகோசிலாவியாவிலும், செக்கோசிலவாக்கியாவிலும், பல்கேரியாவிலும் எதிர்ப்பு இயக்கங்களும், வேலை நிறுத்தங்களும் நிகழ்ந்ததுடன் இவை ஸ்ராலினிச அரசுகளின் முடிவுக்கு காரணமாகின.

1989ல் கிழக்கைரோப்பாவின் ஸ்ராலினிச அரசுகளை அடித்துச் சென்ற இயக்கம் ஆளும் அதிகாரத்துவத்திற்கும், அதன் முன்னுரிமைகளுக்கும், அதன் ஆளும் அதிகாரத்துவ முறைகளுக்கும் எதிரான குரோதத்தினால் உந்துதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்தக் குரோதம் பெரும்பான்மையான மக்களிடத்தே காணக்கூடியதாக இருந்தது. வேலை நிறுத்தங்களிலும், ஊர்வலங்களிலும் கலந்து கொண்டிருந்தோர்கள் தமது வாழ்க்கை நிலைமைகளில் முன்னேற்றம் வருமெனவும், மேலும் ஜனநாயகம் கிடைக்குமெனவும் பொதுவாக நம்பியிருந்தனர். எட்டு வருடங்களின் பின்னர் அவர்களின் எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை.

சமூக நிலைமை மிகவும் சீரழிந்துள்ளதுடன் வேலையில்லாத் திண்டாட்டம் அதியுயர் நிலையை அடைந்துள்ளது. கடந்த காலத்திலிருந்து 80 வீதமான வேலைத்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகளிலோ, ஓய்வூதியத் திட்டத்திலோ அல்லது ஏனைய சமூக சேவைகளிலோ எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் அதிகரிப்பதுடன் கையளவிலான மிக உயர் செல்வந்தர்களைத் தவிர பெரும்பான்மையான மக்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்கின்றனர்.

கிழக்கு ஜேர்மனியின் தொழிற்சாலைகள் மேற்கு ஜேர்மனியின் நிறுவனங்களால் கையேற்கப்பட்டு மூடப்பட்டுள்ளன அல்லது முழு ஜேர்மனிக்கும் மலிந்த கூலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ வேலையில்லாதோரின் அளவு 20 வீதம். ஆனால் இதனுள் போலியான வேலைத்திட்டங்களுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளோர் பகுதிநேர வேலையாளர், குறைந்தபட்சம் சம்பளம் பெறுவோர் அல்லது பல மைல்கள் மேற்கு ஜேர்மனிக்கு வேலைக்காக பிரயாணம் செய்வோர் உட்பட்ட இலட்சக் கணக்கானோர் அடங்கவில்லை.

யூகோஸ்லாவியா துண்டாடப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலிகொண்ட உள்நாட்டு யுத்தத்தினுள் அழுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகம் தொடர்பாக அங்கு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகாரம் முன்னைய ஸ்ராலினிச அதிகாரக் கும்பல்களிடமும் ஊழல்மிக்க பெரும் செல்வந்தர்களிடமும் மோசமான குற்றவாளிகளின் கைகளிலுமேயே இருக்கின்றது. இவர்கள் தனியார்மயமாக்கல் என்ற முன்னோக்கை முன்னைய அரச சொத்துக்களை கொள்ளையடிப்பதனாலும், களவெடுப்பதினாலும் சமூக சேவைகளை விரயம் செய்வதினாலுமே நடைமுறைப் படுத்துகின்றனர்.

பாரிய எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் முன்கொண்டு வரப்பட்ட ஒரு இயக்கம் இப்படியான சீரழிவுக்கு இட்டுச் சென்றது எவ்வாறு? என ஒருவர் கேள்வியை எழுப்பலாம். இதற்கான பதில் மிக சுலபமானது. 1989ல் வீதிகளில் இறங்கியோருக்கு தாம் எதனை வெறுத்தோம் என்பதும் எதனை நிராகரித்தோம் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் சீரழிந்து கொண்டிருந்த சமூக அமைப்பை எதனால் பிரதியீடு செய்யப் போகிறோம் என்பது தொடர்பாக ஒரு சிறிய துரும்பு கூட அவர்களிடம் இருந்திருக்கவில்லை. அவர்களிடம் ஒரு தகுதியான அரசியல் முன்னோக்கும், தலைமையும் இல்லாதிருந்தது. வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் இதேபோன்ற உதாரணங்கள் எதிர்மாறான அர்த்தத்தில் இருந்திருக்கவில்லை. அதாவது வரலாற்றுப் போக்கில் உணர்மையினது பங்கு என்னவென்பது 1989ன் நிகழ்வுகளில் தெளிவாக எடுத்துக் காட்டியது.

ஒரு நீண்ட நோக்குடனான முன்னோக்கு இல்லாது போனது 1989ன் இயக்கத்தில் தெளிவாகத் தெரிந்ததுடன், இது முதலாளித்துவத்தின் ஆர்வம் மிகுந்த ஆதரவாளர்களாக மாறிய சிறிய வலதுசாரிக் குழுக்களாலும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினாலும் இவ் இயக்கத்தைக் குழப்பவும், தாம் விரும்பிய முடிவுக்கு கொண்டு செல்ல சாதகமாக்கியதுடன், இவர்களால் அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொள்ளவும் முன்னைய ஆட்சியின் கீழிருந்த கட்டுப்படுத்தப்பட்ட சமூக வெற்றிகள் அனைத்தையும் இல்லாமல் செய்யக் கூடியதாகவும் இருந்தது. சுயாதீனமான மக்கள் இயக்கமானது அதனது முன்னோக்கினையும், சமூக உள்ளடக்கத்தையும் கவனத்திற்கு எடுக்காது சுயாதீனமாக வெற்றியை நோக்கி முன்செல்லும் என்று கூறும் சகலருக்கும் 1989ம் ஆண்டு நிகழ்வுகள் ஒரு தீர்க்ககரமான பதிலை வழங்கியது. அவர்களது கருத்து சோசலிஸ்டுக்களின் கடமை தற்போதுள்ள போராட்டங்களை ஆதரவளித்து உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர தலையீடு செய்து தலைமைக்கும், முன்னோக்கிற்குமாக போராட வேண்டும் என்பதல்ல.

இன்று எட்டு வருடத்தின் பின்னர் சகல நப்பாசைகளும், சமூக நெருக்கடிகள் உடையும் நிலைமைக்கு வந்துள்ள போதும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தினுள் எந்தவிதமான சாதகமான முன்னோக்கிற்கான எந்தவொரு தடயத்தையும் காணமுடியவில்லை.

இங்கு கேள்வியானது, இது ஏன்? என்பதாகும். இது எம்மை இன்றைய விரிவுரையான கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தின் பங்கு என்பதை நோக்கிக் கொண்டு செல்கின்றது. இதை ஆய்வு செய்வது, முன்னோக்கு தொடர்பாக இன்றுள்ள பிரச்சினையை விளங்கிக் கொள்வதற்கான வழியை வழங்குவது மட்டுமல்லாது மேற்கிலுள்ள தொழிலாள வர்க்கத்தினையும் அரசியல் ரீதியாக ஆயுதமயப்படுத்துவதற்கான முக்கிய கேள்வியுமாகும்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கிழக்கைரோப்பாவில் நிறுவப்பட்ட அரசுகள் சோசலிச அரசுகளா? அல்லது ஆகக் குறைந்தது சோசலிசத்தை நோக்கிய ஆரம்பப் படிகளா? இப்படியான கருத்து முன்னைய ஸ்ராலினிச ஆட்சியாளர்கள், கம்யூனிச எதிர்ப்பு மேதாவிகளுக்கு மட்டுமல்ல ''இடதுகள்'' என கூறிக்கொள்ளும் ஸ்ராலினிசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவோருக்கும் உதாரணம் (PDS Germany) முன்னைய குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளுக்கும் மறைந்த மண்டேலின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் ஆதரவாளர்களுக்கும் உரித்தானது.

ஜேர்மனியில் இவர்கள் முன்னைய ஜேர்மன் ஜனநாயகக் குடியரசை "REAL EXISTIERENDER SOZIALISMUS" என்ற பதத்தினை கண்டுபிடித்தனர். இதன் சரியான மொழிபெயர்ப்பு சோசலிசம் யதார்த்த வாழ்வில் நடைமுறையில் உள்ளது என்பதாகும். இந்த பதம் ஒரு தொடர் தீர்மானிக்க முடியாத கருதுகோள்களை கொண்டுள்ளது. ஒரு வகையில் ''யதார்த்த வாழ்வில் நடைமுறையில் உள்ள'' என்ற வரையறைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ், றோசா லுக்சம்பேர்க், லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் ஏனைய பலராலும் கருத்தில் கொள்ளப்பட்ட சோசலிச சிந்தனைகளுடன் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு சரியாக தொடர்புபட்டிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகும். இது ஸ்ராலினிசத்தின் மீது சகலவித விமர்சனத்திற்கான வழியை விடுகின்றனர். ஆனால் இன்னொரு வகையில் இது உண்மையில், ஜேர்மன் ஜனயாயகக் குடியரசு என்னவென்பதை விளங்கப் படுத்தவில்லை. இது யதார்த்த வாழ்வில் சோசலிசம் என்ற பதத்தின் கீழ் இதனைத்தான் அடைய முடியும் என்பதை அமைதியாக கருதிக்கொள்கின்றது. ஏனெனில் பயங்கரமான யதார்த்தம் உண்மையான சிந்தனைக்கு பொருந்தியிருக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இக்கருத்து ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் முடிவுடன் ''சோசலிசம் தோற்றுவிட்டது'' என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றது.

இந்த வரையறைப்பு மார்க்சிசத்துடன் முற்றிலும் முரண்பாடான சோசலிசம் தொடர்பான ஒரு முடிவுக்கு இட்டுச் செல்கின்றது. சோசலிசம் என்பது தொழிலாள வர்க்க இயக்கத்தினது விளைவல்லாத அதாவது தொழிலாள வர்க்கம் அதனது அரசியல் நோக்கில் உணர்மையாக கலாச்சார, சமூகப் பொருளாதார ரீதியாக ஒரு உயர்ந்த சமூக அமைப்பை கட்டுவது என்றல்லாது மேலேயிருந்து செய்யப்படும் ஒரு தொடர் பொருளாதார ரீதியான நடவடிக்கைகளின் விளைவு என்பதே இம் முடிவாகும்.

''சோசலிசம் யதார்த்த வாழ்வில் நடைமுறையிலிருந்தது'' முடிவுக்கு வந்ததும் அவர்களுக்கு இருந்தது, இரண்டு பேய்களில் எதை தேர்ந்தெடுப்பதென்பதாகும். முதலாளித்துவத்தின் மோசமான தன்மைகளை சில நவீன சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் சுலபமாக்கலாம் என நம்பலாம். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சோசலிசத்திற்கான சுயாதீன போராட்டம் என்பது தொடர்பான கதையே இருக்கக்கூடாது. இவைதான் இப்படியான கருத்தைக் கொண்டுள்ள சகல அரசியல் அமைப்புக்களின் முன்னோக்குமாகும். ஐரோப்பாவில் பெரும்பாலானோர் இவ்வாறுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களை சூழ சுற்றிக்கொண்டு இவ்வமைப்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து இடதுபக்கம் திரும்பலாம் என்கின்றனர். தொழிற்சங்கவாதிகளுக்கும், சமூக ஜனநாயகவாதிகளுக்கும், ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கும் எதிரான ஒரு இடது மாற்றீடாக இருப்பதையிட்டு ''இந்த இடதுகள்'' அவர்களுக்கான ஒரு மேலதிக முண்டு கோலாகியுள்ளனர். இவர்கள் தொழிலாள வர்க்கம் கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்வதையும் ஒரு சுயாதீன பாதையில் நடவடிக்கையில் இறங்குவதையும் தடுக்கின்றனர்.

இன்றைய எனது விரிவுரையில் நான் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தின் தோற்றமும் வீழ்ச்சியும் தொடர்பாக இரண்டு மட்டங்களில் அணுகவுள்ளேன். அத்துடன் இந்த நிகழ்வுகள் தொடர்பாக அந்த காலகட்டங்களில் நான்காம் அகிலத்தினுள் நிகழ்ந்த விவாதங்கள் தொடர்பாகவும் ஆராயவுள்ளேன்.

ஸ்ராலினிஸ்டுகளினதும், பாசிசவாதிகளினதும் கொலைகளால் இடம்பெற்ற இழப்பினால் நான்காம் அகிலம் உலக யுத்தத்தின் பின்னர் முக்கிய பங்கு வகிக்க முடியாது விட்டாலும், அது ஒரு சிந்தனைக்கான பரிசோதனைக் கூடமாகவும் தொழிலாள வர்க்கத்தின் ஞாபகக் களஞ்சியமாகவும் சேவை செய்தது. நான்காம் அகிலத்தினைத் தவிர வேறெங்கும் கிழக்கு ஐரோப்பாவின் நிகழ்வுகள் முற்றுமுழுதாக கலந்துரையாடப்பட்டதும் அதன் அரசியல் வரலாற்றுக் கடமைகள் கவனமாகவும், சரியாகவும் மதிப்பிடப்பட்டதும் கிடையாது. கிழக்கைரோப்பாவில் உருவாக்கப்பட்ட நாடுகளின் தன்மை தொடர்பான விவாதங்கள் நிகழ்ந்து அண்ணளவாக 50 வருடங்கள் கழிந்துவிட்ட போதும் அந்த புத்தகங்கள் ஸ்ராலினிச அரசுகளின் உடைவின் பின்னர் வெளிவிடப்பட்ட புத்தகங்களைவிட இன்னும் கூடிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

2

ஐம்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் செம்படையால் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் அரசியல், சமூக கட்டுமானம் கிட்டத்தட்ட சோவியத் யூனியனைப் போன்றே இருந்தது. நிலமும் கைத்தொழில் துறையும் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. குறிப்பிடத்தக்களவிலான முதலாளித்துவ சொத்துடமை அங்கிருக்கவில்லை. அதிகாரம் சோசலிசத்தைக் கட்டுவதாகக் கூறிக்கொண்ட தனியான ஸ்ராலினிசக் கட்சிகளிடம் இருந்தது. எவ்வாறிருந்த போதும் சோவியத் யூனியனுக்கும் இவ்வரசுகளுக்குமிடையே அவற்றின் தோற்றம் தொடர்பான முக்கிய வித்தியாசம் இருந்தது. சோவியத் யூனியன் ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் உருவாக்கப்பட்டது. இது பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டது. கிழக்கைரோப்பிய நாடுகள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு நேரடித் தலையீடும் இல்லாததோடு தொழிலாள வர்க்கம் மோசமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளுக்குள் தோன்றின. உண்மையில் ஸ்ராலின் கிழக்கைரோப்பாவில் பாரியளவிலான தேசியமயமாக்கலை செய்ய விரும்பவில்லை. அவரது வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானித்தது உள்நாட்டுக் கொள்கையைப் போலவே சோவியத் அதிகாரத்துவத்தின் சுயபாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குதலாகும். அவரது முக்கிய கவனம் முதலாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவை அடித்துச் சென்ற தொழிலாள வர்க்க எழுச்சிகளைப் போல் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும் இப்படியாகத் தோன்றும் எழுச்சிகள் சோவியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு உற்சாகத்தை ஊட்டி ஸ்ராலினிச அரசுகளை பலவீனமடையச் செய்துவிடும் என்பதுதான். இதனால் ஸ்ராலினின் முக்கிய நலன்கள் அடிவரை ஆட்டம் கண்டிருந்த முதலாளித்துவ அரசுகளை பலப்படுத்துவதாக இருந்தது.

இதேவேளை மொஸ்கோ அதிகாரத்துவம் இன்னும் ஜேர்மனின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்து இருந்ததுடன் இன்னுமொரு ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிராக உத்தரவாதத்தை வேண்டி நின்றது. இதுதான் சோவியத் யூனியனுக்கும் அதன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு கூட்டினருக்குமிடையே யுத்த முடிவில் யால்டா, தெகிரான், போஸ்டாம் இல் செய்யப்பட்ட உடன்படிக்கையின் பின்னணியாகும்.

சோவியத் யூனியனிற்கு ஒரு சில யுத்தத்தடுப்பு அரசுகளான (BUFFER STATES) போலந்து, செக்கோசிலவாக்கியா ஹங்கேரி, ரூமேனியா, பல்கேரியா ஓரளவிற்கு யூகோஸ்லாவியா, அல்பானியா மீதான கட்டுப்பாட்டிற்கான உரிமை வழங்கப்பட்டதன் மூலம் முதலாளித்துவ ஐரோப்பாவுடனான மேற்கு எல்லை ஒன்று வரையப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டிற்கான உரிமை ஏகாதிபத்திய சக்திகளை பொறுத்தளவில் இது ஒரு பாரிய சலுகையல்ல. ஏனெனில் இந்நாடுகளின் முதலாளித்துவம் மிகவும் பலவீனமாக இருந்ததுடன் நாசிகளுடன் கொண்டிருந்த கூட்டினால் மதிப்பிழந்தும் இருந்தன. ஸ்ராலினிசத்தால் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்க கூடியதாய் இருந்தது.

ஜேர்மனி சோவியத் யூனியனாலும், அமெரிக்காவாலும், பிரித்தானியாவாலும், பிரான்சாலும் கூட்டாக நான்கு ஆக்கிரமிப்பு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டியருந்தது. ஸ்ராலின் தனது பங்கிற்கு மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு தனது ஆதரவைத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

கிழக்கைரோப்பா முழுக் கட்டுப்பாட்டினுள் இருந்தது மட்டுமல்லாது முதலாளித்துவக் கட்சிகள் மிக பலவீனமடைந்திருந்த போதிலும் சோவியத் அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் முதலாளித்துவவாதிகளால் தலைமை தாங்கப்பட்டு உருவாக்கப்பட்டாலும் முக்கிய அமைச்சரவைகளை உள்ளூர் ஸ்ராலினிசக் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்டுப்பாட்டினுள் வைத்திருந்ததன் மூலம் இந்த அரசுகளை மொஸ்கோவிற்கு கீழ்ப்படிவாக வைத்திருந்தனர். முதலாளித்துவக் கட்சிகள் பொதுவாக இக் கூட்டுழைப்பிற்கு விருப்பத்தைக் கொண்டிருந்தனர். இதன் மூலம்தான் மீண்டும் அதிகாரத்தில் ஏறிக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்வொரு சுயாதீன தொழிலாளர் வர்க்க எழுச்சிகளையும் ஒடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டதுடன் சோவியத் யூனியனுக்கு தஞ்சமடையச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களுக்கு திட்டமிட்டபடி இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

இது தொடர்பான தெளிவான விபரங்கள் ''புரட்சியின் குழந்தைகள்'' (Child of Revolution) என்ற வோல்வ்காங் லியோநார்ட் (Wolfgang Leonard) இன் புத்தகத்தில் உள்ளது. லியோநார்ட் அவரது இருபது வயதுகளில் யுத்தத்தின் பின்னர் சோவியத் யூனியனிலிருந்து கிழக்கு ஜேர்மனிக்கு அனுப்பப்பட்ட உல்பிறிச் குழு (Ulbricht Group) என்ற முதலாவது ஸ்ராலினின் அங்கத்தவர் பிரிவின் அங்கத்தவராகும். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களின் மகன் என்ற வகையில் அவர் சோவியத் யூனியனிற்கு புகலிடத்திற்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது புத்தகத்தில் தான் எவ்வாறு விசேட பாடசாலை ஒன்றில் ஜேர்மனியின் எதிர்கால வேலைக்காக பயிற்றுவிக்கப்பட்டார் என குறிப்பிடுகின்றார்.

''எமது அரசியல் கடமைகள் ஜேர்மனியில் சோசலிசத்தை அடைவதற்கோ அல்லது சோசலிச அபிவிருத்திக்கான முயற்சிகளைச் செய்வதற்தோ இல்லை என எமக்கு கூறப்பட்டது. இந்த வகுப்புகளில் முக்கியமானது என்னவெனில் ''இடதுபக்கம் இருந்துவரும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என எமக்கு பயிற்றுவிக்கப் பட்டமையாகும். பல்கேரியாவில் இடதுபக்கம் போகும் தன்மை ஆதிக்கம் செலுத்தியதாகவும் இது டிமிற்ரோவ் (Dimirov) இன் வருகையின் பின்னரே வெற்றி கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. சோசலிசத்தை நடைமுறைப் படுத்துவதற்கான அதியுயர் காலகட்டம் வந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களும் அதற்கான மன நிலைமைகளும் ஜேர்மனியில் தோன்றுவதற்கான கூடிய சாதகமான தன்மைகள் காணப்படுகின்றன'' என்றார். (p 332 German Editer)

மேலும் லியோநார்ட் தான் ஜேர்மனிக்கு வந்த பின்னர் சுயாதீனமாக நாடு முழுவதும் வெடித்தெழுந்த பாசிச எதிர்ப்புக் குழுக்களை திட்டமிட்டபடி கலைப்பதில் தான் பங்கு பற்றியதாகக் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இக்குழுக்கள் கம்யூனிச, சமூக ஜனநாயகத் தொழிலாளர்களால் தலைமை தாங்கப்பட்டதாகவும் அவர்கள் அரச நிர்வாகத்தை தமது கைகளுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

லியோநார்ட்டினாலும் அவரது கூட்டாளிகளாலும் சுய விருப்பப்படி கலைக்க முடியாத குழுக்கள் பின்னர் சோவியத் இராணுவத்தினராலும், ஆக்கிரமிப்பு அதிகாரிகளாலும் பலாத்காரம் மூலம் அழிக்கப்பட்டன. மேற்கிற்குத் திரும்பிய பின்னர் எழுதிய இப்புத்தகத்தில் அவர் ''ஸ்ராலினிசத்திலிருந்து நான் என்னை உடைத்துக் கொண்ட பின்னரே சுயாதீனமாகத் தோன்றிய பாசிச எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிரான கட்டளைகளின் முக்கியத்துவத்தை நான் உண்மையாக உணர்ந்து கொண்டேன். ஒரு சக்தி வாய்ந்த சுயாதீன பாசிச எதிர்ப்பு சோசலிச இயக்கத்தின் முதல் தோற்றமாக எவ்வாறு இருக்கும், இதனை அழிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இது ஜேர்மனியில் இடது சார்பு அமைப்பான பாசிச எதிர்ப்புச் சுயாதீன எழுச்சியின் மேலான அதிகாரத்துவ அமைப்பின் முதலாவது வெற்றியாகும்'' என்றார். (Page 325-26 Eng)

பாசிச எதிர்ப்புக் குழுக்கள் அனைத்தும் நிர்வாக அமைப்புக்களால் பிரதியீடு செய்யப்பட்டதுடன் இவற்றில் தொழிலாள வர்க்கத்தின் குரல் நசுக்கப்பட்டதுடன் முதலாளித்துவ அரசியல்வாதிகள் பெரும்பான்மையாகவும் இருந்தனர். வலதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் வீடுகளில் ஒழிந்திருந்தபோதும் அவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். பேர்லினில் உள்ள முதலாளித்துவ அரசியல்வாதி ஒருவர் தனது வரலாற்றைக் கூறுகையில் ''செம்படையினர் எனது வீட்டுக் கதவை தட்டும்போது எனது முழங்கால்களுக்கு கீழ் எதுவுமே இருக்கவில்லை என்பதுபோல் உணர்ந்தேன்'' என்றார். அவர் எதிர்பார்த்ததுபோல் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லாது மாறாக நகரசபைக்கு கொண்டு செல்லப்பட்டு நகரசபை தலைவராக்கப்பட்டார்.

முக்கியமானது என்னவெனில் யுத்தத்திற்குப் பின்னான ஜேர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் அதனது முன்னோக்கில் தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் முற்றிலும் கட்டுப்பாடற்ற தனியார் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவை கொடுத்தது. ஹெல்முட் கோலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் கூட அந்த நேர பொதுவான மனநிலையை கவனத்திற்கெடுத்து யுத்தத்திற்குப் பின்னான தமது முதலாவது முன்னோக்கில் ஜேர்மனியில் முதலாளித்துவம் தோற்றுவிட்டது என குறிப்பிட்டனர்.

3.

யுத்தத்திற்குப் பின்னான முதல் மூன்று வருடங்களில் சோவியத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில தேசியமயமாக்கலே செய்யப்பட்டது. ஜேர்மன் இராணுவத்தினதும், பிற்போக்காளரினதும் முதுகெலும்பாக இருந்த நிலப்பிரபுத்துவ நிலச்சொத்துடமையாளரினதும், மேல்தட்டினரதும் நிலங்களும், யுத்தக் குற்றவாளிகளின் சொத்துக்கள் மட்டுமே தேசியமயமாக்கப்பட்டன. மேலும் பல தொழிற்சாலைகள் பிரித்தெடுக்கப்பட்டு யுத்த நஷ்டஈடாக சோவியத் யூனியனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது சோவியத் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மீதான தொடர்ச்சியான வெறுப்பின் அடித்தளமாக இருந்தது. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களினால் சுயமாக மீளக் கட்டப்பட்டன. இவர்கள் இன்று தமது வேலைத்தலங்களை இழக்கின்றனர். இது குளிர் யுத்தக் காலகட்டத்தில் ஆரம்பமாகி இருந்ததுடன் இது கிழக்கைரோப்பாவில் ஸ்ராலினிசக் கொள்கையில் மாற்றம் ஏற்படவும் இட்டுச் சென்றது. குளிர் யுத்த காலகட்டமானது ஸ்ராலினிசக் கட்சியின் ஆதரவுடன் ஏகாதிபத்தியத்தால் அடையப்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.

மேற்கு அரசுகள் உடனடியான புரட்சிகர சவால்கள் தொடர்பாக பயமடையத் தேவையில்லாது இருந்தமையால் அவர்கள் சோவியத் யூனியன் மீதான பொருளாதார, அரசியல், இராணுவ அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கினர். 1947ம் ஆண்டு மார்ஷல் திட்டத்தின் கீழ் (Marshall Plan) மேற்கு ஐரோப்பாவின் பொருளாதார மறுசீரமைப்பு ஆரம்பமாகியது. ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவிற்கும், மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையேயான இராணுவக் கூட்டான நேட்டோ (NATO) விற்கான அடித்தளமிடப்பட்டது. 1950ம் ஆண்டு குளிர்யுத்த காலகட்டம் கொரிய யுத்தத்தின் ஆரம்பத்துடன் அதன் உயர் புள்ளியை அடைந்தது. இதன் அபிவிருத்திகளின் விளைவால் கிழக்கைரோப்பா மீதான ஸ்ராலினிசக் கட்டுப்பாடு இரண்டு பக்கத்திலிருந்தும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிசத்தின் மீது மேலும் மேலும் விரோதமடைந்தது. அது தொழிற்துறை அழிக்கப்பட்டதால் உண்டான பொருளாதார சுமூகமற்ற நிலையையும், புனரமைப்பு செலுத்துமதியையும் சுமக்க வேண்டியிருந்ததுடன், தொடர்ச்சியாக தனிமைப்பட்டதுடன் வாழ்க்கைத் தரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கூடிய வேலையையும், உற்பத்தியையும் செய்ய வேண்டியிருந்தது. இதேவேளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமபலமாக அதிகாரத்துவத்தால் பயன்படுத்தப்பட்ட முதலாளித்துவப் பிரிவினர் மேற்கை நோக்கிப் பார்த்தனர். இது சோவியத் கட்டுப்பாட்டை ஆபத்துக்குள்ளாக்கியது.

1948ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும், யூகோஸ்லாவியாவிற்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படையாகத் தோன்றியது. இது கிழக்கைரோப்பாவின் மீதான ஸ்ராலினிச கட்டுப்பாட்டை மேலும் பலவீனப்படுத்தியது. யூகோசிலாவிய கம்யூனிஸ்ட் கட்சி சக்திவாய்ந்த பார்ட்டிசான் (Partisan) இயக்கத்தினால் பதவிக்கு வந்ததுடன் இது ஏனைய கிழக்கைரோப்பிய கட்சிகளை விட மொஸ்கோவிலிருந்து சுயாதீனமாக இருந்தது. அதனது தலைவரான டீட்டோ (TITO) ஸ்ராலினின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியத் தயாராக இருக்கவில்லை. டீட்டோ சோசலிசத்திற்கு மாற்றீடான வழியொன்றிற்கு ஊக்கமளிக்க நம்பிக்கை கொண்டார். ஆனால் விரைவிலேயே ஏகாதிபத்தியத்துடனான தனது சொந்த இணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்து சோவியத் கூட்டிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே சமாளித்துக் கொண்டு போகும் கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தினார்.

தொடரும்.......