World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா

Taliban regime sets out to obliterate Afghanistan's cultural heritage

தலிபான் அரசாங்கம் ஆப்கானிஸ்தானின் கலாச்சார மரபுரிமைகளை அழிக்கத் தயாராகின்றது

By Sarath Kumara
7 March 2001

Back to screen version

ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் இயக்கம் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களதும் நூதனசாலைகள், கலாச்சார அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களதும் பரந்தளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் பொருட்படுத்தாது மத்திய பாமியன் மாகாணத்தில் உள்ள இரண்டு இராட்சத புத்தர் சிலைகள் உட்பட ஆயிரக்கணக்கான சிலைகளையும் கலைப் படைப்புகளையும் நாடுதழுவிய ரீதியில் உடைத்தெறிவதில் முன்னணியில் நின்றுகொண்டுள்ளது. அவர்களின் அழிப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக அரும் பொருட்களை அரசாங்கங்களும் நூதனசாலைகளும் வாங்கிக்கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சியையும் நிராகரித்த அதேவேளை, யுனெஸ்கோவால் (ஐக்கிய நாடுகள் விஞ்ஞானக் கல்வி கலாச்சார அமைப்பு) விடுக்கப்பட்ட நேரடி வேண்டுகோளையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தூக்கி எறிந்துள்ளனர்.

தலிபானின் தலைவரான, முல்லா முகமட் ஒமார் பெப்பிரவரி 26ம் திகதி சிலைகளை தகர்ப்பதற்கான ஆணையைப் பிறப்பித்தார். "அவர்கள் கடந்த காலத்தில் பிழையான தெய்வங்களை வணங்கி வந்துள்ளதாகவும், அவற்றை அப்படியே இருக்கவிட்டால் மீண்டும் அவற்றுக்கு கெளரவம் கிடைக்கும் எனப் பிரகடனப்படுத்தியதோடு நீதி அமைச்சர் முல்லா டுரபி, (Mullah Turabi) இத்திட்டத்தை அறிக்கையாக ஒமாருக்கு முன்வைக்க, தலிபானின் உயர் குழுவான ஷரியா பேரவையில் இது கலந்துரையாடப்பட்டு "உருவ எண்ணக் கடவுள்களான" சிலைகளையும் உருவங்களையும் தகர்க்கும் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம் உடன் நடைமுறைக்கு வந்தது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஹெராட், காஸ்னி, காபுல், நாங்கர்ஹர் ஜலலாபாத் மற்றும் கந்தஹர் பகுதிகளில் உள்ள வரலாற்றுத் தலங்களில் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாட்டின் இரண்டு மூன்று சிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தலிபான் தகவல், கலாச்சார அமைச்சர் குவாத்ரதுள்ளா ஜமால் குறிப்பிட்டார். தலிபான் உலகின் மிக உயர்ந்த -ஒன்று 53 மீட்டர் உயரமும் மற்றையது 38 மீட்டர் உயரமும்- புத்தர் சிலைகளை தகர்ப்பதற்காக பீரங்கிகளையும் மோட்டார்களையும் வெடிமருந்துகளையும் பயன்படுத்தி வருகின்றது. இச் செய்திகளை ஊர்ஜிதம் செய்ய வெளியில் உள்ள பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தலிபான் அதிகாரிகள் இடம்பெறும் மோசமான நடவடிக்கைகளில் சிலவற்றில் இரட்டை நிலைப்பாட்டை அறிவிப்பதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார்கள். பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர், முல்லா அப்துல் சலாம் சாயீப் குறிப்பிட்டதாவது: "ஐக்கிய நாடுகள் சபை சிலைகளைப் பற்றி கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் துன்பப்படும் ஏழை ஆப்கானிஸ்தானியர்களைப் பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை. ஆப்கானிஸ்தானிய மக்கள் முஸ்லிம்கள். அவர்களுக்கு இந்த சிலைகள் தேவையில்லை" என்றுள்ளார். கடுமையான வரட்சியின் தாக்கத்தால் உணவும் தண்ணீரும் தேடி இருப்பிடங்களில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்டுள்ள பத்தாயிரக் கணக்கான ஆப்கானியர்களின் துன்பத்தை ஒழிக்க ஐ.நா.வும் ஏனைய வல்லரசுகளும் எதுவும் செய்யவில்லை என்பது உண்மையாகும். சுமார் 80,000 அகதிகள் மிக மோசமான நிலைமையில் ஹொராட் நகரைச் சுற்றியுள்ள முகாம்களில் நிறைந்திருப்பதோடு மேலும் 150,000 பேர் அயல் நாடான பாகிஸ்தானின் எல்லையை நோக்கி நகர்ந்துள்ளனர். கடந்த வருடத்தின் இறுதியில், வறுமைக்கு முகம் கொடுத்துள்ள பல ஆப்கானியர்களை நெருக்கும் வகையில் அமெரிக்காவினதும் ரஷ்யாவினதும் தூண்டுதலின் பேரில் ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆப்கானிஸ்தான் மீது பொருளாதார மற்றும் அனைத்துலக தடைகளை திணித்துள்ளது.

ஆனால் இரட்டை வேஷம் பூண்டவர்களின் பண்பு தொடர்பான தன்மையால் ஐரோப்பாவினதும் ஆசியாவினதும் கலைப் பாரம்பரியங்களின் சிறப்பு பிணைப்புக்களைக் கொண்ட ஒரு கலாச்சார மரபுகளை தலிபான் அரசாங்கம் ஒழித்துக் கட்டத் தலைகீழாக நின்று கொண்டுள்ளது என்ற உண்மையை பூசி மெழுகிவிட முடியாது. பொதுவில் ஆப்கானிஸ்தானும் விசேடமாக பாமியன் பள்ளத்தாக்கும் சில்க் வீதியின் (Silk Road) இதயமாக இருந்தது- கிழக்குக்கும் மேற்குக்குமான இருபக்க புராதன வர்த்தகப் பாதையாக விளங்கியது. சீனாவிலிருந்து பட்டும் அலக்சாண்டிரியாவிலிருந்து நேர்த்தியான கண்ணாடிப் பொருட்களும், ரோமிலிருந்து வெண்கலமும் இந்தியாவிலிருந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட யானைத் தந்தங்களும் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தன.

வரலாற்றாசிரியர் ஜெட் வன் கிறிக்கேன் (Jet van Krieken) சர்வதேச ஆசியக் கல்வி நிறுவனம் (IIAS) 2000 த்தில் இதை வருணிக்கும்போது: "கிறீஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டுகளில், கிழக்கு ஆப்கானிஸ்தான் பெளத்த ஆச்சிரமங்களாலும் விகாரைகளாலும், குருமார்களாலும் நிறைந்து காணப்பட்டது. இந்த செல்வந்த, சமாதான காலத்தில், புதிய கலை வடிவங்கள் தோன்றின. காந்தார ஓவியம் அது உருவான மாகாணத்தின் பெயரையே ஞாபகப்படுத்துகின்றது. இந்தக் கலைக்கான முன்னோடி விவாதத்துக்குரியது. ஆனால் கிரேக்கச் செல்வாக்குகள் இறுக்கமானவை. இந்தக் காலத்தில், முதலில் மனித வடிவிலான புத்தர் உருவங்கள் கூட இந்த குஷான்/ஷகா பிரதேசத்திலேயே தோன்றுகிறது.

இரண்டு இராட்சத பாமியன் சிற்பங்களும் மனித புத்தரின் தோற்றம் ஆசியா முழுவதும் பரவியதற்கு கற்பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளவைகள் முதலில் உதாரணங்களாக கொள்ளப்பட்டன. அவை அசல் நிறந்தீட்டப்பட்டு தங்கம் பூசப்பட்டு அதன் முகங்களில் முக மூடிகளைக் கொண்டுள்ளன. டசின் கணக்கான இந்திய குகைகள், பாறைகளில் வெட்டப்பட்டு, சுவர்களால் மறைக்கப்பட்டன. பொதுவாக இரண்டு சிலைகளும் 5ம் நூற்றாண்டுக்கு உரியனவாக நம்பப்பட்டாலும் அவை அதற்கும் முந்திய பழமை வாய்ந்தனவாகும்.

பிராந்தியத்தில் இஸ்லாமியர்கள் அதிகாரம் கொண்டிருந்த எட்டாம் நூற்றாண்டின் பின்னரும் பல நூற்றாண்டுகளாக இந்த சிலைகள் நின்றுகொண்டுள்ளது. இது தலிபான் வகையிலான இஸ்லாமிய வெறி முற்றிலும் ஒரு நவீன தோற்றப்பாடு என்பதை சுட்டிக் காட்டுகிறது. சிற்பங்களை அழிப்பதும் கோவில்களை நாசம் செய்வதும் கடந்த கால ஆட்சி முறைக்கு விதிவிலக்கானதாகும். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதம் 1979ல் சோவியத் ஆக்கிரமிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கசப்புணர்வினால் எண்ணெய் வார்க்கப்பட்டது. இது பாகிஸ்தானின் உதவியோடு அமெரிக்காவினால் சுரண்டிக் கொள்ளப்பட்டது. இது காபூலில் இருந்து வந்த சோவியத் ஆதரவு அரசாங்கத்துக்கு எதிராக முஜாஹிதீன் போராளிகளுக்கு பயிற்சியளித்து ஆயுதபாணிகளாக்கியது.

தலிபான் இராணுவம், ஆப்கான் அகதிகளில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்த ஏனையவர்களில் இருந்தும் திரட்டப்பட்டது. அமெரிக்காவின் அங்கீகாரத்துடன் இஸ்லாமாபாத் இதற்கு ஆதரவளித்தது. சோவியத் ஆதரவு ஆட்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து 1992ல் ஆட்சிக்கு வந்த ஈடாட்டம் கண்ட கூட்டு முன்னணிக்கு எதிராக இது அமைக்கப்பட்டது. நன்கு ஆயுதபாணிகளாக்கப்பட்டு ஆயுதம் விநியோகிக்கப்பட்ட தலிபான், 1996ல் காபூலைக் கைப்பற்றியதோடு இன்று நாட்டின் 95 சதவீதமான பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது. போட்டிக் குழுவான வடபாக முன்னணி (Northern Alliance) ஏனையதை தனது பிடியில் கொண்டுள்ளது.

தலிபானின் சமூக அடிப்படை

பிராந்தியத்தின் ஏனைய இடங்களில் உள்ள அடிப்படைவாத இயக்கங்களைப் போலவே, தலிபானும் பொது மக்களதும் தொழிலாளர்களதும் அடிப்படைச் சமூகத் தேவைகளை அணுகும் ஆளும் வர்க்கத்தின் பலவீனத்தை பிரதிபலிக்கின்றது. ஆழமான பொருளாதார நெருக்கடியினதும் சமூக துருவப்படுத்தல் நிலைமைகளின் கீழ் சமூக அடிப்படைகளை தங்களுக்காகவே நிர்வகிக்கும் ஒரு முயற்சியில் ஆளும் வர்க்கத்தின் சில பகுதியினர் "மதவெறி பக்கம் திரும்பியுள்ளனர்."

ஆப்கானிஸ்தான் பிரச்சினையில், தங்கள் இராணுவத்தின் முதுகெலும்பாக உள்ள ஏழை ஆதிவாசிகள் பகுதியினரதும் கிராமத்தவர்களதும் பிற்போக்கு பண்பு கொண்ட பிற்போக்கு கலாச்சாரத்துக்கு தலிபான் அழைப்பு விடுக்கின்றது. அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட புதிய அரசாங்கம் நாடுமுழுவதிலும் இஸ்லாமிய ஷரியாச் (Sharia) சட்டத்தை பிரகடனப்படுத்தியது. இதன் மூலம், பெண்கள் கல்வி அல்லது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்தது. மற்றும் திரைப்படங்கள், வீடியோக்கள், இசை நாடாக்களை தடை செய்ததோடு சகல ஆண்களும் தாடி வளர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய ஆணைகளைப் போலவே, ஆப்கானிஸ்தானின் உயர்ந்த கலாச்சார உரிமைகளை அழிப்பதற்கான தலிபானின் தீர்மானம் பற்றாகுறையின் மட்டுப்படுத்தப்பட்ட தோற்றத்தை பிரதிபலிப்பதோடு, நகரங்களிலும் பட்டினங்களிலும் மற்றும் அவர்களின் படைப்புகளிலும் பார்க்கையில் கல்வியறிவற்ற கிராம வாழ்க்கை ஆழமான சந்தேகத்தையும் அகெளரவத்துடனும் காணப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் தமது அமைப்பின் இறுதி நடவடிக்கைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்ட தலிபான் தலைவர் முகமட் ஒமாரின் நடவடிக்கைகளில் இருந்து கணிக்கப்படுகின்றன. "நாங்கள் உடைப்பது எல்லாமே கற்களைத் தான். கட்டுவதை விட அழிப்பது மிகவும் சுலபமானது."

இந்தப் பிரச்சினையில் தலிபானுக்குள் பலவித முரண்பாடுகள் காணப்படுகின்றன. 1998ல் பாமியன் பள்ளத்தாக்கு தலிபானின் கைகளில் வீழ்ந்த போது, உள்நாட்டு இராணுவ கமாண்டர் ஒருவர் சிறிய சிற்பத்தின் தலையையும் தோழின் ஒரு பகுதியையும் அழித்ததோடு திட்டமிட்டபடி பெரிய சிற்பத்தின் தலையில் வெடிமருந்துகளை திணிப்பதற்காக ஓட்டை போட்டு வைத்திருந்தார். தலிபான் ஆட்சியாளர்கள் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தவுடன் ஒமாரின் ஆணையின் பேரில் அவர் பின்தள்ளப்பட்டார்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் குவியும் சமூக நெருக்கடியினதும் சர்வதேச தனிமைப்படுத்தலினதும் நிலைமையின் கீழ், தலிபான் தலைவர்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டில் குறை காண்பதற்காக அவர்களது அடிப்படைவாத கருத்துக்களை மிகைப்படுத்துவதில் ஈடுபடுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாத்திலிருந்து மதம் மாறிய குற்றத்துக்கு ஆளானவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதாக ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தார்கள். தலிபான் மத இராணுவம் கடினமான உடைக்கான அவர்களின் விண்ணப்பங்களை கோரியுள்ளதுடன் இளைஞர்களுக்கு "இஸ்லாமிய-எதிர்ப்பு மேல்நாட்டு சிகை அலங்காரங்களை" செய்ததற்கு எதிராக பல சிகை அலங்காரிப்பாளர்களை சிறையில் தள்ளியுள்ளதாக ஒரு அறிக்கை குறிப்பிட்டது.

இறுதியான ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். தலிபான் நடிவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கங்களால் விடுக்கப்பட்ட கண்டனங்களினதும் கவலைகளினதும் கபட நாடகம் ஐ.நா.வால் விதிக்கப்படும் தடைகள் நீட்டப்படுவதையும் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் அகதி முகாம்களில் உள்ள வறுமைக்குள்ளான ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கு போதிய உதவிகளை வழங்குவதில் தோல்வியையும் விரிவுபடுத்தியுள்ளது.

புதிய புஷ் நிர்வாகத்தின் பேச்சாளரான, பிலிப் ரீகர், அமெரிக்கா தலிபானின் தீர்மானங்களால் "வருத்தமும் பிரமிப்பும்" அடைந்திருந்தாக கூறியதோடு இஸ்லாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கு- ஏனைய மதங்களை சகித்தல்- நேரடியாக முரண்படுவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தடைகளை மாத்திரம் தூண்டிவிடவில்லை, தற்போதுள்ள நிர்வாகம் 1980 களுக்கு முன்னர் முஜாஹிதீன் போராளிகளை ஆயுதபாணிகளாக்கிய பொறுப்பாளிகளுடனும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளது. முன்னாள் சீ.ஐ.ஏ. அதிகாரியான, புஷ்சின் தந்தை, அக்காலத்தில் றீகனின் உப ஜனாதிபதியாக இருந்தார். நிக்சன் மற்றும் போர்டின் நிர்வாகத்தில் சேவை புரிந்த, தற்போதைய உப ஜனாதிபதியும் மூத்த குடியரசுக் கட்சிக்காரருமான ரிச்சாட் சென்னி, ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நிதி வழங்குவதற்கு காங்கிரசில் வாக்களித்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வன்த் சிங் தலிபானின் திட்டங்களை "மத்திய காலத்துக்கு பின்நோக்கிச் செல்லும் மிலேச்சத்தனமாக" வர்ணித்திருப்பதுடன் அழிவின் இலக்குக்கு உள்ளாகியுள்ள கலைப் படைப்புக்களை பாதுகாக்கவும் முன்வந்தார். பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலிபானுக்கு தனது தனிப்பட்ட கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கூறியதாவது; அவர்கள் "மனித குலத்தின் பெறுமானங்களுக்கு மதிப்பளிக்காத நாகரீகமற்றவர்கள்." ஆனால் கூட்டரசாங்கத்தின் தலைமைக் கட்சியான, வாஜ்பாயின் பாரதீய ஜனதா கட்சி (BJP), "மத்திய காலத்துக்கு பின்நோக்கிச் செல்லும் மிலேச்சத்தனத்துக்கு" சமமான ஒரு நடவடிக்கைக்கு நேரடி பொறுப்பாளியாகும்: முன்னர் இந்துக் கோவில் இருந்த பகுதியில் அமைந்திருப்பதாக ஏனையவர்கள் மத்தியில் குற்றம் சாட்டிவந்த, தற்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானியால் தூண்டிவிடப்பட்ட இந்து சோவினிசக் கும்பல் ஒன்றினால் 1992ல் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி அழிக்கப்பட்டது. அயோத்தி மசூதி அழிப்பானது இந்தியத் துணைக் கண்டம் பூராவும் வகுப்புவாத வன்முறைகளை கொழுந்து விடச்செய்த அதே வேளை, இன்றும் கூட தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த தலிபானால் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையில் பொதுஜன முன்னணி அரசாங்கமும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), பெரும் பெளத்த பிக்குமார் மற்றும் தொடர்பு சாதனங்கள் அனைவரும் பெளத்த சிலைகளை அழிப்பதற்கு எதிராக வீதியில் இறங்கி உள்ளனர். பெளத்த பிக்குமார்கள் இதை "காட்டுமிராண்டித்தனம்" என கண்டனம் செய்திருப்பதோடு "ஒரு மனிதன் இவ்வளவு மிருகத்தனமானவனாக இருக்க முடியுமா?" என வெறுப்புடன் கூச்சலிட்டுள்ளது. ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள சோவினிசத்தை தூண்டிவிட்ட, தமிழர் விரோத பாகுபாடுகளுக்கு பொறுப்பான, அதே போல் 1983ல் நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கான கண்மூடித் தனமான திட்டத்தை வகுத்த முக்கிய சமூகத் தட்டுக்கள் இவையே

1981ல், ஆத்திரத்துடன் யாழ்ப்பாணம் சென்ற யூ.என்.பி. அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சோவினிச குண்டர் குழு யாழ்ப்பாண பொது நூலகத்தை -வடக்குக் கிழக்கில் தமிழ் சிறுபான்மையினரின் இதயம்- முற்று முழுதாக தீமூட்டியது. இந்த நூலகம் தென்னாசியாவிலேயே மிகவும் நேர்த்தியான ஒரு கலாச்சார உரிமையையும் 95,000 க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களையும், ஈடு இணையற்ற கையெழுத்துப் பிரதிகளையும் கொண்ட ஒன்றாக கணிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இனவாதத்தை தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அதே வேளை, இது தமிழர்களின் மனதில் இன்னமும் கறைபடிந்து போயுள்ளது.

இந்த பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். தலிபானின் நடவடிக்கைகள், மிகவும் தீவிரமான வடிவில் இனவாத உணர்வுகளைக் காட்டிக் கொண்டுள்ளது என்ற உண்மையை அம்பலமாக்கியுள்ளது. இந்தியத் துணைக் கண்டம் பூராவும் உள்ள ஆளும் கும்பல்கள் -சில இடங்களில் பெரும் வல்லரசுகளின் நேரடி உதவியோடும்- கடந்த தசாப்த காலத்துக்கு மேலாக உழைக்கும் மக்களை பிரித்துக் கூறு போடவும் ஆட்டங்கண்ட அவர்களது சொந்த ஆட்சியை நீடிக்கவும் முயற்சித்துக் கொண்டுள்ளனர்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved