World Socialist Web Site www.wsws.org


WSWS: ICFI

Stalinism in Eastern Europe: The Rise and Fall of the GDR

ஐரோப்பாவில் ஸ்ராலினிசமும் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் எழுச்சியும் முடிவும்

Back to screen version

பின்வரும் விரிவுரை 1998, ஜனவரி 6ம் தேதி, சர்வதேச கோடை பள்ளியில் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில் வழங்கப்பட்டது. சிட்னியில் ஜனவரி 3 லிருந்து 10 வரை இடம் பெற்ற இச்சொற்பொழிவுகள், (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பீட்டர் சுவார்ட்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் காரியதரிசியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பகுதியின் தலைவருமாவர்.

இந்த விரிவுரையின் இரண்டாம் பகுதியை இங்கே பிரசுரிக்கிறோம். மூன்றாம் பகுதி அடுத்தவாரம் பிரசுரிக்கப்படும்.

பகுதி-2

ஒரு பக்கம் தொழிலாள வர்க்கத்தாலும் மறுபக்கம் ஏகாதிபத்தியத்தாலும் அபாயத்திற்குள்ளான ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது கொள்கையை மாற்ற வேண்டியிருந்தது. தேசிய முதலாளித்துவத்துடனான கூட்டுழைப்பு மேலும் சாதகமில்லாது போனது. முதலாளித்துவ அரசியல்வாதிகளும், கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து அகற்றப்பட்டு பாரியளவிலான சொத்துக்கள் பொதுச் சொத்துக்களாக்கப்பட்டன. ஜேர்மனியில் இது ஒரு வித்தியாசமான வடிவத்தை எடுத்தது. ஏனெனில் ஜேர்மனியின் அரசியல் அந்தஸ்து இதுவரை தீர்க்கப்படாமல் இருந்தது.

1948 வரை ஸ்ராலின் அரசியல் ரீதியான பக்கசார்பற்ற ஒன்றிணைந்த ஜேர்மனி ஒன்றை உருவாக்க நினைத்திருந்ததுடன் அதன் மூலம் சோவியத் யூனியன் குறிப்பிட்ட ஆளுமையை செலுத்தலாம் எனக் கருதினார். அவர் இந்தக் கருத்தை 1952ம் ஆண்டுவரை கைவிடவில்லை. சோவியத் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் இந்நோக்கை கருத்தில் கொண்டு சமூக ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஜேர்மன் ஐக்கிய சோசலிசகக் கட்சி என்பதன் கீழ் ஒன்றிணைந்தனர். முதலாளித்துவக் கட்சிகளும் இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு ஜேர்மன் ஐக்கிய சோசலிசக் கட்சியுடன் (SED) ஒர் கூட்டு அமைத்திருந்தனர். ஆனால் மேற்கில் சமூக ஜனநாயகக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடனான இணைப்பினை மறுத்ததுடன் ஜேர்மனியை மேற்குடன் இணைப்பதற்கு மூர்க்கத்தனமாக இயங்கியது. இதே கொள்கையை அமெரிக்க பிரித்தானிய அரசுகளின் ஆதரவுடன் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கடைப்பிடித்தது. 1948ம் ஆண்டு மேற்கிலும், பேர்லினின் மேற்குப் பகுதியிலும் சோவியத் அரசுடனான எந்தவித முன் உடன்பாடும் இல்லாது புதிய நாணயம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பழைய நாணயம் வழக்கத்திலிருந்த கிழக்கு ஜேர்மனியின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகும் அபாயத்திற்கு உள்ளாகியது.

இந்த நாணய சீர்திருத்தத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மூலம் வெளிப்படுத்திய மேற்குத் தொழிலாள வர்க்கத்திடம் ஸ்ராலினிசம் கோரிக்கை விடுத்திருக்கலாம். ஏனெனில் இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் சீரழியச் செய்தது. இதற்கு மாறாக ஸ்ராலினிஸ்டுக்கள் மேற்கு பேர்லினிற்கு எதிரான தனியார் பொருட்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தினர். இதனால் பாதிக்கப்பட்டது மேற்கு பேர்லின் தொழிலாளர்களே. அமெரிக்க அரசாங்கம் இதனை தனக்கு சந்தர்ப்பமாகப் பாவித்து விமான ரீதியான விநியோகத்தை ஒழுங்கு செய்ததன் மூலம் மேற்கு பேர்லின் மக்களின் இரட்சகனாக தன்னைக் காட்டிக்கொண்டது.

ஜேர்மனியைப் பிரித்தது இத்துடன் முடிவடைந்தது. 1949ம் ஆண்டு ஐக்கிய ஜேர்மன் குடியரசு (BRD) அமெரிக்க, பிரான்சு, பிரித்தானிய பிரிவுகளுள் நிறுவப்பட்டது. கிழக்கு ஜேர்மனியினுள் முதலாளித்துவ சொத்துக்கள் விரைவாக மறைந்தன. சோவியத் பிரிவினுள் இந்த அனைத்து வங்கிகளும் 1948ம் ஆண்டே தேசிய மயமாக்கப்பட்டுவிட்டன. 1951ம் ஆண்டு கிழக்கு ஜேர்மன் பாராளுமன்றம் ஐந்து ஆண்டுத் திட்டம் ஒன்றை நிறைவேற்றியது. 1952ல் கட்சி மாநாட்டில் சோசலிசத்திற்கான அடித்தளம் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் திட்டமிட்டபடி இடப்படவேண்டும் என தீர்மானித்தது.

தேசிய மயமாக்கல் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பிரபல்யம் அடைந்தது. இது யுத்தக் குற்றவாளிகளதும், நாசிகளுக்கும் சொந்தமான பாரிய தொழிற்சாலைகள் பறித்தெடுக்கப்பட்டபோது 1946ம் ஆண்டு ஸக்சோனி (Saxony) இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் 78 வீத வாக்குகள் இதற்கு ஆதரவாக கிடைத்ததன் மூலம் தெளிவாக வெளிப்பட்டது. இதைவிட தேசியமயமாக்கலுடன் சேர்த்து தொழிலாள வர்க்கத்தின் மீது மேலும் ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

 

ஷிணிஞிநு தன்னை ''லெனினின் போல்ஷிவிக் கட்சியை'' போன்றது என உத்தியோக பூர்வமாக கூறிக்கொண்டாலும் -இது ஸ்ராலினிசத்தினது இன்னொரு வடிவம்- பலதடவை களையெடுப்புக்கு உள்ளானது. இக்களையெடுப்பில் முதல் பலியானவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியினது முன்னைய அங்கத்தவர்களாகும். இறுதியாக யுத்தத்திற்கு முன்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியேயிருந்து 1945ற்கு பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கம்யூனிசக் குழுக்களின் அங்கத்தவர்களாகும். இறுதியாக யுத்தத்திற்கு முன்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலும், சமூக ஜனநாயகக் கட்சியிலும் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டு அவ்விடங்களுக்கு யுத்தத்தின் பின்னர் ஸ்ராலினிச பாடசாலையில் பயிற்றுவிக்கப்பட்ட அனுபவமற்ற இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். அக்காலகட்டம் ''சமூக ஜனநாயகவாத'', ட்ரொட்ஸ்கிச, டீட்டோயிச கைக்கூலிகள் என்ற குற்றச்சாட்டுகள் பொய் புனைவுகளால் நிறைந்திருந்தது. ஸ்ராலினிச தனி மனித வழிபாடு அதியுயர் நிலையடைந்தது. 1949ம் ஆண்டு கட்சித் தேர்தலில் முன்னைய அங்கத்தவர்களில் கால்வாசியினரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் 1945ற்கு முன்னர் சமூக ஜனநாயகக் கட்சியிலோ, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலோ அரசியல் நடவடிக்கை எதிலும் ஈடுபட்டிராதவர்களாகும்.

முதலாளித்துவக் கட்சிகள் பெயரளவிற்கேனும் கலைக்கப்படவில்லை. அதற்கு மாறாக அதிகாரத்துவத்தின் உதவிக் கருவிகளாக மாற்றப்பட்டு கீழ்ப்படிவாக ஸ்ராலினிஸ்டுக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். அங்கு இரண்டு புதிய வலதுசாரிக் கட்சிகள் உருவாக்கப்பட்டன. இதுவரை அரசியல் ரீதியாக இயங்கத் தடைசெய்யப்பட்டிருந்த பழைய வலதுசாரிகளையும், நாசிகளையும் கூட ஒழுங்கமைத்து SED யின் அரசுக்கான முண்டுகோல் ஆக்குவதே இவர்களின் கடமையாக இருந்தது. இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் என்ன?

சோவியத் யூனியனில் அதிகாரத்துவம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். ட்ரொட்ஸ்கி இதனை ''காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில்'' விபரமாக விளங்கப்படுத்துகின்றார். இது பழைய அந்தஸ்துக்களைக் கொண்ட பிரிவினரிடம் இருந்து வந்ததுடன் அரச நிர்வாகத்திலும் உட்புகுந்ததுடன் ஆளும் கட்சியின் ஒரு பிரிவினர் இவர்களுக்கு அடிபணிந்தனர். ஆனால் ஜேர்மனியில் பழைய நிர்வாக அமைப்பு குலைந்துவிட்டது. சமூக ஜனநாயகக் கட்சியும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் ரீதியாக சீரழிந்திருந்த போதும் அவர்கள் ஒரு தகுதியான சமூகத் தட்டினராக ஒழுங்கமையாததுடன் தொழிலாள வர்க்கத்துடன் இன்னும் வர்க்கத் தொடர்புகளை வைத்திருந்தனர். ஒரு புதிய ஆளும் தட்டு அதிகாரத்துவம் நாடு முழுவதும் அதிகாரத்தை பிரயோகிக்க முன்னர் அதனை உருவாக்க வேண்டியிருந்தது. இதுதான் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் நிறுவனத்திற்கு முன்னான வருடங்களில் நிகழ்ந்தது. களையெடுப்புகளும், கொலைகளும் SED யின் அங்கத்தவர்கள் மத்தியில் மட்டும் நிகழவில்லை. ஆயிரக்கணக்கான ஊக்கமுள்ள தொழிலாளர்களும் விமர்சன நோக்கான பிரிவினர்கூட கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

1948ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் ஜேர்மன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீண்டகாலத் தலைவரான ஒஸ்கார் கிப்ப (Oskar Hippe) வும் ஒருவராவார். அவர் நாசிகளால் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜேர்மனிக்குள்ளேயே நாசி அரசிடமிருந்து தப்பியவர். யுத்தத்தின் பின்னர் அவர் 50 அங்கத்தவர்களை மட்டும் கொண்டு பேர்லினில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மறுசீரமைப்புச் செய்தார்.

1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிழக்கு பேர்லினில் தொழிற்சங்கக் கூட்டம் ஒன்றில் அவர் உரைநிகழ்த்தினார். ஜேர்மனிக்கு சோசலிச முன்னோக்கு தேவையில்லையென எதிர்த்த ஸ்ராலினிச வாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக சோசலிசத்தின் தேவைகுறித்து வாதிட்டார். இதற்கு அடுத்தநாள் அவர் கைதுசெய்யப்பட்டு நாசிச அரசுக்கு கீழ் சிறையில் இருந்ததைவிட சிறிதுகாலம் அதிகமாக எட்டு வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.

4.

கிழக்கைரோப்பாவின் அரசியல் மாற்றங்கள் முக்கிய அரசியல் கேள்விகளை முன்கொண்டு வந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் செய்யப்பட்ட பரந்தளவிலான தேசியமயமாக்கலின் பின்னர் முதலாளித்துவ வர்க்கம் என்பது அங்கு இருக்கவில்லை என்றே கூறலாம். கிழக்கைரோப்பிய அரசுகளை இன்றும் முதலாளித்துவ அரசுகள் என வரையறுக்கலாமா? அல்லது அவை தொழிலாள வர்க்க அரசுகளா?

இந்தக் கேள்விகள் நான்காம் அகிலத்தினுள் ஆழ்ந்த விவாதங்களை உருவாக்கியது. இவ்விவாதங்கள் இறுதியில் 1953ம் ஆண்டு மைக்கேல் பப்லோவாலும், ஏர்ணஸ்ட் மண்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட சந்தர்ப்பவாதப் பிரிவினரையும், அனைத்துலகக் குழுவால் தலைமை தாங்கப்பட்ட மார்க்சிச பிரிவினரையும் உடைவுக்கு இட்டுச் சென்றது.

1948ம் ஆண்டிலிருந்தே நான்காம் அகிலத்தினுள் கிழக்கைரோப்பிய நாடுகளை தொழிலாள வர்க்க அரசுகள் என வரையறுக்கலாம் என்ற கருத்து இருந்தது. இப்படியான வரையறுப்பிற்கான காரணங்கள் இயற்கையிலேயே நடைமுறைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தகவல்கள் அல்லது தகவல்கள் எனப்பட்டவை கவனத்திற்கு எடுக்கப்பட்டாலும் அந்த காலகட்டத்திற்குரிய வரலாற்றுத் தோற்றமோ அல்லது முற்று முழுதான சர்வதேச நிலைமைகளோ எந்தவித பங்கையும் வகிக்கவில்லை. கிழக்கைரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனைப் போலவே தோற்றமளித்தன என்பது மறுக்க முடியாத கருத்தாகும். சோவியத் யூனியன் சீரழிந்திருந்த போதும் நான்காம் அகிலம் அதனை தொழிலாளர் வர்க்க அரசு என வரையறுத்தது. எனவே இவ் அரசுகளும் தொழிலாளர் வர்க்க அரசுகளாகும். நான்காம் அகிலத்தினுள் பெரும்பான்மையினர் இந்த சாதாரண நியாயப்படுத்தலை நிராகரித்தனர். இரண்டு அடிப்படையான மறுப்புகள் எழுந்தன. முதலாவது தேசியமயமாக்கல் மட்டும் ஒரு அரசை தொழிலாள வர்க்க அரசு எனக் கூறப்போதுமானதல்ல. இரண்டாவதும், அடிப்படையானதும் எவ்வாறு தேசியமயமாக்கல் நிகழ்ந்தது என்பதும் யார் இதனை நடைமுறைப்படுத்தியது என்பதுமாகும்.

1949 ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த விவாதம் ஒன்றில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவரான ஜேம்ஸ். பி. கெனன் பின்வாறு கூறுகின்றார் ''ஒரு அரசின் வர்க்கத் தன்மையை நீங்கள் அதன் உச்சியில் செய்யும் ஒரு வகையான கையாளல்மூலம் மூலம் மாற்றலாம் என நான் கருதவில்லை. இது சொத்துடைமை முறைகளில் அடிப்படை ரீதியான மாற்றத்தை செய்யும் புரட்சியால் மட்டுமே செய்யமுடியும். இதுதான் சோவியத் யூனியனில் நிகழ்ந்தது. தொழிலாள வர்க்கம் முதலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் சொத்துடைமை முறைகளில் மாற்றங்களை செய்ய ஆரம்பித்தது. நான் நினைக்கிறேன் யுத்தத்தடுப்பு அரசுகளில் (Buffer States) சோசலிசப்புரட்சி நடக்கவில்லை. ஸ்ராலின் ஒரு புரட்சியையும் செய்யவில்லை.''

கனன், இங்கு முன் வைத்த பிரச்சனையானது புதிய வரைவிலக்கணம் தொடர்பானதல்ல. வித்தியாசமான முன்னோக்கு தொடர்பானது என்பதை தெளிவாக்குகின்றார். ''நீங்கள் அரசின் வர்க்கத்தன்மை மேல் மட்டங்களில் செய்யும் திருகுதாளங்களால் மாற்றப்படும் என்ற கருத்துடன் ஆரம்பித்தீர்களானால் நீங்கள் அடிப்படைத் தத்துவத்தினை திரிபுபடுத்துவதற்கு வழியமைக்கின்றீர்கள்.'' என்றார்.

அந்தக் காலகட்டத்தில் மார்க்சிச நிலைப்பாட்டை ஆதரித்த ஏர்ணஸ்ட் மண்டேல் ஒரு மாதத்தின் பின்னர் இதேபோன்ற விவாதங்களை தோற்றுவித்தார். அவர் இது தொடர்பாக எழுதுகையில் ''பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைவால் உற்பத்தி முறைகள் தேசியமயமாக்கப்படுதலினால் உருவாகும் அரசுதான் தொழிலாள வர்க்க அரசு என நாம் கூறுகின்றோம். அக்டோபர் புரட்சியினால் உருவாக்கிய பொருளாதார மாற்றங்களை ஒருவர் கவனத்திற்கு எடுத்தால் சோவியத் யூனியனில் ''உற்பத்திமுறை'', ''உற்பத்தி உறவு'', ''சொத்துறவு'' என்ற மூன்று ஒரேமாதிரியான வரைவிலக்கணங்களும் தொழிலாள வர்க்கப் புரட்சியின் இருப்பை பொருளாதார அரசியல் சட்ட ரீதியாக மதிப்பளிக்க ஒருவருக்கு உரிமையுண்டு. ஆனால் ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்கள் எந்த வகையிலும் முதலாளித்துவம் அல்லாத உற்பத்தி முறைகளுடனும், உற்பத்தி உறவுகளுடன் ஏற்பட்ட புரட்சியுடனும் உடன்பாடு காணப்படவேண்டும் என்பதல்ல. இப்படியான கருத்து பொருளாதாரவாதிகளினது போன்றதல்லாது மட்டுமல்ல மார்க்சிசத்திலிருந்து வழிபிறள்வதுமாகும்.'' (Heritage 172p)

1950களின் ஆரம்பத்தில் மற்றுமொரு SWP யினது தலைவரான மொரிஸ் ஸ்ரைன் (Morris Stein) இந்த விவாதங்களின் முக்கிய முடிவுகளை பின்வருமாறு கூறுகின்றார். ''சுருக்கமாகக் கூறுவதானால் சோசலிசப் புரட்சியின் முக்கிய தன்மை என்னவெனில் தொழிலாள வர்க்கத்தின் உணர்வுபூர்வமான சுயாதீன செயல்பாடு ஆகும்.'' கிழக்கைரோப்பிய நாடுகளை தொழிலாள வர்க்க அரசுகள் என வரையறுக்கமுடியாது என்பதற்கான இரண்டாவது எதிர்ப்பு என்னவெனில், இது அபிவிருத்திகள், சர்வதேச நிகழ்வுகளுள் வைத்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதாகும். 1949 ஏப்ரல் மாதம் நான்காம் அகிலத்தின் சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் தீர்மானம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ''ஸ்ராலினிசத்தின் மதிப்பீடு அதன் கொள்கையின் சாதாரண விளைவுகளால் தீர்மானிக்கப்பட முடியாது. இதனை உலகம் முழுவதுமான அதனது நடவடிக்கையில் இருந்தே நோக்க வேண்டும். ஸ்ராலினிசம் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் முதலாளித்துவம் ஒரே நேரத்தில் உடனடியாக உடைந்து போவதிலிருந்து அதனை பாதுகாத்ததற்கான முக்கிய காரணியாகும்.''

இந்த யுத்தத்தடுப்பு அரசுகளின் அதிகாரத்துவத்தினால் பெற்ற ''வெற்றிகள்'' உலக ரீதியாக தனக்குச் செய்த சேவைக்காக ஏகாதிபத்தியம் கொடுத்த பரிசு என தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றது. இப்பரிசுகள் அடுத்துவந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக கேள்விக்குரியதாகியது. இதனைவிட முக்கியமானது என்னவெனில் ''சர்வதேச ரீதியான நோக்கில் சோவியத் யூனியனுள் யுத்தத்தடுப்பு அரசுகளை உள்ளிழுத்துக் கொள்ளும் நோக்கில் சோவியத் அதிகாரத்துவத்தினால் முக்கியமான யுத்தத்தடுப்பு அரசுகளின் பிரதேசங்களில் செய்த நடவடிக்கைகள் உலகத் தொழிலாள வர்க்கத்தின் உணர்மையில் செய்த தாக்குதல், சீரழிப்பு, தவறான வழிநடத்தல் அதனது கொள்கைகளால் செயலிழக்கச் செய்தவற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான தாக்கத்தையே கொடுத்தது. (Heritage 158p)

இந்தவரிகள் கிழக்கு ஜேர்மனியின் உடைவுக்கு 40 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டன. ஆனால் இவை அதன் உடைவுக்கான ஆரம்ப விளக்கத்தை கொடுத்திருந்தன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மார்க்சிச முற்கூறல்களைப் போலவே மார்க்சிச சிந்தனையாளர்கள் சாதகமாகும் என நினைத்த காலத்தை விட அவை நடைமுறைக்கு வரக்கூடிய காலம் எடுத்தது. ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உணர்மையில் ஸ்ராலினிசத்தின் செயல்கள் ஏற்படுத்திய தாக்குதல்கள், கிழக்கைரோப்பாவில் அது அறிமுகப்படுத்திய ''சோசலிச'' நடவடிக்கைகள் எனக் கூறிக் கொண்டவற்றை காட்டிலும் நீண்டதும், பாரதூரமானதுமாகும்.

நான்காம் அகிலம் இறுதியில் கிழக்கைரோப்பாவில் நிறுவப்பட்ட நாடுகளை ''உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்'' என்ற பதத்தை உபயோகித்தது. உருக்குலைந்த என்ற பெயரெச்சத்தை சேர்த்ததன் மூலம் இந்த அரசுகளின் மூலத் தோற்றத்தின் உருக்குலைந்த அசாதாரண தன்மை எடுத்துக் காட்டப்பட்டது. இவ் வரைவிலக்கணம் இந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் மூலம் அதிகாரத்துவத்தை தூக்கிவீசி தொழிலாளர் அதிகாரத்துவத்தின் உண்மையான அமைப்புக்களை உருவாக்கினாலே தவிர வேறுவகையில் உயிர்வாழ முடியாது என்பதையும் எடுத்துக் காட்டியது.

இவ்விவாதத்தின் ஆரம்பத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளை தொழிலாளர் அரசுகள் என அழைக்கலாம் என விவாதித்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே வேறொரு முன்னோக்கை அபிவிருத்தி செய்யத் தொடங்கினர். 1949ம் ஆண்டு செப்டம்பரில் மைக்கல் பப்லோ எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் முழு வரலாற்று காலகட்டம் பல நூறு வருடங்கள் செல்லலாம். நாங்கள் எமது ஆசிரியர்கள் எதிர்பார்த்திராத வகையில் புரட்சியில் நேரில்லாத சிக்கலான அபிவிருத்தியை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம். தொழிலாளர் அரசுகள் சாதாரணமானதாக இருக்காது. தேவையெனில் உருக்குலைந்ததாகவும் இருக்கலாம்.'' என்றார். (Heritage 167)

இங்கு கிழக்கைரோப்பாவில் நிறுவப்பட்ட அரசுகள் தேவையற்ற, வரலாற்று உருக்குலைந்ததாக காட்டப்படவில்லை. ஆனால் சோசலிசத்தை நோக்கிய பாதையில் தேவையானதும் இடைமருவுநிலை என குறிப்பிடப்படுகின்றது. இது ஸ்ராலினிசத்திற்கு ஒரு முற்போக்கான பங்கு இருக்கின்றது என்பவற்றை குறுகிய வழியில் கூறுவதாகும். இதுதான் பப்லோ எடுத்த முடிவாகும். அவரின் கருத்து புறநிலை நிகழ்வுகளின் அழுத்தங்களின் கீழ் ஸ்ராலினிசம் தன்னை சீர்திருத்திக் கொள்ளும் என்பதையே கிழக்கைரோப்பிய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றது. ஆகவே நான்காம் அகிலத்தின் சுயாதீன கட்சிகளைக் கட்டுவது தேவையில்லை என்பதாகும். இதற்குப் பதிலாக நான்காம் அகிலத்தின் தோழர்கள் ''உண்மையான மக்கள் இயக்கங்கள்'' என அவர் வரையறுப்பவற்றுள் தலையீடு செய்து ஸ்ராலினிச அல்லது ஏனைய அதிகாரத்துவ சக்திகள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதாகும். பப்லோ நான்காம் அகிலத்தின் பிரிவுகளை ஸ்ராலினிச கட்சிகளுள் கரைத்தார். அதனை எதிர்த்தவர்களை தனது செயலாளர் என்ற பதவியை அதிகாரத்துவமான முறையில் துஷ்பிரயோகம் செய்து அவர்களை வெளியேற்றினார். இது ஜேம்ஸ். பி. கனனால் எழுதப்பட்ட பகிரங்கக் கடிதமான அனைத்துலகக் குழுவின் நிறுவன ஆவணம் தோன்றுவதற்கு காரணமாகியது.

5.

நான்காம் அகிலத்தினுள் இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், கிழக்கைரோப்பிய நிகழ்வுகள் அனைத்துலகக் குழுவின் சரியான தன்மையை நிரூபித்தன. கிழக்கு ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்திற்கும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் நான்காம் அகிலத்தின் உடைவின் சில காலத்தின் பின்னர் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஸ்ராலின் இறந்து மூன்று மாதங்களின் பின்னர் 1953 யூன் 6ம் திகதி கிழக்கு பேர்லினில் கட்டிடத் தொழிலாளர்கள் வேலைப்பழுவின் அதிகரிப்பிற்கு எதிராக சுயாதீன எதிர்ப்பு ஊர்வலத்தை ஒழுங்கு செய்தனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள்ளேயே மேலும் 10.000 தொழிலாளர்கள் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னைய வேலை நிலைமைகளை மீண்டும் கொண்டுவர மட்டுமல்லாது அரசாங்கத்தை இராஜினாமாச் செய்து சுதந்திரமான தேர்தல்களை நடாத்தக் கோரிக்கை முன்வைத்தனர். கால, மார்ஸ்பேர்க், மக்டபேர்க் போன்ற இடங்களில் வேலை நிறுத்தக்குழுக்கள் தற்காலிகமான நகரங்களைக் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததுடன் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தனர்.

ஸ்ராலின் ஆட்சியாளர்களும், சோவியத் ஆக்கிரமிப்புப் படையினரும் இவ் எழுச்சிகளை பலாத்காரத்தால் ஒடுக்கினர். ஆயுதம் தரிக்காத தொழிலாளருக்கு எதிராக டாங்கிகள் பிரயோகிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பல வருடங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர். வேலை நிறுத்தத்திற்கு தலைமைவகித்த ஆறு தலைவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

கிழக்கு ஜேர்மனியின் நிகழ்வுகள் பப்லோவாதிகள் கூறியபடி ஸ்ராலினிச அதிகாரத்துவம் அழுத்தங்களின் கீழ் தன்னை சீர்திருத்தி அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதற்கு ஒரு முற்றான மறுப்பாகும். ஆனால் நாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேர்ன்ஸ்டைன் தொடர்பான கலந்துரையாடலில், சந்தர்ப்பவாதிகள் தங்கள் சந்தர்ப்பவாத முறையில் விவாதிக்கையில், அவர்கள் காரணிகளில் தீவிரமாக தங்கியிருப்பதையும், இக்காரணிகளுடனேயே அவர்களின் சந்தர்ப்பவாத வழியில் காலம் கழிப்பதையும் பார்த்தோம். சந்தர்ப்பவாதம் என்பது அரசியலினை தவறாக விளங்கிக் கொண்டதால் அல்ல. அதற்கு மேலாக அது வர்க்க சமூகத்தில் ஆழ்ந்த புறநிலையான வேர்களைக் கொண்டுள்ளது.

அனைத்துலகக்குழு கிழக்கு ஜேர்மன் எழுச்சிகளை சோவியத் யூனியனில் ஸ்ராலினிசம் அதிகாரத்தை ஆக்கிரமித்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அதற்கு எதிரான முதலாவது பாரிய தொழிலாளர் எழுச்சி என கருதுகையில் பப்லோ இந்த இரத்தம் தோய்ந்த நிகழ்வுகளை கவனத்திற்கு எடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர் இந்த எழுச்சிகளின் பின்னர் பயமுற்ற அதிகாரத்துவம் தொழிலாளர்களுக்கு சில பொருளாதார சலுகைகளைச் செய்யும் என்றார். இதனை அவரது தத்துவத்திற்கான மேலதிக ஆதாரமாகக் கொண்டார். பப்லோ இது தொடர்பாக எழுதுகையில் ''சோவியத் தலைவர்களும், ஏனைய மக்கள் ஜனநாயகவாதிகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்த நிகழ்வுகளின் ஆழ்ந்த அர்த்தத்தை தொடர்ந்தும் திரிபுபடுத்தவோ, மறுக்கவோ முடியாது. அவர்கள் தொடர்ந்தும் தேவையானதும், உண்மையானதுமான சலுகைகளைச் செய்யும் திசையில் செல்ல கடமைப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மக்களின் ஆதரவை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தையும் மேலும் பலமான வெடிப்புகள் உருவாகுவதையும் விரும்பமாட்டார்கள். இப்போதிருந்து அவர்கள் இதனை அரை வழியில் நிறுத்தமுடியாது. எதிர்வரும் காலங்களில் பாரிய வெடிப்புக்கள் வருவதைத் தடுக்க அவர்கள் ஒரு தொடர் சலுகைகளைச் செய்ய கடமைப்பட்டுள்ளதுடன் ஒரு குளிர் வடிவத்தில் இருக்கும் இன்றைய நிலைமையை மக்கள் தாங்கிக் கொள்ளக்கூடிய நிலைமைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.'' (Heritage 234-235)

இது ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சித் தன்மைக்கு எந்தவித தடையுமில்லாத சமாதானப்படுத்தலாகும். மூன்று வருடத்தின் பின்னர் கிழக்கு ஜேர்மனியில் நிகழ்ந்ததை விட மிகப்பெரிய அளவில் ஹங்கேரியில் நிகழ்ந்தது. ஆனால் பப்லோவாதிகள் ஸ்ராலினிசத்தினுள் இன்னும் இடதுசாரிப் போக்குகளை எதிர்பார்த்தனர். அவர்கள் ஸ்ராலினிசத்திற்கு முக்கிய முண்டு கோலானதுடன் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர முன்னோக்கிலிருந்து தடுத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்

6.

கிழக்கு ஜேர்மனியில் ஆளும் அதிகாரத்துவம் 1953 எழுச்சிகளுக்குப் பின்னர் ஒரு சில பொருளாதார சலுகைகளை செய்தபோதும் இவை நீடித்திருக்கவில்லை. அதிகாரத்துவம் ''சோசலிசத்தை கட்டுவதற்கான மேலதிக நடவடிக்கையினை அடுத்து அறிவித்தது. எப்போதும் போலவே இவை சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்துவதற்கான அறிகுறிகளாகும்.

1957ம் ஆண்டு கடவுச்சீட்டு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் ஒவ்வொரு வெளிநாடுகளுக்கான பிரயாணமும் மட்டுமல்லாது கிழக்கு ஜேர்மனிக்குள்ளும் ஒவ்வொரு பிரயாணமும் கண்காணிக்கப்பட்டது. 1958ம் ஆண்டு SED யின் ஐந்தாவது மாநாட்டில் 1965 அளவில் சோசலிசத்தைப் பூரணப்படுத்துவதாக கூறப்பட்டதுடன் கிழக்கு ஜேர்மன் தொழிற்சங்கங்களுக்குள் வரலாற்றில் மிகப்பெரிய களையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பகுதியான தொழிற்சங்க நிர்வாகத்தினர் அனைவரும் முழு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் மாற்றீடு செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும் அதிகாரத்துவத்தால் ஒரு எல்லைவரை தொழிலாள வர்க்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாக இருந்தது. தொழிலாளர்கள் ''பொருளாதார அதிசயத்தால்'' உருவாக்கப்பட்ட கவர்ச்சிகரமான தொழிலைத் தேடி மேற்கு ஜேர்மனிக்கு போகக் கூடியதாக இருந்தது. 1959ம் ஆண்டு 145.000 பேரும், 1960ல் 200.000 பேரும், 1961ல் 300.000 பேரும் கிழக்கு ஜேர்மனியைவிட்டு வெளியேறியுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இவர்களில் இளம் தலைமுறையினர் மட்டுமல்ல முக்கியமாக அரைவாசிப் பகுதியினர் 25 வயதிற்கு உட்பட்ட நன்கு வேலை செய்யக்கூடியவர்கள் வெளியேறினார்கள். கூடிய உற்பத்தி செய்யக்கூடிய தொழிலாளர்களின் இழப்பினால் பொருளாதாரம் அபாயத்திற்கு உள்ளாகியது.

இதன் காரணமாகத்தான் 1961ம் ஆண்டு பேர்லின் மதில் கட்டப்பட்டது ஓர் இரவிலேயே கிழக்கு ஜேர்மனியை விட்டு வெளியேற முடியாது போனது. யாராவது வெளியேற முயன்றால் அவர்கள் சுடப்பட்டனர். SED இதனை ''பாசிசவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புத்தடை'' என கூறியது. ஆனால் அனைவருக்கும் இது பாசிசவாதிகள் உள்ளே வருவதை தடுப்பதற்கான மதில் அல்ல, கிழக்கு ஜேர்மன் பிரஜைகள் வெளியேறுவதற்கு எதிரானது என்பது தெரியும்.

மதிலினால் பாதுகாக்கப்பட்டு அதிகாரத்துவத்தால் ஓரளவிற்கு தனது ஆட்சியை ஸ்திரப்படுத்தக்கூடியதாக இருந்தது. உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டதன் அடித்தளத்திலும், உலகப் பொருளாதாரத்தின் பொதுவான வளர்ச்சியினாலும் உதவியளிக்கப்பட்டு கணிசமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. 1950க்கும், 1974க்கும் இடையில் கைத்தொழில் உற்பத்தியில் 7 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. கிழக்கு ஜேர்மன் 1969ம் ஆண்டு 17 மில்லியன் சனத்தொகையுடன், 1936ம் ஆண்டு ஜேர்மன் அரசு 60 மில்லியன் சனத்தொகையுடன் செய்த உற்பத்தியை விட கூடியளவு கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்தது.

அதிகாரத்துவத்தால் இப்போது தொழிலாள வர்க்கத்திற்கு குறிப்பிடத்தக்களவு சமூக வசதிகளை செய்யக்கூடியதாக இருந்தது. கல்வித்துறை, குழந்தை பராமரிப்பு, வீடமைப்பு, சுகாதார சேவை, சமூக பாதுகாப்பு, கலாச்சாரம் போன்றவற்றில் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளை விட கூடிய வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட உற்பத்தியோ அல்லது கிழக்கு ஜேர்மனியில் பெறப்பட்ட சமூக வெற்றிகளோ SED கூறியது போல் சோசலிச சமுதாயம் அல்ல.

ட்ரொட்ஸ்கி, காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில் குறிப்பிடுவது போல் ''மார்க்சிஸ்டுகள், சொத்துடமை முறைகள் தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கையால் பெறப்பட்டதா என்பதிலிருந்து ஆரம்பிப்பார்களே தவிர ஒரு குறிப்பிட்ட சொத்துடமை முறைகளில் இருந்து ஆரம்பிப்பது இல்லை''. மார்க்ஸ் ''கம்யூனிசத்தின் ஆரம்பப் படி நிலையில் (அதாவது சோசலிசத்தில்) சமுதாயம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளை விட கூடிய பொருளாதார அபிவிருத்தியை அடைந்திருக்கும்'' எனவும் குறிப்பிடுகின்றார்.

கிழக்கு ஜேர்மனியின் நிலை மார்க்ஸ் கூறுவதைப்போல் இருக்கவில்லை. உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளை விட பின்னோக்கியே இருந்தது. உற்பத்தியின் அதியுயர் வளர்ச்சி சர்வதேச தொழிற்பங்கீட்டின் மூலமே அடையமுடியும். ஆனால் கிழக்கு ஜேர்மனியின் நிலை மார்க்ஸ் கூறுவதைப் போல் இருக்கவில்லை. உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளைவிட பின்னோக்கியே இருந்தது. உற்பத்தியின் அதியுயர் வளர்ச்சி சர்வதேச தொழிற்பங்கீட்டின் மூலமே அடையமுடியும். ஆனால் கிழக்கு ஜேர்மனி ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற கொள்கையை அடித்தளமாகக் கொண்டிருந்ததுடன் உலகச்சந்தையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையே பெறக்கூடியதாகவும் இருந்தது.

தொடரும்............

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved