World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

A further erosion of democratic rights

Sri Lankan government postpones local elections for 12 months

மீண்டும் ஒரு ஜனநாயக உரிமை ஒழிப்பு

இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தல்களை 12 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது

By K. Ratnayake
27 February 2001

Back to screen version

இலங்கை அரசாங்கம் பெப்பிரவரி 3ம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினூடாக, தற்போதைய நிர்வாகத்தின் ஆயுட் காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் நோக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது. இந்த அடாவடித்தனமான சட்டத்தின் மூலம் 12 நகரசபை 31 மாநகரசபை உள்ளடங்கிய 311 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் இம்முறை நடைபெறாது.

உள்ளூராட்சி அமைச்சர் நந்தமித்திர எக்கநாயக்கா இந்த நீண்ட கால ஒத்திவைப்புக்கான எந்த ஒரு காரணத்தையும் விளக்காது "தேர்தல் சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளை மனங்கொண்டு" இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். விசாரணைக் குழுவொன்று உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் தேவையென பிரேரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் அடிப்படை ஜனநாயக உரிமை மீதான ஒரு பலத்த தாக்குதலாகும். ஐந்து மாத காலத்துக்கு முன்னர் அக்டோபர் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளூராட்சி தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுமென உறுதியளித்திருந்தார். அரசாங்கம் தமது கொள்கைகள் அதிருப்தி கண்டுவருவதை கருத்தில் கொண்டு ஒரு "குட்டித் தேர்தலை" சமாளிக்க முடியாதென்று இந்த முடிவுக்கு வந்துள்ளது. பெறுபேறுகளை எண்ணி பீதி கொண்ட பெரும் எதிரக் கட்சிகளும் உடனடியாக இந்த வலைக்குள் வீழ்ந்துள்ளன.

கடந்த ஐந்து மாதங்களில் வாழ்க்கைச் செலவுப் புள்ளி மேலும 245 புள்ளிகளால் அதிகரித்துள்ள அதே வேளை கடந்த மாதம் ரூபாயை மிதக்கவிட எடுத்த தீர்மானத்தினால் பொருட்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இராணுவ செலவீனத்தை பிரமாண்டமாக அதிகரித்த அரசாங்கம், தற்போது குறிப்பாக சுகாதாரம், கல்வி, மற்றும் சமூக சேவை போன்றவற்றுக்கான அரசாங்க செலவை வெட்டித் தள்ளுவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த மாத வரவு செலவுத் திட்டத்தில் ஒரு புதிய சுற்று தொழில், சேவை வெட்டுகள் இடம்பெறவுள்ளது நிச்சயம்.

இது நிச்சயமாக, சுகாதாரம், நீர்வழங்கல், கழிவு சுத்திகரிப்பு சேவைகளை பிரதானமாக நிர்வகித்து வரும் உள்ளூராட்சி மன்றங்களில் பெரும் தாக்கங்களை கொண்டுவரும். உள்ளூராட்சி நிர்வாகங்கள் வரி விதிப்பின் மூலம் ஒரு சிறிய நிதியை பெற்றாலும் கூட, பெரும்பாலும் மத்திய அரசாங்கத்தின் உதவி மானியத்திலேயே தங்கியுள்ளன. கடந்த இரு தசாப்தங்களாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த நிதி -தற்போது மாகாண சபைகளின் ஊடாக வழங்கப்பட்டு வரும்- படிப்படியாக குறைத்து வருவதோடு அவற்றை அத்தியாவசிய உள்ளூராட்சி சேவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பெரும் வரிவிதிப்புக்களுக்கும் நெருக்கியும் வருகின்றது.

13 கட்சிகளைக் கொண்ட ஸ்திரமற்ற தனது கூட்டரசாங்கத்தை உள்ளூராட்சி தேர்தல்கள் பலவீனப்படுத்தி விடும் என்பதில் குமாரதுங்க பெரிதும் கவனமாக உள்ளார். சீரழிந்து போயுள்ள கூட்டினை பலப்படுத்தும் நோக்கில் சில பல சிறிய கட்சிகளுக்கு கூட பெரும் சலுகைகள் வாக்குறுதிகளை வழங்க வேண்டியுள்ள நிர்ப்பந்தத்தில் உள்ளதை அவர் நன்கறிவார். இந்த நிதர்சனமானது 46 அமைச்சர்களும் அதேயளவு பிரதி அமைச்சர்களையும் உள்ளடக்கிய அவரது உலகத்திலேயே பெரிய அமைச்சரவை என்ற புகழ் பெற்ற அமைச்சரவையிலேயே அம்பலமாகின்றது. சிறிய கட்சிகளின் மேலும் பல கோரிக்கைகளுக்கு இடமளிக்க அவரை நிர்ப்பந்திக்கும் ஒன்றாகவே மேலும் ஓர் தேர்தல் அமையும்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அவகாசமளிப்பதற்காக தேர்தலை ஒத்திப் போடுவதன் மூலம் பொதுஜன முன்னணி தனது நிலையை பலப்படுத்த நினைக்கின்றது. சில காலங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற சீர்திருத்தங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒரு விசரணைக் குழு 1999ம் ஆண்டு தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த பிரேரிக்கப்பட்ட தேர்தல் திருத்தங்களின் பிரதிகளை ஏனைய அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைத்த அரசாங்கம் இரண்டு வாரங்களுக்குள் கருத்துக்களை கோரியிருந்தது.

இந்த மாற்றங்கள் பிரதான அரசியல் கட்சிகளின் கரத்தை பலப்படுத்துபவை ஆகும். முதலில் விகிதாசார பிரதிநிதித்துவத்தை அகற்றி விட்டு முன்னைய முறையை அறிமுகப்படுத்துவது. உள்ளூராட்சி பிரதேசங்கள் தொகுதிவாரியாக பிரிக்கப்படின் விகிதாசார பிரதிநிதித்துவம் மூலம் நன்மையடைந்த சிறிய அரசியல் கட்சிகள், சில சமயம் தொகுதி ரீதியான அடிப்படையில் போட்டியிடத் தள்ளப்பட்டு தோல்வியடையலாம். அரசாங்கமும் தேசிய ரீதியில் விகிதாசார பிரதிநிதித்துவத்தை அகற்றி விடுவதையிட்டு சிந்திக்கிறது.

மற்றொரு பிரேரனை உள்ளூராட்சி தேர்தல்களில் அரசியல் கட்சிகள் சம்பந்தப்படுவதை தடுக்கும் வகையிலானது. கட்சிகள் வேட்பாளர்களை நியமிக்கவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ முடியாது கட்சி உறவை வாக்குச்சீட்டுகள் கொண்டிருக்கமாட்டா என்பதாகும். ஆணைக் குழுவின் இந்த மாற்றம் "ஜனநாயகத்தின் மதிப்பை மிகவும் உயர்ந்த மட்டத்தில் பேணும்" என குறிப்பிட்டாலும் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கட்சிகளது கரங்களையும் உள்ளூர் அடையாளங்களையும் அது பலப்படுத்தும்.

வலதுசாரி சிங்கள உறுமய போலவே பிரதான எதிர்க் கட்சியான யூ.என்.பி.யும் உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு ஆதரவளித்துள்ளது. சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) "தனது வாக்கு வங்கியை திடமாக அதிகரித்துள்ளதையிட்டு விசேடமாக அச்சம் கொண்டிருப்பதால்" அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ள போதிலும் இதனை எதிர்க்க எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

சாதாரண தொழிலாளர்களது ஜனநாயக உரிமைகளையிட்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மிகவும் கவனமாக செயல்படுகின்றன. குமாரதுங்கவும் அவரது பொதுஜன முன்னணி கூட்டும் 17 வருடகால யூ.என்.பி. ஆட்சியின் பின் "ஜனநாயகத்துக்கு திரும்புவதாக" உறுதியளித்த வண்ணம் 1994ல் பதவிக்கு வந்தது. யூ.என்.பி. அடக்குமுறை "அவசரகாலச் சட்டத்தை" கொணர்ந்து, ஊடகக் கட்டுப்பாடு, தேர்தல் முறைகேடுகள் மற்றும் எதிரிகளைக் குண்டர்களைக் கொண்டு தாக்குவது போன்றவற்றை அமுல்படுத்தியது. ஆனால் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் வாக்குறுதிகளான போரை முடிவுக்கு கொண்டுவருதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், ஜனநாயக உரிமைகளை மீண்டும் ஸ்தாபிதம் செய்தல் போன்றவை விரைவில் கைவிடப்பட்டன.

யூ.என்.பி. அரசாங்கம் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியினை உருவாக்குவதற்கும் பாராளுமன்றத்தை இறப்பர் முத்திரையாக சுருக்கவும் அரசியல் அமைப்பினை மாற்றியமைத்தது. குமாரதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறி பதவியேற்றபோதும் அது இடம்பெறவில்லை. அதே சமயம் பொதுஜன முன்னணி யூ.என்.பி. கையாண்டு வந்த வாக்கு கொள்ளையடிப்பு, குண்டர் தாக்குதல் போன்றவற்றை மீண்டும் ஸ்தாபிதம் செய்துள்ளது.

1998ல் குமாரதுங்க இந்தக் கேவலமான அவசரகால சட்டவிதிமுறையை ஐந்து மகாண சபைகளது தேர்தலை ஒத்திவைக்க பயன்படுத்தினார். யுத்தத்தின் காரணமாக வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதுள்ளதாக அரசாங்கம் எடுத்துக் காட்டியது. 1999 ஜனவரியில் உயர் நீதிமன்றம் சுதந்திர ஊடகவியலாளர்களது மனு ஒன்றுக்கு தீர்ப்பு வழங்குகையில், இத்தீர்மானம் ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் மூன்று மாதத்தின் பின் தேர்தலை நடாத்த தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1999 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலின் போது சிங்கள சோவினிச தட்டுக்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தும், பிரச்சாரத்தின் கடைசி நாட்களில், ஒரு தமிழீழ விடுதலைப் புலி தற்கொலைக் குண்டுதாரியின் கொலை முயற்சி மீதான அனுதாபத்தையும் அணிதிரட்டிக் கொண்டு குமாரதுங்க மீண்டும் பதவியில் அமர்ந்தார். குமாரதுங்கவுக்கு எதிராக வாக்குக் கொள்ளையடிப்பு மற்றும் பயமுறுத்தல்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த மனுவைத் தள்ளுபடி செய்த வேளை, யூ.என்.பி.யினர் நீதிபதிகள் தேர்வில் குமாரதுங்கவின் தலையீடுகள் இடம்பெற்றுள்ளனவா என பாராளுமன்றத்தில் கேட்டபோது அது பதிலளிக்கப்படாத கேள்வியாகியது.

கடந்த அக்டோபர் மாத பொதுத் தேர்தலின் பின்னரும் எண்ணிக்கையற்ற பல தேர்தல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தேர்தல் ஆணையாளர் 22 வாக்குச் சாவடிகளின் வாக்கு கணிப்பை இரத்துச் செய்ததுடன் சந்தேகத்துக்கிடமான 47 நிலையங்களின் வாக்குகளையும் இரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரும் விவசாய அமைச்சருமான டி.எம். ஜயரத்னவும் கூட மின்சக்தி அமைச்சரும் பிரதி பாதுகாப்பு அமைச்சருமான அனுருத்த ரத்வத்தை தேர்தல் வன்முறைகளிலும் ஆத்திரமூட்டலிலும் ஈடுபட்டதாக ஜனாதிபதியிடம் முறைப்பட்டார்.

கடந்த 7 ஆண்டுகளில் 11 தேர்தல்களை தான் நடத்தி வென்றுள்ளதாக குமாரதுங்க வாயடித்துக் கொள்கிறார். ஆனால் உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுத்ததால், ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவே திரும்பியுள்ளார் எனக் காட்டிக் கொண்டுள்ளார். வேலையின்மை, அதிகரித்த விலைவாசி, அடிப்படை சேவை வெட்டுக்களினால் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், ஆகக் குறைந்தபட்ச மட்டுப்படுத்தப்பட்ட பொறிமுறையூடான உள்ளூராட்சி தேர்தலின் மூலம் கூட தமது எதிர்ப்பை தொழிலாளர்கள் வெளிக்காட்டிக் கொள்வதற்கும் மறுப்புத் தெரிவித்துள்ளதைக் காணலாம்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved