World Socialist Web Site www.wsws.org |
Munich security conference shows mutual distrust inside NATO மூனிச் பாதுகாப்பு மாநாடு நேட்டோவிற்குள்ளான பரஸ்பர நம்பிக்கையீனத்தை எடுத்துக் காட்டுகின்றது By Peter Schwarz பாதுகாப்புக் கொள்கை தொடர்பான 37 வது மாநாடு கடந்தவார இறுதியில் மூனிச்சில் நடைபெற்றது. இம் மாநாடானது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களுக்கான டாவோஸ்ஸில் (Davos) இடம்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டைப் போன்றே இதுவும் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடம்பெற்றது. இம் மாநாடு ஒரு உத்தியோகபூர்வமான இராஜாங்கக் கூட்டமாக இல்லாவிடினும் முக்கிய அரசியல்வாதிகளும், பலமுக்கிய பிரமுகர்களும் அங்கே பிரசன்னமாகி இருந்தனர். எவ்விதமான இராஜதந்திர விதிகளும் இதில் பெரிதாக செல்வாக்கு செலுத்தமுடியாததால், இது ஒரு பகிரங்கக் கலந்துரையாடலாக அமைந்தது. அதாவது இம்முறை வழமையான மற்றைய மாநாடுகளைப் போலல்லாது இங்கே கருத்துக்கள் மிகத் தெளிவாகவும், பகிரங்கமாகவும் விவாதிக்கப்பட்டன. புதிய அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் றும்ஸ்வெல்ட் (Donald Rumsfeld ) முதன் முறையாக ஐரோப்பாவில் பகிரங்கமாக உரை நிகழ்த்த இருந்ததால் இம் மாநாடு விசேஷமான பரபரப்பை எதிர்பார்த்திருந்தது. புஷ் நிர்வாகமானது மிகவும் ஒரு தனித்துவமான அமெரிக்காவின் நலனை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் எனவும், NATO வில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளைப்பற்றி மிகவும் குறைவான அக்கறையே கொண்டிருக்கும் எனவும் ஒரு ஊகம் பொதுவாக இம் மாநாட்டிற்கு முன்னரே நிலவியது. இந்த மூனிச் மாநாடு குளிர்யுத்த காலகட்ட முடிவின் பத்து வருடத்திற்குப் பின்னர், அட்லாண்டிக் கடல்கடந்த (Transatlantic) உறவுகளில் ஏற்பட்ட பாரிய முறுகல் நிலையையும், ஆழமான நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்தியது. வரவேற்ற நாடான ஜேர்மனியின் பிரதிநிதிகளும், அழைக்கப்பட்ட அமெரிக்கப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினர். உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என வலியுறித்தியதானது இவர்களுடைய கடந்த ஜம்பது வருடகால கூட்டு உறவுகள் இன்று எவ்வளவு முறுகலடைந்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது. இறுதியில் எவ்வகையிலும் சமாதானப்படுத்தப்பட முடியாத வித்தியாசங்களை இரு முக்கியமான கேள்விகள் கொண்டிருக்கின்றன. முதலாவது அமெரிக்காவின் திட்டமான ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டம் (NMD- anti-missile defence system ). அடுத்தது NATO க்கு வெளியே ஓர் தனித்த நிர்வாகத்தின் கீழ் ஒரு சுயாதீனமான அதிரடிப்படையை உருவாக்கும் ஐரோப்பாவின் திட்டமாகும். அமெரிக்காவின் இந்த NMD திட்டமானது, ஐரோப்பாவின் நீண்டகால ஐயுறவுவாதத்தையும், பகிரங்கமான நிராகரிப்பினையும் எதிர்நோக்கியது. இதற்காக கூறப்பட்ட காரணங்கள், ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டம் என்பதானது அணுவாயுத ஒழிப்பை இல்லாமல் செய்து, ஆயுதப் போட்டிக்கான ஒரு புதிய சுற்றை ஆரம்பித்து வைப்பதுடன், மற்றும் ரஷ்யாவின் உறவுகளில் சிக்கல்களை உருவாக்குவதையும் கொண்டிருக்கிறது என்பனவாகும். றும்ஸ்வெல்ட் (Rumsfeld) தனது பேச்சில், ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டம் ஓர் முடிவெடுக்கப்பட்ட தீர்மானம் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார். அவர் மேலும் ஐரோப்பியர்களுடன் இது எப்போது, எவ்வாறு நடைபெறும் என்பது தொடர்பாகவே கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இது ஓர் ''நல்லெண்ணத் தேவை'' யெனவும், அது அமெரிக்காவின் அரசியலமைப்புக்கு அமைய உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். இது தன்னுடைய மக்களை அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றுவதற்கான கடமையை அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது என்றார். ஐரோப்பிய வெளிநாட்டுக் கொள்கையாளர்கள் இந்த அர்த்தமற்ற அடிப்படைவாதத்திற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். அநேகமான அமெரிக்கப் பிரதிநிதிகள் றும்ஸ்பெல்ட்க்கு (Rumsfeld) ஆதரவளித்தனர். இங்கு சமூகமளித்த கென்றி கீசிங்கர் (Henry Kissinger), றிச்சார்ட் பேர்ட் (Richard Burt), றிச்சார்ட் பேர்ல் (Richard Perle) போன்றவர்களுடன் றும்ஸ்பெல்ட்டும் (Rumsfeld ), குளிர்யுத்தக் காலத்தில் அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியலில் முக்கியமான பாத்திரத்தை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையவர்கள் அதுவும் செனட்டர்களான ஜோண் மைக் கெயின் (John- Mc Cain), ஜோசப் லீபர்மன் (Joseph Lieberman) போன்றோர் புஷ்சின் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக குடியரசுக்கட்சி அல்லது ஜனநாயகக்கட்சிக்குள் போட்டியிட்டவர்களாகும். ஜனநாயகக் கட்சியின் உப தலைவருக்கான வேட்பாளாராகத் தெரிவு செய்யப்பட்ட ஜோசப் லீபர்மன் NMD யை நிறுவுவதென்பது ஒரு கேள்விக்கு அப்பாற்பட்ட விடயம் என்றார். அமெரிக்காவின் உறுதியான இந்த நிலைப்பாட்டை ஐரோப்பிய பிரதிநிதிகள் தற்போதைய நிராகரிப்பை ஒரு பின்னடிப்புடனேயே தெரிவித்துக் கொண்டனர். ஜேர்மன் அதிபர் ஹெகாட் சுரோடர் (Gerhard Schröder) இத்திட்டத்தின் சரியான உள்ளடக்கமானது, எவ்வகையான அபாயத்திற்குரிய நிலைமையில் பயன்படுத்தப்படும் என்பதையும், மற்றும் இதனது தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளையும், இது மேற்குஐரோப்பா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு எவ்வகையான தாக்கங்களை கொடுக்கவல்லது என்பவற்றைப் பற்றிய மேலதிக விளக்கங்களை விபரமாக தருமாறு கேட்டுக் கொண்டார். ''மிகவும் அவசர முடிவுகளுக்கு போவதைத் தவிர்க்க'' இவ்வாறான கேள்விகள் தெளிவாக்கப்பட வேண்டுமெனவும்், எனவே இதைப்பற்றி ஒரு ''ஆழமான கருத்து பரிமாற்றம்'' தேவை யெனவும் கூறினார். ஜேர்மனியின் வெளிநாட்டு அமைச்சர் ஜொஸ்கா பிஷர் (Joschka Fischer) தனது உரையில் மிகவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டார். ''இவ்வளவிலான ஒரு பாதுகாப்புத் திட்டம் அரசியல் விளைவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது'' எனவும், NMDக்கு எதிரான ரஷ்யாவின் விமர்சனம் ''முக்கியமாக'' எடுக்கப்பட வேண்டும் எனவும், ஒரு புதிய ஆயுதப்போட்டி தேவையில்லை எனவும் கூறினார். அங்கு வருகை தந்திருந்த ரஷ்யா பாதுகாப்பு குழுவின் தலைவரான சேர்ஜி இவானோவ் (Sergei - Ivanov) அமெரிக்காவின் இந்த ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்புத் திட்டத்தை மிகவும் வன்மையாகக் கண்டித்தார். NMD ஆனது 1972ல் ஏற்படுத்தப்பட்ட ABM (அணு ஆயுத குறைப்பு) ஒப்பந்தத்தை பிரயோசனமற்றதாக செய்து, ''பூகோள ஸ்திரத்தன்மையின் அடித்தளத்தை'' பலவீனப்படுத்துகின்றது என கூறினார். மேலும் கிழக்கு ஐரோப்பாவை நோக்கிய NATO வின் விரிவுபடுத்தலை எதிர்த்து விமர்சித்த அவர், ABM உடன்பாடு நடைமுறையில் இருக்குமானால் முக்கிய அணுவாயுதங்களை அரைவாசியாக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை செய்தார். அமெரிக்கப் பிரதிநிதிகள் தமது சார்பில், ஐரோப்பிய கூட்டினால் முதன் முறையாக முன்னெடுக்கப்படும் ஐரோப்பாவின் தனித்துவமான அதிரடிப்படை இராணுவ அமைப்பை மாநாட்டில் வன்மையாக விமர்சித்தனர். டிசம்பர் 2000 ஆண்டில் நீஸில் (Nice) இல் இடம்பெற்ற ஐரோப்பிய உச்சி மாநாட்டில் ஏகமனதாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 2003 க்குள் 60.000 இராணுவத்தினர் உலகெங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தகூடியதாக இருக்கும். பாதுகாப்பு அமைச்சர் றும்ஸ்வெல்ட் இது ''இரட்டை கட்டுமானத்தை குழப்பத்திற்கு உள்ளாக்குவதாகவும்'' ''அட்லாண்டிக்கு இடையிலான இறைமைக்கு'' குந்தகம் விளைவிக்கும் ஒன்றாக கருதப்படும் எனவும் எச்சரிக்கை செய்தார். அத்துடன் அவர், ''ஐரோப்பாவை பாதுகாப்பதின் மத்தியில் NATO இருக்கிறது'' எனவும் குறிப்பிட்டார். மேலதிகமாக துருக்கி ஐரோப்பிய கூட்டின் இராணுவத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதுடன் அதற்கு முன்னாலுள்ள அதனது அனைத்துத் தடைகளையும் இல்லாதொழிக்க வேண்டுமெனவும் மேலும் அவர் கேட்டுக்கொண்டார். குடியரசுக் கட்சியின் செனட்டர் மைக் கெயின் (McCain) NATO வுடனான முரண்பாடுகளுக்கு ஐரோப்பியர்களே காரணம் எனக் குற்றம் சாட்டினார். கடந்த 18 மாதகாலத்தில் நடைபெற்ற ஐரோப்பியக் கூட்டினதும், NATO வினதும் அமைச்சர்களது மாநாடுகளில் இடம் பெற்ற சுயாதீனமான ஐரோப்பிய இராணுவத்திற்கான வாக்குவாதங்கள் ட்ரான்ஸ் அட்லாண்டிக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான நெருக்கடிகளை வெளிப்படுத்தியது என மைக் கெயின் மேலும் குறிப்பிட்டார். அதிரடிப்படையின் ஒரு தேவைக்காக ஐரோப்பா தனக்குள்ளேயே முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் அமெரிக்காவுடனான நலன்களின் மோதல்களை தணித்து வைத்துக் கொள்வதில் மிக ஆர்வமாக உள்ளது. NATO வினது பொதுச்செயலாளரான ஜெனரல் ஜோர்ச் றொபேர்ட்சன் (George Robertson ) (இவர் பிரித்தானியாவின் முன்னைய பாதுகாப்பு அமைச்சர்) மூனிச் மாநாட்டில் பல அமைதிப்படுத்தும் பேட்டிகளைக் கொடுத்தார். மறுபக்கத்தில் பிரான்ஸ் அரசாங்கம், இந்த ஐரோப்பியக் கூட்டின் தற்போதைய தேவை அமெரிக்காவிடமிருந்து விலகி ஒரு சுயாதீனமான இராணுவப் பலத்தைப் பெற்றுக்கொள்வதென்பதை கவனத்தில் கொண்டது. ஜேர்மன் அரசாங்கம் இதற்கு வாயளவில் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அது புதிய இராணுவத்தை கட்டியமைக்க பிரான்சுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து வேலை செய்கிறது. NATO வுக்கு இடையிலான நம்பிக்கையீனங்கள் அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்தினூடு ஒரு மேல் மட்டத்திற்கு வந்துள்ளது. இருப்பினும் இது எவ்வகையிலும் புதியது அல்ல. நீண்டகாலப் போக்கில் NMD க்கும், ஐரோப்பிய துருப்புக்கும் பின்னால் அடிப்படையான கேள்விகள் உள்ளன. இவை ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மூலோபாய நலன்களின் அளவு தொடர்பானவையாகும்.குளிர்யுத்தத்தின் முடிவுக்குப் பின்னால் ஐரோப்பிய சக்திகள், அமெரிக்காவின் ஆதிக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. ஐரோப்பிய தனிச் சந்தையை நிறுவியது, ஒரு தனித்த நாணயத்தை தோற்றுவித்தது, கிழக்கு ஐரோப்பாவை நோக்கிய ஐரோப்பியக் கூட்டினது நகர்வு போன்றவற்றினூடு ஐரோப்பியக்கூட்டு உலகச்சந்தையில் பொருளாதாரரீதியில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு முன்னணிப் போட்டியாளனாக அதனை நிறுத்தியுள்ளது. இந்த நிலமையே மேலும் அதை ஒரு இராணுவரீதியில் தனது சொந்தக்கால்களில் நிலைநிறுத்திக் கொள்வதற்கான அவசியத்தையும் அதற்கு வழங்கியுள்ளது. இந்த NMD திட்டம்பற்றிய வாக்குவாதங்கள் ஒரு தொகைக் கேள்விகளை வரிசைக்கிரமமாக எழுப்பியுள்ளன. இதை மேலெழுந்த வாரியாகப் பார்க்குமிடத்து ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டம் ஏதோ தொழில்நுட்ப பற்றாக்குறையால் பின்தங்கியிருப்பதாக கூறப்படுமிடத்து இவ்விவாதம் பொருத்தமற்றதாகத் தோன்றும். இராணுவ வல்லுனர்கள், இந்த அபிவிருத்தியை முன்னெடுக்க குறைந்த பட்சம் ஒரு பத்து வருடம் தேவைப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அபிவிருத்தியின் மாதிரியும், அதன் நோக்கமும் இதுவரையிலும் தெளிவின்றியே உள்ளன. கிளின்ரன் நிர்வாகத்தின் கீழ் இந்த ஏவுகணை எதிர்ப்பு தாக்கிகளை (anti-missile rockets) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அலாஸ்காவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அது இப்போது புஷ் நிர்வாகத்தின் கீழ் நீர்மூழ்கிக் கப்பலிலும் நிர்மாணிக்கும் ஒரு பெரியளவிலான திட்டமாக உருவெடுத்துள்ளது. NMD யின் தோற்றத்திற்கான உத்தியோகபூர்வமான காரணம் யாதெனில், ''அயோக்கிய நாடுகள் '' (rogue states) என வரையறுக்கப்பட்ட வட கொரியா, ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளுடைய ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கவே இது பிரயோகிக்கப்படும் என இதுவரையிலும் கூறப்பட்டது. ஆனால் மூனிச் மாநாட்டில் றும்ஸ் வெல்ட்டின் பேச்சுக்களில் இதைக் காணவில்லை. Financial- Times பத்திரிகை ''அமெரிக்காவின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட விமான அல்லது கனரக ஆயுதப் பிரிவுகளைப் போன்று ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டமும் எந்தவொரு எதிரிக்கு எதிராகவும் தேவையான சமயத்தில் பாவிக்கப்படக்கூடியது'' என பிரகடனப்படுத்தியது.ஐரோப்பாவின் பீதிக்கு பொதுவான காரணம் இதுதான். ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டத்தை தனது எந்தவொரு எதிரிக்கும் எதிராக பாவிப்பதினூடு அமெரிக்கா பெரிய மூலோபாய முன்னுரிமையை அடைவதுடன் தனது மேலாண்மை நிலையையும் ஒரு நீண்ட காலத்திற்கு உறுதிப் படுத்திக் கொள்ளமுடியும். இத்திட்டம் NATO வைச் சேர்ந்த ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு கிடைக்கும் என றும்ஸ் வெல்ற் தெரிவித்தமை அவர்களின் அச்சத்திற்கு சிறிய ஆறுதலையே கொடுத்துள்ளது. இதற்கான செலவு அரசாங்கத்தின் அதனது வரவு செலவுத் திட்டத்தில் மிகவும் ஒரு அபாரமானது. மேலும் இத்திட்டம் அமெரிக்காவில் அபிவிருத்தி செய்யப்படுவதால் இது அமெரிக்க தொழில் நுட்பத்தின் ஆதிக்கத்தையும் கொண்டுள்ளது. ''அயோக்கிய அரசுகளின்'' (rogue states) அச்சுறுத்தலுக்கு எதிராகவே NMD தோற்றுவிக்கப்பட்டது எனும் விவாதமானது ஐரோப்பாவை எப்பொழுதும் ஒரு சந்தேகத்துடனேயே வைத்திருந்தது. ஒரு சில இராணுவ வல்லுனர்களின் அபிப்பிராயப்படி இதன் உண்மையான நோக்கம் சீனாவாகும். ஏனெனில் அங்கு ஐரோப்பா தனது பொருளாதார நலன்களில் பாரியளவு அக்கறை கொண்டுள்ளது. மூனிச் மாநாட்டைப்பற்றி Süddeutschen Zeitung எனும் ஜேர்மன் பத்திரிகை தனது விமர்சனத்தில் ''ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டம் உண்மையில் அமெரிக்காவின் நலன்களையும், அதனது முன்னணிப் பாத்திரத்தை பாதுகாப்பதற்கும், அனைத்துக்கும் மேலாக சீனாவின் மூலோபாய போட்டிக்கும் எதிராக முன் நிறுத்தப்பட்டுள்ளது.'' எனத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் பொருளாதார நலன்கள் இருப்பதாக ஏனைய விமர்சகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த NMD திட்டத்தின் அபிவிருத்திக்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகையில் இது அமெரிக்காவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு பெரியளவில் புதிய ஒப்பந்தங்களுக்கான வாய்ப்புகளை மட்டுமல்லாது பெருவீதப் பொருளாதாரத்தில் அதனது சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக தொழில்நுட்ப முன்னுரிமையையும் வழங்கும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முரண்பாடு ஏதோ வழமைபோல் நடைபெறும் ஒரு தற்காலிக நெருக்கடி இல்லை என்பதை இந்த மூனிச் மாநாடு தெளிவுபடுத்தியது. இது உலகச் சந்தைக்கான உக்கிரப் போராட்டத்தினூடாக எழுவதுடன், அனைத்து மனித சமுதாயத்துக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும்.
Copyright
1998-2000 |