World Socialist Web Site www.wsws.org


WSWS : செய்திகள் & ஆய்வுகள் :ஐரோப்பா: ஜேர்மனி

Germany: Christian Democratic leader seeks ban on political activity by asylum-seekers

ஜேர்மனி: கிறீஸ்தவ ஜனநாயகத் தலைவர் அடைக்கலம் கோருவோரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க கோருகிறார்

By Ulrich Rippert
16 March 2001

Back to screen version

பெப்பிரவரி மாதக் கடைசியில் ஜேர்மன் கிறீஸ்தவ ஜனநாயக கட்சிக்கார்களால் வெளிநாட்டவர்களுக்கு எதிராகத் தூண்டி விடப்பட்ட பிரச்சாரம் ஒரு புதிய உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு தீவிர வலதுசாரி வன்முறைகள் இரட்டித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த அதே வேளையில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கிறீஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) பாராளுமன்றக் குழுவின் தலைவரான பிரெட்ரிக் மேர்ஸ் (Friedrich Merz), அடைக்கலம் கோருவோர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்யும்படி அழைப்பு விடுத்தார். ஜேர்மனியில் புகலிடம் வழங்குவது பற்றிய முழு விசாரணைக் காலப்பகுதியிலும் -இது பொதுவில் பல வருடங்கள் இழுபட்டுச் செல்வதுண்டு- அடைக்கலம் கோருவோரின் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமையும் அரசியல் விமர்சனத்தில் ஈடுபடும் அடிப்படை உரிமையும் மறுக்கப்படும்.

மேர்ஸ் டீ.பீ.ஏ. (DPA) செய்தி ஏஜன்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் அரசியல் புகலிடம் கோருவோருக்கு வாய்ப்பூட்டுப் போடும் தனது அழைப்பை நியாயப்படுத்திக் கொண்டுள்ளார். அடைக்கலம் கோருவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஒரு பலம் வாய்ந்த நடவடிக்கையாக இதை அவர் குறிப்பிட்டுள்ளார். குடிவரவு (Immigration) தொடர்பான கொள்கை விளக்க அறிக்கையில் கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) சமீபத்தில் பிரேரித்துள்ளது போல் அடைக்கலம் கோருவோரின் தனிப்பட்ட உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து அடியோடு நீக்கவும், ஒழித்துக் கட்டவும் முடியாது போகுமிடத்து, அடைக்கலம் கோரும் உரிமை மேலும் கட்டுப்படுத்தப்படும்.

மேர்ஸ் கூறியுள்ளதாவது: "அரசியல் புகலிடம் கோரும் விசாரணையின் போது அரசியல் நடவடிக்கை மீதான தடையை நாம் அடைக்கலம் கோரும் சட்டத்தில் சேர்த்துக் கொண்டால், நாம் தற்போதைக்கு அதை அரசியலமைப்புச் சட்டத்தில் விட்டு வைக்கலாம். இதன் மூலம் புகலிடத்துக்கான ஒரு தொகை அடிப்படைகளை போக்கும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளது" என்றுள்ளார்.

மேர்சின் தர்க்கம் கவர்ச்சியானதாக உள்ளது. அரசியல் நடவடிக்கையை தடை செய்வதன் மூலம் -அரசியல் புகலிடம் கோருவோரின் சுதேச அரசாங்கத்தை விமர்சனம் செய்வதை தடை செய்வது உட்பட- அரசியல் புகலிடம் கோருபவர் அவரது நாட்டு அரசாங்கத்தினால் அரசியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை தடுக்க முடியும். இதன் மூலம் புகலிடம் கோருவதற்கான அடிப்படையை முதல் இடத்தில் ஒழிக்க முடியும்.

மேர்ஸ் ஒரு பழமைவாத அரசியல்வாதி. அவர் வலதுசாரி இனவாத நம்பிக்கைகளையும் ஜனநாயக உரிமைகள் பற்றிய முழு அறிவீனத்தையும் மாகாண ரீதியான குறுகிய மனப்பான்மையுடனும் மூடத்தனத்துடனும் கலக்கின்றார். அவரது சிபார்சு, வெளிநாட்டவருக்கு எதிரான தரமான பிரச்சாரத்தை பாதிப்பதாக அவர் உணர்வது போல் தெரிகிறது. கடந்த காலத்தில் புகலிடம் கோருவோர் பெரும்பாலும் அரசியல் வேட்டையை எதிர்கொண்டிராத, பொருளாதாரக் காரணங்களுக்காக தமது நாட்டில் இருந்து வெளியேறியவர்கள் என வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆதலால் இந்த வாதம் அவர்கள் அரசியல் அடைக்கலம் கோரும் நியாயமான கோரிக்கை அற்றவர்கள் எனக் கொள்ளப்பட்டது.

அரசியல் புகலிடம் கோருபவர்களை ஜேர்மனியில் அவர்களது நாட்டு கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களில் ஈடுபட இடமளிப்பது அரசியல் புகலிடம் கோருவதற்கான நிலைமைகளை சிருஷ்டிக்கின்றது. இது அவர்களது தாய்நாட்டை பற்றிக் கூறுவது என்ன? அப்படியானால் அத்தகைய ஒரு அரசில் இருந்து வெளியேறுவதை ஒருவர் எப்படி அரசியல் புகலிடம் கோரும் உரிமையை "துஷ்பிரயோகம்" செய்வதாக கூற முடியும்? அல்லது மாறாக: அவர்களது நாடு ஒரு ஜனநாயக நாடாக இருப்பின் ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது எப்படி அரசியல் புகலிடம் கோருவதை நியாயப்படுத்த முடியும்?

தோமஸ் மானும், குட் டுசொல்ஸ்கியும் பேட்ரொல்ட் பிரெஸ்டும் நாஸி ஜேர்மனியில் இருந்து வந்த ஏனைய அகதிகளும் அவர்கள் புகலிடம் கோரி இருந்த நாடுகளில் இருந்துவந்த சமயம் தமது எழுத்துக்களால் பாசிச சர்வாதிகாரத்தை அப்பட்டமாக எதிர்த்தமைக்காக மேர்ஸ் இனால் தடை செய்யப்பட்டு இருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்?

இன்று போல் அன்று வெளிநாட்டில் தங்கி இருந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது ஒரு சர்வாதிகார அல்லது எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிரான சக்திவாய்ந்த ஒரே விதிமுறையாக கொள்ளப்பட்டது. உதாரணமாக ஜேர்மனியில் தீவிரமாக இயங்கி வந்த எதிர்க்கட்சி குழுக்களை வேட்டையாட துருக்கியும் ஈரானும் முயற்சித்தமை சும்மா அல்ல.

வெளிநாட்டவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு மேர்சும் அவரது ஆதரவாளர்களும் அத்தகைய சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்குவதிலும் அவர்களது வாதங்களுக்கு இணங்கிப் போவதிலும் பின்வாங்குவதாக இல்லை. முதலில் அவர்கள் அரசியல் ரீதியான துன்புறுத்தல்கள் அல்லது அடக்குமுறைகள் கிடையாது எனக் கூறிக் கொள்கிறார்கள். அடுத்து அவர்கள் பிரச்சினைக்கிடமான ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு அரசியல் எதிர்ப்புக் காட்டுவதை தடை செய்கிறார்கள்.

அரசியல் புகலிடம் கோருவோரும் அவர்களது குடும்பங்களும் பல வருடங்களாக மிகவும் சொற்பமான சமூக நலன்புரி சேவைகளையே பெற்று வந்துள்ளனர். இவர்கள் ஜேர்மன் சமூக பாதுகாப்பு கிடைப்பவர்கள் பெறுவதை விட மிகவும் குறைவாகவே பெறுகின்றனர். பெரும்பாலும் இதுவும் பணமாக இல்லாமல் பொருட்களாக அல்லது வவுச்சர் (Voucher) வடிவிலேயே கிடைக்கிறது. இப்போது அவர்கள் அந்த உரிமையும் கூட அவர்களை தமது நாடுகளில் இருந்து வெளியேறச் செய்த அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்காக வெட்டப்படும் ஆபத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். அத்தோடு அவர்கள் நாட்டில் இருந்து அரசியல் அடக்குமுறைக்கு தப்பி வந்தவர்கள். இப்போது இவர்கள் ஜேர்மனியில் இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக சிறைக்குள் தள்ளப்படும் அல்லது நாடுகடத்தப்படும் நிலைக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

இந்தப் பிரேரணையை அமுல் செய்வது என்பது சனத்தொகையில் ஒரு பிரிவினருக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகும். உதாரணமாக துருக்கியில் இருந்து வந்த குர்திசுக்கள் துருக்கி அரசாங்கத்துக்கும் குர்திஷ் பொதுமக்களை அடக்குவதற்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களில் அல்லது எதிர்ப்புகளில் இனியும் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழர்கள் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. அல்லது தெஹ்ரான் ஆட்சிக்கு எதிரான ஈரான் எதிர்ப்பாளர்கள் அல்லது சுயாட்சி பிரதேசத்தில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பாலஸ்தீனியரின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

அரசியல் புகலிடம் கோருபவர்கள் துருக்கிக்கு விநியோகம் செய்யப்பட்டு குர்திசுக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஜேர்மன் ஆயுதங்களின் விநியோகத்தை எதிர்த்து ஜேர்மன் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள முடியாது. அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு ஜேர்மன் வழங்கும் ஏனைய வடிவிலான ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எதிராக அல்லது ஜேர்மனியின் வரையறுக்கப்பட்ட அரசியல் புகலிடம் வழங்கும் கொள்கைகளுக்கும், சமூக சேவை வெட்டுக்கள், வேலைத் தடை, மனிதாபிமானமற்ற நாடுகடத்தல்களுக்கு எதிராக இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அரசியல் புகலிடம் கோருவோர் பங்கு கொள்ள முடியாது.

டீ.பீ.ஏ.யுடனான பேட்டியில் மேர்ஸ் இந்த நடவடிக்கைகளைத் தாம் ஒரு இடைக்கால நடவடிக்கையாக கணிப்பதாக கூறிக் கொண்டுள்ளார். அவரது கருத்தின்படி அரசியல் புகலிடம் கோரும் உரிமையைத் தடை செய்ய ஒரே மாதிரியான ஐரோப்பிய தீர்வு காணப்பட வேண்டும். நீண்ட காலத்தில் இது ஒரு அரசியலமைப்பு திருத்ததுக்கு இட்டுச் செல்லும்.

இது இடம்பெறுவதற்கு முன்னதாக மேர்ஸ் அரசியல் புகலிடம் கோரியோரின் விண்ணப்பங்களை நிராகரித்த தீர்மானங்களை நீதிமன்றத்தில் பரிசீலிக்கும் அரசியல் புகலிடம் கோருவோரின் சட்ட உரிமையை நீக்கிவிட விரும்புகின்றார். இதற்குப் பதிலாக ஒரு "முறைப்பாட்டு கமிட்டி" (Complaints committee) இந்த விண்ணப்பங்களை பற்றி தீர்மானம் செய்யும். இந்த விதத்தில் அரசியல் புகலிடம் கோருவதற்கான சட்ட கோரிக்கை மேலும் பலவீனமாக்கப்படும். அத்தோடு அரசாங்க அதிகாரிகள் மனம்போன போக்கில் தீர்மானம் செய்ய வழிதிறந்துவிடப்படும். சமூக ஜனநாயகக் கட்சியின் சமஷ்டி உள்நாட்டு அமைச்சர் ஓட்டோ ஸ்கிலி பல தடவை பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டிகளில் ஏற்கனவே இதற்குச் சமமான ஒன்றுக்கே அழைப்பு விடுத்துள்ளார்.

மேர்ஸ் டீ.பீ.ஏ.க்கு வழங்கிய பேட்டியில் ஜனநாயக உரிமைகள் தொடர்பான தனது கருத்தை பின்வரும் வார்த்தைகளில் கூறிக் கொண்டுள்ளார்: "குடிபெயர்வை நாம் அத்தகைய ஒரு வழியில் ஒழுங்குபடுத்தியாக வேண்டும். அது குடிபெயர்ந்து வந்தவர்களின் நலன்களின் பேரில் அல்லாது அரசின் நலன்களின் பேரில் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்." அத்தோடு "குடிபெயர்வதற்கு சட்டரீதியான ஒரு கோரிக்கை இருக்க முடியாது." அதற்குப் பதிலாக "அங்கு ஜேர்மன் நலன்கள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட வேண்டும். அது நாம் விரும்பும் குடிவரவு என்ன என்பதை தீர்மானம் செய்யும்."

அடிப்படை அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளும் அனைத்துலகச் சட்டமும் "ஜேர்மன் நலன்களின்" குறுக்கே நின்று கொண்டு இருக்குமானால் இந்த ஜனநாயக உரிமைகள் யாரின் நலன்களைக் காக்க வரையறுக்கப்பட்டதோ அவர்களால் ஒழிக்கப்பட்டாக வேண்டும். பிரஜைகளின் உரிமைகளுக்கு மேலாக அரசின் நலன்கள் விளங்க வேண்டும் என்ற இடைவிடாத வலியுறுத்தலானது எந்தளவுக்கு ஜேர்மனியில் இந்த ஜனநாயக முனைப்பு ஒல்லியானது என்பதை காட்டுகின்றது. அத்தோடு இது பாரதூரமான தாக்கங்களையும் கொண்டுள்ளது.

இன்று இது சமுதாயத்தின் பலவீனமான பகுதியினரையும் பலவீனம் கண்ட பாதுகாப்பு கொண்டவர் களையும் -வெளிநாட்டவர்கள், அகதிகள் போன்றவர்கள்- பாதிக்கச் செய்கின்றது. நாளை இது "ஜேர்மன் நலன்களை" அச்சுறுத்தும் எவர் மீதும் -ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர்- அதாவது: அரசினதும் பெரும் வர்த்தக அமைப்புகளதும் நலன்களை எதிர்ப்போர்- தாக்கத்தை உண்டுபண்ணும்.

மேர்சின் கோரிக்கைகளையிட்டு கருத்து வெளியிட்ட ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி (SPD) அரசியல்வாதிகள் அவரது சிபார்சுகளை கொள்கையளவில் நிராகரிக்கவில்லை. ஆனால் அவை பூரணமாக சிந்தித்து செய்யப்படவில்லை அல்லது நடைமுறைச் சாத்தியம் அற்றது என்று மட்டுமே இனங்கண்டுள்ளனர். உள்நாட்டு அமைச்சர் ஸ்கிலி, மேர்சுக்கு Bild பத்திரிகையில் வழங்கிய பதிலில் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இந்தச் சிபார்சுகள் அடியோடு எதையும் வழங்குவதக இல்லை. ஏனெனில் இது புகலிடம் வழங்கும் விதிமுறைகளை இலகுபடுத்துவதாகவோ அல்லது குறுக்குவதாகவோ இல்லை. இன்று உள்ள சட்டத்தின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் சாத்தியம் ஏற்கனவே இருந்து கொண்டுள்ளது."

உள்நாட்டு விவகாரங்களுக்கான ஹம்பேர்க் செனட்டர் ஹார்முத் வுரொக்லாகே உம் அவ்வாறே சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும் மேர்சின் சிபார்சுகள் "பொதுவில் சாத்தியமானதல்ல" எனக் கூறி அதை நிராகரித்துள்ளனர். அவர் எழுப்பிய கேள்வி அதுதான்" "வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் பொலிசார் கடவுச் சீட்டுக்களை (Passports) சோதிக்க வேண்டுமா?

அரசியல் புகலிடம் கோரும் உரிமை மீதான பாரிய அளவிலான தாக்குதலும் அரசியல் புகலிடம் கோருவோரின் அரசியல் உரிமைகளை கட்டுப்படுத்தும்படி கோருவதும் முழுச் சனத்தொகையினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாக புரிந்து கொள்ளப்பட்டு நிராகரிக்கப்பட வேண்டும். இந்தப் பாதை எங்கே இட்டுச் செல்கின்றது என்பதை பேர்லின் நகர அரசாங்கத்தில் உள்ள சிடீயூ (CDU) கன்னையின் சட்ட வரைவில் கண்டு கொள்ள முடியும். அது ஒருங்கு கூடும் உரிமை மீதும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை மீதும் புதிய கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. 'சீடீயூ' பிரகடனம் செய்வதாவது: "பேர்லின் மையத்தில் நவ நாஸி ஆர்ப்பாட்டங்களின் வெளிச்சத்தில் எதிர்கால ஆர்ப்பாட்ங்கள் "ஜேர்மன் வெளிநாட்டு கொள்கை நலன்களை" பிரச்சினைக்கு இடமாக்கினால் அவை தடை செய்யப்பட வேண்டும்" என்கிறது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved