World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா : ஐக்கிய அமெரிக்காBush's tax cut plan: big lies and a little truth புஷ்சின் வரி வெட்டுத்திட்டம்: பெரிய பொய்களும் சிறு உண்மையும் By Patrick Martin ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்சின்படி வரிக்குறைப்புத் திட்டம் அமெரிக்கர்களில் ஒரு சதவீதத்தினரான செல்வந்தர்களுக்கு சுமார் 600 பில்லியன் டாலர்களை வழங்கும் அதே வேளையில் வறியவர்களான 20 சதவீதத்தினருக்கு -"அனைவருக்கும் வரி நிவாரணம்" என்பது எதையும் வழங்குவதாக இல்லை. யதார்த்தத்தில் புஷ்சின் வரித் திட்டம் செல்வந்தர்களுக்கான ஒரு நலன்புரித் திட்டமாக உள்ளது. இது அமெரிக்க வறியோருக்கு சகல திட்டங்களின் கீழும் செலவு செய்யப்பட்ட மொத்த தொகையைக் காட்டிலும் அதிகமானதை அமெரிக்கச் செல்வந்தர்களுக்கு வழங்கும். புஷ் நிர்வாகத்தின் வரிக் குறைப்புத் திட்டம், பெப்பிரவரி 3ம் திகதி புஷ் தேசிய ரீதியில் நிகழ்த்திய வானொலி உரை தொடக்கம் ஒரு தொகை தொடர்புச் சாதன நிகழ்ச்சிகள் மூலம் உத்தியோகபூர்வமான விதத்தில் அம்பலமாகியுள்ளது. இந்த வரிக் குறைப்பு சராசரி, தொழிலாள வர்க்கக் குடும்பங்களுக்கும் சிறிய வர்த்தகர்களுக்கும் உதவுவதையே இலக்காகக் கொண்டது என்பதே இந்நிகழ்ச்சி ஒவ்வொன்றினதும் செய்தியாக விளங்கியது. ஒரு இராட்சதப் பொய்யை அமெரிக்க மக்களிடம் கட்டியடிப்பதற்கு தொடர்புச் சாதனங்களை திரட்டுவதே இதன் மைய இலக்காக விளங்கியது. புஷ் தமது வானொலி உரையில் இந்த பிரச்சாரத்துக்கான தொனியை சரி செய்தார். அதில் அவர் உழைக்கும் மக்களின் நிலைமைக்காக தனது அனுதாபத்தை தெரிவித்தார். "இன்று பல அமெரிக்கர்கள் நெருக்கித் தள்ளப்படுவதாக உணர்கிறார்கள். அவர்கள் ஒரு கிழமையில் 40, 50, 60 மணித்தியாலங்கள் வேலை செய்கிறார்கள். அதே சமயம் மின்சார, சில்லறை பட்டியல் கணக்குகளை தீர்ப்பதில் இன்னமும் சங்கடப்படுகின்றார்கள்." ஜனாதிபதி இந்த பொருளாதார நெருக்குவாரங்களுக்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை. உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினரின் மெய் ஊதியம் ஒரு தலைமுறையாக தேக்கம் கண்டுள்ளது அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளது. இது ஒரு வரிச்சுமைக்கு வரும் போது கூட சமஷ்டி வருமான வரி முக்கிய காரணி அல்ல. காங்கிரஸ் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தின்படி உழைக்கும் அமெரிக்கர்களில் 80 சதவீதமானோர் வருமான வரியாக செலுத்துவதைக் காட்டிலும் அதிகமாக சம்பளப் பட்டியல் வரிகளாக (Payroll Taxes) செலுத்துகின்றனர். வருமான வரியில் பெருந்தொகை செல்வந்தர்களாலும் உயர் மத்திய தர வர்க்கத்தினராலுமே செலுத்தப்படுகின்றது. எனவேதான் புஷ்சின் வேலைத்திட்டம் வருமான வரி வீதங்களைக் குறைப்பது பற்றி பேசுகின்றதே தவிர சம்பளப் பட்டியல் வரிகளில் எதுவித மாற்றத்தையும் செய்வதாக இல்லை. உழைக்கும் மக்களில் பலர் மதுபான வரியாக -அரச விற்பனை வரிகள்- அளவுகணக்கற்ற தொகையை செலுத்துகின்றனர். புஷ் நடைமுறை வரி முறையின் கணிப்பீடு தொடர்பாக பின்வரும் உதாரணத்தை வழங்கியுள்ளார்: "எமது நகரங்களில் ஒன்றில் இராப் போசன விருந்தை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். மேசையில் ஒரு வழக்கறிஞர் இரண்டு குழந்தைகளுடன் இருக்கின்றார். அவர் ஆண்டுக்கு 250,000 டாலர்களை சம்பாதிக்கின்றார். அவரது காப்பியையும் ரொட்டியையும் ஒரு பணியாள் எடுத்து வருகின்றார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர் ஆண்டுக்கு 25,000 டாலர்களை சம்பாதிக்கின்றார். வழக்கறிஞரும் பணியாளும் சம்பள உயர்வு பெறின் ஒரு உயர்ந்த குறைந்தபட்ச வரி விகிதம் கிடைப்பது பணியாளுக்கே. அவர் தான் உழைக்கும் ஒவ்வொரு மேலதிக டாலரிலும் ஏறக்குறைய அரைவாசிப் பங்கினை அரசாங்கத்துக்கு திருப்பிச் செலுத்துகிறார்." இந்தக் கட்டுக்கதை றொனால்ட் றீகனின் பாணியில் நியாயமான விதத்தில் முன்வைக்கப்பட்டாலும் முற்றிலும் பொய்யானது. இது பொய்கள், அப்பட்டமான பொய்கள், புள்ளிவிபரங்கள் பற்றிய மார்க் டுவைனின் (Mark Twain பிரபல அமெரிக்க எழுத்தாளர்) பழமொழியையே ஊர்ஜிதம் செய்கிறது. பணிப் பெண்களுக்கான குறைந்தபட்ச வரி விகிதம் உயர்ந்தது. ஏனெனில் புஷ்சின் உதாரணத்தில் அவரின் 25,000 டாலர் வருமானம், இன்றைய நடைமுறை சட்டத்தின் கீழ் வரி வீதம் 15 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக சரியாக மாற்றம் அடையும் இடத்தில் உள்ளது. அவரது மொத்த வரி வீதம் வழக்கறிஞரின் வீதத்தைக் காட்டிலும் கணிசமான அளவு குறைவானது. ஏனெனில் 20 வருட கால வலதுசாரி தாக்குதல்களுக்கு இடையேயும் வருமான வரி கிரமமாக வகுக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரு அளவுக்கு ஒரு முற்போக்குப் பண்பை கொண்டுள்ளது. புஷ்சின் வரிக் குறைப்பு இந்த உழைக்கும் பெண்ணுக்கு ஒரு அற்பமான 300 டாலர்களையே வழங்கும். ஆறு இலக்க வருமானம் கொண்ட வழக்கறிஞருக்கு இது இதைக்காட்டிலும் 100 மடங்கு கூடுதலான நலன்களை வழங்கும். இந்த 1.6 ரில்லியன் டாலர் வருமானவரித் திட்டத்தின் நிஜ சரத்துகள், பரந்த வெகுஜனங்களுக்கு அற்ப சலுகைகளையும், வசதிவாய்ப்புகள் படைத்த சிலருக்கு பிரமாண்டமான சலுகைகளையும் கொண்ட ஒரு கலவையாகும். இதன் மூலம் குழந்தை வரி 5 வருட காலங்களுக்கு ஒரு குழந்தைக்கு 500 டாலர் தொடக்கம் 1000 டாலர் வரை படிப்படியாக அதிகரிக்கப்படும். அத்தோடு சில குறைந்த வருமானம் கொண்ட உழைக்கும் குடும்பங்கள் தமது வரி வீதம் 15 சதவீதத்தில் இருந்து 10 வீதமாக வெட்டப்படுவதைக் காண்பர். இந்த அளவுத் திட்டத்தின் மறுபுறத்தில் செல்வந்தர்களின் வருமான வரி வீதம் 39.6 வீதத்தில் இருந்து 33 வீதமாக வீழ்ச்சியடையும். இது வீதாசாரத்தின் அடிப்படையிலும் டாலர்களின் அடிப்படையிலும் ஒரு பாரிய குறைப்பு ஆகும். செல்வந்தர்களுக்கேயுரிய சொத்து வரி (Estate Tax) நீக்கப்படும். இந்த சொத்து வரி ஒழிப்பு வர்க்க சட்ட முறையின் ஒரு அப்பட்டமான சிறப்பு அம்சமாகும். சகல வரியிறுப்பாளர்களிலும் இரண்டு வீதத்தினர் மட்டுமே சொத்து வரியைச் செலுத்துவதற்கான செல்வங்களைக் கொண்டுள்ளனர். வரியில் அரைப்பங்குக்கு அதிகமான தொகை ஒரு சிறிய 4000 குடும்பங்களினாலேயே ஆண்டு தோறும் செலுத்தப்படுகின்றது. சனத்தொகையில் செல்வந்தர்களான இச்சிறு தொகையினர் அடுத்துவரும் 8 ஆண்டுகளில் 236 பில்லியன் டாலர்களைச் சேமிப்பர். அதன் பின்னர் ஆண்டு தோறும் 50 பில்லியன் டாலர்களால் இது அதிகரிக்கும். புஷ் கடந்த வாரம் தனிப்பட்ட தரும ஸ்தாபனங்கள் -சிறப்பாக மதரீதியான அமைப்புகள்- வறியவர்களுக்கு உதவி வழங்கும் முக்கிய அமைப்பான சமஷ்டி அரசாங்கத்தை பதிலீடு செய்யும் எனத் தெரிவித்தார். ஆனால் ஒரு நூற்றாண்டில் முதற்தடவையாக தமது செல்வங்களை பூரணமாக வரிவிலக்கு பெற்ற முறையில் பதுக்கவும் கைமாற்றவும் உயர் பணக்காரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் சொத்து வரி ஒழிப்பானது தர்ம ஸ்தாபன நன்கொடைகளுக்கான பெரும் ஊக்குவிப்பை ஒழித்து விடும். ஜனாதிபதியின் வாதங்கள் தெட்டத் தெளிவான முறையில் போலியானவை. ஆனால் புஷ் ஒரு இன்றியமையாத கூட்டாளிகளை- ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளை- கொண்டுள்ளார். அவர்கள் புஷ்சின் அடிச்சுவட்டிலேயே பயணம் செய்கிறார்கள். வரிக் குறைப்பை கொள்கை அளவில் கட்டித் தழுவிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அதன் தொகையையிட்டு பல விதத்தில் பேசிக் கொள்கிறார்கள். கம்பனிகளின் பிரமுகர்களை செல்வந்தர்களாக்க அரசாங்க திறைசேரியை அடியோடு சூறையாடுவதையிட்டு மென்மையான விமர்சனத்தையும் கூட தவிர்த்துக் கொள்கிறார்கள். ஒரு வித்துவான் கூறியது போல் அல்கோர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த போது அவர் 10 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர் வரிக் குறைப்பைச் செய்யப் பிரேரித்தார். கடந்த கோடையில் இதை 500 பில்லியன் டாலர்களாக்கினார். காங்கிரஸ் சபையின் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் 750 பில்லியன் டாலர்கள் தொடக்கம் 1 ட்ரில்லியன் டாலர்கள் (ஒன்றுடன் 12 சைபர்கள்) வரையிலான வரிக் குறைப்பு பற்றி கலந்துரையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். புஷ் வரிக் குறைப்பு திட்டத்தின் வர்க்கத் தன்மையை பூசி மெழுகிவிட முயற்சிக்கலாம். ஆனால் தீவிர வலதுசாரி ஊதுகுழலான வோல் ஸ்ரீட் ஜேர்ணலின் (Wall Street Journal) ஆசிரியத் தலையங்கம் முழுக் கோலத்தையும் காட்டிக் கொண்டுள்ளது. செவ்வாய்க் கிழமை பிரசுரமான ஒரு ஆசிரியத் தலையங்கம் பின்வரும் தலைப்புடன் வெளியாயிற்று: "அமெரிக்காவின் வரி அமைப்பு பணக்காரர்களை துஷ்பிரயோகம் செய்வது எப்படி" வரியிறுப்பாளர்களில் உயர் மட்ட 1 சதவீதத்தினர் சமஷ்டி வருமான வரிகளின் 34.8 வீதத்தை செலுத்தியதாகவும் உயர் மட்ட 5 சதவீதத்தினர் 54 வீதத்தை செலுத்தியதாகவும் இப்பத்திரிகை முறைப்பட்டது. இப்பத்திரிகை இந்த 1 சதவீதத்தினர் தேசிய செல்வத்தின் 40 வீதத்துக்கும் அதிகமானதையும் உயர் மட்ட 5 சதவீதத்தினர் தேசிய செல்வத்தின் 2/3 பங்கிற்கும் அதிகமானதையும் கொண்டுள்ளனர் என்பதை குறிப்பிடுவதில் அக்கறை காட்டவில்லை. இப்பத்திரிகை ஒரு வளர்ச்சி முறையான வருமான வரி அமைப்பின் கெடுதிகளையிட்டு எச்சரிக்கை செய்யும் அதே சமயம்- இதை அது "வளர்ச்சி முறையான கொள்ளை" என அழைக்கிறது- செல்வந்தர்களான அமெரிக்கர்கள் செலுத்திய உயர்மட்ட வரி வீதம் 90 வீதத்தில் இருந்து (ட்ரூமன், ஐசன்கோவர் காலம்) 70 வீதத்துக்கும் (கென்னடி, ஜோன்சன்) பின்னர் றீகன் ஆட்சியில் 36 வீத்ததுக்கும் வீழ்ச்சி கண்டது. கிளின்டனின் கீழ் பறிமுதல் மட்டம் எனக் கூறப்பட்ட 39.6 வீதமாக மீண்டும் அதிகரிப்பதற்கு முன்னர் இது இடம் பெற்றது. புஷ்சின் தொடர்பு சாதனங்களுக்கான பேட்டி நிகழ்ச்சி ஒரு இராட்சத 1600 டாலர் காசோலையின் (Cheque) எதிரில் இடம் பெற்றது. புதிய திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டுள்ள மூன்று புதிய குறைந்த பட்ச வரி வகையறாக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மூன்று மத்தியதர வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட "அமெரிக்க வரியிறுப்பாளர்களின்" எதிரில் இடம் பெற்றது. புஷ் இந்த குடும்பங்களை "மாதிரியான" வரியிறுப்பாளர்கள் என அறிமுகம் செய்ததை தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் வரி குறைப்பு சலுகையின் இராட்சத பங்கினை பிடுங்கிக் கொள்ளும் செல்வந்தர்களின் பிரதிநிதி இங்கு இல்லாது போனது ஏன் எனக் கேட்டார். புஷ் உள்ளூரச் சிரித்துக் கொண்டு வழக்கமான கள்ளப் புன்முறுவலோடு கூறியதாவது: "நீங்கள் என்ன கூறுகிறீர்கள். நான் அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். நான் ஒஸ்டினில் இருந்து வாஷிங்டனுக்கு வருவதற்காக ஒரு சிறிய சம்பள அதிகரிப்பை பெற்றேன். நான் உயர்ந்த அடைப்புக் குறிக்குள் இருப்பேன்." டெக்சாஸ் ஆளுனராக இருந்த போது 115,345 டாலர்களை வருடாந்தம் பெற்றுவந்த புஷ்சின் சம்பளம் ஜனாதிபதியினது 400,000 டாலர்களாக உயர்ந்தது. எண்ணெய்க் கைத்தொழில், பேஸ்போள் (Base Ball) முதலீடுகளில் இருந்து அவர் உயர் மட்ட ஆறு இலக்க வருமானத்தை சம்பாதிக்கிறார். அவரது சிடுமூஞ்சித்தனமான கருத்தில் எதிர்பார்த்திராத ஒரு உண்மை இருந்து கொண்டுள்ளது. தனது வேலைத்திட்டத்தின் ஒரு மையமாக செல்வந்தர்களின் வரிக் குறைப்பு திட்டத்தை முன்வைப்பதன் மூலம் புஷ் தான் பிரதிநிதித்துவம் செய்யும் சமூக நலன்களின்- கம்பனி, நிதித்துறை ஆளும் கும்பல்களதும் மத்தியதர வர்க்கத்தின் பெரிதும் வசதிவாய்ப்புகள் நிறைந்த தட்டுக்களதும் நலன்களை காட்டிக் கொண்டுள்ளார்.
Copyright
1998-2000 |