World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா:பிரித்தானியா

Blair-Bush meeting highlights growing rift between US and Europe

பிளேயர்-புஸ் சந்திப்பு அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அதிகரிக்கும் பிளவினை எடுத்துக் காட்டுகின்றது

By Julie Hyland
28 February 2001

Back to screen version

பிரித்தானிய பிரதமரான ரொனி பிளேயரே ஐனாதிபதி ஜோர்ஜ்.w.புஸ்ஸை சந்திக்கும் முதலாவது ஐரோப்பியத் தலைவராவார். இது சில வெளிநாட்டு, உள்நாட்டு புகழாரத்தை வழங்கும் என பிளேயர் எதிர்பார்த்ததிற்கு மாறாக கடந்தவார காம் டேவிட் கூட்டமானது சர்வதேச மூலோபாயம் தொடர்பான அவரது அரசாங்கத்தினுள் பெரிதாக வரும் இடைவெளியையே எடுத்துக்காட்டியது.

கனடாவில் உத்தியோக பூர்வமான ஒரு இடை நிறுத்தலுக்குப் பின்னர் இக்கூட்டமானது பிளேயரால் பாரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. குடியரசுக்கட்சியால் அமெரிக்கத் தேர்தல் கடந்த நவம்பரில் களவாடப்பட்ட பின்னர் தொழிற்கட்சியின் தலைவர் இப்புதிய நிர்வாகத்தின் தேவைகருதி தன்னை சாதகமானவராக காட்டிக் கொள்ளப் பார்க்கின்றார். தேர்தல் மோசடி தொடர்பாக அதிகரித்துவரும் ஆதாரங்களைத் தள்ளி வைத்துவிட்டு புஸ்ஸை முதலில் வாழ்த்தியதுடன், இரண்டு மாதமாக நேருக்கு நேரான சந்திப்பை தேடிய முதலாவது ஐரோப்பிய தலைவர் பிளேயராவார்.

பிளேயரின் ஆதரவாளர்களின்படி பிரதமமந்திரி - முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டனின் நெருங்கிய கூட்டாளி - நிர்வாகமானது மாறியுள்ள போதும் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான ''விஷேட உறவுகள்'' இறுக்கமாக இருப்பதாக நிரூபிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டனர். ''தத்துவார்த்த பிளவுகளை'' தவிர்த்துக் கொள்ளும் தனது தகமை குறித்து பிளேயர் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதுடன், அரசியல் கொள்கைகளில் தனது பற்றாக்குறை தொடர்பாகவும் அவர் பெரும் பூரிப்படைந்து கொள்கின்றார். அவர் நிறுவனங்களின் உடைமையாளர்களினதும் எதிர்க்கட்சியான கன்ஷவேட்டிவ் (Conservative) கட்சியினதும், தாராளவாத ஐனநாயகக் கட்சியினதும் ஆதரவைப் பெற்றுக்கொண்டு மூலதனத்தின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளின் கோரிக்கைகளை நடைமுறைப் படுத்தும் தொழிற்கட்சியின் முக்கிய நோக்கத்தில் கவனமெடுக்கக் கூடியதான தனது வளைந்து கொடுக்கும் தன்மையுடன் தன்னைப் புகழ்ந்து கொள்கின்றார்.

இன்னும் இரண்டு மாதத்தில் பொதுத்தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலைமையில், இரு தலைவர்களுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் அத்லாண்டிக்கு இடையிலான உறவுகளை பலவீனமாக்கிவிடும் என்ற கன்ஷவேட்டிவினரது குற்றச்சாட்டுக்களுக்கு புஸ் உடனான நட்புறவை உருவாக்கிக் கொள்வது இதற்குப் பதிலளிக்கும் என பிளேயர் நம்புகின்றார். ஈராக்குக்கு எதிரான பெப்ரவரி 16ம் திகதி ஆகாய தாக்குதலில் பங்குகொண்டதானது இப்படியான குற்றச்சாட்டுகளை ஓரளவாவது பொய் என நிரூபிக்கும் நோக்கத்திலானதாகும். ஜனாதிபதி புஸ் உடன் சபையில் காட்சியளித்த பிளேயர், எந்தவொரு முக்கிய சிக்கலான விடயங்களையும் தவிர்த்துக் கொண்டதுடன் தனது முறைப்படி, பிரித்தானியா அமெரிக்காவினது உறுதியானதும் கீழ்ப்படிவானதுமான கூட்டாகக் காட்ட முயன்றார்.

இதற்குப் பதிலாக புஸ் பிளேயரின் தற்பெருமையைப் புகழ்ந்தார். இது விசுவாசமான குட்டிநாய்க்கு எஜமான் வழங்கும் பரிசைப் போல் இருந்தது. கடந்த சனிக்கிழமை அவர்களது இணைந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் தொடர்பான பிரச்சனைக்குரிய கேள்விகள் பிளேயரிடம் கேட்கப்பட்டபோது அவருக்கு பதிலாக புஸ் முன்வந்து பதிலளித்தார். இரு தலைவர்களும் பொதுவாக பகிர்ந்து கொள்வது என்ன என கேட்கப்பட்டபோது புஸ் தானாக முன்வந்து இருவரும் ஒரே பற்பசையைப் பாவிப்பதாகவும், பிளேயர் சாதாரணமாக தாம் இருவரும் தமது மனைவிமாரையும் பிள்ளைகளையும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அவர்கள் தம்மால் இயன்றளவு முயற்சித்த போதும் நெருக்கடிகள் வெளிப்பட்டன. பத்திரிகையாளர் மகாநாட்டில் பிளேயர், பிரித்தானியா அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான ''பாலம்'' என குறிப்பிட்டார். இவ் ''விஷேட உறவு'' தனிநபர்களில் அல்லாது பொதுவான நலன்களில் தங்கியுள்ளது என வலியுறுத்தினார். இப்பதங்கள் புதியன அல்ல. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் குளிர்யுத்த காலத்தின் போது பிரித்தானியா ஐரோப்பாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாகக் காட்டிக்கொண்டது. இது அரசாட்சி, பொருளாதார, கைத்தொழில் வீழ்ச்சிக்கு மத்தியில் ஓரளவு தனது சுதந்திரத்தையும் சர்வதேச நிலைமையும் பாதுகாத்துக் கொள்ள பிரித்தானியாவிற்கு அவசியமாக இருந்தது. மேலும் ஐரோப்பாவில் தனது முக்கிய எதிராளிகளான ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் எதிராக அமெரிக்காவைப் பாவித்தது. இது பிரித்தானிய ஆளும் வர்க்கம் ஐரோப்பிய தனி நாணயம் தொடர்பான தனது உள்ளார்ந்த ஆழமான அரசியல் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள முடியாதுள்ள நிலைமையின் கீழ் தம்மை யூரோ முன்மொழியப்பட்டதில் இருந்து அதனுடன் இணைத்துக் கொள்ள மறுக்கின்ற இவ்வேளையில் இது மிக முக்கியமானது. ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு வர்த்தகக் கூட்டாக உருவாக்க பிரான்சும் ஜேர்மனியும் கடினமான முயற்சிகளை எடுக்கையில் இக்கண்டத்தின் அபிவிருத்திகளில் இருந்து ஓரங்கட்டப்படு வதுடன், அதிகரித்துவரும் அபாயத்தையும் பிரித்தானியா எதிர் நோக்குகின்றது.

அமெரிக்காவுடனான உறவு மூலம் முக்கியமாக இராணுவ ரீதியில் பிரித்தானியாவின் உலக சாயலையும் ஐரோப்பாவினுள் முக்கியமாக தேவையான இராணுவ பலத்தையும் வழங்கும் என பிளேயர் எதிர்பார்க்கின்றார். இது அமெரிக்காவிற்கு சாதகமானதாக இருக்கும். தனது விஜயத்தின் போது பிரித்தானியாவினது ''கருத்துக்களுக்கு செவிசாய்க்கப்பட்டு, ஐரோப்பாவில் ஆழுமை செலுத்தக் கூடியதாக'' இருப்பின் அது ஒரு சிறந்த கூட்டாளியாக இயங்கக் கூடியதாக இருக்கும் என பிளேயர் தெரிவித்தார். அவருடைய அரசாங்கத்தின் இன்னுமொரு கணிப்பீடு என்னவெனில், ஐரோப்பா தொடர்பான அணுகுமுறையில் தனது முயற்சிகள் மீது பிரித்தானியாவினுள் இருக்கும் முரண்பாடுகளை அமெரிக்காவுடனான தொடர்ச்சியான ஆதரவு இல்லாது செய்துவிடும் என்பதாகும்.

பிரச்சனை எவ்வாறிருந்த போதும் பிளேயரின் ''பால மூலோபாய'' முயற்சி மூலம் அவர் தாண்ட முயலும் பிளவு மேலும் அதிகரித்து வருகின்றது. கடந்த வருடங்களில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் வர்த்தக முரண்பாடுகளில் இருந்து ஈராக், பால்கன் உறவு சம்பந்தமான சர்வதேச கொள்கைகள் தொடர்பாகவும் முக்கிய விடயங்களில் முரண்பட்டுக் கொண்டன. புஸ்-பிளேயர் சந்திப்புக்கு முன் Washington Post பத்திரிகை பின்வரும் குறிப்பை எழுதியிருந்தது. ''அவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்த சோவியத் யூனியன் இல்லாது போனதால், அமெரிக்காவும் ஐரோப்பாவும் வர்த்தக, சுற்றுச்சூழல், சமூகக் கொள்கைகள் தொடர்பாக வேறுபட்ட பாதையை எடுக்கின்றன''.

புஸ் நிர்வாகம் ஏற்கனவே அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை அதன் கூட்டுக்களுடனான உடன்பாட்டினை பாதுகாக்கும் முயற்சியால் கட்டுப்படுத்தப்படாது அதிகரித்துவரும் மூர்க்கத்தன்மையை காட்டியுள்ளது. இந்த மாதம் ஈராக் மீது அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட ஆகாயத் தாக்குதல் சதாம் ஹூசெயினிலும் பார்க்க தன் மீதான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஐரோப்பாவிற்கான எச்சரிக்கையாகும். இது அமெரிக்க நலன்களை பாதுகாக்க தேவையானால் தனித்து நடவடிக்கை எடுக்கும் என்பதைக் காட்டியுள்ளது.

ஐரோப்பாவிற்கு எதிரான அதிகரித்துவரும் அமெரிக்க நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாடு ஆரம்பத்தில் புஸ் மெக்ஸிக்கோ, கனடிய உலகத் தலைவர்களை சந்தித்த பின்னர் மூன்றாவது இடமே பிளேயருக்கு கிடைத்ததன் மூலமும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவரின் விஜயமும் 24 மணித்தியாலத்துக்கு குறைவாக கட்டுப்படுத்தப் பட்டிருந்தது.

பிளேயர் ''உண்மையான தரகராக'' காட்ட முயல்கையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் தாமே எல்லாவற்றையும் கொண்டு நடத்துவதை தெளிவாகக் காட்டினர். BBC Radio Four இற்கு றீகனின் நிர்வாகத்தில் உதவி பாதுகாப்பு செயலாளராக இருந்த Richard Perle அமெரிக்காவிற்கு ஐரோப்பாவிற்கான ஒரு ''பாலம்'' தேவை என்ற கருத்தை ஏளனம் செய்தார். மறைமுகமாக பிரித்தானியாவை எச்சரித்த Richard Perle ''எமக்கு நண்பர்கள் தேவை, கூட்டுக்கள் தேவை, ஆனால் நாங்கள் பாலத்தை தேடவில்லை என்றார். தான் அமெரிக்காவை பிரதிநிதித்துவப் படுத்துவதாக பிரித்தானியா காட்ட முயலும் கருத்தானாது உண்மையில் போலியானதுடன் இது ஒரு முட்டாள்த்தனமான கருத்துமாகும் '' எனக் கூறினார்.

புஸ் நிர்வாகத்தின் உத்தியோக பூர்வமான பிரதிபலிப்பானது மிகவும் கவனத்துடன் இருந்தாலும் இதே கருத்தையே வலியுறுத்தியது. புஸ்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Condoleeza Rice

''ஜனாதிபதி பிரித்தானியப் பிரதமரை ஐரோப்பிய கூட்டாளிகளுடனான ஒருவகை இடைத் தரகராக நோக்குவார் என நான் நம்பவில்லை'' என தெரிவித்தார்.

தேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் [National Missile Defense system (NMD)] தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஒரு தரகராக பங்கு வகிக்கலாம் என பிளேயர் நம்புகின்றார். தேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டமானது ''அயோக்கிய அரசுகள்'' [வடகொரியா, ஈரான், ஈராக்] எனக் குறிப்பிடப்படும் நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அமெரிக்க மண்ணை வந்தடைய முன்னர் தாக்கி யழித்து அமெரிக்காவை பாதுகாப்பதற்கு என கூறப்படுகின்றது. இத்திட்டமானது ருஷ்யாவாலும் சீனாவாலும் 1972 Anti-Ballistic Missile (ABM) உடன்படிக்கையை உடைப்பதாகவும், புதிய சர்வதேச ரீதியான ஆயுதபோட்டி தொடர்பாக அச்சுறுத்தவதாகவும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. பல ஐரோப்பிய சக்திகள் மேலதிகமாக இது நேட்டோவின் ஐக்கியத்தை பாதிப்பதாக தெரிவித்துள்ளன.

தனது விஜயத்தின் முன்னர் அமெரிக்க சஞ்சிகையான Forbes இற்கு பிளேயர் வழங்கிய பேட்டியில் ''இது [தேசிய ஏவுகணை பாதுகாப்பு திட்டம்] நிச்சயமாக 'கவனத்துடன் கையாளவும்' என எல்லாப் பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ள ஒரு பெட்டி போன்றதாகும். இது மிகவும் நுணுக்கமான விடயமாகும். 'கவனத்துடன் கையாளவும் என வழங்கப்படுவதால் இந்த வகையில் அமெரிக்காவினது தேவைகளையும் ஏனைய மக்களின் கவனங்களையும் பூர்த்தி செய்கின்றது என்பதே எனது மதிப்பீடாகும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறையில் ஆயுத அதிகரிப்பு, ஆயுதக் குறைப்பு தொடர்பான விடயங்கள் மீதான விவாதத்தின் வார்த்தைப் பிரயோகங்களை பரவலாக்குவதன் மூலம் தேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்கு எதிரான ஐரோப்பாவின் எதிர்ப்பை மங்கச் செய்யலாம் அல்லது திசை திருப்பலாம் என பிளேயர் நம்புகின்றார். அத்துடன் அவர் தேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் பிரித்தானியாவிலுள்ள பல அமெரிக்கத் தளங்களில் இயங்கத் தொடங்கியதும், அதன் பலமற்ற தன்மை தனக்கு வலிமையை கொடுக்கும் எனவும் இதனைக் காட்டி புஸ்ஸினை சமாதானமான நிலைப்பாடு எடுக்க ஊக்குவிக்கலாம் எனவும் நம்புகின்றார். ஆனால் வாஷிங்டன் சர்வதேச ரீதியான எதிர்ப்பை கவனத்தில் எடுக்காது தேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதாக தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவை விட்டு பிளேயர் புறப்பட்ட பின்னர் சனிக்கிழமை புஸ்ஸின் பேச்சாளரான Ari Fleischer அமெரிக்காவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையே நடந்த ''பேச்சுவார்த்தை போக்கு'' தொடர்பான மரியாதையீனத்தை வெளிக்காட்டியதுடன் ஏவுகணை பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா சமாதானத்திற்கு செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய அதிரடிப்படையை உருவாக்குவது தொடர்பான முன்மொழிவிலும் இதேமாதிரியான பிரச்சனைக்குரிய நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது. ஐரோப்பிய இராணுவம் உருவாக்குவதற்கு முக்கிய குடியரசுக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், இது அமெரிக்க தலைமையிலான நேட்டோவின் ஆழுமைக்கு ஒரு எதிர்ப்பாக நோக்குகின்றனர். அமெரிக்கா நேட்டோ அங்கத்துவ நாடுகளான துருக்கி போன்றவற்றை ஐரோப்பிய அதிரடிப் படையின் சுயாதீனத்தை இல்லாது செய்ய அதன் இராணுவ திட்டமிடலில் இணைத்து உறுதிப்படுத்துமாறு கேட்கையில் ஐரோப்பிய ஒன்றியம் அதனை மறுத்துள்ளது.

இப்புதிய படையானது அமெரிக்காவின் இராணுவ மேலாதிகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை குடியரசுக்கட்சியினருக்கு உறுதிப்படுத்த பிளேயர் மிகவும் கஸ்டப்பட வேண்டியிருந்தது. அவர் ஐரோப்பிய அதிரடிப்படை நேட்டோவின் முடிச்சில் ஒரு ''மேலதிக கயிறாகும்'' என ஜனாதிபதிக்கு உத்தரவாதமளித்தார்.

எவ்வாறாறிருந்த போதும் இது உண்மையல்ல. முக்கியமாக பிரான்ஸ் இப்புதிய 60.000 பேரைக்கொண்ட படை மீது ஐரோப்பிய ஒன்றியம் சுயாதீன கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அறிக்கைகளின் படி கடந்த வருடம் ஐரோப்பிய அதிரடிப் படைக்கான கட்டமைப்பு வரையப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் Nice உடன்படிக்கையின் பல பின்னிணைப்புகள் ''ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவெடுக்கும் சுயாதீனத்திற்கு நேட்டோ முழுமதிப்பளிக்க வேண்டும்'' எனவும் ''அதன் நடவடிக்கையின் போது கட்டளையிடும் முழுத் தன்மையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழும் மூலோபாய நோக்கத்திற்கும் கீழ் இருக்கவேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அது ''ஐரோப்பிய ஒன்றியத்திகும் நேட்டோவிற்குமான உறவு ஒவ்வொரு அமைப்பும் மற்றதை சமமான உறவுகளைக் கொண்டுள்ள முறையில் அணுகுவதை பிரதிபலிக்கும்'' எனவும் குறிப்பிட்டுள்ளது.

பிளேயர் புஸ்ஸிற்கு இந்த புதிய படையில் பிரித்தானியாவின் அங்கத்துவமானது அதனை பிரான்ஸின் நோக்கத்திற்கு ஏற்றவாறு அபிவிருத்தியடைவதை தடைசெய்யவே என உறுதிப்படுத்துகின்றார். அநேகமாக அதியுயர் நிர்வாகத்தினராலும், பென்டகனாலும் தயாரிப்பு செய்யப்பட்ட புஸ்ஸினது பதிலானது அமெரிக்கா எந்தவொன்றையும் ஏற்றுக் கொள்ளாது என்பதாகும். அவர் ''பிளேயர் எனக்கு ஐரோப்பிய பாதுகாப்பு நேட்டோவினை பலவீனப்படுத்துவதாக இருக்காது என உறுதியளித்துள்ளதுடன், நேட்டோவினுள் திட்டமிடல் நிகழக்கூடியதான கூட்டுக் கட்டளையகம் ஒன்று இருக்குமெனவும், நேட்டோ முழுவதாக நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கவும், இது ஒவ்வொரு நாடும் தம் விருப்பத்தின்படி இயங்குவதை கட்டுப்படுத்தும் எனவும் உறுதியளித்துள்ளதாக'' குறிப்பிட்டுள்ளார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் ஐரோப்பிய பாதுகாப்புப் படை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் அடிபணிந்து இருக்குமானால் மட்டுமே அமெரிக்க நிர்வாகம் அதனை ஏற்றுக்கொள்ளும்.

பிளேயரின் அணுகு முறையானது சகல திசைகளிலுமிருந்து கண்டனத்தை பெற்றுள்ளது. பிரித்தானிய கன்ஷவேட்டிவ் எதிர்க்கட்சி பிளேயர் அமெரிக்காவை தவறாக வழியில் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. ஐரோப்பிய அரசியல்வாதிகள் தம் சார்பில் பேசியதற்காக கேள்வி எழுப்பியுள்ளனர். பிளேயரின் கனடிய பாராளுமன்ற உரையில் ''இரண்டு உலகத்தினதும் சிறப்பானதை'' பிரித்தானியா வைத்திருக்கலாம் என்பதை உதாரணம் காட்டி ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான வெளிவிவகாரக் குழுவின் தலைவரான ஜேர்மனியின் Elmer Brock இது சாத்தியமற்றது எனவும் ''மறுபக்கத்தில் இருந்து மரியாதையை பெறுவதற்கு நீங்கள் ஒரு முகாமின் அங்கத்தவராக இருக்கவேண்டும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் அரசியல், பொருளாதார, இராணுவ விடயங்கள் முகாம்கள் என்ற வார்த்தைப் பிரயோகங்களுடன் கலந்துரையாடப்படுவது இரண்டு பக்கத்திற்கும் இடையிலான உறவுகளின் கசப்பான தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இரண்டு கண்டங்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப்போகும் நிலைமையின் கீழ் Financial Times பத்திரிகை ''அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாரம்பரிய பங்கை பிரித்தானியா தொடர்ந்தும் வகிக்க முயல்வது அதிகரித்துவரும் வகையில் நம்பிக்கை அற்றதாகின்றது எனக் குறிப்பிடுகின்றது. கிளின்டனின் முக்கிய அதிகாரி ஒருவர் ''பிளேயர் தங்கியிருக்கும் அடித்தளம் நாளாந்தம் மிகவும் குறுகிக் குறுகி வருகின்றது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved