WSWS :செய்திகள்
& ஆய்வுகள்:ஆசியா:
இலங்கை
Detained for over two years
Sri Lankan SEP renews its call for the release of the
Hatton six
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அட்டன் கைதிகளை
விடுதலை செய்யும்படி மீண்டும் கோருகிறது
By the Socialist Equality Party
16 January 2001
Use
this version to print
இரண்டரை வருடங்களாகச் சிறையில் தள்ளப்பட்டுள்ள
ஆறு தோட்டப்புற தமிழ் இளைஞர்கள் ஐந்து மாத காலத்தின்
பின்னர் ஜனவரி 26ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
இவர்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்கள்
எனவும் ஒரு தொகை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள்
எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் குற்றவாளிகளாகக்
காணப்படுமிடத்து 20 வருட கால சிறைத் தண்டனையை எதிர்கொள்ள
நேரிடும்.
இந்த அறுவரின் பெயர்களும் வருமாறு: சுப்பு
உதயகுமார், பிச்சமுத்து சந்திரன், அருணாசலம் யோகேஸ்வரன்,
சோலமலை லோகநாதன், பொன்னையா சரவணகுமார்,
சாமிமுத்து பெனடிக்ட். இவர்கள் சகலரும் அட்டனுக்கு அருகில்
வாழ்ந்தவர்கள். சுப்பு உதயகுமார் இலங்கை சோசலிச சமத்துவக்
கட்சியின் ஆதரவாளர். அத்தோடு 1997ல் இடம்பெற்ற உள்ளூராட்சி
சபை தேர்தலில் அம்பகமுவை பிரதேச சபைக்கு சோ.ச.க.
வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டவர்.
பொலிசார் இவர்களை முதலில் 1998 ஜூனில்
கைது செய்தனர். அட்டனுக்குச் சமீபமாக உள்ள ஷெனொன் தேயிலை
பக்டரியில் மே 31ம் திகதி இரவு இடம்பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலின்
பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை தடுப்புக்
காவலில் வைத்துக் கொண்டு அதிகாரிகள் இவர்களுக்கு எதிராக
ஒரு தொகை மேலதிகக் குற்றச்சாட்டுக்களை சுமத்த தீர்மானம்
செய்தனர். இதில் ஐந்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் தாங்கி
மீதான ஆறு தனித்தனி குண்டுவீச்சுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
இலங்கையின் படுகேவலமான பாதுகாப்பு விதிகளின் கீழ் இவர்களை
ஒரு ஆண்டுக்கும் மேலாக தடுத்து வைத்ததன் பின்னர், தேயிலை
பக்டரி மீது குண்டு வீச்சு நடாத்தியதாகக் கூறும் ஆரம்பக் குற்றச்சாட்டு
எந்தவிதமான விளக்கமும் இல்லாமல் கைநழுவிப் போயிற்று.
இந்த இளைஞர்களுக்கு எதிரான வழக்கு ஒரு அப்பட்டமான
பொய்வழக்கு. ஒரே சாட்சியமாக உள்ள ஒப்புதல் வாக்குமூலம்
பொலிசாரால் கறக்கப்பட்டது. கைது செய்யப்பட்டதன்
பின்னர் இவர்கள் முதலில் கண்டி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகினர். பின்னர் இவர்கள் மேல்
விசாரணைக்காக கொழும்பில் உள்ள விசேட விசாரணை பிரிவிடம் (Special
Investigation Division- SID) ஒப்படைக்கப்பட்டனர். இந்த
எஸ்.ஐ.டி. பொலிஸ் பிரிவு, நாசகார வழக்குகள் எனப்படுவதில்
நிபுணத்துவம் பெற்றது.
கொழும்பிலும் கண்டியிலும் இடம்பெற்ற சித்திரவதை
முறைகளில் படுக்க வைத்து முதுகு, கால், குதிக்காலில் தாக்குவதும்
அடங்கியிருந்தது. பொலித்தீன் பைகளில் பெற்றோலை நிரப்பி தலையில்
வார்ப்பது, ஆணுறுப்பை மேசை லாச்சிக்குள் புகுத்தி நெரிப்பது,
ஒரு தருணத்தில் பல நாட்களுக்கு உணவு, தண்ணீர் கொடுப்பதை
நிறுத்துவது என்பவை இதில் அடங்கும். இந்த அறுவரும் தம்மைச்
சித்திரவதை செய்வதில் ஈடுபட்ட உதவி பொலிஸ் சுப்பிரின்டன் தரம்
தொடக்கம் எஸ்.ஐ.டி.யின் 12 அங்கத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.
இதன் விளைவாக இவர்கள் இன்னமும் பல நோய்களுக்கு
ஆட்பட்டுள்ளனர். காது கேட்காது. சுவாசிப்பது கஷ்டம். தலைவலி.
உணர்ச்சியற்றுப் போன கைவிரல்கள் போன்று பல சங்கடங்கள்.
சுப்பு உதயகுமார் கடுமையாக சுகவீனம் கண்டு 1998 ஜூலையில்
ஐந்து நாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்
எஸ்.ஐ.டி. பாதுகாப்பில் இருந்த சமயம் இது இடம்பெற்றது. சுப்பு
உதயகுமாரை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி (JMO)
அவர் ஒரு கிளினிக்குக்கு முறையாக வந்த போக வேண்டும் எனவும்
வைத்திய சிகிச்சைக்கு உள்ளாக வேண்டும் எனவும் சிபார்சு செய்தார்.
ஆனால் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அப்படிச் செய்ய அனுமதிக்கவில்லை.
குறுக்கு விசாரணை இடம்பெற்ற போது இந்த
அறுவரும் சிங்களத்தில் எழுதப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களில்
கையெழுத்திட்டனர். சிங்களத்தை இவர்களில் எவராலும் வாசிக்கவோ
அல்லது எழுதவோ முடியாது. இவர்கள் இவை நீதிமன்றத்தில் சாட்சி
பத்திரங்களாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இதன் உள்ளடக்கத்தை
தமது வழக்கறிஞரின் உதவியோடு தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த
அறுவரும் பலவந்தமாக பெறப்பட்ட இந்த ஒப்புதல் வாக்குமூலங்களை
நிராகரித்ததோடு தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தனர்.
இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்
கீழ் (PTA) நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல்
13 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த பயங்கரவாத
தடைச் சட்டம் இலங்கையின் சட்ட அமைப்பினை தாண்டிச் செல்வதோடு,
பாதுகாப்பு படையினர் விடுதலைப் புலி சந்தேகநபர்கள் எனப்படுபவர்களை
தன்னிச்சையாக தடுத்து வைக்கும் சிறப்பு அதிகாரங்களை வழங்குகின்றது.
இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட முடியும். இச்
சட்டம் சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல்
வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியாக பயன்படுத்தவும்
இடமளிக்கிறது. இச்சரத்து பொலிசாருக்கு பொலிஸ் சித்திரவதைக்கான
பூரண அதிகாரங்களையும் வழங்குகின்றது.
இந்த அட்டன் இளைஞர்கள் அறுவரும் சோசலிச
சமத்துவக் கட்சி நடாத்திய ஒரு பகிரங்க பிரச்சார இயக்கத்தின்
பெறுபேறாக 1999ம் ஆண்டு யூலை 8ல் இறுதியாக நீதிமன்றம்
கொணரப்பட்டனர். சகலரும் சுற்றவாளிகள் எனத் தெரிவித்தனர்.
அன்று தொடக்கம் இந்த வழக்கு மூன்று வெவ்வேறு தருணங்களில்
ஒத்திவைக்கப்பட்டது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நொண்டிச்
சாட்டின் பேரில் இது செய்யப்பட்டது. பிரதம பொலிஸ் வழக்கு
தொடுநர் வருகைதராமை, வழக்கு விசாரணை நீதியரசர் இல்லாமை,
வழக்கு விசாரணைக்கு கால அவகாசம் இல்லாமை என்பன இச்சாட்டுக்களுக்குள்
சிலவாகும்.
1994ல் பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு
வந்ததன் பின்னர் "தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களாக"
கைது செய்யப்பட்ட 23 தோட்டப்புற இளைஞர்களுள் இந்த 6
கைதிகளும் அடங்குவர். இவர்கள் மின்சார நிலையங்களை சிதறடித்ததாயும்
தோட்ட முகாமையாளரின் இல்லத்தை சூறையாடியதாயும் குற்றம்
சாட்டப்பட்டது. உதயகுமாரும் லோகநாதனும் வழக்கு விசாரணை
இல்லாமல் இரு வருடகாலம் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததோடு,
இறுதியில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் காரணமாக
நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.
ஏனையோர் பொய்க் குற்றச்சாட்டுக்களை
பொலிசாரதும், அரசால் நியமனம் செய்யப்பட்ட சட்டத்தரணிகளதும்
பலாத்காரம் காரணமாக ஒப்புக் கொண்டு, அதன் பேரில்
விடுதலை செய்யப்பட்டனர். குற்றப்பணமும் விதிக்கப்பட்டது. இத்தகைய
சம்பவங்கள் சர்வ சாதாரணமாகியுள்ளதோடு, பல்லாயிரக்
கணக்கான ரூபாய்கள் அடிக்கடி பொலிஸ் அதிகாரிகளின் பொக்கட்டுகளை
நிறைக்கும் விவகாரமாகவும் மாறியுள்ளது. ஆனால் ஒரு முறை
"நாசகர வேலை" குற்றவாளியாக ஒப்புக் கொண்டதும்
பின்னர் அவர் திரும்பவும் இலகுவில் கைதாவதற்கு இரையாகின்றார்.
பொலிசார் இதனை இலகுவில் பண வாய்ப்புக்களை மேலும் தட்டிக்
கொள்ளலாம் எனக் கணக்குப் போட்டு செய்கின்றார்கள் அல்லது
அவர்கள் பதவி உயர்வுகளுக்கான புள்ளிகளை கூட்டும் விதத்தில்
"பயங்கரவாதிகளை" தடுப்புக் காவலில் வைக்கச் செய்கின்றார்கள்.
அடக்குமுறைகளுக்கான சூழ்நிலை
வழக்கு விசாரணை இல்லாமல் தமிழர்களை தடுப்புக்
காவலில் வைப்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நீண்டுவரும்
உள்நாட்டு யுத்தத்தின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர்
நடாத்தும் இனவாத ஆத்த்திரமூட்டல் நடவடிக்கை நிலைமைகளின்
ஒரு பாகமாகும். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரின்
பொதுஜன முன்னணி அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை
நடாத்தவும் மோதுதல்களை முடிவுக்கு கொணரவும் வாக்குறுதி
அளித்தது. ஆனால் அதற்குப் பதிலாக 'சமாதானத்துக்கான யுத்தம்"
இராணுவ அதிரடித் தாக்குதல்களை படு மோசமாக்கியது. இந்த
யுத்தம் 1948ல் நாடு சுதந்திரம் கண்டதில் இருந்து கொழும்பில்
ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு
எதிராக நடாத்திய முறைமுறையான பாகுபாடு, துன்புறுத்தல்,
வன்முறைகளின் பெறுபேறாக ஏற்பட்டது.
பெரும் அரசியல் கட்சிகளின் கையிருப்பான தமிழர்
எதிர்ப்பு சோவினிசம், ஜே.வி.பி., சிங்கள உறுமயகட்சி (SUP)
போன்ற தீவிர வலதுசாரி, பாசிச கட்சிகளின் வளர்ச்சிக்கு இட்டுச்
சென்றது. இவை யுத்தத்தை உக்கிரமாக்கும்படி கோருகின்றன.
எந்த ஒரு சமாதான பேச்சுவார்த்தைகளையும் அடியோடு
எதிர்க்கின்றன. "சிங்கள மக்களை காக்கும்" பேரில் இந்த
அமைப்புகள் பாதுகாப்புப் படையினருடன் நெருக்கமாகச் சேர்ந்து
தொழிற்படுகின்றன. அடிக்கடி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில்
ஈடுபடுகின்றன.
நாடு பூராவும் பொலிசும் இராணுவமும்
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சோதனைச் சாவடிகளை
கொண்டுள்ளன. தேசிய அடையாள அட்டைகளும் வேறு பல
ஆவணங்களும் தடவித் தேடப்படுகின்றன. இவை ஜனநாயக விரோத
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றன. வடக்கு-
கிழக்கில் உள்ள பிராந்தியங்களிலும் பெருந்தோட்டத் துறையிலும்
வாழும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் மாதங்கள், வருடங்களாக
வழக்கு விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்புக் காவல் கைதிகள் "விசாரணை செய் அல்லது விடுதலை
செய்" எனக் கோரி பல ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர்.
இவை அடக்குமுறைகளுக்கு இலக்காகுவது வழக்கமாகிவிட்டது.
அக்டோபர் 25ம் திகதி சிங்கள பினவாதக் கும்பல்
பாதுகாப்புப் படைகளின் ஆதரவோடு பிந்துனுவெவவில் உள்ள தடுப்புக்
காவல் முகாமை ஆக்கிரமித்து, 29 தமிழ் தடுப்புக் காவல் கைதிகளை
வெட்டியும் கொத்தியும் தீமூட்டியும் கொன்றது. இவர்கள் தமது
வாழ்க்கை நிலைமையையிட்டும் வழக்கு விசாரணை இல்லாத நீண்ட
கால சிறைவாசம் பற்றியும் முறைப்பட்டு வந்தனர். இங்கிருந்த
பொலிசார் நிலையத்தினுள் குண்டர்கள் ஆக்கிரமிப்பதை தடுக்க
தவறியதோடு இவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற கைதிகள் மீது
துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அரசாங்கமும் தொடர்புச்
சாதனங்களும் படுகேவலமான விதத்தில் இதன் பின்னணியில் விடுதலைப்
புலிகளின் கரங்கள் மறைந்து கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியது.
அதுவே இத்தாக்குதலை வேண்டுமென்று தூண்டிவிட்டதாக கூறியது.
பிந்துனுவெவ படுகொலைகள் பெருந்தோட்டத்துறை
தொழிலாளர்களதும் அத்தோடு நாட்டின் வடக்கு கிழக்கில்
வாழும் தமிழ் மக்களதும் பரந்த அளவிலான எதிர்ப்பைத் தூண்டிவிட்டது.
இதை நசுக்கும் பொருட்டு பொலிசார் நடாத்திய தாக்குதல்களில்
6 பேர் கொல்லப்பட்டதோடு பலர் கைது செய்யப்பட்டனர்.
வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களின் பின்னர் அரசாங்கம் மத்திய
மலைநாட்டில் ஒரு தொகை இராணுவ முகாம்களை அமைத்து
வருகின்றது. அத்தோடு விசேட அடையாள அட்டைகளையும் வேறு
பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்துவதிலும் அரசாங்கம்
ஈடுபட்டுள்ளது. இவை நாட்டின் யுத்தப் பிராந்தியங்களுடன் இரத்த
உறவு கொண்ட நடவடிக்கைகளாகும்.
தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு
பிரித்தானிய காலனித்துவவாதிகளால் தருவிக்கப்பட்டவர்கள். இவர்கள்
இந்நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட
தட்டினரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கள இனவாதிகளின்
ஒரு முக்கிய இலக்காக விளங்குகின்றனர். சுதந்திரத்தின் சிறிது காலத்தின்
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் குடியுரிமைச் சட்டத்தை
இயற்றியது. இது பல இலட்சம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களை
நாடற்றவர்களாக்கியது. 1964ல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP)
-இன்றைய பொதுஜன முன்னணியில் முக்கிய கட்சி- இந்திய
அரசாங்கத்துடன் சேர்ந்து 525,000 தோட்டத் தொழிலாளர்களை
இந்தியாவுக்கு நாடுகடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளாக பொதுஜன முன்னணி
அரசாங்கம் தேயிலை, இறப்பர் தோட்டங்களை தனியார்மயமாக்கும்
நடவடிக்கைகளை விரைவுபடுத்தியது. இது சம்பளம், வேலை
நிலைமைகள், வேலையின்மையை மேலும் மோசமடையச் செய்தது.
குறிப்பாக இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் வளர்ச்சி
கண்டது. பெருந்தோட்டப் பண்டங்களின் விலைகள் மோசமாக
வீழ்ச்சி கண்டதால் தோட்டக் கம்பனிகள் சம்பளக் குறைப்பையும்
உற்பத்தி அதிகரிப்பையும் வேண்டின. இது மறுபுறத்தில் ஒரு
தொகை பெரும் வேலைநிறுத்தங்களைத் தூண்டிவிட்டது.
தோட்டத் துறையில் அடக்குமுறைகளை மேலும்
உக்கிரமாக்கும் பொருட்டு அரசாங்கமும் தொடர்புச் சாதனங்களும்
"விடுதலைப் புலிகளின் ஊடுருவல்" பற்றிய பிரச்சாரங்களில்
ஈடுபட்டுள்ளன. அட்டன் அறுவரின் விடயத்தை இவர்கள் மத்திய மலைநாட்டில்
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்
கொண்டுள்ளார்கள் என்பதற்கான "அத்தாட்சி" என கூறிக்
கொண்டனர். சிங்கள தினசரியான 'லங்காதீப' வில் கடந்த ஆண்டு
ஒரு நீண்ட கட்டுரை இதைப்பற்றி வெளியாகி இருந்தது. அது பொலிசார்
வழங்கிய தகவல்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருக்க
வேண்டும்.
ஜனநாயக உரிமைகளுக்கும் வாழ்க்கைத் தரத்துக்கும்
எதிரான தாக்குதல்களை எதிர்த்து பாரம்பரிய அரசியல் கட்சிகளும்
சரி தொழிற்சங்கங்களும் சரி தமிழ் தோட்டத் தொழிலாளர்களைக்
காக்க முன் வந்தது கிடையாது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும்
(ஒரு ஆண்டுக்கு முன்னர்) மலைய மக்கள் முன்னணியும் ஆளும்
பொதுஜன முன்னணியின் பங்காளிகள். இது தோட்டத் தனியார்மயத்தை
அமுல் செய்ததோடு சம்பளத்தையும் வாழ்க்கைத் தரத்தையும்
வெட்டிச் சரித்தது. பிந்துனுவெவ படுகொலைகள், அதன் பின்னரான
ஆர்ப்பாட்டங்கள் பேரிலான இ.தொ.கா.வினதும் மலைய மக்கள்
முன்னணியினதும் (UPF) நிலைப்பாடு
அரசாங்கத்துடனும் பொலிசாருடனும் மேலும் மேலும் நெருக்கமாகச்
செயற்படுவதாகவே விளங்கியது. இந்த அமைப்புகள் எதுவுமே இந்த
6 அட்டன் கைதிகளின் பேரில் உதவ முன்வந்தது கிடையாது.
வழக்கு விசாரணை இல்லாமல் இந்த அறு அட்டன்
கைதிகளும் தொடர்ந்து சிறையில் தள்ளப்பட்டுக் கிடப்பது, அடிப்படை
ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒரு அட்டூழியம் என சோசலிச
சமத்துவக் கட்சி (SEP) வலியுறுத்துகின்றது.
வன்முறை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களும் எதுவித
விளக்கமும் இல்லாமல் குற்றப்பத்திரத்தில் செய்யப்பட்ட திருத்தங்களும்
சாட்சியங்கள் இல்லாமையும் இது இவர்கள் பதிலளிக்க வேண்டிய
ஒரு வழக்கே இல்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றது. இவர்கள்
அப்பாவிகள். இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
1998ல் எவர்தான் குண்டுவீச்சை நடாத்தி இருந்தாலும்
முதலும் முக்கியமுமாக அதற்கான பொறுப்பு பொதுஜன முன்னணி
அரசாங்கத்தையும் அதன் முன்னோடிகளையுமே சார்ந்தது. தமிழ்
சிறுபான்மையினரின் நிலைமைகளை மோசமடையச் செய்தவர்கள்
இவர்களே. இரண்டாவதாக இதற்கான பொறுப்பு தமிழீழ விடுதலைப்
புலிகள் (LTTE) அமைப்பைச் சேர்ந்தது.
சில தருணங்களில் சாதாரண சிங்கள தொழிலாளர்களையும் கிராமவாசிகளையும்
இலக்காகக் கொண்ட பிற்போக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை
போராட்டத்தின் நியாயமான வழிமுறைகளாக ஊக்குவிப்பவர்கள்
இவர்களே.
வீரம் செறிந்த பல நூற்றுக் கணக்கான தமிழ்
இளைஞர்களின் உயிர்களை வீணாக விரயம் செய்த பயங்கரவாத
தாக்குதல்களதும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களதும்
ஒரே பெறுபேறு, சிங்கள-தமிழ் வெகுஜனங்களிடையே பிளவுகளை
கொழுந்து விட்டு எரியச் செய்ததும், இலங்கை அரசாங்கமும்
அரசும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளை
உக்கிரமாக்குவதை சாத்தியமானதாக்கியதுமேயாகும். ஒவ்வொரு
பயங்கரவாத நடவடிக்கையும் தமிழ் மக்களுக்கு எதிரான கூட்டு
தண்டனையை- அப்பாவி தமிழ் தொழிலாளர், இளைஞர்களுக்கு
எதிரான கைதுகள், தடுப்புக் காவல்கள், சித்திரவதைகளை முற்றிலும்
நியாயப்படுத்தும் சாதனமாக்கிக் கொள்ளப்பட்டது.
ஆறு தோட்டப்புற இளைஞர்களையும் நிபந்தனையின்றி
உடன் விடுதலை செய்யும்படி சோசலிச சமத்துவக் கட்சி மீண்டும்
வலியுறுத்துகின்றது. நாம் அனைத்துலகிலும் இலங்கையிலும் உள்ள
சகல தொழிலாளர்களையும் புத்திஜீவிகளையும் இளைஞர்களையும்
இந்த அட்டன் இளைஞர்களையும் காக்க கிளர்ந்து எழும்படியும்
இலங்கை அரசாங்கத்துக்கு ஆட்சேபக் கடிதங்களை அனுப்பும்படியும்
வேண்டுகின்றோம். நாம் சிறப்பாக சிங்களத் தொழிலாளர்களையும்
ஒடுக்கப்பட்ட மக்களையும் அரசாங்கத்தினதும் தொடர்பு
சாதனங்களதும் இனவாத பிரச்சாரத்தை நிராகரிக்கும்படியும்
தமிழ் சகோதரர்களின் உதவிக்கு முன்வரும்படியும் வேண்டுகின்றோம்.
இந்த ஆறு தோட்டப்புற இளைஞர்களும் விடுதலை செய்யப்பட
வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள மக்களின்
உயிர்களைப் பலி கொண்டுள்ள இனவாத யுத்தத்துக்கு முடிவு கட்டும்
ஒரு பரந்த போராட்டத்தில் சிங்கள, தமிழ் தொழிலாளர்களை
ஐக்கியப்படுத்துவதற்கான அவசிய அடிப்படையாக தமிழ் மக்களின்
ஜனநாயக உரிமைகளைக் காப்பது விளங்க வேண்டும்.
ஆட்சேப கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Attorney
General
Attorney General's Department
Colombo 12
Sri Lanka
Fax:
0094-1-436421
Please refer to
case numbers:
NJ 1290/99, NJ 1291/ 99, 1292/ 99 and NJ 1295/99/
Please send copies to:
Socialist
Equality Party
No 90
1st Maligakanda Lane
Colombo 10
Sri Lanka
World Socialist
Web Site
e-mail: editor@wsws.org
|