World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Lessons from history: the 2000 elections and the new "irrepressible conflict"

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருக்கடியின் அரசியல் சிறப்பு முக்கியத்துவமும் வரலாற்று தாக்கங்களும்

By David North
11 December 2000

Back to screen version

இந்த விரிவுரை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தினால் டிசம்பர் 3ல் அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகும். இந்த விரிவுரை தமிழில் மூன்று பகுதிகளாக பிரசுரிக்கப்படும்.

பகுதி-1

நீங்கள் அறிந்தது போல் இக்கூட்டத்தின் ஆரம்பத் திட்டம் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாக இருந்தது. இந்த விடயத்தை மாற்றுவது என்ற தீர்மானம் இலகுவானதாக இருக்கவில்லை. நான் இந்தச் சந்தர்ப்பத்தை ட்ரொட்ஸ்கியின் கோட்பாடு, அரசியல் பாரம்பரியங்களின் சிறப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு மட்டுமல்லாது வரலாறு ட்ரொட்ஸ்கியை இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத் தலைவர், சிந்தனையாளர் எனவும் இறுதியில் தேர்ந்தெடுக்கும் எனவும் விவாதிக்க இருந்தேன்.

தலைப்பு மாற்றம் எந்த விதத்திலும் எமது இயக்கத்தின் வரலாற்று அடிப்படைகள் மீது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தும் அம்சங்களை குறைத்துவிடும் நோக்கில் அல்லாது எல்லாவற்றுக்கும் மேலாக தனது கடைசி மாதத்தை இப்போது பூர்த்தி செய்து கொண்டுள்ள நூற்றாண்டின் மாபெரும் மூலோபாய படிப்பினைகளைத் தெளிவுபடுத்துவதற்கும் அதனுள் இடம்பெற்று வருகின்றதும் உக்கிரம் கண்டு வருகின்றதுமான போராட்டத்தின் அத்தியாவசியமான சிறப்பு முக்கியத்துவத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையைப் பற்றியும் பாரம்பரியங்களைப் பற்றியும் நான் கூற நினைத்தவை ஒத்தி வைக்கப்பட முடியும். அமெரிக்காவில் இன்று இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் அந்தளவுக்கு பிரமாண்டமான அனைத்துலக அரசியல் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. எமது கருத்தின்படி நவம்பர் 7, 2000 தேர்தலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அந்த நெருக்கடியைப் பற்றி கலந்துரையாட இக்கூட்டம் வழங்கியுள்ள வாய்ப்பை நழுவ விடுவது ஒரு பாரதூரமான தவறாகும். இதை ட்ரொட்ஸ்கி கூட அங்கீகரித்திருப்பார் என நான் எண்ணுகின்றேன். அவரது ஆக்கங்களின் முக்கிய பண்பு என்னவெனில், உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் பெரிதும் முன்னேறிய வெளிப்பாட்டையும், அது காட்டிக்கொண்டுள்ள நிகழ்வுகளையிட்டும் மார்க்சிஸ்டுகளதும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ரீதியில் முன்னேற்றமான பகுதியினரதும் கவனத்தை ஈர்க்கச் செய்வதாக விளங்கியது.

1931 நவம்பரில் ட்ரொட்ஸ்கி ஜேர்மனி சம்பவங்களை தெளிவுபடுத்தினார். அங்கு தொழிலாள வர்க்கத்திற்கும் முன்னேறி வந்து கொண்டிருந்த பாசிச சக்திகளுக்கும் இடையேயான போராட்டம் (The key to the International Situation) "அனைத்துலக நிலைமைக்கான திறவுகோல்" ஆக உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி இது தொடர்பாக எழுதியதாவது: "ஜேர்மன் நெருக்கடிக்கான தீர்வு அபிவிருத்தி காணப்போகும் திசை ஜேர்மனிக்கு மட்டுமன்றி ஐரோப்பாவினதும் முழு உலகினதும் தலைவிதியை இன்னும் பல வருடங்களுக்கும் தீர்மானிப்பதாக விளங்கும்".

1931ல் ஜேர்மனியில் நிலவிய நிலைமைகளுக்கும் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கும் நிலைமைகளுக்கும் எந்த ஒரு ஒற்றுமையை குறைந்த அளவிலாவது ஒப்பிட்டுக்காட்டுவது அமெரிக்க நெருக்கடியின் பரந்த சிறப்பு முக்கியத்துவத்தை அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவினுள் அறிமுகம் செய்வதற்கு அவசியமாகியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாட்டையும் பலத்தையும் பற்றிய மாபெரும் நப்பாசைகள் நிலவும் நாடு அமெரிக்காவை விட உலகில் வேறு எங்கும் கிடையாது.

இந்த அமைப்பின் ஸ்திரப்பாட்டையிட்டு அமெரிக்காவினுள் இருந்து வரும் நப்பாசைகள் உலகம் பூராவும் பிரதிபலிக்கின்றது. சந்தைச் சக்தியினதும் மூலதனச் சக்தியினதும் ஒரு மாபெரும் சக்திக்கு உதாரணமாக வேறு எந்த ஒரு நாடும் விளங்கவில்லை. அத்தோடு இது இன்னும் பல இலட்சோப இலட்சம் மக்களின் மனதுகளில் ஜனநாயகத்தின் பூமியாகவும் அளப்பரிய வாய்ப்புகளின் நிலமாகவும் விளங்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விமர்சகர்களாக தம்மை கருதியவர்களில் எத்தனை பேர் இந்த உலக முதலாளித்துவத்தின் கோட்டையில் ஒரு நெருக்கடி உருவாகும் எனவும், அது முழு அமைப்பினதும் ஸ்திரப்பாட்டை பாரதூரமான முறையில் கேள்விக்குள்ளாக்கும் எனவும் நிஜமாக நம்புகின்றனர்?

இதன் உள்நோக்கம் கெளரவக் குறைவை ஏற்படுத்துவது அல்ல. ஆனால் நான் பல மாதங்களுக்கு முன்னர் உங்களுக்கு அமெரிக்கா இந்தளவுக்கு பிரமாண்டமானதும் இந்தளவு அடிப்படையானதுமான ஒரு அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அது முழு அரசாங்க அமைப்பையும் பிரச்சினைக்குள்ளாக்கும் எனவும் கூறியிருந்தால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளை பெரிதும் தாராளமாக மதிப்பீடு செய்பவர்கள் உட்பட உங்களில் எத்தனை பேர் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்திருப்பீர்கள்?

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற எந்த ஒரு தேர்தலையும் போலன்றி ஒரு தேர்தல் இடம்பெற்ற ஒரு மாதத்தின் பின்னர் நாம் இங்கு கூடியுள்ளோம். அத்தோடு அமெரிக்காவில் உள்ள அரசியல் அமைப்பு ஒரு நாடகப் பாணியிலானதும் முற்றிலும் எதிர்பாராததுமான மாற்றங்களுக்கு உள்ளாக முடியும் என்பது இனியும் நினைத்துப் பார்க்க முடியாததொன்றல்ல.

உலக முதலாளித்துவத்தின் கோட்டையினுள்ளேயே ஒரு புரட்சிகர நெருக்கடி ஆரம்பித்துள்ளமையானது- அது இன்றைய அபிவிருத்திகளின் முக்கியமான ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது- உலக நிலைமையினுள் ஒரு அசாதாரணமானதும் அத்தோடு கணித்துப் பார்க்க முடியாத அளவிலான பருமன் கொண்டதொரு காரணியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. நள்ளிரவோடு நள்ளிரவாக அவுஸ்திரேலியா உட்பட்ட ஒவ்வொரு நாடுகளதும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களும் பொருளாதாரக் கோட்பாட்டாளர்களும் தாம் நான்கு கிழமைகளுக்கு முன்னர் கற்பனை செய்தும் பார்க்க முடியாதது எனக் கணித்த ஒரு காரணியை சடுதியாக எதிர்கொண்டுள்ளதாக கண்டுள்ளனர். உலகம் பூராகவும் "உலகின் கடைசி மேலாதிக்க வல்லரசு" ஆக விளங்கிய அமெரிக்க அரசுகளில் அரசியல் ஈடாட்டம் கண்டு, அரசாங்க அமைப்பில் சாத்தியமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சில வேளை ஒரு நிஜமான நெருக்கடியின் பெரிதும் சிறப்பான அம்சம், அதன் வருகை பொதுவாக எதிர்பாராத விதத்திலும் முன் அனுமானிக்கப்படாத வடிவிலும் இடம் பெறுவதாக விளங்கலாம். இது எந்த விதத்திலும் நெருக்கடியை அடியோடு கண்டுகொள்ளவில்லை என்பதாகாது. அமெரிக்காவின் அரசியல் அமைப்பு ஆழமான ஸ்தம்பித நிலையை எட்டிக் கொண்டுள்ளது என குறைந்தது ஒரு அரசியல் ஆய்வு சாதனமாவது வலியுறுத்தி வந்தது. அது உலக சோசலிச வலைத்தளமாகும். (WSWS)

1998 டிசம்பர் அளவில் கிளின்டன் மீதான அரசியல் குற்றச்சாட்டு போராட்டம் அதனது உச்சக் கட்டத்தை அடைந்தபோது, காங்கிரசுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையேயான கொடூரமான போராட்டம், எதிர்வந்து கொண்டுள்ள உள்நாட்டுப் போரின் (Civil War) முன்னெச்சரிக்கை என உலக சோசலிச வலைத்தளம் எச்சரிக்கை செய்தது. ஆனால் அச்சமயத்தில் WSWS வனாந்தர ஒலியாக போயிற்று. எமது பல ஆதரவாளர்கள் கூட எமது போக்கிற்கு எதிராக முறைப்பட்டு கடிதங்கள் எழுதி இருந்தார்கள். நாம் மிகைப்படுத்தி அல்லது பெரிதுபடுத்தி கூறுவதாக அவர்கள் நினைத்தார்கள்.

தேர்தல் நெருக்கடி

2000 நவம்பர் 7ம் திகதி வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் அரைப்பங்கினர் ஏறக்குறைய 100 மில்லியன் அமெரிக்கர்கள் அமெரிக்கத் தரத்தில் கூட பெரிதும் சிறப்பான பிரச்சாரம் இல்லாமலே வாக்களிக்கச் சென்றனர். இறுதி வாரங்களில் பெறுபேறுகள் மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிஜமாக இடம்பெற்றதற்காக எவருமே தயார் செய்திருக்கவில்லை.

விமர்சகர்களில் பலரும் புஷ் வெற்றி பெறுவார் என எதிர்வு கூறி இருந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்த ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கோரும் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் சகல கைத்தொழில் நகரங்களிலும் எதிர்பார்த்ததை விட பெரிதும் சிறப்பாக வாக்குகளை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாகியது. "போர்க்கள மாநிலங்கள்" ஆக வர்ணிக்கப்பட்ட மாநிலங்கள் ஏதோ ஒரு வழியில் பெருமளவுக்கு ஜனநாயக் கட்சிக்காரர்களுக்கு தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தும். (ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு) பெரிதும் நெருக்கமானவையாகக் காட்டப்பட்ட பென்சில்வேனியாகவும் மிச்சிக்கனிலும் ஜனநாயகக் கட்சிக்கு கணிசமான அளவு பெரும்பான்மையுடன் கிடைத்தது.

ஆனால் அல்கோர் புளோரிடா மாநிலத்தினை தட்டிக் கொண்டு விட்டதாக மாலையில் அறிவித்தபோது பெரிதும் ஆச்சரியம் ஏற்பட்டது. இரவு 9 மணியளவில் உப-ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப் போவது போல் தோன்றியது.

இதைத் தொடர்ந்து ஒரு தொகை ஆச்சரியமான சம்பவங்கள் இடம்பெறத் தொடங்கின. அமெரிக்கன் அரசியலில் சில பாரம்பரியங்கள் இன்னமும் இருந்து கொண்டுள்ளன. அதாவது தேர்தல் நாள் இரவில் ஜனாதிபதி வேட்பாளர்களின் குரல், ஒன்றில் வெற்றியை பிரகடனம் செய்வது அல்லது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு அப்பால் கேட்பது இல்லை. இது அதில் ஒன்று. அத்தோடு முற்று முழுதும் சரியான வாக்குச் சீட்டுக்களின் அடிப்படையில் செய்தி ஊடகங்கள் networks புளோரிடா மாநிலம் கோருக்கு வழங்கப்பட்டதாக அறிவித்ததன் பின்னர் டெக்சாஸ் ஆளுனர் புஷ்சின் மாளிகையில் உடனடியாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டது. அவர் பெரிதும் அமைதியோடும் நம்பிக்கையோடும் செய்தி ஊடகங்களின் அனுமானங்களை கணக்கெடுக்காமல் இறுதியில் புளோரிடா மாநிலத்தில் தான் வெற்றி கொள்ளப் போவதாக பிரகடனம் செய்தார்.

புஷ்சின் தோற்றமும் கருத்தும் ஒரு பெரிதும் வினோதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் கூறியதுபோல் பத்திரிகையாளர் மாநாடு தேர்தல் நாளன்றிரவு, பாரம்பரிய இரவுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு போயிற்று. மேலும் புஷ், புளோரிடா வாக்களிப்பையிட்டு செய்தி ஊடகத்தின் மதிப்பீட்டை சவால் செய்ய, முதிர்ச்சியற்றதும் ஒத்திகையற்றதுமான விதத்தில் தோன்றியதோடு மட்டுமல்லாமல் (சீனியர்) புஷ்சின் பிரச்சாரத்தின் செயற்பாட்டாளர்கள் செய்தி ஊடகங்களை கடும் நெருக்குவாரத்துக்கு உள்ளாக்கி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் அழைப்பை மாற்றி, கோரின் பட்டியலில் இருந்து புளோரிட மாநிலத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டது.

இது ஏன் முக்கியமாக விளங்கியது என்பது பின்னர் அம்பலமாக்கப்படும். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் புஷ் கொண்டிருக்கும் அரசியல் வாய்ப்புகள் இறுதியில் செய்தி ஊடகங்கள் புளோரிடா மாநிலத்தை புஷ்சுக்கு என அழைத்ததோடு தொடரவுள்ள போட்டியை கணக்கெடுக்காது, புஷ் தேர்தலில் வெற்றியீட்டி விட்டார் என்ற பொதுஜன அபிப்பிராயத்தை சிருஷ்டித்தது.

புஷ்சின் பத்திரிகையாளர் மாநாட்டின் சிறிது நேரத்தின் பின்னர் புளோரிடா கோரின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக ஒரு அறிவித்தல் வெளியிடப்பட்டது. பல மணித்தியாலங்களின் பின்னர் -காலை 2.00 அல்லது 2.30 மணியளவில் புளோரிடா புஷ்சின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. செய்தி ஊடக தாக்கத்தை ஏற்றுக்கொண்ட கோர், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள தீர்மானம் செய்தார்.

புஷ்சுக்கு தொலைபேசியில் பேசிய கோர் அவருக்கு நல்வாழ்த்துக்கள் கூறியதோடு தோல்வியை ஒப்புக் கொண்டு பகிரங்க மண்டபத்துக்கு சென்று உரைநிகழ்த்துவதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அசாதாரணமான சம்பவங்கள் இடம்பெற்றன. கோர் உரைநிகழ்த்த மண்டபத்துக்கு சென்று கொண்டிருக்கையில் புளோரிடாவில் புஷ்சுக்கும் கோருக்கும் இடையேயான வாக்கு வேறுபாட்டின் எண்ணிக்கை துரிதமாக வீழ்ச்சி காணத் தொடங்கியது. அசந்து போன உப -ஜனாதிபதியின் உதவியாளர்கள் செல் தொலைபேசி மூலம் கோருடன் தொடர்பு கொண்டு இந்த உண்மையை அறிவித்ததோடு தோல்வியை ஒப்புக் கொள்வதை வாபஸ் பெறும்படி அவரை தூண்டினர். கோருக்கும் பிரச்சார தலைமையகத்துக்கும் இடையே வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன. இறுதியில் கோர் ஒப்புக் கொண்டு கார் சாரதியை காரை திருப்பிக் கொண்டு ஹோட்டல் அறைக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். புஷ்சுடன் தொலைபேசியில் பேசிய கோர் தோல்வியை ஒப்புக்கொள்வதை வாபஸ்பெறுவதாக தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒரு போதும் இடம்பெற்றது இல்லை. நவம்பர் 8 அதிகாலை தெளிவாகிய ஒரே விடயம் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது இன்னமும் தெளிவாகாததே.

அன்று மாலை அமெரிக்க வரலாற்றில் ஒரு போதுமே இடம்பெறாத ஒரு தொகை சம்பவங்களின் ஆரம்பத்தைக் குறித்து நின்றது. புஷ் புளோரிடாவில் வழங்கப்பட்ட 6 மில்லியன் வாக்குகளிலும் அமெரிக்காவில் வழங்கப்பட்ட 100 மில்லியன் வாக்குகளிலும் ஒரு சில நூறு வாக்குகளால் மட்டுமே முன்னணியில் நின்றார். கோர் முழுப் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டிருந்தார். புளோரிடா தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தன. எவ்வாறெனினும் பாம்பீச்சில் உள்ள ஆயிரக் கணக்கான யூதர்கள், கடைகெட்ட யூத எதிர்ப்பாளரான பட் புச்சானனுக்கு வாக்களித்திருந்தனர். நிச்சயம் அவர்கள் ஹிட்லரை புகழ்ந்து பாராட்டும் புச்சானனின் சமீபத்திய நூலினால் பீதியடைந்து இருக்க வேண்டும் என ஒரு அரசியல் கோமாளி சொன்னார். வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்கையில் ஆபிரிக்கன்- அமெரிக்கன் வாக்காளர்கள் அரச பொலிஸ் படையால் துன்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. பெரிதும் ஜனநாயகக் கட்சி ஆதரவு சுற்றாடலில் உள்ள ஆயிரக் கணக்கான வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்யத் தவறினர்.

இவை வாக்குச் சீட்டுக் கணக்கெடுப்பு மீது தொடர உள்ள நீண்ட போராட்டத்துக்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. இப்போராட்டம் கசப்பான அரசியல் போராட்டத்தை அதிகரித்த அளவில் உமிழ்ந்து கொண்டு இருந்தது. இதில் பெரும்பகுதி நீதிமன்றங்களிலேயே தலைவிரித்து ஆடியது. வெள்ளிக்கிழமை அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணை இதன் உச்சக்கட்டமாக விளங்கியது.

நீதிமன்றங்கள் போராட்டத்தின் மாபெரும் களங்களாக அமைந்திருந்த போதிலும் மோதுதல்கள் தேர்தல் அதிகாரிகளை சிண்டிவிட கும்பல்களையும் பயன்படுத்தியது. கும்பல்களை குடியரசுக் கட்சியினர் கூலிக்கு அமர்த்தினர். குடியரசுக் கட்சிக்காரர்கள் இராணுவத்திடம் ஆதரவு கோரி வெளிவெளியாக அழைப்பு விடுத்தனர். ஒரு இராணுவ அதிகாரி அரசியலில் இருந்து விலகி நிற்கும் இராணுவ நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என தனது அதிகாரிகளுக்கு அறிவிக்க நேரிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

புளோரிடாவில் வழங்கப்பட்ட முழு வாக்குகளையும் சரியாக கணக்கிட்டால் புளோரிடா மாநிலத்திலும் தேசிய தேர்தலிலும் உதவி ஜனாதிபதி கோர் வெற்றியீட்டி இருப்பார் என்பதை எவரும் பாரதூரமான முறையில் சவால் செய்யமாட்டார்கள் என்று நான் எண்ணுகின்றேன். இது அதிகரித்த அளவில் உண்மையாகி விட்டது. பெரும்பான்மையான தொடர்பு சாதனங்களின் ஆதரவோடு குடியரசுக் கட்சி செய்யும் முயற்சிகள் அத்தகை ஒரு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெறுவதைத் தடுப்பதையே மையமாகக் கொண்டுள்ளன.

நாம் இங்கு கூடும்போது சகலரது பார்வையும் அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பக்கமே திரும்பியுள்ளன. புளோரிடா மாநிலச் செயலாளர் கதறின் ஹறிஸ் புஷ்சின் மோசடியான வெற்றியை ஊர்ஜிதம் செய்யும் ஆரம்ப அத்தாட்சியை புளோரிட மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியதற்கு எதிரான புஷ்சின் மேன்முறையீட்டின் மீது அது தீர்ப்பு வழங்கவுள்ளது. அவர் ஒரு குடியரசுக் கட்சி அதிகாரி. அத்தோடு புளோரிடாவில் புஷ்சின் பிரச்சார இணைத் தலைவர்.

இது தெளிவாகியுள்ள நிலையில் அங்கு இன்னமும் ஆயிரக் கணக்கான வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதோடு வேறும் பல விவகாரங்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. ஹரிஸ் புஷ்சின் தேர்தல் வெற்றியை அத்தாட்சிப்படுத்தும்படி வலியுறுத்தி வந்தார். இது புளோரிடா உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது இறுதி நிமிடத்தில் ஹரிஸ்சின் புஷ் வெற்றியை ஊர்ஜிதம் செய்வதை எதிர்த்து தீர்ப்பு வழங்கியது.

சட்டப் பிரச்சினைகள் பின்வருமாறு இருந்தன. புளோரிடாவில் இரண்டு சட்டப் புத்தகங்கள் உள்ளன. ஒன்று, வாக்கு ஒரு நாளில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும் என்கிறது. மற்றைய சட்டப் புத்தகம், வாக்குகளை மீளக் கணக்கெடுக்கும் உரிமை உள்ளது என்கின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் அடிக்கடி இடம்பெறுவது போல் இரண்டில் ஒன்று தன்னும் அதை தெளிவாக குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தின் பணி முரண்பட்டுக் கொண்டுள்ள சட்டரீதியான பணிப்புக்களை எப்படி இணக்கத்துக்கு கொணர முடியும் என்பதேயாகும்.

சட்டத்தின் மூலம் மாநிலச் செயலாளர் காலக்கெடுவை கடைப்பிடிப்பதில் அவரின் தற்துணிவின்படி நடக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார். சட்டப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு திகதியைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்கு முன்னர் சகல காரணிகளையும் கணக்கில் எடுக்க வேண்டும். இந்த விவகாரம் புளோரிடா உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது மாநிலச் செயலாளரை இரத்துச் செய்தது. காலக்கெடு பற்றிய ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை தேர்தலினால் தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளின் அடிப்படைப் பிரச்சினைகளை புறக்கணித்து விட்டதாக அது பிரகடனம் செய்தது.

புளோரிடா உயர்நீதிமன்றம் புளோரிடா அரசியலமைப்பு உரிமை பிரகடனத்தை உதவிக்கு அழைத்தது. அது மக்களுக்கு உரிமைகள் உள்ளதாக பிரகடனம் செய்வதோடு அதை அரசு மீறிநடக்க முடியாது. புளோரிடா உயர் நீதிமன்ற நீதியரசர்கள் "வாக்குரிமை, உரிமைப் பிரகடனத்தில் உள்ளடங்கியுள்ள முதன்மையான உரிமை எனவும் இந்த அடிப்படை உரிமை இல்லாமல் ஏனைய சகலதும் ஒழிந்துவிடும்" எனவும் வலியுறுத்தி இருந்தனர். சர்ச்சைக்கிடமான வாக்குகள் ஒழுங்கான விதத்தில் எண்ணப்படுவதற்கு அனுமதிக்கும் விதத்தில் அத்தாட்சிப்படுத்துவதை தாமதிக்க ஹரிஸ் மறுத்து விட்டமை நீதிமன்றத்தின்படி ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்ற முறையில் அடாவடித்தனமான விதத்தில் அவரின் தற்துணிவை தவறாகப் பயன்படுத்தியதாகும். அத்தோடு அது புளோரிடா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதுமாகும்.

அமெரிக்க உயர்நீதிமன்றம் தற்சமயம் மீளாய்வு செய்யும் தீர்ப்பு இதுவேயாகும். புளோரிடா உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஊர்ஜிதம் செய்து கோருக்கு சார்பாக ஒரு தீர்ப்பு வழங்கப்படுமிடத்து அது நிச்சயம் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதாக அமைந்துவிடாது. அவருக்கு எதிரான தீர்ப்பு உண்மையில் இப்போக்கினை ஒரு முடிவுக்கு கொணர்வதோடு புஷ் ஜனாதிபதி பதவியில் அமர்வதையும் ஊர்ஜிதம் செய்துவிடும்.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமெரிக்க ஆளும் வர்க்கம் பாரம்பரியமான முதலாளித்துவ- ஜனநாயக, அரசியலமைப்பு மாதிரிகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு எவ்வளவு தூரம் செல்லத் தயாராகி உள்ளது என்பதை அம்பலப்படுத்தும். வாக்கு மோசடிகளை அங்கீகரிக்கவும் வாக்குகளை நசுக்கித் தள்ளவும் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியை அடியோடு சட்டவிரோதமாகவும் ஜனநாயக விரோத விதிமுறைகள் மூலமும் ஈட்டிக் கொண்ட ஒரு வேட்பாளரை அமர்த்த தயாராகி வருகின்றதா?

முதலாளி வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியினரும் சில சமயம் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் ஒரு பெரும்பான்மையினரும் கூட இதைச் செய்யவே தயாராக உள்ளனர். அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரியமான வடிவங்களுக்கு ஆளும் பிரமுகர்களிடையே ஆதரவு பிரமாண்டமான அளவு சிதைந்து போய்விட்டது.

ஒரு பத்திரிகையாளர், ஆளும் வட்டாரங்களில் ஜனநாயகத்தின் பேரில் இருந்து கொண்டுள்ள சிடுமூஞ்சித்தனத்தை பின்வருமாறு தொகுத்துக் கூறினார்: "நிச்சயமாக கோர் அதிக வாக்குகளைப் பெற்றார். ஆனால் அதையிட்டு யாருக்கு கவலை? கோர் புளோரிடாவில் கும்பலால் சுற்றிப் பிடிக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் பொலிசார் அதையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை".

இந்த நெருக்கடியின் தன்மை என்ன?

கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்று வரும் முன்னொரு போதும் இடம்பெறாத சம்பவங்களுக்கு இடையேயும், இரண்டு அரசியல் தலைவர்களும் தொடர்புச் சாதனங்களும் தமது நடவடிக்கைகளுக்கும் வார்த்தைகளுக்கும் நேர் மாறாக அமெரிக்கா ஒரு மாபெரும் அரசியலமைப்பு நெருக்கடியின் மத்தியில் இருந்து கொண்டிருக்கவில்லை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வேறு வார்த்தைகளில் சொன்னால் அமெரிக்க நிலைமை சில வேளை அவஸ்த்தை நிறைந்ததாக இருக்கலாம் ஆனால் பாரதூரமானது அல்ல என பொதுமக்கள் நம்பச் செய்யப்பட்டு உள்ளனர். அரசியல் இளகிய மனப்பாங்கினை தூவுவதானது மக்களுக்கு தெரியாத முறையில் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முடிந்த மட்டும் ஊர்ஜிதம் செய்யும் ஆளும் பிரமுகர்களின் நலன்களுக்கே சேவகம் செய்கின்றது.

இந்த இளகிய மனப்போக்கு, எஞ்சிக் கிடக்கும் அரசியல் ரீதியில் தளர்ந்து தொங்கும் லிபரல் பத்திரிகைகளில் மட்டுமன்றி மத்தியதர வர்க்க தீவிரவாதத்தின் பல்வேறு வகையறாவைச் சேர்ந்த பிரதிநிதிகளிடையேயும் பிரதிபலித்தது. உதாரணமாக ரால்ப் நாடர் (Ralph Nader) தேர்தலுக்கு பின்னைய நெருக்கடியைப் பற்றி கூறுவதற்கு எதையுமே கொண்டிருக்கவில்லை. மிகவும் அலட்சியமான பாணியில் கருத்து தெரிவிக்கையில் நாடர், புஷ்சுக்கும் கோருக்கும் இடையேயான தகராறு நாணயத்தை சுண்டிவிட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். ஒரு பிரபல இடதுசாரி சிடுமூஞ்சியான அலெக்சாண்டர் கொக்பேர்ண் (Alexander Cockburn) தாம் தேர்தல் பெறுபேறுகளையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். வாஷிங்டனிலான பல வருடகால அரசியல் தணலைக் காட்டிலும் இது ஒன்றும் பாரதூரமானது அல்ல என அவர் கூறிக் கொள்கிறார். கடந்த வாரம் அவர் எழுதும்போது "தணலைப் பற்றி முதலில் ஒரு வார்த்தை. நாம் அதை விரும்புகின்றோம்."

அடுத்து ஸ்பாட்டசிஸ்ட் பத்திரிகையின் பக்கங்களில் அவர்களின் கருத்து வெளியாகி இருந்தது. அவர்களின் பத்திரிகையில் ஒரு பிரதி கிடைக்கும் பேறு எனக்கு கிட்டியுள்ளது. அவர்களின் நிலைப்பாடு பின்வருமாறு தொகுத்துக் கூறப்பட்டுள்ளது: "இக்ககூட்டத்தில் கோர்-புஷ் குடும்பச் சண்டை முதலாளி வர்க்கத்தின் ஒரு அரசியல் நெருக்கடியைக் காட்டிலும் ஒரு தேநீர் சாடி சூறாவளியைப் போன்றது."

அமெரிக்காவில் அறிவுபடைத்த ஒரு அரசியல் போக்காக குறிப்பிடப்படும் தொழிலாளர் உலகக் கட்சி (Workers World Party) எழுதுகையில்: "தற்போதைய தேர்தல் மாற்றங்களுக்கு சமூக அல்லது பொருளாதார நெருக்கடி காரணம் அல்ல" என்றுள்ளது.

இது இவ்வாறிருப்பின் அமெரிக்காவில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் முற்றிலும் தெளிவுபடுத்த முடியாதவையாகும்.

அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டில் முதற்தடவையாக ஒரு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றது என்பதை தீர்மானிக்க முடியாது போயுள்ளது. வாக்குகள் அடியோடு துருவப்படுத்துப்பட்ட வாக்காளர்களை அம்பலப்படுத்தியது. கோருக்கும் புஷ்சுக்கும் இடையேயான பிணைப்பு செனட் சபையினதும் மக்கள் பிரதிநிதிகள் சபையினதும் சேர்க்கை மூலம் காட்டப்பட்டது. தேர்தல் சித்திரம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான பிளவினை ஒத்திருக்கின்றது.

தேர்தலுக்கு பின்னைய மோதுதல்கள், இன்றைய அரசியலமைப்பு கட்டுமானத்தினுள் ஒரு நிஜமான ஜனநாயகத் தீர்ப்பை ஈட்டுவது முடியாத காரியம் என்பதை நிரூபித்துள்ளது. மேலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்ட இவர்கள் இவை எவையுமே ஒரு சமூக அல்லது பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புபட்டவை அல்ல! என எமக்கு உறுதி கூறுகின்றார்கள். அத்தகைய ஒரு மதிப்பீடு வரலாற்று அறியாமையினதும் அரசியல் குருட்டுத்தனத்தினதும் கூட்டுக் கலவையின் உற்பத்தியாகும்.

தொடரும்...

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved