World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Split in Sri Lanka's Sinhala extremists signals emergence of a fascist organisation

இலங்கை சிங்கள தீவிரவாதிகளின் பிளவு பாசிச அமைப்பின் எழுச்சிக்கான ஓர் சமிக்கை

By G. Senaratne and Deepal Jayasekera
4 December 2000

Back to screen version

அக்டோபரில் இடம்பெற்ற இலங்கை பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தீவிரவாத வலதுசாரி அமைப்பான சிங்கள உறுமய கட்சிக்கு கிடைத்த ஒரு பாராளுமன்ற ஆசனத்தில் அமர்வது யார் என்பதையிட்டு கசப்பான விவாதங்கள் இடம்பெற்றன. இந்த விவாதம் கட்சித் தலைவரான எஸ்.எல்.குணசேகர உட்பட்ட ஏழு கட்சி உறுப்பினர்களையும் இராஜினாமா செய்ய வழிவகுத்ததுடன் இக்கட்சி பகிரங்கமான ஒரு பாசிச அமைப்பாக பரிணமிப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஏப்பிரல் தேர்தலின்போது உருவான இந்த கட்சி, பெரும்பான்மை சிங்களவரின் உரிமைகளுக்காக போராடும் ஒன்றாகவும், தமிழீழ பிரிவினைவாதிகளுக்கு எதிரான யுத்தம் உக்கிரமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் இனவாதப் பிரச்சாரத்தை நடாத்தியது. அது ஆளும் பொதுஜன முன்னணியையும் எதிர்க் கட்சியான யூ.என்.பி.யையும் "சிங்கள இனத்தை காட்டிக் கொடுத்துவிட்டதாக" குற்றம் சாட்டியது. இலங்கையின் தேர்தல் விதிமுறையின் கீழ் சிங்கள உறுமய கட்சிக்கு தொகுதி அடிப்படையில் ஒரு ஆசனம் கூட கிடைக்காவிட்டாலும் முழுத் தீவிலும் அது பெற்றுக்கொண்ட 127863 அல்லது 1.47% சதவீத வாக்குகள் காரணமாக தேசியப்பட்டியலில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

அக்டோபர் 12ம் திகதி, இந்த ஆசனத்துக்காக சிங்கள உறுமய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வாக்கெடுப்பின் மூலம் அதன் தலைவர் குணசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிங்கள உறுமய கட்சியின் முன்னோடி பின்னணி அமைப்புக்களான பெளத்த குருமார் குழுவொன்று உட்பட, பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தின் ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் கட்சியின் தேசிய அமைப்பாளரான சம்பிக ரணவக்க, இத்தீர்மானத்துக்கு எதிராக தூண்டப்பட்டார். அவர்கள் சம்பிக ரணவக்கவே இந்த இடத்துக்கு தெரிவுசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்தர்ப்பத்தை தவறவிடாத ரணவக்கவும் அவரது குண்டர் கும்பலும் சிங்கள உறுமய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை சந்தித்து அவர்களது வாக்குகளை தட்டிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டது. குணசேகரவின் பெயரை முன்மொழிந்த பேராசிரியர் ஏ.வி.டி.த.எஸ். இந்திரரத்ன கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டதோடு அவரது மனைவியும் தாக்குதலுக்குள்ளானார். இராணுவத்தினருடனும் பொலிசாருடனும் நெருங்கிய உறவுகொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம், தமிழர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களுக்கும், உடல்ரீதியான தாக்குதல்களுக்கும் பெயர் பெற்ற ஒரு அமைப்பாகும்.

அக்டோபர் 16ம் திகதி சிங்கள உறுமய கட்சியின் மத்தியகுழு கூடியபோது, தேர்தல் நடவடிக்கைகளின் போது கட்சி நடவடிக்கைகளில் ஏற்பட்ட கவலையீனத்துக்கான பொறுப்பை குணசேகர ஏற்கவேண்டும் என குற்றம்சாட்டி தனிப்பட்ட தாக்குதல் ஒன்றை தொடுத்தனர். சிங்கள உறுமய கட்சி, கொழும்பிலும் அதை அண்டியப் பிரதேசங்களிலும் உள்ள மத்தியதர வர்க்கப் பிரிவுகளின் கணிசமான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தென் மாகாணத்தில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் சிங்களத் தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) முதலாளித்துவ எதிர்ப்பு, பிற்போக்கு பிரச்சாரங்களுக்கு எதிராக அங்கு சென்று கட்சிக்கு ஆதரவை திரட்டிக்கொள்ள இக்கட்சி தவறியது.

குணசேகர குடிகாரர், நாஸ்தீகன், ஆங்கிலத்தில் உரையாடி ஆங்கிலத்தில் அறிக்க்ைகளை தயாரிக்கும் ஒருவர் என ரணவக்க குற்றம் சாட்டினார். சிங்களத் தீவிரவாதிகளிடையே -புத்தசமய மறுமலர்ச்சி, அதன் கோட்பாடு, தத்துவம், சிங்கள தேசிய மொழி என்பன முன்னெடுக்கப்பட வேண்டும் எனும் கருத்திலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வழக்கம்.

குணசேகர தனது இராஜினாமாவை அறிவித்துவிட்டு ஏழு ஆதரவாளர்களுடன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார். சுழற்சிமுறையின் அடிப்படையில் முதலாவதாக கட்சியின் செயலாளர் திலக் கருணாரத்னவுக்கும் பின்னர் இரு மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஆசனத்தை வழங்குவது என்ற ஜனநாயக ரீதியான தீர்வுக்கு இடமளிப்பதாக கட்சி தலைமை முடிவெடுக்கத் தள்ளப்பட்டது. கட்சி உட்பூசலுக்கு காரணகர்த்தாவான ரணவக்க இந்த ஆசனத்துக்காக தெரிவு செய்யப்பட்ட இரு மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவராவார்.

அதே தினம் மாலை பத்திரிகையாளர் மாநாடொன்றைக் கூட்டிய குணசேகர அப்பட்டமான காடைத்தனத்துக்காக ரணவக்கவையும் அவரது கும்பலையும் குற்றம் சாட்டி பதிலறிக்கை விடுத்தார். "சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு குணசேகர வழங்கிய பேட்டியில், தனது எதிர்ப்பாளரை ஆப்கானிஸ்தான் ஆளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான "தலிபான்" களுக்கு ஒப்பிட்டு, சகிக்கமுடியாத அடிப்படைவாதிகளென விபரித்தார். அவரது ஆதரவாளரான இந்திரரத்ன இந்த நிலைமையானது கட்சிகுள்ளிருந்த பயங்கரவாத இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றென பிரகடனம் செய்தார்.

அக்டோபர் 17ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் காடைத்தனம் என்ற குற்றச்சாட்டை மறுத்த ரணவக்க இந்த செயல் "கட்சி அங்கத்தவர்களது நியாயமான கிளர்ச்சியே" என தெரிவித்தார். அத்துடன் தனக்கு மகாசங்கத்தினரது (பெளத்த பிக்குமாரின் அதிகாரத்துவம்) ஆதரவுண்டு என சூளுரைத்தார். சிங்கள உறுமய கட்சியின் இன்னுமோர் தலைவரான அத்துரலிய ரத்தான என்ற புத்தபிக்கு "சிங்கள கட்சியொன்றின் தலைவராக சிங்கள பெளத்தர் ஒருவரே விளங்க" வேண்டும் என பத்திரிகையாளருக்கு தெரிவித்தார். மேலும் அவர் குணசேகர முன்னர் ஒரு கத்தோலிக்கராயிருந்து தற்போது தன்னை நாஸ்திகராக கூறிக்கொள்ளும் ஒருவர் எனவும் தெரிவித்தார். கட்சி செயலாளரான கருணாரத்ன இந்த தீர்மானத்தை நியாயப்படுத்தியதோடு, பாராளுமன்றத்தில் குணசேகரவுக்கு மாற்றீடாக இடமளிக்க வேண்டுமென்றும் கட்சி மகாசங்கத்திற்கும் கட்சியின் தேர்தல் நிதிக்கும் பெரிதும் நிதியுதவியளித்த முதலாளிமார்களுக்கும் மதிப்பளித்து நடக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

குணசேகர அரசியல் ரீதியில் ஒர் அப்பாவியல்ல. சிங்கள தீவிரவாத வெறியின் ஒர் அம்சமான அவர் பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம் (NMAT) என்ற அமைப்பின் காடைத்தனம், வன்செயல்கள் பற்றிய பதிவேட்டினை நன்கறிந்தவர். அத்துடன் ஏனைய பாசிச அமைப்புகள், அதாவது சிங்கள உறுமய கட்சியை உருவாக்குவதில் பங்களிப்பு செய்த அமைப்புக்களின் இயல்பு பற்றி நன்கறிந்தவர். பிரபல வழக்கறிஞரான குணசேகரவும் அவரது ஆதரவாளர்களும் சிங்கள சோவினிசத்தில் ஊறிய ஓர் அரசியல் நிறுவனத்தின் அங்கத்தவர்களான பல்கலைக்கழகத்தினரும் இளைப்பாறிய இராணுவத்தினருமே. அவர்கள் "மத்தியஸ்தப்பட்ட" பண்பு ஒன்றைக் கையாள்வதன் மூலம் பெளத்தரல்லாத சிறுபான்மை சமூகத்தினரை அரவணைத்துக் கொண்ட ஒன்றாகக் காட்ட முனைகின்றனர்.

பெளத்த குருமாரின் பக்கபலத்தை பெற்றுள்ள ரணவக்க கும்பல் மிகவும் பகிரங்கமான பாசிச பண்புகொண்ட மாணவர்கள், சிறியளவிலான கொழும்பு வர்த்தகர்கள், பெளத்த பிக்குகள் உட்பட்ட ஒரு சிறிய தொகையிலான இராணுவத்தினரையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள ஒரு சக்தியாகும்.

தேர்தலின் போது ரணவக்க இந்த இயக்கம் ஹிட்லர் யூதமக்களை நடத்தியது போன்று தமிழர்களை நடத்தவேண்டும் என விமர்சித்துள்ளார். இவை வெறும் வாய்தவறி வந்த வார்த்தைகள் அல்ல. தென்னிந்திய திராவிடர் அல்லது தமிழர் மீதான 'ஆரிய' சிங்கள மேலாதிக்கப் பண்பு சிங்கள சோவினிசத்தின் அடிமட்ட அம்சமாக விளங்குகின்றது. 1930ம் ஆண்டுகளின் சிங்கள பெளத்த தலைமைத்துவ இயக்கங்களில், ஆரிய மேலாதிக்கத்துவமான ஜேர்மன் நாசிகள் அவர்களின் கொள்கைகளை புகழும் போக்கு காணப்பட்டது.

ரணவக்க 1980களில் ஜே.வி.பி. மாணவ தலைவராக விளங்கி தொழிலாளர் வர்க்க அமைப்புகளின் மீதான கொலைகார தாக்குதல்களை நடாத்தியவர். பாசிச திகில் படை போன்றவற்றின் உருவாக்கத்தை மீண்டும் மீண்டும் கோரிவந்த ஒருவர். "எல்லா தேசிய அமைப்புகளும் இதுவரை வெறுமனே தலையை மட்டும் அசைக்கும் இயக்கங்களாயிருந்தன. நாம் மட்டுமே முஷ்டியை இறுக்கவும் தயாரான ஓர் இயக்கமொன்றை (மக்களின்) கட்டியெழுப் உள்ளோம்" என அடிக்கடி கோரியுள்ளார்.

அவரது படைப்புகள் தமிழரை இனரீதியாக ஒழிப்பதை நியாயப்படுத்துகின்றன. "கொட்டி வினிவிதீம" (புலிகளின் ஊடுருவல்) என்ற அவரது நூலானது, கொழும்பும் சுற்றப் பிரதேசங்களும் தமிழரால் "ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கின்றது. "பயங்கரவாதத்துக்கு எதிரான தேசியத் திட்டம் என்ற தலைப்பிலான பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தின் துண்டுப்பிரசுரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்காக நாட்டின் சகல வளங்களும் அணிதிரட்டப்பட வேண்டும் என்றும் தமிழர்களுக்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறை கையாளப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றது. 1987ன் பின் கொழும்புக்கு இடம்பெயர்ந்துள்ள சகல தமிழர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு புறம்பான அடையாள அட்டை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் மேலும் குறிப்பிடுகின்றது.

சிங்கள உறுமய கட்சி மூன்று பிரபல சிங்கள தீவிரவாத அமைப்புக்களான, பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம், தேசிய பிக்குமார் சங்கம், சிங்கள வீரவிதான ஆகியவற்றை உள்ளடக்கிய கட்சியாகும். ஒரு அரசியல் கட்சியில் பெளத்த பிக்குமார் அமைப்பு பகிரங்கமாக பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம் 1998ன் ஆரம்பப் பகுதியில் தோன்றி மத்திய மலைநாட்டின் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல் தாக்குதல்களைத் தொடுத்த பதிவேட்டைக் கொண்டுள்ளது. 1998ல் சிங்கள வீரவிதானவுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதின ஊர்வலத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதே ஆண்டு டிசம்பரில் பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தின் குண்டர்கள் "சமாதானப் பேரவை" ஒழுங்கு செய்திருந்த கொழும்பு நூலக கேட்போர் கூட பொதுக் கூட்டத்தை தாக்கினர். சமாதானப் பேரவை போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திவரும் இயக்கமாகும்.

தேசிய பிக்குமார் சங்கம் மாதுலுவேவ சோபித்த என்ற பிரபல பெளத்த பிக்குவின் தலைமையிலான அமைப்பாகும். அவர் சிங்கள உறுமய கட்சியின் உறுப்பினராக முன்னர் விளங்காவிட்டாலும் பெரும் செல்வாக்கு அவருக்கு உள்ளது. சிங்கள உறுமய கட்சியின் மத்திய குழுவில் தேசிய பிக்குமார் சங்கத்துக்கு அபேட்சகர்களான ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன்னர் இந்த தேசிய பிக்குமார் சங்கமும் கண்டியிலுள்ள பெரிய பெளத்த அதிகாரத்துவமும் சிங்கள உறுமயவை பரந்துபட்ட கட்சியாக்கும் முகமாக சகல சோவினிச கட்சிகளுடனும் -மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), சிங்களயே மகாசம்பத பூமிபுத்திர பக்ஷய (சிங்கத்தின் புதல்வர்கள் கட்சி) உட்பட்ட- ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முயன்றனர். எனினும் அம்முயற்சி தோல்வி கண்டது.

பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சிங்கள வீரவிதான தமிழர்களுக்கு எதிரான குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் கலந்து கொள்ளும் ஒரு சிங்கள தீவிரவாத இயக்கமாகும்.

இச்சகல அமைப்புகளும் சிங்கள சோவினிசத்தை அப்பட்டமாக தழுவியவையே. சிங்கள உறுமய கட்சி தேர்தல் சமயத்தில் சிங்கள இனம் பிரதான இரண்டு சிங்களக் கட்சிகளினால் பிளவுக்கும் உதவியின்மைக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஆட்பட்டிருப்பதாக போதனை செய்தது. சகல தேசிய, மத, சமூக பிரச்சினைகளின் போதும் பெளத்த மகா சங்கத்துடன் ஆலோசனை பெறும் ஒரு சிங்கள அரசொன்றை கட்டியெழுப்புவதாக கூறியது.

சிங்கள உறுமய, குளங்கள் நீர்ப்பாசன முறையினை பயன்படுத்தி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய பொருளாதாரத்தை கொண்டு உணவில் தன்னிறைவு பெறுவதை வேண்டி நின்றது. இது விவசாயிகளுக்கு கோரிக்கை விடுக்கும் தொனி மட்டுமல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்னைய குளம் கட்டி வளம் பெருக்கும் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சிங்கள மன்னராட்சியையும் கோரும் தொனியாகும்.

இக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம், இந்நாட்டு வாரிசுகளான சிங்கள மக்களை இறக்குமதி மொத்த வர்த்தகத்தின் உரிமையாளர்களாக்கும் உடனடி நடவடிக்கைகளை சிருஷ்டிக்கப் போவதாக கூறி, சிங்கள வர்த்தகர்களுக்கு நேரடியான சோவினிச அழைப்பை விடுக்கின்றது. "தற்போது நாட்டின் இறக்குமதி மொத்த வர்த்தகத்தின் கணிசமான பங்கு தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் கையில் உள்ளது" என்றும் கூறுகின்றது.

இந்த தேசிய பொருளாதார கோரிக்கைகளை விடுக்கும் அதே சமயம் சிங்கள உறுமய கட்சி, வெளிநாட்டு முதலீட்டாளரை ஒழித்துக் கட்டவும் முயலவில்லை. "நாம் பன்னாட்டுக் கம்பனிகளையும் வெளிநாட்டு முதலீட்டாளரையும் பிசாசுகளாக கொள்ளவில்லை" என கட்சி செயலாளர் கருணாரத்ன 'அரடுவ' என்ற சிங்கள வர்த்தக பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். "இந்த பூகோளமயமாக்கங்களுள் (நாம்) தனியார் துறையுடன் நம்பிக்கையுடன் வெளிநாட்டு முதலீட்டையும் ஏற்றுக் கொண்டு, செயற்படவேண்டும். பொதுத் துறையும் தனியார் துறையும் பொருளாதாரத்தில் சம மட்டத்தில் விளங்கவேண்டும் என நாம் ஏற்றுக் கொண்டாலும் (அரசாங்கத் துறை) பொதுத்துறையோ- கைத்தொழில் வர்த்தகத்தில் கட்டுப்பட்டுள்ளதாயிருக்க வேண்டும் என நாம் கருத்துத் தெரிவிக்கவில்லை" என்று அப்பேட்டியில் அவர் மேலும் கூறுகிறார்.

சிங்கள உறுமயவுக்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், வாழ்க்கை நிலைமைகளுக்கு தாக்குதல் தொடுக்கும் இலக்கு கிடையாது. "இன்று தேயிலைக் தொழிற்துறை வீழ்ச்சியடைவதற்கு உலக உற்பத்தி விலைகளை அலட்சியம் செய்யும் இந்த தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் பயமுறுத்தலுக்கு உட்பட்டுள்ள தோட்டப் புறங்களில் வாழும் உள்ளூர் சிங்கள மக்களின் சம்பளம், வீட்டு வசதிகள் என்பன மறுக்கப்பட்டுள்ளமையே காரணமாகும்".

சிங்கள உறுமய கட்சியின் பிளவும் ரணவக்க பிரிவின் ஆதிக்கமும் மேன்மேலும் வலதுசாரி போக்கிற்கான சமிக்கையை விடுத்துள்ளதை காணலாம்.

 

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved