World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:துருக்கி

European Court of Justice allows complaint against death sentence by Kurdish Workers Party leader Ocalan

ஐரோப்பிய நீதிமன்றம் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சித் தலைவர் ஓச்சலானின் மரணதண்டனைக்கு எதிரான முறையீட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.

By Justus Leicht
20 December 2000

Back to screen version

டிசம்பர் மாதம் 15ந் திகதி ஸ்ராஸ்போர்க்கில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றம் அப்துல்லா ஓச்சலானின் குற்றத்திற்கு எதிரான அவருடைய வழக்கறிஞர்களின் முறையீட்டை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடம் துருக்கியின் ஒரு நீதிமன்றம் தேசியவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) இத் தலைவருக்கு தூக்குத் தண்டனை விதித்திருந்தது.

ஏழு நீதிபதிகளைக் கொண்ட ஒரு நீதிமன்றத்தில் பதின்மூன்று காரணங்களில் பன்னிரெண்டு காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இவ் வழக்கின் விளைவுகளையும், அதன் அரசியல் வெடிக்கும் தன்மையின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு பதினேழு நீதிபதிகளைக் கொண்ட ஒரு பெரிய நீதிமன்றத்திற்கு இதை மாற்றினர். முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதானது இவ்வழக்குக்கு சட்டரீதியான பெறுமதியை கொண்டுள்ளது என அர்த்தப்படவில்லை. மேலும் ஸ்ராஸ்போர்க் நீதிபதியினால் எப்போது மேலதிக விசாரணைகள் நடைபெறும் என்பதோ அல்லது அதற்கான தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதும் இன்னும் முற்றாகவில்லை என நீதிமன்றப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதாக தெரியவருகிறது.

ஓச்சலான் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் துருக்கியைச் சேர்ந்த உளவாளிகளான MIT இனால் கென்யாவில் வைத்து பிடிக்கப்பட்டு துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் மிக இழிவான ஒரு காட்சிப் பொருளைப் போன்று வைக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு எவ்விதமான சட்ட ஆலோசனைகள் ஏதும் கிடைக்காது மறுக்கப்பட்டிருந்தார். அவருடைய சட்டத்தரணிகள் தொடர்ந்தும் வழக்காளியை அணுகாவண்ணம் அனைத்து வகையான பயமுறுத்தல் நடவடிக்கைகளையும் இப்பொழுதும் எதிர்கொண்டவண்ணமுள்ளனர்.

இக் கொலைக் குற்றச்சாட்டு ஒரு சோடனையான அரசியல் வழக்கின் பின்னர் வழங்கப்பட்டது. ஓச்சலான் ஒரு கண்ணாடியால் செய்யப்பட்ட கூட்டுக்குள் அடைக்கப்பட்டார். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிரான சண்டையில் உயிர்நீத்த இராணுவத்தின் உறவினர்கள் மட்டுமே இவ் வழக்கை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் துருக்கியின் தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தவாறு ஓச்சலானை இந்த நாட்டிலிருந்து வெளியேற்று போன்ற பிரச்சாரத்தையும் அவர்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதனை ஒளிபரப்ப துருக்கி தேசிய தொலைக்காட்சி நிலையம் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன், இவ் வழக்குக்குடன் இணைந்து செய்தித் துறையும், பொலிசும், பாசிச படைகளும் நாடு பூராவும் இதற்கான இனவாத பிரச்சாரத்திற்கான சூழ்நிலையை உருவாக்கி இருந்தன. இவ்வாறான நிலைமைகளிற்கு கீழ் மிகப் பெரியளவில் குர்திஸ்தான் மக்கள் கைது செய்யப்பட்டனர்.

கூட்டரசாங்கத்திற்கு ஒரு வெடிகுண்டு

இம் முறைப்பாடுகளை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள தீர்மானித்த வேளையில் துருக்கியின் அரசியல் நிலைமை பதட்டமடைந்துள்ளதுடன், சமூக ஜனநாயக DSP, பழமைவாத ANAP, (தாய்நாட்டுக்கான கட்சி) மற்றும் பாசிச MHP ( தேசிய இயக்கங்களின் கட்சி / ''சாம்பல் நிற ஓநாய்'') போன்றவற்றின் உடையும் நிலைமையில் உள்ள கூட்டரசாங்கம் மேலும் பலவீனமடைந்துள்ளது. ஓச்சாலானின் மரணதண்டனை மட்டும் அரசாங்கத்தின் உள்ளுள்ள முரண்பாட்டுக்கு காரணமல்ல. இதில் ஒட்டு மொத்தமாக குர்திஸ்தான் மக்கள் தொடர்பான அணுகுமுறை சம்பந்தமாகவும், மேலும் ஐரோப்பிய கூட்டுடன் துருக்கிக்கு உள்ள உறவுகள் பற்றியும், இராணுவத்தினரின் மூர்க்கமான நடவடிக்கைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியிருந்தன.

ஓச்சலானின் விடயம் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருப்பதால் இந்த கூட்டரசாங்கம் நெருக்கடியின் விளிம்புக்கே தள்ளப்பட்டுவிட்டது. இராணுவ மற்றும் தேசியவாத வட்டாரங்கள் தமது கசப்பை வெளிப்படுத்தியுள்ளன. தேசிய இயக்கங்களின் கட்சி (MHP) ஓச்சலானின் மரணதண்டனை அமுலாக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும்வரை விதிக்கப்பட்ட தீர்ப்பை எவ்வகையிலும் இரத்து செய்யக்கூடாது என்பதற்கான ஒரு உடன்பாட்டை செய்துள்ளது.

ஜனாதிபதி பூலென்ற் எஸ்விற் (Bülent Ecevit), ANAP ( தாய் நாட்டுக்கான கட்சி ) யின் தலைவர் மெசூத் ஜில்மாஸ் (Mesut Yilmaz ), பிரதி ஜனாதிபதி டெவெலெற் பாசேலி (Develet Bahceli), மற்றும் தேசிய இயக்கங்களின் கட்சி (MHP) யின் தலைவர் போன்றோர் ஸ்ராஸ்போக்கின் தீர்மானம் தொடர்பாக ஒருவிதமான கலந்த உணர்வுகளுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பலதரப்பட்ட ''தாய்நாட்டுக்கான கட்சி'' (ANAP) யில் அனைத்து விதமான குர்திஸ்தானிய, பாசிசவாத, மத்தியவாத மற்றும் இஸ்லாமிய போக்குகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. தேசியவாத இயக்கங்களின் கட்சி (MHP -இது ''சாம்பல் நிற ஓநாய்'' என்றே பெரிதாக அழைக்கப்படுகிறது.) யின் அங்கத்தவர்கள் இதன் தலைவரை -"Basbug"- (துருக்கி ''தலைவர்'') முழுவதுமாக நம்புகின்றனர். எவ்வாறிருந்த போதும் இக்கட்சியை தீவிர சமயவாத, இனவாத, பாசிச மற்றும் மாபியா போன்ற கொலைகார பிரிவினர் ஆளுமை செலுத்துகின்றனர். இவர்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தீர்ப்பளிக்கப்பட்ட கொலைகாரர்கள் ஆவர். இந்த இயக்கத்தை, பிரதி ஜனாதிபதி டெவெலெற் பாசேலி (Develet Bahceli), இத்தாலியில் உள்ள பீனியின் (Fini) தேசியக் கூட்டைப் (Nationaler Allianz) போன்று ''மதிக்கப்பட்ட'' பழமைவாத வலதுசாரி கட்சியாக்க முயற்சிக்கிறார். ஆனால் அது இலகுவான காரியமில்லை.

ஒரு புறத்தில் எஸ்விற், ஜில்மாஸ், டெவெலெற் பாசேலி போன்றோருக்கு ஸ்ராஸ்போக் சிறிதளவு நேரத்தையும், மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கிறது. ஓச்சலானின் தலைவிதியை ஐரோப்பிய நீதிமன்றத்தின் நீதியிடம் கையளித்ததன் ஊடாக தேசியவாத வார்த்தை சாகசங்களால் தம்முடைய ஆதரவாளரை அமைதிப்படுத்த நினைக்கின்றனர். மறுபக்கத்தில் நீதிமன்றத்துக்கு வழக்குகள் தற்போது எடுத்துக் கொள்ளப்படுவதினூடு குர்திஸ்தான் பிரச்சினைகள் மீண்டும் நிகழ்சி நிரலில் சக்திவாய்ந்த முறையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

எனவே இப்பிரச்சனைகள் நீதிமன்றத்துக்கு முன்னால் ஒரு நீண்ட விவாதத்திற்கும், விசாரணைகளுக்குமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம். கரிம் ஜில்டிஸ் (Kerim Yildiz) எனும் ஓச்சலானின் சட்டத்தரணி, ''குருடிஸ்தான் மக்களுடைய அனுபவங்கள், அம்மக்கள் (அவர்களுடைய பிரதேசங்களிலேயே) ஒடுக்கப்படுவது, உள்நாட்டு யுத்தம் போன்றவற்றை மீண்டுமொருமுறை ஸ்ராஸ்பேர்க்கின் நீதிமன்றத்தில் விவாதிக்க வேண்டியிருக்கும் எனவும், அங்கே இந்த வழக்கின் உள்ளடக்கம் விவாதிக்கப்படுமாயின் நீதிமன்றம் எமக்கு கேள்வி கேட்கும் உரிமையை வழங்கும். இதற்கான தகவல்கள் அரசாங்கத்தின் அலுவலர்களிலிருந்து இராணுவத்தினர் வரைக்கும், மற்றும் துருக்கியின் அரசியல் தலைவர்கள் பலரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும்'' என கருதுகின்றார். மேலும் தாம் ஓச்சலானை கொலைகாரர்களிடம் ஒப்படைத்த ஜேர்மனி, இத்தாலி, கீரீஸ் போன்றவற்றின் பங்கு தொடர்பாகவும் முன்கொண்டுவரப்போவதாக சட்டத்தரணி கூறுகின்றார்.

இதனூடாக எழும் அரசியல் முரண்பாடுகள் கூட்டரசாங்கத்தினை வெடிக்கும் நிலைக்கு இட்டுச்செல்வதுடன் துருக்கிக்கும் ஐரோப்பிய கூட்டுக்கும் இடையேயான உறவுகளையும் சிக்கலான நிலைக்கு இட்டுச்செல்லும். நீண்டகாலப்போக்கில் துருக்கி அரசு தனது தீர்ப்பை அறிவிப்பதிலிருந்து விலகிவிடமுடியாது. ஐரோப்பிய நீதிமன்றம் உண்மையில் ஓச்சலானுக்கு கொடுக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பாக தீர்ப்பு வழங்க வல்லமையற்றது. தூக்குத் தண்டனை ஐரோப்பிய மனித உரிமை சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்டு இருக்கவில்லை. எனினும் இதற்கான ஒரு பிற்சேர்க்கப்பட்ட பத்திரத்தில் மட்டும் துருக்கி கையெழுத்திட்டிருக்கவில்லை.

சமூக அரசியல் கொந்தளிப்புகள்

சமீபத்திய அபிவிருத்திகள் துருக்கியில் சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புகளை பாரியளவிலும், மிகவும் தெளிவான முறையிலும் வெளிப்படுத்தியுள்ளன.

துருக்கியின் அரசியல் இராணுவ மட்டங்களில் காணப்படும் வங்கிகளின் தலைமைகளினது நம்பிக்கையீனம், ஏமாற்று மற்றும் ஊழல்கள் காரணமாக பல வங்கிகளும் பெரிய நிறுவனங்களும் அரசின் பலவந்தமான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் நவம்பரில் இடம் பெற்ற பங்கு சந்தையின் பாரிய வீழ்ச்சியை அடுத்து ஒரு பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) இதற்காக 7, 5. மில்லியாடன் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுத்து மாபெரும் ''சீர்திருத்த வேலைத்திட்டத்தை'' நடைமுறைப்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அவையாவன நடப்பில் இருக்கும் சம்பளத்தை குறைத்தல், வங்கிகள், துருக்கியின் தொலைபேசி இலாகா, விமானச் சேவை போன்றவற்றை விரைவாக தனியார் மயப்படுத்துதல், அத்துடன் விவசாயத்தை சீர்திருத்தம் செய்வதுடன் அவற்றிற்கான அரசின் உதவி மானியங்களை நீக்கிவிடுதல் போன்றவையாகும்.

டிசம்பர் 1ம் திகதி அரசாங்க சேவை ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஐரோப்பிய கூட்டு மேற்கூறிய மாதிரியான ஒரு ''சந்தைப் பொருளாதார சீர்திருத்தம்'' எனும் முறையை தற்போது நிலவும் இஸ்லாமிய றம்ழான் விழாவில் ஒரு துண்டுப் பாணுக்கு சண்டை பிடிக்கும் மக்களுக்கு இந் நாட்டில் மேலும் நவீன அரசியல் சீர்திருத்தத்தை கடைப் பிடிக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பியக் கூட்டில் துருக்கியின் அங்கத்துவ பத்தத்திரங்களில் இது தொடர்பாக விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு யதார்த்தமான விளக்கத்தின் அடிப்படையில் அங்கு யாரையும் அவமரியாதை செய்யக் கூடாது எனவும், அடிப்படை ஜனநாயகம், மற்றும் மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்கான மிகவும் உயர்வான அரச சட்டங்களின் தேவைகுறித்து அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ''குர்திஸ்தானியர்கள்'' போன்ற ஒரு வார்த்தையோ அல்லது (தேசியவாத) ''சிறுபான்மையினர்'' எனும் பதமோ கூட இப் பத்திரத்தில் ஒரு முறை தன்னும் பிரயோகிக்கப் படவில்லை. ஒரு சம்பிரதாயத்துக்காக இங்கே இவர்கள் தமது தாய் மொழியைப் பாவித்து கல்வி கற்கவும் மற்றும் செய்திகளை படிக்கவும் ''துருக்கியின் அனைத்து மக்களுக்கும் உரிமைகள்'' வழங்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குர்திஸ்தான் இயக்கங்களின் மிகவும் பலவீனமான எதிர்ப்புக்கு பின்னர் ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணைக்குழு குருதிஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) ஒரு கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐரோப்பியக் கூட்டு உடனடியாக இக்கடிதத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொண்டது.

கீரீஸின் அழுத்தத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபை சைப்ரஸ் சச்சரவு விடயத்தில் தலையிட்டு தீர்க்க துருக்கியை ஆதரிக்குமாறும், மேலும் தேசிய உரிமை சம்பந்தமாக கீரீஸ் -துருக்கி நாடுகளின் தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் கேள்வியும் எழுந்தது.

1915 ல் ஒஸ்மானிய ஆட்சியின் கீழ் ஆர்மேனிய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு மக்கள் படுகொலை சம்பவத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம், ஒரு சம்பிரதாயமான அறிக்கையை நிறைவேற்றியது. இவ்வாறான ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை, கிளின்ரன் அரசாங்கத்தின் கீழ், ''மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கான நலன்கள்'' போன்றவற்றிற்கு பலமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. இதையிட்டு மிகவும் வெறுப்படைந்திருந்த துருக்கியின் பாராளுமன்றம் ஆர்மேனிய மக்கள் படுகொலையை நிராகரித்து ஒரு பரந்த அறிக்கையை வெளியிட்டதுடன் ஐரோப்பிய பாராளுமன்றத்தையும் வெகுவாக கண்டனம் செய்தது. முன்னைய பிரதம மந்திரியும் பழமைவாத எதிர்கட்சி (DYP) யின் தலைவி துருக்கியில் வாழும் ஆர்மேனியர்கள் நாடுகடத்தப்படல் வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

துருக்கியால் அங்கீகரிக்கப்பட்ட ''துருக்கி குடியரசின் வடக்கு சைப்ரஸ்'' இதன் தலைவரான டெங்ராஸ் (Denktas) ஐக்கிய நாடுகள் சபையுடனான (UNO) பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் ''நேரத்தை விரயமாக்குவதாகும்'' எனக் கண்டனம் செய்ததுடன் அரசாங்கம், ஜனாதிபதி, பெரிய ஜெனரல்கள் மற்றும் துருக்கியின் பராளுமன்றம் போன்றவற்றின் உடனடி ஆதரவை பெற்றுக்கொண்டது.

குர்திஸ்தான் விடயத்தில் ஆழும்மட்டத்தின் சில தலைவர்கள் பல விட்டுக் கொடுப்புகளை செய்துள்ளதாக தெரிகின்றது. ஜனாதிபதி எஸ்விற், யில்மாஸ், மற்றும் ஓச்சலானை கடத்தி வருவதை ஒழுங்கு செய்த இரகசியப் பிரிவின் தலைவரான அற்ராசுகுன் (Atasugun) போன்ற இவர்கள், அரசின் தொலைக்காட்சி சேவையில் குர்திஸ்தான் நிகழ்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்க வேண்டுமெனவும், ஓச்சலானுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை நடைமுறைப் படுத்துவதற்கு எதிராக கருத்தும் தெரிவித்தனர்.

cv (Nice) இல் நடைபெற்ற ஐரோப்பியக் கூட்டின் உச்சி மாநாட்டில் ஒரு ஜெனரல் குர்திஸ்தானியர்களுக்கு ஏதேனும் சலுகை வழங்குவதை எதிர்த்து ஆத்திரமூட்டும் அறிக்கை விட்டு எச்சரிக்கை செய்ததுடன், இச் சமயத்தில் ''சாம்பல் நிற ஓநாய் '' எனும் தேசியவாத இயக்கங்களின் கட்சிக்கு (MHP) ஆதரவு கொடுத்தார். "குர்திஸ் அடித்தளத்தை கொண்ட எமது மக்களை தனி ஒரு நாடாக அங்கீகாரத்தலும், இந்த அங்கீகாரம் அதற்கான அரசியலமைப்பு சட்டத்தில் நங்கூரம் இடப்பட்டிருத்தலும், எங்காவது எமது பிராந்தியங்கள் ஒன்றில் மாநில சுயாட்சிக்கான ஒரு நிர்வாகத்தை அமைத்து அம் மாநிலத்தின் சுயாதீனமான நிர்வாகத்தை பலப்படுத்துவது என்பதும், பயங்கரவாதிகளின் தலைவருக்கு (ஓச்சலான்) மன்னிப்பு வழங்குவது, தாய் மொழியில் (குருதிஸ்தான்) கல்வி, வானொலி தொலைக்காட்சி துறைகளை வைத்திருப்பதற்கு அனுமதிப்பது போன்றவை பயங்கரவாதத்தின் இரண்டாவது வடிவமாகவே கருதப்படும்'' என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

''இவ் விடயத்தை ஒரு கணக்கில் எடுத்துக் கொள்வதோ அல்லது இதைப் பற்றி கலந்துரையாடுவதோ ஒரு போதும் சாத்தியமில்லை என்றும், மேலும் இவ் அச்சுறுத்தல் இருக்கும் வரையிலும் படையினரின் தாக்குதலும் தொடர்சியாக இடம்பெறும் எனவும் துருக்கி ஆயுதப்படையினர் ஒரு அறிக்கையில் தெரியப் படுத்தியுள்ளனர். எனவே இராணுவத்தினர் தமது ''சண்டை'' உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் பகிரங்கமான கருத்துக்களால் '', விசேடமாக ஐரோப்பியக் கூட்டின் பகிரங்கமான கருத்துக்களால் கடினமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

துருக்கி அரசாங்கம் இராணுவ உடைதரித்த மேல் அதிகாரிகளின் எச்சரிக்கையை தான் விளங்கிக் கொண்டுள்ளதாக காட்டிக் கொண்டுள்ளது. ஐரோப்பியக் கூட்டுக்குள் பிரவேசிப்பதற்கான இம் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த அதனது அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தை மீண்டும் ஒத்திவைத்துள்ளது. வெளிவந்த பத்திரிகை செய்திகளின் படி அரசாங்கம் சமர்ப்பித்துள்ள தற்போதைய சட்டத்தின் வடிவத்தில் ''துருக்கியின் அதிரடிப் படையினர் கருத்துக்களை'' கவனத்திற்கு எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டன.

சிறைச்சாலையில் ''இறக்கும் வரை உண்ணாவிரதம் ''

கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் ''சிறைச் சாலை சீர்திருத்தம்'' பற்றியும், ''மன்னிப்பு'' பற்றியும் பாரதூரமான மோதல்கள் நடைபெற்றன.

பல நூற்றுக்கணக்கான இடதுசாரி அரசியல் சிறைக் கைதிகள், அவர்களில் ஒரு பகுதியினர் கடந்த இரண்டு மாதங்களாக உண்ணாவிரதம் அல்லது அவர்களே கூறிக்கொள்ளுவது போல் ''இறக்கும் வரை உண்ணாவிரதம்'' இருக்கின்றனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலை முறைக்கு எதிராகவும், மனிதாபிமான முறையில் நடத்தும் சிறைக்கு தம்மை மாற்றும்படி கேட்கின்றனர். இதுவரையில் 60 கைதிகள் ஒரு அறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர், புதிதாக கட்டப்பட இருக்கும் F எனும் கட்டிடத்தில் ஒரு அறையில் மூவர் அடைத்து வைக்கப்படுவர் என தெரியவருகிறது. இவ்வாறான தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் கைதிகள் சித்திரவதையும், கொலைகளும் முன்னரை விட அதிகரித்து விடுமெனவும் அஞ்சுகின்றனர்.

முன்னைய சமூக ஜனநாயகவாதியும், பாராளுமன்றத்தின் மனித உரிமைச் சங்கத்தின் தலைவருமான சேமா பிஸ்கின்சூற் (Sema Piskinsüt) ஆல் இவ்விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கூட்டத்தில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் பெரும்பான்மையோர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களிலிருந்து வந்தோர் ஆவர், அவர்களில் 90 வீதமானோர் சித்திரவதைக்குள்ளாகின்றனர் எனக் குறிப்பிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்னால்தான் பிஸ்கின்சூற் அவரது பதவியை விட்டு நீக்கப்பட்டார். அவர் முன்னறிவித்தல் இல்லாது பொலிஸ் நிலையங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயங்களில் அனைத்து இடங்களிலும் மிகவும் திட்டவட்டமான முறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தவை நீருபிக்கப்பட்டன. மேலும் அவருக்குப் பின் இப் பதவியில் தேசியவாத இயக்கங்களின் கட்சியைச் (MHP) சேர்ந்த ஒரு உபதலைவர் அமர்த்தப்பட்டார். அவர் உடனேயே இப்படியான சோதனைகளை நிறுத்திவிட்டார்.

கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் மிகவும் கடுமையாக கையாண்டதுடன் புதிய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் காலவரையறையை ''மாற்றிக்கொள்ள'' உடன்பட்டது. இதற்கு உண்ணாவிரத சிறைக் கைதிகளிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. டிசம்பர் 14 ந் திகதி குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் (PKK) சேர்ந்த 64 அங்கத்தவர்கள் தம்முடைய உண்ணாவிரத்தை கைவிட்டதாக தெரியவருகிறது. தேசியவாத இயக்கங்களின் கட்சி (MHP) யின் உபதலைவர் ''அவர்களை சாகவிடு '' என பகிரங்கமாக கூறினார்.

ஐக்கியத்திற்கான ஊர்வலம் சாம்பல் நிற ஓநாய் (MHP) களால் தாக்கப்பட்டதுடன் பொலிசார் பலவந்தமாக கலைக்கப்பட்டனர். ஒல்லாந்தில் (Holland) நடைபெற்ற மற்றுமொரு ஐக்கியத்திற்கான கூட்டத்தில் ஒரு இடதுசாரி கொலை செய்யப்பட்டார். இக் கொலையாளி அனேகமாக சாம்பல் நிற ஓநாய்களால் ஒழுங்கு செய்யப்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

பழமைவாத தாய்நாட்டுக்கான கட்சி (ANAP) யினரால் ஆளுமை செய்யப்படும் துருக்கியின் உள்நாட்டு அமைச்சு டிசம்பர் 13 ல் ''சாகும் வரை உண்ணாவிரதம் அல்லது அதையொத்த நடவடிக்கைகள் போன்றவற்றை பயங்கரவாதக் கட்சியை வழி நடத்துவதற்கான முறைகள் எனக் கூறியும், இதனூடாக பயங்கரவாதத்திற்கான ஆதரவை பெறுவதே இவர்களுடைய நோக்கம் எனவும் மேலும் இவ்விடயத்தில் அக்கறையுள்ள அரசுகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதையிட்டு மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.'' எனும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி எஸ்விற் ''மரணம் ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பெடுக்க முடியாது. இம் மரணத்திற்கு காரணமாக இருந்த இவர்களுடைய நண்பர்களே இதற்கான பொறுப்பை எடுக்க வேண்டும்.'' என அதே நாளில் தெரிவித்தார்.

சட்டத்திற்கும் நீதிக்குமான மந்திரி கிக்மெற் சாமி ரூர்க் (Hikmet Sami Türk), வியாழனன்று, பத்திரிகைகளுக்கு விடுத்த செய்தியில், உண்ணா விரதத்தை பரப்புவதற்கான செய்திகளை வெளியிடக் கூடாதென அரசின் பாதுகாப்பு நீதி அமைச்சு முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் இது அரசாங்கத்தின் மரியாதையை பாழடிக்க கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வலதுசாரி பொலிசாரின் ஊர்வலங்களை காணக்கூடியதாக இருந்தது. பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பொலிசார் காயமடைந்ததால், ஆயிரத்துக்கும் அதிகமான பொலிசார் அன்றைய நாள் பூராவும் அவர்களுடைய அரசாங்கத்தினதும், மற்றும் பெரிய தலைமைகளினதும் கட்டளைகளை எல்லாம் மீறிக்கொண்டு தெருவில் சட்ட விரோதமான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் குதித்தனர். அவர்கள் ஆயுதங்களையும், துருக்கியின் தேசியக் கொடிகளையும் கைகளில் ஏந்தியவாறு தேசிய கீதத்தை பாடிக்கொண்டு தெருவில் பத்திரிகைக்காரர்களை தாக்கினர், அரசாங்கத்தை மிகவும் மோசமாக திட்டித் தீர்த்தனர். அரசாங்கத்தின் உள்நாட்டு அமைச்சு மற்றும் நீதித்துறையின் மந்திரிமார்களை பதவிவிலகுமாறு கத்தினர்.

அவர்களின் ஏனைய கோசங்களாவன: ''பழிக்குப் பழி '', ''கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்லு'', ''பொலிஸ்காரர்களை சிறையில் அடைத்து, கொலைகாரர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்''. இறுதியானது சிறைக்கூடங்கள் அளவுக்கு அதிகமாக நிரப்பப்பட்டதால் மன்னிப்புக்கான சலுகைகளை பெற்று 30.000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிரானதாகும். இவ்வாறான மன்னிப்புகள் சாதாரண குற்றவாளிகளுக்கும், அரசியல் கைதிகளுக்கும் வழங்கப்பட்டது. மற்றும் இடதுசாரிகள், குர்திஸ்தானிய இஸ்லாமிய தலைமறைவு இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும், ''துரோகிகளான'' ஓச்சலான் போன்றோருக்கு வழங்கப்படவில்லை.

தேசியவாத இயக்கங்களின் கட்சி (MHP) யின் பலமான எதிர்ப்பிற்கு எதிராக நீதித்துறையின் மந்திரி சித்திரவதைக்காக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸாருக்கு வழங்கிய மன்னிப்பை பின்வாங்கிமையால் பாசிசவாதிகளினதும் பொலிசாரினதும் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டியிருந்தது. கொலை செய்ததற்காக தீர்ப்பு வழங்கப்பட்ட தேசியவாத இயக்கங்களின் கட்சி (MHP) யின் உபதலைவரான அலி குங்கோருக்கு (Ali Güngör), எஸ்விற் ''துரோகிகளுக்கு மன்னிப்பு'' வழங்க பழக்கப்படுகின்றார் எனக் கூறினார்.

Üரசியல் பின்னணி

இராணுவத்தினதும், அதிதீவிர வலதுசாரிகளினதும் இவ்வாறான கோபத்துக்கும் ஆத்திரமூட்டலுக்கும் காரணத்திற்கான ஒரு பகுதி வெளிநாட்டு அரசியலை கருத்தில் கொண்டாகும். அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன் ஆர்மேனியன் தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரசில் எதிர்த்ததற்கு காரணம் மத்திய கிழக்கின் பதட்டமான சூழலில் இச் சக்திகளை ஆத்திரமூட்டாமல் பார்த்துக் கொள்வதும், துருக்கியை அப் பகுதிகளில் மேற்கத்தைய நாடுகளில் ஒரு முன்னோடியாக ஆயுத மேலாதிக்கத்துக்கான ஒரு இராணுவமாக நிறுத்துவதற்காகும். ஐரோப்பிய கூட்டு அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் போன்றே மேலும் அதிகளவில் அந்நாட்டை இராணுவ மயப்படுத்த விரும்புகிறது, ஆனால் அதேசமயம் துருக்கி அரசாங்கத்துள் குர்திஸ் - தேசியவாதிகள் மற்றும் இஸ்லாமிய சக்திகளை இணைப்பதன் ஊடாக பலப்படுத்தவிரும்புகிறது.

துருக்கியின் வெளிநாட்டு அரசியலின் வல்லுனர்கள் அமெரிக்காவில் ஜோர்ச் W.புஷ் இன் கீழ் தமது இராணுவ கூட்டு வேலயை மேலும் வலுப்படுத்தமுடியும் என எதிர்பார்கின்றனர். அவருடைய தந்தையான ஜோர்ச் புஷ் உடன் நோயாளியான துருக்கியின் பிரதமர் ஓஸ்ஸால் (Özal ) நண்பராக இருந்த காலத்தில் ஈராக்குக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கி அப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொலிஸ்காரனாக இயங்கியது.

உள்நாட்டு அரசியலின் பாரதூரமான விளைவுகள் எவ்வகையிலும் குறைந்தளவிலானதல்ல. சர்வதேச நாணய நிதியத்தினதும் (IMF), ஐரோப்பியக் கூட்டினதும் (EU) கோரிக்கைகள் மக்கள் தொகையில் மிகவும் பரந்த தட்டினரை ஏழ்மையுள்ளும் வறுமையுள்ளும் தள்ளுகின்றனர். ஆளும் வர்க்கத்தில் மிகவும் சலுகை படைத்த தட்டினர் பாரம்பரியமான ஆளும் கட்டுமானங்களில் மாற்றங்களை ஏற்படுத்த அஞ்சுகின்றனர். ஊழல், சலுகை, மக்கள் மீதான அதிகாரம் போன்றவற்றில் தங்கியுள்ள அவர்களின் ஆதிக்கம் இதனால் ஆட்டம் கண்டுவிடும் என அஞ்சுகின்றனர். அத்துடன் அரசிலிருந்தும் அதனது உத்தியோக பூர்வமான அரசியலில் இருந்தும் அந்நியமாகிக் கொண்டு போகும் மக்களின் சுயாதீன எழுச்சியை உருவாக்கிவிடுமெனவும் கவலைப்படுகின்றனர். இக் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் எஸ்விற்றும், (Ecevit) ஜில்மாசும் (Yilmaz) வலதுசாரிகளுக்கும், இராணுவத்துக்கும் எதிராக முக்கியமாக ஒன்றும் செய்வமுடியாமலும், இயலாதவர்களாகவும் உள்ளனர்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved