World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

New security measures turn Sri Lanka's plantation areas into a virtual war zone

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இலங்கை தோட்டத்துறையை அடியோடு யுத்தப் பிரதேசமாக மாற்றியுள்ளது

By K. Ratnayake
19 January 2001

Back to screen version

கடந்த இருமாத காலங்களாக இலங்கையின் பொதுஜன முன்னணி அரசாங்கம் இருபது லட்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மத்திய மலையகப் பிரதேசமான நுவரெலியாவில், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது. யுத்தப் பிரதேசமான வடக்குக் கிழக்கில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பாதுகாப்பு சோதனைகள், பதிவுகள் போன்ற நடவடிக்கைகள் உட்பட புதிய இராணுவ முகாம்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் இப்பிரதேசத்தில் இடம்பெறுவதைக் காணலாம்.

தலவாக்கலையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இராணுவ முகாமொன்று உருவாகியுள்ளது. ஏறத்தாள 50 இராணுவத்தினர் அங்கு தங்கியிருந்து நாளாந்தம் இரவு நேரக் காவலில் ஈடுபடுகின்றனர். 1986ல் இதே இடத்தில் ஓர் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த போதும், ஒரு இராணுவ வீரன் ஒரு தமிழ் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கிளர்ச்சியின் பேரில் முகாமை மூடிவிட நேர்ந்தது.

அட்டனிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள காசல்றீ பகுதியிலும் 25 பேரைக் கொண்ட இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது. முன்னர் அங்கு ஒரு இராணுவ சோதனை நிலையம் மாத்திரமே காணப்பட்டது. அதே சமயம் அட்டனில் பொலிஸ் கமாண்டோக்கள் 25 பேரைக் கொண்ட ஒரு கொமான்டோ பிரிவும் உள்ளது. பொலிஸ் கமாண்டோக்கள், இராணுவப் பயிற்சி பெற்றுள்ளதுடன் "அவசரகால நிலைமையில்" பயன்படுத்தப்படுவார்கள். நுவரெலியா மாவட்டத்திலுள்ள பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற பிரதேசங்களிலும் இராணுவ முகாம்கள் நிறுவப்பட உள்ளன.

தோட்டத் துறையில் ஓர் புதுவிதமான "விசேட பதிவு முறை காணப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் கண்டியில் கலகா பகுதியில் தோட்ட தொழிற்சங்க தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டிய பொலிசார் ஒவ்வொரு குடும்பமும் தமது குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களுடன் கூடிய புகைப்படங்களை தமது வீடுகளில் தொங்கவிடவேண்டும் என்றும் புகைப்பட பிரதி ஒன்று பொலிசாரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இன்று இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சகல இலங்கை பிரஜையும் தேசிய அடையாள அட்டை ஒன்றுடன் நடமாடவேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான டி.எம்.ஜயரத்ன கண்டி மாவட்ட பிரதேசங்களான கம்பளை, கலகா, தொளஸ்பாகை, மற்றும் நுவெரெலியா பகுதியின் ஹங்குராங்கத்த பிரதேசத்துக்கும் அரசாங்கம் விசேட அடையாள அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார். இதன் நிஜமான நோக்கம் தெளிவுபடுத்தப்படாவிட்டாலும் வடக்குப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் இத்தகைய விசேட அடையாள அட்டைகளை இராணுவம் வழங்கி அப்பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு படைகள் தோட்டத்துறை பூராவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உத்தரவிட்ட மறுகணமே நடவடிக்கையில் இறங்கும் வகையில் அட்டனில் உள்ள கமாண்டோ பொலிஸ் படைகள் உஜார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தலவாக்கலை அட்டன் போன்ற அதாவது கலவர பகுதிகளெனக் கூறப்படும் இப்பகுதிகளில் இப்போது தினசரி காவல் முறை நடைமுறையில் உள்ளது. கொழும்பில் இருந்து அட்டனுக்கான பிரதான வீதியில் உள்ள காவல் நிலையங்கள் பலப்படுத்தப்பட்டு பொதிகள், வாகனங்கள் உட்பட பிரயாணிகளும் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்தக் கடுமையான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கடந்த அக்டோபர் இறுதியில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமிலிருந்த 29 தமிழ் கைதிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் கிளர்ந்த எதிர்ப்பின் விளைவாக ஏற்பட்டவையாகும்.

ஒரு சிங்கள குண்டர் குழு புனர்வாழ்வு முகாமுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை அடித்து கொலை செய்தது. இந்த குண்டர் கும்பல் வெறித்தனமாக நுளைந்து தாக்கும்போது பொலிசார் அங்கு இருந்ததுடன் தப்பி ஓடி தம்மை பாதுகாத்துக்கொள்ள முயன்ற கைதிகள் பலரையும் சுட்டுக் கொன்றனர். இந்த படுகொலைகளைப் பற்றிய செய்தி வெளியானதுதான் தாமதம் தோட்டத்துறையிலும் வடக்கு கிழக்கிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நுவரெலியா மாவட்டம் முன்நின்றது. கொலையுண்டவர்களில் நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரான கொட்டகலையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுக் கைதியும் அடங்கியிருந்தார். முழு மாவட்டத்திலும் பரந்து காணப்பட்ட எதிர்ப்பின் தாக்கத்தால் பல்லாயிரக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள்- வெள்ளைக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் ஈடுபட்டனர். பரந்தளவிலான ஹர்த்தால் ஒன்றுக்கான வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. நகரெங்கிலும் "பிந்துனுவெவ படுகொலைகளை எதிர்ப்போம்", "தமிழர் படுகொலைகளை நிறுத்து", "கொலையாளிகளை அரசாங்கம் கண்டுபிடி" போன்ற சுலோகங்கள் கொண்ட சுவரொட்டிகள் பதாகைகள் நிறைந்து காணப்பட்டது.

சிங்கள சோவினிஸ்டுகளும் பாதுகாப்பு படையினரும் வன்முறையில் இதற்கு பதிலளித்தனர். பொலிஸ், இராணுவத்தின் ஆதரவுடன் சிங்கள தீவிரவாதிகளின் உடல்ரீதியான இனவாத ஆத்திரமூட்டல் தாக்குதல்களுக்கு, தலவாக்கலை, கொட்டகலை, வட்டவளை, வட்டகொட, கினிகத்தேன ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலக்காகினர்.

பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ததுடன் பல்வேறு சம்பவங்களில் ஆறுபேரை சுட்டுக் கொன்றுள்ளனர். தமிழ் இளைஞர்கள் பின்வாங்குகையில் இனவாத கும்பல்கள் தமிழர்களுக்கு சொந்தமான கடைகளை கொள்ளையடித்தும் தீமூட்டியும் வெறியாடினர்.

இதனைத் தொடர்ந்து அலை அலையாக இடம்பெற்ற கைதுகள், உள்ளூர் பொலிஸ் சுப்பிரிண்டென்ட் 27 தொழிலாளர்களை தன்முன் சமூகமளிக்குமாறு விடுத்த உத்தரவை வாபஸ்பெறக் கோரி பொகவந்தலாவையின் டின்சின் தோட்டத் தொழிலாளர்கள் நவம்பர் 13ம் திகதி வேலைநிறுத்தத்தில் இறங்கியதோடு முடிவுக்கு வந்தன. இறுதியில் பொலிசார் பெயர்பட்டியலை வாபஸ்பெறத் தள்ளப்பட்டாலும் வேறு 68 தொழிலாளர்களை சுமார் ஒரு மாத காலத்துக்கு தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.

சிங்கள சோவினிச கட்சியான சிங்கள உறுமய இந்த கிளர்ச்சிகளை பயன்படுத்தி தோட்டப் புறத்தில் சிங்கள மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது. இந்த கட்சி "பயங்கரவாதிகள் மத்திய மலைநாட்டில் இருந்தும் சிங்களவரை விரட்டியடிக்கிறார்கள்" என கூச்சலிட்டு இனவாத அறிக்கைகளை விடுப்பதன் மூலம் இனவாதப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு இராணுவம் நிலைகொள்ள வேண்டும் எனக் கோரியது.

கொழும்பில் உள்ள அரசாங்க- தனியார் ஊடகங்களும் இந்த காரணத்தை பொறுக்கி எடுத்து கூப்பாடு போட ஆரம்பித்தன. தோட்டத்துறையில் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளார்கள் எனவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமெனவும் கோரி மாதக்கணக்காக அவை கிளர்ச்சியில் ஈடுபட்டன.

பிரித்தானிய குடியேற்றவாதிகளால் தேயிலை றப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கென தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள், வெகுகாலமாக சிங்கள அரசியல்வாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். 1948 சுதந்திரத்தின் பின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அவர்களை வந்தேறு குடிகளாக்கி தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்தது. 1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (தற்போதைய பொதுஜன முன்னணியின் தலைமைக் கட்சி) ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு அனுப்பவும் ஒரு சிலருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது என இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. 84000 தோட்டத் தொழிலாளர்கள் இன்று எந்த ஒரு குடியுரிமையும் அற்றவர்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய தமிழர்களைப் போலவே தோட்டத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் தொடர்ந்தும் படிப்படியான பலிவாங்கல்களுக்கும், பாரபட்சமான காட்டுமிராண்டி பாதுகாப்பு கெடுபிடிகளைக் கொண்ட ஆட்சியின் கீழ் வாழ்கின்றார்கள். இரண்டு தசாப்தங்களாக அவசரகால சட்டவிதிகள் மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு அமுல் செய்யப்படுவதுடன் அதன் மூலம் பொலிசாரதும் இராணுவத்தினரதும் கை பலப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விசேடமாக தமிழர்கள் "எல்.ரி.ரி.இ இன் சந்தேக நபர்களாக" எந்த ஒரு விசாரணையும் இன்றி வருடக்கணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அடிப்படை ஜனநாயக உரிமை மறுப்பும், அதிகரித்து வரும் வறுமையும், வேலையின்மையும், வெற்று வாக்குறுதிகளை வழங்கி -நீண்ட கால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டி வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்வோம்- 1994ல் ஆட்சியேறிய பொதுஜன முன்னணிக்கு எதிராக ஆத்திரத்தையும் அதிருப்தியையும் பரந்தளவில் தூண்டிவிட்டுள்ளன.

பிந்துனுவெவ கொலைகளையிட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பதிலடியானது கொழும்பு நிர்வாகத்திற்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டங்கள் வேலைநிறுத்தங்கள் என்பவற்றுகு எதிரான அரசாங்கத்தின் தடைகளையும் மீறி குறைந்த சம்பளம், வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கு எதிரான தோட்டத் தொழிலாளர்களது இரு பெரும் வேலைநிறுத்தங்கள் ஏற்கனவே மே மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் இடம்பெற்றிருந்தன. செப்டம்பரில் இடம்பெற்ற வேலைநிறுத்தம் அரசாங்கம் தனியார் துறையினருக்கு வழங்கிய சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க மறுத்ததன் பேரில் இடம்பெற்றதாகும்.

தமிழ் கைதிகளின் படுகொலையின் பின்னர் நடந்த எதிர்ப்புகள் வெறுமனே உடனடி பொருளாதார கோரிக்கைகள் சம்பந்தப்பட்டவையாக அன்றி, அரசாங்கத்துக்கும், பாதுகாப்பு படைக்கும் எதிராக தொடுக்கப்பட்ட அரசியல் ரீதியில் பண்புரீதியான எதிர்ப்பாக விளங்குகின்றன. அது இவ்வாறான கிளர்ச்சிகளுக்கு தயக்கத்துடன் தன்னும் ஆதரவளிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தொழிற்சங்கத் தலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்களிடையே அபிவிருத்தியடைந்த அரசியல் ரீதியான பண்பைக் கொண்ட எதிர்ப்பின் வெளிப்பாடாகும்.

இந்த புதிய பாதுகாப்பு விதியானது தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் பரந்தளவில் தலையீடு செய்யவும் தாக்குதல் நடாத்தவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னர் சிங்கள இனவாதிகளிடமிருந்து தமிழர்களை இராணுவமும் பொலிசும் காப்பாற்றும் என வாதாடியபடி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பன தொழிலாளரை புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்குமாறு வற்புறுத்துகின்றன. பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பி.சந்திரசேகரன் முதலாவதாக ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர். மேலும் ஒருபடி முன்னேறி ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய தொழிலாளரை வளைத்துப் பிடிக்க பொலிசாருடன் ஒத்துழைக்கின்றார்.

பிந்துனுவெவ கொலையை தொடர்ந்து அரசாங்கமும் ஊடகங்களும் சிங்கள குண்டர்களை தமிழ் கைதிகளை கொலை செய்ய "ஆத்திரமூட்டிய" "மறைந்த கரம்" ஒன்றை குற்றம் சாட்டுகின்றன. தோட்டத் தொழிலாளர்கள் நாச வேலைகளுக்கு எதிராக போராடுகையில், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் போது எல்.டி.டி.ஈ. யினரின் வேலை எனக் கலவரத்தை தூண்டி விட பாதுகாப்பு படையும் சிங்கள குண்டர்களும் கூறிவந்தனர். இந்தப் பிற்போக்குத் தர்க்கமே தோட்டப்புறத்தில் அமைக்கப்படும் புதிய பாதுகாப்பு அரண், இராணுவ முகாம்கள் என்பவற்றுக்கு பின்னணியில் உள்ளன.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved