WSWS :செய்திகள்
& ஆய்வுகள்:ஆசியா:
இலங்கை
Sri Lanka's budget: hoping for peace and planning
for war
இலங்கை வரவு செலவுத் திட்டம்: எதிர்பார்ப்போ
சமாதானம், திட்டமோ யுத்தம்
By K. Ratnayake
22 March 2001
Back
to screen version
பிரதி நிதியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மார்ச் 8ம் திகதி
இலங்கை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கையில் மொத்தத்தில்
அரசாங்கக் கொள்கை ஊடாகப் பயணம் செய்து கொண்டுள்ள
ஒரு மைய முரண்பாட்டைக் காட்டிக் கொண்டுள்ளார். 1994ல்
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுஜன முன்னணி அரசாங்கம், நீண்ட
உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டுவதாக வாக்குறுதி அளித்து
வந்துள்ளது. இந்த யுத்தம் சமூக, பொருளாதார வாழ்க்கையின்
சகல அம்சங்களிலும் ஒரு பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்திய
போதிலும் அது முற்றுப் பெறாது தொடர்ந்ததோடு, மோதுதல்களும்
உக்கிரம் கண்டது.
அமைச்சர் பீரிஸ் கடந்த 18 ஆண்டுகால தமிழ் சிறுபான்மை
மக்களின் ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்ய அன்றைய
பொதுஜன முனன்ணி அரசாங்கத்தினாலும் முன்னைய ஐக்கிய தேசியக்
கட்சி அரசாங்கத்தினாலும் நடாத்தப் பெற்ற நச்சுத்தனமான
யுத்தத்தின் பிரமாண்டமான பொருளாதார செலவீனங்களை புள்ளி
விபரங்களுடன் எடுத்துக் காட்டினார். ஆதலால் "நாடுபூராவும்
பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஒரு சமாதான தீர்வு
அவசியமாகியுள்ளதாக" கூறிய அவர், அது ஒரு "தேசிய முன்னுரிமை"
ஆகவேண்டும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் அதே சமயம் அமைச்சர்
தொடரவுள்ள பிரமாண்டமான இராணுவ செலவீனங்களை நிதியீட்டம்
செய்யப்போகும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டு வைத்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
கடும் நிதிக் கட்டுப்பாடுகளுக்கு அமைய பிரமாண்டமான
பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் என்பது உயர்ந்த அளவிலான
வரி விதிப்புக்கள், தனியார்மயத்தின் விஸ்தரிப்பு, சமூக சேவை வெட்டுக்கள்,
இன்னும் பல சிக்கன நடவடிக்கைகளை குறித்து நிற்கிறது. அரசாங்க
ஊழியர்கள் அடுத்த வரவு செலவுத் திட்டம் வரை- சம்பள ஆணைக்
குழுவினது சிபார்சுகளும் ஓய்வூதிய கமிட்டியின் அறிக்கையும் வெளிவரும்
வரை- காத்துக்கிடக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பேசுகையில் பீரிஸ் கூறியதாவது:
"அரசாங்கம் மக்களை குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்காவது
சலுகைகளை கேட்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எமது
பொருளாதார அடிப்படைகளைப் பலப்படுத்த எம்முடன்
முழுதாக ஒத்துழைக்கும்படியும் வேண்டுகின்றது" என்றார்.
குறைந்த சம்பளம், உயர்ந்த விலைகள் மூலம் "அடிப்படைகளைப்
பலப்படுத்தப்" போகிறவர்கள், தவிர்க்க முடியாத விதத்தில்
ஏற்கனவே யுத்தத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெரும்பான்மை
தொழிலாளர்களும் சிறிய விவசாயிகளும் ஏழைகளுமேயாவர்.
அரசாங்கம் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தின்
பேரில் 7500 கோடி ரூபாக்கள் (862 மில்லியன் டாலர்கள்) அல்லது
மொத்த அரச செலவீனத்தில் 22 சதவீதத்தை ஒதுக்கிக் கொண்டுள்ளது.
இது அரசாங்க சுகாதார, கல்வி சேவைகளின் பேரில் ஒதுக்கீடு
செய்யப்பட்ட 4300 கோடி ரூபாக்களின் (ஏறக்குறைய) இருமடங்காகும்.
பாதுகாப்பு வரவு செலவுத்திட்டம் கடந்த ஆண்டின் ஒதுக்கீட்டை
விட -5200 கோடி ரூபாக்கள்- கணிசமான அளவு அதிகமானது ஆகும்.
ஆனால் கடந்த ஆண்டின் நிஜமான இராணுவச்
செலவீனமான 8300 கோடி ரூபாக்களை விடக் குறைவானது.
ஆயுத செலவீனத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான அதிகரிப்பு- பிரிவினைவாத
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கடந்த ஏப்பிரல், மே மாதங்களில்
ஏற்பட்ட ஒரு தொகை இராணுவத் தோல்விகளைத் தொடர்ந்து
உருவானதாகும்.
அரசாங்கம் இன்னமும் கடந்த ஆண்டில் கொள்வனவு
செய்யப்பட்ட குண்டு வீச்சு விமானங்கள், பீரங்கிப் படகுகள், பீரங்கிகள்,
பல்குழல் ஏவுகணைகள் இன்னும் பல இராணுவத் தளபாடங்களுக்காக
பணம் செலுத்தி வருகின்றது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரவு
செலவுத் திட்டத்துக்கு முந்திய மதிப்பீடுகளில் பாதுகாப்பு ஒதுக்கீடுகள்,
6300 கோடி ரூபாக்களாக விளங்கியது. ஆனால் வரவு செலவுத் திட்டம்,
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது இந்த புள்ளி
மேலும் 1200 கோடிகளால் அதிகரித்தது. இது ஆயுதக் கொள்வனவுகளின்
பேரில் ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளை ஈடுசெய்ய ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
இந்த அதிகரித்த பாதுகாப்புச் செலவீனம் உயர்ந்த
வரிகள் மூலம் செலுத்தப்படுகின்றது. அரசாங்கம் தேசிய
பாதுகாப்பு வரியை (NSL)
-பல பண்டங்கள் மீதான மறைமுக வரி- 1சதவீதம் தொடக்கம்
7.5 சத வீதத்தினால் அதிகரித்துள்ளது. இது 610 கோடி ரூபாக்களை
ஈடு செய்யும் பொருட்டு முன்னர் வரி விலக்களிக்கப்பட்ட பண்டங்களை
வரிவிதிப்பினுள் சேர்த்துக் கொண்டுள்ளது. இது கம்பனி அதிகரித்த வரியை
(Surcharge)
20 சதவீதத்தினால் கூட்டியுள்ளது. தைத்த ஆடைகள் மீதான ஏற்றுமதி
வரி அதிகரிக்கப்பட்டுள்ள அதே சமயம் நாட்டை விட்டு வெளியேறும்
வரி (International departure Tax)
இரட்டிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகக் குழுக்கள் இந்த வரி அதிகரிப்பையிட்டு
முறைப்பட்டுக் கொண்டுள்ளன. இதனால் சேமிப்பும் முதலீடும்
பாதிக்கப்படும் என அவை தெரிவித்தன. ஆனால் ஏனைய வரி
அதிகரிப்புக்களைப் போல் இது பண்டங்களின் அதிகரித்த விலைகளாகவும்
சேவைகளாகவும் மாறும். இவை ஏற்கனவே பெருமளவில் அதிகரித்துக்
கொண்டுள்ளன. ஜனவரியில் ரூபா மிதக்க விடப்பட்டதைத் தொடர்ந்து
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஜனவரியில் 2693 புள்ளிகளாகவும்
(104.5 அதிகரிப்பு) பெப்பிரவரியில் மற்றுமொரு 45.3 புள்ளிகளாலும்
அதிகரித்தது. ஜனவரி- பெப்பிரவரி மாதங்களில் அரிசி, பருப்பு, சீனி
போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏறக்குறைய 30
சதவீதத்தினால் அதிகரித்தது.
இலங்கை வர்த்தக மன்றம் (Ceylon
Chamber of Commerce) அரசாங்கத்துக்கு
அனுப்பிய கடிதத்தில் அப்பட்டமாக கூறியதாவது: "மொத்தத்தில்
இந்த வரவு செலவுத் திட்டம் தனியார் துறையின் நோக்கினை அல்லது
அரசாங்கத்தின் 2010க்கான பார்வையை வழங்கும் என நாம்
நினைக்கவில்லை... அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்ட இலக்குகளை
அடைய இது உதவும் எனவும் நாம் நம்பவில்லை. ஏனைய வர்த்தகத்
துறை தலைவர்கள் "பொருளாதார அதிர்ச்சியை ஆரம்பம்"
ஆகச் செய்யத் தவறியமைக்காக வரவு செலவுத் திட்டத்தை விமர்சனம்
செய்தனர்.
அரசாங்க கடன்சுமை
வரவு செலவுத் திட்டத்தில் உள்ள பெரிய தனியொரு
அம்சமாக கடன் மீளக் கொடுப்பனவு விளங்குகின்றது என்ற உண்மை,
அரசாங்கத்தின் பரிதாபமான நிதி நிலைமையை அம்பலமாக்கியுள்ளது.
9100 கோடி ரூபாக்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(GDP)
9.4 சதவீதம் கடன் மீளக் கொடுப்பனவாகும். இது கடந்த
வருடத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமானது. கடன் மீளக்
கொடுப்பனவையும் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தையும்
ஒன்றாகக் கொள்ளின் அது அரசாங்கத்தின் மொத்த திட்டமிட்ட
செலவீனத்தின் அரைவாசிக்குச் சமமானது.
அரசாங்கம் 6900 கோடி ரூபாக்களை உள்ளூர்
நிதிச் சந்தைகள் ஊடாகவும் மற்றொரு 2100 கோடி ரூபாக்களை
வெளிநாட்டு மூலங்கள் மூலமும் திரட்டத் திட்டமிட்டுள்ளது. வட்டி
வீதத்தை ஏற்கனவே 26 சத வீதமாக உயர்த்தியுள்ள அரசாங்கக்
கடன் திரட்டல், இதை மேலும் அதிகரிக்கலாம் என உள்ளூர் வர்த்தகர்கள்
அஞ்சுகின்றனர்.
அரசாங்கம் 400-450 மில்லியன் டாலர்களுக்கு
இடைப்பட்ட தொகையை வெளிநாட்டுக் கடனாக சேகரிக்க
அந்தரப்படுகிறது. நாட்டின் வெளிநாட்டு வைப்புக்களை நிரப்ப
இது அவசியப்படுகிறது. இது கடந்த வருடம் பிரமாண்டமான
ஆயுதக் கொள்வனவு செலவீனங்களாலும் எண்ணெய் விலை அதிகரிப்பாலும்
ஒரு பயங்கரமான மட்டத்துக்கு வீழ்ச்சி கண்டது. கடன்களைப்
பெற்றுக் கொள்ள இந்த வரவு செலவுத் திட்டம், சர்வதேச
நாணய நிதியத்தின் கடும் நிபந்தனைகளை இட்டு நிரப்ப வரையப்பட்டுள்ளது.
அத்தோடு பற்றாக்குறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
8.5 சதவீதத்தை இலக்காக்கிக் கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை வதிவிட
பிரதிநிதி நடீம் உல் ஹக் இந்த வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றுப்
பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: "பேராசிரியர் பீரிஸ்
தமது வரவு செலவுத் திட்ட உரையில் உழைப்பு சந்தை, நிதித்துறை,
சிவில் சேவை, கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதையிட்டு
மகிழ்ச்சியடைகின்றேன்" மின்சாரம், நீர், தொலைபேசி, போக்குவரத்து,
அரச திணைக்களங்களில் மேலதிக நேர (OT)
செலவீனங்கள் வெட்டப்படும். இது வழங்கப்பட்டு வந்த சேவைகளின்
அளவையும் தரத்தையும் குறைக்கும்.
பீரிஸ் "பொருளாதார ரீதியில் நின்று பிடிக்கக்
கூடிய" பொது நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது பற்றியும்
நின்றுபிடிக்க முடியாதனவற்றை இழுத்து மூடவும் போவதாக அறிவித்தார்.
"35 நிறுவனங்கள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும், கலைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் இலங்கை ரெலிகொம்மின் எஞ்சியுள்ள பங்குகளை விற்பனை
செய்யவும் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தபானம்,
துறைமுக அதிகாரசபை -இவை அனைத்தும் பெரிதும் இலாபம்
தரும் நிறுவனங்கள்- மறுசீரமைப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அத்தோடு அரசுடமையான வர்த்தக வங்கிகளும் மத்திய வங்கியும்
இந்த "மறுசீரமைப்பில்" சேர்ந்து கொண்டுள்ளன. இந்தப்
போக்கில் பல்லாயிரக் கணக்கான வேலைகள் ஒழிக்கப்படும்
ஆபத்து இருந்து கொண்டுள்ளது.
வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனத்தில் ஒரு நீண்டகால
கோரிக்கையை இட்டு நிரப்பும் விதத்தில் அரசாங்கம்
தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பகிரங்க விடுமுறைகளின் எண்ணிக்கையை
குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. "இருந்து வரும் விடுமுறைகளை
ஒருமுகப்படுத்தும் விதத்தில்" தனியார் துறை, அரசாங்கத்
துறை விடுமுறை தொடர்பான சட்டங்களை அரசாங்கம் திருத்த
உள்ளது.
யுத்தத்தின் தாக்கம்
பெரும் வர்த்தக நிறுவனங்களின் கணிசமான பகுதியினரின்
ஒரு பெரிதும் அடிப்படையான குறைபாடு, அரசாங்கம் யுத்தத்தை
முடிவுக்குக் கொணரத் தவறியுள்ளது என்பதேயாகும். இலங்கை
வர்த்தகக் கைத்தொழில் சம்மேளனத்தின் உப தலைவர் நிஹால்
அபேசேகர மார்ச் 12ம் திகதி நடைபெற்ற ஒரு கருத்தரங்கில்
பேசுகையில் வரவு செலவுத் திட்டம் பொருளாதார அபிவிருத்தியை
அல்லாது "ஒரு யுத்த பொருளாதாரத்தின்" சக்கரங்களை
இயக்குவதில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டை பிரதிபலிக்கின்றது எனக்
குறிப்பிட்டார். "நாம் இப்படியே தொடர்ந்து சென்றால்
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இன்னும் பல பிரச்சினைகளுக்கு
முகம் கொடுக்கும்" என அவர் குறிப்பிட்டார்.
பீரிஸ் தமது வரவு செலவுத் திட்ட உரையில் யுத்தத்தின்
நாசகாரத் தாக்கங்களை சுட்டிக் காட்டினார்: யுத்தத்தின்
செலவை மறுப்பது அல்லது புறக்கணிப்பது மடைத்தனமானது.
1980பதுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.5 சதவீதத்தில்
இருந்து 2000ம் ஆண்டில் 6 சதவீதமாக பாதுகாப்புச் செலவீனம்
அதிகரித்திருப்பது எமது பொருளாதாரத்தின் மீது பிரமாண்டமான
சுமையை திணித்துள்ளது. மத்திய வங்கி மதிப்பீடுகளின்படி
பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சியை அடையவும் 2500 டாலர்கள்
(ரூபா.212,550) தலா வருமானத்தை எட்டவும் முடிந்து இருக்கும்.
இப்போது இது 5 சதவீத வளர்ச்சியாகவும் 900 டாலர் (ரூபா
76500) தலா வருமானம் ஆகவும் இருந்து கொண்டுள்ளது. இது
ஆளுக்கு 1600 டாலர் (ரூபா.136,000) வீழ்ச்சியாகும்.
"தலா வீட்டு நுகர்ச்சி 42 சதவீதத்தினால்
அதிகரித்து இருக்கும். 800,000 குடும்பங்களின் ரூபா.4920 க்கு குறைவாக
உழைக்கும் மூன்றில் இரண்டு பங்கினர் அந்த வருமான மட்டத்துக்கு
மேலாகச் சென்றிருக் முடியும். இன்றைய வேலையற்றோர்
தொகையான 650,000 மேலதிகமாக 380,000 வேலை வாய்ப்புக்களை
ஏற்படுத்துவதன் மூலம் 250,000 ஆக வீழ்ச்சி கண்டிருக்க முடியும்.
உல்லாசப் பயணிகள் வருகை ஒரு பெருமளவு வெளிநாட்டு செலாவணி
பெருக்கை ஏற்படுத்தி 1 மில்லியன் எல்லையைத் தாண்டியிருக்க
முடியும். இன்றைய வேலைவாய்ப்பான-சுமார் 70000க்குப் பதிலாக
300,000 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்".
மேலும் பீரிஸ் சுட்டிக் காட்டியது போல் கடந்த
ஆண்டுக் காலப்பகுதியில் யுத்த தளபாடங்களின் பேரிலான உயர்மட்ட
செலவீன அதிகரிப்பு அரசாங்கமும் மொத்தத்தில் முழுப்
பொருளாதாரமும் முகம் கொடுத்துள்ள நிதி நெருக்கடிகளை கூட்டியுள்ளது.
1999ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதமாக விளங்கிய
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2000 ம் ஆண்டில் 9.8
சதவீதமாக வளர்ச்சி கண்டது. வட்டி வீதம் 16 வீதத்தில் இருந்து
20% ஆக உயர்ந்தது. பணவீக்க வளர்ச்சி வீதம் 5ல் இருந்து 10
ஆக இரட்டித்தது.
அரசாங்கத்தினை விமரச்சிப்பவர்களுக்கு பதிலளிக்கும்
விதத்தில் பீரிஸ் யுத்தத்துக்கு தீர்வு காணப்படுமானால்
பொருளாதாரம் ஒளிமயமாகும் என்ற சித்திரத்தை தீட்ட
முயன்றார். "சமாதானம் வடக்கு, கிழக்கிற்கு ஒரு பிரமாண்டமான
புனர்வாழ்வு வேலைத்திட்டத்தைக் கொணரும். இது நாடு பூராவும்
பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். இராணுவச்
செலவீனங்களை மொத்த உள்ள நாட்டு உற்பத்தியின் 3 சத வீதத்துக்கு
கீழாக குறைப்பதும், அரசாங்க முதலீட்டை தொடர்ந்து அதிகரிக்கச்
செய்வதும், அத்தோடு நேரடி வெளிநாட்டு முதலீட்டை கொணர்வதும்
பொருளாதார அபிவிருத்தியை பெருக்கும்" என்றார்.
எவ்வாறெனினும் இவை எல்லாம் ஒரு கேள்வியை
தோற்றுவிக்கின்றன: பொதுஜன முன்னணி அரசாங்கமும் முன்னைய
யூ.என்.பி. அரசாங்கமும் யுத்தத்தை முடிவுக்கு கொணர இலாயக்கற்றவை
என நிரூபிக்கப்பட்டது ஏன்? பெரும் வர்த்தகர்களின் பலம்வாய்ந்த
பகுதியினர் மட்டுமன்றி பெரும் வல்லரசுகளும் இந்தியத் துணைக்
கண்ட ஸ்திரப்பாட்டில் தொடரும் யுத்தம் ஏற்படுத்தும் தாக்கங்களையிட்டு
கவலை கொண்டுள்ளன. இவை பொதுஜன முன்னணி அரசாங்கத்தை
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கான
பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி நெருக்கி வருகின்றன.
பலரை விட பீரிசுக்கு நல்ல பதில் என்ன என்பது
தெரியும். பிரதி நிதியமைச்சர் பதவி மட்டும் அல்லாமல் அவர்
அரசியலமைப்புச் சட்ட விவகார அமைச்சர் பதவியையும் வகிக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட
அரசியல் தீர்வு பொதியை வரைவதற்கு பீரிஸ் பொறுப்பாக விளங்கினார்.
சிங்கள, தமிழ், முஸ்லீம் பிரமுகர்களிடையேயான ஒரு அதிகாரப் பகிர்வு
ஏற்பாடுகள் மூலம் மாகாணங்களுக்கு வரையறுக்கப்பட்ட
சுயாட்சியை இந்த அதிகாரப் பகிர்வு பொதி என்பது கொண்டிருந்தது.
இது யுத்தத்தை முடிவுக்கு கொணர்வதற்கான ஒரு சாதனமாகக்
கொள்ளப்பட்டது.
ஆனால் சிங்கள தீவிரவாத அமைப்புக்களதும்,
உயர் பெளத்த பிக்குகளதும் எதிர்ப்பு பிரச்சாரங்களால் எதிர்க்
கட்சியான யூ.என்.பி. அரசியல் தீர்வு பொதிக்கான தனது ஆதரவை
நிறுத்திக் கொண்டதோடு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை
கிடைக்காது போனதால் அரசாங்கம் அம்மசோதாவை விலகிக்
கொள்ளத் தள்ளப்பட்டது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக
பிற்போக்கு யுத்தத்தில் ஈடுபட்டு வந்த பொதுஜன முன்னணியும்
யூ.என்.பி.யும் இந்த சோவினிசத் தட்டுக்களுக்கு அடிபணிந்து
போனதோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அல்லது பரந்த
அளவில் தமிழ் சிறுபான்மையினருக்கோ வழங்கும் அற்ப சொற்ப
சலுகைகளும் கூட ஆர்ப்பாட்டங்களை தூண்டி விடும் எனவும் தமது
சொந்த அணிகளுக்குள் வெடிப்புக்களை ஏற்படுத்தும் எனவும்
அஞ்சுகின்றன.
பீரிஸ் தனது வரவு செலவுத் திட்ட பேச்சுக்களில்
பல மாதங்களாக இழுபட்டுச் செல்லும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான
தயாரிப்புக்கள் எப்போது யதார்த்தமாகும் என்பதை பற்றிய
மதிப்பீட்டையே சமர்ப்பிக்கவில்லை என்பதைக் கூற வேண்டியது
அவசியம் இல்லை.
Top of Page
வாசகர்களே: உலக
சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright 1998-2001
World Socialist Web Site
All rights reserved
|