|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
An abrupt turn in Sri Lanka's civil war once again
reveals the fascist character of the JVP
இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் ஏற்பட்ட தீடீர்
திருப்பம் ஜே.வி.பி.யின் பாசிசத் தன்மையை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது
By Nanda Wickremasinghe
8 September 2000
Use
this version to print
இலங்கையில் இடம்பெற்ற சமீபகால சம்பவங்கள்
ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் பாசிசத் தன்மையை ஆழமாகப்
புட்டுக் காட்டியுள்ளன. பொதுமக்களின் வெறுப்புக்கு இலக்கான பொதுஜன முன்னணி
அரசாங்கத்துக்கு மாற்றீடாக ஒரு இடதுசாரி முன்னணிக்கு தலைமை தாங்கும்படி
நவசமசமாஜக் கட்சியின் மத்தியதர வர்க்க தீவிரவாதிகள் ஜே.வி.பி.க்கு ஆழைப்பு
விடுத்த மூன்று மாத காலத்தினுள் இது இடம்பெற்றது. ஜே.வி.பி. தனது தேர்தல்
பிரச்சார இயக்கத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் "தாய்நாடு காப்போம்" என்ற
சோவினிச சுலோகத்தின் அடிப்படையிலேயே நடாத்தி வருகின்றது.
இந்நாட்களில் ஜே.வி.பி. அதிதீவிர வலதுசாரிகளான ஐக்கிய தேசியக் கட்சியுடனும்
(UNP) பெளத்தப் பிக்குகளுடனும் மவுபிம சுரகீமே வியாபாரய (தாய்நாடு காக்கும்
அமைப்பு) போன்ற இனவாத அமைப்புகளுடனும் இணைந்து கொண்டு நாட்டின் நீண்ட கால
உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொணர்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக
அரசியலமைப்பு சட்டத்தை திருத்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எடுத்த முயற்சிகளை
எதிர்த்தது.
ஜே.வி.பி. அதிகாரப் பகிர்வு திட்டத்தை எதிர்க்கவில்லை. ஏனெனில் இது
சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்காததோடு மேலும்
இனக்குழு இரத்தக் களரிகளுக்கு இட்டுச் செல்லும் இனவாதப் பிளவுகளையும் ஏற்படுத்துகின்றது.
மாறாக ஜே.வி.பி. இலங்கை ஆளும் வட்டாரங்களில் உள்ள படுபயங்கரமான சோவினிச பகுதியினருடன்
சேர்ந்து கொண்டு தமிழ் சிறுபான்மையினருக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கப்படுவதையும்
எதிர்க்கின்றது. அத்தோடு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக
இராணுவம் நடாத்திவரும் யுத்தம் உக்கிரமாக்கப்பட வேண்டும் என இது வலியுறுத்துகின்றது.
ஆகஸ்ட் முதற் பகுதியில் ஜே.வி.பி.யின் அரசியல் குழு, பொதுஜன முன்னணி அரசாங்கத்தின்
அரசியலமைப்பு சட்ட மசோதாவை தோற்கடிக்கும்படி கோரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்துக்கு புகழ் பாடும் விதத்தில்
இக்கடிதம் கூறியதாவது "இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இந்நாட்டு மக்கள்
தமது நாட்டின் பாதுகாப்புக்காக செய்த சகல தியாகங்களும்... இந்நாட்டைக் காக்கவும்
இந்நாட்டின் ஒற்றையாட்சிப் பண்பை கட்டிக்காக்கவும் தமது ரத்தத்தை அவர்கள்
சொரிந்தனர். அவையெல்லாம் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அடியோடு
செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது. இது பெரும் தீங்கை ஏற்படுத்தும் விதத்தில்
தாய்நாட்டை பிரிப்பதற்கான கதவுகளைத் திறந்துவிடும்".
இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் (1978) கீழ் யூ.என்.பி.யினால் அறிமுகம்
செய்யப்பட்ட ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த சரத்துக்களை அரசாங்கம்
அகற்றியது தொடர்பாக ஜே.வி.பி. விதிவிலக்கான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது.
அந்தத் திருத்தத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உருப்பினரும் ஒற்றையாட்சிக்கு
தமது விசுவாசத்தைத் தெரிவிக்கும் விதத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள
வேண்டும். இந்த அரசியலமைப்பு திருத்ததின் அடிப்படையில் பல தமிழ் அரசியல் கட்சிகள்
பாராளுமன்றத்தில் இருந்து தள்ளப்பட்டன.
ஜே.வி.பி.யின் அதிதீவிர வலதுசாரி நிலைப்பாடானது, ஆகஸ்ட் 30ம் திகதி குண்டர்களால்
கொலை செய்யப்பட்ட தனது அங்கத்தவரான சம்பிக சில்வாவின் மரணச் சடங்குகளை நடாத்தும்
பொருட்டு ஒரு பேர்போன சிங்கள இனவாதியான மாதொலுவேவ சோபித தேரரை அழைக்க எடுத்தத்
தீர்மானத்தின் மூலம் நன்கு தெளிவாக அம்பலமாகியது. ஆகஸ்ட் முதல் பகுதியில்
ஒரு சிறப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அரசியல் அதிகாரப் பகிர்வு பொதி
முன்வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில்
மாதொலுவேவ சோபித தேரர் முன்னணியில் நின்றவர். அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு வாக்குகள் கிடைக்காது என்பது தெரிய வந்ததும் இந்த அரசியலமைப்புச்
சட்ட திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 21ம் திகதி Daily Mirror பத்திரிகையில் வெளியான செய்தியின்படி அதிகாரப்
பகிர்வு பொதிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னணி பெளத்த
பிக்குகளில் ஒருவரான மடிகே பஞ்ஞாசீக தேரர், இந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சார
இயக்கத்தில் அரசாங்கத்தை எதிர்க்கும் சோவினிச கூட்டுக்கு ஜே.வி.பி. முக்கிய
பங்கு வகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஜே.வி.பி.யின் தேர்தல் விஞ்ஞாபனம் அனைத்து "வணக்கத்துக்குரிய பெளத்த பிக்குகளதும்",
"வணக்கத்துக்குரிய கிறீஸ்தவ குருமார்களதும்" புத்திஜீவிகளதும், கலைஞர்களதும்,
தொழில் சார் நிபுணர்களதும் இத்தேசத்தை நேசிக்கும் அனைவரதும், இத்தேசத்தின்
எதிர்காலத்தை நேசிக்கும் அனைவரதும் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுக்கின்றது.
அனைத்து மக்களதும் கலாச்சார -சிங்களவர் தமிழர் முஸ்லீம்கள்- சுதந்திரத்தை
அடைவதற்கு இலாயக்கான ஒரு அழகான தாயகத்தை சிருஷ்டிக்க அழைப்பு விடுக்கின்றது."
ஜே.வி.பி. யின் வரலாற்றையும் வேலைத்திட்டத்தையும் அறிந்த எவருக்கும் அது
"தாயகத்தை காக்க" தம்பட்டம் அடிப்பதும் அது அப்பட்டமான பிற்போக்கு குழுக்களுடனும்
மூலங்களுடனும் கூட்டுச் சேர்வதும் எதுவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாது.
1988-90 காலப்பகுதியில் ஜே.வி.பி. நூற்றுக்கணக்கான தொழிலாளர் வர்க்க அமைப்புகளின்
அங்கத்தவர்களை கொலை செய்தது தனது அரசாங்க எதிர்ப்பு வேலைநிறுத்தங்களில்
தொழிலாளர்களை பங்குகொள்ளும்படி கட்டாயப்படுத்தும் பிரச்சாரமாகவே இதைச் செய்தது.
ஜே.வி.பி. பொதுஜன முன்னிணியினதும், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின்
இலங்கைப் பகுதியான நவசமசமாஜக் கட்சியினதும் ஆதரவுடனேயே 1994ல் இருந்து
கொழும்பில் முதலாளித்துவ அரசியலின் நீரோட்டத்தினுள் காலடி எடுத்து வைக்க
முடிந்ததோடு தன்னை "இடதுசாரி" ஆகவும் "சோசலிஸ்ட்" ஆகவும் வேஷம்
போட்டுக்கொண்டது.
ஜே.வி.பி. குமாரதுங்கவுடன் சகவாழ்வு நடாத்த முடிந்ததோடு அரசாங்கம் "சமாதானத்துக்கான
யுத்தத்தை" நடாத்தும் வரையும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ
முன்னேற்றங்களில் ஈடுபடும் வரையும் மாகாண சபைகளில் பொதுஜன முன்னணிக்கு ஆதரவும்
வழங்கியது. யுத்தத்துக்கு எதிராக வளர்ச்சி கண்டு வந்த பொதுமக்களின் கசப்புணர்வின்
வளர்ச்சியை சுரண்டிக் கொள்ள முயன்றது. வாயளவில் "யூ.என்.பி.யும் பொதுஜன
முன்னணியும் யுத்தத்தை இலாப நோக்கில் முடிவின்றி தொடர்வதாகவும் வெகுஜனங்களின்
மீது சுமைகளைத் திணிப்பதாகவும்" கூறிக் கொண்டது. ஆனால் அதனது விமர்சனங்கள்
எப்போதும் ஒரு சோவினிச நிலைப்பாட்டில் இருந்தே வெளிப்பட்டன: அரசாங்கம் யுத்தத்தை
போதுமான அளவு யுத்தத்தை உக்கிரமாக முன்னெடுக்கவில்லை எனவும் அது இலங்கை அரசை
பாதிப்பதாகவும் கூறிக்கொண்டது.
யூ.என்.பி.-பொதுஜன முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடேயேயான ஒரே
வேறுபாடு முன்னையவர்கள் (ஒரு தனித் தமிழ்) ஈழம் குட்டியரசை அறிமுகம் செய்ய
வேண்டும் என்கிறார்கள் பின்னையவர்கள் அதை உடன் வேண்டும் என்கிறார்கள்".
ஆனால் கடந்த ஏப்பிரலில் விரகி முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு முகாம்
வீழ்ச்சி கண்டமையானது குமாரதுங்க விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை
மேசைக்கு ஆயுத பலத்தின் மூலம் கொணரும் சாத்தியத்தை திடுதிப்பென போட்டுடைத்தது.
அத்தோடு கொழும்பில் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியையும் உருவாக்கியது.
பெரும் வல்லரசுகளும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஒரு பிரிவினரதும்
நெருக்குவாரத்தின் கீழ் குமாரதுங்க அரசியல் தீர்வு பொதியை விடுதலைப் புலிகளுடனான
பேரம் பேசல்களுக்கான ஒரு சாத்தியமான அடிப்படையாக கட்டியெழுப்பினார். இதைச்
செய்கையில் அவர் இனவாதக் குழுக்களின் சினத்தையும் கொண்டார்.
சூழ்ச்சிகளுக்கு இடம் இல்லாத நிலையில் ஜே.வி.பி. பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும்
"இரத்த வெறிகொண்ட விடுதலைப் புலிகளின்" கரங்களைப் பலப்படுத்துவதாகக் கண்டனம்
செய்யும் ஒரு அரசியல் குழு அறிக்கையோடு இந்த சோவினிச பிரச்சாரத்தில்
திடீரென சேர்ந்து கொண்டது. ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச
கருத்துத் தெரிவிக்கையில் "(ஆனையிறவில் ஏற்பட்ட) தோல்வி எம் அனைவருக்கும்
கிடைத்தத் தோல்வியாகும். நாம் என்னதான் வந்தாலும் ஈழம் வழங்கோம். நாம் அவர்களுக்கு
புதிய வெற்றிகளை வழங்க மாட்டோம். விடுதலைப் புலிகளின் பிரச்சினையைத்
தீர்த்துக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் எம்முடன் கலந்துரையாட முடியும். ஆனால்
அவர்கள் யுத்தத்தை தொடர வேண்டுமானால் நாம் அந்த நிலைமைக்கு முகம் கொடுக்கத்
தயாராக உள்ளோம்.
ஜே.வி.பி. அப்பட்டமாக தீவிர வலதுசாரி பாசிச அமைப்புக்களை கட்டித் தளுவிக்
கொண்டமையானது நவசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.
1998ல் தனது சொந்த அரசியல் அதிர்ஸ்டங்களை தூக்கிப் பிடிக்கும் கையாலாகாத்
தனமான நடவடிக்கையாக நவசமசமாஜக் கட்சி ஜே.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்து
கொண்டது. 1980பதுகளின் கடைப்பகுதியில் நவசமசமாஜக் கட்சியின் பல தலைவர்களும்
அங்கத்தவர்களும் ஜே.வி.பி. கொலைகார கும்பலால் கொலை செய்யப்பட்ட நிலையிலும்
இதைச் செய்தது. ஒரு பொதுக் கூட்டத்தில் ஜே.வி.பி. யினால் வீசப்பட்ட ஒரு
குண்டினால் தாக்கப்பட்டு 22 மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ந.ச.ச.க. தலைவர்
விக்கிரம்பாகு கருணாரத்ன கடும் காயமடைந்தார். ஜே.வி.பி.யின் "பாசிச
பாணியான" தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் ந.ச.ச.க.
ஜே.வி.பி.யின் வேலைநிறுத்த அழைப்புக்கு ஆதரவு வழங்கியது.
ந.ச.ச.க. தலைமைப்பீடம் தான் ஜே.வி.பி.யை தழுவிக் கொண்டதை நியாயப்படுத்த என்ன
கூறியது? தொழிலாளர் அமைப்புக்களின் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பான
ஜே.வி.பி.யின் இராணுவப் பிரிவான தேசப் பிரேமி ஜனதா வியாபாரய (DJP) வில் தலைவர்கள்
அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர் எனக் கூறிக் கொண்டே இதைச் செய்தனர்
கடந்த ஆண்டின் இறுதியில் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்துக்கு
குதிரையோடுகையில் கருணாரத்ன ஒரு பத்திரிகையாளரிடம் கூறியதாவது: "1988ல்
நான் மரணப்படுக்கையில் கிடந்த வேளையில் (ஜே.வி.பி. குண்டு வீச்சின் பின்னர்)
நான் ஒன்றினைந்து (NSSP&JVP) போராடும் நாள் எப்போதும் வரும் எனக் கனவு கண்டேன்"
எனக் கூடக் குறிப்பிட்டார்.
நவசமசமாஜக் கட்சி சமீபத்தில் வெளியிட்ட அதன் அறிக்கையில் திடீரென அதன்
நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜே.வி.பி.யை இனவாதிகளின் "சிவப்பு" ஆயுதம்
எனக் கூறி "எதிர்க்கின்றது". ஆனால் ந.ச.ச.க. அது ஜே.வி.பி.க்கு முன்னர் வழங்கிய
ஆதரவுக்கும் 1980களில் இருந்து ஜே.வி.பி. அடிப்படை மாற்றம் கண்டுவிட்டது எம்பதற்கும்
சாதகமாக எந்தவொரு கனதியான விளக்கத்தையும் வளங்கப் போவதே இல்லை என நாம் உறுதியாகக்
கூறலாம். ந.ச.ச.க. தனது கூட்டினால் பற்றி எந்த ஒரு கொள்கைப் பிடிப்பான மதிப்பீட்டையும்
வழங்கத் தவறியமையானது ஜே.வி.பி.யின் அரசியல் முன்நோக்கையும் வரலாற்றையும்
விமர்சன ரீதியில் ஆய்வு செய்யத் தள்ளியுள்ளது.
ஜே.வி.பி.யின் அடி வேர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) காட்டிக்
கொடுப்பில் வேரூன்றிக் கொண்டுள்ளன. ல.ச.ச.க. 1940களிலும் 1950பதுகளிலும்
தொழிலாளர் வர்க்கத்துள் மட்டும் அல்லாமல் சிறிய விவசாயிகள் கிராமப்புற ஏழைகளிடையேயும்
ஆதரவைக் கொண்டிருந்தது. எவ்வாறெனினும் 1964ல் ஒரு நீண்ட கால அரசியல்
நெறிகேடுகளின் பின்னர் லங்கா சமசமாஜக் கட்சி தனது சோசலிசக் கொள்க்களைக்
கைவிட்டுவிட்டு, முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன்
இணைந்து கொண்டது. 1960பதுகளில் தலையெடுத்த ஜே.வி.பி. சிங்கள தேசியவாதம்,
மாஓ வாதம், காஸ்ட்ரோ வாதங்களின் ஒரு அச்சாராக விளங்கியதோடு அது கிராம்ப்புற
வேலையற்ற இளைஞர்களிடையே நிலவிய விரக்தியையும் அரசாங்க எதிர்ப்பு
உணர்வுகளையும் சுரண்டிக் கொள்ள முடிந்தது.
1969ம் ஆண்டளவிலேயே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (சோசலிச சமத்துவக்
கட்சியின் முன்னோடி) ஸ்தாபகப் பொதுச் செயலாளரான கீர்த்தி பாலசூரிய தமது
'ஜே.வி.பி.யி வர்க்கத் தன்மையும் அதன் அரசியலும்' என்ற நூலில்
ஜே.வி.பி.யின் ஜே.வி.பி.யின் நோக்கம் சமுதாயத்தை சோசலிச ரீதியில் மாற்றம்
அடையச் செய்வது அல்ல என விளக்கி இருந்தார். "அரச இயந்திரத்தை
தேசியமயமாக்கு" என்ற அதனது சுலோகம் இன்றுள்ள அரசை கட்டுப்பாட்டுக்குள்
கொணர்வதையும் அதைத் தமது குறுகிய சொந்த நலன்களுக்கு பயன்படுத்துவதையும்
இலக்காகக் கொண்டது. அதனது தகவமைவானது தொழிலாளர் வர்க்கத்தையன்றி சிங்கள
கிராம்ப்புற குட்டி முதலாளித்துவத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதனை
அவர்கள் "இலங்கை மாதாவின் பிள்ளைகள்" என அழைக்கின்றார்கள்.
இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய பிரித்தானியக் காலனித்துவ
வாதிகளால் கொணரப்பட்ட தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான
அதனது நிலைப்பாட்டில் ஜே.வி.பி.யின் பாசிசத்தின் விதைகள்
இருந்துகொண்டுள்ளதை கீர்த்தி பாலசூரிய சுட்டிக் காட்டினார். ஜே.வி.பி.யின்
ஸ்தாபகரான றோஹன விஜேவீர பெருந்தோட்டத் தொழிலாளர்களை "சட்டவிரோத
குடியேற்றத்தின் மூலமும் இந்திய கலாச்சார ஆக்கிரமிப்பு மூலமும் எமது
நிலங்களை ஏப்பமிட முயற்சிக்கும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின்"
ஏஜன்டுகளாகப் பேர்சூட்டினார்.
பாலசூரிய இதை விளக்கிக் கூறியதாவது: "ஜே.வி.பி. தோட்டத் தொழிலாளர்களின்
பேரில் காட்டும் குரோதத்தை வெறுமனே இனவாதம் என அழைப்பது தவறானது. ஏனெனில்
தொழிலாளர் வர்க்கத்தின் பேரிலான குட்டிமுதலாளித்துவக் குரோதம், பிரித்தானிய
ஏகாதிபத்திய வாதிகளும் இலங்கை முதலாளி வர்க்கமும் தமது வர்க்க நலன்களுக்காக
தோட்டத் தொழிலாளர்களை தவிடு பொடியாக்க முயற்சித்து வந்த காலப்பகுதியில்
ஏற்பட்டதால் அது ஏகபோக மூலதனத்தின் ஒரு அம்மணமான ஒரு கருவியாகின்றது. இந்த
இனவாதம் பாசிசத்துக்கு இட்டுச் செல்வதோடு ஜே.வி.பி. இலங்கையில் ஒரு
எதிர்கால பாசிச இயக்கம் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தொழிலாளர்
வர்க்கத்துக்கு குரோதமான ஒரு சக்தியைக் சிருஷ்டிக்கின்றது."
1971 ஏப்பிரலில் ஜே.வி.பி. ஒரு ஆண்டுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த
பண்டாரநாயக்க அரசாங்கத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் இறங்கியது. ஆனால்
நெறிகெட்ட முறையில் தயார் செய்யப்பட்ட இக்கிளர்ச்சியானது ஒரு சகாஜ பண்பைக்
கொண்டிருந்ததோடு ஜே.வி.பி.யின் பதாகையின் கீழ் அணிதிரண்ட கிராம்ப்புற
இளைஞர்களுக்கு நாசகரமான பேரழிவையும் ஏற்படுத்தியது. வன்முறையை
குறைந்தபட்சம் வெளிக்காட்டுவதுடன் மூலம் இராணுவத்தின் கணிசமான தரப்பினரை
தம்பக்கம் வெற்றி கொண்டுவிட முடியும் எனவும் ஜே.வி.பி. ஊகித்தது. ஆனால்
இராணுவம் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே விசுவாசமாக இருந்ததோடு அது லங்கா
சமசமாஜக் கட்சியின் அமைச்சர்களையும் கொண்டிருந்தது. இதன் பேறாக ஒரு பரந்த
படுகொலைகள் இடம்பெற்றன. அரசாங்கப் படைகள் ஒழுங்கற்ற கைக் குண்டுகளையும் ஒரு
சில துப்பாக்கிகளையும் கொண்டிருந்த சுமார் 17,000 இளைஞர்களை கொலை செய்ததோடு
மற்றும் 20,000 பேரை கைதும் செய்தது.
ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கத் தள்ளப்பட்டமை எதுவிதத்திலும்
ஜே.வி.பி.யின் வர்க்கத் தன்மையை மாற்றிவிடவில்லை உண்மையில் இலங்கை ஆளும்
வர்க்கத்தின் பெரிதும் தந்திரமான அரசியல் பிரதிநிதிகள் சிங்கள தேசியவாதத்தை
அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பி.யை அங்கீகரித்ததோடு விவசாய இளைஞர்களை தளமாகக்
கொள்ளவும் இடமளித்தனர். முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிப்பிடிக்க சில
தருணங்களில் இதைப் பயன்படுத்த முடியும் என அவர்கள் எண்ணினர்.
1978ல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஜே.வி.பி.யை தொழிலாளர் வர்க்கத்தை
பிளவுபடுத்தப் பயன்படுத்த முடியும் எனக் கணித்துக்கொண்டு அதை
அங்கீகரித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொழிலாளர் வர்க்கம் ஒரு
பொது வேலைநிறுத்தத்தின் மூலம் பண்டாரநாயக்க அரசாங்கத்தை வீழ்ச்சிகாணச்
செய்தது. ஜெயவர்தனாவின் இந்த நடவடிக்கை நாட்டின் தமிழ் பேசும்
சிறுபான்மையினருக்கு எதிரான அவரின் இனவாதத் தாக்குதல்களுடன் இணைந்த
விதத்தில் அமைந்திருந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் பேரிலான ஜே.வி.பி.யின்
உடல் ரீதியான எதிர்ப்பின் பெறுமானம் 1980 பொது வேலைநிறுத்தத்தில் அது
கருங்காலி நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த
வேலைநிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால் சிதறடிக்கப்பட்டது.
ஒரு சிறிய காலத்துக்கு ஜே.வி.பி. தன்னை ஒரு தீவிரவாத ஜனநாயக கட்சியாக
காட்டிக் கொண்டதோடு "தேசிய சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமை" என்ற
சுலோகத்தையும் முன்வைத்தது. ஆனால் ஜே.வி.பி. ஒரு போதுமே தமிழ், முஸ்லீம்,
சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக முன்னணியில் நின்றிராதது மட்டமன்றி
அரசியல் நிலைமையிலான ஒவ்வொரு திருப்பத்தின் போதும் அதன் முன்னோக்கின்
மையத்தில் இருந்து கொண்டுள்ள சிங்கள சோவினிசத்தையும் வெளிக்காட்டிக்
காண்டது.
கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து- ஜூலை 23, 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு
எதிராக யூ.என்.பி. குண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் எதிர்ப்பு
இனக்கலவரம் -இனவாத யுத்தம் வெடித்ததோடு ஜே.வி.பி. ஆழமான முறையில் வலதுசாரி
திருப்பம் எடுத்தது. யுத்தத்தின் பேரில் ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப்
புலிகளையும் "தமிழ் இனவாதத்தையும்" தாக்கி வந்தது. இதன் மூலம்
யூ.என்.பி.யின் தமிழர் விரோத பிரச்சாரத்தை மீண்டும் அது வாந்தியெடுத்தது.
தனித் தமிழ் ஈழத்துக்கான கோரிக்கை 11ம் நூற்றாண்டின் இந்திய
ஆக்கிரமிப்புகளுக்கு புத்தியிர் அளிப்பதாகும் என ஜே.வி.பி. கூறிக்கொண்டுது.
யுத்தம் இலங்கை முதலாளி வர்க்கம் எதிர்கொண்ட பொருளாதார, அரசியல்
நெருக்கடியை உக்கிரமாக்கியதோடு ஜே.வி.பி.யின் சீரழிவையும்
விரைவுபடுத்தியது. 1987ம் ஆண்டளவில் ஜே.ஆர்.ஜெயவர்தன வடக்கில்
மோசமடைந்துவரும் ஒரு இராணுவ நிலைமைக்கு முகம் கொடுத்தார். தெற்கில்
தொழிலாளர்களின் அதிகரித்த எதிர்ப்புக்கும் அவர் முகம் கொடுத்தார்.
இந்நிலையில் அவர் இராணுவ உதவிக்கு இந்திய அரசாங்கம் பக்கம் திரும்பினார்.
அனைத்து பெரும் அரசியல் கட்சிகளதும் ஆதரவுடன் -சிறீலங்கா சுதந்திரக்
கட்சியைத் தவிர- அவர் இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
இதன் மூலம் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்
சிறுபான்மையினரை நசுக்க இந்தியப் படைகளை அனுப்புவதற்கான வழி
திறந்துவிடப்பட்டது.
ஜே.வி.பி. இந்த உடன்படிக்கையை ஒரு காட்டிக் கொடுப்பாக பட்டயம் தீட்டியதோடு
ஒரு பயங்கரவாத பிரச்சார இயக்கத்திலும் ஈடுபட்டது. ஆனால் அதனது தேசாபிமான
சுலோகங்கள் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே எந்த ஒரு கணிசமான ஆதரவையும் வெற்றி
கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து ஜே.வி.பி. தனது ஆயுதக் குழுக்களை
பக்டரிகளுக்கு அனுப்ப தொழிலாளர்களை துப்பாக்கி முறையில் வேலைநிறுத்தம்
செய்யும்படி நெருக்கியது. இதனது பயங்கரவாத பிரச்சார இயக்கம் ஆளும்
வர்க்கத்தின் பெரிதும் ஆழமான அபிலாசைகளை இட்டு நிரப்புவதில் துணைபோனதோடு,
கீர்த்தி பாலசூரிய தொழிலிளார் வர்க்கத்தின் பேரில் ஜே.வி.பி.யின்
குரோதத்தில் உள்ளடக்கியுள்ள பாசிச போக்குகளையிட்டு செய்த எச்சரிக்கைகளையும்
தெளிவாக ஊர்ஜிதம் செய்துள்ளது.
ஜே.வி.பி.யும் அதனது குண்டர்களும் பொலிசாரையும் ஆயுதப்படைகளையும் சேர்ந்த
மூலகங்களுடன் நெருக்கமான முறையில் செயற்பட்டு தொழிலாளர்களதும் இடதுசாரி
கட்சிகளதும் பெருமளவிலான அங்கத்தவர்கள் உட்பட கொலை செய்தது. புரட்சிக்
கம்யூனிஸ்டுக் கழகம் மட்டுமே ஜே.வி.பி.யினதும் அரச படைகளைதும் தாக்குதல்களை
எதிர்கொள்ள தொழிலாளர் வர்க்க அமைப்புக்களின் ஒரு ஐக்கிய முன்னணிக்கு
அழைப்பு விடுத்த ஒரே அரசியல் கட்சியாகும்.
1998ல் ஜெயவர்தனாவின் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆர் பிரேமதாச
தொழிலாளர்களை பயங்கரத்துக்குள் தள்ளுவதற்கு ஜே.வி.பி. பெரிதும் பயனுள்ளது
எனக் கண்டதோடு ஜே.வி.பி.யுடன் பல உடன்படிக்க்ைகளையும் செய்து கொண்டார்.
அதற்கு மீண்டும் உத்தியோகபூர்வமான அங்கீகாரம் வழங்கினார். முதலாளி
வர்க்கத்தின் சரிவின் தனது கடைகெட்ட பணிகளை நிறைவேற்றி வைத்ததும்
யூ.என்.பி. அரசாங்கம் இறுதியாக ஜே.வி.பி. தலைவர் றோஹன விஜேவீரவையும் அவரின்
இரண்டு சகாக்களையும் கைது செய்த இராணுவம், கொன்று தள்ளியது. அதைத்
தொடர்ந்து ஜே.வி.பி. பயங்கரம் என்ற பம்மாத்தின் கீழ் தெற்கில் ஒரு
பரந்தளவிலான பயங்கர இயக்கத்தையும் முன்னெடுத்தது. இதில் 60,000 கிராம்ப்புற
இளைஞர்கள் கொன்று தள்ளப்பட்டனர்.
1980பதுகளின் கடைப்பகுதிக்காலம் சிங்கள தீவிரவாதிகளுக்கும் ஜே.வி.பி.க்கும்
இடையே உருவாகி வரும் கூட்டு ஏற்படுமிடத்து அது தொழிலாள வர்க்கத்துக்கு
எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கியது. ஜே.வி.பி.
தலைவர்கள் கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் இராணுவத்தின் தேசாபிமான
உணர்வுகளைப் பற்றி மட்டுமல்லாது ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இறந்த தமது
ஆயுதம் தாங்கிய குண்டர்களையிட்டும் புகழ்பாடுகின்றனர். ஜே.வி.பி.யை
புத்துயிர் பெறச் செய்ததற்கும் இடதுசாரி நற்சான்றிதழ்கள் வழங்கி அதனை
உத்தியோக பூர்வமான அரசியல் நீரோட்டத்தினுள் கொணர்வதற்குமான பொறுப்பு லங்கா
சமசமாஜக் கட்சி உட்பட்ட பொதுஜன முன்னணியின் அரசியல் கட்சிகளையும் சிறப்பாக
ந.ச.ச.க.வின் மத்தியதரவர்க்க தீவிரவாதிகளையுமே சாரும். |
|