|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Election statement of the Sri Lankan Socialist Equality
Party
A socialist program to end the war and social inequality
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்
யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும்
முடிவுகட்டும் ஒரு சோசலிச வேலைத்திட்டம்
26 September 2000
Use
this version to print
சோசலிச சமத்துவக் கட்சி சாதாரண உழைக்கும்
மக்கள் எதிர்கொண்டுள்ள அரசியல் முட்டுக்கட்டை நிலைக்கும் சமூக நெருக்கடிக்கும் ஒரு
சோசலிசத் தீர்வை முன்வைக்கும் பொருட்டு இலங்கைப் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்துக்கு
வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பொதுஜன மக்கள் முன்னணியும் நாட்டை நாசமாக்கும்
உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டுவதாகக் கூறி 1994ம் ஆண்டின் தேர்தல்களில்
வெற்றி பெற்றனர். அத்தோடு குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலான "சுதந்திர சந்தை
சீர்திருத்தங்களின்" கீழ் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நிர்மாணிக்கப்பட்ட வறுமையையும்
வேலையின்மையையும் போக்குவதாகவும் ஜனநாயக உரிமைகள் மீதான முன்னைய அரசாங்கத்தின்
தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
கடந்த ஆறு வருட காலத்தில் பொதுஜன முன்னணி அரசாங்கம், தான் வழங்கிய சகல வாக்குறுதிகளுக்கும்
முகத்தில் அறைந்தது. யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மாறாக குமாரதுங்க தனது
முன்னோடிகளை விடப் படுகொடூரமான விதத்தில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1994ன்
பின்னர், அதற்கு முன்னைய 12 வருட கால யுத்தத்தில் கொலை செய்யப்பட்டவர்களைக்
காட்டிலும் அதிக எண்ணிக்கையிலானோர் கொலையுண்டனர். இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில்
மட்டும் இராணுவ வரவு செலவீனங்கள் 130 பில்லியன் ரூபாய்களாக அல்லது தேசிய வருமானத்தின்
40 சதவீதமாக அதிகரித்தது.
ரூபாயின் பெறுமானம் வீழ்ச்சி கண்டு விலைவாசிகள் அதிகரித்ததன் காரணமாக வாழ்க்கைத்
தரம் தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டது. ஆளும் கூட்டரசாங்கம் சர்வதேச நாணய நிதியமும் (IMF)
உலக வங்கியும் (World Bank) வேண்டிக்கொண்டபடி பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை
முன்னெடுத்தது. இதனால் முக்கிய அரசாங்கத் திணைக்களங்களும் அரசுடமை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன.
யுத்தச் செலவீனங்களை ஈடுசெய்யவும் முதலீட்டாளர்களுக்கு பிரமாண்டமான நிதி ஊக்குவிப்புக்களை
வழங்கவும் சுகாதாரம், கல்வி, நலன்புரி சேவைகள் வெட்டிச் சரிக்கப்பட்டன.
ஜனாதிபதி வடக்கு கிழக்கில் ஒரு இராணுவச் சட்டத்துக்கு (Martial Law) நிகரான சட்டங்களைத்
திணிக்கும் ஜனநாயக எதிர்ப்பு சட்டதிட்டங்களுடன் கூடிய ஒரு அவசரகாலச் சட்ட ஆட்சியில்
ஈடுபட்டார். இது நூற்றுக்கணக்கான தமிழர்களை வழக்கு விசாரணையின்றி சிறைக்குள் தள்ளவும்
வெகுஜனத் தொடர்புச் சாதனங்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் மிரட்டவும் பயன்படுத்தப்பட்டது.
மே மாதத்தில் ஜனாதிபதி நாட்டினில் வேலைநிறுத்தங்களையும் பொதுக் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும்
தடை செய்யும் சட்ட விதிகளையும் அமுலுக்கு கொணர்ந்தார். அத்தோடு வெகுஜனத் தொடர்பு சாதனங்கள்
மீது படு பயங்கரமான தணிக்கை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் பெறுபேறாக பல
புதினப் பத்திரிகைகள் இழுத்து மூடப்பட்டன.
கடந்த சில மாதங்களாக முழு அரசியல் அமைப்பும் முன்னொரு போதும் இல்லாத அளவிலான நெருக்கடிக்குள்
தள்ளப்பட்டது. ஏப்பிரலில் முக்கிய இராணுவ முகாமான ஆனையிறவு வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்தும்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) முன்னேறியதாலும் இந்த
அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயங்கள் ஆட்டம் கண்டு போயின. ஆனாலும் பெரும் அரசியல் கட்சிகள்
சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பான எந்த ஒரு அடிப்படை சம்பந்தமாகவும் உடன்பாடு காணவில்லை.
இதனால் குமாரதுங்க தனது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அமுல் செய்வதற்கு அவசியப்பட்ட
பெரும்பான்மைப் பலத்தை பாராளுமன்றத்தில் திரட்டிக்கொள்ளத் தவறியதால் உரிய காலத்துக்கு
முன்னதாகவே பொதுத் தேர்தலை நடாத்த அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டார்.
தேர்தல் இடம்பெறும் நிலைமைகள் ஜனநாயகத்தை கேலிக்கிடமானதாக்கியுள்ளது. இறுதி நிமிட
சலுகையாக அரசாங்கம் தணிக்கை விதிகள், பொதுக் கூட்டங்கள் மீதான தடைகளை தளர்த்தியது.
ஆனால் பெருமளவிலான அவசரகால சட்ட அதிகாரங்களை அது இன்னமும் தன்வசம் கொண்டுள்ளது. அரசாங்கம்
தனக்கு அவசியமெனப்படும் போது கட்சிகள் மீதும் பத்திரிகைகள் மீதும் பாய்ந்து விழ
வாய்ப்புண்டு. இந்தத் தேர்தலில் மையப் பிரச்சினையாக இருந்து கொண்டுள்ள வடக்கு- கிழக்கு
யுத்தம் தொடர்பான செய்திகளை தொடர்புச் சாதனங்கள் வெளியிடுவது இன்னமும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் இராணுவ வாதத்துக்கும் சிங்கள சோவினிசத்துக்கும் அழைப்பு
விடுப்பதன் மூலம் ஆளுமை செய்யப்படுவதால் யூ.என்.பி.யும் பொதுஜன முன்னணியும் வாக்குகளை
தட்டிக் கொள்வதற்கு ஜே.வி.பி. சிங்கள உறுமய கட்சி (SUP) போன்ற அதிதீவிர வலதுசாரி
குழுக்களுடன் போட்டியிட நேரிட்டுள்ளது. இந்தக் கட்சிகள் யுத்தத்தில் மேலும் மேலும்
இரத்தக் களரிக்கு வழிவகுப்பதன் மூலமே யுத்தத்தை முடிவுக்கு கொணர முடியும் என வலியுறுத்துகின்றன.
கடந்த ஒரு சில வாரங்களாக குமாரதுங்க யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிடுமூஞ்சித் தனமான
புதிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தனது புகழைத் தூக்கிப் பிடிக்கவும் அதிக
எண்ணிக்கையிலான வாக்குகளை சுருட்டிக் கொள்ளவும் நூற்றுக்கணக்கான உயிர்களை நாசமாக்கும்
நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அனைத்து பெரும் அரசியல் கட்சிகளும் அவை யுத்தத்துக்கும் ஒரு சுற்று தொழில்
வெட்டுக்கும் ஒன்றன் பின் ஒன்றாய் இடம்பெறும் மறுசீரமைப்பு பொருளாதாரக் கொள்கைகளுக்கும்
வழங்கும் ஆதரவினால் பெரிதும் உடன்பாடு கண்டுள்ளன. சாதாரண பொதுமக்களுக்கு எந்த ஒரு
முற்போக்கான பதிலீட்டையும் வழங்க அவை இலாயக்கற்றவையாகப் போய்விட்டன. அவர்களது பிரச்சாரங்கள்
அந்தரங்க கொடுக்கல் வாங்கல்கள், தனிப்பட்ட தாக்குதல்கள், காடைத்தனங்கள், சேறடிப்புக்கள்,
கொலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அனைத்து 'இடதுசாரி', தீவிரவாதக் கட்சிகளும் அத்தோடு
ஈடாட்டம் கண்டு போயுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) முதல் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் (CWC) வரையிலான அனைத்து தமிழ் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ அமைப்புக்களும்
பொதுஜன முன்னணி சிருஷ்டித்துள்ள பேரழிவுகளுக்கு பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.
1994ல் இவர்களது அரசியல் ஆதரவு இல்லாமல் குமாரதுங்க வாக்காளர்களுக்கு தன்னை
"முற்போக்காளனாகவும்" "ஜனநாயகவாதியாகவும்" சமாதானத்தின் காவலனாகவும் காட்டிக் கொள்ள
முடிந்திராது. இன்று குமாரதுங்கவை சாடும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) கூட குமாரதுங்கவை
யூ.என்.பி.க்கு பதிலான ஒரு மாற்றீடாக தேர்தலில் ஆதரித்தனர்.
லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சி போன்ற இலங்கையின் பழைய
இடதுசாரி தலைமைகள் இன்று பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தின் ஒரு பிரிக்கமுடியாத பாகமாகியுள்ளன.
அவர்கள் தமது குஷியான அமைச்சர் ஆசனங்களில் இருந்தவண்ணம் அரசாங்கத்துக்கு முழு ஆதரவும்
வழங்கினர். நவசமசமாஜக் கட்சி (NSSP) பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டதை
முழுமனதாக வரவேற்றது. ஆனால் அது ஒரு சற்று தூரத்தில் நின்று அதை நோட்டமிடுவதையே
விரும்பியது. பின்னர் சந்தர்ப்பவாத ரீதியில் 1980களின் கடைப்பகுதியில் நவசமசமாஜக்
கட்சியின் அங்கத்தவர்களின் படுகொலைக்கே பொறுப்பாக இருந்த பாசிச அமைப்பான ஜே.வி.பி.
யுடன் கூட்டுச் சேர்ந்தது.
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே முற்போக்கான விதத்தில் யுத்தத்துக்கு முடிவு கட்டவோ
அல்லது தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவோ குமாரதுங்கவும் பொதுஜன
முன்னணியும் இலாயக்கற்றவை என எச்சரிக்கை செய்தது. அவ்வாறே சோ.ச.க. மட்டுமே இந்த
யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொணரப்பட வேண்டும் எனத் தெளிவாகவும் சந்தேகத்துக்கு
இடமின்றியும் கூறி வைக்கின்றது. இது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதை
இலக்காகக் கொண்டது. ஆதலால் நாம் வடக்கு- கிழக்கில் இருந்து சகல இலங்கை ஆயுதப்
படைகளையும் நிபந்தனையின்றியும் பூரணமாகவும் வாபஸ் பெறும்படியும் கோருகின்றோம்.
70,000 பேரை பலி கொண்டதும் இன்னும் பலரை வாழ்நாள் பூராவும் முடமாக்கியும்
இலட்சக்கணக்கானோரை தமது வசிப்பிடங்களில் இருந்து நிரந்தர அகதிகளாக தள்ளியதுமான
இந்தப் பிற்போக்கு யுத்தத்துக்கு ஒரு ஆளோ அல்லது ஒரு ரூபாயோ வழங்கப்படக் கூடாது என
உறுதியாகக் கூறுகின்றோம்.
சோசலிச சமத்துவக் கட்சி சிங்கள சோவினிசத்தின் (இனவெறிவாதம்) நச்சுத்தனமான
சுலோகங்களை நிராகரிக்கும்படி அனைத்து தொழிலாளர்களையும் வேண்டுகின்றது. இவை
இளைஞர்களையும் யுவதிகளையும் பீரங்கி குண்டுகளாக பயன்படுத்த துணை போவதோடு
வடக்கு-கிழக்கில் உள்ள தமது வர்க்க சகோதரர்களின் தலையில் பொழியும் குண்டுகளையும்
தோட்டாக்களையும் கொள்வனவு செய்ய தெற்கில் உள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வரிகளை
கறப்பதையும் நியாயப்படுத்தவும் உதவுகின்றது. இந்த யுத்தத்தை உக்கிரமாக எதிர்ப்பதன்
மூலம் தொழிலாளர் வர்க்கம் படுமோசமான சுமைகளை சுமக்கத் தள்ளப்பட்டுள்ள நாடு பூராவும்
உள்ள ஒடுக்கப்படும் வெகுஜனங்களை -தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள்- தன்பக்கம்
வெற்றிகொள்ள முடியும். மனித உயிர்கள் உட்பட்ட சகலதுக்கும் மேலாக இலாபங்களை தூக்கிப்
பிடிக்கும் காலவதியான முதலாளித்துவ அமைப்பை ஒழித்துக்கட்டுவதை இலக்காகக் கொண்ட ஒரு
அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்புவதற்கு இது முதலும் முக்கியமுமான நடவடிக்கையாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு சோசலிச குடியரசு ஒன்றியத்தை
நிறுவும் புரட்சிகரப் போராட்டத்தின் பிரிக்கமுடியாத பாகமாக சிறீலங்கா-ஈழம் ஐக்கிய
சோசலிச குடியரசை ஸ்தாபிதம் செய்யப் போராடுகின்றது.
அரசியல் தீர்வுப் பொதியை எதிர்ப்போம்
இலங்கை உள்நாட்டுப் போர், ஒரு பரந்த அளவிலான அரசியல், பொருளாதாரப் போக்குகளது ஒரு
உக்கிரமான வெளிப்பாடாகும். இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்தும், சுதந்திரத்தை
ஈட்டிக்கொண்டதில் இருந்தும் இலங்கை முதலாளி வர்க்கம் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள
அதனது சகாக்களைப் போல் இறக்குமதி பதிலீடு, உயர்ந்த சுங்கவரி விதிப்பு, நிலையான
செலாவணி வீதங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வர்க்கப் பதட்ட நிலையை நசுக்கும்
பொருட்டு வரையறுக்கப்பட்ட சமூக நலன்புரி நடவடிக்கைகளை கட்டுமரமாகப் பயன்படுத்தியது.
ஆனால் நாடுகடந்த கூட்டுத்தாபனங்களின் (Transnational corporation) தோற்றமும் கடந்த
இரண்டு தசாப்தங்களாக பூகோளரீதியில் உற்பத்தி ஒன்றிணைக்கப்பட்டமையும் தேசிய
பொருளாதார விதிமுறையிலான கொள்கைகளை அடியோடு பாதிக்கச் செய்தது. "அனைத்துலக ரீதியில்
போட்டி மிக்கதாக" விளங்கும் விதத்திலானதும் வெளிநாட்டு முதலீடுகளை கவருகின்றதுமான
முயற்சியாக ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் கூட்டுத்தாபனங்களும் தொழிலாளர்
வர்க்கத்தின் சமூகத் தரத்தின் மீது இடைவிடாது தாக்குதல் நடாத்தின.
தொழில் வெட்டுக்களும் வாழ்க்கைத் தரம், சமூக சேவைகள் வெட்டுக்களும் இன, மத,
இனக்குழு பிளவு குமுறல் நிலைமைகளுக்கு தூபம் போடுவதுடன் கைகோர்த்த வண்ணம்
இடம்பெற்றன. பிரச்சினைகளின் ஆணிவேராக இருந்துகொண்டுள்ள முதலாளித்துவ அமைப்பின்
திசையில் வெகுஜனங்களின் கசப்புண்ர்வும் ஆத்திரமும் திரும்புவதை தடை செய்யவே இவை
இடம்பெற்றன. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மற்றும் இடங்களிலும் அதிதீவிர
வலதுசாரி, பாசிச அரசியல் போக்குகள் தலையெடுத்தன. இதற்குச் சமாந்தரமாக இந்தியத்
துணைக்கண்டத்தில் இந்து சோவினிச பாரதீய ஜனதா கட்சி (BJP) ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான், பங்களாதேஷில் பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் போன்ற வலதுசாரி,
இனவாத கட்சிகளின் ஆதிக்கம் தலையெடுத்தது.
இலங்கையிலான மோதுதல்களின் வெடிப்பானது, 1970பதுகளின் கடைப்பகுதியில் யூ.என்.பி.
அரசாங்கம் "சுதந்திர சந்தை" முறைக்கும் மறுசீரமைப்புக்கும் திரும்பியதோடு
நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. தனது கொள்கைகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தின்
மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பிற்கு முகம் கொடுக்கும் முகமாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன
சகல கொழும்பு அரசியல்வாதிகளதும் கையிருப்பு சரக்கு -தமிழர் எதிர்ப்பு சோவினிசம்-
பக்கம் திரும்பினார். இது 1983ல் இனப்படுகொலை கலவரங்களாக வெளிப்பாடாகியது. இது
பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலிகொண்டதோடு நாட்டையும் யுத்தப் பாதையில் இட்டுச்
சென்றது.
ஆனால் வட அயர்லாந்து, மத்திய கிழக்கு, காஷ்மீர் போன்ற இடங்களிலான நீண்டகால
மோதுதல்களைப் போலவே இந்த உள்நாட்டு யுத்தமும் பூகோளரீதியில் நடமாடும் மூலதனத்தின்
நலன்களுக்கு ஒரு தடைக்கல்லாகியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இது மலிவான உழைப்பை
தேடிக்கொள்வதற்கான வசதிவாய்ப்புகளையும் சுதந்திர வர்த்தக வலயங்களை சாத்தியமான
முறையில் காவல் செய்வதையும், கீழ்ப்படிவான அரசாங்கத்தையும் வேண்டி நிற்கின்றது.
மேலும் இலங்கையில் இடம் பெற்று வரும் மோதுதல்கள் முதலீட்டாளர்களால்
தொழிற்பாட்டுக்கான பெரிதும் இலாபகரமான புதிய களமாகக் கணிக்கப்படும் இந்தியாவை
பலிகொண்டு விடுமோ என்ற பயம் இடைவிடாது அச்சுறுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாக
குமாரதுங்க அரசாங்கம் யுத்தத்துக்கு முடிவுகட்டும் ஒரு தீர்வுத் திட்டத்தை
முன்வைக்கும்படி பெரும் வல்லரசு நாடுகளின் இடைவிடாத நெருக்குவாரங்களுக்கு -முதலில்
நோர்வேயின் ஆரம்பிப்புகள் மூலமும் அடுத்து இந்தியத் தலையீடுகள் மூலமும்-
உள்ளாகியது. ஆனால் இது கெடுதியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 17 வருட கால
யுத்தம், ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும், யுத்த கொள்ளை
இலாபகாரர்களையும், பெளத்த பிக்குகளையும், பல்வேறு வலதுசாரி குழுக்களையும்
சிருஷ்டித்துள்ளது. இவர்கள் தமிழருக்கு எந்தவிதமான சலுகையும் வழங்கப்படுவதை அடியோடு
எதிர்க்கின்றனர். அத்தோடு யுத்தம் அதனது கசப்பான முடிவுக்கு இட்டுச் செல்லப்பட
வேண்டும் என விடாப்பிடியாக நிற்கின்றனர்.
இதன் பெறுபேறாக இலங்கை ஆளும் வர்க்கம் ஒரு தடியில் ஒட்டிக் கொண்டுள்ளது. பெரும்
வர்த்தக நிறுவனங்களில் பெரும் பகுதியினர் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்ள
துடிக்கின்றனர். இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பொதுஜன முன்னணியையும்
யூ.என்.பி.யையும் ஒரு உடன்பாட்டுக்கு கொணரவும் ஒரு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை
எட்டவும் வெளிவெளியாக பிரச்சாரம் செய்தனர். இவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லீம்
பிரமுகர்களிடையே ஒரு அதிகாரப் பகிர்வின் மூலம் யுத்தத்துக்கு முடிவு கட்டப்பட
வேண்டும் என்கின்றார்கள். இது இலங்கையின் தொழிலாளர்களை கூட்டாக சுரண்டிக்
கொள்வதற்கான வாய்ப்புக்களை சிருஷ்டிக்கும் என இவர்கள் எண்ணுகிறார்கள்.
எவ்வாறெனினும் இதே சமயம் பெரும் அரசியல் கட்சிகளின் முழு வரலாறும் சிங்கள
சோவினிசத்துக்கு தூபம் போடுவதுடனேயே இணைந்து கொண்டுள்ளது. 50 வருடங்களுக்கு மேலான
முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய அரசியல் ஆயுதமாக இது விளங்கியுள்ளது. இலங்கை
அரசியல்வாதிகள் அவர்களின் பிரித்தானிய எஜமானர்களால் 'பிரித்தாளும்'
தொழில்நுட்பத்தில் நன்கு பயிற்றி எடுக்கப்பட்டவர்கள். 1948ல் ஆட்சிக்கு வந்த
அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை
ஒழிப்பது விளங்கியது. இதைத் தொடர்ந்து 1956ம் ஆண்டின் தனிச் சிங்கள சட்டமும்,
1972ம் ஆண்டில் பெளத்த மதத்தை அரச மதமாக்கும் அரசியலமைப்பு சட்டமும் அறிமுகம்
செய்யப்பட்டன.
ஆதலால் பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் அரசியலமைப்பு மாற்றங்களுக்காக வக்காலத்து
வாங்கும் போதும் யுத்தத்துக்கு முடிவுகட்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போதும்
அவை தமது பாரம்பரியமான அரசியல் ஆதரவுக் களங்களில் இருந்து தாம் அன்னியப்பட நேரிடுமோ
என அஞ்சுகின்றன. குமாரதுங்க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ் ஆளும் வர்க்க
பிரமுகர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்குவதைப்
படிப்படியாக கீழறுத்தார். இந்தக் கட்டத்திலேயே இறுதியான அரசியல் தீர்வுப் பொதி
தமிழீழ விடுதலைப் புலிகளாலும் (LTTE) தமிழர் விடுதலைக் கூட்டணியினாலும் (TULF)
மற்றும் தமிழ் கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசியல்
அமைப்பு மாற்றங்கள் தொடர்பாக பொதுஜன முன்னணியுடன் மாதக் கணக்காக யூ.என்.பி.
நடாத்திய கலந்துரையாடல்கள், பெளத்த மகாநாயக்க தேரர்களும் சிங்கள தீவிரவாதிகளும்
அரசியல் தீர்வுப் பொதிக்கு எதிரான கண்டனத்தில் ஈடுபட்டதும் குடைசாய்ந்து போயிற்று.
தொழிலாளர் வர்க்கம் இந்த அதிகாரப் பகிர்வு பொதி தொடர்பாக தனது சுயாதீனமான
நிலைப்பாட்டை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். இலங்கையின் வரலாற்றில் இடம் பெற்ற
ஏனைய அரசியலமைப்பு சட்ட மாற்றங்களைப் போலவே இதுவும் ஆளும் வர்க்கம் தனது
விவகாரங்களை சாதாரண பொது மக்களின் முதுகின் பின்னால் இருந்து மீளமைப்பு செய்வதை
குறித்து நிற்கின்றது. அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக முதலாளித்துவ
அரசியல்வாதிகள் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தும் பொருட்டு தாம் தூண்டிவிட்டு
வந்த இன, மத குரோதங்களை இந்த மாற்றங்கள் மூலம் ஒரு அரசியலமைப்பு வடிவில் காவல்
காத்து நிற்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த புதிய அரசியலமைப்பின் இனவாதப்
பண்பானது பெளத்தத்தை ஒரு அரச மதமாக பேணுவதன் மூலம் வெளிப்பாடாகியுள்ளது. இன, மத
பிளவுகளை மேலும் ஸ்தாபிதம் செய்வதன் மூலம் இந்தப் புதிய அரசியலமைப்பு மோதுதலுக்கு
மேலும் களம் அமைப்பதோடு இனச் சுத்திகரிப்புக்கான அடிப்படைகளையும் ஏற்படுத்தும்.
இனவாத தலைவர்கள் தமது போட்டியாளர்களுக்கு எதிராக அதிகாரத் தளங்களை இறுக்கமாக்கும்
உக்கிரமான நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு நிலைமையில் இது இடம்பெறும்.
அதிகாரப் பகிர்வு பொதி சம்பந்தமான சோ.ச.க.வின் எதிர்ப்பு ஜே.வி.பி.யினதும் சிங்கள
உறுமய கட்சியினதும் (SUP) மற்றும் சிங்கள தீவிரவாதிகளதும் சோவினிச நிலைப்பாடுகளில்
இருந்து வேறுபட்டது. இவர்கள் ஒற்றையாட்சி அமைப்பை கட்டிக் காக்கும் பதாகையின் கீழ்
சிங்கள பிரமுகர்களின் அரசியல் மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண முயற்சிக்கின்றனர். இந்த
உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக எமது முக்கிய விமர்சனம் இது "நாட்டை கூறுபோடுகின்றது"
என்பது அல்ல. மாறாக அது தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துகின்றது என்பதாகும்.
சோ.ச.க.வின் வேலைத்திட்டம், ஒடுக்குமுறையின் முக்கிய ஆயுதமாக விளங்கும்
முதலாளித்துவ தேசிய அரசை ஒழிப்பதற்கு தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைப்பதை இலக்காகக்
கொண்டது. அங்ஙனம் செய்கையில் நாம் சகல அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் உறுதியாகக்
காப்பதோடு இனம், மதம், பால், மொழி அடிப்படையிலான சகல பாகுபாடுகளுக்கும் முற்றுப்
புள்ளி வைக்கும்படி வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு சோசலிச சமத்துவக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஒரு தனியான
தமிழ் அரசு கோரிக்கைக்கும் ஆதரவளிக்கவில்லை. சிங்கள சோவினிஸ்டுகளைப் போலவே தமிழீழ
விடுதலைப் புலிகளின் பிரச்சாரகர்களும் இந்தப் பிரச்சினைக்கான வர்க்க வேர்களை மூடி
மறைத்துவிட்டு, ஆளும் வர்க்கத்தின் வன்முறைகளுக்காக சிங்களத் தொழிலாளர்களையும்
விவசாயிகளையும் குற்றம் சாட்டுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கினது
வர்க்க தர்க்கமானது அடிக்கடி சாதாரண சிங்கள மக்களின் உயிர்களைப் பலிகொள்ளும்
கண்மூடித்தனமான குண்டுவெடிப்புகளிலும் தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு எதிரான அதனது
இனவாத தாக்குதல்களிலும் ஆழமாக வெளிப்பாடாகியுள்ளது.
மத்திய கிழக்கின் பீ.எல்.ஓ.வை (PLO) போலவும் தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய
காங்கிரசைப் (ANC) போலவும் தமிழீழ விடுதலைப் புலிகள் வார்த்தையளவில் தன்னும்
ஏகாதிபத்தியத்தை கண்டிப்பதாக இல்லை. இதனது தலைமைப் பீடம் ஒரு முதலாளித்துவ குட்டி
ஈழத்தில் முதலீட்டாளர்களின் உள்ளூர் கொம்பிரதோர்களாக (Compradors) சேவகம் செய்ய
விரும்பும் ஒரு சிறிய தமிழ் மத்தியதர வர்க்கத் தட்டினரது நலன்களை மேம்படுத்திக்
கொள்ளும் பொருட்டு வல்லரசுகளை ஏற்பாட்டாளர்களாக பணிபுரியும்படி அழைப்பு
விடுக்கின்றது. பிரபாகரன் ஏனைய "தேசிய விடுதலைத் தலைவர்களின்" வழியில் பயணம்
செய்து, தனது காட்டு ஆயாசத்தை ஒரு வர்த்தக மேற்கோட்டுக்காக பரிமாறிக் கொண்டு
அரபாத்தையும் மண்டேலாவையும் போல் வெள்ளை மாளிகை பசும்புற்தரையில் அமெரிக்க
ஜனாதிபதியுடன் கைகுலுக்கிக் கொண்டாலும் ஒருவரும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சோ.ச.க. யுத்தத்துக்கு ஒரு பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத தீர்வைக் காண வேண்டும்
என்கிறது. வடக்கு-கிழக்கில் இருந்து அனைத்து இலங்கைப் படைகளும் உடனடியாக வாபஸ்
பெறுவதானது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்லும்
என்பதை அங்கீகரிக்கும் அதேவேளையில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட ஐக்கியத்தை
ஏற்படுத்துவதற்கும் இந்தியத் துணைக் கண்டம் பூராவும் ஒரு பரந்த புரட்சிகர
இயக்கத்தின் ஒரு பாகமாக இலங்கையில் ஒரு தொழிலாளர் -விவசாயிகள் அரசாங்கத்தை
கட்டியெழுப்புவதற்குமான ஒரே வழியாக இந்நடவடிக்கை இருந்து கொண்டுள்ளது.
முதலாளித்துவ அரசியல்வாதிகள் கும்பல்களினால் அடைத்து மூடிய கதவுகளின் பின்னால்
தயாரிக்கப்பட்ட உத்தேச அதிகாரப் பகிர்வு பொதிக்கு பதிலாக சோசலிச சமத்துவக் கட்சி
ஒரு அரசியலமைப்பு திட்டத்தை வரைகின்றதும் ஜனநாயக உரிமைகளின் தீர்வுகாணப்படாத
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றதுமான அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு
நிர்ணய சபையை கூட்ட அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய ஒரு சபையானது சாதாரண உழைக்கும்
மக்களுக்காக அம்மக்களினால் பகிரங்கமாகவும் ஜனநாயக ரீதியிலும் தெரிவு செய்யப்பட
வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்தும் அரசில் இருந்தும்
பூரணமாக தனித்து நிற்க கோருவதோடு பெளத்த மதம் அரச மதம் என்பதற்கு முற்றுப்புள்ளி
வைக்கவும் சகல மத அமைப்புகளுக்கும் அரச மானியங்கள் வழங்குவதை நிறுத்தும்படியும்
வேண்டுகின்றது. சகல பிரஜைகளும் இனம், மொழி, மத வேறுபாடுகளில்லாமல் சமத்துவமான
உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அத்தோடு நாம் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத்
தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான குடியுரிமையை மறுத்த பிரஜா உரிமை சட்டம், பொதுஜன
பாதுகாப்பு சட்டம், அவசரகால விதிகள், பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளடங்கலான அனைத்து
அடக்குமுறை, பாகுபாட்டு சட்டங்களை உடனடியாக இரத்துச் செய்யும்படி கோருகின்றோம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகள்
யுத்தத்தை முடிவுக்கு கொணரும் சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கையானது சோசலிச
அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் வேரூன்றிக் கொண்டுள்ளது:
தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியம்
இலங்கைத் தொழிலாளர்கள் ஒரு அனைத்துலக வர்க்கத்தின் ஒரு பகுதியினர். கிராமப்புற
வெகுஜனங்கள், நகர்ப்புற ஏழைகளுடன் சேர்ந்து அவர்கள் ஒரே விதமான பொருளாதார
கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும்
வேலையின்மையும் சகல தேசிய இனங்களின் தொழிலாளர்களையும் பாதிக்கின்றது. உலகம்
பூராவும் தொழிலாளர்கள் ஒரே வர்க்க எதிரியையே -பூகோள ரீதியில் அணிதிரண்ட மூலதனம்-
எதிர் கொள்கின்றனர். அது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினரை மறு பகுதியினருக்கு
எதிராக மோதத் தள்ளுவதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கவும் இலாபத்தை
அதிகரிக்கவும் இடைவிடாத யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. வாழ்க்கைத் தரத்துக்கு எதிரான
இந்த முடிவற்ற தாக்குதலை எதிர்கொள்ளும் பொருட்டு தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த
அனைத்துலக மூலோபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தமது சகாக்களுக்கு அளவற்ற ஆதரவை
வழங்குவதோடு தமது சொந்தப் போராட்டங்களுக்கு வர்க்க சகோதரர்களதும் சகோதரிகளதும்
ஆதரவை தேட வேண்டும். சகல தொழிலாளர்களதும் ஐக்கியத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு அவசியமான
முன்நிபந்தனை, சகல வடிவிலான இனவாதம், சோவினிசம், தேசியவாதங்களை நிராகரிப்பதாகும்.
தொழிலாளர் வர்க்கம் இன, மொழி, மத அல்லது இனக்குழுக்களை பொருட்படுத்தாது சகல
தொழிலாளர்களதும் பொருளாதார, ஜனநாயக உரிமைகளை வெற்றி கொள்ள ஓயாது போராட வேண்டும்.
சமூக சமத்துவம்
முதலாளித்துவ அரசியல்வாதிகளும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும் சர்வதேச நாணய
சபையின் சுதந்திர வர்த்தக கொள்கைகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எனவும்
வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறிக் கொள்கின்றன. 1997ல் "அதிசயங்கள்" சரிந்து
கொட்டி இலட்சோப லட்சம் மக்களை வேலையின்மையிலும் வறுமையிலும் மூழ்கடிக்கும் வரை
இவர்கள் சகலரும் 'ஆசிய புலிகள்' (Asian Tigers) வெற்றி பற்றி ஜம்பம் அடித்துக்
கொண்டனர். வேறு எங்கும் போலவே இலங்கையிலும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
சமூக ஆதாளபாதாளங்களை அகட்டியது. 1973ல் வறிய 40 சதவீதத்தினரின் தேசிய வருமானப்
பங்காக விளங்கிய 19.29 வீதம் 1997ல் 15.30 வீதமாக வீழ்ச்சி கண்டது. இதே சமயம்
செல்வந்தர்களான 20 சதவீதத்தினரின் வீதாசாரம் 42.95 வீதத்தில் இருந்து 49.5 வீதமாக
அதிகரித்தது.
சோசலிச சமத்துவக் கட்சி. சோசலிசக் கொள்கைகளை முன்வைக்கின்றது. சகலரும் உற்பத்தி
திறனும் உறுதியானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கையை நடாத்துவதற்கு அவசியமான வளங்களை
கொண்டிருக்க வேண்டும். சமூக சமத்துவம் கற்பனையானது அல்ல. சமீபகாலத்தில்
தொழில்நுட்ப, விஞ்ஞான, வைத்திய துறைகளில் ஏற்பட்ட பரந்த அபிவிருத்திகள் வாழ்க்கைத்
தரத்தை அனைத்துலக ரீதியில் உயர்த்துவதற்கும் சகலரதும் தேவைகளை இட்டுநிரப்பவும்
அவசியமான சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது சமுதாயத்தின் மிகவும்
அடிப்படையான அவசியங்களைக் கூட இட்டு நிரப்ப இலாயக்கில்லாது போயுள்ள இலாப அமைப்பினை
ஒரு நேரடி சவாலுக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.
தொழிலாளர்- விவசாயிகள் அரசாங்கத்தின் அவசியம்
பெயரளவிலான சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டுகள் பூராவும் இலங்கை ஆளும் வர்க்கம்
சாதாரண உழைக்கும் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும் கண்ணியமான வாழ்க்கைத்
தரத்தையும் நிறைவேற்றி வைக்க முற்றிலும் இலாயக்கற்றது என்பதைக் காட்டிக்
கொண்டுள்ளது. இது ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருக்க முடிந்தமைக்கான துரோகம்,
தொழிலாளர் வர்க்கத்தின் பாரம்பரியமான தலைமையின் -எல்லாவற்றுக்கும் மேலாக லங்கா
சமசமாஜக் கட்சியின்- காட்டிக் கொடுப்பையே சார்ந்ததாகும்.
சோசலிச அனைத்துலக வாதத்துக்கான போராட்டத்தைக் கைகழுவி விட்டு விட்டு, 1964ல்
சிறிமாவோ பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதன் மூலம்
லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள் தொழிலாளர் வர்க்கத்தை கைகழுவி விட்டதோடு,
ஒடுக்கப்படும் மக்களையும் ஏனைய வர்க்க சக்திகளின் பிடிக்குள் தள்ளினர். லங்கா
சமசமாஜக் கட்சியின் நடவடிக்கை தேசியவாத, சோவினிச சக்திகளை பலப்படுத்த நேரடியாக
உதவியதோடு ஜே.வி.பி.யினதும் தமிழீழ விடுதலைப் புலிகளதும் எழுச்சிக்கும், இறுதியில்
யுத்தத்துக்கும் இட்டுச் சென்றது.
இதிலிருந்து அவசியமான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தொழிலாளர் வர்க்கம்
முதலாளி வர்க்கத்தின் சகல பிரதிநிதிகளிடம் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை
ஸ்தாபிதம் செய்தாக வேண்டும். இது தனது வர்க்க நலன்களுக்காகப் போராடுவதன் மூலம்
மட்டுமே இதனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளையும் சிறிய விவசாயிகளையும் சிறிய
வியாபாரிகளையும் தன்பக்கம் அணிதிரட்டவும், சோசலிச அடிப்படையில் சமுதாயத்தை மீள
நிர்மாணம் செய்யும் ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிதம் செய்வதன் மூலமே
இந்த சகதியில் இருந்து வெளியேறும் பாதையைக் காட்டவும் முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கொள்கைகளுக்காகப் போராடுகின்றது:
அனைவருக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய தொழிலுக்கு உத்தரவாதம்
முதலாளித்துவம் வேலையின்மை கொள்ளை நோய்க்கு முடிவுகட்ட இலாயக்கற்றதாகிவிட்டது.
தனியார் கம்பனிகளின் தொடர்ச்சியான மறு சீரமைப்புகள் காரணமாக பழைய தொழிலாளர்கள்
வேலைகளில் இருந்து தூக்கிவீசப்பட்டு வருகின்றார்கள். இவற்றுடன் அரசுடமை
நிறுவனங்களின் தனியார்மயமாக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது. இளம் தொழிலாளர்களுக்கு
தொழில் வாய்ப்புகள் பெரிதும் அரிதாகவே உள்ளன. 15-24 வயதுக்கும் இடைப்பட்டவர்களில்
70 சதவீதத்தினர் வேலையற்றவர்களாக உள்ளனர். இதன் பெறுபேறாக இவர்களில் பலர் ஆயுதப்
படைகளில் சேர்ந்து உயிரிழக்க நேரிட்டுள்ளது; அல்லது முடமாகிப் போக நேரிட்டுள்ளது.
சோ.ச.க. சம்பளத்தில் வெட்டு இல்லாத விதத்தில் வேலை வாரத்தை 30 மணித்தியாலங்களாகக்
குறைப்பதன் மூலம் தொழில் வாய்ப்பை விஸ்தரிக்க பிரேரிக்கின்றது. நல்ல சம்பளத்துடன்
கூடிய பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் ஒரு பொது வேலைத்
திட்டத்தை வழங்கும் விதத்தில் கோடிக்கணக்கான ரூபாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட
வேண்டும். அதன் மூலம் அவசரமாகத் தேவைப்படும் அரசாங்க வீடமைப்பு திட்டங்கள்,
பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், பெருந்தெருக்கள், நீர்பாசனத் திட்டங்களை -குறிப்பாக
யுத்தத்தால் சீரழிந்து போன நாட்டின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்க
வேண்டும்.
நாம் சகல வடிவிலான சிறுவர் உழைப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்
எனவும் இளைஞர்களையும், பெண்களையும் இரவு வேலை முறைக்கு பயன்படுத்துவதை நிறுத்த
வேண்டும் எனவும் கோருகின்றோம். அவர்களின் வேலை இயலளபை அதிகரிக்கும் பொருட்டு சகல
இளைஞர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய தொழில் சார்ந்த பயிற்சிகள் அரசாங்கத்தால்
நடத்தப்படும் வேலைத் திட்டங்களில் வழங்கப்பட வேண்டும். அத்தோடு அவை கலாச்சார,
விளையாட்டு வசதி வாய்ப்புக்களை கொண்டிருக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு சம
சம்பளம் வழங்கப்படுவதோடு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறையும் வழங்கப்பட
வேண்டும். இலவசமானதும் நல்ல கருவிகளையும் ஆளணிகளையும் கொண்ட குழந்தை பராமரிப்பு
நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
உயர்ந்த தரமானதும் இலவசமானதுமான அரசாங்க கல்வி
வரவு செலவுத் திட்டத்தில் செலவுகளை வெட்டிக் குறைக்கும் சர்வதேச நாணய நிதிய
அதிகாரிகளின் கட்டளைகளை இட்டு நிரப்பவும் இராணுவ செலவீனங்களை அதிகரிக்கவும் வர்த்தக
நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வரி விடுமுறைகளை வழங்கவும் பொதுஜன முன்னணி
அரசாங்கம் அரசாங்க கல்வி, சுகாதாரம், நலன்புரி சேவை திட்டங்களை தியாகம்
செய்துள்ளது. ஏற்கனவே பலநூறு பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதோடு இலவசக் கல்வி
பெறும் வயதை 14 ஆகக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டம் நிறைவேற்றப்படுமிடத்து
இன்னும் பல பாடசாலைகள் மூடப்படும். விமர்சன ரீதியான சிந்தனை முறையை உருவாக்குவதற்கு
பதிலாக பாடவிதானங்களும், பாடசாலை நூல்களும் இளம் பிள்ளைகளின் மனதில்
மூடநம்பிக்கைகளை ஊட்டும் விதத்திலும் சிங்கள சோவினிசத்தின் பிற்போக்கு நம்பிக்கைகளை
திணிக்கும் வகையிலும் மீள வரையப்பட்டு வருகின்றன.
இளைஞர்கள் தமது திறமைகளையும் சிருஷ்டி திறனையும் முழுமையாக அபிவிருத்தி செய்ய
வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சோ.ச.க. அரசாங்க கல்வியை சகல துறையிலும் பரந்த அளவில்
இலவசமாக வழங்கும்படி கோருகின்றது. அக்கல்வி உயர் தரம் கொண்டதாகவும் பல்கலைக் கழகம்
வரையிலும் இலவசமாகவும் கிடைக்க வேண்டும். இன்றுள்ள பாடசாலைகளும் கல்வி நிலையங்களும்
விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் கணனி வசதிகளையும் நவீன "ஓடியோ-விசுவல்" கல்வி முைற
(Audio-visual system) தொழில் நுட்பம் கொண்டதாகவும் விளங்க வேண்டும்.
இலவசமானதும் முதல் தரமானதுமான சுகாதார பணிகளும் நலன்புரி சேவை வேலைத்திட்டமும்
வைத்திய விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் அபிவிருத்திகளுக்கு
மத்தியிலும் மக்கள் பெரிதும் தடை செய்யக் கூடிய நோய்களுக்கு தொடர்ந்தும் பலியாகுவது
ஒரு அவமானமாகும். சுகாதார வேலைத்திட்டங்களில் அரசாங்கத்தின் வெட்டுகள் காரணமாக
மலேரியா, வாந்திபேதி, கூவாக்கட்டு (mumps) போன்ற நோய்கள் நாடு பூராவும்
அதிகரித்துள்ளன. ஒரு டாக்டரின் மருந்துச் சிட்டைக்காக 300 ரூபா செலவாகிறது. பல
தொழிலாளர்கள் மருந்துகளை வாங்க இலாயக்கற்றவர்களாக உள்ளனர். ஒரு அரசாங்க
ஆஸ்பத்திரியில் ஒரு இருதய சத்திர சிகிச்சைக்காக ஒரு வருடத்துக்கும் மேலாக காத்துக்
கிடக்க வேண்டியுள்ளது. ஆனால் ரூபா. 300,000 வை செலுத்தக் கூடியவர்கள் இதனை ஒரு
தனியார் ஆஸ்பத்திரியில் நினைத்த மாத்திரத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். சோசலிச
சமத்துவக் கட்சி, நவீன கருவிகள் பொருத்தப்பட்டதும் பயிற்சி பெற்ற ஆளணி கொண்டதுமான
அரசாங்க ஆஸ்பத்திரிகளையும் சிகிச்சை நிலையங்களையும் அபிவிருத்தி செய்யக்
கோருகின்றது. அதன் மூலம் சகலருக்கும் உயர்தரமான சுகாதார சிகிச்சைகள் கிடைக்க
வேண்டும். மகளிருக்கு கருக்கலைப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.
1970 72ல் 5.4 மில்லியனாக இருந்த வறியவர்களின் எண்ணிக்கை 1996 97ல் 8.6
மில்லியன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்க உதவித் திட்டங்கள் தொடர்ச்சியாக
வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. தற்கொலை வீதம் ஒரு நாளைக்கு 22 ஆக உள்ளது. இது
உலகிலேயே மிகவும் உயர்ந்ததாகும். சோசலிச சமத்துவக் கட்சி முதியவர்கள்,
வேலையற்றவர்கள், நோயாளர்கள், அங்கவீனர்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை
வழங்கும் பொருட்டு ஓய்வூதியம், வாழ்க்கைப்படிகளுடன் கூடிய ஒரு நலன்புரி சேவை
திட்டத்தை விரிவுபடுத்தும்படி கோருகின்றது. அவசியமானவர்களுக்கு உரிய முறையில்
கருவிகளும் சாதனங்களும் பொருத்தப்பட்ட முதியோர் இல்லங்கள், மகப்பேற்று நிலையங்களின்
வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
சகல குடும்பங்களுக்கும் கண்ணியமான வீட்டுவசதி
பல குடும்பங்கள் தண்ணீர், மின்சாரம், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல்
தரங்குறைவான வீடுகளில் வசித்து வருகின்றன. கொழும்பு நகர எல்லைக்குள் 57 வீதமான சனத்
தொகையினர் சேரி வீடுகளில் வாழ்கின்றனர். அரசாங்கம் பெரும் வர்த்தகர்களுக்கு காணிகள்
வழங்கும் பொருட்டு இந்த ஏழை மக்களை சேரிகளில் இருந்து கலைக்கின்றனர். இந்தப்
பிரச்சினைக்கான அவர்களின் தீர்வு அதுவே.
சோசலிச சமத்துவக் கட்சி சகல குடும்பங்களுக்கும் அவசியமான சகல வசதிகளையும் கொண்ட
தாக்கிப் பிடிக்கக் கூடிய அரசாங்க வீடமைப்புகளை அமைக்கும்படி அழைப்பு
விடுக்கின்றது. வாடகைக் கட்டுப்பாட்டு முறை அமுல் செய்யப்படுவதோடு முறை கேடான
நிலச்சுவாந்தார்கள் இலாபம் சம்பாதிப்பதைத் தடுக்கவும் வேண்டும். காலியான வீடுகளும்
மாடி வீடுகளும் ஏழைக் குடும்பங்களுக்கு நியாயமான வாடகையில் வழங்கப்பட வேண்டும்.
சிறிய விவசாயிகளின் வாழ்க்கைச் சுமைகளை போக்கு
காணிகளுக்கான அவசியம் நாடுபூராவும் பெரிதும் சிக்கலான பிரச்சினையாக தோன்றியுள்ளது.
உத்தியோக பூர்வமான புள்ளிவிபரங்களின்படி பெரும்பான்மையான விவசாயிகள் -72
வீதத்தினர்- 1.6 எக்டேயருக்கும் குறைவான காணிகளையே கொண்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட
7 வீதத்தினர் எதுவித காணியும் இல்லாதவர்கள்.
நிலமற்ற சிங்கள ஏழைகள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை யூ.என்.பி.யும் பொதுஜன
முன்னணியும் சுரண்டிக்கொண்டுள்ளன. இவை வடக்கில் வன்னியிலும் கிழக்கிலும் தமிழர்கள்
பெரும்பான்மையினராக வாழும் இடங்களில் வேண்டும் என்றே அவர்களை குடியேற்றத்
திட்டங்களில் குடியமர்த்துகின்றனர். இக் கொள்கை இனவாதப் பதட்ட நிலைமையை
உக்கிரமாக்கியுள்ளது. அனைத்து இடங்களில் உள்ள விவசாயிகளும் உற்பத்தி செலவு
அதிகரிக்கும் போது உற்பத்தி பண்டங்களின் விலைகள் பெருமளவு வீழ்ச்சி காண்பதன்
காரணமாக "கத்தரிக்கோல் நெருக்டிக்குள்" அகப்பட்டுப் போயுள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சி இனக்குழுவை கணக்கில் கொள்ளாமல் சகல காணியற்ற
விவசாயிகளுக்கும் அரச காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது. வங்கிக்
கடன்கள் விவசாய உபகரணங்கள், உரம், இரசாயன திரவியங்கள் ஆகியன சகல ஏழை
விவசாயிகளுக்கும் இலகுவான கடன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். கமத்தொழிலில்
ஈடுபடும் குடும்பங்களின் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில்
விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
பெரும் வர்த்தக நிறுவனங்களும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் இந்த மிதமான
யோசனைகள் "யதார்த்தமற்றவை" எனவும் இவற்றை அமுல் செய்யப் பணம் கிடையாது எனவும்
கூறலாம். ஆனால் இந்த அத்தியாவசியமான அவசியங்கள் இல்லாமல் சாதாரண பொதுமக்களில்
பெரும்பான்மையினர் உயிர் வாழ்வர் என எதிர்பார்ப்பது முற்றிலும் யதார்த்தமற்றதாகும்.
இவற்றை வழங்குவதற்கான வளங்கள் இருந்து கொண்டுள்ளன. ஆனால் அவை தற்சமயம் ஒரு சில
செல்வந்தர்களதும் ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களதும் கைகளில் சிக்குண்டு போய்க்
கிடக்கின்றன.
தனது வேலைத் திட்டத்தை அமுல் செய்வதற்கான முதல் நடவடிக்கையாக சோசலிச சமத்துவக்
கட்சி யுத்தத்தின் பேரிலான சகல செலவீனங்களையும் நிறுத்தும்படி கோருகின்றது. 17
வருடகால யுத்தத்தின் பொருளாதாரச் செலவீனமானது பழமைவாத ரீதியில் 2.2 ட்ரில்லியன்
ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு நவீன ஆஸ்பத்திரிகளையும்
பாடசாலைகளையும் கட்டவும் கருவிகள் சாதனங்களைப் பொருத்தவும் பல இலட்சக் கணக்கான
மக்களுக்கு பெரிதும் அவசியமாகப்படும் பொது வீடமைப்புத் திட்டங்களை அமைக்கவும்,
மின்சாரம், வடிகாலமைப்புக்களை ஏற்படுத்தவும். சுத்தமான நீரை விநியோகிக்கவும்
முடிந்திருக்கும்.
ஒரு தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கமானது தனியார் செல்வத்தின் கோட்டைகளுக்குள் ஆழமாக
ஊடறுத்துச் செல்ல வேண்டியுள்ளது. முழுப் பொருளாதாரமும் தொழிலாளர் வர்க்கத்தின்
ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொணரப்பட வேண்டும். ஒரு அற்ப சிறுபான்மையினரின்
இலாபங்கள் அல்லாது பெரும்பான்மையினரின் தேவைகளையும் அபிலாசைகளையும் பூர்த்தி
செய்யும் விதத்தில் சமூக முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
எவ்வாறெனினும் தனியொரு தேசிய அரசின் எல்லைகளுக்குள் சமூக சோசலிச புனர்நிர்மாணம்
சாத்தியமானது அல்ல. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அதிகாரத்துவ
ஆட்சிகள் வீழ்ச்சி கண்டமை "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற ஸ்ராலினிச முன்நோக்கின்
பிற்போக்கையும் கற்பனை தன்மையையும் நிரூபித்துள்ளது. இலங்கையில் தொழிலாளர்,
விவசாயிகள் அரசாங்கம் இந்தியத் துணைக் கண்டத்தினதும், உலகம் பூராவும் உள்ளதுமான ஒரு
பலம்வாய்ந்த பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு பாகமாக இல்லாது போனால் அது விரைவாக
சிதறுண்டு போகும். எனவேதான் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவைச் (ICFI) சேர்ந்த சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து அனைத்துலகத்
தொழிலாளர் வர்க்கத்துடன் சோசலிச நனவை புனருத்தாரணம் செய்வதையே தனது அடிப்படையான
அரசியல் பணியாகக் கொள்கின்றது. எதிரே வரும் சமூகக் குமுறல்களுக்கு தயார் செய்ய அது
பெரிதும் அவசியமாகியுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) லங்கா
சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பின் பின்னர் 1968ல் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
அது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப்
பகுதியாக ஒரு நிஜமான சோசலிசக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றது. அத்தோடு
பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிராக இந்தியத்
துணைக் கண்டம் பூராவும் தொழிலாளர்களை ஐக்கியப் படுத்தப் போராடிய இந்திய போல்ஷிவிக்
லெனினிஸ்ட் கட்சியின் (BLPI) சக்திவாய்ந்த பாரம்பரியங்களுக்கு புனர்வாழ்வு
அளிக்கவும் அது போராடியது.
லங்கா சமசமாஜக் கட்சி சீரழிந்து போனமை அனைத்துலக ரீதியில் தொழிலாளர் வர்க்கத்தின்
பழைய அதிகாரத்துவ தலைமைகளின் பரந்தளவிலான வீழ்ச்சியின் ஒரு பாகமாக விளங்கியது. தமது
தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களும், சமூக ஜனநாயக,
ஸ்ராலினிச கட்சிகளும் கணிசமான அளவு குழப்பத்தையும் தகவமைவின்மையையும் ஏற்படுத்தும்
வகையில் தொழிலாளர்களின் பெரிதும் அடிப்படையான உரிமைகளுக்காகப் போராடுவதையும் கூட
அவர்கள் புறக்கணித்தனர்.
சோசலிச இயக்கத்தை மீள நிர்மாணிப்பது என்பது வெறுமனே இன்றுள்ள அதிகாரத்துவத்தை
பெரிதும் போர்க்குணம் கொண்ட தலைவர்களால் பதிலீடு செய்யும் ஒரு விடயமாகி விடாது. இது
20ம் நூற்றாண்டின் மூலோபாய அனுபவங்களில் இருந்து -எல்லாவற்றுக்கும் மேலாக சோவியத்
யூனியனின் எழுச்சி, தேக்கம், வீழ்ச்சி பற்றி- அவசியமான படிப்பினைகளைப் பெறுவதை
அவசியமாக்கியுள்ளது. தொழிலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்களிடையே ஒரு நிஜமான சோசலிச
கலாச்சாரத்தை நனவான முறையில் மீளக் கட்டியெழுப்புவதை அவசியமாக்கியுள்ளது.
எமது வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் யுத்தத்துக்கும் சமூக
சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீட்டை உருவாக்க ஆதரவளிக்கும்படி தொழிலாளர்கள்,
இளைஞர்கள், குடும்பப் பெண்கள், மாணவர்கள், தொழில்சார் மக்கள், சிறிய விவசாயிகள்,
வேலையற்றோரை நாம் வேண்டுகின்றோம். எமது வேலைத் திட்டத்துடனும் முன்நோக்குடனும்
உடன்பாடு கொண்டவர்களை எமது தேர்தல் பிரச்சார இயக்கத்தில் பங்குகொள்ளும் படியும்
சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதை கட்டியெழுப்புமாறும் வேண்டுகின்றோம்.
|
|