|
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
:
ஈரான்
Who are the People's Mujahedin of Iran?
ஈரானில் இந்த மக்கள் முகாஜ்தீன் என்பவர்கள்
யார்?
By Justus Leicht
14 September 2000
Use
this version to print
கடந்த சில வாரங்களாக, ஈரானிய
மற்றும் மேற்கத்தைய செய்தி நிறுவனங்களால் ''மக்கள் முகாஜ்தீன்'' People's
Mujahedin organization, இயக்கத்தின் அரசியல் கருவான ''ஈரானிய தேசிய எதிர்ப்புச்
சபை'' [National Resistance Council of Iran] பற்றி அடிக்கடி எழுதப்பட்டும்,
பேசப்பட்டும் வருகின்றன. இவ் இயக்கம் ஈரானில் இராணுவ நிலையங்கள் மீதும், காவல்படையினர்
மீதும் பல தாக்குதல்களை மேற்கொண்டது. மேலும் இது மேற்கு நாடுகளில் ஈரான்
அரசாங்கத்திற்கு எதிராகவும், விசேடமாக அந்நாட்டுப் பிரதமர் காட்டாமிக்கு எதிராகவும்
ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றிய ஒரு வரிசைக்கிரமமான ஊர்வலங்களையும், கூட்டங்களையும்
ஒழுங்குபடுத்தியது.
மேற்கத்தைய தொலைத் தொடர்புச் சாதனங்கள் முகாஜ்தீன் மேல் செய்யும் தாக்குதல்,
நாட்டின் பொருளாதார நலன்களையும், பூகோளரீதியான மூலோபாய நலன்களையும் இரத்தக்கறை
படிந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை நியாயப்படுத்துவதற்காகும். அதேவேளை
இந்த மக்கள் முகாஜ்தீன் ஒரு முற்போக்கான விடுதலை இயக்கம் என நினைப்பதோ, அல்லது
இதை ஒரு நல்ல எதிர்ப்பு இயக்கம் என நினைப்பதோ முற்றிலும் பிழையானதாகும்.
மேலும் மேற்கத்தைய அரசாங்கங்களின் உத்தியோகபூர்வமான அரசியல் கொள்கைகள், அவற்றின்
வெளிநாட்டு அரசியல், மற்றும் செய்தித்துறை சாதனங்கள் போன்றவை இவ்வாறான இயக்கங்கள்
தொடர்பான தம் நிலைப்பாட்டை வெகுவிரைவாக மாற்றலாம் என்பதற்கு கொசவோ- அல்பானிய
விடுதலை இயக்கம் [KLA] தொடர்பான நிலைப்பாடு எடுத்துக்காட்டாகும். இந்த மக்கள்
முகாஜ்தீனுடைய வரலாற்றையும், அதனுடைய வேலைத்திட்டத்தையும் பார்ப்பதினூடு,
ஈரானில் வாழும் ஏழைகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் இந்த இயக்கத்திடமிருந்து
எந்தவொரு சரியான தீர்வையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நிட்சயமாகக் கண்டுகொள்ளலாம்.
தோற்றம்
இதனுடைய தோற்றம் ''விடுதலை இயக்கங்கள்'' எனப்படுபவைகளிலிருந்தும், அதனுடைய
''இஸ்லாமிய மாணவர் அமைப்புகள்'' போன்றவைகளிலிருந்தும் அறுபதுகளின் ஆரம்பத்தில்,
மொகமட் மொசாடேக் (Mohamed Mossadegs) என்பவரின் ஆதரவாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
மொசாடேக் பிரதம மந்திரியாக இருந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எண்ணைக் கம்பனிகளை
தேசிய மயமாக்கினார். இதன் விளைவாக 1953ல் அமெரிக்காவினதும், CIA உளவுப்படையினதும்
உதவியுடன் ஒரு சதிப்புரட்சியூடாக ஷாவினாலும் (Schah) இராணுவத்தாலும் தோற்கடிக்கப்பட்டார்.
அந்நேரத்தில் இந்த ஷாவுக்கு இஸ்லாமிய ஆன்மீகத் துறையின் பெரும்பான்மையோரால்
ஆதரவு வழங்கப்பட்டது.
மேடி பாசாறான் (Mehdi Bazaraan) என்பவர் ஒரு ''விடுதலை இயக்கத்தின்'' தலைவரும்
அதேசமயம் மோசாடேக்கின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட எண்ணை நிறுவனங்களின் ஒரு தலைவருமாவார்.
இவரும் மோசாடேக்கைப் போன்று ஒரு கம்யூனிச விரோதியும், மற்றும் ஷா அல்லது ஏகாதிபத்தியத்தைப்
பார்க்கிலும், ஒரு தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்துக்காக பயந்து நடுங்கியவரும்
ஆவார். பாசாகான் அந்நேரத்தில் மோசாடேக்கின் ''தேசிய முன்னணி'' க்கு எதிராக
இஸ்லாமிய மத குருமாருடன் இணைந்து வேலை செய்ய முயற்சித்தார். ஆரம்பத்தில்
அவருடைய இயக்க நடவடிக்கைகளைப் பற்றி சற்று அமைதியாக இருந்த ஷா, 1963ல் பெரியதொரு
மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை முறியடித்ததைத் தொடர்ந்தும், மற்றும் ஏனைய
சுயாதீனமான இயக்கங்கள் தடைசெய்யப்பட்டதையும் அடுத்து, இதுவும் முதல் தடவையாக
தடைசெய்யப்பட்டது.
இதற்குப் பின்னால் 1963 ஜூனில் அரசபடையினர் ஒரு ஊர்வலத்தில் சென்ற நிராயுதபாணிகளான
மக்களை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தனர். இச்சம்பவத்தைப் பற்றிய ஒரு அமெரிக்க
அவதானியின் கணிப்புப்படி, இதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும்,
எதிர்தரப்பினரது கருத்துப்படி பத்தாயிரம் பேர்வரையில் கொல்லப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. பின்னால் இம்மக்கள் படுகொலைச் சம்பவம் ஷாவினால்
முன்னெடுக்கப்பட்ட ''வெள்ளைப்புரட்சி'' யின் ஒரு புனித சடங்காக பிரகடனப்படுத்தப்பட்டது.
இது கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியையும்,
வெளிநாட்டுக் கடன்களால் ஏற்பட்ட பெருமளவிலான நாணய மதிப்பிறக்கத்திற்குமான
ஷாவின் பிரதிபலிப்பாகும்.
ஷாவின் நோக்கமானது ஒரு நவீனமயப்படுத்தலினூடு, முதலாளித்துவ உலகச் சந்தையில்
நாட்டை இணைப்பதாகும். மேலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் மக்களின் மதிப்பிற்குரிய
சமூக மற்றும் அரசியல் விருப்பங்கள் அனைத்தையும் ஒரு மிருகத்தனமான முறையில்
அழித்தொழிக்காமல் இதை நிறைவேற்றமுடியாது.
எனவே சரியாக இந்நேரத்தில்தான் முதல்தரமாக அயத்துல்லா கொமேனி (Ayatollah
Khomeini) அரசியலுக்கு வந்தார்.அவர் ஷா அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான
இவ் அரசியலை எதிர்த்த அதேசமயம், அதற்காக சகலவிதமான சமூக வார்த்தையாடல்களையும்
பாவிக்க தயங்கவில்லை. இதுமக்களை ஒரு வகை அமைதியான அடக்குமுறையின் கீழ் கட்டுப்படுத்தி
வைத்திருந்த இஸ்லாமியமத குருமாருக்கும், ஷாவுக்கும் இடையேயான இதுவரையிலான
பாரம்பரிய உறவில் ஏற்படும் மாற்றத்தைக் சுட்டிக் காட்டியது.
அந்நேரத்திலான ''வெள்ளைப்புரட்சி'' யின் ஆட்சிக் காலத்தில் றேசா பாலேவி (Reza
Pahlewi) என்பவர் இஸ்லாமிய ஆன்மீகத்துறைக்காக ஒரு சில சலுகைகளை கட்டுப்படுத்தவும்,
அரசின் கட்டுப்பாடினுள் கொண்டுவரவதும் முக்கியமெனக் கண்டுகொண்டார். மறுபக்கத்தில்
இதற்கு எதிரான மத குருமாரினது எதிர்ப்பு மற்றும் ''வெள்ளைப் புரட்சி'' யால்
தமது சொந்த இருப்பிற்கு ஏற்பட்ட ஆபத்தை அறிந்த சிறிய வர்த்தகர்களும், சிறிய
நிறுவனங்களின் உடமையாளர்களுடனும் இணைந்துகொண்டது.
அந்நேரத்தில் மொசாடேயின் ''தேசிய முன்னணி'' யின் பாரம்பரியம் மிகவும்
குறைந்த செல்வாக்கைப் பெற்றிருந்ததுடன், றூடே எனும் (Tudeh) மொஸ்கோ
ஸ்ராலினிச கட்சியும் அரசியலில் இருந்து பின்வாங்கியிருந்தது. எனவே இந்நேரத்தில்
ஒரு கட்சியாக மக்கள் முகாஜ்தீன் தோன்றியது. பாசாகானின் ''விடுதலை இயக்கத்தின்''
இளைஞர்கள், மாணவர்களாகிய அங்கத்தவர்கள் இவ் இயக்கத்தின் தலைமை வழிபாட்டை
நிராகரித்துவிட்டு, (மக்கள் முகாஜ்தீனுடைய பின்னைய பிரசுரங்களில் இவ்வாறு
காணப்படுகிறது) கொமேனியை ஓர் ''தேசியத்தின் சின்னம்'' எனக் கொண்டாடினர்.
மேலும் ''ஆயுதம் தாங்கிய போராட்டத்தை'' முன்னெடுப்பதெனவும் முடிவெடுத்தனர்.
இதற்காக அவர்கள் கியூபா, அல்ஜீரியா, மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளில்
தோன்றிய கொரில்லா இயக்கங்களை முன்னுதாரணங்களாக எடுத்தனர்.
முதலில் இவர்கள் தமது தத்துவத்தை கலந்துரையாடல் குழுக்களை அபிவிருத்தி செய்வதினூடு
ஏற்படுத்தினர். இவர்கள் மதத்திலிருந்து உடைத்துக்கொள்ளாது, மார்க்சிசத்திலிருந்து
அதிகமானவற்றைப் பொறுக்கியெடுத்து குரானுக்கு (Koran) ஒரு முற்போக்குப்
பாத்திரம் இருப்பதாக பறைசாற்றினர். ''தூய இஸ்லாம்'' இது சுரண்டலுக்கும், அநீதிக்கு
எதிராகவும் போராடுவதாகவும், மேலும் இது ஓர் வர்க்கங்களற்ற சமுதாயத்தை படைத்தளிப்பதாகவும்,
பெண்ணுக்கான சம அந்தஸ்தை, அதன் அனைத்து மட்டங்களிலும் உத்தரவாதம் அளிப்பதாகவும்
கூறினர். மேலும் இக் குரானின் உள்ளடக்கத்தை அதன் சரியான வரலாற்று விளக்கத்தில்
ஆய்வு செய்தல் அவசியம் எனவும், மற்றும் மதகுருமார் பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தின்
நலன்களையும் ஒரு ''பிழையான இஸ்லாமிற்கு'' கீழ் பிரதிநிதித்துவப்படுத்தி
விட்டனர் எனவும் கூறிக்கொண்டனர்.
முகாஜ்தீனுடைய இக்கருத்தோட்டம், பெருமளவில் அந்நேரத்தில் பிரசித்திபெற்ற ஒரு
புத்திஜீவியான அலி சாராறியாற்றி (Ali Schariati 1933-1971) யின் கருத்துக்களோடு
ஒத்ததாக இருந்தன. மேலும் சாராறியாற்றியின் சிந்தனைகள் ஷாவுக்கு எதிரான புரட்சியில்
ஒரு முக்கியமான பாத்திரத்தை அந்நேரத்தில் வகித்திருந்தன. இவ்வாறான கருத்துக்கள்,
கொமேனியுடன் இணைவதற்கான நிலைமைகளையும், மேலும் அதற்குள் இளம் சமுதாயத்தை
வென்றெடுப்பதையும் சாத்தியமாக்கிற்று.
''வெள்ளைப் புரட்சியால்'' சீர்குலைக்கப்பட்ட சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட
தட்டினரான பாரசீக நடுத்தரவர்க்க குடும்பங்களிலிருந்து வந்த தீவிரவாத மாணவர்கள்,
மற்றும் பழமைவாதத்திலும், சமயவாதத்திலும் ஊறிப்போன சிறிய பெரிய வர்த்தகர்கள்,
கைவினையர்கள், பசார் (சந்தை) ரைச் சேர்ந்த வியாபாரிகள் போன்றோர் சமூக
கேள்விகளும், இஸ்லாமும் இணைந்த இக்கருத்துக்களால் கவரப்பட்டனர். மக்கள்
முகாஜ்தீனால் ஆரம்பத்தில் தோற்றுவிக்கப்பட்ட ''முற்போக்கான தேசிய முதலாளித்துவத்தை''
இத் தட்டினர் ஏற்றுக்கொண்ட அதேசமயம் ஆன்மீகத்துறையினரும் ஆதரித்தனர்.
மேலும் இந்த ''விடுதலை இயக்கம்'' மக்கள் முகாஜ்தீனுக்காக நிதியுதவிகளை சேகரித்ததுடன்
கெரில்லா இயக்கம் பிரபல்யமடைவதற்கான ஆதரவுகளையும் வழங்கியது.
மக்கள் முகாஜ்தீனைப்போல் தோற்றம் பெற்ற ஏனைய கொரில்லாக் குழுக்களுள் ''மக்கள்
பெடாயீன்'' (Volksfedayin) எனும் ஒர் ஸ்ராலினிசக் குழு குறிப்பிடத்தக்கதாகும்.
இது மாணவர்களில் பெரும்பான்மையோரையும் புதிய நவீனமான விடயங்களுடன் ஈடுபாடு
உடையவர்கள், மற்றும் கல்வியறிவு படைத்த நடுத்தரவர்க்த்தையும் (ஆசிரியர்கள்,
அரசாங்க ஊழியர்கள்) தனது இயக்கத்தில் சேர்த்திருந்தது. அதோடு இவர்கள் மத எதிர்ப்பு
வாதிகளாகவும் இருந்தனர்.
சமூக அடித்தளம் தொடர்பான மிகவும் சூடான விவாதங்களையும், பல வித்தியாசமான
போக்குகளையும் கொண்டிருந்த போதும் சிறுபான்மை இன, மத குழுக்களிடையேயும்,
சியாட் இஸ்லாமிய பிரசாரம் மூலம் பெண்கள் மத்தியிலும் சிறியளவு ஆதரவையே பெற்றக்கொண்டது.
மக்கள் முகாஜ்தீனும், ஸ்ராலினிச இயக்கங்களும் தேசிய முதலாளித்துவத்தின்
கூடிய அல்லது குறைந்தளவிலான ''முற்போக்கான பாத்திரம்" தொடர்பாக கூடியபட்சம்
உடன்பாடு கொண்டிருந்தனர். சில ''முற்போக்கான'' மத குருமார்களையும், மத நம்பிக்கையுள்ள
சீர்திருத்தவாதிகளையும் இவர்கள் தேடித் திரிந்ததானது, கொமேனிக்கும், மற்றும்
ஏனைய படிப்பாளிப் பிரிவுகளுக்கும் எதிரே இவர்களை நிராயுதபாணியாக்கியதுடன்,
இறுதியில் ஷா வுக்கு எதிரான புரட்சி எனும் பயிரில் விளைந்த தானியத்தை இவர்களே
அறுவடை செய்யவேண்டியதுமாயிற்று. இவர்கள் தற்போது மதகுருமார் பிரிவுக்கு எதிராக
மாற்றீடு ஒன்றை வைக்காது, முகாஜ்தீனுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுக்க
பலம் பெறும்வரை அவர்களுக்கு இடதுசாரிச் சாயப் பூச்சினை வழங்கினர்.
ஷாவுக்கு எதிரான புரட்சி
''வெள்ளைப்புரட்சி'', இது சமூகத்தில் பலமாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது.
முதலாவதாக தொழிலாள வர்க்கத்தினதும், அதைத் தொடர்ந்து நகரங்களினதும் வளர்ச்சியானது
மிகவும் துரித கெதியில் நடைபெற்றன. பின்னால் எழுபதுகளின் ஆரம்பத்தில் மிகவும்
மோசமான ஒடுக்குமுறைக்கு மத்தியிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் அதிகரித்தும்
காணப்பட்டதுடன், இச்சமயத்தில்தான் பல்வேறுபட்ட கெரில்லாக் குழுக்களுக்கு அங்கத்தவர்
எண்ணிக்கையில் அதிகரிப்பும் தோற்றம் பெற்றன. 1977 முதல் 1979 வரையில் இவ்வாறான
இயக்கங்களிலிருந்து 360 அங்கத்தவர்கள் வரையில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்,
அல்லது கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களில் கிட்டத்தட்ட
1/3 பங்கு மக்கள் முகாஜ்தீன்் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகும்.
இதனூடு இஸ்லாமிய மதகுருமாரின் எதிர்ப்புக்கள் நாளாவட்டத்தில் ஷாவுக்கு எதிராகத்
திரும்பியது. இஸ்லாமியச் சட்டம் இது பலநூற்றாண்டுப் பழமைவாய்ந்ததெனவும்,
அதனுடைய ஆட்சி முறையானது ஒரு இஸ்லாமுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, அதற்கும்
மாறாக இது ''2500- ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆரிய வம்சத்தின் கலாச்சாரத்துடன்''
தொடர்புடையது எனவும் இதற்கு விளக்கம்கொடுக்கப்பட்டது. மேலும் அங்கு மதக்குழுக்களின்
தட்டினரை சிறையில் அடைத்துவரும் எண்ணிக்கையினூடு கொமேனியின் ஆதரவு வளர்ச்சியடைந்தது.
ஈராக்கில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் மக்கள் முகாஜ்தீன் தலைவர்
1972க்கும் 1974க்கும் இடைப்பட்ட காலத்தில் அனேகமான முறை கொமேனியைச் சந்தித்து
அவரது ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே கொமேனி, முகாஜ்தீன் குடும்பத்தில்
இறந்த போராளிகளுக்கான ஆதரவுக்காக வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால்
பகிரங்கமாக இதனை காட்டிக்கொள்ளாததுடன் தனது புகழையும், மதக்குழுக்களுடனான
தனது உறவை பாதிப்படையச் செய்யவிரும்பவில்லை. ஆன்மீக வாதிகளின் சந்தர்ப்பவாதத்தினுடனான
அதிருப்தி 1975ல் மக்கள் முகாஜ்தீனுக்குள் இரத்தம் தோய்ந்த ஓர் பிளவை இறுதியாக
ஏற்படுத்தியது. இப்பிளவின் ஒரு பெரும்பகுதி இஸ்லாமுக்கு எதிராக திரும்பியதுடன்,
அது தன்னை மாவோவாதத்துடன் இணைத்துக்கொண்டது.
1978 செப்டம்பர் 8ல் நடைபெற்ற புரட்சி ஷாவின் துருப்புக்களால் செய்யப்பட்ட
படுகொலைகளுடன் முடிவடைந்தது. இதில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 87 என உத்தியோகபூர்வமாக
அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி இதில்
4000 பேருக்கும் மேல் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றன. இந் நடவடிக்கைகள்
மிகவும் திட்டவட்டமாக ''தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பாத்திரத்தை''
மேலும் ஒருபடி நிறுவிக்காட்டியுள்ளன.
அரசாங்கம் ஒரு ''தேசிய ஒருமைப்பாட்டை'' அமைக்கவிருப்பதாக, தேசிய முன்னணிக்கு
ஒரு அழைப்பு, டிசம்பரில் ஷாவால் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின்
தலைவர்களில் ஒருவரான ஷாபூர் பக்தியர் (Shapour Bakhtiar) நாட்டின் பிரதமராக
தெரிவு செய்யப்பட்டார். பக்தியர் மோசாடேக்கின் கீழ் தொழில் மந்திரியாக இருந்தவர்.அங்கிருந்த
சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் தொடர்பாக அவருக்கு பசுமையான
நினைவிருந்திருக்கும். இதனால் தான் ஷா அரசாங்கத்திற்கு தனது ஆதரவினை வழங்க
அவர் முடிவெடுத்தார். அப்படியிருந்த போதும் இதற்குப் பின்னால் பக்தியார்
தேசிய முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்டார், இது மக்கள் இயக்கங்களின் அடிமட்டத்தில்
இம் மிதவாத முதலாளித்துவத்திற்கு ஆழமான ஆதரவு இல்லை என்பதை எடுத்துக்காட்டியது.
தேசிய முன்னணியின் எஞ்சிய பகுதி, ஏனைய விடுதலை இயக்கங்களைப் போன்று
கொமேனியின் முந்தானையைப் பற்றிக்கொண்டது. கொமேனி புரட்சிகர இயக்கத்தின் தலைவரான
பாசாகான் (Khomeini Bazargan) என்பவரின் தலைமையில் ஒரு தற்காலிக பிராந்திய
அரசாங்கத்தை நிறுவினார். மக்களின் புரட்சிகரமான தன்மைகளைப் பற்றிய ஒரு தப்பபிப்பிராயத்தைக்
கொண்டிருந்த பக்தியாரைப் போன்றே பாசாகானும் இருந்தார். பக்தியார் தொழிலாளர்கள்
மீது குற்றங்களை சுமத்தினார், இவர்கள் புரட்சியை ஒரு கொள்ளையடிப்பதினூடு பிரகடனப்படுத்துகிறார்கள்
என்றார். அதோடு இவர் தொழிற்சாலைகளை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த
தொழிலாளர்களை மன்னரின் (Royalisten) கையாட்கள், சியோனிஸ்டுகள் எனவும் மற்றும்
துரோக கம்யூனிசப் படைகள்எனவும் திட்டித்தீர்த்தார்.
கொமேனி திரும்பி வந்ததும் உடனேயே ஆட்சியதிகாரத்தைஒரு ''சமாதானமான''
முறையில் அமைக்கும் பேச்சுவார்த்தைகள் இராணுவ அதிகாரிகளுடன்மிகவும் வெற்றிகரமான
முறையில் நடைபெற்றன. பணக்கார பஜார் வர்த்தகர்கள் இந்த ஆன்மீகத்துறையின்
சேவைக்காக பணத்தை விரயம் செய்ததின் மூலம் இப் புரட்சியை தமது
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது. இவர்களால் பல கமிட்டிகள்
(சபைகள்), இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக கொண்ட ஸாரியா (Schariah)
நீதிமன்றங்கள், ஆயுதம் தாங்கிய போராளிகள் போன்றவை அமைக்கப்பட்டன. இவை
பின்னால் ''புரட்சியான் காவலாளர்கள்'' (Pasdaran) மற்றும்'' கடவுளின்
கட்சி'' (Hisbollah) என நாடு முழுவதிலுமாக பயத்தை உருவாக்கியதில் பெயர்
பெற்றவை. எந்தவொரு இடதுசாரி அமைப்பும் ''இமாம் கொமேனி'' (Imam Khomeini)
யின் இவ்வாறான ஆளுமையைப் பற்றி அந்நேரத்தில் ஒரு கேள்விகூட கேட்கவில்லை.
1979 பெப்ரவரியில் பக்தியாருடைய ஆட்சியைத் தூக்கியெறிந்ததைத் தொடர்ந்து மத
குருமார்களுடைய இராணுவம் [கூலிப்படைகள்] நம்பத்தகாத அமைப்புகளை
களையெடுப்பதை வேகமாக ஆரம்பித்தது. ஏனைய இராணுவத்தினர்
நிராயுதபாணியாக்கப்பட்டனர். தொழிலாளர்களுடைய வேலைநிறுத்தங்கள், தேசிய
சிறுபான்மையினமான குர்திஷ் மக்களுடையது போன்ற எழுச்சிகள் அடக்கி
ஒடுக்கப்பட்டன. மதச்சார்பற்ற இயக்கங்களும், பத்திரிகைகளும்
பயமுறுத்தலுக்குள்ளாகின.
கொமேனி
மக்கள் முகாஜ்தீன், முல்லாக்களின் அரசாங்கத்தை அமைப்பதற்காக மிகவும் ஒரு
முக்கியமான பாத்திரத்தையும், மற்றும் பலவிதமான சமயங்களில் தீர்க்ககரமான சில
முடிவுகளையும் எடுத்திருக்கிறது. 1975ல் ஷா அரசாங்கத்தால் இரக்கமற்ற
முறையில் தண்டித்து, பிளவுபடுத்தப்பட்டு பின்னால் பலவீனப்படுத்தப்பட்ட ஒரு
இயக்கம் பெப்ரவரியில் மீண்டும் புத்தமைக்கப்பட்டது. இவர்களுடைய புதிய
வேலைத்திட்டமானது, பழைய தேசியவாத, சமூககோரிக்கைகளுடன், முன்னர் இல்லாதவாறு
மிக துல்லியமான ஜனநாயக கோரிக்கைகளையும் முன்வைத்தது. முதல் தடைவையாக
பிற்போக்கான பாத்திரத்தை வகித்த பஜார் வர்த்தகர்கள் மீதான விமர்சனத்தை
இவர்கள் வைத்திருந்தபோதும் அதேசமயம், முன்பிருந்து வந்த சமயகுருத்
தலைவர்களுக்கு எதிரான விமர்சனத்தைப் பற்றி எதுவுமே கூறாதிருந்தனர்.
இது முரண்பட்டதாக தெரிந்தாலும் இந்த சமயகுருமார் எப்போதும் பஜார்
வர்த்தகர்களுடைய நலன்களின் பிரதிநிதிகளாக தோன்றினர். இவையெல்லாம், மக்கள்
முகாஜ்தீன் மூலோபாய கொள்கைகளான, முல்லாக்களின் ''இஸ்லாமியக் குடியரசில்''
இருந்து ஒரு ''இஸ்லாமிய ஜனநாயகக் குடியரசுக்கு'' மாறும் அடிப்படையில்
இடம்பெற்றதின் விளைவாக நடந்தேறியது. இதையடுத்து, ஆன்மீகவாதத்தைப் பற்றியும்
விசேடமாக, அவர்களுடைய தலைவர் கொமேனிக்கு எதிராக அறைகூவல் விடுப்பதை
நாசூக்காக தவிர்த்துக்கொண்டனர். அதற்கு மாறாக இதன் அரசியல் அமைப்பான,
பஜார்-வர்த்தகர்கள் மற்றும், அரசியல் பதவிக்கு இவர்களை வழிவகுத்த
இஸ்லாமிய-குடியரசுக்கட்சி, (IRP) சாரியா- நீதிமன்றங்கள், அவற்றின் இராணுவம்
போன்றவற்றை எதிர்த்தனர்.
1979 பெப்ரவரியில் முகாஜ்தீனின் தலைவரான மாசூத் றாயாரி, (MasudRajari)
கொமேனியுடனான ஒரு இரகசிய சந்திப்பில் மத குருமாரின் பிற்போக்கு அரசியல்,
அவற்றின் கையாட்கள், கூலிப்படைகள் மீதான எதிர்ப்புக்களை நவம்பர் மாதம் வரை
கைவிட்டது. இம்முடிவுக்கான காரணமாக, இவ்வாறான எதிர்ப்பு இறுதியில்
ஏகாதிபத்தியத்தின் கரங்களை பலப்படுத்தும் நிலைமைகளை உருவாக்கும் என்றனர்.
மேலும் இவர்கள் தமது தீவிரவாத தன்மையை மதக்குருமார் பாவிக்க
அனுமத்திததுடன், முல்லாக்களுக்கு அவசரமாக தேவைப்பட்டால் ஷா தொடர்பாக
நேரடியாக இல்லாவிடினும் குள்ளத்தனமான நிலைப்பாட்டை எடுத்தனர்.
கொமேனியின் நெருங்கிய கூட்டாளியும் மேல்நீதிமன்ற நீதிபதியுமான அயத்துல்லா
பேகேஸ்டி "இஸ்லாமிய புரட்சிச இமாம் கொமேனி, அலி சகார்டி, மொஜாடின் போன்ற
மூன்று தூண்களில் தங்கியிருப்பதாக" அந்நேரத்தில் குறிப்பிட்டார்.
மதவாதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட செய்தித்துறை இரவு பகலாக மக்கள்
முகாஜ்தீனுடைய வீரதீரச் செயல்களையும், உயிர்நீத்த தியாகிகளைப் பற்றியும்
ஓயாது கூறிக்கொண்டிருந்தது. உயர் பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும்
இவர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டன. அரசாங்க உத்தியோகங்களிலும், மற்றும்
உயர் பதவிகளிலும் இவர்களுடைய ஆதரவாளர்களே இடம் பிடித்துக் கொண்டனர்.
முகாஜ்தீன் அதற்கு பிரதியுபகாரமாக, ''எமது பெரிய தந்தையான கொமேனி, மன்னர்
ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் தலைவர்'', இராணுவத்தின் ஆட்கள், பொலிஸ்,
நீதிபதிகள் மற்றும் அரசின் செய்தித்துறைகள் போன்ற இவை அனைத்தையும்
விடுவித்தும், பெருவாரியான ஷாவின் சொத்துக்களின் அதிபதிகள் தமது
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததை இறுதிவரை இவரால் மீட்க முடிந்தது எனவும்
கூறினர்.
எவ்வாறெனினும், கொமேனியினுடைய ஆதரவாளர்கள் ''இஸ்லாமிய குடியரசின்'' சர்வஜன
வாக்கெடுப்புக்கான ஒரு தீர்மானத்தை 1979 டிசம்பரில் நிறைவேற்றியும்,
பின்னர் 1980ல் பலாத்காரம், பயமுறுத்தல் போன்ற குற்றச்செயல்களைப் பாவித்து
ஜனாதிபதித் தேர்தலை நடாத்திய போதிலும், தொடர்ந்தும் மக்கள் முகாஜ்தீன்்,
முற்போக்கான மதகுருமார்களை ஆதரிப்பதாகவும், அனைத்துக்கும் மேலாக பெரிய
அயத்துல்லா கொமேனி, மிகவும் ஒரு மதிப்பிற்குரியவர் என்றெல்லாம்
கூறினர்.பின்னர் இவர்கள் சர்வஜன வாக்கெடுப்பை பகிஷ்கரிப்புச் செய்தபோதும்
அதனைத் தொடர்ந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் தமது
சொந்த வேட்பாளர்களுடன் போட்டியிட்டனர்.
கிஸ்போலா (Hisbollah) வின் அதிரடிப் படையினரால் பயங்கரவாதம் பரந்தளவில்
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கையிலும், கொமேனி மிகவும் பகிரங்கமாக இந்த
வேடதாரிகளுக்கு எதிரான வசைமாரிகளை - இவர்கள் ''மார்க்சிசத்துடன் இஸ்லாமை
குழப்புவதாகவும், ஒரு மத நம்பிக்கையற்றவனை விட இழிவானவர்கள் எனவும்''
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கையிலும் அவர்கள், அவரை ஒரு ''மிகவும்
அன்புக்குரியதந்தை'' எனவும், அவர் ஈரானில் மன்னர் ஆட்சியையும், அமெரிக்க
ஏகாதிபத்தியத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தவர் எனவும் முத்திரை
குத்தினர்.
எவ்வாறிருந்தபோதும் இவர்களுடைய வேட்பாளர்கள் மதவாத -IRP- யின் வேட்பாளர்களை
விடவும் பல விடயங்களில் அதிக எண்ணிக்கையுள்ள வாக்குகளைப் பெற்றுக்கொள்ள
முடிந்தது. மறுபக்கத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரான றாயாவி
தேர்தலில் இருந்து விலக்கப்பட்டதுடன், பாராளுமன்றத் தேர்தல் முடிவு
செல்லுபடியாததாக்கப்பட்டு அல்லது கள்ள வாக்குகள் இடப்பட்டதால், 1980 மேயில்
பாராளுமன்றத்துக்கு முகாஜ்தீன் ஒரு வேட்பாளரையும் அனுப்பமுடியாமல்
போய்விட்டது.
பெப்ரவரி முதல் கொமேனி, பல்கலைக் கழகங்களுக்கும், மேற்கத்தைய நாகரீகம்
எனும் கொள்ளை நோய்கள் பரவும் இடங்களுக்கு எதிராகவும், மற்றும்
மத்தியவாதிகள், பட்டதாரிகள், புத்திஜீவிகள் போன்றோருக்கும் எதிரான ஒரு
''கலாச்சாரப் புரட்சிக்கு'' அறைகூவல் விடுத்தார். இப் புரட்சி எனும்
தீப்பிளம்பில் சூடு பிடித்திருக்கும் அந் நிலைமைகளின் கீழ் எந்தவொரு
முல்லாக்களாலுமோ, அல்லது நேர்மையான சில எதிர்ப்புக்களாலுமோ இதனுடன்
ஒத்துழைக்க முடியாமல் இருந்தது.
மறுபக்கத்தில் மக்கள் முகாஜ்தீன்் ''அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக
ஜனநாயகம் மட்டும்தான் எம்மை காப்பாற்றும்'' எனக் கூறுவதினூடு மதகுருமாரை
வெளிப்படையாக தாக்கத் தொடங்கினார்கள். கொமேனியை இனிமேலும் ஒரு
''அன்பிற்குரிய தந்தை'' யாக கருதுவதை கைவிட்டார்கள், இருப்பினும் இன்னமும்
அவரை நேருக்குநேராக தாக்குவதை தவிர்த்துக் கொண்டார்கள். அதையடுத்து,
அவர்கள் இஸ்லாமியக் குடியரசின் புதிய பிரதமரான பானி சாதார் (Bani Sadr)
உடன் ஒரு கூட்டுக்குப் போனார்கள். இவர் ஆரம்பத்தில் கொமேனியின் ஓர்
ஆதரவாளரும், அவருடன் இணைந்து வேலை செய்தவருமாவார். எனினும் இவர் -IRP-இன்
இறுக்கமான அமெரிக்க- எதிர்ப்பு அரசியல், இராணுவத்துக்கு எதிரான அவர்களுடைய
களையெடுப்பு, மற்றும் பொருளாதார, அரசியல் துறையில் ஆன்மீகத் துறையினரின்
அதிகரித்துவரும் தலையீடு போன்றவற்றை ஏற்றுக்கொள்ளாததுடன் இத்துடன்
முரண்பட்டனர்.
பானி-சாதார் 1980 யூன் முதல் மக்கள் முகாஜ்தீனுடைய அரசியலுக்கு ஆதரவும்
அதனுடைய போராளிகளுக்கு இராணுவத்திலிருந்து ஆயுதங்கள் கிடைப்பதற்கும் வழி
செய்தார். இதனூடு மக்கள் முகாஜ்தீன் அவரது கூட்டங்களை கிஸ்போலாவின் குண்டர்
படையிலிருந்து பாதுகாத்ததுடன், மேலும் அவருடனும் சில தனிப்பட்ட
திருப்தியற்றிருந்த மதவாதிகளுடன் இணைந்துகொண்டு, இது ''முல்லாக்களின்
சர்வாதிகாரம்'' எனவும், இது ஜனநாயகத்துக்கும், சமுதாயத்தின்
நோக்கங்களுக்கும் அடிப்படையான புரட்சியை சில பஜார்வர்த்தகர்களின்
நலன்களுக்கு கீழ்ப்படுத்தி துரோகம் செய்துவிட்டதாகவும் ஒரு தீவிரமான
அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இதையடுத்து, விரைவில் நாடுபரந்தளவிலான
ஒரு பயங்கரவாதத்துக்கு அரசாங்கம்முகம்கொடுத்தது. இது மேலும் 1980
செப்டம்பரில் ஈராக்குடன் வெடித்துக்கிளம்பிய போருக்குப் பின்னால் உக்கிரம்
அடைந்ததைத் தொடர்ந்து முகாஜ்தீனுடைய பத்திரிகை தடைசெய்யப்பட்டு, அவர்களுடைய
தலைவர்கள் தேடப்பட்டார்கள், மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள், அங்கத்தவர்கள்
சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்கள்,
அல்லது தூக்கிலிடப்பட்டார்கள். இறுதியாக பானி-சாதாரின் பத்திரிகை,
எதிர்க்கட்சிகளின் ஊர்வலங்கள் என்பன தடைசெய்யப்பட்டது. இதற்கு மக்கள்
முகாஜ்தீன் ஓரளவு அடிபணிய மறுத்தது.
யூன் மாதத்தில் ஏற்பட்ட நேருக்கு நேரான ஒரு முரண்பாடு உருவாகியது.
இடம்பெற்ற வரிசைக்கிரமமான பெரிய ஊர்வலங்களும், வேலை நிறுத்த அலைகளும்
முல்லாக்களின் அரசாங்கத்தை இறுதியில் கலைப்பதற்க்கான ஒரு இராணுவச் சதியின்
மட்டத்திற்கு உயர்ந்து சென்றதாக ஒரு வரலாற்று ஆசிரியர் ஏர்வான்ட்
அப்ரகாமியான் (Ervand Abrahamian) என்பவர் கணிப்பிட்டார். மேலும் பானி
சாதார் இச் சதியின் பின்னணியிலிருந்திருக்கலாம். யூன் 20ல் 500.000
பொதுமக்கள் பங்குபற்றிய ஒரு ஊர்வலத்தில் மக்கள் மிகவும் மோசமாக
தாக்கப்பட்டு, 50 பேர்வரையில் கொல்லப்பட்டனர். இக் கோரமான சம்பவத்தை வேறு
எதனுடனும் ஒப்பிடமுடியாது. ஈராக்கின் தாக்குதலின் பின்னர் முகாஜ்தீனுடைய
முன்னைய விவாதமாகிய தேசத்தின் பாதுகாப்பை ஜனநாயகத்திற்கு கீழ்ப்படிய
செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு எதிராக திரும்பியது. நிலைமையை மேலும்
மோசமாக்குவதற்கு, தொழிலாள வர்க்கத்துக்கு மத்தியில் அதிகப்படியான
செல்வாக்கைக் கொண்டிருந்த மக்கள் வெடாயீன், றூடே போன்ற கட்சிகளின்
பெரும்பான்மையும் அரசாங்கத்துக்கே ஆதரவளித்திருந்தனர்.
ஊர்வலத்துக்கு மறு நாள் பானி சாதாரால் மக்கள் முகாஜ்தீன்் மற்றும்
இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிரான, ஒரு எழுத்தில் வர்ணிக்கமுடியாத பயங்கரவாத
அலை எழுப்பப்பட்டு, உடனே அது சட்டமாக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும்
நூற்றுக்கும் மேற்பட்டோர் எனவும், இறுதியில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர்
எனவும் படு கொலை செய்யப்பட்டனர். மக்கள் மொயாடீனுக்கு எதிரான
இந்தவெற்றிகரமான ஒடுக்குமுறை 1983 களில் றூடேக் கட்சியை உடல் ரீதியாக
அழித்தொழிப்பதை தொடர்ந்து சாத்தியமாகியதுடன், மேலும் அதேபோன்று புரட்சியின்
பின் எஞ்சியிருந்த ஜனநாயக, சமூக உரிமைகள் என்பன அனைத்தும் துடைத்துக்
கட்டப்பட்டன.
வெளிநாட்டில்
மாசூத் ராயாவி (Masud Rajavi) என்பவர் 1981 ல் பாரிசுக்குப் போய் அங்கு
''ஈரானின் தேசிய எதிர்ப்பு பேரவை'' ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். ''இது
ஈரான் இஸ்லாமிய ஜனநாயகக் குடியரசை'' நிறுவுவதை அடிப்படையாகக்
கொண்டிருந்தது. இதனது தலைவராக பானி-சாதாரும், அதன் இடைக்கால அரசாங்கத்தின்
தலைவராக ராயாவியையும் நியமிப்பதே நோக்கமாகும். ஆரம்பத்தில் மக்கள்
முகாஜ்தீனின் மூலோபாயம் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான ஒரு இடைவிடாத
தாக்குதல்களை நடாத்துவதாகும். மத்திய ஈரானில் நடைபெற்ற அரச ஒடுக்கு
முறையிலும் இவர்களுடைய போராளிகளில் பெரும்பகுதி அழிக்கப்பட்டதால் தமது
கெரில்லா தாக்குதல் நடவடிக்கைகளை 1983 இல் குர்திஸ்தான் பிராந்தியத்திற்கு
இடம்மாற்றினர்.
இச் சமயத்தில் பெருவாரியான பல பெரிய புள்ளிகளும், இயக்கங்களும் இந்த
எதிர்ப்பு பேரவையில் இணைந்து கொண்டனர். அவைகளில் பானி-சாதார், உட்பட ஜனநாயக
குருடிஸ்தான் கட்சி - ஈரான், (DPKI) நூற்றாண்டுப் பழமைவாத மொசாபேக்கின்-
ஆதரவாளர்களாகிய தேசியவாதிகளின் ''தேசிய ஜனநாயகமுன்னணி'' மற்றும் சில
ஸ்ராலினிசக் குழுக்களும் அடங்கின. ஈராக் இந்த மக்கள் முகாஜ்தீனுக்கு இராணுவ
மற்றும் நிதியுதவிகளை வழங்கியது. PLO வைப் போன்று இவ் எதிர்ப்பு பேரவையும்,
மேற்கத்தைய நாடுகளில் தனக்கென ஒரு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்
கொள்வதற்காக பிரயாசைப்பட்டது. மக்கள் முகாஜ்தீனின் இடதுசாரி, ஏகாதிபத்திய
எதிர்ப்பு போன்ற பாசாங்கான வார்த்தையாடல்கள் படிப்படியாக இதற்கேற்ப மறைந்து
போனது.
ஈரானிய துருப்புக்ககள் குருடிஸ்தான் பிராந்தியத்தில் வெற்றி பெற்றதைத்
தொடர்ந்து, அரசாங்கம் விரைவில் விழுத்தப்படலாம் என்னும் நம்பிக்கை சிதறியதை
தொடர்ந்து எதிர்ப்பு பேரவையிலிருந்து 1984 முதல் அனேகமான இயக்கங்கள்
மறுபடியும் விலகிக்கொண்டன. 1985களில் மக்கள் முகாஜ்தீனில் இவ்வாறான
நெருக்கடிகளை கவனித்த றாயாவி தனிப்பட்ட சில களையெடுப்புகளையும், அமைப்பு
ரீதியான கட்டுமானத்தை மாற்றியமைப்பதற்குமாக அதற்குள் ஒரு ''கருத்துப்
புரட்சியை'' ஏற்படுத்தினார். இதன் வெளிப்பாடு, இயக்கத்திற்குள் தலைமை
வழிபாட்டை கடைப்பிடிப்பதையும், அத்துடன் ராஜாவிக்கும் (Rajavi) அவரது புதிய
மனைவியான மார்யாம் (Maryam) இற்க்கும் பிரத்தியேகமான ஒரு தலைமை
வழிபாட்டுக்கான கலாச்சாரத்தையும் உண்டுபண்ணியது. இது கொமேனி தலைமையிலான
ஈரான் அரசாங்கத்தினை விட மாறுபட்டதாகும்.
1985TM Rajavi முகாஜ்தீனின் தலைமை அமெரிக்காவால் ஒரு ''பயங்கரவாத இயக்கம்''
என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது 1986ல் ஐரோப்பாவை
விட்டு விலகி, பின்னர் ஈராக்கில் அதனது தலைமையகத்தை அமைத்துக்கொண்டது.
அங்கே இது பெரும்பான்மையான அங்கத்தவர்களைக் கொண்ட (சில ஆயிரம்) ஒரு ''தேசிய
விடுதலை இராணுவத்தை'' 1987ல் நிறுவியது. ராஜாவி 1986 யூனில் சதாம் குசேனைச்
சந்தித்தார். இச்சமயத்தில் அமெரிக்காவின் நேரடியான உதவியுடன் ஈராக், ஈரானிய
இராணுவத்திற்கு எதிரான நச்சுவாயு -ஆயுதத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
இதனால் அந்நேரத்தில் மக்கள் முகாஜ்தீனின் அரசியல் சுயாதீனத்தை (அதைப்பற்றி
அவர்கள் எவ்வளவுதான் வாயடித்துக் கொண்டாலும்) ஈரானில் மதிப்பிழக்கச்
செய்தது. இருப்பினும் இவர்களுடைய சில ஆதரவாளர்களும், இயக்கத்திற்காக தெரிவு
செய்யப்பட்டவர்களும் இதைவிட்டு விலகாமல் இருந்தனர், இதனால் அவர்கள் அங்கே
ஈரானின் மோசமான அடக்குமுறைகளுக்கு முகம்கொடுத்தனர்.
ஈரானிய, மற்றும் மேற்கத்தைய செய்தி நிறுவனங்கள், ஈரானில் இடதுசாரிகளை
தொடர்ச்சியாக அழித்துக்கொண்டு போகும் அரசின் நிலைமைகளைப் பற்றியும்,
அங்கிருக்கும் இயக்கங்களின் வித்தியாசமான தோற்றம், மேலும் மக்கள்
முகாஜ்தீனினின் மாறுபாடான வித்தியாசமான முன்னோக்கினை கருத்தில் கொள்ளாது,
பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக இவ் இயக்கம் இருப்பதையும், இதையிட்டு ஈரானிய
அரசாங்கம் மிகவும் கலங்கிப்போய் இருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டன.
இவ்வாறான பெரிய சக்திகளுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டதின் விளைவாக இவ்
இயக்கங்கள் மேலும் வலதுசாரிப் பக்கத்துக்குச் சென்றன. 1990-1991 களில்
ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் மக்கள் முகாஜ்தீன் இது
சம்பந்தமாக ஒரு ''நடுநிலை'' போக்கை கடைப் பிடித்தது. ஈராக்கின் வடக்கிலும்,
தெற்கிலும் அமெரிக்காவின் ஆதரவுடன் ஒரு மக்கள் எழுச்சியின் ஒடுக்கியதை
தொடர்ந்து, இவர்கள் ''ஈராக்கின் இந்த உள்நாட்டுப் பிரச்சினைகளில்
தலையிடக்கூடாது'' எனக் கூறிக்கொண்டு தமது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டனர்.
பல எண்ணிலடங்கா, கொடூரமான அரச ஒடுக்கு முறைகளை இவர்கள் சந்தித்தும், தமது
சேவைகளை வழங்க விரும்பிய அமெரிக்காவிற்கு எதிராகவோ அல்லது தாம்
தங்கியிருந்த ஈரானுக்கு எதிராகவோ எவ்வளவிற்கு தான் ''ஜனநாயகத் தீர்வு''
என்றெல்லாம் கூறிவிட்டும், இப்போது விமர்சன ரீதியாக எந்தவொரு வார்த்தை
தன்னும் இந்த மக்கள் முகாஜ்தீனால் கூறமுடியாதுள்ளது.
அவர்கள் தற்போதைய ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான மக்களை அழித்தொழிக்கும்
ஆயுதங்களை ''உருவாக்குவதும்'' மத அடிப்படை வாதத்தையும், பயங்கரவாதத்தையும்
ஏற்றுமதி செய்வதும்'' மேலும் ''இஸ்ரேல்-அராபியர்களின் சமாதான உடன்படிக்கையை
எதிர்ப்பதும்'' போன்ற ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரங்களை மறுபடியும்
பாடத்தொடங்கி விட்டனர். இவ் அனைத்தும் மேற்கத்தைய நலன்களை மிகவும் மோசமாகப்
பாதிக்கின்றன எனக் கூறினர்.
''இத்தேசிய எதிர்ப்பு பேரவை கீழ்கண்ட சிலபணிகளின் நலன்களுக்காக மேடை
அமைத்துள்ளது.'', இத்தேசிய எதிர்ப்பு பேரவையின் பொருளாதார அரசியல் ஒரு
திறந்த சந்தைப் பொருளாதாரத்தில் அடித்தளமிட்டிருக்கிறது. மேலும் இது தேசிய
முதலாளித்துவத்தையும், பஜார்வர்த்தகர்கள், தனியார் மற்றும் தனிப்பட்ட
சொத்துக்கள், முதலீடுகள் போன்றவற்றையும் ஏற்றுக்கொள்கிறது. தேசிய எதிர்ப்பு
பேரவை தனது உறவுகளை தொழிற்துறை நாடுகளுடன் வளர்த்துக் கொள்வதினூடு ஈரானின்
எதிர்காலத்தை வளம்படுத்திக்கொள்ள நினைக்கிறது.
அண்மையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையிலும், வலதுசாரி குடியரசுக்
கட்சியின் பெரும்பான்மையான ஆளுமையைக் கொண்டிருக்கும் அதன் காங்கிரசிலும்,
அதேபோன்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையிடனும் தொடர்ச்சியான
கோரிக்கை விடுவதன் மூலம் ஆதரவை பெற்றுள்ளது. இவர்களுடன் இதுவரையில் இணைந்து
நடாத்திய, நான்கு சுவர்களுக்குள்ளான வேலைகளுக்காக, முகாஜ்தீன்் தனது
மனமார்ந்த நன்றியையும், மேலும் அதற்கான ஆதரவையும் தெரிவித்துக் கொண்டது.
இம் ''மிதவாத'' குழுக்களின் மதிப்பிற்குரிய பிரதிநிதிகளை ''கொலைகாரர்கள்''
எனத் திட்டிய [பிரதமர் காட்டாமி உட்பட] முகாஜ்தீனின் தீராத எதிர்ப்பு தாம்
முல்லாக்களின் ''சீர்திருத்தப்பிரிவி'' இலிருந்து அரசியல் ரீதியில்
வித்தியாசமானதல்ல. இவ்வாறு அவர்களுக்கிடையேயான கோபதாபமான போக்குகள், காதலி
ஏமாற்றிவிட்டாளே போன்ற ஏக்கமான நிலைப்பாடுகள் போன்றதே. அதாவது மேற்கத்தைய
நாடுகளினை ஏக்கத்துடன் எதிர்பார்த்திருந்து அது வேறு சோடியை
தேடிக்கொண்டதனாலாகும்.
ஈரானில் இருக்கும் உண்மையான இடைவெளி என்பது, அங்கே ஒரு பக்கத்தில்
ஒடுக்குமுறைக்கும், ஏழ்மைக்கும் உட்பட்ட பரந்துபட்ட மக்களுக்கும்
மறுபக்கத்தில் அனைத்து விதமான செல்வத்தையும், வழங்களையும் கையில்
வைத்திருக்கும் அரசாங்கத்திற்கும் இடையானதாகும். ''சீர்திருத்த'',
பழமைவாத'' இப் பிரிவுகளுக்கிடையான போராட்டம் இவ்விரு பிரிவினரையும்
அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் இச்சமூகபிளவு தொடர்பான பிரதிபலிப்பாகும்.
ஒவ்வொரு முறையும், சுயாதீனமான எதிர்ப்புக்கள் கீழ்மட்டத்திலிருந்து
எழும்பும்போதும், இவ்வாறான ''சீர்திருத்தவாதிகளும்'', ''பழமைவாதிகளும்''
மறுபடியும் தமது ''சகோதரத்துவ'' அடித்தளத்தில் ஒன்றிணைந்து கொள்கின்றனர்.
அத்தோடு இந்த மக்கள் முகாஜ்தீன்் ஈரானிய அரசாங்கத்திற்குள் எந்தவித பிளவும்
இல்லையென மிகவும் பூரிப்போடு நிராகரிக்கின்றனர். இத் தீவிரவாதப் போக்கு
இவர்களின் சமூக,ஜனநாயகக் கேள்விகள் தொடர்பான முரண்பாடான நிலைப்பாட்டின்
வெளிப்பாடாகும்.
''திறந்த சந்தைப் பொருளாதாரம்'', ''மேற்குக்கு சந்தையை திறந்து விடுதல்''
போன்ற முகாஜ்தீனினாலும் ''சீர்திருத்தவாதிகளாலும்" முன்வைக்கப்படும் வேலைத்
திட்டங்கள் ஈரான் சமுதாயத்தில் மேலும் பல மோசமான சமூக வெடிப்புகளுக்கு
இட்டுசெல்வதுடன், ஜனநாயகத்துக்கும், சமூக சமத்துவத்திற்கும் எந்தவித
பொருத்தமும் அற்றதாகும். |
|