WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lankan election
nominations close
The decay of official politics on open display
இலங்கை தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
முடிவடைந்தது
உத்தியோகபூர்வ
அரசியல் சீரழிவு பகிரங்கமாக காட்சிக்கு வைக்கப்படுகிறது
By K. Ratnayake
5 September 2000
Back
to screen version
அக்டோபர் 10ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின்
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் போது தேர்தல் ஆசனங்களுக்காக இடம்பெற்ற
வெட்கக் கேடான, பேரம்பேசல்களும், இழிவான தேர்தல் ஒப்பந்தங்களும் உத்தியோகபூர்வமான
அரசியல் அமைப்பின் அழுகிப்போன தன்மையைப் பறைசாற்றுகின்றது. தொழிலாள வர்க்கத்தினது
எந்த ஒரு அடிப்படை அவசியத்தையும் திருப்திப்படுத்த முடியாத அல்லது இடம்பெற்று
வரும் உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு தீர்வை வழங்க இலாயக்கற்ற கட்சிகளும்
குழுக்களும் சுயேட்சை வேட்பாளர்களும் தமது சுய தேவைகளையும் பதவிகளையும் தக்கவைப்பதையே
இலட்சியமாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
நேற்று நண்பகல் வேட்புமனுத்தாக்கல் முடிவுறும் வேளையில், உத்தியோகபூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட 30 கட்சிகளும், டசின் கணக்கிலான சுயேட்சைக் குழுக்களும்
நாட்டின் 225 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 5000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை
களத்தில் இறக்கியுள்ளன. கடந்த சில தினங்களாக கடுகதியாக உருவான கூட்டுகள்,
இடம்பெயர்வுகள், மாற்றங்களால் நேற்றைய "எதிரிகள்" இன்றைய நண்பர்களாகவும்
நெருங்கியவர்களாகவும் மாற்றம் கண்டுள்ளனர். சாதாரண பொதுமக்கள், தமது வாக்குகள்
வலிந்தோ அல்லது பலவந்தமாகவோ பறிமுதல் செய்யப்படும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட கடைசி தினத்துக்கு முன்தினம், ஆளும்
பொதுஜன முன்னணி, மேல் மாகாண சபை உறுப்பினரான ரத்னசிரி ராஜபக்ஷ எதிர்க் கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (UNP) கட்சி மாறியுள்ளதாக அறிவித்தது. கடந்த
காலங்களில் -முன்னைய யூ.என்.பி. ஆட்சியின் போது ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாசவுக்கு
மிகவும் நெருக்கமானவரும் முன்னைநாள் நகரபிதாவுமான இவரை பொதுஜன முன்னணி "ஊழல்
மிக்க", "புத்தியீனமான" ஒருவராக பெயர் சூட்டியிருந்தது. இன்று இவரை பகிரங்கமாக
கட்டித் தளுவிக்கொண்டுள்ளது.
மேலும் ஒரு யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினரான சரத் கொங்ககே, கடந்த வியாழனன்று,
பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியலில், பாராளுமன்ற ஆசனம் ஒன்றை வழங்குவதற்கான
வாக்குறுதியின் பேரில் பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டுள்ளார். வடக்கு கிழக்கில்
தனியான ஒரு தமிழ் அரசுக்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடுமையாக
அல்லாமல் ஒரு மென்மையான போக்கை தனது முன்னைய கட்சி சகாக்கள் கடைப்பிடித்ததாக
இவர் குற்றம் சாட்டியுள்ளதோடு சூடான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சியான யூ.என்.பி. தனது
மாநாட்டில் தனது தேர்தல் வெற்றிக் கிண்ணத்தை காட்சிக்கு வைத்தது. மேல்
மாகாண சபை பொதுஜன முன்னணி தவிசாளர் எட்வட் சில்வா அதிலிருந்து விலகி யூ.என்.பி.யில்
இணைந்துள்ளார். பொதுஜன முன்னணியின் கூட்டான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்
சொத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான கசப்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.தொ.கா.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரை யூ.என்.பி. தன்பக்கம் ஈர்த்துக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி குமாரதுங்க, விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்
பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை சிருஷ்டிக்கும் பொருட்டு முன்வைத்த அரசியல்
சீர்திருத்தப் பொதியை நடைமுறைக்கிடுவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு
பெரும்பான்மையைப் பெறுவதில் தோல்வி கண்டதன் பின்னர், குறிப்பிட்ட தினத்துக்கு
முன்னமே பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரப் பகிர்வு
எனப்படும் தீர்வுப் பொதி, நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எந்த ஒரு சலுகையையும்
வழங்குவதை அல்லது விடுதலைப் புலிகளுடனான சமரசத்தை நிராகரிக்கும், தீவிரவாத
வலதுசாரி பாசிஸ்டுகளுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ள யூ.என்.பி.யின் பலத்த எதிர்ப்புக்குள்ளானது.
அன்று முதல், பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் தமிழ் வாக்காளரிடையேயான
ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அதேவேளை, இந்த
சிங்கள சோவினிச சக்திகளை சமாளிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.
ஆனால் இனவாத கட்சிகளும் தமக்கிடையே கசப்பாக பிளவுண்டு போயுள்ளன. தங்களுக்கிடையில்
கூட்டு ஒன்றை அமைத்துக்கொள்ள முயற்சிக்கும் அதேசமயம், பாராளுமன்ற ஆசனங்களைப்
பகிர்ந்துகொள்வதிலும் இவை ஆளுக்காள் மோதிக்கொண்டன. முக்கிய பெளத்தமத தலைவர்கள்-
இந்த அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த-
சிங்கள உறுமய (SUP), மக்கள் ஐக்கிய முன்னணி (MEP), சிங்கள மகாசம்பத
பூமிபுத்திர கட்சி (SBPP), மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே
ஒரு தேர்தல் கூட்டினை ஏற்படுத்த முயற்சித்தன.
ஆயினும் மகாநாயக தேரர் மடிகே பஞ்ஞாசீஹவும், எம்.ஈ.பி.யும் ஜே.வி.பி. இக்
கூட்டில் சேர்க்கப்பட வேண்டும் என கூறியதை, ஜே.வி.பி. ஒரு மார்க்சிச கட்சியென
கூறி சிங்கள உறுமய கட்சி மறுப்பு தெரிவித்தது. குட்டி முதலாளித்துவ அமைப்பிலிருந்து
சிங்கள சோவினிசத்துள் நுளைந்துள்ள ஜே.வி.பி.க்கு, சிங்கள உறுமய கட்சி தலைவர்கள்
நன்கறிந்த வகையில் மார்க்சிசத்துடன் எந்தவிதமான உறவுமே கிடையாது. சிங்கள உறுமய
கட்சியை விட பரந்து பட்ட கட்சியாக ஜே.வி.பி. இருப்பதால் அவர்கள் எந்த ஒரு
கூட்டணியினுள்ளும் மேலாதிக்கம் செலுத்துவர் என்பது அவர்களின் அபிப்பிராயமாகும்.
ஆகஸ்ட் 25ம் திகதி இலங்கையின் இரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பெளத்த பீடங்களின்
மகாநாயக்கர்கள், சிங்கள உறுமய கட்சி, சிங்களயே மகாசம்பத பூமிபுத்திர கட்சி
ஆகிய கட்சிகளை தங்கள் மத பீடங்களுக்கு அழைத்து இரு அணிகளுக்குமிடையில் ஒரு
வித இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சிங்கள உறுமய கட்சியின்
செயலாளர் கிறீஸ்தவராக விளங்குவதால் அது வெளிநாட்டு வல்லரசுகிளன் ஏஜன்டு என
பூமி புத்திர கட்சி குற்றம் சாட்டியது. பூமிபுத்திர கட்சி யூ.என்.பி.யின்
ஏஜன்டு என சிங்கள உறுமய கட்சி குற்றம் சாட்டியது.
அன்று முதல் பெளத்த தலைவர்களும் எம்.ஈ.பி.யும் கூட்டணி உருவாக்கும் தமது முயற்சியை
கைவிட்டன. எம்.ஈ.பி. ஆளும் பொதுஜன முன்னணியுடன் தனித்து தனது தேர்தல் ஒப்பந்தத்தை
செய்து கொண்டுள்ளது. ஜே.வி.பி. தனது பங்குக்கு அதிகாரப் பகிர்வு பொதிக்கு
எதிரான சோவினசப் பிரச்சாரத்தை தனது தேவைக்கு சுரண்டிக்கொள்வதில் ஈடுபட்டுள்ளது.
ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச, இரண்டு பிரதான கட்சிகளில் யார்
அடுத்த பாராளுமன்றத்தில் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிப்பதில் தமது கட்சி
கொண்டுள்ள எண்ணிக்கை தீர்க்கமான காரணியாக அமையும் என தான் கருதுவதாக ஒரு பத்திரிகையாளரிடம்
குறிப்பிட்டிருந்தார்.
நவ சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதிகள் -இடதுசாரி வாய்வீச்சுக்களில் ஈடுபட்டுவரும்
தொழிற்சங்க அதிகாரத்துவ பாராளுமன்ற வாதிகள் குழு- அண்மையில் ஜே.வி.பி.யுடன்
ஏற்படுத்திக் கொண்ட அரசியல் கூட்டில் இருந்து கொண்டு அவர்கள் ஒரு
"முற்போக்கானவர்கள்" "சோசலிஸ்டுகள்" என தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரத்தில்
ஈடுபட்டுவந்துள்ளது. ஜே.வி.பி.யினர் இனவாத வலதுசாரி பாசிசக் குழுக்களின் பக்கம்
பகிரங்கமாக திரும்பியமை ந.ச.ச.க. வை தலை குப்புறத் தள்ளியுள்ளது. தேர்தலுக்கு
சடுதியாக அழைப்பு விடுக்கப்பட்டதால் தனது கட்சி தேர்தல் முன்னணியொன்றை அமைப்பதற்கான
வாய்ப்பு இல்லாது போய்விட்டது என ந.ச.ச.க. தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன
நொண்டிச் சாக்குபோக்குத் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி (Muslim United Liberation Front [MULF])
எனப்படும் ஒரு முஸ்லீம் இனவாத அமைப்புடனான புதிய இடதுசாரி முன்னணியிலும்
ந.ச.ச.க. அங்கம் வகிக்கின்றது. ஆனால் இந்த கூட்டணியிலும் பல்வேறு வகையிலான
பதட்டநிலை வெளிப்பட்டுள்ளது. களுத்துறை தேர்தல் மாவட்டத்தில் ந.ச.ச.க.வும்
முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணியும் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.
ஆனால் கொழும்பில் ந.ச.ச.க. தனது கூட்டணி சகாவுக்கு எதிராக போட்டியிடுகின்றது.
அத்துடன் ஏனைய நான்கு மாவட்டங்களில் மு.ஐ.வி.மு.க்கு எதிராக அது வேறு ஒரு
குழுவை ஆதரிக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு மாறாக
போட்டியிடுவதை ந.ச.ச.க. எதிர்ப்பதனால் மு.ஐ.வி.மு. அங்கு போட்டியிடுவதற்கு
தீர்மானித்துள்ளது.
ஆசனங்களுக்கான சிடுமூஞ்சித்தனமான வாதப்பிரதி வாதங்கள் மீதும் சந்தர்ப்பவாத
தேர்தல் விஞ்ஞாபனங்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்ட இக்கட்சிகளதும் அவர்களின்
வெற்று தேர்தல் வாக்குறுதிகளதும் மீதான பொதுமக்களின் வெறுப்பையும் அதிருப்தியையும்
உச்சகட்டத்திற்கு கொணர்ந்துள்ளது. நீண்ட யுத்தத்தினால்
சிருஷ்டிக்கப்பட்டுள்ள பேரழிவு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிப்பு,
இனக்குரோதம், இனவாதிகளின் பெருக்கம் ஆகியவற்றுக்கு இச்சகலரும் பொறுப்புச்
சொல்லியாக வேண்டும்.
இந்த பரந்தளவிலான அந்நியப்படுத்தல்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கங்கள்
தொடர்பாக ஆளும் வர்க்கத்தில் ஏற்கனவே கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசியல்
குத்துக்கரணங்களும் வாக்காளரும்" என்ற தலைப்பின் கீழ் வெளியான கடந்த ஞாயிறு
'த சன்டே லீடர்' பத்திரிகையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: "ஆதலால்
வேட்புமனுவுக்கான போட்டா போட்டிகள்" ஆசிரியர் குறிப்பிடும் "புதிய
பிரபுக்களின்" ஒரு அங்கத்தவராகி விடுவதற்கான ஒரு முயற்சியாக
விளங்குகின்றது. புதிய ஆயிரமாம் ஆண்டுகளின் இந்த புதிய பிரபுத்துவம்
அதிகாரமும் அரசினால் பணம் செலுத்தப்படும் அல்லது வாகன அனுமதிகள்,
உதவிமானியம், தொலைபேசிகள், உணவுகள், வெளிநாட்டு சுற்றுலாக்களையும் கொண்ட
ஒரு பிரமுகர்களதும் வர்க்மாகும். அத்தோடு நற்காரியங்களின்! பேரில்
கபடத்தனமான முறையில் சில மில்லியின்களை ஒரு ஆயுட்கால பென்சனாக தட்டிக்
கொள்ளும் வாய்மூடி மந்திரமான வாய்ப்புமாகும்."
யுத்தத்துக்கு எதிரான மாசற்ற வரலாற்றை கொண்டுள்ளதும் பொதுஜன முன்னணி,
யூ.என்.பி. ஆட்சியாளர்களதும் சகல வகையிலான இனவாத, தேசியவாத, தொழிலாளர்
விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ள ஒரே
ஒரு கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான
சோசலிச சமத்துவக் கட்சி விளங்குகின்றது. சோ.ச.க, பொதுச் செயலாளர் விஜே
டயசின் தலைமையில் அதன் 23 வேட்பாளர்களைக் கொண்ட வேட்பு மனுவை கொழும்பு
மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்துள்ளது.
கடந்த செவ்வாக்கிழமை சோ.ச.க. கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர்
மாநாட்டில் தனது பிரச்சாரத்தை அறிவித்தது. பொதுச் செயலாளர் விஜே டயஸ்,
நாட்டில் அழிவை ஏற்படுத்தியுள்ள யுத்தத்துக்கும் வாழ்க்கைத் தரம், தொழில்,
கல்வி, சுகாதார சேவை ஆகிய அத்தியாவசிய சேவைகள் மீதான தாக்குதல்களுக்கும்
அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் பொறுப்பு சொல்லியாகவேண்டுமென
சுட்டிக்காட்டினார். 1994ல் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையில்
'மனிதாபிமான முகத்தைக்' காட்டி வாக்குறுதிகளுடன் பதவியேற்ற பொதுஜன முன்னணி
தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கு கிழகில் நடாத்தும் இராணுவ நடவடிக்கைகளை
விரிவுபடுத்துவதற்கான ஒரு பங்களிப்புக்காக தொழிலாளர் வர்க்கத்தின் மீது
அதிகரித்த பழுவை சுமத்துவதை விளக்கினார்.
இன, மத ரீதியான சகல பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டவும் சோசலிச
சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் தமிழ் சிங்கள தொழிலாளர்களின்
ஐக்கியத்துக்காகவும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுக்காகவும் அவர்
அழைப்பு விடுத்தார். "பாரபட்சம் காட்டுவதை இராணுவ சோதனைச் சாவடிகளில் கூட
நீங்கள் காணலாம். தமிழராயின் வேறுவிதத்தில் நடத்தப்படுவர். மொழி, மத
கலாச்சார ரீதியிலும் பாரபட்சம் மட்டுமல்ல தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளரது
குடியுரிமை தொடர்பாகவும் இது காணப்படுகின்றது. இந்த யுத்தத்தால் அது மேலும்
பரந்துபட்டுள்ளது இந்த யுத்தத்துக்கு முடிவுகட்டப்படவேண்டும். இலங்கை
இராணுவம் வடக்குக் கிழக்கிலிருந்து வாபஸ் பெற்றாகவேண்டும்" என கோரினார்.
பத்திரிகையாளர் மாநாட்டில் முக்கிய தமிழ், ஆங்கில மொழி தினசரிகள், இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.
வீரகேசரி, தினக்குரல், ஆகிய முக்கிய இரு தினசரிகள் பத்திரிகைகளும்
ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் டயசின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட
அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|