World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Amid moves for a national unity government

Kumaratunga appoints an unstable coalition cabinet in Sri Lanka

தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கான நடவடிக்கை சூடுபிடிக்கிறது

இலங்கையில் குமாரதுங்கவின் ஆட்டங்கண்ட கூட்டரசாங்க அமைச்சரவை பதவியேற்பு

By K. Ratnayake
21 October 2000

Use this version to print

கடந்த வாரம் இடம் பெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் அரசியல் நிலைமை, தொடர்ந்தும் பெரிதும் ஈடாட்டங் கண்டதாகவே இருந்து வருகின்றது. ஒன்றரை வார காலத்துக்கு மேலாக இடம் பெற்ற திரைமறைவு இழுபறிகளின் பின்னர் பொதுஜன முன்னணி இரண்டு சிறுபான்மை கட்சிகளுடன் -சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC), ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)- சேர்ந்து ஆட்டங் கண்ட கூட்டரசாங்கத்தை அமைத்துள்ளது. ஆனால் இவை எவையும் உரிய காலத்துக்கு முன்னதாகவே பொதுத் தேர்தலை நடாத்தும்படி தள்ளிய காரணங்களுக்கு தீர்வு காண்பதாக இல்லை.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசியலமைப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று கொள்ளத் தவறிய ஒரு நிலையிலேயே பொதுஜன முன்னணியின் கரங்களைப் பலப்படுத்தும் ஒரு முயற்சியாக தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பொருட்டு நாட்டின் தமிழ், முஸ்லீம் பிரமுகர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கான ஒரு அடிப்படையாகவே அரசியலமைப்பு சீர்திருத்தப் பொதி முன்வைக்கப்பட்டது. ஆனால் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் வாக்குகள் வீழச்சி கண்டதோடு பாராளுமன்றத்தில் ஒரு சாதாரண பெரும்பான்மையைத் தன்னும் அதனால் அடையமுடியாது போய்விட்டது.

அத்தோடு இந்த பிரச்சார இயக்கத்தின் போது பொதுஜன முன்னணி, அரசியலமைப்பு தீர்வுப் பொதியை மூர்க்கமாக எதிர்த்ததோடு யுத்தத்தை உக்கிரமாக்கும்படி கோரிய மக்கள் விடுதலை முன்னணி(JVP) சிங்கள உறுமய கட்சி(SUP) போன்ற தீவிர வலதுசாரி குழுக்களின் திட்டத்துக்கும் இடமளித்தது. குமாரதுங்க மக்கள் ஐக்கிய முன்னணி(MEP) போன்ற சிங்களத் தீவிரவாதக் கட்சிகளை பொதுஜன முன்னணியின் குடையின் கீழ் கொணர்ந்ததோடு, யுத்தத்தை தொடர்ந்து நடாத்தும் அரசாங்கத்தின் நிஜ விருப்பைக் காட்டிக்கொள்ளும் பொருட்டு ஒரு தொகை இராணுவத் தாக்குதல்களையும் யாழ்ப்பாணத்தில் நடாத்தியது.

புதிய அமைச்சரவை விபரங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அரசாங்கம் ஏற்கனவே எதிரும் புதிருமான திசைகளில் பயணம் செய்யத் தொடங்கி விட்டது. அக்டோபர் 13ம் திகதி புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்ட ரத்னசிரி விக்கிரமநாயக்க ஒரு சமரசத்தை எட்டும் விதத்தில் எந்த ஒரு சமாதானப் பேச்சுவார்த்தையிலோ அல்லது நோர்வே அரசாங்கத்தின் இராஜதந்திர ஆரம்பிப்புக்களிலோ சம்பந்தப்படும் சாத்தியத்தை நிராகரித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரத்னசிரி விக்கிரமநாயக்க பெளத்த தேரர்களின் ஆசீர்வாதத்தைப் பெற புத்த விகாரைக்கு விஜயம் செய்ததோடு "அத்தகைய ஒரு மசோதாவுக்கு அவசியம் இல்லாததால்" "தற்சமயம் அதிகாரப் பகிர்வு மசோதா கிடையாது" எனத் தெரிவித்தார். மக்கள் ஐக்கிய முன்னணிக்கு(MEP) அது கோரியபடி ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு அதுவும் இத்தகைய ஒரு நிலைப்பாட்டையே வகிக்கின்றது.

எவ்வாறெனினும் தேர்தல் முடிவடைந்ததுதான் தாமதம் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதர்காமர் நோர்வே அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டும் குமாரதுங்கவின் கடிதத்துடன் நோர்வே பயணமானார். சமாதானத் தீர்வு பயணத்தில் நோர்வே தொடர்ந்து ஈடுபடும் என எதிர்பார்ப்பதோடு அரசாங்கம் "இனக்குழு பிரச்சினைக்கு ஒரு அரசியல், சமாதான தீர்வை காண முழுமனே வாக்களிப்பதாகவும்" குமாரதுங்க குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் நோர்வே ஆரம்பிப்புகள் முற்றுப் பெற்றுவிட்டதாகவும் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான "இராணுவ பிரச்சார இயக்கத்தை கைவிடாது" நடாத்தும் எனவும் வாக்குறுதியளித்தார்.

மக்கள் ஐக்கிய முன்னணிக்கு (MEP) நேர் எதிரான விதத்தில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) புதிய அரசாங்கம் 100 நாட்களுக்குள் அதிகாரப் பகிர்வு பொதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக இக்கோரிக்கையை முன்வைத்த முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு அமைச்சர் பதவிகளையும் மூன்று பிரதி அமைச்சர் பதவிகளையும் வேறு சில இராஜதந்திர நியமனங்களையும் கோரியது. அத்தோடு பொலிஸ், தேர்தல், அரசாங்க சேவையின் பேரில் சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவும் வேண்டும் என்றது. இந்த பேரம்பேசல்கள் இழுபட்டு சென்றதன் காரணமாக ஜனாதிபதி குமாரதுங்க வழக்காற்று நடைமுறைகளுக்கு முரணாக மாஜி. அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் விதவையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இணைத் தலைவருமான பேரியல் அஷ்ரபை கடந்த திங்கட்கிழமை தனியாக சந்தித்தார். இதைத் தொடர்ந்து சி.ல.மு.கா.வுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு ஒட்டுப் போடப்பட்டது.

புதிய அமைச்சரவை -1994ல் குமாரதுங்க புதிதாக ஆட்சிக்கு வந்த சமயம் அமைத்த அமைச்சரவையை விட இரண்டு மடங்காக- 44 அங்கத்தவர்களைக் கொண்டதாக வீக்கம் கண்டது. புதிய ஆளும் கூட்டரசாங்கத்தில் மொத்தமாக உள்ள 8 கட்சிகளுக்கும் -சி.ல.மு.கா, ஈ.பி.டீ.பி. உட்பட- அவர்களின் ஆதரவுக்கான பிரதியுபகாரமாக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு குமாரதுங்க எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மாஜி. அங்கத்தவர்களாக இருந்து அரசாங்கக் கட்சிக்கு தாவியவர்கள் பலரையும் கூட திருப்திப்படுத்த வேண்டி நேரிட்டது.

அமைச்சரவை உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஒரு சில மணித்தியாலங்களுள் அவரது முதலாவது அமைச்சரவையை மாற்றி அமைக்கும் நிலை ஏற்பட்டது. இரண்டு அமைச்சர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதையிட்டு முகம் சுழித்துக் கொண்டதோடு தமது அதிகாரங்களை விஸ்தரிக்கும்படி வலியுறுத்தினர். குமாரதுங்கவின் சொந்தக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஒரு முக்கிய புள்ளியான எஸ்.பி.திசாநாயக்க விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் பதவியை இழந்தார். அதற்குப் பதிலாக அவருக்கு பாராளுமன்ற விவகார அமைச்சு வழங்கப்பட்டது. முன்னைய விமானப் போக்குவரத்து அமைச்சரான ரெஜி ரணதுங்கவுக்கு (புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பு இல்லாதவர்) இரண்டாவது சுற்று பதவிப் பிரமாணத்தில் உணவு சந்தைப்படுத்தல் அமைச்சு வழங்கப்பட்டது.

பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஒரு பகுதியினர், குமாரதுங்க அரசாங்கத்தின் உடன்பிறப்பாகிவிட்ட ஈடாட்டம் கண்ட நிலைமையையிட்டு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். தொழில் அதிபர்கள் சம்மேளனம், வர்த்தகர்கள் சம்மேளனம் போன்ற வர்த்தக அமைப்புக்களை கொண்ட கூட்டு வர்த்தக மன்றம் மதகுருமாரையும் தொழிற்சங்கங்களையும், கல்வி நிபுணர்களையும் தொழில்சார் அமைப்புக்களையும், குடியுரிமை இயக்கங்களையும் பொதுஜன முன்னணி யூ.என்.பி. "தேசிய ஐக்கியத்துக்கும் மறு புனரமைப்புக்குமான ஒரு அரசாங்கத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும்படி" கோருமாறு கூட்டாக வேண்டின.

யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் அதனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகையில் இம்மன்றம் கூறுவதாவது: "...ஒரு உறுதியான அரசாங்கத்தின் மூலம்... சமாதானம், பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கை ஊர்ஜிதம் செய்வதே இன்றைய அவசியமாகும்." பெரும் வர்த்தக நிறுவனங்கள் யுத்தம் வெளிநாட்டு முதலீட்டின் மீதும் பொருளாதாரத்தின் மீதும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையிட்டு அதிகரித்த அளவில் திகைத்துப் போயுள்ளன. "உலக வர்த்தகம், சேவைகள் அரங்கில் பெறுமான சேர்க்கை பாகங்களை வெட்டி எடுப்பதற்கும்" "இலங்கைக்கு போட்டி நிறைந்த மேம்பட்ட நிலைமையை சுரண்டிக் கொள்வதற்கும்" தேசிய ஐக்கியம் அவசியம் என இந்த மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு அதிகாரப் பகிர்வு அரசியல் பொதியை முன்தள்ளுவதன் ஊடாக யுத்தத்துக்கு முடிவு கட்ட கம்பனிகள் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கும் அதே சமயம், சிங்கள தீவிரவாத குழுக்களும் கட்சிகளும் தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படுவதை தடுக்க ஒன்றிணையும்படி பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் அழைப்பு விடுத்துள்ளனர். தாய்நாடு காக்கும் அமைப்பின் தலைவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாரம் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும்படி அழைப்பு விடுத்தார். அவர் கூறியதாவது: "இல்லாது போனால் சிறுபான்மை கட்சிகள் (தமிழ், முஸ்லீம்) தமது பங்கைப் பெறுவதோடு அடுத்த அரசாங்கம் தமது தாளத்துக்கு ஆடவேண்டும் எனவும் எதிர்பார்ப்பர்."

பெளத்த மேலாதிக்கத்துக்காக வக்காலத்து வாங்குவதன் மூலம் பாராளுமன்றத்தில் தனது ஆசனங்களின் எண்ணிக்கையை ஒன்றில் இருந்து 10 ஆக அதிகரித்துக் கொண்டுள்ள ஜே.வி.பி. பொதுஜன முன்னணி அரசாங்கம் "சிறுபான்மைக் கட்சிகளால் வழிநடத்தப்படுவதாக" அதை விமர்சனம் செய்தது. தமிழ், முஸ்லீம் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு எதிரான பொதுஜன முன்னணிக்கு தமது ஆதரவை வழங்கும் விதத்தில் ஜே.வி.பி.யும் யூ.என்.பி.யும் ஒரு ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும் திசையில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளன.

இந்த இருதரப்பு கொள்கையின் மிகவும் துல்லியமான அடையாளமாக ஒரு முன்னணி யூ.என்.பி. பிரமுகரும் குமாரதுங்கவில் இருந்து பிளவுபட்ட சகோதரனுமான அனுரா பண்டாரநாயக்க பாராளுமன்ற சபாநாயகராக நியமனம் பெற்றமை விளங்குகின்றது. எதிர்க்கட்சி அரசியல் புள்ளி ஒருவர் சபாநாயகராக நியமனம் பெற்றமை இலங்கையில் இதற்கு முன்னர் 1960ல் யூ.என்.பி. அரசாங்கம் உறுதியான பெரும்பான்மைப் பலம் இல்லாமல் ஆட்சியை அமைத்த போது மட்டுமே இடம் பெற்றது.

இத்தீர்மானம், இவ்வாரம் யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே அந்தரங்கமாக இடம் பெற்ற ஒரு கலந்துரையாடலிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு கூட்டரசாங்கம் ஆட்டம் கண்டு போயுள்ளதால் பொதுஜன முன்னணி தலைவர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடம் பெறும் சபாநாயகர் தெரிவில் தமது வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதையிட்டு குழம்பிப் போனார்கள். இதனால் பண்டாரநாயக்கவின் பெயர் பிரதமராலும் எதிர்க் கட்சித் தலைவராலும் கூட்டாகப் பிரேரிக்கப்பட்டதோடு அது ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. பொதுஜன முன்னணியும் ஜே.வி.பி.யும் புதிய சபாநாயகரைப் பாராட்டி உரை நிகழ்த்தின.

குமாரதுங்கவும் அவரது சகோதரரும் பல வருடங்களாக அரசியல் எதிரிகளாக இருந்து வந்துள்ளனர். தேர்தல் பிரச்சார இயக்கத்தின் போது அனுர பண்டாரநாயக்க பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் காடைத்தனங்களையும் வாக்குச் சீட்டு மோசடிகளையும் சாடியிருந்தார். ஆதலால் பண்டாரநாயக்க பரம்பரையைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்கள் -முன்னாள் பிரதமரும் தாயாருமான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மரணத்தின் ஒரு சில நாட்களின் பின்னர்- ஒன்று சேர்ந்தமையானது, யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே புரிந்துணர்வுக்கான சாத்தியம் இருந்து கொண்டுள்ளது என்ற செய்தியை ஊர்ஜிதம் செய்வதாக விளங்கியது. வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் ஒரு பகுதியினர் யூ.என்.பி.யும் பொதுஜன முன்னணியும் "சரியான திசையில் பயணம் செய்வதாக" சுடச் சுடப் பிரகடனம் செய்தனர். இதனால் தேர்தலைத் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவந்த கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண்கள் ஒரு சில புள்ளிகளால் அதிகரித்தது.

ஜே.வி.பி.நிபந்தனையற்ற ஆதரவு

ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது பற்றிய பேச்சுகள், கடந்த புதன்கிழமை அவசரகால நிலையை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பாக இடம்பெற்ற விவாதத்திலும் தலையெடுத்ததை காணமுடிந்தது. ஒரு சிரேஷ்ட யூ.என்.பி. பிரமுகரான ஜோன் அமரதுங்க சபாநாயகர் நியமனம் பற்றி குறிப்பிடுகையில்: "எதிர்காலத்தில் இந்த பாராளுமன்றம் ஒன்றிணைந்து செயற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்" எனக் குறிப்பிட்டார். மற்றொருவர் அரசாங்கத்தை தேர்தல் வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினார். அவர் கூறியதாவது: "அத்தகைய ஒரு நடவடிக்கை எடுக்கப்படாது போனால் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நம்பிக்கையை கட்டி வளர்ப்பது முடியாத காரியம்" என்றார்.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கத்துக்கு 'நிபந்தனையற்ற ஆதரவு' வழங்குவதாக தெரிவித்தார். "நாட்டில் ஒரு அராஜகம் நிலவும் நிலையில் ஜே.வி.பி. அந்த விதத்தில் செயற்படக் கூடிய ஒரு கட்சியல்ல. அராஜகம், நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு மட்டுமே கைகொடுக்கும்." ஜே.வி.பி.க்கும் பெரும் கட்சிகளுக்கும் இடையேயான இடைவெளி பிரமாண்டமானது எனக் கூறிய அவர் "ஆனால் ஜே.வி.பி. தேசிய நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இந்த இடைவெளியை பயன்படுத்தாது" என்றார்.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் விக்கிரமநாயக்க கூறியதாவது: "அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு புதியதும் கூட்டானதுமான அணுகுமுறை ஏற்படுமென நாடு எதிர்பார்க்கின்றது. இந்த உடன்பாடு சபாநாயகர் தேர்தலில் அரசாங்கமும் எதிர்க் கட்சியும் நடந்து கொண்ட விதத்தின் மூலம் வெளிப்பாடாகியுள்ளது. மக்கள் எதிர்காலத்திலும் கூட அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே அத்தகைய ஒரு ஐக்கியத்தை காண விரும்புகின்றனர்."

அடுத்த நாள் ஒரு சிரேஷ்ட யூ.எனி.பி. பிரமுகரான டிரோன் பெர்னாந்து யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு உள்ளதாக அறிவித்தார். எதிர்க் கட்சித் தலைவரது அங்கீகாரத்துடன் தாம் விக்கிரமநாயக்கவை சந்தித்ததாகவும் "குறைந்த பட்சம் அடுத்த இரண்டு வருட காலத்துக்கு அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளின் வேண்டாத கோரிக்கைகளை நிராகரிக்கும் விதத்தில் யூ.என்.பி. (பொதுஜன முன்னணிக்கு) தீர்க்கமான விடயங்களில் ஆதரவு வழங்கும்" எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கமும் இன்றைய ஈடாட்டம் கண்ட கூட்டரசாங்கத்தைப் போன்றே இதே முரண்பாடுகளால் தகர்த்து எறியப்படும். குமாரதுங்கவின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் என நம்பப்படும் ஒருவர் கொழும்பு மாநகரசபைக்கு சமீபமாக நடாத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 23 பேர் காயமடைந்தனர். வடக்கில் கடும் மோதுதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதோடு விமானப் படைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகொப்டர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

யுத்தத்துக்கு முடிவு காணும்படி கோரும் வர்த்தக சமூகத்தின் அதிகரித்த நெருக்குவாரங்களுக்கு ஒரு பொதுஜன முன்னணி -யூ.என்.பி. அரசாங்கம் உள்ளாக நேரிடும். ஆனால் குமாரதுங்க அமைச்சரவையைப் போன்றே இதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இறுதிவரை தொடரும்படி கோரும் தீவிர வலதுசாரி சக்திகளின் -பெளத்த அமைப்புக்கள் ஜே.வி.பி, சிங்கள உறுமய கட்சி - அரசியல் பணயக் கைதியாக இருக்க வேண்டி நேரிடும்.