WSWS :செய்திகள்
& ஆய்வுகள் :ஆசியா:
இலங்கை
Protest in eastern Sri Lanka to mark the "disappearance" of army
detainees
இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டோர்
"காணமல் போனதை" நினைவுகூர கிழக்கு மாகாணத்தில்
ஹர்த்தால்
By S. Rajendran
2 October 2000
Use
this version to print
1990ல் கிழக்கு பல்கலைக்கழக அகதிகள் முகாமில்
இருந்து ஆயுதப் படைகளால் கைது செய்யப்பட்ட 174 பேர்
'காணாமல் போனதன்' 10 ஆண்டுகளை நினைவு கூரும் பொருட்டு
செப்டம்பர் 5ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு அளவிலான
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த அகதிகள், ஆட்சிக்குவந்த இலங்கை அரசாங்கங்களினால்
தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்கித் தள்ள
கடந்த 17 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் கொடிய யுத்தத்துக்கு
பலியான 60,000 க்கும் அதிகமானோரில் ஒரு துளியாவர்.
இந்த ஹர்த்தால் மட்டக்களப்பு மக்கள் விழிப்பு
கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு இதற்கு
தமிழ் முஸ்லீம் மக்கள் ஆதரவு வழங்கினர். இம்மாவட்டத்தின் முக்கிய
நகரங்களான மட்டக்களப்பு, செங்கலடி, ஏறாவூர், வந்தாறுமூலை,
வாழைச்சேனை ஆகிய இடங்களில் கடைகள் மூடப்பட்டு இருந்ததோடு
போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்து போயிற்று.
பல பாடசாலைகள் இயங்காததோடு, கிழக்குப்
பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் இரத்துச் செய்யப்பட்டன.
தமது ஆட்சேபனையை தெரிவிக்கும் முகமாக பல்கலைக் கழக
மாணவர்கள் வளாகத்தினுள் கறுப்பு கொடிகளை ஏற்றியிருந்தனர்.
அரசாங்க அலுவலகங்களும் வெறிச்சோடிக் கிடந்தன.
இராணுவத்தினர் ஹர்த்தாலில் கலந்து கொண்டவர்களை
அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொலிசாரும்
இராணுவத்தினரும் அலவாங்கினால் கடைக் கதவுகளை உடைத்துத்
திறந்ததோடு சில வர்த்தகர்களை கடைகளைத் திறந்து வைக்கும்படியும்
நெருக்கினர். வர்த்தகர்களை அச்சுறுத்தும் விதத்தில் பொலிஸ்
அதிகாரிகள் கடையடைப்பு செய்யப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள்
பற்றிய தகவல்களை திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் வீதிகள் அடியோடு வெறிச்சோடிக் கிடந்தன. சேவையில்
ஈடுபட்டிருந்த ஒரு சில போக்குவரத்து பஸ் வண்டிகளும் வந்தாறுமூலையில்
இளைஞர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த "காணாமல் போதல்" சம்பவங்கள்
யூ.என்.பி. ஆட்சியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற
இராணுவ நடவடிக்கைகளின் உச்சக்கட்டத்தின் போது இடம்பெற்றன.
சுமார் 40,000 பொதுமக்கள் அரசாங்க ஆயுதப்படைகளிடம் இருந்தும்,
ஊர்க்காவல் படையிடமிருந்தும் இவற்றின் கையாட்களாக செயற்பட்ட
மோகன் குழு (புளொட்) போன்ற தமிழ் அமைப்புகளிடம் இருந்தும்
பாதுகாப்புத் தேடி பல்கலைக் கழக மைதானத்தில் தஞ்சம்
புகுந்தனர்.
1990 செப்டம்பர் 5ம் திகதி பல்கலைக் கழக
அகதிகள் முகாமை சுற்றிவளைத்த அரசாங்கப் பாதுகாப்புப் படைகள்
மக்களை கியூக்களில் வருமாறும் தலையாட்டிகளின் எதிரில் ஆஜராகுமாறும்
கட்டளையிட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் எனக் கூறப்பட்டவர்களை
பொறுக்கி எடுத்தனர். 158 மக்கள் கைது செய்யப்பட்டதோடு
இவர்கள் அரசாங்க பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு வாழைச்சேனை
பக்கம் கொண்டு செல்லப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள்
காணாது போயினர். இந்தக் காணாமல் போதல் சம்பவங்களுக்கு
எதிராக கொழும்பிலும் மட்டக்களப்பிலும் மனித உரிமை அமைப்புகளும்
சில தொழிற்சங்கங்களும் நடாத்திய எதிர்ப்புகளை தொடர்ந்து
அரசாங்கம் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் கே.பாலகிட்ணர்
தலைமையில் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க நெருக்கப்பட்டது.
இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை 158 அகதிகள்
கைது செய்யப்பட்டதையும் இராணுவ கப்டன்களான பாலித, குணரத்ன,
முனாஸ், மேஜர் மஜீத்தினால் வெளியே கொண்டு செல்லப்பட்டதையும்
ஊர்ஜிதம் செய்தது. இந்த ஆணைக்குழு 1990 செப்டம்பர் 23ம்
திகதி காணாமல் போன மேலும் 16 பேருக்கும் இவர்களே
பொறுப்பு எனவும் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட
வேண்டும் எனவும் சிபார்சு செய்தது. ஆனால் இன்றுவரை எந்தவிதமான
சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கையிலும் அனைத்துலக ரீதியிலும் வளர்ச்சிகண்ட
நெருக்குவாரங்கள் காரணமாக பாதுகாப்பு அமைச்சு
"நாம் 32 பேரைக் கைதுசெய்ததோடு அவர்கள் விசாரணையைத்
தொடர்ந்து 24 "மணித்தியாலங்களுள் விடுதலை செய்யப்பட்டனர்"
எனக் கூறும் ஒரு அறிக்கையையும் வெளியிட்டது. இருந்த போதும்
இக்கைதிகளில் எவரும் வீடு திரும்பவேயில்லை. உள்ளூர்வாசிகளின்
தகவல்களின்படி இந்த 174 பேரும் கொல்லப்பட்டு வாழைச்சேனை
நாவலடி இராணுவ முகாமுக்கு சமீபமாக உள்ள ஒரு இடத்தில்
புதைக்கப்பட்டுள்ளனர். 1990களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
சுமார் 3000 மக்கள் -இளைஞர்களும் விவசாயிகளும்- காணாமல்
போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1995ம் 96ம் ஆண்டில் பொதுஜன முன்னணி அரசாங்கப்
படைகள் யாழ்ப்பாணத்தில் நடாத்திய 'ரிவிரச' இராணுவ நடவடிக்கையின்
போது சுமார் 600 இளைஞர்கள் 'காணாமல் போயினர்" என
யாழ்ப்பாண அன்னையர் முன்னணி தெரிவித்தது. இந்தக் கொலைகளில்
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளாகக் காணப்பட்ட பல படையாட்கள்
செம்மணியில் அமைந்துள்ள பல மனிதப் புதைகுழிகளை சுட்டிக்
காட்டியிருந்தனர். ஆனால் பொதுஜன முன்னணி அரசாங்கம்
பெரும் இழுத்தடிப்புடனும் தயக்கத்துடனுமே இப்புதைகுழிகளை
தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
சிங்கள உறுமய கட்சி (Sinhala
Heritage Party) போன்ற அதிதீவிர, சிங்கள
வலதுசாரி அரசியல் அமைப்புகள் செம்மணி புதைகுழிகளுடன்
தொடர்புபட்ட கொலைகள் சம்பந்தமான குற்றவாளிகளாகக்
காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட இராணுவத்தினரை உடனடியாக
விடுதலை செய்யும்படி கோரி வருகின்றது. இராணுவத்தினரின்
மனோநிலையை ஊக்குவிக்க இது அத்தியாவசியம் என அது வாதிட்டு
வருகின்றது.
|