WSWS: செய்திகள் & ஆய்வுகள்:
சினிமா
விமர்சனம்
Film Review
Saroja: a distortion of the racist war in Sri Lanka
சினிமா விமர்சனம்
சரோஜா: இலங்கை இனவாத யுத்தத்தின் யதார்த்தத்தை திரிக்கிறது
By Darshana Medis
13 October 2000
Use
this version to print
சோமரத்ன திசாநாயக்கவினால் எழுதி, நெறிப்படுத்தப்பட்டதும்
தற்சமயம் இலங்கை சினிமாத் திரைகளில் காண்பிக்கப்படுவதுமான
'சரோஜா' திரைப்படம் சினிமா விமர்சகர்களாலும் உள்ளூர்
வெகுஜனத் தொடர்பு சாதனங்களாலும் பரந்தளவில் புகழ்ந்து
பாராட்டப்பட்டுள்ளது. இந்தப் பாராட்டுக்கான ஒரு காரணம்,
அத்திரைப்படம் பல அனைத்துலக விருதுகளை வெற்றிகொண்டுள்ளதேயாகும்.
இந்த ஆண்டு டாக்கா அனைத்துலக திரைப்படவிழாவில் 'நெட்வேர்க்'
விருதையும், (Network for the
Promotion of Asian Cinama) ஹூஸ்டனில் (Houston)
நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் வெண்கல விருதையும் அது
வெற்றி கொண்டது. அத்தோடு இத்திரைப்படம் சிங்கப்பூரில் இவ்வாண்டு
நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
சரோஜா திரைப்படத்துக்கு முன்னதாக திசாநாயக்க
பல இரசனைமிக்க நாடகங்களை தயாரித்தவர். அவற்றுள் 1988ம்
ஆண்டின் அரசியல் கேலி சித்திரமான மீ புரவசியோ (Rat
Citizens), இட்டி பஹன் (Candle
Lamps, கைவிளக்கு) என்ற தொலைக்காட்சி
நாடகம்(1990) என்பவை அடங்கும். இப் படைப்புக்கள் இந்த
இளம் கலைஞர் பல ஆற்றல்களைக் கொண்டவர் என்பதை வெளிக்காட்டின.
திசாநாயக்கவின் முதலாவது திரைப்படமான சரோஜா பாரதூரமான
குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
இத்திரைப்படம், இலங்கை இராணுவத்துக்கும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE)
இடேயே கடும் சண்டை நடைபெறும் இலங்கையின் வடக்கு, கிழக்கு
மாகாணங்களைச் சேர்ந்த ஒரு கிராமத்தை மையமாகக்
கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் கிராமவாசியான சுந்தரம்
(மேர்வின் மகேசன்) தமிழீழ விடுதலைப் புலிகளால் அதனது படையில்
சேரும்படியும் கொரில்லா இராணுவப் பயிற்சி பெறும்படியும்
கேட்கப்படுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய இராணுவ
சேவையில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே தனது 14 வயது மகனை
யுத்தத்தில பறிகொடுத்த சுந்தரம், விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு
இணங்க மறுக்கிறார். இதற்கான தண்டனையாக தமிழீழ விடுதலைப்
புலிகள் அவரது மனைவியைக் கொலை செய்வதோடு,அவர்களின் வீட்டையும்
எரித்து விடுகிறார்கள்.
இருந்த போதும் சுந்தரமும் அவரது ஏழு வயது
மகள் சரோஜினியும் (நித்தியவாணி கந்தசாமி) தப்பித்து ஓடிவிடுகின்றனர்.
சுந்தரம் கடும் காயம் அடைவதோடு இருவரும் தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே காட்டில்
அகப்பட்டுப் போய்விடுகின்றனர். மகள் சரோஜினியை உயிர் தப்ப
வைக்கும் ஆவலினால் சுந்தரம் அவளை தன்னைப் பிரிந்து, அயலில்
உள்ள சிங்களக் கிராமத்துக்கு செல்லுமாறு வேண்டுகிறார். ஆனால்
கிராமத்தை சென்றடைவதற்கு முன்னதாக சரோஜினி அவளது வயதும்
உள்ளூர் ஆசிரியர் புஞ்சிபண்டாவின் (ஜனகா கும்புககே) மகளுமான
வருணி (பிரமுதி கருணாரத்ன) என்ற சிங்கள சிறுமியைச் சந்திக்கிறாள்.
இருவரும் பரஸ்பரம் தத்தமது மொழிகளில் பேசிக்கொள்ள
முடியாது போனாலும் அவர்களிடையே ஒரு காத்திரமான நட்பு
வளர்ச்சி பெறுகிறது. ஒரு சில நாட்களின் பின்னர் வருணி, சரோஜினியையும்
அவளது காயமடைந்த தந்தை சுந்தரத்தையும் தமது வீட்டில்
தங்க வைக்க தகப்பனை சம்மதிக்க வைக்கிறாள்.
இருந்த போதும் சுந்தரத்தின் காயம் மேலும்
சிதைவுகண்டு அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகின்றார்.
அங்கு அவர்அடையாளம் காணப்படுகின்றார். கைது செய்யப்பட்டு
விடுதலைப் புலிகள் அங்கத்தவராக இருந்த குற்றத்துக்காக விசாரணைக்கு
நிறுத்தப்படுகின்றார். சுந்தரம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட
போதிலும் சில உள்ளூர் கிராமவாசிகள் ஒரு தமிழருக்கு வீட்டில்
இருப்பிடம் கொடுத்தமைக்காக புஞ்சி பண்டாவை சந்தேகிக்கின்றனர்.
அத்தோடு அவர் ஒதுக்குப்புற கிராமம் ஒன்றுக்கு இடமாற்றம்
செய்யப்பட வேண்டும் எனவும் கோருகின்றனர். பாடசாலையில்
ஆசிரியருக்கு வழங்கப்பட்ட பிரிவுபசார விழாவில் சுந்தரம் மோட்டார்
சைக்கிளில் வந்த இனங்காண முடியாத ஒரு துப்பாக்கி நபரால்
சுடப்படுகின்றார். திரைப்படம், சரோஜினியை புஞ்சிபண்டாவும்
அவரது மனைவியும் சுவீகாரம் செய்வதுடன் நிறைவு பெறுகின்றது.
வெளிவந்த பல திரைப்பட விமர்சனங்களின்படி
'சரோஜா' இனக்குழு சமாதானத்துக்கான அழைப்பின் அடையாளமாகக்
கொள்ளப்படுகின்றது. இலங்கையின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனரும்
விமர்சகருமான சுனில் ஆரியரத்ன கூறுவதாவது: "இன நெருக்கடியைப்
பற்றிய அனேக கலை நிர்மாணங்கள் இருந்து கொண்டுள்ள
போதிலும் அவற்றில் பலவும் போலியானவை;நவநாகரீகமான
சிருஷ்டிகள். சரோஜாவின் மேன்மையான அம்சம் என்னவெனில்
படைப்பாளியின் நேர்மையும் மனித நேயமுமே".
இத்திரைப்படம் இம்மோதுதல் சாதாரண மக்கள்
மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையிட்டும் தமிழ் சமூகத்தின் பேரில்
நிஜ அக்கறை காட்டிய போதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான
இலங்கை அரசாங்கத்தின் 17 வருட கால இனவாத யுத்தத்தை உத்தியோகபூர்வமாக
நியாயப்படுத்த செய்வதில் பலதையும் விமர்சனமின்றி அரவணைத்துக்
கொள்வதோடு, தூக்கியும் பிடிக்கிறது.
சரோஜா திரைப்படத்தில் பலதும் நம்ப
முடியாதவை. இவை திசாநாயக்கவின் தடுமாற்றம் கொண்ட பக்கச்
சார்புகளுக்கும் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கும் ஒத்திசைந்து
போகும் விதத்தில் முன்கூட்டியே தீர்மானம் செய்யப்பட்ட ஒரு
கட்டுமானத்துக்கு ஏற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோ
என்ற உணர்வை உருவாக்குகின்றது. கடும் சண்டைக்கு மத்தியில்
ஒரு அனுதாபம் கொண்ட இலங்கை படையாள் சுந்தரத்தையும்
(இராணுவ உடை தரித்து ஆயுதம் தாங்கியுள்ளார்) அவரது மகளையும்
யுத்த களத்தில் இருந்து தப்பி ஓட அனுமதிக்கின்றார். "சிறுசுகள்
துன்புறுத்தப்படமாட்டார்கள்" என்பதால் சுந்தரம் தனது
மகளை சிங்கள கிராமத்தை நோக்கிச் செல்லும்படி கூறுகின்றார்.
சகல இலங்கை இராணுவ அதிகாரிகளும் அளவுக்கு அதிகமாக தமிழர்களிடம்
கண்ணியமாக நடந்து கொள்வதாகவும் குரோதம் காட்டாதவர்களாகவும்
சித்தரிக்கப்படுகிறார்கள். நீதிமன்றம் ஆச்சரியத்துக்கிடமான முறையில்
சுந்தரத்தை விடுதலை செய்கிறது. ஒரு மாஜி விடுதலைப் புலி இயக்க
அங்கத்தவருக்கு வதிவிடம் வழங்கியமைக்காக மட்டும் ஆசிரியருக்கு
சிறிய தண்டனை விதிக்கிறது. உள்ளூர் பொலிசார் விடுதலை செய்யப்பட்ட
சுந்தரத்துடன் நட்புறவு கொண்டுள்ளனர்.
ஆனால் யதார்த்தம் என்ன? நூற்றுக்கணக்கான
பாடசாலைகளும் வீடுகளும் இலங்கை இராணுவத்தினரின் ஷெல்
அடிக்கும் குண்டு வீச்சுக்கும் இலக்காகின்றன. இது ஆயிரக்கணக்கான
தமிழ் ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பலி
கொண்டுள்ளது. இலங்கை படையினர் தமிழ் பெண்களை பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதோடு நூற்றுக்கணக்கான தமிழ்
இளைஞர்கள் தென் இலங்கையில் உள்ள சிறைகளில் ஆண்டுக் கணக்காக
சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் "ஏதும் குற்றம் இருந்தால்
விசாரணைக்கு நிறுத்து அல்லது எம்மை விடுதலை செய்" என
கோரி வருகின்றார்கள்.
திசாநாயக்க சிங்கள கிராமவாசிகளில் பெரும்பான்மையினரை
அறிவீலிகளாகவும் இனவாதிகளாகவும் சித்தரிக்கின்றார். ஆதலால்
இனக்குழு முரண்பாடுகளுக்கு கூட்டு எதிரிகளாகவும் காட்டுகின்றார்.
இது கிராமத்தில் தமிழர்களை பகிரங்கமாக மிரட்டும் ஒரு உள்ளூர்
கிராமவாசியான சிறிசேனவினதும் அவரது சகாக்களதும் நடவடிக்கைகள்
மூலம் சித்தரிக்கப்படுகின்றது.
தெற்கில் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும்
உள்ள மத்தியதர வர்க்க, லும்பன் (மண்டி வர்க்கம்), பாசிச
போக்குக்கள் இந்த மனப்பாங்கினை வெளிக்காட்டும் அதே
வேளையில் எல்லைக் கிராமங்களில் உள்ள யதார்த்தம் அவ்வளவு
தெளிவானதாக இல்லை. யுத்த எதிர்ப்பு உணர்வானது தமிழீழ விடுதலைப்
புலிகளின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கும் இலங்கை இராணுவத்தின்
அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இடையே நசுங்குண்டு
போய்க் கிடக்கும் மக்களிடையே பொதுவானதாக விளங்குகின்றது.
இரண்டு பக்கத்திலும் நடக்கும் சண்டைகளுக்குள் அயல் தமிழ்
சமூகத்துடன் கடந்த காலத்தில் இருந்த நட்புணர்வை மீண்டும்
புதிப்பிக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள் என்பதை பலர்
விளங்கிக்கொள்றார்கள்.
சரோஜாவின் முக்கிய கதாபாத்திரங்கள் சரோஜினியும்
வருணியும் போல் தோன்றலாம். எல்லாவற்றுக்கும் மேலாக
இத்திரைப்படம் இரண்டு தமிழ், சிங்கள யுவதிகளுக்கு-நித்தியவாணி கந்தசாமியாலும்
பிரமுதி கருணாரத்னவாலும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது- இடையேயான
மனப்பூர்வமானதும் உறுதியானதுமான நட்புறவையே மையமாகக்
கொண்டுள்ளது. உண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களும் ஊக்குவிப்பாளர்களும்
முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கும் தகவல் இதுதான். இப்படத்தைப்
பற்றி விளம்பரம் செய்கையில் "யுத்தத்தினால் சீரழிந்து
போன இலங்கையின் சிறுவர்களைப் பற்றிய மனதை உருக்கும்
கதை" இது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் கம்பீரமான
பாத்திரம் அல்லது குறைந்த பட்சம் மைய சித்தாந்த, அரசியல்
புள்ளி பாடசாலை ஆசிரியரான புஞ்சி பண்டாவே. அவர் சிங்கள-தமிழ்
நல்லுறவு சீர்கெட்டுப் போனமைக்கும் கிராமவாசிகள் பயங்கரமான
நிலைமையை எதிர்கொண்டமைக்கும் தமிழ் புலிகளே முழுப்
பொறுப்பு என நம்புகின்றார்.
பாடசாலை ஆசிரியர் அந்தளவுக்கு ஒரு தீவிர
இனவாதி அல்ல. அவர் சரோஜினியையும் சுந்தரத்தையும் தனது
வீட்டுக்கு கொண்டு வரும் அளவுக்கு மன உறுதி கொண்டவர்.
தமிழ் சிறுபான்மையினரை ஒழித்துக்கட்டும்படி அழைப்பு விடுக்கும்
கிராமவாசிகளை அவர் எதிர்க்கின்றார். ஒரு காட்சியில் அவர் துட்டகை
முனு(1) மன்னனை பற்றிக் குறிப்பிடுவதோடு தமிழர்களை ஒழித்துக் கட்டும்படி
அழைப்பு விடுக்கும் எவரும் ஒரு பாசிஸ்ட் என தனது வகுப்பறையிலும்
குறிப்பிடுகின்றார்.
ஆனால் இந்த மனிதாபிமான நோக்கும் இந்த
இரண்டு பெண்களுக்கும் இடையேயான இறுக்கமான சினேகிதமும்
திரைப்படம் அடிநாதமாக கொண்டுள்ள பின்வரும் செய்திக்கு சீனிப்பாணி
பூசுகின்றது: சிங்கள-தமிழ் விரோதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்
தனமான நடவடிக்கைகளால் சிருஷ்டிக்கப்பட்டது; இலங்கை
இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு நியாயமான யுத்தத்தில்
ஈடுபட்டுள்ளதோடு அது தமிழர், சிங்களவர் ஐக்கியத்துக்கான
நிலைமைகளை எப்படியும் சிருஷ்டிக்கும்.
இலங்கை கல்வி அமைச்சர் சரோஜாவை
பாராட்டியுள்ளதோடு அனைத்து பாடசாலை மாணவர்களும்
அதைப் பார்க்க வேண்டும் எனவும் பிரகடனம் செய்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த ஆதரவு காரணமாக திரையிடப்பட்டு ஆறுமாதங்களின்
பின்னரும் இத்திரைப்படம் இலங்கை படமாளிகைகளில் தொடர்ந்து
ஓடுவது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முரணான விதத்தில் ஒரு சிங்கள கிராமவாசி
மீது யுத்தம் ஏற்படுத்தும் தாக்கங்களை கலைப் புஷ்டியான முறையில்
சித்தரித்துக் காட்டும் பிரசன்ன வித்தானகேயின் 'புரஹந்த கலுவர'
(பெளர்ணமி தின மரணம்) தடை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம்
இத்திரைப்படம் ஆயுதப் படைகளின் ஆட்திரட்டலுக்கு கெடுதி
விளைவிப்பதாக நம்புகின்றது. ஆளும் வர்க்க பிரமுகர்களுக்கு திசாநாயக்கவின்
திரைப்படத்தையிட்டு அந்தளவுக்கு அக்கறை கிடையாது.
குறிப்பு: 1.
இலங்கையின் புராதான வரலாற்று நூலான மஹாவம்சம்
கி.மு.101-7 வரை ஆட்சி செய்த சிங்கள மன்னனான துட்டகைமுனு தமிழ்
மன்னனான எல்லாளனையும் ஆயிரக்கணக்கான தமிழர்களையும்
கொன்று, சிங்களவர்களையும் பெளத்த மதத்தையும் காப்பாற்றியதாக
குறிப்பிடுகின்றது. இம்மோதுதல் பண்பைப் பொறுத்தமட்டில்
இனரீதியற்றதாகவும் அரச வம்ச மோதுதலாகவும் இருந்த
போதும் அது இலங்கையின் உத்தியோகபூர்வமான பாடசாலை
பாடவிதானத்தின் ஒரு பாகமாகஉள்ளது.
|