World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா :இந்தியா

The kidnapping of an actor puts the spotlight on India's bitter regional politics

நடிகர் கடத்தல் இந்தியாவின் கசப்பான பிராந்தியவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

By Ram Kumar and Arun Kumar
11 September 2000

Back to screen version

பிராந்திய நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது சகாக்கள் மூவரும் கடத்தல்காரனும் கொள்ளையனுமான வீரப்பனால் கடத்தப்பட்டது இந்திய செய்தித்தாள்களில் பிரதான விஷயமாக இருந்து வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு தென்னிந்திய மாநிலங்களின் அரசாங்கங்கள் வீரப்பனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. வீரப்பன் இதற்காக கணிசமான தொகையை விரும்புவதுடன் வரிசையான அரசியல் கோரிக்கைகளையும் கூட வைத்துள்ளான்.

ஆள் கடத்தல் இந்திய அரசியலின் வட்டார மற்றும் பண்பை, ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தங்களது போட்டியாளர்களைக் காவுகொடுத்தாவது தங்களது மொழிக்குழுவின் நலன்களை வலியுறுத்தும் பண்பை அதிகமாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கன்னட நடிகர் இராஜ்குமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருப்பதுடன் இலட்சக்கணக்கானோரின் கனவு நாயகனும், தமிழ் எதிர்ப்பு உணர்வுகளுக்கு கர்நாடகாவில் நன்கு பிரபலம் ஆனவர். வீரப்பன் தமிழர்களின் பாதுகாவலனாக தம்மைக் காட்டிக் கொள்ள முனைவதுடன் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆயுதம் தாங்கிய தமிழ் பிரிவினைவாதக் குழுக்களின் உறுப்பினர்களை விடுவிப்பது உள்பட வரிசையான தமிழ் ஆதரவுக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளான்.

பிராந்திய கட்சிகளால் ஊதிப் பெருக்கப்பட்ட பிராந்திய அரசியல் சூழலின் உயர் அழுத்தத்தில், ஜீலை 30ல் ராஜ்குமார் கடத்தலானது, உள்ளூர் செய்திச்சாதனங்களில் கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரங்களை ஏற்படுத்தும் ``தமிழர்கள் மற்றும் கன்னடர்களுக்கு இடையிலான யுத்தமாக`` சித்தரிக்கப்பட்டது. ராஜ்குமாரின் ரசிகர்கள் மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் மற்றும் ஏனைய பகுதிகளில் தமிழ் செய்தித்தாள் நிறுவனங்களையும் மற்றும் தமிழரின் சொத்துக்களையும் தாக்கி சேதப்படுத்தினார்கள். ஒரு மாதத்துக்கும் மேலாக கர்நாடகாவிலுள்ள கல்வி நிலையங்களும் திரைப்பட தொழிற்துறையும் மூடப்பட்டுள்ளன.

தூதுவர் பத்திரிகையாளர் கோபால் மூலம் வீரப்பனுடனான பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுதலை செய்வது ஒருகட்டத்தில், மாநில அரசாங்கங்களால் முன்மொழியப் பட்ட சிறை வைக்கப்பட்டிருப்போரை விடுவித்தல் செப்டம்பர் மூன்றாம் தேதி இந்திய உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தடுக்கப்பட்டது. கர்நாடகா மாநில அரசாங்கத்தால் வீரப்பனின் 30 சகாக்களின் விடுவிப்பு முயற்சியை காலவரையற்று தடைசெய்வதற்கான நீதிமன்ற முடிவின் கடுமையான தொனியானது, ஆளும் வர்க்கத்தின் சில பகுதிகள் இந்தியா எங்கும் நடக்கவிருக்கும் விளைவை எண்ணி தெளிவாக அக்கறை கொண்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது.

மூன்று நடுவர் மன்ற குழுவுக்கு தலைமைதாங்கும் நீதிபதி எஸ்.பி. பரூச்சா (S.P.Bharucha) பின்வருமாறு குறிப்பிட்டார். ``அவனை (வீரப்பனை) சமாளிக்கக்கூடிய மற்றவர்களுக்கு வழிவிட்டு தற்போதைய அரசாங்கம் வெளியேறவேண்டும் கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? நடக்கப் போகிற நிகழ்ச்சி இதுதான். நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று இப்போது கூறுகிறீர்கள். உங்களால் முடியாது என்றால், யாரால் செய்ய முடியுமோ அவர்களுக்கு வழிவிடுங்கள்``

காட்டுக் கொள்ளையனான வீரப்பனையும் ``கொடிய`` குற்றங்களைச் செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிற அவனது கூட்டாளிகளையும் கைது செய்வதற்கு முயற்சி எடுக்காமைக்கு கர்நாடகா அரசாங்கத்தின் பங்களிப்பில் ``அலட்சியம்`` இருந்ததாக நீதிபதி குறிப்பிட்டார். வீரப்பனின் சகாக்களை விடுவிப்பது ``அலட்சியத்தின்மேல் அலட்சியம் குவிவதாக`` இருக்கும் என்றும் ``நாம் இதற்கான ஆட்கள் இல்லை`` என்றும் நீதிபதி குறிப்பிட்டார். நீதிபதியின் இந்த தீர்வு முடிவு வீரப்பனின் மற்றொரு கோரிக்கையான, தமிழ்நாட்டின் சிறைகளில் உள்ள ஐந்து தமிழ் பிரிவினைவாதிகளை விடுவிப்பதில் தமிழ்நாடு அரசாங்கத்தையும் கூட தடுக்கிறது.

இந்த உச்சநீதிமன்ற ஆணையானது, ஓய்வு பெற்ற பொலீஸ் துணை கண்காணிப்பாளர் அப்துல் கரீம், ஆகஸ்டு 19ல் மைசூர் தனி நீதிபதி கர்நாடக அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு உடன்பட்டு முடிவு எடுத்ததை எதிர்த்து மனுச்செய்ததன் பேரில் வழங்கப்பட்டது. கர்நாடகாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள், போலீசு துணை ஆய்வாளர் ஷகீல் அகமது மற்றும் முன்னாள் போலீஸ் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணா ஆகியோரை ஆகஸ்டு 1992ல் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்ததுடன் இந்தியாவின் கொடூரமான தடா (பயங்கரவாதம் மற்றும் சீர்குலைத்தல் தடுப்புச்சட்டம்) சட்டத்தின்கீழ் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இச்சட்டம் இவர்களை விசாரணை இல்லாமல் நீண்டகாலத்திற்கு தடுத்து வைக்கவும் நீதிமன்ற விசாரணை செய்யவும் வழிவகை செய்கிறது.

இந்து பத்திரிகை செப்டம்பர் 4ல் தலையங்கத்தில் ``பிளாக் மெயிலுக்கு அனுமதித்துக் கொண்டிருக்கும் அதே வேளை சட்டத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் நீதியின் இலட்சியங்களைக் கைவிடவும்`` மாநில அரசாங்கங்கள் முயற்சிப்பதாக விமர்சித்துள்ளது. ``தமிழ்நாடு அரசாங்கமும் கர்நாடகா அரசாங்கமும் வீரப்பனைப் பிடிக்க உறுதியான நடவடிக்கைகளைக் காட்டியிருந்தால் இத்தகைய கேள்விகள் கூட கேட்கப்பட்டிருக்காது. உண்மையான துயரம் என்னவெனில், முனைப்பில்லாத அரசியல் மற்றும் நிர்வாக முயற்சி கொள்ளையனையும் அவனது சிறிய மற்றும் ஒப்பீட்டளவில் பலவீனமான ஆயுதங்களைக் கொண்ட கும்பலையும் பல ஆண்டுகளாக பிடிக்கவியலாத திறமையின்மையை எப்படி விளைவித்துள்ளது என்பதுதான்``.

எவ்வாறாயினும் இவ்விஷயம் தெளிவாகவே ஒரு வெடிப்புத்தன்மையை உடையது. கர்நாடகா சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ்சால்வே விவரிக்கையில், ராஜ்குமார் கடத்தலுக்கு அரசாங்கத்தின் அணுகுமுறையானது ஒரு மனிதனின் சுதந்திரம் பற்றிய பிரச்சனை அல்ல மாறாக கன்னட மொழிபேசும் சமுதாயத்துடன் நடிகரின் தொடர்பு பற்றிய மிக உணர்வுபூர்வமான விஷயம் சம்பந்தப்பட்டது என்று குறிப்பிட்டார். எந்த வகையிலாவது நடிகர் பாதிக்கப்பட்டால் அங்கு அமைதியின்மை ஏற்படும் என்று எச்சரித்தார். தமிழ்நாட்டில் அரசின் அரசியல்வாதிகள்கூட ``நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதில் தோல்வி ஏற்பட்டால் கர்நாடமாநிலத்தில் வாழும் தமிழ்மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்`` என்று எச்சரித்தனர்.

இரு அரசுகளிலும் உள்ள அரசியல் வாதிகள் உருவாக்கியுள்ள வட்டார குறுகிய பதட்டநிலைகள் இப்போது வீரப்பனால் தனது சொந்த காரணங்களுக்காக சுரண்டப்பட்டு வருகிறது. அவன் ஒரு தந்தம் மற்றும் சந்தனக் கடத்தல்காரன். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் உள்ள காடுகளில் தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருபவன். ஒரு மதிப்பீட்டின்படி அவன் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள யானைத்தந்தத்தையும் நூறுகோடிரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளையும் கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவனது கும்பல் ஏற்கனவே பல ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தாலும், அரசியல் கோரிக்கைகள் கடும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதலாவது ஆள் கடத்தல் சம்பவம் அண்மையில் நடந்ததுதான்.

வீரப்பன் தமிழ் தேசிய விடுதலை இராணுவம் (TNLA) மற்றும் தமிழ்த்தேசிய மறுமலர்ச்சிப் படை (TNRF) எனும் இரு ஆயுதக்குழுக்களுடன் தொடர்புவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வியக்கங்கள் மாவோயிசம் மற்றும் தமிழ் பிரிவினைவாதம் ஆகிய கலவையை அடிப்படையாகக் கொண்டவை. டி.என்.எல்.ஏ இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ்நாட்டின் ``விடுதலைக்காகவும் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைகளுக்கு ஆதரவும் அளித்துவருகிறது. வீரப்பனின் கோரிக்கைகளுள் தமிழ்நாட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து டி.என்.எல்.ஏ உறுப்பினர்களை விடுவிக்கக் கோருவதும் ஒன்று.

அவன், தடா சட்டத்தின் கீழ் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 121 பேரை நிபந்தனையில்லாமல் விடுவிப்பதற்கும் கோரிக்கை விடுத்துள்ளான். அவர்களுள் 51 பேர் மைசூர் நடுவண்சிறையில் விசாரணை ஏதும் இன்றி ஏழு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றனர். 1990களில் வீரப்பனைப்பிடிப்பதற்கு அனுப்பப்பட்ட (STF) சிறப்பு படையில் உள்ள போலீசாரால் கற்பழிக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் உட்பட ஏனைய கோரிக்கைகளும் உள்ளன. இந்த போலீஸ் நடவடிக்கைகள் மிகக் கேவலமானவை. தேசிய மனித உரிமைக் குழுவின் விசாரணையில் போலீஸ் அதிகாரிகள் கொடுமை இழைத்துள்ளதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வீரப்பன் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு கூலி உயர்வுக்கும் கர்நாடகா அரசாங்கம் காவேரி நதியிலிருந்து கூடுதல் தண்ணீரை தமிழ் விவசாயிகளுக்கு திறந்துவிடுவதற்கும் கூட கோரிக்கை விடுத்துள்ளான். காவிரி நதிநீர்ப்பிரச்சினையானது, இரு மாநிலங்களிலும் பாயும் காவிரி ஆற்று நீரைப் பயன்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் கர்நாடகா அரசுக்கும் இடையில் கசப்பான மோதல்களும் நீண்டகால தகராறும் உள்ள பிரச்சினையாகும். 1991ல் கர்நாடகாவில் காவிரிப் பிரச்சினையால் பற்றி எரிந்த வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவன் கோரிக்கை விடுத்துள்ளான்.

செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்ட கருத்துக்களில், வீரப்பன் குறிப்பிட்டதாவது: ``நான் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகோடி (60 மில்லியன்) மக்களுக்காகப் போராடுகிறேன்.`` அவன் தன்னை மேலோட்டமாக தமிழ்நாட்டின் சேகுவாராவாகக் காட்டிக் கொள்கிறான். மேலும் அவன் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பயிற்று மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும், கர்நாடகாவில் தமிழுக்கு இரண்டாம் மொழி அந்தஸ்து கொடுக்கப்படவேண்டும் மற்றும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் திருவள்ளுவருக்கு சிலைவைக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறான்.

வீரப்பனின் உண்மையான நோக்கங்கள் பெரிதும் ஐயத்திற்கிடமாக உள்ளன. கடந்த காலத்தில் அவன் ஆள்கடத்தலை பணத்திற்காகவும் தனக்கும் தனது கூட்டாளிகளுக்கும் பொதுமன்னிப்புக்காகவும் கோரிக்கை விடுப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கிறான். உத்திரப் பிரதேச மாநிலத்தில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் கொள்ளையர்களின் ராணி என்றழைக்கப்படும் பூலான் தேவி, கொள்ளைக்காரியிலிருந்து பிரபல அரசியல் வாதியாக ஆன மாற்றம் இப்போது அவனது எண்ணத்தில் உள்ளது எண்ணிப் பார்க்கக்கூடியதாக உள்ளது.

மாவோயிசக் குழுக்களின் ஆதரவுடனும் உதவியுடனும் அவனது தமிழ் இனவாத முன்னெடுப்பு, பல ஆண்டுகளாக வட்டாரக் கட்சிகள் ஊட்டி வளர்த்த குறுகிய மொழி வேறுபாடுகள் மத்தியில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டிலும் பதட்டங்களை அதிகப்படுத்தியுள்ளது. பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பு போலீசாரால் பிடிபடாது வீரப்பன் திறமையாக தப்பித்துவருவது தமிழ்நாட்டு அரசியல்வதிகளின் மறைமுக ஆதரவின் விளைவுதான் என்று கர்நாடகாவில் எண்ணப்படுகிறது.

முன்னான் (STF) சிறப்புப்படை போலீஸ் கமாண்டர், ஃபிரண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்தபேட்டியில் குறிப்பிட்டதாவது:

``தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் குறிப்பாக வன்னிய சமுதாயத்தைத் தழுவி நிலைகொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகள் அவனது சமுதாயத்தின் செல்வாக்குகளைப் பயன்படுத்தி அவற்றை அரசியல் ஆதாயமாக ஆக்குவதற்கு, வீரப்பனுக்கு ஒருவகை வழிபடும் அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர்.``

தற்போது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் வீரப்பனுடனான தங்களது பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைத்துவருவதுடன் அவனது உடனடிக் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்திருந்தன. ஆனால் உச்சநீதி மன்றத்தின் முடிவு அவர்களின் திட்டங்களைத் துண்டித்ததுடன் அரசியல் நெருக்கடிகளையும் ஆழப்படுத்தி உள்ளன. கடந்தவாரத்தின் இறுதியில் இரு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூடி இணைந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், பிரதமர் வாஜ்பாயி அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னர் அவரைச் சந்தித்து முட்டுக்கட்டையை உடைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் தங்களது எண்ணத்தை அறிவித்தனர்.

முழு நிகழ்ச்சியும் இந்திய அரசியல் முழுமையையும் கீழறுத்துள்ளது. இந்திய மக்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு திராணியற்று, கட்சிகளும் அரசியல்வாதிகளும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக பிற்போக்கு வகுப்பு பிராந்திய மற்றும் சாதிப்பிரச்சினைகளை ஊக்குவித்து முன்னிலைப்படுத்துவதை அதிகமாய் மேற்கொண்டு வருகின்றனர். காவிரி நதிநீர்ப்பிரச்சினையில், எடுத்துக்காட்டாக, சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ(எம்) ஸ்டாலினிச கட்சிகளின் மாநிலக் கிளைகள் உட்பட, பிரதானகட்சிகள் கர்நாடகா - தமிழ்நாடு அடிப்படையில் எதிரெதிராக அணிவகுத்தன.

ராஜ்குமார் கடத்தல் பிரச்சினை தீர்க்கப்படாதவரை, கன்னட - தமிழ் பதட்டங்கள் அதிகமாக ஊக்குவிக்கப்படும். சனிக்கிழமை இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டது: ``ஒருமித்த கூக்குரல் கொண்ட எல்லா கன்னட அமைப்புக்களும் `வேகமாக சிலவற்றைச்` செய்வதற்கு இரு அரசாங்கங்களையும் அழுத்தம் கொடுப்பதற்கான திட்டங்களை தயாரித்து வருகின்றன.`` தமிழ்நாட்டில் இவர்களது எதிர் அணியினர் இதே கோரிக்கைகளைச் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved