World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை Attempts to intimidate a WSWS correspondent in Sri Lanka உலக சோசலிச வலைத் தள நிருபரை பயமுறுத்த முயற்சி By our reporter கடந்த மார்ச் மாதத்தில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான ஒரு கட்டுரை சம்பந்தமாக, சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவரும் அதன் நிருபராகவும் கடமையாற்றும் ஒருவரை பயமுறுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டது தொடர்பான தகவல் உடப்பில் -இலங்கையின் வட மேற்குப் பகுதியில் தொலைவில் உள்ள ஒரு தமிழ் மீனவக் கிராமம்- இருந்து கிடைத்துள்ளது. பிரதேசத்தில் வாழும் மீனவர்களின் படுமோசமான சேவை நிலைமைகள், சுரண்டல்களின் கொடுமையான நிலைமைகள் தொடர்பாக ஒரு தொடர் கட்டுரைகளை ஆர்.எம்.தயாரத்ன எழுதியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலி (LTTE) ஆதரவாளர் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பலர் பற்றியும் அக் கட்டுரையில் விபரிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 19ம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த உள்ளூர் குண்டர்களால் தயாரத்ன தாக்கப்பட்டார். தயாரத்ன நடந்து செல்ல முயற்சித்த போது, "இந்தக் கிராமத்தைப் பற்றி செய்திகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவது நீ தான்" என கூச்சலிட்ட குண்டர்கள், பல தடவை அவரை தாக்கியுள்ளனர். உடனடியாக அங்கு கூடியவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தினர். "இந்த மனிதனை நீ ஏன் தாக்க வேண்டும்? எங்களுடைய நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் அம்பலப்படுத்தியவர் அவரே." என அவர்கள் சத்தமிட்டார்கள். ஏனையவர்கள் தயாரத்னவை வைத்திய சிகிச்சைக்காக முச்சக்கர வண்டியில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் பணிக்கு உதவினார்கள். தயாரத்னவின் காயங்களுக்கு முந்தளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டது. தன்னைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரி அவர் முந்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். ஆனால் கிராமத்தில் உள்ள சோ.ச.க. அங்கத்தவர்களை பயமுறுத்திய அந்த நபருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறினர். இந்தத் தாக்குதலுக்கு ஒரு கிழமைக்கு முன்னதாக, சோ.ச.க. அங்கத்தவர் ஒருவரை நள்ளிரவில் அவரது வீட்டில் இருந்து வெளியில் இழுத்துச் சென்ற மூன்று பேர் அடங்கிய ஒரு பொலிஸ் குழு, மீன்பிடி வலை ஒன்றுக்கு தீ மூட்டிய குற்றத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு உடல் ரீதியல் தாக்கி பயமுறுத்தினர். பொலிஸ் நிலையத்தில் அவரை தரையில் உட்கார வைத்த பொலிசார்: "சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களை இங்கு அழைத்து வருவது நீ தானே? பொலிஸ் நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகைகளுக்கு தகவல் கொடுப்பது நீ இல்லையா? நீ இந்தக் கிராமத்தில் வெகுகாலம் இருக்க மாட்டாய்" என ஏசி பயமுறுத்தியுள்ளனர். கடும் பலாத்காரத்தின் மூலம் தகவல்கள் பெற பொலிசாரால் முடியாது பேயிற்று. வலைச் சொந்தக்காரர் ஏனைய சோ.ச.க. அங்கத்தவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் பயமுறுத்தத் தொடங்கினார். ஆனால் சொந்தக்காரருக்கோ அல்லது பொலிசாருக்கோ கிராமத்தவர்களின் கணிசமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று. இந்த சம்பவங்கள் பொலிசாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக நம்பப்படும் வலைச் சொந்தக்காரரின் திட்டமாக இருக்கலாம் என சில கிராமத்தவர் தெரிவித்தனர். உடப்பு இலங்கையின் வட மேற்கு பகுதியில் தனிமைப்பட்ட நீண்டு குறுகிய ஒரு தொடர் பிரதேசமாக அமைந்திருப்பதோடு, நீண்ட உப்பு நீர் ஓடைகளால் பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கப்படுகிறது. பாதைகள் மிகவும் கரடுமுரடானவை. 4,000 க்கு மேற்பட்ட மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் மிக மோசமான அடிப்படை வசதிகளுடன் ஓலைக் குடிசைகளில் வாழ்கின்றனர். சுத்தமான குடிநீர் பெற பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் செல்லவேண்டும். கரையோரப் பகுதிகளில் மீன்பிடிக் கைத்தொழில் மீனவர்களை ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் பிரபுத்துவப் பாணியில் சுரண்டல்களை மேற்கொள்ளும் வள்ளங்களுக்கும் வலைகளுக்கும் சொந்தக்காரரான சிறிய கும்பலாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. உள்ளூர் கிராமத்தவர்களும் பொலிசாரினதும் பாதுகாப்புப் படையினரதும் கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். "தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" கைது செய்யப்பட்டு பொய் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக மிக நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பலர் பற்றியும் உ.சோ.வ.த. கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. 1996 ஜூலையில் "விடுதலைப் புலி சந்தேக நபர்" எனும் பேரில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒரு வருடகாலம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு, இறுதியில் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுதலை செய்யப்பட்ட, சோ.ச.க. அங்கத்தவரான செல்லையா இராஜ்குமாரின் விடுதலைக்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு அனைத்துலக பிரச்சாரத்தை தொடுத்திருந்தது. மீனவர்கள் முகம் கொடுக்கும் நிலைமைகள் தொடர்பாக அம்பலப்படுத்துவது, இலங்கை ஊடகங்களில் மிகவும் அருமையாகக் காணப்படும் ஒரு நிலையில், அனைத்துலக ஊடகமான உ.சோ.வ.த.வின் மூலம் கட்டுரைகள் வெளியிடப்படுவது உள்ளூர் ஆளும் கும்பல்களை தூண்டிவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் முதலாவதாக இந்தப் பிரச்சினை கவனத்தில் எடுக்கப்பட்டது. இது கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில பேட்டிகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுக் குழு அலுவலர்களின் கவனத்துக்கு வந்த போதேயாகும். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் அனுதாபிகளாக அவர்கள் தம்மைக் காட்டிக் கொண்ட போதிலும், உண்மையில் குற்றப் புலனாய்வுத் துறையினர் கட்டுரையை அவமானம் செய்வதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதிலேயே ஈடுபட்டிருந்தனர். அவர்களின் நடவடிக்கை தொடர்பாக சோ.ச.க. மேற்கொள்ளும் அம்பலப்படுத்தல்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வதற்காக, பொலிசார் உள்ளூர் பிரமுகர்களுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளதாக தெரிகின்றது.
Copyright
1998-2000 |