World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் : இலங்கை Why has the Sri Lankan government opposed plans to stop ballot rigging? இலங்கை அரசாங்கம் வாக்குச்சீட்டு மோசடிகளை தடை செய்யும் திட்டங்களை எதிர்ப்பது ஏன்? By Panini Wijesiriwardane, செப்டம்பர் 8ம் திகதி இரவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தைச் (CID) சேர்ந்த பொலிசார் கொழும்பு நகரின் மையத்தில் உள்ள ஒரு அச்சகத்தை முற்றுகையிட்டு சோதனையிட்டனர். தேர்தலுடன் சம்பந்தப்பட்ட "சந்தேகத்துக்கிடமான அச்சடிப்பு வேலைகள்" பற்றிய இரகசிய தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக இவர்கள் கூறிக்கொண்டனர். ஏழுபேர் கைது செய்யப்பட்டதோடு 100,000 ஸ்டிக்கர்களும் (Stickers) அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. மறுநாள் தேர்தல் ஆணையாளர் பொலிசாருடன் தொடர்பு கொண்டு அந்த ஸ்டிக்கர்கள் உத்தியோகபூர்வமான தேர்தல் கடமைகளுக்கு உரிமையென்றும் -செல்லுபடியான அட்டைகளை மோசடி அட்டைகளில் இருந்து இனங்காண்பதற்காக ஒவ்வொரு வாக்காளர் அட்டையிலும் ஒட்டுவதற்கு தயார் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களும், ஸ்டிக்கர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் விடயம் இத்துடன் முற்றுப்பெற்றுவிடவில்லை. செப்டம்பர் 10ம் திகதி ஜனாதிபதி செயலகம் ஆணையாளரின் நடவடிக்கைகளையிட்டு சந்தேகம் தெரிவிக்கும் விதத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அத்தோடு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரை இந்த விவகாரம் சம்பந்தமாக "மேலும் விசாரணை நடத்தும்படி" உத்தரவிட்டார். இந்த அறிக்கை அரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட 'டெயிலி நியூஸ்' பத்திரிகையின் (செப்டம்பர் 11) முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்ததோடு தேர்தல் ஆணையாளர் திசாநாயகாவின் நடவடிக்கை தேர்தல் மோசடிகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு இருந்து கொண்டுள்ளதாக மறைமுகமாகக் கூறியும் இருந்தது. மறுநாள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பி. திசாநாயக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் ஆணையாளரை கண்டனம் செய்ததோடு ஆணையாளர் "தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அறிவிக்காததற்காக" சாடியதோடு அவர் ஒரு "தனிப்பட்ட முடிவை" எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கள் ஆணையாளருக்கு விடுக்கப்பட்ட ஒரு மெல்லிய அச்சுறுத்தலாக அர்த்தப்படுத்தப்பட்டது: அரசாங்கப் பாதையில் நடைபோடு அல்லது இராஜினாமாச் செய். ஒரு ஒழுங்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கையில் அதையிட்டு ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அறிவிக்கவேண்டும் என்ற சட்டக் கடப்பாடுகள் எதுவும் தேர்தல் ஆணையாளருக்கு இல்லை. ஆணையாளரின் நடவடிக்கைகளையிட்டு கருத்து தெரிவிக்க கடந்த மாதம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட இளைஞர் விவகார, சமுர்தி அமைச்சர் பொறுக்கி எடுக்கப்பட்டது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாயந்த ஒன்றாகும். அவர் அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் விரகியாளர்களில் ஒருவர். அத்தோடு தனது அமைச்சின் மூலம் நாட்டின் சமுர்தி (சுபீட்சம்) திட்டத்தையும் கட்டுப்பாட்டினுள் கொண்டுள்ளார். இந்த சமுர்தி திட்டம் பேரளவில் ஏழைகளுக்கு கைகொடுக்கவென ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த அமைச்சர் முன்னர் இடம்பெற்ற தேர்தல்களில் வாக்குச் சீட்டு கையாடல் நடவடிக்க்ைகளில் பெருமளவில் சம்பந்தப்பட்ட ஒருவராக பரந்த அளவில் நம்பப்படுவர். இன்னொரு அதிர்ச்சி திருப்பமாக நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையாளரை விசாரணைக்காக அழைத்தது. இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி ஆளும் கூட்டரசாங்க வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரிலேயே இது இடம்பெற்றது. அரசாங்க வெகுஜனத் தொடர்புச் சாதன இணைப்பாளரான ஆனந்த குணதிலகவின் படி ஆணையாளர் வாக்காளர்களின் மனித உரிமைகளை மீறிவிட்டார். அவரின்படி "வாக்காளர் அறியாத விதத்தில் முன்னர் பரீட்சிக்கப்படாத ஒரு இரகசிய திட்டத்தை கையாள அவருக்கு எதுவித அதிகாரமோ அல்லது உரிமையோ கிடையாது." என்றார். அரசாங்கம் இனவாத சீட்டையும் இழுத்து அடிக்கத் தயங்கவில்லை. அச்சகத்தின் உரிமையாளர் ஒரு தமிழராக இருந்த்தன் காரணமாக அவருக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனவும் காட்ட முயன்றது. டெயிலி நியூஸ் பத்திரிகை கூறுவதாவது: "மனுதாரர் கருப்பையா விஜேதாசனதும் எஸ்.பரமசிவத்தினதும் (ஸ்ரிக்கர்களை அச்சடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள்) அரசியல் தொடர்புகளையிட்டும் பயங்கரவாதிகளுடன் அல்லது சட்டவிரோத அமைப்புகளுடன் ஏதாவது தொடர்பு உண்டா என்பதையிட்டு ஒரு அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்." கடந்த டிசம்பரில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையாளர் திடீரென "வைத்திய காரணங்களின்" பேரில் விடுமுறையில் சென்றார். இதன் மூலம் அரசாங்கம் தேர்தல் திணைக்களத்துக்கு வெளியே இருந்து ஒருவரை பதில் ஆணையாளராக நியமனம் செய்யவும் தேர்தலை நடாத்தவும் வாய்ப்பளித்தது. அச்சமயத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும் அரசாங்கம் தேர்தல் ஆணையாளரை விடுமுறையில் செல்ல நெருக்குவதாக குற்றம் சாட்டின. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதி தேர்தல் ஆணையாளரை நியமனம் செய்ய முடியும். ஆனால் ஆனால் அவரை பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் அரசாங்கம் பதவி நீக்கம் செய்ய முடியாது. தேர்தல் ஆணையாளர் திசாநாயக்க இத்தடவை நெருக்குவாரங்களுக்கு அடிபணிந்து போக மறுத்துவிட்டார். அவர் கட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் நிஜமான வாக்குச் சீட்டு அட்டைகளை தேர்தல் அதிகாரிகள் இனங்கண்டு கொள்வதற்காகவே தாம் ஸ்ரிக்கர்களை அச்சடிக்க தீர்மானம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சிப் பிரதிநிதிகளின் மகாநாட்டில் ஒரு பொதுஜன முன்னணி அமைச்சரின் விமர்சனத்துக்குள்ளான தேர்தல் ஆணையாளர், தமது நடவடிக்கைகள் பிழையானதாக கருதுமிடத்து அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனப் பதில் கொடுத்தார். தேர்தல் மோசடிகளை தடை செய்யும் பொருட்டு தாம் இன்னும் பல நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை தமது வீட்டுக்கு அருகாமையில் தாக்குதல் கோஷ்டிகளின் சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் பற்றி தகவல் கிடைத்திருப்பதாகவும் தமக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் அவர் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருந்தார். பெரும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட 9 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையாளர் மீதான அரசாங்கத்தின் நெருக்குவாரங்களை எதிர்த்துள்ளன. எவ்வாறெனினும் யூ.என்.பி. தனது நீண்ட கால ஆட்சியின் போது வாக்கு மோசடிகளுக்கும் காடைத்தனங்களுக்கும் பேர்போனது. கடந்த இரண்டு தசாப்தங்களாக தேர்தல் மோசடிகள் தீவிரமாக வளர்ச்சி கண்டுள்ளன. யூ.என்.பி. பொதுஜன முன்னணி அரசாங்கங்கள் தமது சொந்த நலன்களுக்காக அரச எந்திரத்தின் மீதான பிடியை பயன்படுத்திக் கொண்டுள்ளன. தேர்தல் ஆணையாளருக்கு எதிரான பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதனது அவஸ்த்தை நிலையை வெளிக்காட்டிக்கொண்டுள்ளது. அது பரந்தளவிலான வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியினாலும் நாட்டின் நீண்டுவரும் உள்நாட்டு யுத்தத்தினாலும் உருவான கசப்புணர்வுகளுக்கும் முகம் கொடுத்துள்ளது. வாக்குகளை சூறையாடும் பொருட்டு அரசாங்கம் சமீபத்தில் அரசாங்கத் துறை ஊழியர்களுக்கு ஒரு சிறிய சம்பள உயர்வை வழங்கியதோடு வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் ஒரு திட்டத்தையும் தீடீரென அறிமுகம் செய்தது. தேர்தல் ஆணையாளரின் தரப்பிலான ஒரு சிறிய சுதந்திரத்தையும் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்பதை பொதுஜன முன்னணி காட்டிக் கொண்டுள்ளது. அரசாங்கத்துடன் ஒரு அப்பட்டமான தகராரில் ஈடுபடும் ஆணையாளரின் விருப்பமானது ஆளும் கூட்டரசாங்கம் குழிபறிந்து போவதற்கான ஒரு சமிக்கையை காட்டிக் கொண்டுள்ளது. அரச இயந்திரத்தின் உயர் மட்டங்கள் அரசியல் சூறாவளியின் திசையை மோப்பம் பிடித்துள்ளதையும் ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பகுதியினர் தொடர்ந்தும் அரசாங்கத்தை ஆதரிப்பதாக இல்லை என்பதையும் இது காட்டிக் கொண்டுள்ளது.
Copyright
1998-2000 |