WSWS: செய்திகள் & ஆய்வுகள் :மத்திய
கிழக்கு
Israel's
war measures and the legacy of Zionism
இஸ்ரேலின்
யுத்த நடவடிக்கைகளும் சியோனிசத்தின்
பாரம்பரியமும்
By Chris Marsden and
David North
16 October 2000
Use
this versio to print
இரண்டரை வார
காலப் போருக்கு முடிவுகட்டுவதை
இலக்காகக் கொண்ட ஒரு அவசர
உச்சி மாநாட்டில் பங்குகொள்ளும்
பொருட்டு எகிப்தின் ஷாம் எல் ஷீக்கில்
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் வந்திறங்கும்
போது இஸ்ரேலிய ஆட்சியாளர்களின்
கொள்கைகள் அதிகரித்த விதத்தில் எந்த
ஒரு அரசியல் யதார்த்த உணர்வையும்
இழந்துவிட்ட ஒரு இராணுவ போட்டா
போட்டியை ஒத்திருக்கிறது. இதற்கான
பொறுப்பை பாலஸ்தீன விடுதலை இயக்கத்
தலைவர் யசீர் அரபாத்தின் தலையில்
போடுவதற்கு இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்காகப்
பரிந்து பேசுபவர்கள் செய்யும் பெரும்
முயற்சிகளுக்கு மத்தியிலும், கடந்த இரண்டு
வார கால இரத்தக் களரிக்கு இட்டுச்
சென்ற சூழ்நிலைகள் இஸ்ரேல் அரசின்
உள்ளேயான வலதுசாரி சக்திகளினால்
தூண்டிவிடப்பட்ட வன்முறையால்
உருவானது என்பது தெளிவு. இதற்கு
பிரதமர் இகுட் பராக் அடிபணிந்து
போனார்.
3000 பாலஸ்தீனியர்களை
காயப்படுத்தி, சுமார் 100 பேரை பலி
கொண்ட இஸ்ரேலிய ஆயுதப் படைகளின்
நடவடிக்கையும் பாலஸ்தீனிய கிராமங்களுள்
ஏவுகணைகளை செலுத்திய ஹெலிகொப்டர்களின்
பாவனையும் தனது தலையை இழந்துவிட்ட
ஒரு அரசியல் தலைமையின்
அடையாளமாகும். அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் உள்ள இஸ்ரேலின் கூட்டாளிகளது
தலைகள் கூட ஆச்சரியத்தினால் அதிர்ந்து
போயின. அரபாத்தின் தலைமையகத்தின்
மீதான இஸ்ரேல் ஹெலிகொப்டரின் தாக்குதலை
"பைத்தியகாரத்தனமானது"
என 'பினான்சியல் டைம்ஸ்' ஆசிரியத்
தலையங்கம் பண்பாக்கம் செய்தது.
இது உலக ஏகாதிபத்தியத்தின் உயர் வட்டாரங்களில்
நிலவிய அதிர்ச்சி உணர்வை எடுத்துக் காட்டியது.
அரசியலில் பைத்தியக்காரத்தனமாகத்
தோன்றுவதும் கூட இறுதியில் ஒரு திட்டவட்டமான
புறநிலை தாக்கத்தினால் தூண்டிவிடப்படுகிறது.
மத்திய கிழக்கில் சம்பவங்கள்
இன்றைய திசையில் பயணம் செய்வது
ஏன் என்பதை புரிந்து கொள்வதற்கு
ஒருவர் என்றும்போல் வரலாற்று
பின்னணியுடன் கூடிய ஆய்வினை ஆரம்பித்தாக
வேண்டும்.
மேற்கு நாட்டு
அரசாங்கங்களும் வெகுஜனத் தொடர்பு
சாதனங்களும் பொதுவில் இன்று வெடித்துள்ள
போராட்டத்தை அடியோடு ஒரு
இஸ்ரேல்- பாலஸ்தீனிய மோதுதலாக அல்லது
இஸ்ரேலுக்கும் ஒற்றைக்கல் சிற்பமான
அரபு ஆட்சி குழுவுக்கும்
இடையேயான ஒரு போராட்டமாக
சித்தரிக்கின்றன. ஆனால் இராணுவ அடக்குமுறைக்கு
எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள
பாலஸ்தீனியர்கள் மீது வார்த்தைகளை அள்ளி
வீசி முழங்கும் ஆசிரியத் தலையங்கங்கள்
இன்றைய இஸ்ரேலிய சமுதாயத்தின்
நிலைமையையும் அதனை உருவாக்கிய
வரலாற்று நிலைமைகளையும்
கனதியான முறையில் ஆய்வு செய்தால்
அது பெரிதும் நன்மை பயப்பதாக விளங்கும்.
இஸ்ரேலிய அரசின்
தன்மை
இன்று இஸ்ரேல் வெளிக்கக்குவது,
ஆழமாக வேரூன்றிக் கொண்டுள்ள
-சியோனிச அரசினுள்ளான அரசியல், சித்தாந்த-
முரண்பாடுகளின் உற்பத்தியாகும்.
இஸ்ரேல் ஸ்தாபிதம் செய்யப்பட்டு
அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.
இதனது அஸ்த்திவாரம் 1930பதுகளிலும்
1940பதுகளிலும் 5 மில்லியன் ஐரோப்பிய
யூதர்களை பலி கொண்ட நாஸி மனித
படுகொலைகளில் வேரூன்றிக் கொண்டுள்ளது.
இதுவும் கூட ஐரோப்பியத்
தொழிலாளர் வர்க்கம் பாசிசத்தினால்
தோற்கடிக்கப்பட்டதன் பயங்கர
விளைவுகளின் பெறுபேறாக ஏற்பட்டதே.
சோவியத் யூனியனதும் கம்யூனிஸ்ட் அகிலத்தினதும்
ஸ்டாலினிச சீரழிவும், உலக சோசலிசத்துக்கான
போராட்டம் சோவியத் ஸடாலினிச
அதிகாரத்துவத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்டமையும்
பாசிசம் வெற்றிகண்டமைக்கு அரசியல்
ரீதியில் பொறுப்பாகும். மேலும் கிரேம்ளினின்
அடக்குமுறை விதிமுறைகளும் அதனது
கொள்கையின் யூதர் எதிர்ப்பு தாக்கங்களும்
யூதர் புத்திஜீவிகள், தொழிலாளரிடையே
ஒரு சோசலிச பதிலீட்டின் மீதான நம்பிக்கையை
அவமானம் செய்வதில் தீர்க்கமான
பாத்திரத்தை வகித்தது.
1920பதுகளில் ரூஷ்யப்
புரட்சியினால் கவரப்பட்ட பாலஸ்தீனத்தின்
யூதர்களும் அராபியர்களும் பாலஸ்தீன
கம்யூனிஸ்ட் கட்சியை( PCP)
அமைக்க ஒன்றுபட்டதோடு
தலையெடுத்து வரும் யூத முதலாளி வர்க்கத்துக்கும்
அராபிய நிலமானித்துவத்துக்கும்
எதிராக சோசலிசத்துக்கான ஒரு
ஒன்றுபட்ட போராட்டத்துக்காகவும்
வாதிட்டது. இரண்டாம் உலக யுத்தம்
பூராவும் யூத, அராபிய தொழிலாளர்கள்
தமது பொது வெளிநாட்டு ஒடுக்குமுறையாளர்களுக்கு
எதிராக ஒன்றிணைந்து போராடினர்.
இது பல கூட்டு தொழிலாளர் அமைப்புக்களை
உருவாக்க துணை நின்றது. பாலஸ்தீன கம்யூனிஸ்ட்
கட்சி சியோனிசத்தை எதிர்த்து ஒரு வெற்றிகரமான
சவாலை வளர்ச்சி காணச் செய்திருக்க
முடியும். ஆனால் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின்
பிளவுபடுத்தும் கொள்கைகளும்
ஏகாதிபத்திய வல்லரசுகளுடனான
அதனது சூழ்ச்சிகளும் அதனது ஆரோக்கியமான
அபிவிருத்தியை தடுத்துவிட்டது. இரண்டாம்
உலக யுத்தம் முடிவடைவதற்கு முன்னர்
பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சி இறுதியாக
இனக்குழு அடிப்படையில் இரண்டாகப்
பிளவுண்டு போயிற்று.
சியோனிசம் ஒரு
தனியான யூத அரசை அடையும் பொருட்டான
தனது பிரச்சாரத்தினுள் ஐரோப்பிய
யூதவாதத்தின் சீரழிவினால் சிருஷ்டிக்கப்பட்ட
மனத்தளர்ச்சியையும் நம்பிக்கையீனத்தையும்
ஆற்றுப்படுத்த செயற்பட்டது. இது
1948ல் பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட
பாலஸ்தீனத்தை கூறு போட்டதன் மூலம்
சாதிக்கப்பட்டது.
யூதர்களுக்கு எதிராக
நாசிஸத்தினால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களையிட்டு
வெறுப்படைந்து போயிருந்த உலகம்
பூராவும் இருந்த இலட்சோப இலட்சம்
மக்கள் இஸ்ரேல் ஸ்தாபிதம் செய்யப்படுவதை
அனுதாபத்துடன் நோக்கினர். இது ஒரு
புதியதும் முற்போக்கானதும் ஐரோப்பாவிலும்
உலகிலும் மிகவும் படுபயங்கரமாக
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
சமர்ப்பணமாக அமைக்கப்பட்ட ஒரு
ஜனநாயக, மனித சமத்துவத்தின் அடிப்படையிலான
இல்லம் எனவும் வரவேற்கப்பட்டது.
ஆனால் சியோனிச
அரசு அத்தகைய வாக்குறுதிக்களை
ஒரு போதும் இட்டு நிரப்பியதே
கிடையாது. இஸ்ரேல் அரபு குடியானவர்களின்
நிலங்களை அவர்களிடம் இருந்து ஒரு
இராணுவ போராட்டத்தின் மூலம்
பறிமுதல் செய்வதன் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டது.
முறைமுறையான பயங்கரங்கள், அச்சுறுத்தல்களில்
ஆரம்பித்து அது 3/4 மில்லியன் பாலஸ்தீனிய
அராபியர்களை அவர்களின் வசிப்பிடங்களில்
இருந்து கலைத்தது. அராபிய முஸ்லீம்கள்
மீதான யூதர்களின் இனக்குழு, மத
நலன்களை திணிப்பதே இஸ்ரேல் அரசின்
ஸ்தாபிதத்தின் அடிப்படைக் கொள்கையாக
விளங்கியது. இந்த ஜனநாயக விரோத,
அடக்குமுறை நிலைப்பாட்டுக்கு
எதிராக எந்த ஒரு விமர்சனமும்
இஸ்ரேலின் சியோனிச ஆட்சியாளர்களாலும்
அவர்களின் அடிவருடிகளாலும் யூத எதிர்ப்பின்
ஒரு வெளிப்பாடாகக் கண்டனம் செய்யப்பட்டது.
இஸ்ரேலின் ஸ்தாபிதத்தை
நியாயப்படுத்தும் பொருட்டு
சியோனிச தலைவர்கள் 40 வருடங்களாக
ஒரு பாலஸ்தீனிய மக்களின் உயிர்வாழ்க்கையையே
அங்கீகரிக்க மறுத்தனர். அவர்களின்
மைய சுலோகமாக விளங்கியது
இதுதான்: "மக்கள் இல்லாத நிலம்,
நிலம் இல்லாத மக்களுக்கு". உத்தியோகபூர்வமான
பிரகடனங்களில் இஸ்ரேலாக மாறிய நிலம்,
யூதக் குடியேற்றவாசிகள் வருவதற்கு
முன்னர் பெருமளவுக்கு மனிதர் வாசம்
செய்யாத இடமாக கிடந்ததாகக்
காட்டப்பட்டுள்ளது.
ஆதலால் மிகவும்
தொடக்க காலத்தில் இருந்தே
இஸ்ரேல் அதனது அயலவர்களான
அரபு மக்களுடன் யுத்தத்தில் ஈடுபட்டு
இருந்ததோடு ஒரு நிஜமான
ஜனநாயக சமுதாயத்தை அபிவிருத்தி செய்ய
அடிப்படையில் இலாயக்கற்றுப் போயிற்று.
இஸ்ரேலில் அரசுக்கும் யூத மதத்துக்கும்
இடையே பிளவு இருந்ததே கிடையாது.
ஆதலால் குடியுரிமை கருத்துப்பாடு
சகலருக்கும் சமவுரிமையை வழங்கவில்லை.
இஸ்ரேல் விரைவாக ஒரு காவல்படை
அரசாக (Garrison
State) வளர்ச்சி
கண்டது. இஸ்ரேலில் இராணுவ இயந்திரத்தை
கட்டியெழுப்ப ஆரம்பத்தில் செலவிட்ட
பிரமாண்டமான நிதி மானியங்களுக்குப்
பதிலாக அமெரிக்கா இந்த வாகனத்தின்
மூலம் மத்திய கிழக்கில் தனது
நலன்களை பிரயோகித்தது.
1967ல் அரபு-இஸ்ரேல்
யுத்தம்
தவிர்க்க முடியாத விதத்தில்
உத்தியோகபூர்வமான பிரச்சாரத்துக்கும்
சமூக, அரசியல் யதார்த்தத்துக்கும்
இடையே இருந்து வந்த முரண்பாடுகள்
வெளியேறச் செய்தன. 1967ம் ஆண்டின்
அரபு-இஸ்ரேல் யுத்தம் இஸ்ரேலிய
பரிணாமத்தில் ஒரு திருப்புமுனையாக விளங்கியது.
இன்று இடம்பெற்று வரும் நிகழ்வுகளில்
அதன் தாக்கங்களை இன்னமும் உணர்ந்து
கொள்ளக் கூடியதாக உள்ளது. இஸ்ரேல்
தான் தனது எல்லைகளை பெரிதும்
பலம் வாய்ந்த அயலவர்களிடமிருந்து
கட்டிக் காக்கும் வாழ்க்கைப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக்
கூறிக் கொள்கிறது.
ஆனால் இது ஜோர்டானுக்கும்
சிரியாவுக்கும் எகிப்துக்கும் சொந்தமான
-ஜோர்டான் நதியின் மேற்குக் கரை,
கோலான் குன்றுகள், காஸா- நிலங்களை
ஆக்கிரமித்துக் கொண்டதன் மூலம் தீர்க்கமான
முறையில் அம்பலமாக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட
மேற்கு கரையிலும் காஸாவிலும் யூதக்
குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குடியேற்றங்கள் ஒரு தற்காலிகமான
பாதுகாப்பு தடைச் சுவர் என்ற உத்தியோகபூர்வமான
பம்மாத்தின் கீழேயே இடம்பெற்றது.
ஆனால் வலதுசாரி எதிர்க் கட்சியான
லீக்குட் கட்சி இவை இஸ்ரேலுடன்
ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனக்
கோரியது. இன்று இவர்கள் இந்த நிலைப்பாட்டையே
கொண்டுள்ளனர். இதன் மூலம் இந்த
சியோனிச அரசு ஒரு உக்கிரமான விஸ்தரிப்புவாதமானது
என்பதை அப்பட்டமான விதத்தில் காட்டிக்
கொண்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட
பிராந்தியங்களினுள் தீவிர வலதுசாரி
சியோனிச குடியேற்றவாசிகளை குடியமர்த்தும்
அவசியம் இஸ்ரேலிய சமுதாயத்திலும்
அரசியலிலும் ஒரு நிலையான தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் விஸ்தரிப்புக்கு
போலியான பைபிளுடன் தொடர்புபட்ட
நியாயப்படுத்தல்களை பிரச்சாரம்
செய்வதன் மூலம் ஊக்கமளிக்கப்பட்ட
அதிதீவிர பழமைவாத குழுக்களுடன் சேர்ந்து
அவை அரசியல், இராணுவ அமைப்பினுள்
அரைப் பாசிச போக்குகள்
தோன்றுவதற்கான சமூக, அரசியல்
பாசிசப் பாறைகளாகின.
குடியேற்றவாசிகள்
ஒரு போர்க்குணமும் வாய்வீச்சும்
கொண்ட கன்னையை கொண்டுள்ளது.
இவர்களின் சமூக நலன்கள், ஆக்கிரமிக்கப்பட்ட
பிராந்தியங்களில் இஸ்ரேலிய ஆட்சியுடனும்
நாட்டின் இராணுவ இயந்திரத்தின்
அழியாத அம்சத்துடனும் நெருக்கமாகப்
பிணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தட்டினர்
முதலில் அமெரிக்காவில் இருந்தும்
பின்னர் ரூஷ்யாவில் இருந்தும் வந்த
குடியமர்ந்தோரின் அலை வீச்சினால்
திணிக்கப்பட்டவர்கள். இவர்கள்
அடியோடு சோசலிச எதிர்ப்பு,
சோவினிச முன்னோக்கின் அடிப்படையில்
இஸ்ரேலுக்குள் ஈர்க்கப்பட்டவர்கள்.
இது 1967ல் இருந்து முன்னர் ஒரு
போதும் இல்லாத அளவுக்கு அப்பட்டமாகவே
திட்டமிடப்பட்டது.
கடந்த இரண்டு
தசாப்தங்களாக இஸ்ரேலினுள் சமூக,
அரசியல் பதட்டங்கள் செல்வந்தர்களுக்கும்
வறியவர்களுக்கும் இடையே அகன்று வந்த
இடைவெளி காரணமாக வளர்ச்சி கண்டது.
வேலைன்மையின் வளர்ச்சியும் சம்பளத்தின்
வீழ்ச்சியும் இதற்கு எண்ணெய் வார்த்தன.
எவ்வளவுக்கு எவ்வளவு பெரும்பான்மையான
மக்கள் உத்தியோகபூர்வமான அரசியலில்
இருந்து அன்னியப்படுத்தப்பட்டார்களோ
அவ்வளவுக்கு அரசு வலதுசாரி குடியேற்றவாசிகளிலும்
தீவிர தேசியவாத மதச்சார்பு வெறியிலும்
சார்ந்து கொள்வது அதிகரித்தது. இவர்களின்
ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியும்
அரசாங்கம் அமைக்க முடியாது. ஒரு
பேச்சுவார்த்தை மூலமான தீர்வு
இஸ்ரேலின் தொடர்ச்சியான உயிர்வாழ்வுக்கு
அத்தியாவசியமானது என இஸ்ரேலிய
முதலாளி வர்க்கமும் வாஷிங்டனும் கண்ட
போதிலும் ஒரு தசாப்தத்துக்கு
மேலாக பாலஸ்தீனியர்களுடன் அத்தகைய
ஒரு தீர்வை எட்டும் சகல முயற்சிகளுக்கும்
குறுக்கே அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
பாலஸ்தீனிய வெகுஜனங்கள்
ஒரு போதும் நிரந்தரமான அகதி அந்தஸ்துடன்
இணங்கிப் போனார்களில்லை. 1967 யுத்தத்தின்
பின்னர் தோன்றிய பாலஸ்தீனிய விடுதலை
இயக்கம் ( PLO)
அவர்களது ஆபத்தான நிலைமைக்கும்
அவர்களது சொந்த தாயகத்துக்கான
கோரிக்கைக்கும் ஒரு நியாயமான தீர்வைக்
காண போராடுவதன் அவசியத்தை
பிரதிபலித்தது. சியோனிஸ்டுகள் பீ.எல்.ஓ.
வை பயங்கரவாதிகள் எனவும் வெளிநாட்டு
சக்திகளின் ஏஜன்டுகள் எனவும் கண்டனம்
செய்ததோடு பாலஸ்தீனிய மக்களின் இருப்பை
அங்கீகரிக்கவும் அடியோடு மறுத்துவிட்டது.
இஸ்ரேலின் இராணுவ
நடவடிக்கைகள் பகைமை அராபிய சக்திகளிடமிருந்து
தனது எல்லைகளை காப்பதற்கான
அவசியத்தினால் நிர்ணயம் செய்யப்பட்டது
என்ற தொடர்ச்சியான வாதம் எகிப்துக்கும்
சிரியாவுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும்
எதிராக 1973 அக்டோபரில் அது அடைந்த
தீர்க்கமான வெற்றி மூலம் ஈடுசெய்ய
முடியாத விதத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.
அந்த யுத்தத்தின் பெறுபேறானது
இஸ்ரேல் அந்த பிராந்தியத்தில் சர்ச்சைக்கு
இடமற்ற ஒரு இராணுவ சக்தி என்பதை
எடுத்துக் காட்டியது. அன்று தொடக்கம்
இஸ்ரேலின் சகல யுத்தங்களும்
நேரடியாக பாலஸ்தீனியர்களுக்கு
எதிராக இலக்கு வைக்கப்பட்டது.
1987ல் வெடித்த
இன்ரிபாடா (Intifada)
இயக்கத்தினால் சியோனிச
மூலோபாயத்தின் நடுமையம் சிதறடிக்கப்பட்டது.
இந்த புரட்சிகர இயக்க கருவை
இஸ்ரேல் சலுகைகளையும் இறுதியாக
ஏதோ ஒரு வடிவிலான பாலஸ்தீன
தாயகத்தையும் வழங்குவதாக வாக்குறுதி
அளிப்பதன் மூலம் பீ.எல்.ஓ. விடம் இருந்து
ஆதரவை பெறாமலும் நசுக்க
முடியாது போய்விட்டது.
இன்ரிபாடா ஏற்படுத்திய
புரட்சிகர அச்சுறுத்தல்
பூகோளரீதியான பொருளாதார மாற்றங்களுடன்
சேர்ந்து இடம்பெற்றது. இது
பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும்
தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல்
அரசை ஆயுத பலத்தின் மூலம் தக்கவைத்துக்
கொள்ளும் கருத்தை ஆட்டம் காணச்
செய்தது. இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்
ஆக்கிரமிப்புடன் இணைந்த விதத்திலான
பொருளாதார, சமூக இழப்புக்களுக்கு
நீண்டகாலமாக முகம் கொடுத்து வந்துள்ளது.
அரபு உலகிலும் வேறு இடங்களிலும்
இஸ்ரேல் இராணுவச் செலவீனங்கள்
காரணமாகவும் கீழ்ப்பட்ட அந்தஸ்து
காரணமாகவும் இந்த இழப்புக்களை
ஈட்டிக் கொள்ள நேரிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட
பிராந்தியங்களிலான முட்டுச் சந்து
அரபு-இஸ்ரேலிய பொருளாதார பிணைப்புக்களின்
வளர்ச்சியை கட்டிபடச் செய்தது. கூட்டுத்தாபனங்கள்
பண்டங்களின் உற்பத்தியை தேசிய எல்லைகளைக்
கடந்து நடாத்துவதும் உற்பத்தி
பொருட்களை உலக சந்தையில் விற்பதும்
அவசியமாக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில்
இந்த பிணைப்புக்கள் இஸ்ரேலிய
பொருளாதார அபிவிருத்திக்கு
அவசியமாகக் கொள்ளப்பட்டது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின்
பின்னர் அமெரிக்கா முன்னர் சோவியத்
சார்பாக விளங்கிய அரபு ஆட்சியாளர்களுடன்
புதிய உறவுகளை ஸ்தாபிதம் செய்வதில்
ஈடுபட்டது. எண்ணெய் வளம் கொண்ட
பிராந்தியங்களில் தனது மேலாதிக்கத்தை
ஊர்ஜிதம் செய்யவும் ஸ்திரப்பாட்டை
கட்டிக் காக்கவுமே அமெரிக்க
இதைச் செய்தது. இந்தக் கொள்கையின்
ஆரம்பப் பெறுபேறுகள், 1991ல்
அமெரிக்கா ஈராக்குக்கு எதிராக
நடாத்திய யுத்தத்துக்கு பல அரபு ஆட்சியாளர்கள்
வழங்கிய மெளன ஆதரவு மூலம் பெறப்பட்டது.
மத்திய கிழக்கில் குளிர்
யுத்தத்தின் முடிவுக்கு பிந்திய கால
யதார்த்தத்துக்கு ஏற்ற விதத்தில்
இஸ்ரேல் தன்னை மீள அணி சேர்த்து
கொள்ளாத நிலையிலும் அயலவர்களுடன்
இணக்கத்துக்கு வராத நிலையிலும்
வாஷிங்டன் அதனது வரவு செலவு திட்டத்தை
கழித்து எழுதுவதை திட்டவட்டமற்ற
முறையில் தொடரப் போவதில்லை
என சந்தேகத்துக்கு இடமின்றி கூறிவைத்தது.
இதனால் இஸ்ரேல் ஆட்சியாளர்கள்
தமது அரபு சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை
ஏற்படுத்தும் அமெரிக்க தரகு பேச்சுவார்த்தைகளில்
பங்கு கொள்ளும் அவசியத்துக்கும்
பாலஸ்தீனியர்களுக்கு சில வரையறுக்கப்பட்ட
வடிவிலான அங்கீகாரங்களையும் வழங்கும்
நிலைமைக்கும் முகம் கொடுத்தனர்.
பிழைத்துப் போன ஏழு
ஆண்டுகள்
எவ்வாறெனினும் 1993ம்
ஆண்டின் ஒஸ்லோ தொடக்கம் இவ்வாண்டின்
காம் டேவிட் வரை எந்த ஒரு
இஸ்ரேலிய அரசாங்கமும் பாலஸ்தீனிய பிரச்சினைக்கு
ஒரு நிஜமான ஜனநாயகத் தீர்வுக்கு
வருவதற்கு தயாராகவோ அல்லது
இலாயக்கானதாகவோ இருக்கவில்லை.
எந்த ஒரு சலுகையும் -அவை எவ்வளவுதான்
வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும்-
அவை பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்ட
போதெல்லாம் இஸ்ரேலிய அரசினுள்ளும்
சமுதாயத்தினுள்ளும் ஆழமான அரசியல்
ஆதாள பாதாளங்களை உருவாக்கியது.
ஏழு ஆண்டுகால பேச்சுவார்த்தைகள்,
இஸ்ரேலின் உள்ளேயான வலதுசாரி எதிர்க்கட்சியின்
குமுறல்களால் இடைவிடாது விரக்தி கண்டன.
ஒவ்வொரு இராஜதந்திர முயற்சியும்
பாலஸ்தீன வெகுஜனங்களை சியோனிச ஆட்சியாளர்களின்
அவசியங்களுடனும் கோரிக்கைகளுடனும்
பிணைத்துப் போடும் அவசியத்துடனும்
அவர்களின் சொந்த அடிப்படை
ஜனநாயக உரிமைகளை மறுப்பதை ஒப்புக்கொள்ளச்
செய்வதுடனும் ஸ்தம்பித்துப் போயிற்று.
எந்த ஒரு கணிசமான அளவிலான
சலுகைகளின் பேரிலான எதிர்ப்பின் ஆழமும்
ஏன் இஸ்ரேலின் பேரம் பேசல் நிலைப்பாடு
பெருமளவுக்கு அரபாத் பாலஸ்தீனிய மக்களின்
அடக்குமுறைகளுக்கான நேரடி
பொறுப்பை வகிக்கின்றார் என்ற
கோரிக்கையை எதிர்கொள்வதை
பெருமளவுக்கு உள்ளடக்கிக் கொண்டுள்ளதை
விளக்குகின்றது. இறுதியில் இக்கோரிக்கைகள்
பரந்த அளவிலான பாலஸ்தீனிய மக்கள்
பகுதியினரிடையே அரபாத்தை செல்வாக்கிழக்கச்
செய்ய மட்டுமே சேவகம் செய்துள்ளது.
சியோனிஸ்டுகளின் அரசியல்
ஆதிக்கம் கொண்ட வலுதுசாரி பிரமுகர்
பகுதியினர், பாலஸ்தீனியர்களுக்கு வழங்கும்
எந்தவொரு சலுகையையும் சதிக்குச்
சமமானதாக கருதுவதாக
இடைவிடாது காட்டி வந்துள்ளனர்.
ஒஸ்லோ உடன்படிக்கைக்கு எதிரான
அவர்களின் முதலாவது தாக்குதல்,
1995 நவம்பரில் அந்த உடன்படிக்கையில்
கைச்சாத்திட்ட தொழிற்கட்சி பிரதமர்
இட்ஷாக ரொபின் தீவிர மதவாதியினால்
கொலை செய்யப்பட்ட சம்பவமாக
வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து
வந்த தேர்தல்களில் பெஞ்சமின் நெத்தன்யாகு
தலைமையிலான லிகுட் கட்சி அராபிய
எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதன்
மூலம் ஆட்சிக்கு வந்ததோடு,
இஸ்ரேலிய யூதர்களிடையேயும் அச்சத்தை
ஏற்படுத்தியது. நெத்தன்யாகு அடுத்து
வந்த மூன்று ஆண்டுகளிலும் பீ.எல்.ஓ.வுடனான
எந்த ஒரு இறுதி தீர்வையும் தகர்க்க
முயற்சித்து வந்தது
கடந்த ஆண்டு மே
மாதத்தில் இகுட் பராக்கின் அமோக
தேர்தல் வெற்றியானது இஸ்ரேலிய
பொதுமக்களிடையே வளர்ச்சி கண்டுவந்த
சமாதானத்துக்கான உணர்வுகளை
எடுத்துக் காட்டியது. ஆனால் அவரின்
அரசாங்கம் மதச்சார்பு கட்சிகளில்
சார்ந்து வந்ததாலும் காட்டிக்
கொடுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை
தவிர்க்க அங்கலாய்த்து வந்ததாலும்
ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அது
செயலிழந்து போயிற்று.
ஜெருசலத்தை ஒரு திறந்த
நகரம் ஆக்காமலும் ஒரு கூட்டு
இறைமை வடிவை ஸ்தாபிதம் செய்யாமலும்
இலட்சோப லட்சம் பாலஸ்தீனிய
அகதிகள் நாடு திரும்ப அனுமதியாமலும்
பாலஸ்தீனியர்களுடன் எந்த ஒரு இறுதி தீர்வும்
சாத்தியப்பட்டு வராது. ஆரம்பத்தில்
இருந்தே பராக் ஸ்தம்பித்துப்
போனதோடு இதில் எது தொடர்பாகவும்
செயற்பட முடியவில்லை. அத்தோடு
சனத்தொகையில் 20 சதவீதத்தினரான
அரபு-இஸ்ரேலிய கட்சிகளின் ஆதரவை
தனது அரசாங்கத்தினுள் கொணர்வதன்
மூலம் பாரம்பரியமான கூட்டரசாங்க
பங்காளிகளில் இருந்து அன்னியப்பட்டுப்
போகும் ஆபத்தை உருவாக்கவும்
அவர் விரும்பவில்லை. அதற்கு பதிலாக
லிகுட் கட்சியின் தலைமையிலும் அமெரிக்காவின்
ஆதரவுடனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO)
ஒரு மரண தண்டனையாக விளங்கியிருக்க
கூடிய ஆலோசனைகளை அரபாத் ஏற்றுக்
கொள்ள வேண்டும் என அவர்
கோரினார்.
காம்ப்டேவிட் பேச்சுவார்த்தைகள்
வரை பாலஸ்தீனியர்களுக்கு எந்த ஒரு
கணிசமான அளவு சலுகைகளையும் வழங்க
இஸ்ரேல் தயங்கியமை அதை இஸ்ரேலின்
முழு வரலாற்றினாலும் -சிறப்பாக 1967க்கு
பிந்திய காலப்பகுதியில்- ஊட்டி வளர்க்கப்பட்ட
வலதுசாரி தீவிரவாத சக்திகளின் திட்டமிட்ட
நாசகார சக்திகளின் பணயக் கைதியாக்கியது.
இந்தத் தட்டினரின் நெருக்குவாரத்தின்
கீழ் பராக்கின் அரசாங்கம் அவரது
சொந்தக் கட்சிக்காரர்களின் கட்சி
தாவுதல்களாலும் அத்தோடு
வலதுசாரி கூட்டரசாங்க பங்காளிகளின்
பிளவுகளாலும் சிதறுண்டு போயிற்று.
பராக் சமாதானத்தை ஏற்படுத்துவார்
என எதிர்பார்த்தவர்களிடையே அவநம்பிக்கை
வளர்ச்சி கண்டது.
அமெரிக்க ஆட்சியாளர்கள்
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வந்ததொரு நிலைமையில்
லிகுட் கட்சியினர் ஒரு தீர்வுக்கான
தருணம் பக்குவம் கண்டுவிட்டதாக தீர்மானம்
செய்தனர். லிகுட் தலைவரான எரியல்
ஷரோன் கடும் இராணுவக் காவலின்
மத்தியில் டெம்பிள் மவுண்டுக்கு ஆத்திரமூட்டும்
பயணத்தை மேற்கொண்டதோடு,
இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்களைக்
கொல்வதும் ஆரம்பமாகியது.
ஷரொனின் ஆத்திரமூட்டும்
நடவடிக்கையை கண்டனம் செய்ய
பராக் மறுத்தார். அதற்குப் பதிலாக
வன்முறையை தூண்டியதற்காக அரபாத்தை
குற்றம் சாட்டினார். பராக்
அரசாங்கமும் லிகுட் கட்சியும் கலகம்
ஷரொனின் நடவடிக்கையினால் ஏற்பட்டதாகக்
காட்டலாம் எனக் கணித்துக் கொண்டிருந்தன.
அதனை தாம் அரபாத்துக்கு எதிரான
ஒரு ஆயுதமாக கையாளலாம் என
அவர்கள் நினைத்தனர். அவர்கள் கூட்டாக
ஆத்திரத்தினதும் எதிர்ப்பினதும் பலத்தை
தப்புக் கணக்குப் போட்டனர்.
ஆனால் பராக்கின் பிரதிபலிப்புக்கள்
தனது பலத்தை முற்றாக லிகுட் கட்சியுடன்
சேர்த்து வீசுவதாக விளங்கியது.
ஒரு புதிய முன்நோக்கு
பராக்
இரவோடிரவாக சமாதான தூதுவன்
என்ற வெளிப்பகட்டில் இருந்து யுத்த
வெறியனாக மாற்றம் கண்டமை,
இஸ்ரேல் அரசியல் அமைப்பின் எந்தவொரு
பகுதியினரும் சியோனிச அரசின் ஆரம்பகாலம்
தொட்டு அதன் குணாம்சமாக விளங்கிய
பொலிஸ் அடக்குமுறை, இராணுவ
வன்முறை விதிமுறைகளை தூக்கி வீச
இலாயக்கற்றவர்கள் என்பதைக் காட்டிக்
கொண்டுள்ளது. அத்தோடு மேற்கத்தைய
வல்லரசுகளின் இராஜதந்திர தரகர்
வேலைகளும் சியோனிச அட்டூழியங்களுக்கு
முடிவுகட்டுவதற்கான எந்தெவொரு
சாதனத்தையும் வழங்குவதாக இல்லை.
இனக்குழு, இனவாதம் அல்லது மதச்
சிறப்புரிமை வாதத்தை அடிப்படையாகக்
கொண்ட அரசுகளின் இருப்பை நிஜ
ஜனநாயகத்தின் இருப்புடன் ஒப்பிடுவது
சாத்தியமானது அல்ல. அத்தகைய ஒரு
அரசை இஸ்ரேலில் பராமரிக்க
ஏகாதிபத்தியம் முயலும் அதே சமயம்
பாலஸ்தீனியர்களுக்கு வரையறுக்கப்பட்ட
ஜனநாயக உரிமைகளை வழங்கும்படி
விடுத்த வேண்டுகோள்கள் பயனற்றுப்
போனது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சியோனிச தேசியவாத
முன்நோக்கின் அடிப்படையான பிற்போக்கு
குணாம்சம், அதற்குப் பதிலாக
அதனது பெரிதும் நிறைவு வெளிப்பாட்டை
(Finished expression)
பெற்றுள்ளது. "சமாதான
வழிமுறைகள்" எனப்படுவதன் ஒரு
தசாப்த காலத்தின் பின்னர் இஸ்ரேல்
சமீபகால வரலாற்றில் முன்னொரு
போதும் இல்லாத விதத்தில்
பாலஸ்தீனியர்களுடன் ஒரு முழு அளவிலான
யுத்தத்துக்கு நெருங்கியுள்ளது. இது முழு
மத்திய கிழக்கிலும் ஒரு தீப்பிளம்பை கக்கிவிடலாம்.
இஸ்ரேலிய சமுதாயம் சிதறுண்டு
போகின்றதும் அத்தோடு ஒரு சாத்தியமான
உள்நாட்டு யுத்தத்தின் அச்சுறுத்தலுக்கும்
உள்ளாகியுள்ளது.
சனத்தொகையில் ஐந்தில்
ஒரு பங்கினரான இஸ்ரேலிய அராபியர்கள்
முதல் தடவையாக பாலஸ்தீனியர்களுடன்
சேர்ந்து மோதுதலுக்குள் தள்ளப்படுவதற்கான
அறிகுறிகள் வளர்ச்சி கண்டு வருகின்றன.
இஸ்ரேலில் ஒரு பரம்பரையினர்
இரத்தக் களரிக்குள் மேலும் தள்ளப்படுவதை
எதிர்ப்பதற்கான பொறுப்பு
தொழிலாளர் இயக்கத்தையும்
ஜனநாயக உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களையும்,
சோசலிஸ்ட் புத்திஜீவிகளையும் சார்ந்தது.
அராபியர்களுடன் சமாதானம் செய்து
கொள்ள தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர்கள்
சகலரும் இதன் நலன்கள் சியோனிச
அரச இயந்திரத்துக்கோ அல்லது
இதற்கு வழிவகுத்த தேசியவாத சித்தாந்தங்களுக்கோ
ஆதரவு வழங்குவதுடன் ஓன்றிணைந்து
செல்ல முடியாது என்பதை இனங்கண்டாக
வேண்டும். கடந்த காலத்தில் இந்தத்
தட்டினர் என்னதான் நப்பாசைகளுக்கு
தோள் கொடுத்து இருந்தாலும்,
இஸ்ரேல் அரசு எந்தவொரு அடிப்படை
அம்சத்திலும் பழைய இன ஒடுக்குமுறை
தென்னாபிரிக்க ஆட்சியில் இருந்து
வேறுபட்டது அல்ல என்பதை நிரூபித்துள்ளது.
தெரிவானது வளைந்து,
ஈய்ந்து கொடுக்காத ஒன்றாகும்:
ஒன்றில் அரசியல் ஆரம்பிப்பு
ஷரோனையும் அவரைச் சார்ந்தோரையும்
முற்றிலும் சார்ந்ததோடு அவர்கள்
ஒரு இராணுவ பேரழிவையும் இரத்தம்
தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தையும்
தயார் செய்வர். அல்லது ஒரு
ஜனநாயக, மதச்சார்பற்ற
சோசலிச அடிப்படையில் ஒரு மத்திய
கிழக்கு ஐக்கிய சோசலிஸ்ட் அரசுகளை
ஏற்படுத்த யூதர்களையும் அராபியர்களையும்
ஐக்கியப்படுத்த வேண்டும். அதில்
சகல பிராந்தியங்களையும் சேர்ந்த
மக்கள் சமாதானமாக ஒன்றிணைந்து
வாழ முடியும்.
|