அவுஸ்திரேலியா
Sixty years after the assassination of Trotsky
The contemporary significance of Leon Trotsky's life and
work
லியொன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் அறுபது ஆண்டுகளின்
பின்னர்
லியொன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையினதும் ஆக்கங்களதும்
சமகால முக்கியத்துவம்
Public meeting in Sydney, Australia
21 October 2000
Use
this version to print
உலக சோசலிச வலைத் தளமும் அவுஸ்திரேலிய
சோசலிச சமத்துவக் கட்சியும் லியொன் ட்ரொட்ஸ்கியின்
படுகொலையின் 60வது ஆண்டு நிறைவை நினைவுகூர சிட்னியில் நடாத்தும்
பகிரங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உலக சோசலிச
வலைத் தள வாசகர்களை அழைக்கின்றது.
இந்த நினைவுதின விழாக்கள் கடந்த செப்டம்பரில்
லண்டனிலும் பேர்ளினிலும் நடைபெற்ற பெரிதும் வெற்றிகரமான பகிரங்கக்
கூட்டங்களை தொடர்ந்து இடம்பெறுவதோடு, உலக சோசலிச
வலைத் தளத்துக்கு உத்வேகமளிக்கும் அரசியல் வரலாற்றையும்
முன்நோக்கினையும் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு
ஒரு அரிய சந்தர்ப்பத்தையும் வழங்கும்.
இக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக உலக
சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவரும் (அமெரிக்க)
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட்
நோர்த் விளங்குவார். நோர்த், நான்காம் அகிலத்தின் முன்நோக்கு,
மார்க்சிசத்தின் வரலாறு, அடிப்படைக் கொள்கைகள் தொடர்பாக
உலகம் பூராவும் பரந்த அளவில் விரிவுரைகளை நடாத்தியுள்ளார்.
அவர் பின்வரும் நூல்களின் ஆசிரியராவார்:
*நாம் பேணும் மரபுரிமைகள்-
(Heritage We Defend -A contribution to
the history of the Fourth International) நான்காம்
அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு
*பெரெஸ்ரொய்கா எதிர் சோசலிசம் (Perestroika
Versus Socialism)
*ட்ரொட்ஸ்கிசம் எதிர் ஸ்ராலினிசம்
*ரஷ்ய புரட்சியை பாதுகாப்போம்
*யூத எதிர்ப்புவாதம், பாசிசம், மனிதபேரழிவு
*சமத்துவம், மனிதனின் உரிமைகள், சோசலிசத்தின்
பிறப்பு
*சோசலிசமும் வரலாற்று உண்மையும் அமெரிக்காவில்
அரசியல் சிந்தனையின் நெருக்கடியும்
1940 ஆகஸ்ட் 20ம் திகதி ட்ரொட்ஸ்கி மெக்சிக்கோவில்
உள்ள கொயோகான் ஓய்வு வாசஸ்தலத்தில் வைத்து ஒரு ஸ்ராலினிச
பொலிஸ் ஏஜன்டின் கோடரியால் மூளையில் தாக்கப்பட்டார். இந்தக்
காட்டுமிராண்டி நடவடிக்கையின் நோக்கம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையும்
1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சியில் தொழிலாளர் வர்க்கத்துக்கு
வழிகாட்டிய சோசலிச அனைத்துலகவாதத்தின் கொள்கைகள் காட்டிக்கொடுக்கப்படுவதையும்
மிகவும் உறுதியாக எதிர்த்த மார்க்சிச எதிர்ப்பாளர்களை ஒழித்துக்கட்டுவதாக
விளங்கியது.
ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு
முன்னைய நான்கு வருட காலங்களில் -முன்னணி போல்ஷிவிக்குகளை
விசாரணை செய்யும் கேடுகெட்ட மொஸ்கோ வழக்குகள்
தொடக்கம் -ஸ்டாலினும் அவரது கையாட்களும் ஒரு திட்டமிட்ட
பயங்கர பிரச்சாரத்தையும் சிறைவைப்புக்களையும் கொலைகளையும்
கட்டவிழ்த்து விட்டனர். ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஆட்சியை சுருட்டிக்கொள்வதை
எதிர்த்த சகல சோசலிஸ்ட் எதிர்ப்பாளர்களையும் நசுக்கித் தள்ளுவதற்கென்றே
இது திட்டமிடப்பட்டது. எவ்வாறெனினும் ட்ரொட்ஸ்கி உயிருடன்
வாழும்வரை லெனினின் போல்ஷிவிக் கட்சியின் அனைத்து இறுதி மிச்ச
சொச்சங்களை துடைத்துக் கட்டுவது முடியாது போயிற்று.
அவரது சமகாலத்தவர்களில் பெரிதும் தூரதிருஷ்டி
மிக்கபுரட்சிகர சிந்தனையாளரான ட்ரொட்ஸ்கி லெனினுடன் சேர்ந்து
ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவராகவும் சோவியத் செஞ்சேனையின்
ஸ்தாபகராகவும் விளங்கினார். இங்கே முதலில் சோவியத் ஆட்சியினதும்
அரச இயந்திரத்தினதும் அதிகாரத்துவ மயமாக்கத்தின் மூலம்
வளர்ச்சி கண்டுவரும் ஆபத்துக்களால் அக்டோபர் புரட்சி
முகம் கொடுத்துள்ள ஆபத்துக்களை இனங்கண்டார். அவர் உட்கட்சி
ஜனநாயகத்தினை காக்கவும் ஒரு அரசியல் அதிகரத்துவத்தினதும்
அதனது அரசியல் தலைவரான ஜோசப் ஸ்ராலினதும் ஆபத்தான
பொருளாதார, அரசியல் கொள்கைகளுக்கு எதிராகவும்
போராட்டத்தை தொடுப்பதன் மூலம் இதற்கு பதிலளித்தார்.
போல்ஷிவிக் கட்சியில் ஸ்ராலினிச சீர்கேடுகளை எதிர்கொள்ள
ட்ரொட்ஸ்கி இடது (மார்க்சிச) எதிர்ப்பு இயக்கத்தை [Left
(Marxist) opposition] அமைத்தார். அவர்
சார்பு ரீதியில் வசதி வாயப்புகள் படைத்த அதிகாரத்துவத்தின் வளர்ச்சியும்
உட்கட்சி ஜனநாயகம் அரிக்கப்பட்டு போவதும் சோவியத்
யூனியனின் உயிர்வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டுள்ளதாக எச்சரிக்கை
செய்தார். உலகளாவிய ரீதியில் சோசலிசம் வெற்றியீட்ட வேண்டுமானால்
அக்டோபர் புரட்சிக்கு இட்டுச் சென்ற சோசலிச கலாச்சாரத்தின்
உயிரும் சதையுமாக விளங்கிய சுதந்திர கலந்துரையாடலை
போஷித்து, வளர்க்கப்பட வேண்டியதாயிற்று.
"தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை" நிர்மாணிக்கும்
அதிகாரத்துவத்தின் கோரிக்கைகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி
பின்தங்கிய ரூஷ்யாவில் ஒரு தேசிய ரீதியான சுய அடக்கமான
"சோசலிச" அரசு முற்றிலும் நின்றுபிடிக்க மாட்டாது
என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார். லெனினைப் போலவே
ட்ரொட்ஸ்கியும் ரஷ்யப் புரட்சியை உலக சோசலிச புரட்சியின்
ஒரு ஆரம்பமாக மட்டுமே நோக்க முடியும் என நம்பினார்.
இதற்கு சகல சோசலிஸ்டுகளும் தமது சக்தியை அர்ப்பணிக்க வேண்டும்
என்றும் அவர் குறிப்பிட்டார். சோசலிசம், முதலாளித்துவத்தின் கீழ்
அபிவிருத்தி செய்யப்பட்ட பெரிதும் முன்னேற்றமான உற்பத்தி
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு உலகளாவிய ரீதியில் மட்டுமே
ஸ்தாபிதம் செய்யப்பட முடியும் என அவர் விளக்கினார்.
ட்ரொட்ஸ்கி 1920 பதுகளில் ஜேர்மனியிலும் சீனாவிலும்
பிரித்தானியாவிலும் இன்னும் பல இடங்களிலும் சோசலிச
தொழிலாளர் இயக்கத்துக்கு பெரும் தோல்விகளைக் கொணர்ந்த
ஸ்ராலினிச ஆட்சியாளர்களின் அனைத்துலக கொள்கைகளை எதிர்த்தார்.
இடது எதிர்ப்பு இயக்கம் (Left
opposition)
ஹிட்லரின் நாஸி கட்சியை எதிர்த்துப் போராட ஜேர்மன்
தொழிலாளர் இயக்கத்தின் ஒரு ஐக்கிய முன்னணிக்காக தீர்க்கமான
முறையில் போராடியது. எவ்வாறெனினும் ஸ்ராலினின் பிளவுபடுத்தும்
கொள்கைகள், 1933ல் பாசிசம் ஆட்சிக்கு வருவதை இடமளிக்கும்
வகையில் தொழிலாளர்களின் பரந்த பகுதியினர் மீது சீர்திருத்தவாத
சமூக ஜனநாயக கட்சி பிடியைக் கொண்டிருக்க துணைபோனது.
இச்சம்பவங்களில் இருந்து ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசக்
கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்புரட்சி முகாமுக்குள் திட்டவட்டமாக
காலடி வைத்துவிட்டன என்ற முடிவுக்கு வந்தார். இப்போது
அனைத்து சோசலிச சக்திகளையும் ஒரு புதிய உலக சோசலிசக்
கட்சியினுள் மீள அணிதிரட்டுவது அவசியமாகியுள்ளது. ட்ரொட்ஸ்கி தமது
வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை அந்தக் கட்சியான நான்காம்
அகிலத்தை ஸ்தாபிக்க அர்ப்பணம் செய்தார். அது 1938ல் ஸ்தாபிக்கப்பட்டது.
ட்ரொட்ஸ்கியின் சகல பிள்ளைகள் உட்பட பல்லாயிரக்
கணக்கான உயிர்களை பலி கொண்ட இந்த வீரம் செறிந்த
போராட்டத்தின் மூலமே புரட்சிகர மார்க்சிசத்தை ஒழித்துக்கட்டும்
ஸ்ராலினின் முயற்சிக்கு எதிராக அது பேணிக்காக்கப்பட்டது. ஆனால்
உலகம் சோவியத் யூனியனில் அதிகாரத்துவக் கடை கெட்ட ஆட்சியை
பலப்படுத்தும் முகமாக கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவிலான
விலை கொடுக்க நேரிட்டது. இரண்டாம் உலக யுத்தமும்
நாஸிச மனித பேரழிவும் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவத்துக்கு
முடிவு கட்டி, ஒரு புதிய சோசலிச உலகை சிருஷ்டிக்க தவறியதன்
மிகப் படுபயங்கரமான விளைவு மட்டுமே.
இந்தப் பகிரங்க கூட்டம் ட்ரொட்ஸ்கிசத்துக்கும்
ஸ்ராலினிசத்துக்கும் இடையேயான பிரமாண்டமான (Titanic)
போராட்டத்தின் சிறப்பு முக்கியத்துவத்தையும்
அதனது சமகால தாக்கங்களையும் விளக்கிக் காட்ட முயற்சிக்கும்.
புரட்சிகர மார்க்சிசம் ஸ்ராலினின் கரங்களால் கண்ட தோல்விகளின்
தாக்கத்தை புரிந்து கொள்ளாமல் ஒருவர் இருபதாம் நூற்றாண்டின்
வரலாற்றையும் இன்று வரையிலான அரசியல் நிகழ்வுகளின் தோற்றங்களையும்
உள்ளீர்த்துக் கொள்ள முடியாது.
இன்று ஸ்ராலினிச அதிகாரத்துவம் உலகம் பூராவும்
செல்வாக்கிழந்த ஒரு சக்தியாகும். சோவியத் யூனியனில் ஸ்ராலினின்
வாரிசுகள் -கொர்பச்சேவ், ஜெல்ட்சின், புட்டின்- முதலாளித்துவத்தை
மீள அறிமுகம் செய்வதற்கும் இலட்சோப லட்சம் மக்களின்
வாழ்க்கை நிலைமைகளை முன்னொரு போதும் இல்லாத விதத்தில்
துவம்சம் செய்வதற்கும் தலமை தாங்கியுள்ளனர். மேலும் ஒரு
காலத்தில் சோசலிச நனவு கொண்டவர்கள் தவறுதலாக வைத்துக்
கொண்டிருந்த ஆளுமையை மேற்கில் உள்ள கட்சிகளும் தொழிற்சங்கங்களும்-
சீர்திருத்தவாதிகள் அல்லது ஸ்ராலினிஸ்டுகள்- இன்று சுதந்திர சந்தையின்
அப்பட்டமான வக்கீல்களாகவும் பெரும் வர்த்தக நிறுவனங்களின்
நலன் காப்பவர்களாகவும் உள்ளனர். இன்றைய உலக ஆளும் வர்க்கங்கள்
தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளேயான அரசியல் தகவமைவின்மையை
வெற்றிகரமான முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளன.
முன்னேறிச் செல்வதற்கான ஒரு புதிய அரசியல்
பாதையை தொழிலாளர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் இளைஞர்களுக்கும்
ஒரு சோசலிச முன்நோக்கினையும் கலாச்சாரத்தினையும் மீள
அறிமுகம் செய்வதன் மூலம் மட்டுமே உரித்தாக்கிக் கொள்ள
முடியும். உலக சோசலிச வலைத் தளம் இப்பணிக்கு தன்னை அர்ப்பணம்
செய்து கொண்டுள்ளது. இதனை அரசியல், புத்திஜீவி, சமூக, கலாச்சார
வாழ்க்கையின் சகல அம்சங்களையும் விமர்சன ரீதியில் ஆய்வு செய்வதன்
மூலம், கருத்து தெரிவிப்பதன் மூலம் சாதிக்க முயல்கிறது. அது
அரசியல் ரீதியிலும் அறிவு ரீதியிலும் பெரிதும் முன்னேற்றமான பகுதியினரிடையே
ஒரு நிஜமான மார்க்சிச முன்நோக்கினை பரவச் செய்வதன் ஊடாக
ட்ரொட்ஸ்கி உருவாக்குவதில் ஈடுபட்ட தொழிலாளர் வர்க்கத்தின்
அனைத்துலக சோசலிச கட்சியின் சக்திகளை அணிதிரட்டத் தொடங்கும்.
இந்த புதிய புத்தாயிரமாம் ஆண்டுகளில் மனித
இனம் முகம் கொடுக்கும் உக்கிரமான பிரச்சினைகளை கலந்துரையாடுவதில்
எம்முடன் இணைந்து கொள்ளுமாறு நாம் உலக சோசலிச வலைத்
தளத்தின் வாசகர்களை அழைக்கின்றோம்.
ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் அறுபது ஆண்டுகளின்
பின்னர் லியொன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையினதும் ஆக்கங்களதும்
சமகால முக்கியத்துவம்
பகிரங்கக் கூட்டம்,
சிட்னி, அவுஸ்திரேலியா.
டிசம்பர் 3, 2000
பி.ப. 3மணி
Tom Mani Theatre
136, Chalmers street,
Surry Hills (Near central station)
Tickets $8.
|