:ஆசியா:
இலங்கை
After the murder of Tamil detainees
Sri Lankan police and army crack down on Tamil plantation
workers
தமிழ் கைதிகளின் படுகொலையின் பின்னர்
இலங்கை பொலிசாரும் இராணுவத்தினரும் தமிழ்
தோட்டத் தொழிலாளர் மீது பாய்ந்து விழுந்துள்ளனர்
By Wije Dias
4 November 2000
Use
this version to print
தீவிர வலதுசாரி காடையர்களுடன் கூட்டாக செயற்பட்டு
வரும் இலங்கை பாதுகாப்பு படைகள் மத்திய மலைநாட்டின் தமிழ்
பேசும் தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் மீது
ஒரு பொது தடையை விதித்துள்ளனர். அக்டோபர் 25ம் திகதி பண்டாரவளை-
பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்த தமிழ் கைதிகள் ஒரு
சிங்கள காடையர் கும்பலால் படுகொடூரமான முறையில்
படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும்
ஹர்த்தாலும் இடம் பெற்றன.
நாட்டில் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டவிதிகளின்
கீழ் கொட்டகலை, வட்டகொடை, அட்டன், தலவாக்கலை முதலிய
இடங்களில் அக்டோபர் 30ம் திகதியில் இருந்து வரையறுக்கப்பட்ட
இரவுநேர ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்ததோடு அது திங்கட்கிழமை
முதல் காலை 11மணி தொடக்கம் முழு அளவில் விஸ்தரிக்கப்பட்டது.
முழு நுவரெலியா மாவட்டமும் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வந்தது.
பல நூற்றுக் கணக்கான ஆயுதப் படையினர் இப்பகுதிகளில்
குவிக்கப்பட்டனர். இவர்கள் கலகம் அடக்கும் பொலிஸ் படையினருடனும்
சிங்கள குண்டர்களுடனும் சேர்ந்து கொண்டனர். அக்டோபர்
29ம் 30ம் திகதிகளில் பெருந் தெருக்களும் புகையிரதப் பாதைகளும்
பயணத்துக்கு தடைசெய்யப்பட்டது. பொலிசாரினதும் ஆயுதப்
படையினரதும் வாகனங்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டன.
ஆறு தமிழர்கள் ஒன்றில் பொலிசாரால் அல்லது இராணுவத்தினரால்
அல்லது சிங்கள காடையர்களால் கொல்லப்பட்டனர். முழு
மாவட்டமும் அடியோடு பொலிஸ் முற்றுகைக்கு உட்பட்டு
போயிருந்த நிலைமையிலேயே இது இடம் பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு படையினர்
வட்டகொடையிலும் தலவாக்கலையிலும் வெவ்வேறுபட்ட சம்பவங்களில்
நான்கு தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொன்றதோடு இன்னும்
பலரை காயப்படுத்தினர். காணாமல்போன தனது மகனை தேடி
வந்த தந்தை தலவாக்கலையில் வைத்து அக்டோபர் 30ம்
திகதி காலை பாதுகாப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மறுநாள் வட்டகொடையில் உள்ள தமது வீட்டில் வைத்து இராணுவத்தினர்
இரண்டு இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதை
கண்ட ஒரு தோட்டத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.
பொலிசார் ஆர்ப்பாட்டங்களுக்கு தூபமிடுவதாக
கூறி எதிர்க்கட்சி எம்.பி.யான பீ.சந்திரசேகரனை கைது செய்ததோடு
இன்னும் 25 பேரையும் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். 3 இலட்சத்துக்கும்
அதிகமான தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்
வாழும் தோட்டப் பகுதிகளில் பொதுஜன முன்னணி அரசாங்கமும்
ஆயுதப் படைகளும் எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையுமிட்டு பதட்டம்
கண்டுள்ளன. இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட
தரப்பினர் தோட்டத் தொழிலாளர்களே.
பிந்துனுவெவை முகாம் படுகொலைகளுக்கு
எதிரான இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவிலும் திருகோணமலையிலும்
இடம் பெற்றுள்ளன. தடுப்புக் காவல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதை
கண்டித்து தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால்
கொட்டகலையிலும் அட்டனிலும் தலவாக்கலையிலும் பொலிசார்
சிங்கள குண்டர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களை தகர்க்கும்
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், உள்ளூர்
காடையர்கள் அக்டோபர் 27ம் திகதி அட்டன் சந்தைப் புறமாக
கட்டப்பட்டிருந்த பிந்துனுவெவை படுகொலைகளை கண்டனம்
செய்யும் பதாகைகளை கிழித்து எறிந்ததோடு ஆரம்பமாகியது.
தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் அட்டன் நகரத்தை மட்டுமன்றி
அயல் நகரங்களான நோர்வுட், மஸ்கெலியா, தலவாக்கலை,
வட்டகொடை, சாமிமலை பகுதிகளையும் கறுப்பு, வெள்ளை
கொடிகளால் அலங்கரித்தனர். பிந்துனுவெவை முகாம் தாக்குதலில்
பலியான சந்தணம் செல்வராஜாவின் சடலம் இறுதிச் சடங்குக்காக
அயலில் உள்ள கொட்டகலைக்கு வருகின்றது என்ற செய்தி பரவியதும்
மக்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
அட்டன் நகரில் மட்டும் வெள்ளை சோடனை
கடதாசிகளை கட்டவும் நகரில் வந்து போகும் வாகனங்களில்
வெள்ளை கொடிகளை கட்டவும் சுமார் 100 பேர் திரண்டிருந்தனர்.
பெரும்பாலான வாகனச் சொந்தக்காரர்கள் -சிங்களவர்,
தமிழர் இருசாராரும்- அனுதாபச் சின்னமாக குத்தப்பட்ட வெள்ளைக்
கொடிகளுடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். மாலை
வேளையில் சுமார் 500 பேர் கூடியிருந்ததோடு அவர்கள் இரவு 8
மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்ததில் இருந்தே அங்கிருந்து
வெளியேறினர்.
இந்நடவடிக்கைகள் ஊரடங்கு வேளையில் பொலிசாரினால்
நகரைப் பராமரிக்கும் உரிமை வழங்கப்பட்டு இருந்த உள்ளூர்
சிங்கள தீவிரவாதிகளை ஆத்திரமடையச் செய்தது. காடையர் கும்பல்கள்
இப்பகுதிகளை பஸ்சில் சுற்றி வந்து பதாகைகளையும் சோடனைகளையும்
வெட்டித் தள்ளினர். இந்தப் பஸ்கள் ஒவ்வொன்றும் அதன் மேற்கூரையில்
ஒன்று அல்லது இரண்டு காடையர்களை கொண்டிருந்தது. இவர்கள்
பதாகையை வெட்டித் தள்ளி வந்த அதே சமயம் மற்றையவர்கள்
வாளும் கையுமாக எதிர்த்தவர்களை வெட்டித் தள்ளுவதற்கு ஆயத்தமாகினர்.
இந்த அப்பட்டமான ஆத்திரமூட்டும் நடவடிக்கை
காரணமாக மாவட்டம் பூராவும் ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமை
வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தயாராகி வந்த தோட்டத்
தொழிலாளர்கள், சந்தணம் செல்வராஜாவின் கொட்டகலை
மரணச் சடங்குக்கு பதாகைகளுடன் கோஷ்டியாக அணிவகுத்துச்
செல்வதென தீர்மானம் செய்தனர். இந்தப் பதாகைகள் "தமிழர்களை
படுகொலை செய்வதை நிறுத்து" "நாம் பிந்துனுவெவையில்
கொலையுண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்"
"கொலைகார அரசாங்கத்தை எதிர்ப்போம்" என்பவற்றை
உள்ளடக்கி கொண்டிருந்தன.
ஆனால் பொலிசாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்ட
ஊர்வலங்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் தொழிலாளர்களை
தோட்டங்களுக்கு திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டனர்.
அவர்கள் கலைந்து செல்லத் தொடங்குகையில் தெரு ஓரமாக
உள்ள கட்டிடங்களின் பின்னால் ஒழிந்து கொண்டிருந்த காடையர்கள்
கற்களை வீசினர். மரணச் சடங்கில் கலந்து கொள்ள முடிந்தவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில் தலவாக்கலைக்கு
ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் அங்ஙனம்
செல்லாமல் தடுக்கப்பட்டனர்.
மாலை 1.30 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம்
பிரகடனம் செய்யப்பட்ட போதிலும் தொழிலாளர்களும்
இளைஞர்களும் மலையக மக்கள் முன்னணியின் (UPF)
தலைவர் சந்திரசேகரனால் தலவாக்கலையில் கூட்டப்பட்ட
கூட்டத்துக்கு கூடியிருந்தனர். அவர் 3000 மக்கள் கூடியிருந்த கூட்டத்தில்
இறுதியாக உரை நிகழ்த்தியதோடு, கூடியிருந்தவர்களை அமைதியாக
கலைந்து செல்லும்படியும் வேண்டினார்.
கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியதும்
மக்கள் கூட்டங்கள் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
இதனால் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பாக ஓட்டம் பிடிக்கத் தள்ளப்பட்டனர்.
இந்தக் குழப்ப நிலைமையின் போது அவர்கள் பல சிங்கள கடைகளையும்
நிறுத்தி வைத்திருந்த வாகனங்களையும் தாக்கினர். இதைத்
தொடர்ந்து சிங்கள காடையர் கும்பல் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.
தமிழருக்கு சொந்தமான கடைகள் தாக்கப்பட்டன.
மறுநாள் சந்திரசேகரன் தலவாக்கலையில் உள்ள
அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வு
திணைக்களத்தினால் குறுக்கு விசாரணைக்காக கொழும்புக்கு
கொணரப்பட்டார். மக்களை ஊர்வலம் செல்லும்படியும்
வன்முறையில் இறங்கும்படியும் தூண்டியதாக அவர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டும்
சுமத்தப்படாத போதிலும் அவர் இன்னமும் தடுப்புக்காவலிலேயே
வைக்கப்பட்டுள்ளார். சந்திரசேகரனின் சட்டத்தரணி பத்திரிகையாளரிடம்
பேசுகையில்: "அவர்கள் ஒரு தடுப்புக் காவல் கட்டளையை
விடுக்காது போனால் சந்திரசேகரனின் கைது ஒரு சட்ட விரோதமான
கைதாகிவிடும். ஆனால் அத்தகைய கைதை நியாயப்படுத்த எதுவும்
இல்லாதபடியால் அவர்கள் ஒரு தடுப்புக்காவல் கட்டளையை
கூட பிறப்பிக்க முடியாது".
மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனை
உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி நுவரெலியா, கந்தப்பொளை,
இராகலை, அட்டன், தலவாக்கலை மற்றும் இடங்களை சேர்ந்த
தொழிலாளர்கள் இவ்வாரம் வேலை நிறுத்தம் செய்தனர். எவ்வாறெனினும்
மலையக மக்கள் முன்னணியோ அவர்களை வேலைநிறுத்தத்தை கைவிடும்படி
கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
சந்திரசேகரன் 1994ல் பாராளுமன்ற உறுப்பினராக
தெரிவு செய்யப்பட்டார். பொதுஜன முன்னணியில் சேர்ந்த அவருக்கு
பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1999ம் ஆண்டு டிசம்பர்
ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னதாக அரசாங்கத்தில் இருந்து
இராஜினாமாச் செய்த சந்திரசேகரன் எதிர்க்கட்சியான ஐக்கிய
தேசியக் கடசியுடன் ஒரு கூட்டை அமைத்துக் கொண்டிருந்தார்.
நடந்து முடிந்த அக்டோபர் 10ம் திகதிய பொதுத் தேர்தலில்
சந்திரசேகரன் யூ.என்.பி பதாகையின் கீழ் நுவரெலியா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.
பொலிசாரும் இராணுவத்தினரும் ஏனைய மலையக
நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை பலாத்காரமாக முறியடித்தனர்.
கடந்த ஞாயிறு அட்டனில் தமிழர்கள் வீதிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட
அதே சமயம் சிங்கள காடையர்கள் சுதந்திரமாக வீதி உலா வர
அனுமதிக்கப்பட்டனர். இந்தக் காடையர்கள் திங்கட்கிழமை
சகல தமிழ் கடைகளும் மூடப்பட வேண்டும் என கட்டளையிட்டனர்.
ஆனால் கடைச் சொந்தக்காரர்களின் எதிர்ப்புக் காரணமாக
பொலிசார் கடைகளை காலையில் ஒரு வரையறுக்கப்பட்ட
காலத்துக்கு திறந்து வைக்க அனுமதி வழங்கினர். திங்கட்கிழமை
கினிகத்தேனையில் 20 தமிழர்களின் கடைகளுக்கு தீ மூட்டிய சிங்கள
காடையர்களுக்கு எதிராக பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
அட்டனில் இருந்து 16 கி. மீட்டருக்கு அப்பால்
உள்ள வட்டகொடையில் ஒரு சிங்கள காடையர் கும்பல் ஞாயிற்றுக்
கிழமை கொழும்பில் இருந்து வந்த தபால் புகையிரதத்தின்
நான்கு பெட்டிகளை உடைத்து தள்ளியதோடு அதற்கும் தீ வைத்தது.
இந்த கூச்சலை கேட்டு அயலில் வாழும் தோட்டத்
தொழிலாளர்கள் அங்கு வருகை தந்ததோடு சிங்கள பயணிகளுக்கும்
உதவி புரிந்தனர். அவர்கள் 150 சிங்கள பயணிகளை அயலில் உள்ள
ஆலயத்துக்கு கூட்டிச் சென்று உணவும் வழங்கினர். இவ்விடத்துக்கு
வருகை தந்த ஆயுதபாணிகளான பொலிசார், சிங்கள பயணிகளுக்கு
அருகே தமிழ் தொழிலாளர்கள் நிற்பதைக் கண்டு எச்சரிக்கை
செய்யாமலே துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பிரயாணிகள்
இத்துப்பாக்கிப் பிரயோகத்தை நிறுத்தும்படி கெஞ்சியும் பொலிசார்
அங்ஙனம் செய்யவில்லை. இதனால் ஏற்கனவே இரண்டு தமிழ்
இளைஞர்கள் இத்துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பலியாகினர்.
எந்த ஒரு பாரம்பரிய இலங்கை இடதுசாரிக்
கட்சிகளும் சரி அல்லது தொழிற்சங்கங்களும் சரி தோட்டத்
தொழிலாளர்கள் மீதான இத்தாக்குதலை கண்டனம் செய்யவில்லை.
லங்கா சமசமாஜக் கட்சியும் (LSSP)
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் (SLCP)
ஆளும் கூட்டரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பதோடு அமைச்சர்
பதவியும் வகிக்கின்றன. முக்கிய தோட்டத்துறை தொழிற்சங்கமான
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் (CWC)
பொதுஜன முன்னணியில் ஒரு பங்காளர். இ.தொ.கா. தலைவரும்
அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தோட்டத்
தொழிலாளர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தாரே
தவிர பொலிசாரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அரசாங்கமும் பொலிசாரும் தோட்டத்துறை
மாவட்டங்களில் உருவான அமைதியீனங்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும்
தனிநாடு கோரி போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்
சாட்டியுள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபரான (மத்திய மாகாணம்)
பத்மசிரி லியனகே 'ஐலன்ட்' பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்
தலவாக்கலை சம்பவங்கள் தொடர்பாக பலரை பொலிசார்
தேடிவருவதாக குறிப்பிட்ட அவர் ஒரு சில தமிழீழ விடுதலை புலி சந்தேக
நபர்கள் மக்களை தூண்டிவிட பிராந்தியத்தில் ஊடுருவிக் கொண்டுள்ளதாக
தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஊடுருவல் பற்றிய இக்குற்றச்சாட்டு
பிந்துனுவெவை கைதிகளின் கொலைகளால் நியாயமான முறையில்
தூண்டப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை
உடைத்து எறிவதற்கு பொலிசுக்கும், இராணுவத்துக்கும் சிங்கள
தீவிர வலதுசாரிகளுக்கும் இடையே இருந்து கொண்டுள்ள நெருக்கமான
உறவை பூசி மெழுகுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகும்.
|