World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Media lies and distortions exposed

WSWS investigates the Bindunewewa massacre in Sri Lanka

தொடர்பு சாதனங்களின் பொய்களும் திரிப்புக்களும் அம்பலம்

இலங்கை: பிந்துனுவெவ படுகொலைகள் பற்றிய உலக சோசலிச வலைத்தள புலன்விசாரணைகள்

By our correspondents
13 November 2000

Use this version to print

அக்டோபர் 25ம் திகதி சிங்கள தீவிரவாத கும்பல் ஒன்று பிந்துனுவெவவில் இலங்கை அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாமை ஆக்கிரமித்து முகாமில் நிராயுதபாணிகளாக இருந்த தமிழ் இளைஞர்களைத் தாக்கியது. இதில் 29 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் துவக்குச் சூட்டுக்கு அல்லது வெட்டுக் காயத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே மரணமாகினர். இருவர் படுகாயங்களுக்கு இலக்காகி பின்னர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இப்படுகொலைகள் தொடர்பான பொதுஜன முன்னணி அரசாங்கத்தினதும் (PA) கொழும்பு வெகுஜனத் தொடர்புச் சாதனங்களதும் நடவடிக்கைகள் பொய்களதும் திட்டமிட்ட திரிப்புகளதும் அச்சாறாக விளங்கியது. தமிழர் எதிர்ப்பு சிங்கள சோவினிசத்துக்கு அழைப்பு விடுப்பதை இவை இலக்காகக் கொண்டிருந்தன. முதலில் வெளியான பத்திரிகைச் செய்திகள் ஒரு கும்பல் சிங்களக் கிராமவாசிகள் கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து முகாமை ஆக்கிரமித்து, கொலைகளை மேற்கொண்டதாகக் கூறின.

அடுத்து வெளியான கட்டுரைகளும் ஆசிரியத் தலையங்கங்களும் இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 'கை ஒழிந்து கொண்டுள்ளது' என்ற அலங்கரிப்புக்களில் ஈடுபட்டன. இந்தக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் "தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள்". இவர்கள் நாட்டின் அடக்குமுறை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணையின்றி நீண்ட காலத்துக்கு தடை செய்து வைக்கப்பட்டவர்கள்.

அரசாங்க கட்டுப்பாட்டிலான "டெயிலி நியூஸ்" தினசரி பத்திரிகை அக்டோபர் 30ம் திகதி வெளியிட்ட ஒரு ஆசிரியத் தலையங்கத்தில் இந்த முகாமில் இருந்த "ஒரு அடம்பிடித்த விடுதலைப் புலி (LTTE) காரியாளன்" ஒரு தாக்குதலை நடாத்த தூண்டும் விதத்தில் "ஏனையவர்களை கலகத்தில் இறங்க தூண்டிவிட்டான்" என்றது. இப்பத்திரிகையின்படி அந்த ஊக்கி என்ன? "சகல கைதிகளும் சுயமாகவே சரண் அடைந்ததன் காரணத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகியதற்கான பழிவாங்கலாக அவர்களை ஒழித்துக் கட்ட விரும்பியது".

இந்த ஊகங்கள் எதற்கும் எந்தவிதமான ஆதாரமும் முன்வைக்கப்பட வில்லை. உள்ளூர் கிராமவாசிகள் தாம் இந்த தாக்குதலில் ஈடுபட்டதை மறுத்தனர். தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் வாகனங்களில் வந்து இறங்கியதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஆசிரியத் தலையங்கத்தின் வாதம் படுகொலைகளுக்குப் பலியானவர்களையே அதற்குக் குற்றம் சாட்டும் ஒரு அநாகரிகமான வாதமாகும். சிறைக்கைதிகள் தாம் மனம்போன போக்கில் தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது முகாமில் உள்ள மோசமான வாழ்க்கை நிலைமைகளையோ எதிர்க்க முடியாது என்பதையே இந்த வாதங்கள் அடிப்படையாகக் கொண்டவை.

அரசாங்கமும் வெகுஜனத் தொடர்பு சாதனங்களும் சகல விடயங்களையும் பூசி மெழுகிவிட்டன. தாக்குதல் பற்றி பெரிதும் விளம்பரம் செய்யப்பட்ட "உயர்மட்ட விசாரணை" எதுவித பயனும் இல்லாமல் இழுபட்டுப் போய்விட்டது. இரண்டு பொலிஸ் அதிகாரிகள் (IP) உட்பட 16 பொலிசார் "கைது செய்யப்பட்டு" கொழும்பில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஐந்து பொதுமக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் எவருக்கும் எதிராக எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

கொழும்பிலும் பிந்துனுவெவவிலும் பண்டாரவளையின் அயல் நகரங்களிலும் தொழிற்பட்ட உலக சோசலிச வலைத் தள (World Socialist Web Site) நிருபர்கள் காயமடைந்த தடுப்புக் கைதிகள், உள்ளூர் வட்டாரங்கள், சுயாதீனமான வழக்கறிஞர்கள் திரட்டிய தகவல்கள், ஆரம்ப மஜிஸ்திரேட் விசாரணை அத்தோடு அரசினால் நியமனம் செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) ஆகியவற்றிடமிருந்து சம்பவம் தொடர்பான பின்வரும் தகவல்களை திரட்டினர்.

சகல சாட்சியங்களும் அரசாங்க பேச்சாளர்களும் வெகுஜனத் தொடர்பு சாதனங்களும் தீட்டிய சித்திரத்துக்கு முரண்பட்ட விதத்தில் அக்டோபர் 25ம் திகதி பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இளம் தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பொலிசாரதும் ஆயுதப் படைகளதும் பெரும் ஆதரவோடு ஒரு சிங்கள இனவாதக் கும்பலால் செய்யப்பட்டது என்ற முடிவுக்கு வரத் தள்ளுகின்றது.

நவம்பர் 1ம் திகதி மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை கூட முகாமில் இடம்பெற்ற தாக்குதல் "கைதிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை காரணமாக முன்கூட்டியே திட்டமிடப்படாது வெடித்த குண்டர் கோஷ்டி வன்முறை" அல்ல என்ற முடிவுக்கு வரத் தள்ளப்பட்டுள்ளது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் பெரிதும் முரணற்று ஒத்துப் போகின்றது".

பிந்துனுவெவ கொழும்பில் இருந்து 210 கி.மீ. அப்பால் பண்டாரவளைக்கு சமீபமாக உள்ளது. இந்த முகாம் முன்னர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் பின்னர் ஊர்காவல் படைக்கும் ஒரு பயிற்சி நிலையமாக விளங்கியது. 1980பதுகளின் கடைப்பகுதியில் யூ.என்.பி. அரசாங்கம் சிங்கள இளைஞர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட பயங்கரத்தின் போது இது ஜே.வி.பி. சந்தேகநபர்களை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது.

இந்த முகாம் தமிழ் இளைஞர்களை நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கப் பயன்படும் இலங்கையில் உள்ள ஒரு தொகை தடுப்பு நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும் ஒன்றாகும். பிந்துனுவெவ முகாம் "எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள்" அல்லது இராணுவத்திடம் சரண் அடைந்த எல்.ரீ.ரீ.ஈ. அங்கத்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிலையமாக உள்ளது. ஆனால் இந்தச் சந்தேக நபர்கள் பலருக்கு தமிழிழ விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

இந்த முகாம் அரசாங்க தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இது ஒரு ஜனாதிபதி அதிரடி படை பிரிவால் கண்காணிக்கப்பட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இம்முகாமுக்கான பொறுப்பதிகாரியாக கப்டன் வை.பீ.அபேரத்னவும் உதவியாளராக லெப்டினன்ட் ஏ.அபேரத்னவும் விளங்கினர். இவர்கள் இருவரும் இராணுவத் தொண்டர்படையைச் சேர்ந்தவர்கள். இங்கு பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் சிறியதாக விளங்கியது. ஒரு றிசேர்வ் பொலிஸ் கான்ஸ்டபிளும் இரண்டு ஊர்காவல் படையினரும் இரண்டு பாதுகாப்பு உதவியாளர்களும் இரண்டு சிவிலியன் ஊழியர்களும் சேவையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரிதும் கீழ் மட்டத்திலேயே இருந்து வந்தது. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் ரீ.56 தன்னியக்க துப்பாக்கிகளையும், துப்பாக்கிகளையும் கொண்டிருந்தனர்.

சில சமயங்களில் கைதிகள் வெளியே சென்று வரவும் அனுமதிக்கப்பட்டனர். இந்த விதத்தில் வெளியே உள்ள ஒரு கடையிலும் ஹோட்டலிலும் தொழில் புரிந்து வந்ததன் காரணமாகவே இரு கைதிகள் மரணத்தில் இருந்து தப்பினர். இவர்கள் "விடுதலை" செய்யப்பட்ட போதிலும் அவர்கள் தமது கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்யாததன் காரணமாக அவர்கள் தொடர்ந்தும் முகாமில் தங்கியிருக்க நேரிட்டது. நாம் பல கிராமவாசிகளுடனும் ஒரு மாஜி. கைதியுடனும் அக்டோபர் 25 தாக்குதலில் காயமடைந்த கைதியுடனும் பேசினோம். இவர்கள் சகலரும் உள்ளூர் கிராமவாசிகளுக்கும் கைதிகளுக்கும் இடையேயான உறவு அன்பும் சிநேகிதமும் கொண்டதாக விளங்கியதாக தெரிவித்தனர். உள்ளூர் யுவதிகளை கைதிகள் தொந்தரவு செய்து வந்ததன் காரணமாகவே பதட்ட நிலை உருவானது என கொழும்பு வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் கட்டவிழ்த்துவிட்ட நச்சுத்தனமான வம்புகளை அவர்கள் நிராகரித்தனர்.

இம்முகாமில் இருந்த கைதிகளில் பலரும் 17 வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் நடைபெறும் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். இருவர் தேயிலை பயிர்ச் செய்கை மாவட்டமான நுவரெலியாவில் உள்ள மஸ்கெலியா, கொட்டகலை நகரங்களைச் சேர்ந்தவர்கள்.11 வயதான இளம் கைதிகள் கூட இம்முகாமில் 15 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த முகாமில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை பற்றி பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவர்களின் உயிர் தொடர்பாக எத்தகைய இழகிய மனப்பான்மை நிலவியது என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இது பலியானவர்களின் நிஜ எண்ணிக்கையை மூடி மறைக்கச் செய்யும் ஒரு முயற்சியாகவும் விளங்கலாம். பொலிசாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் 41 கைதிகள் -இறந்தோர் 25 காயமடைந்தோர் 16- இருந்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தஸ்தாவேஜூக்களின்படி இந்த எண்ணிக்கை 46. இந்த விடயம் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 7ம் திகதி நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சேனக திசாநாயக்கவை தொடர்பு கொண்ட போது "அச்சமயத்தில் பிந்துனுவெவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வந்த தடுப்பு கைதிகளின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் சில சந்தேகங்கள் இருந்து கொண்டுள்ளன" என அவர் தெரிவித்தார். அவரின்படி முகாம் அதிகாரியான அபேரத்ன தடுப்புக் கைதிகளின் எண்ணிக்கையை 40 எனவும் உள்ளூர் பொலிஸ் அதிகாரி 41 எனவும் தெரிவிக்கின்றனர். ஆனால் மனித உரிமை ஆணைக்குழு அங்கத்தவர்கள் அக்டோபர் 27ம் திகதி முகாமுக்கு விஜயம் செய்தபோது -படுகொலைகளின் இரண்டு நாளின் பின்னர்- அவர்கள் மற்றொரு சடலத்தை கண்டெடுத்தனர். இது மொத்த எண்ணிக்கையை 42 ஆக உயர்த்தியுள்ளது.

"எமது அறிக்கைகளின்படி அச்சமயத்தில் 46 கைதிகள் இருந்திருக்க வேண்டும். எவரும் விடுதலை செய்யப்படவேண்டுமானால் அதுபற்றி எனது அலுவலகத்துக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும். அவர்கள் பல விடயங்களை ஒழித்து மறைப்பதாக தெரிகிறது. நாம் இந்த விடயங்களை இன்னமும் ஆய்வு செய்து வருகின்றோம். நாம் கவனிப்போம்" என மனித உரிமைகள் ஆணைக்குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

கலகம் இடம் பெறவில்லை

இத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதாக கைதிகள் தாம் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவது தொடர்பாகவும் முகாமில் உள்ள நிலைமைகள் தொடர்பாகவும் ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்து இருந்தனர். வயதில் குறைந்தோரும் மூத்தோரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், ஏனையோரின் விடுதலை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பன அவர்களின் கோரிக்கைகளாக விளங்கின. கைதிகள் தமது கடிதங்கள் தபாலில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தபால்களையும் தொலைபேசி அழைப்புக்களையும் பெற அனுமதி வேண்டும் எனவும் அவர்கள் கோரி இருந்தனர். சில சமயங்களில் கைதிகள் தமது கடிதங்கள் குப்பைக்கூடைகளில் கிடந்ததை கண்டிருந்தனர். அத்தோடு அவர்கள் தமக்கு சவர்க்காரம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இக்கோரிக்கைகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. கப்டன் அபேரத்ன இவற்றுக்கு தீர்வு வழங்க முடியாது என கூறியதைத் தொடர்ந்து கைதிகள் தாம் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்றுள்ளனர். அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இடம்பெறும் வழக்காறான கூட்டத்தின் போது கைதிகள் அபேரத்னவிடம் இதை மீண்டும் கேட்டதோடு சிலர் அவரைச் சுற்றி வளைத்தும் நின்றனர். ஒரு பொலிஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் ஆகாயத்தில் சுட்டார். இதன் மூலம் கைதிகளின் ஆத்திரத்தை தூண்டினார். ம.உ.ஆ. (HRC) இடைக்கால அறிக்கையின்படி பல ரியூப் பல்புகளும் பொலிஸ் அரணும் (Police post) சேதமாக்கப்பட்டன.

பொலிசார் கைதிகள் வன்முறையில் இறங்கியதாகவும் களஞ்சிய அறைக்குள் நுழைந்து தம்மை இரும்பு கம்பிகளாள் ஆயுதபாணிகளாக்கியதாகவும் கட்டிடங்கள், தளபாடங்கள், பொலிஸ் அரணை சேதப்படுத்தியதாகவும் தஸ்தாவேஜுகளுக்கு தீமூட்டியதாகவும் கூறுகின்றனர். பொறுப்பதிகாரி பணயக்கைதியாக்கப் பட்டதாகக் கூறும் பொலிஸ் அறிக்கையை சாதகமாக்கிக் கொண்ட வெகுஜனத் தொடபுச் சாதனங்கள் ஒரு கலகத்துக்கான சித்திரத்தைத் தீட்டவும், கைதிகள் முகாமை தமது பிடிக்குள் கொண்டுவந்ததாகவும் காட்டின.

இவை எல்லாம் பின்னர் நடைபெற்றவைகளை நியாயப்படுத்தவும் பொலிசாரதும் முகாம் அதிகாரிகளதும் நடவடிக்கைகளை மூடி மழுப்பவும் திட்டமிட்டுச் செய்யபட்டவையாகும். ம.உ.ஆ. இடைக்கால அறிக்கை சுட்டிக் காட்டியது போல்: "பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததன்படி கைதிகள் அந்த நிலையத்தில் இருந்த எந்த ஒரு அதிகாரியையும் பணயக் கைதியாக வைத்திருந்தத்தற்கானதும் பிடித்து வைத்திருந்ததற்கானதுமான அடையாளங்கள் எதுவும் இல்லை".

பொலிசார் கூறுவது போல் "களஞ்சியத்தினுள் பலாத்காரமாக நுழைந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. கதவுகள் தகர்க்கப்படவில்லை. எந்த ஒரு பெரும் சேதத்தையும் காணவில்லை. அலுவலக யன்னல் கண்ணாடிகள் சிலவும் அலுவலக விடுதி கண்ணாடி சிலவும் உடைந்து இருந்தன. அங்கு ஒரு சில எரிந்த கடதாசி துண்டுகளும் அலுவலகத்தில் ஒரு சிறு அளவிலான சாம்பலும் காணப்பட்டன. இவை ஒரு சிறிய அளவிலான கடதாசிகள் எரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டின. இதே சமயம் தொலைக்காட்சி, றேடியோ, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்கள் சேதப்படுத்தப்படாது இருப்பதையும் நாம் கவனித்தோம்".

ம.உ.ஆ. முடிவுரையாக தாம் கண்டவை "கைதிகள் கட்டிடங்களை உடைத்து சேதப்படுத்தி பிரமாண்டமான சேதத்தை ஏற்படுத்தியதாக" கூறும் கோரிக்கைகளும் "நம்பிக்கை தருவதாக" இருக்கவில்லை என கூறியுள்ளது. கைதிகள் லெப்டினன்ட் ஏ. அபேரத்னவை தாக்கி காயப்படுத்தினர் என்ற பொலிசாரின் கூற்றை ஆய்வு செய்ய முடியவில்லை. இந்த பொறுப்பு உத்தியோகத்தரும் அவரது உதவியாளரும் பொலிஸ் காவலில் கொழும்பில் இருப்பதே காரணம்.

நாம் காயமடைந்த ஒரு கைதியுடன் பேசினோம். அவர் கூறியதன்படி முகாம் காவலாளிகளையும் அதிகாரிகளையும் பயமுறுத்தியதாக கூறப்படுவதற்கு மாறாக கைதிகளே ஆபத்தில் மாட்டிக் கொண்டு இருந்ததாக தெரிவித்தார். "24ம் திகதி நாம் மட்டக்களப்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) அலுவலகத்துக்கு தொலைபேசியில் பேசினோம். நிலைமை மோசமடைந்து வருவதாகவும் எமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினோம். எமக்கு ஏதும் நடந்தால் அவர்களே பொறுப்பு எனவும் கூறினோம்" என அவர் தெரிவித்தார்.

கைதிகள் கலகத்தில் ஈடுபட்டதாகவும் முகாமில் இருந்து தப்பியோட முயற்சித்ததாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் பற்றி நாம் கூறியபோது அவர் கூறினார்: நாம் தப்பியோட நினைத்திருந்தால் அதை இலகுவில் சாதித்திருக்கலாம். அங்கு ஒழுங்கு முறையான பாதுகாப்பு நிலைமைகள் கிடையாது" என்றார்.

கைதிகளுடன் கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்வுகொள்ளலின் பின்னர் முகாம் அதிகாரிகள் பண்டாரவளை பொலிசுக்கு தொலைபேசியில் கதைத்தனர். 30 பேர் கொண்ட ஒரு பொலிஸ் கோஷ்டி T56 துப்பாக்கிகளுடன் மாலை 8 மணிக்கு வந்திறங்கியது. இவர்களுடன் மற்றுமோர் 39 பொலிசாரும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்து வந்தனர். ஒரு இராணுவக் கோஷ்டி 10 கி.மீ. அப்பால் உள்ள தியத்தலாவ இராணுவ முகாமில் இருந்து வந்தது.

உண்மையில் முகாமினுள் என்ன நடைபெற்று வந்தது என்பதற்கு நல்லதொரு அடையாளமாக கப்டன் அபேரத்னவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பொலிசாரின்படி அபேரத்ன தம்மால் முகாமை பார்த்துக்கொள்ள முடியும் எனவும் வெளியாட்களை உள்ளே வர அனுமதிக்க வேண்டாம் எனவும் பொலிசாரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கைதிகளிடம் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் பேரில் (ICRC) உள்ளூர் பொலிசாருடன் தொலைபேசி மூலம் கதைத்தனர். அவர்கள் "நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக" தெரிவித்திருந்தனர்.

தாக்குதலில் உயிர் தப்பிய ஒரு கைதி எமக்கு தெரிவித்ததன்படி கைதிகள் ஆயுதம் தாங்கிய பொலிசாரை முகாமுக்குள் வர வேண்டாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் பின்னர் தலைமையக பொலிஸ் அதிகாரியை (HQI) ஆயுதமின்றி உள்ளே வர அனுமதித்தனர். கூட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையிட்டு அவர்கள் அவரிடம் (HQI) ஆட்சேபனை தெரிவித்தனர். வெளியே கல்வியியல் கல்லூரிக்கு (Education Faculty) சமீபமாக சுமார் 200-300 பேர் கொண்ட ஒரு கூட்டம் கூடியதாகவும் கைதிகள் மீது கல்வீசியதாகவும் அவர் கூறினார். இதற்கு எதிராக இராணுவமோ அல்லது பொலிசாரோ எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு மட்டுமே கேட்டனர்.

"நிலைமை தணிந்ததும் நாம் படுக்கைக்கு சென்றோம்". என உயிர் பிழைத்தவர் கூறினார். இராணுவ கோஷ்டி அங்கிருந்து காலை 1 மணிக்கு விலகிச் சென்றதாகவும் சில ஆயுதம் தாங்கிய பொலிசார் முகாமுக்கு வெளியே தொடர்ந்து நின்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும் ஏனையோர் பெரிதும் சுறுசுறுப்பாக செயற்பட்டனர். இந்தப் படுகொலைகள் இடம்பெறுவதற்கு ஒரு சில கிழமைகளுக்கு முன்னர் இந்த முகாமை அந்த பிராந்தியத்தில் இருந்து அப்புறப்படுத்தும்படி கோரி ஒரு பெட்டிசம்' விநியோகிக்கப்பட்டதாக கிராமவாசிகள் எம்மிடம் தெரிவித்தனர். அக்டோபர் 24ம் திகதி இரவு ஒரு சிங்கள தீவிரவாதிகள் கும்பல் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி காடைத்தனங்களுக்கு ஏற்பாடு செய்ய முயன்றது. அவர்கள் பண்டாரவளையிலும் பிந்துனுவெவவிலும் "இந்த நாட்டை நாசமாக்கிய புலிகளை (LTTE) அடித்து விரட்டு" "LTTE புனர்வாழ்வு முகாமை இழுத்து மூடு" என்ற சுலோகங்களடங்கிய சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் கிராமவாசிகளை தூண்டிவிட முயன்றனர். பொலிசார் இந்த சுவரொட்டிகளை பற்றி நன்கு அறிந்திருந்தனர். இவற்றில் சில முகாமுக்கு அருகில் அவர்கள் காணக்கூடிய விதத்தில் ஒட்டப்பட்டன.

இந்தக் கும்பல் அதிகாலையில் இருந்தே கூடத் தொடங்கியது. சிலர் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து கூடியிருக்கலாம். ஆனால் உள்ளூர் வாசிகள் கூறிய தகவல்களின்படி பலரும் வெளியில் இருந்து வாகனங்கள் மூலம் கொணர்ந்து இறக்கப்பட்டனர். பத்திரிகைச் செய்திகள் 2000 தொடக்கம் 3000 பேர் கூடியதாக தெரிவித்தனர். ஆனால் அந்தளவு பெருந் தொகையான கும்பல் வந்து கூடியதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது எனவும் புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியிடமிருந்து காலை 6.45 க்கு கிடைத்த தகவல்களின்படி ஒரு கும்பல் கூடுவதாக தலைமையலுவலக பொலிஸ் அதிகாரி (HQI) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார். பொலிசாரோ அல்லது இராணுவத்தினரோ எதுவும் செய்யவில்லை. காலை 8.15 மணிக்கு தலைமையலுவலக பொலிஸ் அதிகாரிக்கு அதே பொலிஸ் அதிகாரியிடமிருந்து மற்றொரு செய்தி கிடைத்தது. மக்கள் முகாமினுள் நுழைந்து கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இரும்புக் கம்பிகள், கத்திகள், கோடரிகள், வாள்கள் சகிதம் நுழைந்த குண்டர்கள் தமிழ் கைதிகளை வெட்டிக் கொல்வதில் ஈடுபட்டனர். சில கைதிகளின் தலைகள் அடித்து நொருக்கப்பட்டன. இக்கும்பல் கட்டிடங்களுக்கு தீ மூட்டியது. இக்கும்பல் கைதிகளை உயிருடன் நெருப்புக்குள் தள்ளியதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். இந்த குண்டர்கள் நுழைவதைத் தடுக்க கப்டன் அபேரத்ன எதுவும் செய்யவில்லை. இவர்கள் நுழைந்ததுதான் தாமதம் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

கைதிகள் பொலிசாரால் சுடப்பட்டனர்

பொலிசாரின் பாத்திரம் மிகவும் தெளிவானது. முதல் எச்சரிக்கையின் பின்னர் எதுவித மேலதிக படையணியும் அனுப்பப்படவில்லை. குண்டர்கள் முகாமுக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்த எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு வழக்கறிஞர் கூறியதன்படி முகாமுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான எந்த விதமான அறிகுறிகளும் இல்லை. முட்கம்பி வேலி அப்படியே இருந்து கொண்டுள்ளது. கைதிகளில் சிலர் குண்டர்களிடமிருந்து தப்பி முகாமுக்கு வெளியே ஓட முயன்ற போது பொலிசாரால் சுடப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுடன் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுள்ள உயிர் தப்பிய கைதி ஒருவருடன் நாம் பேசினோம். "சுமார் 50 பொலிசார் எம்மீது சுட்டனர்". என அவர் கூறினார். "அவர்கள் கும்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சிக்கவில்லை. கும்பல் பொலிசாருடன் சேர்ந்து கொண்டிருந்தது. பொலிஸ் எனது காலில் சுட்டது. நான் ஒரு பொலிசாரிடம் ஓடிச் சென்று (என்னை காப்பாற்றுமாறு) மன்றாடினேன். அவர் என்னை ஒரு ட்ரக்கினுள் பிடித்து தள்ளி விட்டார். எனது வலது கால் காயமடைந்துள்ளது. தேசிய ஆஸ்பத்திரியில் காலில் இருந்து ஒரு தோட்டா அகற்றப்பட்டது". பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக மற்றொரு கைதி இரண்டு விரல்களை இழந்தார்.

கைதிகள் தமது உயிரைக் காக்க பொலிஸ் ட்ரக்கினுள் ஒழிந்து கொள்ள முயன்ற போது காடையர் கும்பல் பொலிசாரின் முன்நிலையில் அவர்களைத் தாக்கியது. பொலிசார் உதவியற்ற கைதிகளை காப்பதற்கு பதிலாக கொலைக்கு துணை போயுள்ளனர். பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் காரணமக எத்தனை கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை எவரும் அறியார். ஏனெனில் சடலங்கள் எவையும் உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை. சில சுட்டெரிக்கப்பட்டன. காயமடைந்தவர்களில் 10 பேர் தியத்தலாவை இராணுவ ஆஸ்பத்திரியிலும் இருவர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். நாம் அவர்களைக் காணச் சென்ற போது அவர்கள் ஆஸ்பத்திரி படுக்கைகளுடன் சேர்ந்து கிரிமினல்கள் போல் விலங்கிடப்பட்டிருந்தனர்.

பொலிசாரும் பின்னர் இராணுவமும் எந்த ஒரு குண்டர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இராணுவ கப்டன் சரித்த தேமத்தம்பிட்டிய இப்படுகொலைகளின் பின்னரே ஸ்தலத்துக்கு விஜயம் செய்தார். பெருமளவிலான சனக்கூட்டம் முகாமுக்கு வெளியே நின்று கொண்டு இருந்ததையும் காயமடைந்த சிலரை வீதியிலும் கண்டதாக அவர் மஜிஸ்திரேட் விசாரணையின் போது தெரிவித்தார். முகாமினுள் பல வகையான ஆயுதங்களுடன் மக்கள் நின்றதாக அவர் தெரிவித்தார். பொலிஸ் தலைமையக அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் கப்டன் சனக்கும்பலை கலைந்து செல்லுமாறு கேட்டதாகவும் அவர்கள் அங்ஙனம் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்தக் குற்றவாளிகளில் எவரையேனும் கைது செய்ய அவர் முயன்றாரா என அவரிடம் கேட்கப்பட்டது. சிவிலியன்களை கைது செய்யும் அதிகாரம் தமக்கு கிடையாது என தேமத்தம்பிட்டிய தெரிவித்தார். அத்தோடு அவர் பொலிசார் எவரையும் கைது செய்ய முயற்சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இராணுவத்தினர் மக்களை கைது செய்வதும் பொலிசாரிடம் ஒப்படைப்பதும் வழக்கம் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இச்சம்பவத்தின் பின்னர் பொலிசார் "விசாரணைக்காக" பல நூற்றுக்கணக்கான கிராமவாசிகளையும், பெண்களையும், பிள்ளைகளையும் சுற்றிவைளைத்துக் கைது செய்தனர். கொலையாளிகளைப் பற்றி விசாரணை செய்வதற்குப் பதிலாக பொலிசார் 50 பேரை சுயமாக முன்வந்து 'குற்ற ஒப்புதல்' வாக்குமூலம் அளிக்கும்படி வேண்டினர். இதன் மூலம் படுகொலைகளை பூசி மெழுகவும் பொலிசாரின் பாத்திரத்தை மூடி மழுப்பவும் முயன்றுள்ளனர்.

எந்த ஒரு இயக்கமும் இந்தப் படுகொலைக்கு உரிமை கோரவில்லை. ஆனால் இப்பகுதியில் பல சிங்கள தீவிரவாத அமைப்புகள் செயற்படுகின்றன. சிங்கள வீரவிதான அமைப்பு இதில் ஒன்றாகும். இதுவே சிங்கள உறுமய கட்சியை (SUP) ஸ்தாபிதம் செய்தது. கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சி இம்மாவட்டத்தில் போட்டியிட்டதோடு இதனது வேட்பாளர்களில் சிலர் இந்த பிந்துனுவெவ முகாமுக்கு சமீபமாக உள்ள கிராமங்களில் வசிக்கின்றனர்.

இந்தக் கொலைகளை தாம் ஏற்பாடு செய்யவில்லை என சிங்கள உறுமய கட்சி கூறிக் கொள்கின்றது. ஆனால் கடந்த தேர்தலில் அவர்களது தமிழர் எதிர்ப்பு சிங்கள சோவினிசம் இத்தகைய ஒரு தாக்குதலை நாடாத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. சி.உ.க. போன்ற அமைப்புகள் இராணுவத்தினருடன் நெருக்கமான உறவுகள் கொண்டுள்ளன. இது அவர்களை சிங்கள சோவினிசத்துடன் நெருங்கி உறவாட வைத்துள்ளது. கட்ந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் சிங்கள உறுமய கட்சி வேட்பாளராக போட்டியிட்ட லலித் ஹெட்டியாராச்சியிடம் எமது நிருபர் இக்கொலைகளில் நீங்கள் சம்பந்தப்பட்டீர்களா என நேருக்கு நேர் கேட்டார். அவரது பதில்: "நான் இதில் பங்கு பற்றவில்லை. ஆனால் வேலை நல்ல விதத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்தப் படுகொலைகளை உண்மையில் ஒழுங்கு செய்தது யார் என்பது இன்னமும் வெளிவராமலேயே இருந்து கொண்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்தலின் இரண்டு வாரங்களின் பின்னர் இனவாத உணர்வுகளுக்கு மேலும் எண்ணெய் வார்ப்பதாக இது விளங்கியுள்ளது. இது ஈடாட்டம் கண்ட அரசியல் நிலைமையின் மத்தியில் இடம் பெற்றுள்ளது. பிராந்தியத்தில் உள்ள சிங்கள குண்டர்கள் ஸ்தலத்தில் பொலிசாரின் அமோக ஆதரவுடன் கொலைகளை செய்து முடித்துள்ளனர். சில பொலிசாரும் இரண்டு முகாம் அதிகாரிகளும் வேறு சில உள்ளூர்வாசிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இறுதியில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படலாம்.

ஆனால் பொலிசாரதும், இராணுவத்தினதும் உயர் புள்ளிகளின் பாத்திரம் பற்றிய பல பிரச்சினைகள் இன்னமும் மூடுமந்திரமாகவே உள்ளன. மனிதப் படுகொலைகளுக்கு முந்திய இரவு இடம் பெற்ற சம்பவங்களைப் பற்றி உள்ளூர் பொலிஸ் அதிகாரி விபரம் கூறிய உயர் அதிகாரிகள் யார்? ஒரு பயமுறுத்தும் கும்பல் இருந்து வந்த நிலையிலும் அன்றிரவு இராணுவமும் பொலிசும் முகாமில் இருந்து வாபஸ் பெறப்பட்டது ஏன்? முகாமுக்கு வெளியே அன்று காலை ஒரு கும்பல் கூடிவருவதாக கேள்விப்பட்ட போதிலும் உள்ளூர் பொலிஸ் தலைமை அதிகாரி எதுவும் செய்யாதது ஏன்?

உத்தியோகபூர்வமான எந்த ஒரு விசாரணையும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பது பெரிதும் அசாத்தியமாகியுள்ளது.