WSWS :செய்திகள்
& ஆய்வுகள் :ஆசியா:
இலங்கை
Sri Lankan government under pressure to form a national unity coalition
இலங்கை அரசாங்கம் ஒரு தேசிய ஐக்கிய கூட்டரசாங்கத்தை
அமைக்கும்படி கோரும் நெருக்குவாரத்துக்கு இலக்காகியுள்ளது
By K. Ratnayake
6 November 2000
Use
this version to print
அக்டோபர் 10ம் திகதி இடம்பெற்ற பொதுத்
தேர்தலின் நான்கு வாரங்களின் பின்னர் அரசியல் நிலைமை தொடர்ந்தும்
ஈடாட்டம் கண்டதாகவே இருந்து கொண்டுள்ளது. ஜனாதிபதி
சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் பாராளுமன்றத்தில் அறுதி
பெரும்பான்மையைக் கொண்டிராததாலும் சிறிய கட்சிகளுடன்
பேரம் பேச தள்ளப்பட்டுள்ளதாலும் ஆளும் வர்க்கத்தின் பல்வேறு
தரப்பினரும் அதை எதிர்க் கட்சியான யூ.என்.பி.யுடன் ஒரு உடன்பாட்டுக்கு
வரும்படி நெருக்கி வருகின்றனர்.
இந்த அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும்
விதத்தில் பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன் ஒரு இரண்டு வருடகால
"நடைமுறை உடன்பாட்டுக்கு" வரும்படி பொதுஜன
முன்னணி விடுத்த அழைப்பை யூ.என்.பி. நிராகரித்ததை தொடர்ந்து
யூ.என்.பி.க்கும் குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும்
இடையேயான பதட்டம் கண்ட பேரம்பேசல்கள் நீடித்து
வருகின்றன.
ஒரு ஐக்கிய அரசாங்கத்துக்கு அல்லது ஒரு இருதரப்பு
அணுகுமுறைக்கான அழைப்புகள் முரண்பட்ட திசைகளில் இருந்து
வெளிப்பட்டுள்ளன. பெரும் வர்த்தக நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு (LTTE) எதிரான
நீண்ட யுத்தத்துக்கு தீர்வு காணக் கூடியதும், தொழிலாளர் வர்க்கத்துக்கு
எதிரான ஒரு ஈவிரக்கமற்ற பொருளாதார வேலைத்திட்டத்தை
அமுல் செய்யக்கூடியதுமான ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை
அமைக்கும்படி கோரி வருகின்றனர். எவ்வாறெனினும் இதே சமயம்
சிங்கள சோவினிச அரசியல் கட்சிகளும் குழுக்களும் ஒரு தேசிய ஐக்கிய
அரசாங்கத்தை அமைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் மற்றும்
சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு எந்த ஒரு அரசியல்
சலுகையையும் வழங்குவதைத் தடுப்பதும் யுத்தத்தை உக்கிரமாக்குவதுமே
இவர்களின் திட்டமாக உள்ளது.
வர்த்தகம், கைத்தொழில் கூட்டு அமைப்பு, முதலாளிமார்
சம்மேளனங்கள் என்பன 'அபிவிருத்திக்கான' 26 அம்ச வேலைத்திட்டம்
ஒன்றை வெளியிட்டுள்ளன. "முன்நோக்கிச் செல்வதற்கான
ஒரு மூலோபாயம்" என்ற தலைப்பிலான இத்திட்டம்
"பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி குழுக்களுடன் ஒரு
இருதரப்பு உறவை" வேண்டி நிற்கின்றது. இதன் மூலம் "வடக்கு-கிழக்கு
மோதுதலுக்கு ஒரு ஐக்கிய இலங்கைக்குள் நிலையானதும் நீண்டதுமான
தீர்வை" காணும் கொள்கைகளை அமுல் செய்யும்படி இவை
கோரியுள்ளன.
இந்தப் பத்திரம் ஊழல்களுக்கு முடிவுகட்டுமாறும்
வேலைக்கு அமர்த்தி வேலை நீக்கம் செய்யும் கொள்கை (Hire
and Fire Policy) உட்பட தொழில் சட்டங்களை
திருத்துமாறும் வெளிநாட்டு மூலதனத்துடன் இணையும் விதத்தில் உள்நாட்டு
மூலதனங்களின் உற்பத்தி திறனையும், சலுகைகளையும் அதிகரிக்கும்படியும்
கேட்டுள்ளது. இந்த வர்த்தக அமைப்பு (Business
Forum) கடந்த வாரம் புதினப் பத்திரிகைகளில்
முழுப் பக்க விளம்பரங்களை இருநாட்கள் பிரசுரித்தது. இவை
தொழிற்சங்கங்களையும் மற்றும் அமைப்புக்களையும் ஒரு தேசிய
ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும்படி பொதுஜன முன்னணியையும்
யூ.என்.பி.யும் கோரும்படி வேண்டின.
இந்த இரண்டு பெரும் அரசியல் கட்சிகளில்
எதுவும் நடந்து முடிந்த அக்டோபர் 10 பொதுத் தேர்தலில்
காத்திரமான பெரும்பான்மையை பெறத் தவறிவிட்டன. பொதுஜன
முன்னணி தமிழ், முஸ்லீம் கட்சிகளுடன் -சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி- உடன்படிக்கைகளை செய்துகொண்டதன்
மூலமே அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முடிந்துள்ளது.
இதனால் இவை பாராளுமன்றத்தில் ஒரு சிறிய பெரும்பான்மையை
பெற்றுக்கொண்டுள்ளன. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசும் அதன்
முன்னணி அமைப்பான தேசிய ஐக்கிய முன்னணியும் (NUA)
அதிகளவிலான அமைச்சர் பதவிகளையும்
இராஜதந்திர நியமனங்களையும் வேண்டி வருகின்றன. இதனால்
அமைச்சரவை நியமனங்களை நிறைவு செய்ய முடியாது போயிற்று.
ஆதலால் பொதுஜன முன்னணி யூ.என்.பி.யுடன் ஒரு
"நடைமுறை ஏற்பாடுகளை" செய்யும் திசையில் பயணம்
செய்துள்ளது. நவம்பர் 2ம் திகதி வெளியான 'டெயிலி மிரர்' பத்திரிகை,
குமாரதுங்க யூ.என்.பி.யை ஒரு "ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை"
வழங்குமாறு கேட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி
பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க ஊடாக சிரேஷ்ட யூ.என்.பி.
பாராளுமன்ற உறுப்பினர் டிரோன் பெர்னான்டோவுக்கு அறிவிக்கப்பட்டது.
இவர் தரகராக செயற்பட்டு வருகிறார். அத்தோடு இந்த ஆங்கில
தினசரி "ஒரு அனைத்து கட்சி மாநாட்டுக்கும் ஒரு அரசியலமைப்பு
நிர்ணய சபைக்கும் அழைப்பு விடுக்கும்" திட்டம் நிகழ்ச்சி
நிரலில் இடம்பிடித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
அரசாங்கத்துக்கு ஸ்திரப்பாட்டை வழங்கும்
தனது உதவியின் பேரில் யூ.என்.பி. தேர்தல், நீதிச் சேவை, பொலிஸ்
சேவை, அரசாங்க சேவையின் பேரில் சுதந்திர ஆணைக் குழுக்களை
அமைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அக்டோபர் 23ல்
கூடிய யூ.என்.பி. செயற் குழு இந்த ஆணைக்குழுக்களை அரசாங்கம்
அமைப்பதற்கான காலக்கெடுவாக டிசம்பர் 31ம் திகதியை விதித்துள்ளது.
பதவியில் இருந்த போது காடைத்தனங்களுக்கும் தேர்தல்
மோசடிகளுக்கும் பேர்போன யூ.என்.பி இந்த ஆணைக்குழுக்களின்
மூலம் பொதுஜன முன்னணி, ஆளும் கூட்டரசாங்க அரசியல் நோக்கங்களுக்காக
இதே அரசியல் ஆயுதங்களை கையாள்வதை தடுக்கலாம் என எண்ணுகின்றது.
சிறப்பாக இன்றைய ஆட்டங்கண்ட அரசாங்கம் வீழ்ச்சி கண்டு
புதிய தேர்தல் இடம்பெறும் ஒரு நிலையில் இவை ஏதும்
கைகொடுக்கலாம் என யூ.என்.பி. எண்ணுகின்றது.
இத்தகைய ஆணைக்குழுக்கள் 100 நாட்களுக்குள்
அமைக்கப்படவேண்டும் என்ற சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் (SLMC)
கோரிக்கையை யூ.என்.பி. பாராட்டியுள்ளது. அக்டோபர் 23ம்
திகதி இடம் பெற்ற யூ.என்.பி. பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல்
மோசடிகளையும் வன்முறைகளையும் சுட்டிக்காட்டி பேசிய
அதன் பேச்சாளர் கருணாசேன கொடித்துவக்கு "இத்தகைய
ஒரு அரசாங்கத்துடன் ஒரு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்துக்கு
நாம் செல்வோம் என எப்படி எதிர்பார்க்க முடியும்?"
எனக் கேட்டார்.
யூ.என்.பி. செயற்குழு தனது கோரிக்கையை ஜே.வி.பி.க்கும்
தமிழர் விடுதலை கூட்டணிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும்
அனுப்பி வைத்துள்ளது. ஒரு பொது வேலைத்திட்டத்தை தயார் செய்ய
இதன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீவிர சிங்கள வலதுசாரி
கட்சியான ஜே.வி.பி. யூ.என்.பி.யின் இந்த சிபார்சுகள் தொடர்பாக
-இக்கட்சியையும் கொண்ட கூட்டரசாங்கம் உட்பட- ஏற்கனவே
கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது. இருப்பினும் யூ.என்.பி.யுடன்
சேர்ந்து ஒரு அரசாங்கம் அமைக்க ஆதரவு வழங்கும் நோக்கம்
கிடையாது என ஜே.வி.பி. கூறியுள்ளது.
பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும்
இடையேயான எந்த ஒரு ஏற்பாட்டுக்கும் தாம் ஆதரவு வழங்குவதில்
பெரும் சங்கடம் இருந்து கொண்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணி
தெரிவித்துள்ளது. ஏனெனில் அத்தகைய ஒரு கூட்டு தேசிய சிறுபான்மையிருக்கு
அச்சுறுத்தலாக விளங்கும். இதற்கு முன்னர் -தேர்தலின் பின்னர்-
ஒரு அரசாங்கத்தை அமைக்க யூ.என்.பி.க்கு ஆதரவு வழங்குவதையிட்டு
அது ஆலோசிக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF)
கூறியிருந்தது.
பொதுஜன முன்னணி கூட்டரசாங்க ஓட்டை உடைசல்களுக்கு
ஓத்தடம் போடும் விதத்தில் ஜனாதிபதி குமாரதுங்க அமைச்சர்
பதவி பங்கீடுகளை பிரதமர் நியமனம் செய்யப்பட்டு ஒரு கிழமைக்கு
பின்னரும் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த அமைச்சர் பதவிகளின்
எண்ணிக்கை 44 ஆக வீக்கம் கண்டது. சில பொதுஜன முன்னணி எம்.பி.க்கள்
இன்னமும் அமைச்சர் பதவிக்காக ரகளை செய்து வருகின்றார்கள்.
லங்கா சமசமாஜக் கட்சி எம்.பி.யாக இருந்து சிறீலங்கா சுதந்திரக்
கட்சிக்கு மாறிய அத்தாவுட செனவிரத்ன இவர்களில் ஒருவர். அத்தோடு
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் 5 பிரதி அமைச்சர் பதவிகளையும்
கணிசமான அளவு இராஜதந்திர நியமனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு மாத கால இழுத்தடிப்புக்களின் பின்னர்
குமாரதுங்க தனது அரசாங்கத்தை -பிரதி அமைச்சர்கள் நியமனத்துடன்-
கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்தார். குமாரதுங்கவின் பிரச்சினைகள்
அதிகார வட்டாரத்தில் அவநம்பிக்கையீனத்தை கொழுந்து விட்டெரியச்
செய்துள்ளது. 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் வணிகச் செய்தி பத்தியின்
ஆசிரியத் தலையங்கம் "உலகிலேயே பெரியதான அமைச்சரவை,
அத்தோடு பெரிதும் திறமையற்ற அமைச்சரவையாகவும் விளங்கும்"
எனவும்" பெரும் அளவிலான அமைச்சரவை ஒரு பிரமாண்டமான
செலவு சுமையையும்" கொணரும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.
அமைச்சுப் பொறுப்புக்களை துண்டு துண்டாகவும் பகுத்தறிவுக்கு
ஒவ்வாத விதத்திலும் ஒதுக்கீடு செய்வதானது கொள்கை ஆக்கங்களையும்
அமுல்களையும் பலவீனம் அடையச் செய்வதோடு"
"அனைத்துலக சமூகத்துக்கு தவறான சமிக்கைகளையும்"
வழங்கும் என்றுள்ளது.
இந்த கவலைகளை பிரதிபலிக்கும் விதத்தில் பங்குமுதல்
சந்தை சுட்டெண்கள் சமீப வாரங்களில் 515 புள்ளிகளில் இருந்து
496 புள்ளிகளாக வீழ்ச்சிகண்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விலை
உயர்வுடன் சேர்ந்த விதத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்வதால்
ஏற்படும் அதிகரித்த அளவிலான யுத்த செலவீனங்கள் வர்த்தக பற்றாக்குறையை
ஏற்படுத்தியுள்ளதோடு உத்தியோகபூர்வமான நிதி வைப்புகளை வெட்டித்
தள்ளச் செய்துள்ளது. இது பெரும் வர்த்தக நிறுவனங்களின் கவலையை
அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களுக்கான
வர்த்தக பற்றாக்குறை 855 மில்லியன் டாலர்களால் அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 759 மில்லியன் டாலர்களாக விளங்கியது. 1999ம்
ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடுமிடத்து உத்தியோகபூர்வமான
நிதி வைப்புக்கள் 12 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு
சென்மதி நிலுவை பற்றாக்குறை 137 மில்லியன் டாலர்களில் இருந்து
400 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|