World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Norwegian envoy meets LTTE leader

Tentative moves in Sri Lanka to put peace talks back on the agenda

நோர்வே தூதுவர், விடுதலைப் புலிகள் தலைவர் சந்திப்பு

சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க இலங்கையின் தற்காலிக ஏற்பாடுகள்

By Wije Dias
9 November 2000

Use this version to print

இலங்கைக்கான நோர்வே அரசாங்கத்தின் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெயிமுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையே கடந்த வாரம் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் 17 வருட காலமாக இந்நாட்டில் இடம் பெற்று வரும் உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்ட இலங்கையிலும் அனைத்துலகிலும் இடம்பெறும் திரைமறைவிலான சூழ்ச்சிகளின் புதிய சுற்றினைச் சுட்டிக் காட்டுகின்றது. கடந்த 5 ஆண்டுகளில் பிரபாகரன் ஒரு வெளிநாட்டுத் தூதுவரை சந்தித்தது இதுவே முதல் தடவையாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுக்கு உட்பட்ட வன்னியில் இடம் பெற்ற இச்சந்திப்பு நோர்வேயினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினாலும் மிகவும் அந்தரங்கமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சொல்ஹெயிம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட்போக், வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி கேர்ஸ்ரி ரொம்ஸ்டாலுடன் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் வவுனியாவுக்குச் சென்று அங்கிருந்து காரில் இராணுவச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி, காட்டுப் பிராந்தியத்தினுள் பயணம் செய்தார். இந்தக் கலந்துரையாடல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் தமிழ் செல்வனும் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அங்கத்தவரான சங்கரும் கலந்து கொண்டனர்.

நவம்பர் 1ல் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தைகள் பற்றிய செய்திகள் முதலில் விடுதலைப் புலிகளின் லண்டன் செயலகத்தினால் வெளியிடப்பட்டன. விடுதலைப் புலிகளின் செய்தி அறிக்கையின்படி பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை இராணுவ மோதுதல் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, வடக்கிலும் கிழக்கிலும் இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலையில் மட்டுமே தொடர முடியும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது. "மோதுதல் நிறுத்தம் என்பதன் மூலம் பிரபாகரன் ஆயுத மோதுதல்கள் நிறுத்தம், இராணுவ ஆக்கிரமிப்பு நிறுத்தம், பொருளாதார தடைகளின் நீக்கம் தமிழர் தாயகத்தில் இயல்பு வாழ்க்கையின் உருவாக்கத்தை கருதியதாக" செய்தி வெளியீடுகள் குறிப்பிட்டன.

கொழும்புக்கு திரும்பிய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய சொல்ஹெயிம் வெறுமனே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைகளுக்கான முன்நிபந்தனைகளல்லாது பல விடயங்களைப் பற்றி பேசிக்கொண்டதாக தெரிவித்தார். இதையிட்டு விரிவாக விளக்க மறுப்புத் தெரிவித்த சொல்ஹெயிம் "திரு.பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிலைமையை நோக்குவது எப்படி என்பதையிட்டு கருத்து தெரிவித்தார். அத்தோடு நாம் அவர் குறிப்பிட்டதன்படி எப்படி சமாதான முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியத்தை உருவாக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ளது என நாம் நம்புகின்றோம்."

சொல்ஹெயிம் கடந்த சனிக்கிழமை ஒஸ்லோவுக்கு பயணமாவதற்கு முன்னர் இப்பேச்சுவார்த்தைகளைப் பற்றி குமாரதுங்கவுக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால்கிருஷ்ன காந்திக்கும் விளக்கினார். அதே நாளில் குமாரதுங்க இச்சந்திப்பைப் பற்றி இந்தியப் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினார். கடந்த மேயில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துக்கு ஒரு தொகை தோல்விகளை ஏற்படுத்தியதோடு யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணரும் சாத்தியத்தின் விளிம்பில் இருந்து வந்த சமயத்தில் இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யும் முயற்சியில் நோர்வேயுடன் சேர்ந்து கொண்டது.

மேல்மட்டத்தில் எதுவுமே மாற்றம் கண்டுவிடாது போல் தோற்றமளிக்கின்றது. சகல தரப்பினரும் சொல்ஹெயிமின் விஜயம் பற்றி வாய்களை இறுக்கி மூடிக் கொண்டுள்ளனர். ஜனாதிபதியும் சரி அவரது அமைச்சர்களும் சரி இந்த சந்திப்பையிட்டு பகிரங்கமாக எதுவித கருத்தையும் வெளியிடவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கையானது, கொழும்பு பொதுஜன முன்னணி அரசாங்கத்துடனான அதனது பேச்சுவார்த்தைகளின் சாத்தியத்தையிட்டு விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்பை நசுக்குவதை இலக்காகக் கொண்டது போல் தோன்றுகின்றது. ஒரு வருடத்துக்கு முன்னர் -கடந்த டிசம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னதாக விடுதலைப் புலிகள் குமாரதுங்கவை "தமிழ் மக்களின் மிக மோசமான எதிரி" எனக் கண்டனம் செய்து இருந்ததோடு இதன் பின்னணியில் ஒரு தற்கொலை குண்டுதாரியின் மூலம் அவரை படுகொலை செய்யும் முயற்சி இருந்துகொண்டுள்ளதாக நம்பப்பட்டது.

இதே காரணங்களுக்காக குமாரதுங்க தனது சீட்டுகளை நெஞ்சுடன் ஒட்டிவைத்து மறைத்து விளையாடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எந்த ஒரு சாத்தியமும் தீவிர வலதுசாரி சிங்கள அமைப்புக்களையும் பெளத்த பிக்குகளையும் வெறிபிடித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தள்ளிவிடும். இந்தக் குழுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எந்த ஒரு தீர்வையும் எதிர்ப்பதோடு யுத்தம் உக்கிரமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றன.

கடந்த வாரம் சிங்கள் உறுமய கட்சியும் (SUP) ஜே.வி.பி.யும் (JVP) நோர்வே தூதுக் குழுவின் இலங்கை விஜயத்தை கண்டனம் செய்ததோடு நோர்வே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும், இலங்கையை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு விவகாரங்களில் அது தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியது. சிங்கள உறுமய கட்சி சொல்ஹெயிம் உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் கோரியது.

கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் குமாரதுங்க யுத்தத்துக்கு ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் அடிப்படையாக ஒரு அரசியலமைப்பு சீர்திருத்த பொதியை நிறைவேற்ற முயன்றார். இந்த அதிகாரப் பகிர்வு பொதி எனப்பட்டதானது நாட்டின் பிராந்தியங்களுக்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சியை வழங்குவதன் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லீம் பிரமுகர்களிடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முயன்றது. இந்த அதிகாரப் பகிர்வு யோசனைகள் ஜே.வி.பி.யினதும் சிங்கள உறுமய கட்சியினதும் மற்றும் சிங்கள சோவினிச குழுக்களதும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டது. தமிழருக்கு எந்த ஒரு சலுகையையும் வழங்குவதானது "சிங்கள தேசத்தை" காட்டிக்கொடுப்பதற்கு சமமானது என இவை கூறிவந்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (UNP) பொதுஜன முன்னணியுடன் நடாத்தி வந்த நீண்ட பேச்சுவார்த்தைகளின் போது இதற்கு ஆதரவு வழங்குவதாகக் காட்டிக் கொண்ட போதிலும் அது பாராளுமன்றத்தில் இந்த அதிகாரப் பகிர்வு பொதிக்கு ஆதரவு வழங்க மறுத்துவிட்டது. இம்மசோதாவை நிறைவேற்றுவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை சாத்தியம் இல்லை என்பது குமாரதுங்கவுக்கு தெரிய வந்ததும் அவர் அம்மசோதாவை வாபஸ் பெற்றதோடு பாராளுமன்றத் தேர்தல்களை உரிய காலத்துக்கு முன்னரே நடாத்தவும் அழைப்புவிடுத்தார்.

சிங்கள சோவினிச தரப்பினரை வசீகரிக்கும் விதத்தில் குமாரதுங்க உயர்மட்ட பெளத்த பிக்குகளுடன் நெருக்கமான உறவு கொண்ட ரத்னசிரி விக்கிரமநாயக்காவை பிரதமராக நியமனம் செய்ததோடு யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு தொகை இராணுவ நடவடிக்கைகளையும் ஆரம்பித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் விக்கிரமநாயக்க நோர்வேயின் இராஜதந்திர நடவடிக்கைகளில் இனியும் கலந்துகொள்ளப் போவதில்லை என இறுமாப்புடன் கூறிக்கொண்டார். அதிகாரப் பகிர்வு பொதி அடியோடு தூக்கிவீசப்பட்டு விட்டதாகக் காட்டும் விதத்தில் பிரபாகரனை அடியோடு ஒழித்துக் கட்டும் விதத்தில் யுத்தத்தை உக்கிரமாக்கும்படி அழைப்பு விடுத்தார். வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய குமாரதுங்க, அரசியலமைப்பு மாற்றங்களை அடியோடு நிராகரிப்பது பற்றியோ அல்லது பேச்சுவார்த்தைகளில் நோர்வே தொடர்ந்து ஈடுபடுவது பற்றியோ எதுவும் கூறாத போதிலும் யுத்தம் சம்பந்தமாக "விட்டுக் கொடுக்காத" போக்கை பிரகடனம் செய்தார்.

அக்டோபர் 10ம் திகதிய பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணியோ அல்லது யூ.என்.பி.யோ அறுதிப் பெரும்பான்மையை வெற்றி கொள்ளவில்லை. பொதுஜன முன்னணி ஏனைய கட்சிகளுடனான ஒப்பந்தங்கள் மூலமே பெரும்பான்மையை சுருட்டிக் கொள்ளமுடிந்தது. ஆனால் பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஒரு பகுதியினரின் நெருக்குவாரம் காரணமாக ஒரு வகையான "தேசிய ஐக்கிய" கூட்டரசாங்கத்தை அமைக்கும்படி நெருக்கப்பட்டுள்ளதோடு பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்களை அமுல் செய்யும்படியும், யுத்தத்துக்கு பேச்சுவார்தை மூலம் தீர்வுகாணும்படியும் வேண்டப்பட்டுள்ளன.

தேர்தல் முடிந்ததுதான் தாமதம் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டு பூர்த்தி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பம்மாத்தின் கீழ் ஒஸ்லோவுக்கு பயணமானார். அச்சமயம் இலங்கையில் பொதுமக்கள் அசைபோடுவதற்காக கதிர்காமரும் குமாரதுங்கவும் நோர்வே ஆரம்பிப்புகள் ஒரு முட்டுக்கட்டை நிலையை அடைந்துவிட்டதாக கூறிக் கொண்டனர். இந்த அந்தரங்க கலந்துரையாடல்களில் நோர்வே பிரதிநிதிகள் பிரபாகரனை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பது இப்போது வெளியாகியுள்ளது. கொழும்பில் சொல்ஹெயிம் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் குமாரதுங்கவிடம் இருந்து கிடைத்த கடிதம் "நோர்வேயின் ஆரம்பிப்புகள் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான நலன்களை" வெளிக்காட்டிக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்ததை ஊர்ஜிதம் செய்தார்.

குமாரதுங்கவின் கொள்கைகளின் முரண்பட்ட பண்புகள் ஆளும் வர்க்கத்தினுள் இருந்து கொண்டுள்ள ஆளமான பிளவுகளை பிரதிபலிக்கின்றது. பெரும் வர்த்தக நிறுவனங்களின் கணிசமான பகுதியினர் பெரும் வல்லரசுகளின் ஆதரவோடு யுத்தத்துக்கு முடிவுகட்டும் ஒரு கூட்டான அணுகுமுறையை பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் தயார் செய்யவேண்டும் என கோரிவருகின்றன. யுத்தம் வெளிநாட்டு முதலீடுகளை தருவிப்பதற்கு தடையாகிவிட்டதோடு அரசாங்க வளங்களை கரைந்து போகவும் செய்கின்றது. அத்தோடு தென்னாசிய அரசியலை ஈடாட்டம் காண வைக்கும் காரணியாகவும் மாறியுள்ளது. எவ்வாறெனினும் இந்த இரண்டு கட்சிகளும் சிங்கள சோவினிசத்தினுள் காலூன்றிப் போயுள்ளதோடு தீவிர வலதுசாரி கட்சிகளான ஜே.வி.பி, சிங்கள உறுமய கட்சிகளின் நெருக்குவாரங்களுக்கும் அடிபணிய நேரிட்டுள்ளது.

குமாரதுங்க மீண்டும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் சாத்தியங்களை உருவாக்க முயன்று கொண்டுள்ளார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எவ்வாறெனினும் ஆகஸ்டில் அரசியலமைப்பு சீர்திருத்த பொதியை வாபஸ் பெற்றுக் கொள்ளத் தள்ளப்பட்ட ஒரு நிலையில் ஜனாதிபதி மிகவும் அவதானமாக முன்நோக்கிச் செல்லத் தள்ளப்பட்டுள்ளார். யுத்தத்துக்கு தீர்வு காண்பதற்கான ஒரு சாத்தியமான வேலைத்திட்டம் சம்பந்தமாக யூ.என்.பி.யுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதோடு எதிர்க்கட்சியினருக்கு சொல்ஹெயிம்- பிரபாகரன் சந்திப்பு பற்றியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. யூ.என்.பி.யின் ஆதரவு இல்லாமல் குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கையை அமுல் செய்வது சாத்தியம் இல்லை. யூ.என்.பி. பேச்சாளரான கருணாசேன கொடித்துவக்கு சொல்ஹெயிம் விஜயம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில்: "இந்த மோதுதலுக்கு ஒரு அரசியல் தீர்வை காணும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இந்த பொன்மயமான சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இதுவே" எனக் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் யூ.என்.பி.க்கு நிலைமையையிட்டு அறிவிக்கப்பட்ட போதிலும் குமாரதுங்க தனது சொந்த பிரதமருக்கு இதையிட்டு அறிவிக்கவில்லை. நோர்வே ஆரம்பிப்புகள் பற்றிய அவரின் முன்னைய அறிக்கைகளின் அடிப்படையில் அவர் இதை எதிர்த்திருக்கலாம். ஒரு தனியார் தொலைக்காட்சி சேவையின் பேட்டியின் போது விக்கிரமநாயக்க இந்த பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக கேட்கப்பட்டார். அதில் அவர் தாம் இந்த சந்திப்பு இடம்பெறுவதை தன்னும் அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தள்ளப்பட்டார்.

இராணுவ உயர்மட்டப் புள்ளிகளில் ஒரு பகுதியினர் இதையிட்டு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். கடந்த வார "சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரி "நோர்வேயின் ஊடாக விடுதலைப் புலிகளுடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடாத்தும் ஆச்சரியம் தரும் செய்திகள் பாதுகாப்பு படைகளின் உயர் மட்டத்தில் உள்ளவர்களை மட்டுமன்றி சாதாரண அங்கத்தவர்களுக்கும் கவலையளிக்கும்... முன்னெச்சரிக்கை இல்லாமல் சமாதானப் பேச்சுவார்த்தைகள் பற்றிய செய்திகள் அவர்களின் மனோநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்".

பெரும் வல்லரசுகள் சொல்ஹெயிம்-பிரபாகரன் பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ளன. பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட ஒரு அறிக்கை கூறியதாவது: "நாம் இருதரப்பினரையும் மோதுதல்களை கைவிட்டு நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி வேண்டுகின்றோம் நாம் சமாதான போக்கினை முழுமனே ஆதரிக்கின்றோம்." அமெரிக்க தூதரக பேச்சாளர் ஸ்ரீபன் ஹோல்கேட் கூறியதாவது: "நாம் ஏற்கனவே கூறியபடி இலங்கையில் உள்ள இனக்குழு பிணக்குக்கு ஒரு பேச்சுவாரத்தை மூலமான அரசியல் தீர்வு காணப்படுவதை நாம் ஆதரிக்கின்றோம். அது நாட்டின் சகல பிரஜைகளதும் கெளரவத்தையும் பாதுகாப்பையும் காப்பதோடு ஐக்கியத்தையும் பிராந்திய ஒருமைப்படடையும் பாதுகாக்கும்".

பெரும் வர்த்தக நிறுவனங்களின் பேரில் பேசுகையில் கைத்தொழில், வர்த்தக அமைப்பின் பேச்சாளர் கூறியதாவது: "தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பேச விரும்புவதை நாம் வரவேற்கின்றோம். அவர் பேச்சுவார்த்தை மூலமான தீர்வில் அக்கறை கொண்டுள்ளார் என்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாட்டின் மூலம் அரசாங்கமும் எதிர்க் கட்சியும் சகல அரசியல் கட்சிகளும் ஒரு அரசியல் தீர்வை காண முயற்சிப்பதோடு யுத்தத்தையும் ஒரு முடிவுக்கு கொணர வேண்டும்".