World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இலங்கைSri Lanka: the life and legacy of Sirima Bandaranaike இலங்கை: சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வாழ்க்கையும் பாரம்பரியமும் By the Editorial Board அக்டோபர் 10ம் திகதி காலமான முன்னாள் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வாழ்க்கையை மீளாய்வு செய்வதானது 1948ல் பிரித்தானியாவிடம் இருந்து வழக்காறான சுதந்திரம் பெற்ற தீவு தேசத்தை (Island Nation) உருவமைத்த மைய அரசியல் பிரச்சினைகளை ஆய்வுசெய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகும். இது இரட்டை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் சுதந்திரம் பெற்றதில் இருந்து கழிந்து சென்றுள்ள 52 வருடங்களில் அவரது குடும்பத்தின் ஏதோ ஒரு அங்கத்தவர் 22 வருடகாலம் அரசின் தலைவராகவும் 20 வருடகாலம் எதிர்க் கட்சி தலைவராகவும் விளங்கியுள்ளனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இரண்டாவது மகளும் இன்றைய ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க ஒரு தடவை கூறியது போல் இலங்கையில் அரசாட்சியை கொண்டு நடத்துவது என்பது ஒரு குடும்ப 'பிசினசில்' (Family Business) இறங்குவதைப் போன்றது. இதனை அவரில் இருந்து பிளவுபட்டுப் போயுள்ள சகோதரர் அனுர பண்டாரநாயக்க நல்ல விதத்தில் பிரதிபலிக்கின்றார். ஒரு முன்னணி யூ.என்.பி. புள்ளியான இவர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை வகிக்கின்றார். இதில் இருந்து உச்சிக்கு செல்வது எப்படி என்பதையிட்டு அவர் சிந்தித்துக்கொண்டுள்ளார் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் சிறிமாவோவின் வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வெறுமனே ஒரு அரசியல் பரம்பரையை ஸ்தாபிதம் செய்வதில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அதற்கு மாறாக தேசியவாத பொருளாதார கொள்கையினதும் சிங்கள சோவினிச சக்திகளதும் அநாகரிகமான கலவையான "பண்டாரநாயக்கவாத" (Bandaranaikism) சித்தாந்தத்தில் வகித்த தீர்க்கமான பாத்திரத்தில் அதைக் கண்டுகொள்ள வேண்டும். அத்தோடு இத்தீவின் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரத்தில் மேலாதிக்கம் செலுத்திக்கொண்டுள்ள இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தில் அது விட்டுச் சென்றுள்ள முதுசம், தொழிலாளர் வர்க்கத்தையும் விவசாயிகளையும் எதிர்கொள்வதில் இலங்கை முதலாளி வர்க்கத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிமாவோ பண்டாரநாயக்க அல்லது ரத்வத்தை 1916ம் ஆண்டில் கண்டி இராஜதானியை பிரித்தானியர் வெற்றி கொண்டு பலப்படுத்துவதற்கு துணைபோன ஒரு பிரபுத்துவ சிங்கள பெளத்த குடும்பத்தில் பிறந்தார். 1940ல் அவர் கீழ்நாட்டைச் சேர்ந்த அதற்கு இணையான ஒரு பிரபுத்துவ பெளத்த குடும்பத்தில் பிறந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை மணம் முடித்தார். ஆரம்பகாலத்தில் அவரது அரசியல் கருத்துக்கள் வெளிவராத போதிலும் அவர் விசேட வசதிவாயப்புக்கள் நிறைந்த கொழும்பு செனட் பிரிட்ஜட் கொன்வென்டில் கல்விபயின்றதோடு சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டினார். பிரித்தானிய காலனித்துவவாதிகளுக்கும் சுதேச நிலமானித்துவ நிலச் சொந்தக்காரர்களுக்கும் கணிசமான கவலைக்குரியதாக விளங்கிய புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியினால் (LSSP) தலைமை தாங்கப்பட்ட பெருந்தோட்டத் துறை தொழிலாளர் போராட்டங்களால் அவர் பாதிக்கப்படாமல் போயிருக்க முடியாது. 1899ல் பிறந்த அவரின் எதிர்கால கணவன் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு அரசியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். 1921ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் 1923ல் ஒக்ஸ்போட் யூனியன் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். 1924ல் சட்டத் தொழிலில் ஈடுபட்ட பண்டாரநாயக்க 1927ல் கொழும்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கை அரசியலில் நுழைந்தார். 1931ல் அவர் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் ஸ்தாபிதம் செய்யப்பட்ட முதலாவது அரச சபைக்கு (State council) தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது அரச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பண்டாரநாயக்க உள்ளூராட்சி நிர்வாக அமைச்சர் பதவியையும் வகித்தார். பண்டாரநாயக்கவின் வர்க்கத்தைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்கள் -பெரும்பாலும் ஆங்கிலத்தில் கற்றவர்களும் சுதேச மொழியை வெறுத்தவர்களும் பிரித்தானிய முடியாட்சியின் கட்டுமானத்தினுள் சங்கமமாகி விடுவதில் அக்கறை காட்டி வந்த அதே வேளையில் பண்டாரநாயக்க சில மறுதகவமைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்த இருந்தது. 1932ல் அவர் சிங்கள மகா சபையை அமைத்தார். இது "சாதாரண மனிதனுக்கு" அழைப்பு விடுப்பதாயும் பாரம்பரியமான சிங்கள கலாச்சாரத்தை மறுமலர்ச்சி செய்வதாகவும் விளங்கியது. இது மக்கள் வாதத்தினதும் (Populism) சிங்கள சோவினிசத்தினதும் கலவையைக் கொண்ட ஒரு திட்டவட்டமான அரசியல் தகவமைவைக் கொண்டிருந்தது. சமசமாஜக் கட்சி, இக்கலவையை சில நிலைமைகளின் கீழ் "கறுப்பு பாசிசத்தின்" ஒரு பாணியாக மாறலாம் என எச்சரிக்கை செய்தது. இலங்கை பிரமுகர்கள் பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெறும் எந்த ஒரு ஆவலையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு மாறாக அவர்கள் முடியாட்சியை தமது சொந்த வர்க்க நலன்களையும் சலுகைகளையும் கட்டிக்காப்பதற்கான அத்திவாரமாக நோக்கினர். இதைத் தொடர்ந்தும் தீர்மானிப்பது அவர்களாக இருந்திருப்பின் இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும் நீடித்திருக்கும். ஆனால் பாக்குத் தொடுவாயின் ஊடாக "முடியின் முத்து" ஆக விளங்கிய இலங்கை போராட்டங்களால் கலங்கியது. இதைத் தொடர்ந்து 1942ல் வெள்ளையனே வெளியேறு (Quit India) இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவுகளை காலனியான இலங்கையில் தவிர்த்துவிட முடியாது போய்விட்டது. மேலும் தீவு காலனியிலான நிலைமைகள் சிறப்பு அரசியல் பிரச்சினைகளை முன்வைப்பதாகவும் விளங்கியது. இந்தியாவில் சுதந்திர இயக்கமானது இந்திய தேசிய காங்கிரசின் தேசிய முதலாளி வர்க்கத் தலைமையின் கீழ் இருந்து வந்த போதும் அங்கு இலங்கையில் இருந்ததோடு ஒப்பிடத்தக்க ஒரு அமைப்பு இருக்கவில்லை. இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான இயக்கம் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (BLPI) தலைமையிலான தொழிலாளர் வர்க்கத்தினால் தலைமை தாங்கப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சி அதனது இலங்கைப் பகுதியாக விளங்கியது. வெள்ளைமாளிகையின் அதிகார நடைபாதைகளில் காலனித்துவ ஆட்சி தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான ஒரு போராட்டத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமா? அத்தகைய ஒரு அபிவிருத்தியானது இலங்கைக்கு மட்டுமன்றி முழு இந்தியத் துணைக்கண்டத்துக்கும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புரிந்து கொள்ளப்பட்டது. அத்தகைய ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக ஒரு துரித (அதிகார) கையளிப்பில் ஈடுபடுவது அவசியமாகியது. இதற்கிணங்க சோல்பரி பிரபு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை வரையும் பொருட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிகாரம் 1948ல் வழக்காறான விதத்தில் ஒரு "சுதந்திர" இலங்கையிடம் கையளிக்கப்பட்டது. முதலாளி வர்க்கத்தின் பிரமாண்டமான பலவீனம் நன்கு அம்பலமாகியது. அது அரசாங்கப் பொறுப்பை கையேற்கும் அணிதிரண்ட ஒரு கட்சியைத் தன்னும் கொண்டிராததோடு இந்த நோக்கத்தின் பேரில் 1946ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி (UNP) சடுதிப்பென்று உருவாக்கப்பட்டது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியினால் சுதந்திர தினம் தொடர்பாக வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம் புதிய அரசியல் ஏற்பாடுகளை அம்பலமாக்கியது. "பெப்பிரவரி நான்காம் திகதி மங்கள வாத்தியங்களுடன் கட்டியம் கூறப்படும். அதைத் தொடர்ந்து இடம்பெறும் கொண்டாட்டங்கள் வாணவேடிக்கைகளுடன் நிறைவுபெறும். இதற்கு இடைநடுவே ஆளுனர் (Governer) ஆளுனர்நாயகமாக (Governer General) மாறுவார். ஒரு பிரபு வந்து போவார். எமது பல இலட்சம் ரூபாக்கள் வீணடிக்கப்படும். அத்தோடு இலங்கை "பூரண அதிகாரத்துடன் கூடிய பிரித்தானிய கொமன்வெல்த் நாடுகள் அந்தஸ்தை" ஈட்டிக் கொள்ளும். இந்நாட்டு மக்கள் கொண்டாடுவதற்கு வேறு என்னதான் இருக்கிறது? "போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் இதற்கான பதில் தெளிவானதும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதுமாகும். 'இல்லை'!. சேனநாயக்க- மொங்மேசன்மூர் கூட்டு எமக்கு கொணர்ந்த "புதிய அந்தஸ்த்தை" கொண்டாடுவதற்கு வெகுஜனங்களுக்கு எதுவும் கிடையாது. அவர்கள் பிரகடனம் செய்யும் சுதந்திரத்தையிட்டு" மக்கள் குதூகலிப்பதற்கு எதுவும் இல்லை. அவர்கள் பெற்றுக்கொள்ளும் புதிய அந்தஸ்த்து, சுதந்திரம் அல்லாதது மட்டுமன்றி உண்மையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையின் அடிமைத் தளையின் சங்கிலியை புதுப்பாணியில் செய்துகொள்வதேயாகும். இது அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு பிரித்தானிய ஏகாதிபத்தியம் தொடர்ந்து கையாளும் விதிமுறையாகும்". போல்ஷிவிக் -லெனினிஸ்ட் கட்சி தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வாவினால் வரையப்பட்ட இவ்விஞ்ஞானபம் புதிய ஆட்சியாளர்களின் நிஜ நலன்களை பின்வருமாறு சுட்டிக்காட்டியது: "இலங்கை முதலாளி வர்க்கம் ஒரு போதுமே இலங்கைக்கு சுதந்திரம் கோரியது கிடையாது. அவர்கள் கேட்டது பிரித்தானிய ஏகாதிபத்திய அரசினதும் சொத்துக்களதும் ஒரு பாகமாக இலங்கையை பராமரிப்பதற்கான முழுப் பொறுப்பை தமக்கு வழங்க வேண்டும் என்பது மட்டுமே. அத்தோடு இப்போது அது அவர்களுக்கு கிடைத்து விட்டது!" ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபிதம் எஸ்.டிபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க யூ.என்.பி. அரசாங்கத்தின் ஒரு பிரபல அங்கத்தவராக விளங்கியவர். புதிய பாராளுமன்றத்தில் சபை முதல்வராக நியமனம் பெற்றவர். புதிய ஆட்சியில் இரண்டாம் ஸ்தானத்தில் இருந்தவர். ஆனால் அவர் முன்னைய பிரித்தானிய காலனித்துவவாதிகளின் கையாளனாக வெகுஜனங்களால் கணிக்கப்பட்ட யூ.என்.பி.யின் பேரிலான அவர்களின் குரோதத்தை அறிந்திருந்தார். பண்டாரநாயக்க பாரம்பரியமான சிங்கள தட்டினரிடையேயும் -ஆங்கிலம் பேசும் பிரமுகர்கள்- அதிருப்தியடைந்த உள்ளூர் வர்த்தக பிரமுகர்களிடையேயும் சுதந்திரம் தமது அபிலாசைகளை இட்டுநிரப்பத் தவறிவிட்டதாக கண்ட தரப்பினரிடையேயும் ஒரு அரசியல் அடிப்படையை ஏற்படுத்த முயன்றார். வெகுஜனங்களின் நிஜமான ஆதரவை அனுபவித்த ஒரே கட்சியாக லங்கா சமசமாஜக் கட்சி விளங்கியது என்பதை அவர் இனங்கண்டு கொண்டிருந்தார். அதனது வளர்ச்சியை தடை செய்யும் எந்த ஒரு கட்சியும் கிராமப்புற மக்களினதும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரதும் ஆதரவையும் கூட வெற்றி கொண்டாக வேண்டும் என்பதை பண்டாரநாயக்க புரிந்து கொண்டிருந்தார். "சுதந்திரத்தின்" சுபீட்ச நிலை வெகுவேகமாகக் கரைந்து கொண்டு போகத் தொடங்கியதுதான் தாமதம் யூ.என்.பி.யின் செல்வாக்கு அதிகரித்த அளவில் வீழ்ச்சி கண்டுபோக, லங்கா சமசமாஜக் கட்சியின் செல்வாக்கு வளர்ச்சி கண்டது. 1951ல் பண்டாரநாயக்க யூ.என்.பி.யில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைக்கப் போவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கை பேரளவிலான சுதந்திரத்தை மட்டுமே பெற்றுள்ளதாகவும் ஒரு புதிய கட்சியை மகா சங்கத்தினர் (பெளத்த பிக்குமார்) சுதேசிய மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் பங்களிப்புடன் அமைப்பது அவசியம் ஆகிவிட்டதாக அவர் தெரிவித்தார். சமூக ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்கள் அரசியல் வாழ்க்கையில் ஒரு பாத்திரத்தை வகிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் சாதாரண மனிதனின் பொருளாதார, சமூக நிலைமை முன்னேற்றம் காண வேண்டும் எனவும் கூறினார். முதலாளித்துவ ஆட்சி முழுமனே யூ.என்.பி.யை அடிப்படையாக கொண்டிருக்குமாயின் அது சிதறுண்டு போகும் என்ற பண்டாரநாயக்கவின் அச்சம் 1953ம் ஆண்டின் ஹர்த்தாலின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அரிசிப் பங்கீட்டை வெட்டும் யூ.என்.பி. அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்க கூட்டப்பட்ட ஒரு நாள் வேலைநிறுத்தம் -கொரியன் யுத்த செழிப்பின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு கிளர்ச்சி வடிவத்தை எடுத்தது. யூ.என்.பி. அமைச்சரவை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற ஒரு பிரித்தானியக் கப்பலில் கூடும்படி தள்ளப்பட்டது. 1953 செப்டம்பரில் கொல்வின் ஆர்.டி.சில்வா வெளியிட்ட ஒரு சிறு பிரசுரத்தில் விளக்கியது போல் "இலங்கை வரலாற்றில் இலங்கை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான முதலாவது வெகுஜன கிளர்ச்சி, இல்ஙகை தேசிய விடுதலையினதும் சமூக விடுதலையினதும் ஆயுதமான தொழிலாளர்-விவசாயிகள் கூட்டின் முத்திரையை பதித்துக்கொண்டிருந்ததோடு" "ஆட்சி அதிகாரத்தை வெகுஜனங்கள் கைப்பற்றிக் கொள்வதையும் தொழிலாளர்- விவசாயிகள் அரசாங்கத்தின் தோற்றத்துக்கான" பாதையையும் சுட்டிக்காட்டிக் கொண்டுள்ளது"... "1953 ஆகஸ்ட் போராட்டம் -வேலைநிறுத்தங்கள் போராட்டத்தின் ஒரு முக்கிய பாகமாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல. 1953 ஆகஸ்ட் போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தைக் காட்டிலும் ஒரு பெரிதும் பரந்தளவிலான வெகுஜனங்களை ஈர்த்ததோடு அவர்களால் முன்னெடுக்கவும்பட்டது. இது பெருமளவிலான கிராமப்புற வெகுஜனங்களை ஈர்த்தது. அவர்கள் தீவின் பெரிதும் சனநெருக்கடி மிக்கதும் அரசியல் ரீதியில் முன்னேற்றம் கொண்டதுமான பிராந்தியங்களில் -முறையே மேற்கு, தென்மேற்கு, கடற்கரைப் பிரதேசங்கள், துறைமுகப் பகுதிகளில்- ஒரு நிஜமான கிளர்ச்சி பண்பை மேலும் உருவாக்கினர்". இந்த ஹர்த்தாலைத் தொடர்ந்து பண்டாரநாயக்கவும் அவரால் புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட கட்சியும் வெகுஜனங்களின் இந்தப் பதட்ட நிலைமையை ஒரு புதிய திசையில் திசைதிருப்பிவிட முயன்றனர். இதுவே "சிங்களம் மட்டும்" இயக்கத்துக்கான மூலமாக விளங்கியது. இதற்கு முன்னர் ஆங்கிலம் உத்தியோக மொழியாக ஆக்கப்பட்ட போது யூ.என்.பி.யும் சி.ல.சு.க.வும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படுவதை ஆதரித்திருந்தனர். ஆனால் ஹர்த்தாலைத் தொடர்ந்து சி.ல.சு.க. "சிங்களம் மட்டும்" கொள்கையை நிறைவேற்றியதோடு 1956ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் தனது பிரச்சாரத்தின் நடுமையமாக இதை மாற்றியது. பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த "24 மணித்தியாலங்களுள்" இதை அமுல் செய்ய வாக்குறுதி வழங்கினார். லங்கா சமசமாஜக் கட்சி எம்.பி.யான என்.எம்.பெரேரா 1955 அக்டோபரில் பாராளுமன்றத்தில் பேசுகையில் "சிங்களம் மட்டும்" கொள்கையின் விளைவுகளையிட்டு ஒரு தீர்க்கதரிசனமான எச்சரிக்கையை விடுத்தார். இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்படுமானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பதிலீடு, பிரிந்து சென்று இந்தியாவினதோ அல்லது வேறு ஆட்சிகளதோ ஆதரவை நாடுவதாகவே விளங்கும். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: "தெற்கில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு இராணுவத்தை அனுப்பி, ஆயுத பலத்தின் மூலம் சிங்களத்தை உத்தியோக மொழியாகவும் தமிழை பிராந்திய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளும்படியும் இலங்கையினுள் தொடர்ந்தும் இருக்கும்படியும் நெருக்குவதே சாத்தியமானதாக இருக்கும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இம்மக்களை சிங்களத்தை மட்டும் அரச மொழியாகவும் தமிழை ஒரு பிராந்திய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளும்படி நீங்கள் கட்டாயப்படுத்தினால் இது பெரும் கலவரங்களுக்கும் இரத்தக் களரிகளுக்கும் உள்நாட்டு யுத்தத்துக்கும் இட்டுச் செல்லும்" என்றார். 1956ல் தேர்தலில் வெற்றி பெற்ற பண்டாரநாயக்க ஜூன் 25ம் திகதி சிங்களத்தை அரச மொழியாக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொணர்ந்தார். இந்நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக தமிழர் எதிர்ப்பு இனக்கலவரங்கள் வெடித்ததோடு பலர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர நேரிட்டது. பண்டாரநாயக்கவின் இனவாத அரசியல்கள் ஒரு தொகை தேசியவாத பொருளாதார நடவடிக்கைகளுடனும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய பொருளாதார அபிவிருத்திகள், சில வேளைகளில் சோசலிச பதாகைகளின் கீழ் பிசைந்து முன்வைக்கப்பட்டன. இது போக்குவரத்து, கொழும்பு துறைமுகம் போன்ற சில அத்தியாவசிய சேவைகளை தேசியமயமாக்குவதை உள்ளடக்கியதோடு இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களுக்கு சுங்கவரியும் விதிக்கப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியை அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் மற்றொரு நடவடிக்கையாக பண்டாரநாயக்க 1955ம் ஆண்டின் பாண்டூங் (இந்தோனேஷியா) மாநாட்டைத் தொடர்ந்து இந்திய தலைவர் நேருவுடனும் ஏனைய "மூன்றாம் உலகின்" தலைவர்களுடனும் சேர்ந்து கூட்டுச் சேரா அனைத்துலக கொள்கை எனப்படும் கொள்கையை உருவாக்கினார். 1959 செப்டம்பரில் ஒரு பெளத்த பிக்குவினால் கொலை செய்யப்பட்டதன் மூலம் பண்டாரநாயக்க உள்நாட்டில் இனவாத தீயைக் கிளறி எரியவிட்டதன் மூலம் தனக்கு முன்னும் பின்னும் இருந்தவர்களைப் போல் தனக்கு தானே கொள்ளி வைக்க நேரிட்டது. சிறிமாவோ தலைமை பதவி ஏற்பு ஸ்தாபகரை இழந்தமை சி.ல.சு.க.வை ஒரு நெருக்கடியினுள் தலைமூழ்கச் செய்தது. கட்சி சிதறுண்டு போகும் சாத்தியத்துக்கு முகம் கொடுத்த நிலையில் இதன் தலைவர்கள் பண்டாரநாயக்கவின் விதவையான சிறிமாவோவை பதவியேற்கும் படி அழைத்தனர். அதனை அவர் அடுத்து வந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வகித்தார். சிறிமாவோவின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் பாத்திரத்தை சுருக்கி கூறுகையில் அனுர பண்டாரநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டார்: "எனது தாயார் அரசியலில் ஈடுபடும் தீர்மானத்தை தயக்கத்துடனேயே எடுத்தார். ஆனால் அவர் அத்தீர்மானத்தை எடுத்ததும் தகப்பனாரை விட மிகவும் ஆழமான விதத்தில் அதனுள் சிக்குண்டு போனார்." 1960 மேயில் சி.ல.சு.க. தலைவியாக தெரிவு செய்யப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 யூலையில் கட்சி 2/3 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் பிரதமரானார். சி.ல.சு.க.வின் அமோக வெற்றிக்கு விதவைக்கு கிடைத்த அனுதாபமே காரணமாகக் காட்டப்பட்ட போதிலும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான "போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம்" ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்ததை சிறிமாவோ பண்டாரநாயக்கவே ஒப்புக் கொண்டார். "போட்டி தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்து கொள்வது என்ற லங்கா சமசமாஜக் கட்சியின் தீர்மானம், ஒரு தசாப்தத்துக்கு சற்று முன்னதாக இலங்கை அரசு ஸ்தாபிக்கப்படுவதை எதிர்த்த அதன் தலைவர்கள் இப்போது அதன் சேவையில் ஈடுபடத் தாம் தயார் என்பதை காட்டிக் கொள்ளும் ஒரு உறுதியான சமிக்கையாக விளங்கியது. லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவானது, இக்கட்சி இணைந்து கொண்டிருந்த நான்காம் அகிலத்தின் தலைவர்களான ஏர்ணஸ்ட் மண்டேலினதும் மைக்கேல் பப்லோவினதும் சந்தர்ப்பவாத கோட்பாடுகளின் அபிவிருத்தி மூலம் ஊக்குவிக்கப்பட்டது. புரட்சிக் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனத்துக்காக உழைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மார்க்சிசத்தின் அடிப்படையை நிராகரிப்பதன் மூலம் மண்டேலும் பப்லோவும் ஸ்ராலினிச, குட்டி முதலாளித்துவ, தேசியவாத சக்திகளின் ஒரு இடதுசாரி இயக்கத்தின் ஊடாக சோசலிசம் தோன்றும் என வாதிட்டனர். இந்தக் கருத்துக்கள் லங்கா சமசமாஜக் கட்சியினால் 1960பதுகளில் அபிவிருத்தி செய்யப்பட்ட சுலோகத்தில் உள்ளடங்கி இருந்தது. "காஸ்ட்ரோவை இடதுபக்கம் தள்ள முடியுமானால் ஏன் சிறிமாவை தள்ள முடியாது". 1960 யூலை தேர்தலில் சி.ல.சு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தமை, சிறிமாவோ பண்டாரநாயக்க தமது தலைவரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள சோவினிச வேலைத் திட்டத்தில் ஈடுபட்டமையைக் கண்டது. 1960 டிசம்பரில் சிறிமாவோ தமிழ் மொழியை தள்ளிவிட்டு சிங்களத்தை நீதிமன்ற மொழியாக்கும் விதிகளை அறிமுகம் செய்தார். அரசாங்க சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் பேசும் ஊழியர்கள் சிங்களத்தில் தகுதி பெறாது போனால் பதவியில் இருந்து விலகிக் கொள்ளத் தள்ளப்பட்டனர். தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உக்கிரமாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி (Federal party) சிவில் மறுப்பு இயக்கங்களில் ஈடுபட்ட வேளைகளில் சி.ல.சு.க. அரசாங்கம் இவற்றைத் தகர்த்து எறிய அவசரகாலச் சட்டங்களை திணித்ததோடு தமிழரசுக் கட்சித் தலைவர்களையும் சிறைக்குள் தள்ளியது. இக்காலப்பகுதி பூராவும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு வாயடிப்புக்களில் ஈடுபட்டதோடு தேசியவாத பொருளாதாரக் கொள்கைகளையும் அமுல் செய்தார். இது விலைக் கட்டுப்பாடு, நாணய கட்டுப்பாடு, காப்புறுதி, பெற்றோலியம் இறக்குமதி விநியோகம் என்பவற்றை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. ஆனால் வாயடிப்புக்கள் யதார்த்தத்துடன் ஒட்டிப் போவதாக இருக்கவில்லை. 1960 பதுகளின் ஆரம்பக் காலம் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களின் துரித அபிவிருத்தியை தரிசித்தது. சி.ல.சு.க. அரசாங்கம் அரச வன்முறையை பாவித்தது. 1962ம் ஆண்டில் இடம்பெற்ற போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு எதிராக இராணுவம் இறக்கப்பட்டது. சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை தூக்கி வீசும் பொருட்டு நாசகர சக்திகள் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தயார் செய்த ஒரு சதி என சிறிமாவோ தொழிலாளர் போராட்டங்களை கண்டனம் செய்தார். அவசரகாலச் சட்டம் அரசியல் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாகியது. ஒரு "சிறிய சர்வாதிகாரத்தின்" அவசியம் பற்றிக் பேசிக் கொண்டமைக்காக வரலாற்றில் இடம்பெற்ற சிறிமாவோவின் உதவியாளரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் துணையோடு சிறிமாவோ பண்டாரநாயக்க இராணுவத்தை வேலை நிறுத்தங்களை உடைக்கவும் அவசரகால பணிகளுக்காக தகுதிவாய்ந்த ஆட்களை கட்டாய சேவைக்கு அமர்த்தவும் பயன்படுத்தும் சட்டவிதிகளை கொணர்ந்தார். சி.ல.சு.க. அரசாங்கம் அமுல் செய்த நடவடிக்கைகளினால் உரம் பெற்ற சிவில் சேவை, இராணுவம், பொலிஸ் சேவைகளைச் சேர்ந்த சக்திகள் சி.ல.சு.க. அரசாங்கத்தை வெளியேற்றி ல.ச.ச.க. தலைமையை ஒழித்துக் கட்டும் இலக்கிலான ஒரு சதிப்புரட்சியை 1962 ஜனவரியில் அரங்கேற்ற முயற்சி செய்தது. இச்சதி தோல்வி கண்டு போனாலும் அடக்குமுறை தொடர்ந்ததோடு அரசாங்கம் தொழிலாளர் போராட்டங்களில் ஒரு பெரும் பாத்திரம் வகித்து வந்த அரசாங்க லிகிதர் சேவை சங்க (GCSU) தலைமை அலுவலகத்தை பறிமுதல் செய்யவும் முயன்றது. லங்கா சமசமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக் கொடுப்பு சி.ல.சு.க. அரசாங்கத்தின் அதிகரித்த அளவிலான தாக்குதல்கள் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்த்தாக்குதல்களை வளர்ச்சி பெறச் செய்தது. 1963 செப்டம்பர் 23ம் திகதி 10 இலட்சம் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்த 800 பேராளர்கள் 21 கோரிக்கைகள் சாசனத்தை அங்கீகரித்தனர். தீவின் வரலாற்றில் முதல் தடவையாக நகரங்களிலும் தோட்டங்களிலும் தொழில் புரியும் தொழிலாளர்களை உள்ளடக்கியதாக இம்மாநாடு விளங்கியது. தொழிலாளர் வர்க்கத்தின் இயக்கத்துக்கு தடைபோட எடுக்கப்பட்ட அரச அடக்குமுறை நடவடிக்கைகள் பிசுபிசுத்துப் போனதைத் தொடர்ந்து சிறிமாவோ பண்டாரநாயக்க ஒரு புதிய பாதையில் காலடி வைத்தார். 1960 தேர்தலில் ல.ச.ச.க. செய்து கொண்ட 'போட்டி தவிர்ப்பு' ஒப்பந்தத்தினதும் சி.ல.சு.க.வின் சிங்கள சோவினிசத்துக்கு அது அதிகரித்த அளவில் இயைந்து போனதனதும் அரசியல் அர்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொண்ட அவர் 21 கோரிக்கைகள் இயக்கம் வளர்ச்சி பெறுவதை தடுப்பதற்கும்- சிங்கள- தமிழ் தொழிலாளர்களின் ஒரு ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் முதலாளி வர்க்கத்துக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் சாத்தியங்களை போக்குவதற்கும் அவர் சமசமாஜக் கட்சி தலைவர்களை அரசாங்கத்தில் சேரும்படி அழைக்க நேரிட்டது. 1964 மே 12ம் திகதி செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானத்தை விளக்கிப் பேசுகையில் சிறிமாவோ பின்வருமாறு பிரகடனம் செய்தார்: "எம்முடன் சேர்ந்து தொழிற்பட்ட இடதுசாரிகளுக்கு அரசாங்கத்தில் இடம் கிடைக்காததால் ஒரு தொகை வேலைநிறுத்தங்களில் ஈடுபடத் தொடங்கினர். வடக்கில்... இனவாத பிரச்சினைகள் சூடுபிடிக்கிறது. சில மக்கள் இந்த விடயங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். சிலர் இத்தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் வேலை வாங்கலாம் என உணர்கின்றனர். இன்னும் சிலர் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என வாதிடுகின்றனர். நான் இக்கருத்துக்களை தனித்தனியாகவும் உலக நிகழ்வுகளின் அடிப்படையிலும் ஆராய்ந்தேன். இந்த தீர்வுகள் எதுவும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு எம்மை இட்டுச் செல்லாது என்பதே எனது முடிவாகும். ஆதலால் கனவான்களே! நான் தொழிலாளர் வர்க்க தலைவர்களுடன் குறிப்பாக திரு. பிலிப் குணவர்தனா, டாக்டர் என்.எம். (பெரேரா) முடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடிவு செய்தேன்". லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) சி.ல.சு.க. அரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டமை வரலாற்றில் ஒரு மாபெரும் காட்டிக்கொடுப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரொட்ஸ்கிசக் கட்சி எனப்பட்ட ஒன்று முதலாளி வர்க்கத்துடன் ஒரு கூட்டரசாங்கத்தில் சேர்ந்து கொண்டது இதுவே முதல்தடவை. இது ல.ச.ச.க.வின் வங்குரோத்தையும் சீரழிவையும் மட்டுமன்றி எல்லாவற்றுக்கும் மேலாக நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் (United Secretariat of the Fourth International) சந்தர்ப்பவாத தலைமையின் சீரழிவையும் குறித்து நிற்கின்றது. ஏர்ணஸ்ட் மண்டேல் தலைமையிலான இந்த ஐக்கிய செயலகம் (USEC) இடம்பெறப் போவதைப்பற்றிய எச்சரிக்கை சமிக்கைகளை எல்லாம் மூடி மழுப்பியதோடு ல.ச.ச.க.வை "உலகின் மாபெரும் ட்ரொட்ஸ்கிசக் கட்சி" எனவும் தலைமேல் வைத்துக் கொண்டாடியது. லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பும் 21 கோரிக்கைகள் இயக்கத்தின் தடம்புரள்வும் உடனடி விளைவுகளை ஏற்படுத்தியது. தொழிலாளர் வர்க்கத்தின் அந்தஸ்து வெகுவேகமாக தேய்ந்து போயிற்று. அரசாங்கத்தில் சேர்ந்து கொண்ட சமசமாஜக் கட்சி கிராமப்புற ஏழைகளையும் அத்தோடு தமிழ் சிறுபான்மையினரையும் பேணுவதை கைவிட்டது. இந்த இடைவெளியை நிரப்ப ஏனைய சக்திகள் நுழைந்து கொண்டன. தென் இலங்கையின் கிராமப்புறங்களில் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகள் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட மாஓவாத கோட்பாடுகளை பரப்பி வந்ததோடு அதிகரித்த அளவிலான ஆதரவையும் திரட்டிக் கொண்டன. தமிழ் சமூகத்தினரிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) போன்ற பிரிவினைவாத சக்திகள் கொழும்பு ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்ட தேசிய அடக்கு முறைக்கு ஒரே பதிலாக பிரிவினைவாத வேலைத்திட்டத்தை முன்வைத்ததோடு, பரந்த ஆதரவையும் வெற்றி கொண்டன. தற்சமயம் அரசாங்கத்தில் இருந்து கொண்டுள்ள ல.ச.ச.க.வுடன் சேர்ந்து தனது கட்சியின் சிங்கள சோவினிச வேலைத்திட்டத்தை கடைப்பிடிப்பதில் பண்டாரநாயக்க காலதாமதம் செய்யவில்லை. 1964 அக்டோபரில் அவர் இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியுடன் ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டார். இது சிறிமா- சாஸ்த்திரி உடன்படிக்கை என அழைக்கப்பட்டதோடு பிரித்தானிய தோட்ட முதலாளிகளால் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் சந்ததியினரான 975,000 தோட்டத் தொழிலாளர்களில் 525,000 தொழிலாளர்களை இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல நிர்ப்பந்தித்தது. ஒரு ஆண்டுக்குப் பின்னர் அவரது தீர்மானத்தை விளக்குகையில் சிறிமாவோ எழுதியதாவது: "இந்திய தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் இந்திய எம்.பீ.க்கள் தெரிவு செய்யப்பட்டதன் பெறுபேறாக மலைநாட்டு மக்கள் தமது அரசியல் உரிமைகளை இழந்தனர். இந்த இந்தியன் தோட்டத் தொழிலாளர்கள் அதிக அளவிலான சம்பளமும்.... பெரும் சலுகைகளும் பெறும் ஒரு மக்கள் குழுவினர் ஆவர். இந்தியத் தொழிலாளர்கள் ஆரம்ப காலம் தொட்டே நல்ல விதத்தில் நடாத்தப்பட்டனர். இதனை இவர்கள் இப்போது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் தாம் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் அதிகமாக பெருப்பித்துக் கொள்கிறார்கள். மலைநாட்டு பகுதிகளின் விவசாயிகள் தற்சமயம் இந்த வெளிநாட்டு சுரண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்." 16 ஆண்டுகளுக்கு முன்னர் சமசமாஜக் கட்சி "சுதந்திர" இலங்கை அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களுக்கும் 1948ம், 1949ம் ஆண்டுகளின் குடியுரிமைச் சட்டங்களை எதிர்த்தது. இப்போது இக்கட்சி அம்மக்களை பலாத்காரமாக நாடு கடத்தும் ஒரு அரசாங்கத்தில் பங்கு கொண்டுள்ளது. 1964 ஆண்டின் கூட்டரசாங்கம் ஆறு மாத காலத்துக்கும் குறைவாகவே உயிர்வாழ்ந்தது. இதனை எதிர்த்த ஒரு எம்.பீ.க்கள் குழுவினர் இக்கூட்டரசாங்கத்தில் இருந்து விலகி யூ.என்.பி.யில் சேர்ந்து கொண்டனர். ஆனால் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு ல.ச.ச.க.விடம் இருந்து கிடைத்து வந்த சேவைகள் இத்துடன் நின்றுவிடவில்லை. எதிர்க் கட்சியில் இருந்த சமயம் 1966 ஜனவரியில் யூ.என்.பி.க்கும் தமிழரசுக் கட்சிக்கும் (FP) இடையேயான ஒரு உடன்படிக்கைக்கு எதிராக ஒரு வேலைநிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய சிறிமாவோ சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்பட்டார். இந்த உடன்படிக்கை தமிழ் முதலாளித்துவ தலைவர்களுடன் ஒரு சமரசத்தை செய்து கொள்ள முயன்றது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் இரண்டாவது ஆட்சிக் காலம் 1960 பதுகளின் கடைப்பகுதியில் தொழிலாளர் வர்க்க இயக்கம் வளர்ச்சி கண்டது. இலங்கை இதற்கு விதிவிலக்கானது அல்ல. 1970ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சி.ல.சு.க.- சமசமாஜ- கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் பெரும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பீடம் ஏறியது. யூ.என்.பி.க்கு எதிரான எதிர்ப்பு அலை வெள்ளத்தில் இது இடம்பெற்றது. அனைத்துலக ரீதியில் 1944ல் ஸ்தாபிதம் செய்யப்பட்ட பிரெட்டன்வூட்ஸ் (Bretton Woods Conference) மாநாடு வீழ்ச்சி கண்டதன் தாக்கங்கள் ஏற்பட்டன. 1967ல் டாலருக்கு எதிராக ஸ்டேர்லிங் மதிப்பிறக்கம் செய்யப்பட்டது. ஆயினும் நாணய நெருக்கடி ஆழம் கண்டது. 1971 ஆகஸ்ட் 15ல் ஜனாதிபதி றிச்சாட் நிக்சன் நிலையான நாணய மாற்று விகிதத்துக்கு முடிவு கட்டினார். அமெரிக்க டாலருக்கான தங்க பின்னணியை நீக்கியதை தொடர்ந்து இது ஏற்பட்டது. அதிகரித்து வந்த பணவீக்கமும் எண்ணெய் விலை அதிகரிப்பும் இலங்கையில் புதிய ஈடாட்ட நிலையை ஏற்படுத்தியது. 1971 ஏப்பிரலில் வேலையின்மை, கல்வி வசதியீனம் நிலமின்மையால் உருவான மனவிரக்தியும் ஆத்திரமும் கிராமப்புறங்களில் அதிகரித்த அளவில் வளர்ச்சி கண்டதோடு ஜே.வி.பி. தலைமையிலான ஒரு கிளர்ச்சி வடிவில் வெடித்தது. கூட்டரசாங்கம் அரசின் முழுப்பலமும் கொண்டு இதை எதிர்த்தது. சிறிமாவோ பண்டாரநாயக்க அனைத்துலக ஆதரவுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான் என்பன ஏதோ ஒரு விதத்தில் உதவி வழங்க அணிதிரண்டன. 17,000க்கும் அதிகமான மக்கள் -முக்கியமாக இளைஞர்கள் -கொல்லப்பட்டதோடு மேலும் 20,000 பேர் சிறைகளுக்குள் தள்ளப்பட்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் இரண்டு அங்கத்தவர்கள் பொலிசாரால் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி. நசுக்கப்பட்டமை அவசரகாலச் சட்ட ஆட்சியின் ஆரம்பத்தை குறித்து நின்றதோடு இது 1976ம் ஆண்டு வரையும் நீடித்தது. இது தொழிலாளர் வர்க்கத்தினதும் ஏழைகளதும் போராட்டங்களை ஒடுக்கித் தள்ளப் பயன்பட்டது. கூட்டரசாங்கத்தின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்று 1972ல் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியதேயாகும். முன்னர் "சிங்களம் மட்டும்" பிரச்சார இயக்கத்தை சக்தி வாய்ந்த முறையில் கண்டனம் செய்த ல.ச.ச.க. தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வாவினால் வரையப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம், பெளத்த மதத்தை அரச மதமாகவும் சிங்களத்தை தனி அரச மொழியாகவும் உள்ளடக்கிக் கொண்டது. முன்னைய யூ.என்.பி. அரசாங்க காலத்தில் -1965ல்- தமிழ் மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்தும் விதத்தில் இயற்றப்பட்ட தமிழ் சிறப்பு விதிகளை செல்லுபடியற்றதாக்கியது. தமிழரசுக் கட்சி அரசியலமைப்பு நிர்ணய சபையை பகிஷ்கரித்ததோடு ஒரு தனிநாட்டு கோரிக்கை பிரேரணையை நிறைவேற்றியதோடு ஏனைய தமிழர் அமைப்புகளுடன் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் அமைத்தது. சரியான விதத்தில் ல.ச.ச.க. தலைவர்கள் ஒரு தடவை எச்சரிக்கை செய்தது போல் இப்போக்கு 1983ல் உள்நாட்டு யுத்தமாக வெடிக்கும் திசையில் பயணம் செய்தது. வெகுஜனங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வைக்க முடியாது போன நிலையில் அரசாங்கம் மிகவும் பிற்போக்கான போக்குகளிடமிருந்து ஆதரவை திரட்டுவதில் ஈடுபட்டது. கூட்டரசாங்கம் பல்கலைக் கழக அனுமதி தொடர்பாக தரப்படுத்தல் முறையை நடைமுறைக்கிட்டது. இதன் மூலம் தமிழ் மாணவர் எண்ணிக்கை வெட்டிக் குறைக்கப்பட்டது. வடக்கு -கிழக்கு மாகாணங்களில் அதிகரித்த அளவில் பொலிசும் இராணுவமும் குவிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உக்கிரமாக்கியது. உலகப் பொருளாதார நெருக்கடியின் வளர்ச்சியின் தாக்கமானது தொழிலாள வர்க்கத்தினதும் ஏழைகளதும் வாழ்க்கைத் தரத்தை சின்னாபின்னமாக்கியது. 1973, 74ம் ஆண்டின் "எண்ணெய் அதிர்ச்சி" யின் பின்னர் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அமுல் செய்தது. மக்கள் எதை உண்ண வேண்டும் எதை உண்ணக்கூடாது என்பது தொடர்பாகவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. வாழ்க்கைச் செலவு முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்ததோடு இறக்குமதிகள் மீதான கடும் கட்டுப்பாடுகள் பொருட் தட்டுப்பாடுகளுக்கும் வேலையின்மையின் பெருக்கத்துக்கும் இட்டுச் சென்றது. அரசாங்கத்தின் ஒரே பதில் தொழிலாளர் போராட்டங்களை சட்ட விரோதமாக்க அவசரகால விதிகளை பயன்படுத்துவதாக விளங்கியது. அரசாங்கம் தொழிலாளர் அமைப்புக்களின் சகல நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து தமது மிச்ச சொச்ச ஆதரவையும் இழக்க நேரிடுமோ என அஞ்சிய சமசமாஜ தலைவர் என்.எம்.பெரேரா ஹர்த்தால் நினைவு தினப் பேச்சில் (1975 ஆகஸ்ட் 12) அரசாங்கத்தை விமர்சனம் செய்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க அவரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இது என்.எம்.பெரேராவையும் ஏனைய சமசமாஜ அமைச்சர்களையும் இராஜினமாச் செய்து, கூட்டரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தள்ளியது. கூட்டரசாங்கத்தின் மற்றொரு பங்காளியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1977ம் ஆண்டுவரை அதில் தொடர்ந்து இருந்து வந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தாக்குதல்கள் உக்கிரம் கண்டு வந்தமை தொழிலாளர் வர்க்கத்தை கிளர்ச்சியில் ஈடுபடத் தள்ளியது. இது 1976 பொது வேலை நிறுத்தமாக வளர்ச்சி கண்டது. அரசாங்கத்தின் அவசரகாலச் சட்ட ஆட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது. லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு தடவை எழுதியது போன்று ஒரு பொது வேலைநிறுத்தம் ஆட்சி பற்றிய பிரச்சினையை தோற்றுவிக்கின்றது. ஆனால் அரசியல் அதிகாரத்துக்கான அத்தகைய ஒரு போராட்டமானது தொழிலாளர் அமைப்புக்களின் தலைவர்களுக்கு வெறுப்புக்கு உரிய ஒன்றாக இருந்தது. ஒரு முன்நோக்கு இல்லாததன் காரணமாக பொது வேலைநிறுத்த இயக்கம் நசுக்கப்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் தொழிலாளர் வர்க்கமும் கிராம்ப்புற மக்களும் சி.ல.சு.க.வுக்கு தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டனர். 168 ஆசனங்கள் 8 ஆசனங்களாக வீழ்ச்சி கண்டது. தொழிலாளர் வர்க்க போராட்டங்களின் சக்தி பண்டாரநாயக்க ஆட்சியை வீழ்ச்சி காணச் செய்த போதிலும் ஒரு சுயாதீனமான அரசியல் முன்நோக்கு இல்லாது போனதன் மூலம் யூ.என்.பி. இலாபமீட்டிக் கொண்டது. அது ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையின் கீழ் ஆட்சிப்பீடம் ஏறியது. "பண்டாரநாயக்க வாதத்தின்" முதுசம் யூ.என்.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமை உலக அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையின் தொடக்கத்தில் இடம் பெற்றது. 1970 பதுகளின் முதல் அரையிறுதிக் கால கட்டத்தில் உலக முதலாளித்துவத்தை அதிரவைத்த பொருளாதார நெருக்கடி, யுத்தத்தின் பின்னைய செழிப்பு காலத்தின் முடிவை குறித்து நின்றது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இது கீன்சியன் தேசிய விதிமுறை வேலைத்திட்டத்தினதும் சமூக நலன்புரி சலுகைகளதும் முடிவை குறித்தன. "மூன்றாம் உலக" நாடுகளில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வீழ்ச்சி கண்டன. ஜயவர்தன பதவிக்கு வந்ததுதான் தாமதம் இலங்கை பொருளாதாரத்தை ஒழுங்குமுறையாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்துவிடத் தொடங்கினார். பிரதானமான அரசுடமை துறைகளை உடைத்து எறிவதில் ஈடுபட்டார். புதிய கொள்கைகள் புதிய வடிவிலான ஆட்சியை வேண்டி நின்றது. 1978ல் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பாவித்து ஜயவர்தன ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தும் புதியதொரு அரசியலைமைப்பைக் கொணர்ந்தார். இதன் மூலம் அதிகாரம் அவரின் சொந்தக் கரங்களில் குவிந்தது. தேசிய பொருளாதார விதிமுறைகளின் முன்னைய பொருளாதார வேலைத்திட்டத்தில் இருந்து விடுபட்டுவிட்டதைக் காட்டிக் கொள்ளும் விதத்தில் ஜயவர்தன அதன் முக்கிய கர்த்தாவாக விளங்கிய சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்களை கொணர்ந்தார். இந்தப் புதிய வேலைத்திட்டம் நடைமுறையில் இருந்து வந்த வேளையில் பண்டாரநாயக்கவின் சிவில் உரிமைகள் 6 வருட காலங்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் புதிய ஆட்சியாளர்கள் "பண்டாரநாயக்கவாதத்தின்" ஒரு தீர்க்கமான தொடுவையை கட்டிக்காத்தனர்: தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்கள் உக்கிரம் கண்டது. 1983ன் "கறுப்பு ஜூலை" யில் யூ.என்.பி.யால் தூண்டிவிடப்பட்ட குண்டர்கள் ஒரு தொகை தாக்குதல்களை நாடாத்தினர். இதனால் பல நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்து அகதிகளாகினர். ஜூலை கலவரங்கள் கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையை பலிகொண்டுள்ள உள்நாட்டு யுத்தத்துக்கு இட்டுச் சென்றதோடு 60,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1980 பதுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க சி.ல.சு.க. தலைவியாக இருந்து வந்த சமயத்தில் யுத்தத்தின் பின்னைய செழிப்பு காலத்தில் அவர் அடிப்படையாகக் கொண்டிருந்த பொருளாதார வேலைத்திட்டங்கள் வீழ்ச்சி கண்டதோடு அவரின் அரசியல் ஆளுமையும் வீழ்ச்சி கண்டு போயிற்று. தற்சமயம் சி.ல.சு.க. தலைமைப் பதவிக்கான போராட்டம் வெடித்துள்ளது. இது மகள் சந்திரிகாவுக்கும் மகன் அனுராவுக்கும் இடையேயான ஒரு குடும்ப சண்டை உருவை எடுத்தது. இது இறுதியில் பொதுஜன முன்னணி சந்திரிகா தலைமையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டு அனுரா யூ.என்.பி.க்கு மாறியதோடு தீர்க்கப்பட்டது. கடந்த ஆகஸ்டில் ஒதுங்கிக் கொள்ளத் தள்ளப்படும்வரை சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக பதவி வகித்த பொதுஜன முன்னணி அரசாங்கம், யூ.என்.பி.க்கு எதிரான அலை மோதலினால் ஆட்சிக்கு கொணரப்பட்டது. ஆனால் அதனது 6 வருடகால ஆட்சியில் அது வடக்கு- கிழக்கில் யுத்த நடவடிக்கைகளை உக்கிரமாக்கியது: யூ.என்.பி.யின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர சந்தை தனியார்மயமாக்க கொள்கைகளை வெகுதூரம் முன்னெடுத்தது. சிறிமாவோ பண்டாரநாயக்க வன்முறையும் ஊழலும் நிறைந்த அக்டோபர் 10 பொதுத் தேர்தலில் தனது வாக்குகளை அளித்த ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளும், நாட்டின் பெரும்பகுதி இராணுவ ஆட்சிக்குள் இருந்த நிலையிலும், பெளத்த இனவாதிகளும் பாசிச அமைப்புகளும் அரசியல் அரங்கில் மேலாதிக்கம் கொண்டிருந்த ஒரு நிலையிலும், இறந்தது சிறிய ஒரு சங்கேத அறிகுறியாகும். இது அவரது அரசியல் முதுசத்தை ஒரு விதத்தில் தொகுத்துக் காட்டுவதாக அமைந்தது. ஆனால் இந்த நிலைமைகளை எல்லாம் தனி ஒரு தனிநபரின் சிருஷ்டியாகக் காண்பது அடியோடு தவறானதாகும். சிறிமாவோ பண்டாரநாயக்க கடந்த இருபதாம் நூற்றாண்டின் அரைவாசி காலமாக அரசியல் அரங்கில் மேலாதிக்கம் கொண்டிருந்த முன்னைய காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவ தேசியவாத அரசியல் வாதிகளின் முழுத் தலைமுறையினதும் ஒரு பிரதிநிதியாக விளங்கினார். இலங்கை விடயமாக அவர் முன்வைத்த கொள்கைகள் ஒரு சோசலிச, அனைத்துலக முன்நோக்குக்கு எதிராக நனவான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டது என்ற உண்மையிலேயே அவரின் சிறப்பு முக்கியத்துவம் தங்கியுள்ளது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மரணம், தேசிய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் தம்மை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் ஆகவும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் பாதுகாவலர்களாகவும் ஏன் சோசலிஸ்டுகள் ஆகவும் கூடக் காட்டிக் கொள்ள முடிந்த கால சகாப்தம் உண்மையில் கடந்து போய்விட்டது என்பதற்கான ஒரு அப்பட்டமான வெளிப்பாடாகும். இதை வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மாறாக தொழிலாளர் வர்க்கம் புதிய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு இதன் அரசியல் படிப்பினைகளை நனவான முறையில் புரிந்து கொண்டாக வேண்டும்.
Copyright
1998-2000 |