World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை Following the massacre of Tamil detainees SEP member speaks about his time in Sri Lankan "rehabilitation" campதமிழ் கைதிகளின் படுகொலைகளைத் தொடர்ந்து சோ.ச.க. அங்கத்தவர் இலங்கைப் "புனர்வாழ்வு" முகாமில் தனது சொந்த அனுபவம் பற்றி பேசுகின்றார் 3 November 2000அக்டோபர் 25ம் திகதி, கொழும்பில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் பண்டாரவளைக்கு அருகாமையில் உள்ள, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமுக்குள் நுழைந்த இனவாதக் கும்பல் ஒன்று, அங்கிருந்த 41 தமிழ் தடுப்புக்காவல் கைதிகளையும் வெட்டிக் கொல்ல முயன்றுள்ளது -24 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் 5 பேர் காயங்களால் இறந்துள்ளனர். ஏனைய காயமடைந்த 11 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருப்பதோடு சிலர் மோசமான நிலையில் உள்ளார்கள். இந்தத் தாக்குதல் தொடர்பாக விடையளிக்கப்படாத பல கேள்விகள் எழுந்துள்ளன. கைதிகள் தங்களின் நீண்டகால தடுத்துவைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால், பொலிசாரும் கொழும்பு தொடர்புச் சாதனங்களும், இதற்கான குற்றச்சாட்டை கைதிகள் மீதே சுமத்தும் முயற்சியில் ஈடுபட்ட அதேவேளை, இந்தப் படுகொலைகளை உள்ளூர் கிராமவாசிகளின் தன்னிச்சையான நடவடிக்கை என வருணித்தும் உள்ளனர். ஆனால் கிராமத்தவர்கள் எந்தத் தலையீடுகளையும் நிராகரித்ததோடு, குண்டர்கள் வெளியிலிருந்து முகாமுக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டதாக உலக சோசலிச வலைத் தளத்துக்கு (WSWS) தெரிவித்தனர். இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினரான, செல்லையா இராஜ்குமார், 1997ம் ஆண்டில் 7 மாதங்கள் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவராவார். ஏனையவர்களைப் போலவே அவரும் நாட்டின் கொடூரமான 'பயங்கரவாத தடைச் சட்டத்தின்' (PTA) கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் வேலைத்திட்டத்தை சோ.ச.க. எதிர்ப்பது முழு இலங்கையும் நன்கு அறிந்த விடயமாகும். இராஜ்குமார் 1996ல், வடமத்திய மாகாணத்தின் ஒரு நகரமான அனுராதபுரத்தை போல், கிழக்கு மாகாணத்துக்கு அருகில் உள்ள அருணபுர என்ற கிராமத்துக்கு செல்லும் பஸ்சில், தவறுதலாக ஏறியபோதே கைதுசெய்யப்பட்டார். பஸ்சின் பெயர்ப்பலகை, இராஜ்குமாரைப் போல் பல தமிழர்களுக்கு வாசிக்க முடியாத சிங்கள மொழியில் மாத்திரமே எழுதப்பட்டிருந்தது. விடுதலைப் புலி உறுப்பினர் என்ற பொய்க் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வைக்க அரலங்வில பொலிஸ் நிலையத்தில் 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பல சந்தர்ப்பங்களில் பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். பின்னர் இராஜ்குமார் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். சோ.ச.க.வும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஏனைய பகுதிகளும் தொடுத்த நீண்ட பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இறுதியாக 1997 ஜூலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இராஜ்குமார் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும், நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமலும், "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபராக" ஒரு வருடத்துக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இலங்கையில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பெரும்பாலும் அற்ப சொற்ப காரணங்களின் பேரிலும், நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிந்துனுவெவ நீண்ட தடுப்பு முகாமாகும். இது கிராமிய அபிவிருத்தி ஊழியர்களுக்கும் பின்னர் ஊர்காவல் படையினருக்கும் பயிற்சி நிலையமாக இருந்து வந்ததோடு, 1980களின் கடைப் பகுதியில் சிங்கள இளைஞர்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) சந்தேகநபர்களை தடுத்து வைக்க இந்த முகாம் பயன்படுத்தப்பட்டது. தற்போது இது முக்கியமாக வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளின் போது பொலிசாராலும் இராணுவத்தினராலும் கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்களை, 'விடுதலைப் புலி சந்தேக நபர்களை' தடுத்து வைக்க பயன்படுத்தப்படுகிறது. இங்கு தோட்டப்புற மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் இளைஞர்களும் உள்ளனர். கடந்த வாரத்தில் இடம் பெற்ற படுகொலைகளைத் தொடர்ந்து தகவல் தொடர்புச் சாதன அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பிந்துனுவெவ முகாமை வர்ணித்து வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் "புனர்வாழ்வின் புதிய அமைப்புமுறையில் ஒரு பகுதி" எனவும் அது "அனைத்துலக வரவேற்பைப்" பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த "மாதிரி முகாமின்" நிலைமைகளையும் ஆளுமையையும் பற்றி இராஜ்குமார் இந்த பேட்டியில் விளக்குகின்றனர். முகாமில் நான் இருந்த வேளையில் அங்கு 62 தமிழர்களும் 18 சிங்களவர்களுமாக 80 கைதிகள் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தமிழ் கைதிகள் மட்டக்களப்பு, திருகோணமலை, நீர்கொழும்பு மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கிடையாது. அங்கு விடுதலைப் புலிகளுக்கு "சட்டவிரோதமாக" தண்ணீர் வழங்கியதாக சொல்லப்படும் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகளை விட்டு ஓடியவர்களும் அங்கு இருந்தார்கள். தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விதத்தைப் பற்றி ஒரு கைதி என்னிடம் சொன்னார். அவர் யாழ்ப்பாணம் உடுதுறையைச் சேர்ந்தவர். அவரது சகோதரர் நம்பிக்கைத் துரோகி என்ற முத்திரையின் பேரில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார். இந்த மனிதர் இராணுவத்தினரை சந்தித்து முறையிடுவதற்காக கட்டுமரத்தில் பயணம் செய்துள்ளார். ஆனால் இராணுவம் அவரை கைது செய்தது. சில மாதங்கள் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அவர் இந்த புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டார். எல்லாக் கைதிகளும் ஏழை மீனவ அல்லது விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நாங்கள் எல்லோருமே வீட்டுக்குப் போகவேண்டும். நாம் திரும்புவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் அங்கு இருந்தார்கள். அவர்களுக்கு மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல வழியில்லாததால் தொடர்ந்தும் அவர்கள் தடுப்புக் காவல் நிலையத்திலேயே தங்கியிருக்கின்றார்கள். அவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்று ஒரு பேக்கரியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் எப்போதும் தமது குடும்பத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். "விடுதலைப் புலிகளுக்கு தண்ணீர் விநியோகித்ததாக" கைதுசெய்யப்பட்டவரும் இவர்களில் ஒருவர். அவர் கொடூரமான வறுமையில் வாழும் தூரக்கடல் செல்லும் மீனவர். அவர் என்னுடன் அரலங்கவில பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள். அவரது மனைவி குடும்பத்தை பராமரிக்க வீட்டு வேலை செய்யத் தள்ளப்பட்டார். அவரது 12 வயது மகன் காசு சம்பாதிப்பதற்காக மீன்பிடிக்கத் தள்ளப்பட்டான். தமிழ் தடுப்புக் காவல் கைதிகள் அனைவருமே விடுதலைப் புலி சந்தேக நபர்களாகவே வைக்கப்பட்டுள்ள போதிலும் பிந்துனுவெவ புனர்வாழ்வு நிலையம் ஒரு குறைந்த பாதுகாப்பைக் கொண்ட முகாம் என இராஜ்குமார் விளக்கினார். முகாமில் குறைந்த பாதுகாப்பு ஏற்பாடுகளே காணப்பட்டது. கேட்டில் இருக்கும் இரண்டு பொலிசாரும் எப்போதும் அங்கு இருப்பதில்லை. பரிசோதனைகள் எதுவும் இன்றி வெளியார் வந்து முகாமைப் பார்வையிட முடியும். சில நேரங்களில் இரண்டு பொலிசார் வந்து முகாமைப் பார்வையிட்டுச் செல்வார்கள். இது சாத்தியமானது, ஏனென்றால் அதிகாரிகள் எங்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை என நம்பினார்கள். யாருக்காவது தப்பிச் செல்ல வேண்டுமானால் அவர் அதை எளிதில் செய்யலாம். அண்மையில் இடம்பெற்ற படுகொலைகளைப் பற்றி கேட்டபோது, இராஜ்குமார் குறிப்பிட்டதாவது: கிராமத்தவர்களால் கைதிகள் கொல்லப்பட்டார்கள் என்பது நம்பமுடியாத ஒன்று. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கிராம யுவதிகளை குளிக்கும் இடத்தில் வைத்து தொந்தரவு செய்ததாக சில தொடர்புச் சாதனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் கைதிகள் கிராமத்தவர்கள் அந்த இடத்தில் இல்லாத குறிப்பிட்ட நேரத்திற்கே அங்கு சென்றுவருவார்கள். இந்த வகையிலான தாக்குதல்கள் ஒழுங்கு செய்யப்பட்டதாகும். நான் அங்கு இருந்த போது -ஏற்கனவே நான் குறிப்பிட்டவகையில்- தடுப்புக் காவலில் இருந்தவர்களுக்கும் கிராமத்தவர்களுக்கும் இடையில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. அவர்களிடையேயான உறவு உள்ளன்புடையதாக இருந்தது. எனக்கு ஞாபகம் இருக்கின்றது வெசக் மற்றும் ஏனைய பெளத்த பண்டிகை நாட்களில் கைதிகள் வழிப்போக்கர்களுக்காக உணவும் ஏனைய பொருட்களையும் தயார் செய்வார்கள். அவர்கள் பிந்துனுவெவ கிராமத்துக்கு சென்று முகாமை அலங்கரிப்பதற்காகவும், குளிர் பானம், பிஸ்கட் போன்ற ஏனையவைகளுக்காகவும் பனம் சேகரித்து வந்தார்கள். இந்த முகாம் ஒரு தனிமையான இடத்தில் இருக்கிறது. மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசத்தில் இருந்து வந்த கைதிகள் இந்த மலையகப் பிரதேசத்திற்கு முன்னர் வருகை தந்தது கிடையாது. எங்களுக்கு எங்காவது போகவேண்டிய தேவை ஏற்பட்டால் எங்களுக்கு வழமையாக வழிகாட்டுபவர்கள் சிங்கள கிராமத்தவர்களே. இராஜ்குமார் விளக்கியதைப் போல், நிலையத்தினுள் பாதுகாப்பு மிகவும் அருமையானதே, உத்தியோகத்தர்கள் கைதிகளுக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல்களையும் தொடுத்து வந்துள்ளார்கள். இந்தப் படுகொலை சம்பவங்களின் போது முகாமை நிர்வகித்தவரும், இப்போது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலைய பொறுப்பதிகாரியே (OIC) -கப்டன் அசோக அபேரத்ன- அப்போதும் அங்கு பொறுப்பில் இருந்தார். நான் அங்கு சென்ற மூன்று நாட்களில், அவரது நடவடிக்கை கண்டு அதிர்ச்சியடைந்தேன். மன்னம்பிட்டியில் உள்ள ஒரு கைதிக்கு அன்று காலை விடுதலை. அவரது உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வருகை தந்திருந்தனர். அவரது பயணப் பொதியும் ஏனைய பொருட்களும் தயாராகி இருந்தது. திடீரென பொறுப்பதிகாரி (OIC) அவரின் பொதியை வாங்கி, அதற்குள் இருந்து ஒரு சோடி குறடைக் கண்டுபிடித்தார். உடனடியாக அவர் கைதியை மணல் நிறப்பிய ஹோஸ் குழாயினால் இரக்கமற்ற முறையில் அவரது உறவினர்கள் முன்நிலையிலேயே தாக்கினார். அவர்கள் எல்லோரும் அழுதார்கள். இந்தக் குறடுகள் தனது பொதிக்குள் வந்ததைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார். இறுதியாக அவர்கள் அனைவரும் பின்நேரம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பயத்தினால் அவர்கள் முறைப்பாடுகள் எதுவும் செய்யவில்லை. தண்டனை கொடுக்கும் அவசியம் ஏற்படும் போது கைதிகளை தாக்குவதற்காகவே இந்த ஹோஸ் குழாய்த் துண்டை அபேரத்ன தனது காரியாலயத்தில் வைத்திருக்கின்றார் என்பதை மற்றவர்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன். இராஜ்குமார் முகாம் நிர்வாகத்தைப் பற்றியும், "புனர்வாழ்வின்" அமைப்பைப் பற்றியும் விபரித்தார். கைதிகள் வழமையாக காலை 3.30 மணிக்கு எழும்பி பிரார்த்தனை மண்டபத்தில் ஒன்று கூடவேண்டும். ஒரு மணித்தியால பிரார்த்தனை மற்றும் யோகாசன பயிற்சியைத் தொடர்ந்து கைதிகள் அனைவரும் அணிவகுப்புக்குச் செல்லவேண்டும். விளங்கினாலும் சரி விளங்காவிட்டாலும் சரி தமிழர்கள் உட்பட அனைவரும் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும். பின்னர் கைதிகளில் ஒருவர் அணிவகுப்பில் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி உரை நிகழ்த்த வேண்டும் -ஒரு வகையிலான "நல்ல அறிவுரை". நாங்கள் மீண்டும் அங்கு பின்வருமாறு சத்தியப் பிரமானம் செய்துகொள்ள வேண்டும்: "நாங்கள் முகாமுக்கு நம்பிக்கையானவர்களாக இருப்போம், நாங்கள் பொய் கூற மாட்டோம், நாங்கள் முகாமின் நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம், நாங்கள் பொறுப்பதிகாரிக்கு (OIC) நம்பிக்கையானவர்களாக இருப்போம்". முகாமில் எப்போதாவது நாம் ஒரு ஊழியருக்கு எதிரில் வந்தால் நாம் "சாந்தி", "புது சரணய்" (சிங்களத்தில் "புத்தரின் அருள் கிட்டட்டும்") எனச் சொல்வதோடு கைகளையும் தட்டவேண்டும். காலை உணவுக்கு முன்னர் நாங்கள் முகாமைச் சுத்தப்படுத்தி பூச்செடிகளை மேற்பார்வையிடல் வேண்டும். அங்கு இரண்டு கருத்தரங்கு வகுப்புகள் இருந்தன: காலையில் இரண்டு மணித்தியாலமும் மாலையில் இரண்டு மணித்தியாலமும். ஆனால் அந்தப் பயிற்சி ஒரு நகைச்சுவையானதாக இருந்தது. மின்னியல் வகுப்பில் பொருத்தமான வயரிங் (Wiring) உபகரணங்கள் கிடையாது. இருப்பவை எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட ஏழு மின்குமிழ் தாங்கிகளும் (Bulb holders) துண்டு வயர்களும். மந்தமான பயிற்சி தொடர்பாக கைதிகள் முறையிடும் போது, ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த போதும் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை. மாலையில் போலியான ஆங்கில, சிங்கள, தமிழ் மொழி வகுப்புகள். ஒரு ஆங்கில ஆசிரியர் வெளியில் இருந்து வருவார். நாங்கள் எமக்கிடையேயே தமிழையும் சிங்களத்தையும் பரஸ்பரம் கற்றுக்கொள்ள வேண்டும். காலையிலும் மாலையிலும் இடம்பெறும் கூட்டங்களிலும் விரிவுரைகளிலும், குடும்ப வாழ்க்கையின் சந்தோஷத்தைப் பற்றியும், "கெட்ட நடவடிக்கைளிலும்" ஈடுபடக் கூடாது எனவும் -அவர்கள் சொல்வதைப் போல் கலகங்களிலும் கண்டனத்திலும்- நாம் கூறிவந்தோம். கப்டன் அபேரத்ன "அறிவுரை சொல்லும் பூர்வாங்கத்தைக் கொண்டிருந்தார். நாம் எமது கடவுள் மீது அவர் எம்மைக் காப்பதாக நம்பிக்கை வைக்கவேண்டும் என அபேரத்ன குறிப்பிடுவார். இந்த சகலதும் -வேலை, யோகா, கூட்டங்கள், "அறிவுரை மற்றும் அர்த்தமற்ற பயிற்சி- எங்களை அரசியல் ரீதியில் சிந்திக்கவிடாமல், தனிப்பட்டமுறையில் சிந்திக்கவைப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன உத்தியோகத்தர்கள் சிங்கள கைதிகளுக்கு மத்தியில் இனவாத சிந்தனைகளை தூண்டிவிடுவதையிட்டு தமிழ் கைதிகள் கவலை கொண்டிருந்ததாக இராஜ்குமார் சுட்டிக்காட்டினார். எங்களுக்கிடையில் சில சிங்கள கைதிகளும் இருந்தார்கள். அவர்கள் முக்கியமாக போதை பொருளுக்கு அடிமையானவர்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள், அது அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதாக சொல்லப்பட்டது. சிலர் முழுமையாக வலதுகுறைந்தவர்கள். வகுப்புகள் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தனித்தனியாக இடம்பெற்றன. அபேரத்ன சிங்கள கைதிகளிடம் "மது அருந்தி உங்களை நீங்களே அழித்துக்கொள்வதைவிட, இராணுவத்தில் சேர்ந்து ஒரு விடுதலைப் புலி உறுப்பினரை கொன்றுவிட்டு சாவது சிறந்தது" எனக்கூறியதை கேட்டதாக சில கைதிகள் என்னிடம் கூறியுள்ளார்கள். அண்மைய படுகொலைகளுடன் நேரடியாக தொடர்புபட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் பேசினார்- எந்த ஒரு எதிர்ப்போ அல்லது அடிபணிய மறுப்பதோ கிராமத்தவர்களின் குண்டர்த் தாக்குதலுக்கான பெறுபேறை விளைவிக்கும் என்ற தமிழ் கைதிகளுக்கு எதிரான பயமுறுத்தல். ஒரு முறை இரண்டு தமிழ் கைதிகளுக்கும் இரண்டு சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு சிறிய சண்டை நடந்தது. எனக்கு காரணம் தெரியாது. ஆனால் நாங்கள் அதை முடிவுக்குக் கொணர்ந்தோம். இருந்த போதிலும் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உடனடியாக ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து எங்களை எச்சரித்தார்: "நீங்கள் எதிலாவது ஈடுபட்டால் வெளியில் வாழும் சிங்களவர்கள் வந்து உங்களை துண்டு துண்டாக வெட்டிவிடுவார்கள். நீங்கள் தமிழர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் இங்கேயே இருக்க வேண்டியதுதான்" என்றார். இனவாத பயமுறுத்தலால் எங்களை பயமுறுத்தி வைப்பதே அவரது தேவை. ஆனால் உள்ளூர் மக்களுக்கு நாங்கள் தமிழர்கள் என்பது தெரியும். நிலையப் பொறுப்பதிகாரியும் (OIC) ஏனைய உத்தியோகத்தர்களும் எங்களைப் பற்றிய ஒரு சந்தேகத்தை உருவாக்க முயற்சித்தனர். சிங்களக் கைதிகள் (சம்பவத்தோடு தொடர்புபட்டவர்கள்) முகாம் தலைவரின் உதவியுடன் கொழும்பு தலைமையகத்துக்கு சென்று, எங்களுடன் வாழ முடியாது என்று முறையிட்டுள்ளனர். அந்த இரண்டு தமிழர்களும் தண்டனையாக சுமார் ஒரு வாரகாலமாக இருட்டறைக்குள் தள்ளப்பட்டிருந்தனர். நிலையத்தில் இருந்துவரும் வழமையான நிலைமைகளையும் முகாமின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் எதனையும் அதிகாரிகள் நிராகரிப்பதையும் பற்றி இராஜ்குமார் விளக்கினார். ஒரு பாயும் படுக்கை விரிப்பொன்றும் தலையனையொன்றுமே எங்களுக்கு தூங்குவதற்காக விநியோகிக்கப்பட்டிருந்தது. கட்டிடங்களைப் போன்ற இரண்டு மண்டபங்களிலேயே நாம் வாழ்ந்தோம். எங்களுடைய கட்டிடத்தில் 40 பேர் இருந்தோம். எங்களுக்கு அறைகள் இருக்கவில்லை. எங்களுக்கு பாய் விரித்துக்கொள்ளவும் ராக்கை ஒன்றை சொந்தமாக வைத்துக்கொள்ளவும் மண்டபத்தில் ஒரு சிறிய பகுதி வழங்கப்பட்டிருந்தது. அரலங்கவில பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூரமான சித்திரவதையால் நான் இன்னமும் துன்பம் அனுபவிக்கின்றேன். ஆனால் நான் இரத்த வாந்தி எடுத்த நிலையிலும் எந்த ஒரு சுமையும் தூக்கமுடியாத போதும் கூட மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை. ஏனையவர்களும் பொலிசாராலோ அல்லது இராணுவத்தினராலோ கடுமையாக தாக்கப்பட்டிருந்த போதும் இன்னும் அவர்களுக்கு அவசியமான மருத்துவ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சாதாரண சுகவீனத்துக்கும் நாங்கள் முகாமில் முதலுதவியை நாடவேண்டியிருந்தது. கடுமையான சுகவீனத்துக்கு நாங்கள் பண்டாரவளை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். நான் விடுதலையாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு எதிர்ப்பை தெரிவிக்க நினைத்தோம். எங்களுக்கு நிறைய முறைப்பாடுகள் இருந்தன. எங்களுடைய உறவினர்களுடன் கடிதப் பறிமாற்றங்கள் செய்யமுடியவில்லை. அபேரத்ன கடிதங்களை தபாலில் போட மறுத்தார். எங்களுக்கு வரும் கடிதங்களை அவரும் பிரித்து வாசிப்பார். பதிவுத் தபால் கூட எங்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை. சாப்பாடு மிகவும் மோசமாக இருந்தது. கழிவறைகள் பாவிக்கக் கூடிய நிலையில் இருக்கவில்லை. அங்கு சில வயதான கைதிகளும் 12 வயது இளமையான சிறுவர்களும் இருந்தது பெரும் பிரச்சினையாக இருந்தது. நாங்கள், அவர்கள் விடுதலை செய்யப்பட்டு சரியான நிலைமைகள் வழங்கப்படவேண்டும் என கோரினோம். நாங்கள் அபேரட்னவிடம் தெரிவித்தபோது, அவர் உயர் அதிகாரி ஒருவரை சந்திக்கவேண்டும் என நிராகரித்தார். பின்னர் அவர் ஒரு ஆணையாளரை முகாமுக்கு அழைத்து வரவேண்டியதாயிருந்தது. நிலையப் பொறுப்பதிகாரி வராத நேரம் நாங்கள் அவரிடம் பேசும்போது இதை சுட்டிக்காட்டினோம். மூன்று மாதங்களில் வயதான கைதிகளையும் சிறுவர்களையும் விடுதலை செய்வதாக அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் இது நிறைவேற்றப்படவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரம் முகாமுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி இராஜ்குமார் விளக்கினார். ஆரம்பத்தில் அபேரத்ன சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு அனுமதி வழங்கினார், ஆனால் பின்னர் அவர்கள் தடுக்கப்பட்டனர். பார்வையிடுவதற்கான அனுமதி உறவினர்களுக்கு மாத்திரம் என வரையறுக்கப்பட்டது. சோ.ச.க. வழக்கறிஞர் என்னோடு பேசும்போதும் கூட ஒரு உத்தியோகத்தர் அங்கு நின்றுகொண்டிருப்பார். ஆனால் இறுதியாக அரசாங்கமும் உயர் அதிகாரிகளும் என்னை விடுதலை செய்யத் தள்ளப்பட்டனர். பிரச்சாரத்தின் அபிவிருத்தியைப் பற்றி நான் ஏனைய கைதிகளுக்கும் குறிப்பிட்டிருக்கின்றேன். அவர்கள் கட்சியில் சேராவிட்டாலும், இவ்வாறான கட்சியில் சேரத் தோன்றுவதாக சிலர் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். தேசிய கீதத்தைத் தொடர்ந்து "தினம் ஒரு தலைவர்" பேச்சுக்கான எனது முறை, சுதந்திர தினத்தன்று வந்தது -பெப்பிரவரி 4, 1997. எனது 10 நிமிட உரையில் நான் சொன்னேன்: எல்லாக் கட்சிகளும் சுதந்திரத்தைக் கொண்டாடும் போது இலங்கை சுதந்திரம் அடைந்து விட்டதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் அது முதலாளித்துவ வர்க்கத்துக்கான சுதந்திரம், தொழிலாளர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்ல". யுத்த நிலைமைகளின் கீழ் ஜனநாயகத்தை அனுபவிப்பவர்கள் எவரும் இல்லை என நான் விளக்கினேன். இதற்கு முன்னர் எல்லா அரசியல்வாதிகளும் பொய்யர்கள் என கைதிகளில் சிலர் என்னை கிண்டல் செய்ததுண்டு. பின்னர் கிண்டல்கள் நிறுத்தப்பட்டன. சிலர் எனது பேச்சுக்காக என்னைப் பாராட்டியதோடு அவர்கள் நண்பர்களாகவும் ஆயினர். முகாமின் அதிகாரி அன்று காலை அங்கு சமூகமளித்திருக்காவிட்டாலும் அவர் அதைப்பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அறிவித்திருந்தார். அன்று மாலை அவர் என்னை போலியாக பாராட்டிய போதிலும் அதன் பின்னர் எனது அடுத்த மூன்று முறைக்கும் "தினம் ஒரு தலைவர்" பேச்சை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 1997 ஜூலை நான் விடுதலையான பின்னர் கைதிகள் எட்டு முறை எனக்கு கடிதங்கள் அனுப்பியிருந்தார்கள். நான் பதில் அனுப்பியபோதும் எனது பதில் அவர்களைச் சென்றடையவில்லை. 1997 நவம்பர் மாதம் கைதிகள், தடுப்புக் காவல் காலத்தைக் குறைக்குமாறும், வயதான கைதிகளையும் சிறுவர்களையும் விடுதலை செய்யுமாறும், முகாமை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதை நிறுத்துமாறும் கோரி உண்ணாவிரதம் இருந்தார்கள். அது இடம்பெற்ற வேளையில் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் கூட உண்ணாவிரதம் இருந்தவர்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நானும் என் மனைவியும் சென்றபோது, "எம்மால் உன்னை உள்ளே அனுமதிக்க முடியாது! வெளியே போ!" என அபேரட்ன எங்களைப் பார்த்து கத்தினார். உண்ணாவிரதம் இருந்தவர்கள் என்னைக் கண்டவுடன் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள், ஆனால் அவர்கள் என்னுடன் பேச அனுமதிக்கப்படவில்லை. பிரதேசத்தில் இருந்து நாம் சென்று விட்டோம் என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காக அபேரத்ன ஒரு ஊழியரை பிரதான வீதி வரையும் அனுப்பியிருந்தார்.
Copyright
1998-2000 |