World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை On-the-spot-report சம்பவ தளத்தில் இருந்து ஒழுங்கு செய்யப்பட்ட இனவாதக் குண்டர்களால் இலங்கையில் தமிழ் தடுப்புக் காவல் கைதிகள் துண்டம் துண்டமாக வெட்டிக் கொலை By our correspondents புதன் கிழமை காலை ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள இனவாதக் குண்டர் குழு தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிந்துனுவெவயில் உள்ள அரச தடுப்பு முகாமினுள் புகுந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 தமிழ் தடுப்புக் காவல் கைதிகளையும் துண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். தற்போது வரை 28 பேர் இறந்துள்ளனர். 24 பேர் தளத்திலேயே கொல்லப்பட்டனர் ஏனைய 4 பேர் காயங்களால் இறந்துள்ளனர். எஞ்சி இருந்தோர் மோசமான நிலையில் வைத்தியசாலையில் பலத்த பொலிஸ் காவலுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. பிந்துனுவெவ பண்டாரவளை நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்தில் தீவின் மத்திய மலையகப் பகுதியில் அமைந்துள்ளது. கிராமவாசிகளின் தகவலின்படி கத்தி, வாள், தடிகள், கற்கள் போன்வற்றுடன் பல நூற்றுக்கணக்கான குண்டர்கள் வாகனங்களில் முகாமிற்கு வந்துள்ளனர். அவர்கள் தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை கொலை செய்ததோடு அவர்களுடைய சடலங்களையும் கட்டிடங்களையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். நாங்கள் பண்டாரவளை வைத்தியசாலையில் பயங்கரமான நிலைமையை அவதானித்தோம் -மோசமாக எரிக்கப்பட்ட உடல்களும் தலையிலும் கழுத்திலும் பலத்தக் காயங்களுடனான சடலங்கள். வைத்தியசாலை சேவையாளர் ஒருவர் தலையில்லாத சடலங்களை கண்டதாக குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள சிங்கள சோவினிச பத்திரிகை ஒன்று மிக விரைவாக கைதிகளை குற்றம் சாட்டி கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றே கிராமவாசிகள் சுயாதீனமாக ஒரு கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தக் காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டியது. நேற்றைய 'திவயின' பத்திரிகை "பிந்துனுவெவ கிராமமும் புலிகளும் (விடுதலைப் புலி அங்கத்தவர்களும்) மோதி 24 புலிகள் சாவுக்கு முகம் கொடுத்துள்ளனர்" என்றத் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. தடுப்புக் காவல் கைதிகள் முகாம் பொறுப்பதிகாரியையும் பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கி அவர்களது சீருடைகளையும் ஆவணங்களையும் கொழுத்தி அவர்களுடைய ஆயுதங்களை பறித்துக்கொண்டு கலவரம் செய்ததாக இப்பத்திரிகை குற்றம்சாட்டியிருந்ததது. ஆனால் உண்மைகள் வேறு திசையில் உள்ளன. இந்தக் குரூரமான படுகொலை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் சிங்கள சோவினிச குழுக்களை உள்ளடக்கிய, இலங்கை ஆயுதப்படைகளின் ஆதரவை பெற்றுக்கொண்ட ஒழுங்குப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்பதை காட்டி நிற்கின்றது. அனைத்துத் தடுப்புக் காவல் கைதிகளும் "புலிகளின் சந்தேக நபர்கள்" என விசாரணையின்றி நீண்டகாலமாக நாட்டின் குரூரமான சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் யுத்தக் களமாக விளங்கும் வடக்கு-கிழக்கை சார்ந்தவர்கள் இருவர் தோட்டப்புறத்தைச் சார்ந்தவர்கள் சம்பவத் தினத்திற்கு முதல் நாள் இரவு 10 மணிக்கு கைதிகளின் விடுதலையின் தாமதம் தொடர்பாக முகாம் பொறுப்பதிகாரி கப்டன் அபேரத்னவிற்கும் அங்கு இருந்த தடுப்புக்காவல் கைதிகளுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. தடுப்புக் காவல் கைதிகள் தன்னை சுற்றி வளைத்து பயமுறுத்தும் பாணியில் வைத்திருந்தமையினால் முகாமில் காவலில் இருந்த பொலிசார் வானத்தை நோக்கி சுட்டதாக அபேரத்ன 'சிரச' தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்கியிருந்தார். இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் பண்டாரவளையில் இருந்து பொலிசாரையும் தியத்தலாவை இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினரையும் வரவழைத்தனர். ஏன் மேலதிகமான காவலாளிகள் அங்கு இருந்தனர், அல்லது அங்கிருந்து நடு இரவில் அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது தொடர்பாக முரண்பட்ட அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் எப்படி இருப்பினும் காவலாளிகளினதும் பொறுப்பதிகாரியினதும் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி குண்டர்கள் முகாமினுள் நுளையக்கூடியதாக இருந்துள்ளது. சம்பவத்தை கண்ட, கேட்ட கிராமவாசிகள் பத்திரிகைகளும் பொலிசாரும் படுகொலைக்கு தம்மை குற்றம்சாட்டியுள்ளதை கடுமையாக மறுதளித்தனர். ஒரு கிராமவாசி இவ்வாறு கூறினார்: "கிராமவாசிகளான நாங்கள் விவசாயிகள் எங்களிடம் வாகனங்கள் இல்லை. தாக்கியவர்கள் பல வாகனங்களில் வந்துள்ளார்கள்". மற்றொருவர் நேரடியாக பொலிசாரை குற்றம்சாட்டி பின்வருமாறு குறிப்பிட்டார்: "தற்போது பொலிசார் அப்பாவி மக்களை தொடர்புபடுத்தி ஒரு கதையை சிருஷ்டிக்க முயல்கின்றனர். அவர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக எதுவும் தெரியாதது போல் நடிக்கின்றனர். பொலிசார் இதை தடுத்திருக்கலாம்." மற்றவர்கள் பலியானவர்களுக்கு தமது அனுதாபத்தை வெளிப்படுத்தினர். ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை உதவி அதிபர் பின்வருமாறு குறிப்பிட்டார்: "அவர்கள் நல்ல இளைஞர்கள். அவர்களுக்கு நான் பல விரிவுரைகள் செய்துள்ளேன் (முகாமில்). அவர்கள் சிரமதான நடவடிக்கைகளில் பங்குபற்றி கிராமத்துக்கு உதவி செய்துள்ளனர்." ஒரு வயோதிப விவசாயி "இந்த இளைஞர்கள் கிராமவாசிகளுக்கு எந்த ஒரு தீங்கினையும் செய்யாதவர்கள். எனவே எங்களுடைய கிராமத்தவர்கள் அவர்களை தாக்கியிருப்பார்கள் என நான் கருதவில்லை. என்னால் அதை நம்ப முடியாது." ஒரு பெண் பின்வருமாறு குறிப்பிட்டார். இந்த இளைஞர்கள் அப்பாவிகள் இவர்கள் கிராமத்திற்கு நல்ல சேவை செய்தார்கள். இந்த முகாம் இங்கு 15 வருடங்களாக இருந்த போதிலும் அவர்களால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையையும் எமக்கு இருக்கவில்லை. அவ்வாறு நாங்கள் அனுபவப்படவும் இல்லை. தடுப்புக் காவல் கைதிகளை குறியாகக் கொண்டு பண்டாரவளையிலும் பிந்துனுவெவயிலும் ஒட்டப்பட்டிருந்த தமிழர் விரோத இனவாத சுவரொட்டிகள் சிங்களத் தீவிரவாதிகளின் தொடர்பை சுட்டிக்காட்டும் மற்றும் ஒரு சம்பவமாகும். அச்சுலோகங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன. "புனர்வாழ்வு புலி கிராமத்துக்குள் ஓர் கிருமி அவர்களை விரட்டியடி". "புலிகளுக்கு நல்ல தண்ணீர் எமக்கு சேறு கலந்த தண்ணீர்." "பானாதிபாதா (உயிர்களைக் கொல்வதற்கு எதிரான பெளத்த சுலோகம்) உமக்கு ஓய்வு". முகாமுக்கு அருகாமையில் 8 கிராமங்கள் உள்ளன. அவையாவன: அலுத்கம, அபுகஸ் உல்பத்த, குருவிதுகல, மடுவல்பத்தன, கந்தகும்புர, பிந்துனுவெவ, படுள்ளகஸ்தென்ன, திகுல்பதுமுள்ள. வியழக்கிமை காலை பொலிஸ் கிராமத்துக்கு வந்து வீடுகளை சோதனையிட்டு கிராமவாசிகளை பண்டாரவளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாக்கு மூலம் அளிக்குமாறு கட்டளையிட்டனர். 400க்கும் அதிகமான கிராமவாசிகள் பெண்கள் சிறுவர்கள் உட்பட பொலிஸ் நிலையத்துக்கு சென்றோர் பஸ்களில் சில கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தியத்தலாவை இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு பல மணித்தியாலங்களாக திறந்த வெளியில் உணவின்றி நிறுத்தப்பட்டிருந்தனர். படுகொலையில் சம்பந்தப்பட்டதாக ஐம்பது கிராமவாசிகள் சுயாதீனமாக ஒப்புக்கொள்ளுமாறு பொலிசார் அவர்களை வற்புறுத்தினர். அவர்கள் கோபமாக தமக்குத் தொடர்பில்லை என மறுதலித்தனர். மாலை 5 மணியில் இருந்து காலை 5 மணிவரை பண்டாரவளை பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பதற்கு சற்று முன்னதாக கிராமவாசிகள் இறுதியாக விடுதலை செய்யப்பட்டனர். பண்டாரவளை நகரசபை உதவித் தலைவர் ரகுபதி முகாமுக்கு விஜயம் செய்து அது ஒரு யுத்தக் களமாக காட்சியளித்ததாக குறிப்பிடடார். அத்தோடு "இது ஒரு சுயாதீனமான தாக்குதல் அல்ல. இது நன்றாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டார். இந்தப் படுகொலைகளை பல தமிழ் கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) உட்பட கண்டித்துள்ளன. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு அறிக்கையை விடுத்து அவ்வறிக்கையில் இந்த மரணம் தொடர்பாகவும் காயங்கள் தொடர்பாகவும் "ஆழ்ந்த கவலை" அடைந்திருப்பதாகவும் "இச்சம்பவத்தை தயவுதாட்சன்யம் இன்றி கண்டிப்பதாகவும்" குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் "வெளிச் சக்திகளின் மோதல்களே இந்த நிலமைக்கு இட்டுச் சென்றுள்ளது". மேலும் நிர்வாகத்துக்கும் தடுப்புக்காவல் கைதிகளுக்கும் எந்தவிதமான சம்பவங்களும் எந்த நேரத்திலும் நிகழவில்லை. அத்தோடு அயலவர்களிடமும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எந்த 'வெளிச் சக்திகளை'' அரசு குற்றம்சாட்டுவதற்கு முயல்கிறது என்பது ஏனைய உத்தியோகபூர்வ அறிக்கைகளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தகவல் ஊடக அமைச்சர் அனுர யாப்பா ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கைகளில் ஒரு உத்தியோகபூர்வ விசரணையும் இந்தக் கொலைகள் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை களங்கப்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் வக்கிரமான முறையில் "இதற்கு பின்னணியில விடுதலைப் புலிகள் இருப்பதற்கான சந்தேகமும் இருப்பது இயற்கையானது" எனவும் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரால் லயனல் பலகல்ல மேலும் ஒரு படி மேலே போய் ரொய்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு குறிப்பிடும் போது" இந்த சம்பவத்துக்கு பின்னணியில் சில ஆர்வமுள்ள கட்சிகள் இருப்பது திட்டவட்டமானது என்பது எமக்குத் தெரியும்". மேலும் இந்த முகாமுக்கு கடந்த 3 வாரங்களாக வந்து சென்றவர்கள் இவ்வாறான ஒரு பிரச்சினையை உருவாக்கி விட்டுள்ளார்கள் என சுட்டிக்காட்டினார். பலகல்லயின் இந்தக் கருத்து பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களைப் பாதுகாப்பவர்களையும் குற்றம்சாட்டுவதற்கான அப்பட்டமான முயற்சி. கைதிகளின் நீண்டகால தடுப்புக்கு எதிராக அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையையும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் படுகொலையை ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பாக மிகக் குறுகிய அளவே குறிப்பிடப்பட்டுள்ளது. -கடந்த காலத்தில் தமிழர் விரோத தாக்குதல்களை மேற்கொண்ட சிங்கள தீவிரவாதக் குழுக்கள் அண்மைக் காலத் தேர்தலின்போது ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தங்களது பிரச்சாரத்தில் இந்த சோவினிச தட்டுக்களுக்கு அழைப்பு விடுத்தனர். மற்றைய உத்தியோக பூர்வ விசாரணைகள் போல், இந்தப் படுகொலை தொடர்பான விசாரணையும் அரசாங்கத்துக்கும் அரச படைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றும் அல்ல. இந்த படுகொலை 1983ல் தமிழர் விரோத கலவரத்தின் போது பல நூற்றுக்கணக்கான உயிர்கள் கொலை செய்யப்பட்டு ஒரு சிவில் யுத்தத்துக்கு வழியமைத்த கலவரத்தின் போது கொழும்பு நகரத்தில் உள்ள வெளிக்கடைச் சிறைச்சாலையில் 53 கைதிகள் கொலை செய்யப்பட்டதை ஞாபகப்படுத்துகிறது. 1997 டிசம்பரில் சிங்கள கைதிகள் சிறைக் காவலர்களாலும் படைவீரர்களாலும் தூண்டப்பட்டு 4 தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறையில் கொலை செய்யப்பட்டு பலர் காயப்படுத்தப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு விசாரணைகளின்றி பல மாதங்களாகவும் வருடங்களாகவும் தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அரச படைகளால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயமுறுத்தலினதும் சித்திரவதையினதும் ஒரு பாகமாக அமைந்துள்ளது. பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் "விடுதலைப் புலி சந்தேக நபர்கள்" கட்டாய மூளைச் சலவைக்காக வைக்கப்பட்டுள்ள அரச முகாம்களில் ஒன்றாகும். பெரும்பான்மையான "சந்தேக நபர்களுக்கு" விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை. சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவரான செல்லையா இராஜ்குமார் பல மாதங்களாக பிந்துனுவெவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக பிரச்சாரத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
சோசலிச சமத்துவக் கட்சி தொலைபேசி 01-68 22 20 email: seplanka@lanka.ccom.lk
Copyright
1998-2000 |