World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : ஐக்கிய அமெரிக்கா


The Republican right prepares for violence

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: குடியரசுக் கட்சி வலதுசாரிகள் வன்முறைக்கு தயார் செய்கிறார்கள்

By the Editorial Board
24 November 2000

Back to scrren version

கடந்த செவ்வாய்க்கிழமை புளோரிடா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாக புஷ்சின் பிரச்சாரமும் தொடர்புசாதன சகாக்கள் காட்டிக் கொண்ட வெறிப்பிடித்த பிரதிபலிப்புகளும் பிரமாண்டமான சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் உண்மையை அம்பலமாக்கியுள்ளன. குடியரசுக் கட்சி தமது இலக்குகளை அடைய பாராளுமன்றத்துக்கு புறம்பானதும் வன்முறையானதுமான விதிமுறைகளைக் கையாளத் தயாராகி வரும் தீவிர வலதுசாரிச் சக்திகளின் கருவியாகியுள்ளது.

George W. Bush இனதும் குடியரசுக் கட்சி சார்பு தொடர்பு சாதனங்களதும் பேச்சாளர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதிபலிக்கச் செய்தனர். நீதிமன்றம் செய்தது எல்லாம் சகல வாக்குகளும் நியாயமான முறையில் எண்ணப்பட வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட அவசியத்தை ஊர்ஜிதம் செய்ததேயாகும். இப்பேச்சாளர்கள் புளோரிடா சட்டசபை நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒரு அரை- ஆயுதக் கிளர்ச்சி பண்பினைக் கொண்ட இராணுவத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

சரமாரியான பொய்களும் பிழையான தகவல்களும் -நீதிமன்றம் 'சட்டவிதிகளை மாற்றி', "தேர்தல் விதிமுறைகளை மீளவரைந்து கொண்டுள்ளது" என குற்றம் சாட்டியதோடு, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரை தேர்தலை திருடிக்கொள்ள முயலும் குண்டனாக கண்டனம் செய்ததோடு, இனவாத, யூதர் எதிர்ப்பு உணர்வுகளுக்கும் அழைப்பு விடுத்தமை- உள்நோக்கங்களைக் கொண்டிருந்தன. புதன்கிழமை காலை புஷ்சின் ஆதரவாளர் கும்பல் மியாமி டேட் கவுன்டி பிரச்சாரகர்கள் சபையை முற்றுகையிட்டதோடு, ஒரு ஜனநாயகக் கட்சி வழக்கறிஞரையும் வளைத்துப் பிடித்தது. அத்தோடு வாக்குகளை மீள எண்ணுவதில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்கப் போவதாகவும் பயமுறுத்தியது. ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலான சபை அதனது வாக்குகளை மீளக் கணக்கிடும் வேலையை கைவிடுவதாக அறிவித்தது. இதன்மூலம் கோருக்கு ஆதரவாக வாக்களித்து அசல் இயந்திர வாக்கு கணிப்பில் சேர்க்கப்படாது போன பல நூற்றுக் கணக்கானவர்களின் வாக்குரிமை இல்லாமல் செய்யப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பான கோரினதும் புஷ்சினதும் பிரச்சாரங்களின் உத்தியோகபூர்வமான பிரதிபலிப்புக்கள் முற்றிலும் வேறுபட்டதாக விளங்கின. செவ்வாய் மாலையில் கோர் தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி, தேசிய ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததோடு புளோரிடா வாக்கு மீளக் கணக்கெடுப்பின் இறுதி முடிபுகளை அங்கீகரிக்கும்படியும் கோரும் புஷ்சின் பிரச்சாரத்துக்கு பொதுஜன ஆதரவு வழங்கும்படியும் கோரினார். தமது குடியரசுக் கட்சி எதிர்ப்பாளருடன் இணங்கிப் போகும் விதத்தில் தமது அளிப்பை திரும்பக் கூறிக்கொண்ட கோர் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி என்ற விதத்தில் முன்கூட்டியே கூறிவிட முடியாததும் வெடித்துச் சிதறும் சாத்தியம் கொண்டதுமான விளைவுகள், ஒரு ஒழுங்குமுறையான அதிகாரக் கையளிப்பை பாதிக்கும் எனவும் அரசியல் அமைப்பினுள் அப்பட்டமான மீறலாகி விடும் சாத்தியத்தையிட்டும் துயரம் அடைந்து பேசினார்.

முன்னாள் இராஜாங்கச் செயலாளரும் புஷ்சின் பிரதிநிதியுமான ஜேம்ஸ் பேக்கர் ஐக்கியத்துக்கான கோரின் அழைப்பையிட்டோ அல்லது டெக்சாஸ் ஆளுனரை சந்திக்கும் கோரின் விருப்புப் பற்றியோ எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாறாக அவர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை "ஏற்றுக்கொள்ள முடியாதது" எனக் கண்டனம் செய்தார். அத்தோடு "புளோரிடா சட்டசபை மூலச் சட்டங்களை ஊர்ஜிதம் செய்ய முயலுமானால் எவரும் ஆச்சரியம் அடைய வேண்டியதில்லை" எனக் கூறி, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலான மாநில சட்டசபையை நீதிமன்றத் தீர்ப்பை மீறும்படி தூண்டினார்.

பேக்கர் தமது நினைவுக் குறிப்பை வோல் ஸ்ரீட் ஜேர்ணலில் இருந்து பெற்றுக் கொண்டார். அது நீதிமன்றத் தீர்ப்பையிட்டு முன்கூட்டியே ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது. "சட்டசபைக்கு ஒரு தெரிவே உள்ளது. திருமதி. ஹரிசுக்கும் (குடியரசுக் கட்சி இராஜாங்கச் செயலாளரும் புளோரிடா பிரச்சாரத்துக்கு புஷ்சின் இணைத் தலைவரும்) உயர் நீதிமன்ற ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கும் இடையேயான எந்த ஒரு தகராறையும் தீர்த்துவைக்க தயாராக உள்ளது என்பதை தெளிவுபடுத்துவது எமது கடமை என நினைக்கின்றோம். குடியரசுக் கட்சிக்காரர்கள் தற்சமயம் சட்டசபையை உறுதியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருப்பதால் அவர்கள் வெற்றிகொள்ளும் வாய்ப்பு உள்ளது".

பில் கிளின்டனுக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு சதியிலான தனது பாத்திரத்துக்கு சமமான விதத்தில் வோல் ஸ்ரீட் ஜேர்ணல் (Wall Street Journal) தீவிர வலதுசாரி சக்திகளின் ஊதுகுழலாக கடமையாற்றியுள்ளது. அது தேர்தல் தினத்தில் இருந்து பொதுஜன அபிப்பிராயத்தை நச்சுத்தனமான குற்றச்சாட்டுக்கள், தவறான தகவல்கள் மூலம் மாசுபடுத்தியதோடு தேர்தலை குடியரசுக் கட்சிக்காரருக்கு சார்பாக கடத்தவும் முயன்றது. இது கோரின் சாத்தியமான வெற்றிக்கு எதிராக இராணுவத்தினுள்ளே ஒரு நிஜமான இராணுவக் கிளர்ச்சியை தூண்டிவிடவும் முயன்றது. சட்டரீதியில் பூர்த்தி செய்யப்படாத வெளிநாட்டில் உள்ள இராணுவத்தினரின் பல நூற்றுக்கணக்கான வாக்குகளை நிராகரிப்பதை சாட்டாக வைத்து இக்கிளர்ச்சியை பரப்ப முயன்றது.

புதன்கிழமை "வோல் ஸ்ரீட் ஜேர்ணல்" "இராணுவத்தின் மீது ஜனநாயகக் கட்சி யுத்தம்" என்ற தலைப்பிலான ஒரு சூடேறிய கட்டுரையை வரைந்து இருந்தது. இராணுவ வாக்குகளை தள்ளுபடி செய்ததை "ஜனநாயகக் கட்சியின் கோருக்கும் அமெரிக்க இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்று வரும் கலாச்சார யுத்தத்தின் மற்றொரு போர்" எனக் குறிப்பிட்டு இருந்தது. இந்தக் கட்டுரை இனவாதத்தை வாந்தியெடுத்ததோடு தொழிலாளர் வர்க்கத்தின் பேரில் வெறுப்பையும் தூண்டுவதாக அமைந்திருந்தது. இக்கட்டுரையாளர் ஜனநாயகக் கட்சி "இடது" வின் -ஆசிரியர் சங்கங்கள், பெண்ணீய செயற்பாட்டாளர்கள், கறுப்பு தேவாலயங்கள், (பல்கலைக்கழக) பக்கல்டி கிளப்புகள் (Faculty clabs) "சதைப்பிண்டங்களின் உதறல்" பற்றி பேசினார்.

தேர்தல் நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கியதும் மறைமுகமாக இடம்பெற்ற இனவாதத்துக்கும் யூத எதிர்ப்புக்கும் அழைப்பு விடுப்பது புஷ் ஆதரவாளர்கள் தரப்பில் அதிகரித்த அளவில் இடம்பெறத் தொடங்கியது. குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் கறுப்பர் இன எதிர்ப்பு மோதுதல்களைத் தூண்டிவிட ஜெசி ஜக்சனின் பாத்திரத்தை சாதகமாக்கிக் கொண்டனர். பெருமளவிலான ஓய்வுபெற்ற யூதர்களை அடிப்படைவாத மனப்பான்மைக்கு உரம்போட பாம்பீச்சுக்கு கொணர்ந்தனர்.

வோல் ஸ்ரீட் ஜேர்ணல் இத்தகைய விதிமுறைகளில் இருந்து விலகி நிற்கவில்லை. மேலே சுட்டிக்காட்டிய ஆசிரியத் தலையங்கத்தில் அது புளோரிடா யூத மக்கள் மீது பாய்ந்து விழுவதற்கு கனத்த வார்த்தைகளை கையாண்டது. திருமதி. ஹரிஸ் "ஒரு நியூயோக் உண்மையைத் திரிப்பவராக அல்லாது தென் மாநில பிரபுவாக இருப்பதற்காகவே கண்டனத்துக்கு இலக்காகியுள்ளார் "எனக் குற்றம் சாட்டியது. இது "இனவாத உணவூட்டத்துக்காக ஜசி ஜக்சனை இறக்குமதி செய்ததற்காக" ஜனநாயகக் கட்சிக்காரர்களை தொடர்ந்து கண்டனம் செய்தது.

மொத்தத்தில் இந்த ஆசிரியத் தலையங்கம், வெள்ளை மாளிகையில் அதிகாரத்தைக் கைப்பற்றுகையில் குடியரசுக்கட்சி பாரம்பரியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளை கைவிட்டுவிடுமாறு குடியரசுக் கட்சிக்கு விடுக்கப்பட்ட ஒரு அழைப்பாக விளங்கியது. நிர்வாகத்தை ஒரு அதிகார தோரணைமிக்கதாக கடைப்பிடிக்குமாறு வெற்றிகரமான புஷ் பிரச்சார இயக்கத்துக்கு மறைமுகமான இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதுடன் இது முற்றுப்பெற்றது:

"இந்தச் சச்சரவோடு ஆளுனர் புஷ் ஜனாதிபதியானால் அவர் ஒரு நொண்டியாக விளங்குவார் என்பதே சம்பிரதாயமான அறிவாகும். ஆனால் புளோரிடாவில் இன்று நடாத்தப்படும் வகையான தாக்குதலுக்கு முகம் கொடுப்பதை எதிர் வரவுள்ள நிலைமைக்கு தயார் செய்வதற்கான நல்ல தயாரிப்பாகவும் நாம் காண்கின்றோம். மிருதுவான கையுறையை வழங்குவது ஆளுனர் புஷ்சின் வழக்கமாகும். ஆனால் அவரும் அவரது கட்சியும் அதனுள் உருக்கானவை இருப்பதாக காட்டமுடிந்தால் அவர் பெரிதும் வெற்றியீட்ட முடியும்".

சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் இந்த ஆசிரியத் தலையங்கம் "The Squcamish Gop" என்ற தலைப்பை கொண்டிருந்தது. 'த ஜேர்ணல்' (The Journal) தனது வார்த்தைகளை சிந்தித்து, பொறுக்கி எடுத்துள்ளது. இரத்தக் களரியை பெருக்கும் அர்த்தத்திலான ஒரு வார்த்தையை இதில் கையாண்டுள்ளது. பத்திரிகை ஆசிரியர்களின் அர்த்தம் சரியானது- ஒரு குடியரசுக் கட்சி ஜனாதிபதி தனது பிற்போக்கு சமூக நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்கு வன்முறையையும் அடக்குமுறையையும் பயன்படுத்தத் தயாராக வேண்டும். வாக்குகளை நசுக்கித் தள்ளியும் பொதுஜன விருப்பு வெறுப்புக்கு எதிராக முரட்டுத்தனமாக நடந்து கொள்வதன் மூலமும் வெள்ளை மாளிகையை கைப்பற்றிக் கொள்வதன் மூலமும் "எதிர்வரவுள்ள நிலைமைக்கு" -பரந்த அளவிலான பொதுஜன எதிர்ப்புக்கு- முகம் கொடுக்கச் செய்யும் தலைசிறந்த ஒரு தயாரிப்பாகும்.

 

குடியரசுக் கட்சி வலதுசாரிகளின் பண்பை "கொன்சர்வேடிவ்" என்ற திருப்திகண்டுவிடும் பதத்தினால் போர்த்து மூடுவதை நிறுத்திவிடுவதற்கான தருணம் வந்துவிட்டது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரிய விதிமுறைகளுடன் துண்டித்துக் கொள்ளும் இவர்கள் பாசிச மூலகங்களாகும்.

அரசியலுக்கு ஒரு தர்க்கம் இருந்து கொண்டுள்ளது. ஆளும் பிரமுகர்களின் செல்வாக்கான தரப்பினர் தமது நோக்கங்களை ஜனநாயக விதிமுறைகளின் மூலம் அடைய முடியாது எனக் கூறி சதிகார, அடக்குமுறை பாதையில் இறங்கும்போது, அவர்கள் உள்நாட்டு யுத்தப் பாதையில் இறங்குகின்றனர்.

இங்கு உள்ள பிரச்சினை, உடனடியாக ஏற்படப் போகும் ஒரு இராணுவ சர்வாதிகாரத் திணிப்பை முன்கூட்டியே கூறிவிடுவது அல்ல. ஆனால் எதிரே அத்தகைய ஒரு ஆபத்துத் தலையெடுப்பதற்கான சாத்தியங்களை ஒதுக்கித் தள்ளிவிடுவது முட்டாள்தனத்தின் சிகரமாகும். வெள்ளை மாளிகையை கைப்பற்றிவிடக் குடியரசுக் கட்சிக்காரர்கள் நடாத்தும் இயக்கம், லத்தீன் அமெரிக்காவில் இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லிபரல், இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக -உதாரணமாக சில்லியில் -சீ.ஐ.ஏ. நடாத்திய இரகசிய நடவடிக்கையை ஒத்ததாக விளங்கத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பினோச்சேயின் (Pinochet) தீர்வைக் கடைப்பிடிப்பது பற்றி தீர்க்கமாக ஆலோசிக்கப்பட்டு வருவது தெரிகிறது. வோல் ஸ்ரீட் ஜேர்ணல் ஆசிரியர் றொபேட் பார்ட்லியும் அவரது உத்தியோகத்தர்களைச் சேர்ந்த பிற்போக்காளர்களும் ஏற்கனவே தமது அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் எதிராக வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் வாதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள முடியாது.

வோல் ஸ்ரீட் ஜேர்ணல் அமெரிக்க பெரும் வர்த்தக சமூகத்தின் சக்திவாய்ந்த ஒரு பகுதியினரின் பேரில் பேசி வருகின்றது. நிதி பிரமுகர்களிடையே இருந்து கொண்டுள்ள இந்தச் சக்திகள் அதிகரித்த விதத்தில் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை கடைப்பிடித்தன. இவை இந்தப் பாசிச சக்திகள் பெருக்கெடுப்பதற்கு நிதி அடிப்படையில் அனுசரணையாளராக விளங்கினர். ஏனெனில் இவர்கள் சாதாரணமான ஜனநாயக வழிகள் மூலம் தமது சமூக நிகழ்ச்சித் திட்டத்தை திணித்துவிட முடியாது எனப் புரிந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் வலதுசாரிக் கும்பலில் சார்ந்துள்ளனர். அது தமது ஜனநாயக எதிர்ப்பு இலக்குகளை மூடி மறைக்கும் பொருட்டு கம்பனிகளின் கட்டுப்பாட்டிலான தொடர்பு சாதனங்களுக்கு சனக்கும்பல்களை வழங்குகின்றது. தொடர்பு சாதனங்களை அரைவேக்காடுகள், பொய்கள் மூலம் நிறைக்கின்றன. அவர்களின் பலம் எந்த ஒரு மாபெரும் வெகுஜன ஆதரவிலும் தங்கியிருக்கவில்லை. மாறாக பொதுஜனங்களிடையே அவர்களது ஆதரவு மிகவும் குறைவு.

குடியரசுக் கட்சி வலதுசாரிகளின் பலம், அது எந்த ஒரு முதலாளித்துவ அரசியல் குழுவைக் காட்டிலும் அமெரிக்க கம்பனி பிரமுகர்களின் தேவைகளை பெரிதும் திடமாகவும் சமரசத்துக்கு இடமின்றியும் தெட்டத் தெளிவாக உச்சரிக்கின்றது என்ற உண்மையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. வலதுசாரித் தீவிரவாதிகள் தமக்கு என்ன வேண்டும் என்பதையும் அதை பெற்றுக்கொள்ள மக்களின் பொதுஜன அபிப்பிராயத்தின் மீதாக குதிரையோட அது ஆயத்தமாகி வருவதையும் அறிவர். ஜனநாயகக் கட்சியில் உள்ள தமது அரசியல் எதிர்ப்பாளர்கள் மலடர்களாகவும் மெதுவான பார்வையாளர்களாகவும் கைகளை பிசைந்து கொள்ளும் போது, குடியரசுக் கட்சிக்காரர்கள் வழக்காறான அரசியலமைப்புச் சட்ட விதிகளைக் கொண்டு ஆட்டத்தை ஆடவில்லை. அவர்கள் மனம் குழம்பிப் போன தாராண்மைவாதத்தினை உள்ளடக்கிக் கொண்டுள்ளனர். அவர்களது தூசி படிந்துபோன சீர்திருத்த முன்நோக்கு, ஆளும் வர்க்கத்தினால் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது.

இதே சமயம் குடியரசுக் கட்சி வலதுசாரிகள், தமது அபிலாசைகளை அடைவதற்குக் குறுகிய வாய்ப்புகளே இருந்து கொண்டுள்ளதை உணர்ந்து கொண்டுள்ளனர். இது தேர்தல் பெறுபேறுகள் மூலம் தள்ளாடிக் கொண்டுள்ளது. இவர்கள் பெருமளவில் கோருக்கு வாக்களித்ததன் மூலம் வெற்றியை பதிவு செய்துள்ளனர். புளோரிடா வாக்காளர்களின் உள்ளட் கிடக்கைகள் அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்படுமேயானால் தேர்தல் தொகுதி அடிப்படையிலான வாக்களிப்பிலும் கூட ஜனநாயகக் கட்சி வெற்றியீட்டும். பரந்த அடிப்படையில் பேசும்போது கோரினதும் கிறீன் கட்சி (Green Party) வேட்பாளர் ரால்ப் நாடரினதும் கூட்டு வாக்கு எண்ணிக்கைகள், ஒரு தாராண்மை, இடது தன்மையான கொள்கைகளை கணிசமான அளவு பெரும்பான்மையினர் ஆதரிப்பதோடு அமெரிக்க அரசியல் மீதான 'கோர்பரேட்' (Corporate) சக்திகளின் அப்பட்டமான மேலாதிக்கத்தை எதிர்க்கவும் செய்கிறது.

தேர்தல் படத்தைப் பார்வையிடும்போது அமெரிக்க சமுதாயத்தின் முழு அதிகார சக்தியும் தீவிர வலதுசாரி சக்திகளுக்கு சாதகமாகி நின்று கொண்டில்லை என்ற உண்மையை கோடிட்டுக் காட்டிக் கொண்டுள்ளது. புஷ் தமது தேர்தல் வாக்குகளில் பெரும்பான்மையை நாட்டின் பின்தங்கிய, நாட்டுப்புற மாநிலங்களில் இருந்தே- தெற்கு, தென்மேற்கு, மத்திய-மேற்கு பகுதிகள்- திரட்டிக் கொண்டுள்ளார். பெரிதும் நகர்ப்புறமானதும், கைத்தொழில்மயமானதும், சன நெருக்கடி மிகுந்ததும், கலாச்சார துடியாட்டம் மிகுந்த மாநிலங்கள் கோரிடம் சென்றுள்ளன. இந்தப் பொதுத் திட்டத்தினுள் வெகுஜன வாக்குகள் தீர்க்கமான கோர் சார்பு வாக்குகள் கறுப்பு இனமக்களாலும் தொழிலாளர் வர்க்கத்தின் பெரிதும் ஒடுக்கப்பட்ட பகுதியினராலும் வழங்கப்பட்டதாகும். இவர்களின் வாக்குகள் குடியரசுக் கட்சிக்காரர்களையிட்டு ஆழமான அவநம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு சிவில் உரிமைகள், சமூக நிலைமைகள் தொடர்பாக கடந்த காலங்களில் ஈட்டிக் கொண்ட வெற்றிகளை காத்துக் கொள்ளக் காண்டுள்ள திடசங்கற்பத்தையும் காட்டியுள்ளது.

மேலும் பொருளாதார நிலைமைகள், சமீபத்தில் கோடீஸ்வரர்களாகிய செல்வந்தர்கள் தட்டினர் வளர்ச்சி பெறுவதை உக்குவிக்கின்றது. இது குடியரசு வலதுசாரிகளின் சமூக அடித்தளத்தின் முக்கிய பகுதியினர் மங்கிப் போவதைத் தெளிவாக கொண்டுள்ளது. பங்குமுதல் சந்தை செழிப்பு,கணிசமான அளவுக்கு ஊக மூலதனத்தையும் ஒட்டுண்ணித் தனத்தையும் அப்பட்டமான மோசடிகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பது உடைந்து போய்க் கொண்டுள்ளது. அதனிடத்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் முன்னொரு போதும் இல்லாதவிதத்தில் பொருளாதார ரீதியில் பெரிதும் துருவப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தையும் கம்பனிகளின் பேராசையையும் முன்னொருபோதும் இல்லாத அளவிலான குற்றச் செயல்களையும் கொண்ட காட்சியையும் விட்டுச் சென்றுள்ளது.

குடியரசுக் கட்சிகளின் அக்கறை மூச்சிழுக்க வைப்பதை அதிகரிக்கின்றது. இதனது வெறியும் அஜாக்கிரதையும் அனைத்தையும் உடனடி வெற்றியின் பேரில் பணயம் வைக்க வேண்டும் என உணரும் ஒரு சிறுபான்மையின் கிளர்ச்சியை முன்கூட்டியே எடுத்துக் காட்டுகின்றது. ஏனெனில் இதனது எதிர்கால வாய்ப்புக்கள் ஆட்டங்கண்டு போயுள்ளன. 2000 ஆண்டு தேர்தல் அரசாங்கத்தின் சகல கிளைகளையும் கைப்பிடிக்குள் கொண்டுவருவதற்கான சிறந்ததும் சிலவேளை இறுதியானதுமான சந்தர்ப்பமாகும் என குடியரசுக் கட்சிக்காரர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் வெள்ளை மாளிகையை பறிகொடுத்தால் உள்வாரி யுத்தத்துக்கும் அரசியல் சீரழிவின் வாய்ப்புக்கும் முகம் கொடுக்கும் சாத்தியத்தை எதிர் கொள்கின்றனர்.

பல தெளிவான வேறுபாடுகளுக்கிடையேயும் 2000 ஆண்டு தேர்தலில் இருந்து தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிக்கும் 1861 உள்நாட்டு யுத்தத்துக்கு இட்டுச் சென்ற கொந்தளிப்பு நிறைந்த காலப்பகுதிக்கும் இடையே முக்கியமான ஒத்த தன்மைகள் உள்ளன. இவற்றில் ஒன்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மாநில அடிமைச் சொந்தக்காரர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இன்றைய குடியரசுக் கட்சி வலதுசாரிகளுக்கும் இடையேயான உளவியலிலும் விதிமுறையிலுமான ஒப்புமை இதில் ஒன்றாகும். இந்த இரு தருணத்திலும் நாட்டின் மிகவும் பிற்போக்குச் சமூகச் சக்திகள் ஒரு அவஸ்தை உணர்வினால் தள்ளப்பட்டனர். வரலாற்று அபிவிருத்தியின் அவசியங்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது என்ற உண்மையினால் பெரிதும் ஆத்திரமூட்டுகின்றதும் உதவாக்கரையானதுமான விதிமுறைகளை கையாள்கிறார்கள்.

வரலாற்று ஆய்வினை விரிவுபடுத்தும் போது உள்ள ஒரு பெரும் வேறுபாடு, எந்த ஒரு முதலாளி வர்க்க அரசியல் கன்னையினுள்ளும் இன்று இந்த தீவிர வலதுசாரிக்கு எதிராகத் திரும்பவோ அல்லது அதைத் தோற்கடிக்கவோ மனம் கொண்ட ஒரு சக்தி இல்லாது போயுள்ளதேயாகும். அவர்கள் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டுள்ளவாறு ஜனநாயகக் கட்சியினுள் நிலைகொண்டுள்ள லிபரல்வாதத்தின் மென்மையான அணியினர் ஜனநாயக உரிமைகளைக் காக்க ஒரு கண்டிப்பான போராட்டத்தைக் தொடுக்க உயிர்புஷ்டி இல்லாதவர்களாக உள்ளனர். தொழிலாளர் வர்க்கத்தின் மீது இன்று விழுகின்ற பொறுப்பு இதனை நடைமுறைக்கிட அதனது சொந்த -ஒரு பரந்த சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதேயாகும்.

 

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved