World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On-the-spot report

Government leaves thousands of flood victims in eastern Sri Lanka without adequate aid

இலங்கை அரசாங்கம் இலட்சக் கணக்கான கிழக்கு மாகாண வெள்ள அகதிகளை போதிய நிவாரணமின்றிக் கைவிட்டுள்ளது

By A. Shanthakumar and Vijitha Silva
1 December 2000

Back to screen version

100,000க்கும் அதிகமான குடும்பங்கள் அல்லது சுமார் 5 இலட்சம் மக்கள் நவம்பர் 19ல் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமான பெரும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மக்கள் இறந்துள்ளனர். ஒருவர் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட அதே வேளையில் வேறு இருவர் வெள்ளத்தில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

பலர் கிராமங்களுக்குத் திரும்பியுள்ள போதிலும் மண், ஓலை குடிசைகள் ஒன்றில் சேதமாகியுள்ளன அல்லது வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மக்கள் அசுத்தமான நீர், உணவுப் பற்றாக்குறை, முறையற்ற குடியிருப்புகள் காரணமாக பெரும் தொற்று நோய் அபாயத்துக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எம்முடன் பேசிய மக்கள், தமது அவல நிலையையிட்டு பொதுஜன முன்னணி அரசாங்கம் காட்டிக் கொண்டுள்ள அலட்சியத்தையிட்டு ஆத்திரமடைந்துள்ளனர். உணவு, உதவி என்ற விதத்தில் எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். சில இடங்களில் அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடத் தன்னும் போகவில்லை.

மட்டக்களப்பும், அம்பாறையும் வெள்ளப் பெருக்கு மாவட்டங்களாக கணிக்கப்பட்டுள்ளன. இம்மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக்கு பலிக்கடாக்களான விவசாயிகளும் மீனவர்களுமாவர். இவர்கள் தமிழ் சிறுபான்மையினர். தமிழ் விவசாயிகளும் மீனவர்களும் சிறுபான்மை தமிழ், தமிழ்-முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

அரசாங்கம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1.25 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தது. இது ஆளுக்கு ரூபா 2.50 வீதம் வழங்கவே போதுமானது. மட்டக்களப்பு பிரதம நிர்வாக உத்தியோகத்தருடன் நாம் பேசிய போது அவர் இந்த அகதிகளுக்காக 5.25 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த உதவியின்படி தன்னும் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூபா.10.00 மட்டுமே கிடைக்க வாய்ப்புண்டு.

கிழக்கு மாகாணம் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையேயான நீண்ட உள்நாட்டு யுத்தத்தில் ஒரு யுத்த களமாகும். இதனால் சில வெள்ளப் பிராந்தியங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன. அதனால் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. தமது உறவினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி அங்கு வெள்ளப் பிரளயத்தின் தாக்கம் அரசாங்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளை விட அதிகம் என எம்முடன் பேசிய மக்கள் தெரிவித்தனர். அங்கு கிராமவாசிகள் சில அடிப்படை விநியோகங்களையும் வைத்திய உதவிகளையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்து கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முக்கியமாக தமது உற்பத்திப் பொருட்களை விற்கும் முதியோருக்கே இவ்வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இளைஞர்கள் அரசாங்க ஆயுதப் படைகளால் "விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" கைது செய்து தடுத்து வைக்கப்படுகின்றனர். படையாட்கள் பொதிகளில் ஏதும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் -டீசல், பெற்றோல், மண்ணெண்ணை- உள்ளனவா என சோதனையிடுகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மீது கட்டுப்பாடுகள் -அரிசி 2 கி.கி, சீனி 1கி.கி, தீப்பெட்டி1, டிஸ்பிரின்2- விதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்தது 10,000 வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பல்லாயிரக் கணக்கான வீடுகள் சேதமடைந்து போயுள்ளன. ஏனைய பயிர்களுடன் சேர்ந்து பெருவாரியான நெற்செய்கை நிலங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இவை பட்டினிக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளது.

நாம் மட்டக்களப்பில் இருந்து 13 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள (ஏறாவூர்) சித்தாண்டிக் கிராமத்துக்கு சென்றோம். ஒரு விவசாய கிராமமான இங்கு 415 குடும்பங்கள் வந்தாறு மூலை தமிழ் மகாவித்தியாலயத்தில் அகதிகளாக உள்ளனர். அங்கு சென்றபோது பெருந்தெருக்களின் இரு புறமும் யுத்தத்தின் காரணமாக சகல வீடுகளும் கைவிடப்பட்டு உள்ளதை நாம் கண்டோம். அவற்றில் பல அடியோடு நாசமாக்கப்பட்டுள்ளன. வேறுசிலவற்றின் கதவுகளும் யன்னல்களும் அகற்றப்பட்டுள்ளன. கைவிடப்பட்ட வீடுகளில் சில இராணுவக் காவல் நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

சித்தாண்டி பாடசாலை மிகவும் சிறியது. கட்டிமுடிக்கப்படாத சுவர்களுடன் கூடிய மூன்று கட்டிடங்கள் உள்ளன. இரவில் ஆக்கிரமிக்கும் நுளம்புகளில் இருந்து தப்ப வழியில்லை. கடந்த வாரம் இப்பாடசாலை 1325 மக்களுக்கு புகலிடம் வழங்கியது. இதில் முதியவர்கள், சிறியவர்கள் அடங்குவர். உடையார் மூலை, மதுரங்காடு கிராமங்களில் வீடுகள் அழிந்து போய்விட்டதால் மக்கள் வீடுகளுக்கு திரும்ப வழியில்லாது போயுள்ளது.

சித்தாண்டியில் தங்கியுள்ள மக்களில் சிலர் எம்மை தமது கிராமங்களுக்கு கூட்டிச் சென்று வெள்ளம் ஏற்படுத்தியுள்ள நாசங்களை காட்டினர். உடையார் மூலைக்கும் மதுரங்காட்டுக்கும் ஒரு கிரவல் பாதை மூலமே செல்லமுடியும். இந்த இரண்டு கிராமங்களிலும் வறிய மக்களே வாழ்கின்றனர். இவர்கள் கூலிக்கு வேலை செய்வதன் மூலம் அல்லது அருகில் உள்ள காட்டில் விறகு பொறுக்கி விற்பதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

இந்த இரண்டு கிராமங்களில் ஓடு போட்ட வீட்டுக் கூரை கிடையாது. சகல குடிசைகளும் களிமண்ணினால் அல்லது மூங்கில் தடியினால் கட்டப்பட்டுள்ளன. பலதுக்கும் கழிவறைகள் கிடையாது. உடையார்மூலையில் ஒரு சிறிய பாடசாலை உண்டு. பாடசாலை என அழைப்பதற்கே இது இலாயக்கற்றது. கிடுகினால் வேயப்பட்ட ஒரு கட்டிடத்தை இது கொண்டுள்ளது.

குடிசைகள் பலதையும் வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது அல்லது பெரிதும் சேதப்படுத்தி உள்ளது. மூன்று நாள் பெய்த மழையின் பின்னர் பாடசாலை இன்னமும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மதுரங்காட்டில் உள்ள சகல நெற்செய்கை நிலங்களும் நீரில் மூழ்கிப் போயுள்ளன. விவசாயிகளை இந்நிலங்களில் தாம் பல மாதங்களுக்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன கால்நடைகளின் துர்நாற்றமும் காற்றில் கலந்து போயுள்ளது. இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்ட மூவர் பெரிதும் தொற்று நோய்க்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கிராமவாசி தெரிவித்தார்.

ஒரு சில மக்களே தமது உடமைகளை பாதுகாக்க முடிந்தது. நீர்மட்டம் அதிகாலையில் ஒரு மீற்றருக்கு மேலாக உயர்ந்ததால் இந்நிலை ஏற்பட்டது. எமது சகல சமையலறைப் பாவனைப் பொருட்களும், எமது குழந்தைகளின் கொப்பி புத்தகங்களும் போய்விட்டன. வீட்டை விட்டு வெளியேறிய சமயம் உடுத்தியிருந்த உடை மட்டுமே என்னிடம் உள்ளது" என ஒரு பெண் விளக்கினார். கிராமவாசிகள் உடையார்மூலையில் உள்ள சுவாமி நடராஜா அநாதைகள் இல்லத்தில் சிறுவர்களை விட்டுள்ளார்கள்.

அகதிகள் அரசாங்கத்தையும் அதன் உதவியையும் திட்டிப் பேசினார்கள். ஒரு முழுக் கிழமைக்கு ஒரு 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு 135 ரூபா வழங்கப்பட்டது. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 108 ரூபாவும் மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு 90 ரூபாயும் கொடுக்கப்பட்டது. இந்த 135 ரூபாவுடன் நாம் 3 கி.கி அரிசியையும் 100 கிராம் பருப்பையும் வேறு சில கறிப் பொருட்களையுமே வாங்க முடிந்தது" என ஒருவர் குறிப்பிட்டார்.

அரசாங்க அதிகாரிகள் வெள்ள அகதிகளை புறக்கணித்து விட்டதாக ஒரு தாய் குற்றம் சாட்டினார். "வேர்ல்ட் விசனில் (World vision -ஒரு அரச சார்பற்ற நிறுவனம்) இருந்து எமக்கு கிடைத்த ரூபா 600ஐ கொண்டே நாம் பட்டினியில் இருந்து தப்பினோம்" என அவர் கூறினார்.

எந்த ஒரு கிராமத்துக்கும் சுகாதார வசதிகள் கிடையாது. கண் நோய், வயிற்றோட்டம், தோல் நோய்கள் என்பன பரவத் தொடங்கியுள்ளன. கிராமவாசிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய சில மருந்துகளை கொண்டுள்ள போதிலும் ஏனைய மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது.

மருதங்காடு, உடையார்மூலை நிலைமைகள் விதிவிலக்கானதல்ல. ஒரு பாடசாலை ஆசிரியரின்படி மட்டக்களப்பில் உள்ள மக்களில் 70 சதவீதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். இந்த வெள்ளப் பிரளயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 99 சதவீதமானோர் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டு வருவதோடு நாம் ஒரு சில மாணவர்கள் மட்டுமே ஆண்டு-11 (GCE O/L) வரை படித்துள்ளதைக் கண்டோம். குழந்தைகள் 10-15 வயதை எட்டும் போது வாழ்க்கைக்கான வருமானத்தை தேடிக் கொள்ளும் முகமாக அவர்கள் படிப்பதை நாம் நிறுத்திக் கொள்ளத் தள்ளப்பட்டுள்ளோம்" என ஒரு தாயார் குறிப்பிட்டார்.

இந்த வெள்ளத்தினால் பேரழிவு ஏற்பட்டதன் பின்னரும் கூட பலர் இந்த மாவட்டத்துக்கு வெளியே சென்று உழைக்க முடியாது உள்ளது. இராணுவத்தினால் திணிக்கப்பட்டுள்ள கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளே இதற்கு காரணம் ஆகும். ஒரு இளைஞர் எம்முடன் பேசியபோது தாம் வட மத்திய மாகாண நெல் ஆலையில் வேலை செய்ததாகவும், இராணுவம் கைது செய்யப் போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து அவ்வேலையை விட்டு நீங்கத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நாம் மட்டக்களப்புக்கு அருகில் உள்ள ஒரு மீனவ கிராமமான சீலமுனைக்கு விஜயம் செய்தோம். அம்மக்களும் இதற்கு சமமான துயரக் கதைகளையே கூறினர். அவர்களில் பலரும் அவர்களது உடமைகளை இழந்து விட்டனர். வள்ளங்களை பாவித்து உயிர்தப்பிக் கொண்டுள்ளனர். சுமார் 250 குடும்பங்கள் வீடற்றவர்களாக வெளியேறி உள்ளனர். நான்கு நாட்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்துள்ளனர். "அரசாங்கத்திடம் இருந்து எமக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை" என அவர்கள் தெரிவித்தனர்.

இக்கிராமத்தில் உள்ள மக்களில் பலரும் வாவியில் வலைவீசி மீன் பிடிப்பதன் மூலம் வாழ்க்கை நடாத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு மீனுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது. அவர்கள் முகம் கொடுக்கும் வறுமைக்கு அவர்களின் உடையும், குடிசையும் சாட்சி பகர்கின்றன. நாம் இங்கு வந்து சேர்ந்த போது ஒரு பெரும் கூட்டம் தமது நிலைமையை பற்றி எடுத்துக் கூற அங்கே திரண்டது.

"நாம் எமது வீடுகளை திருப்பிக் கட்ட எந்த ஒரு அதிகாரியும் உதவப் போவதில்லை. நாம் ஆளுக்காள் உதவி செய்ய வேண்டியுள்ளது. நாம் அரசாங்கத்திடம் உதவியை எதிர்பார்த்துக் காத்து இருந்தால் வீட்டில் எஞ்சியுள்ளவற்றையும் இழங்க வேண்டி நேரிடும்" என அவர்கள் தெரிவித்தனர்.

"இந்தக் கஷ்டங்களுடன் தன்னும் நாம் எமது தொழிலை (மீன்பிடி) அமைதியாக செய்ய முடியாதுள்ளது. நாம் இரவு 7 மணிக்குப் பின்னர் வாவியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாது. வாவியில் மீன்பிடிப்பதையும் இராணுவமே தீர்மானம் செய்கின்றது. நாம் வள்ளத்தை ரூபா 50 வாடகைக்கு அமர்த்துகின்றோம். ஆனால் நாம் ஒரு நாளைக்கு ரூபா 150-200 வரையே உழைக்க முடியும். சில நேரம் நாம் வள்ளத்துக்கான கட்டணத்தை செலுத்தவே உழைக்கின்றோம்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் முறைப்படுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: "எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் எம்மைப் பார்க்க வரவில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் எம்மை கண்டு கதைத்து, வாக்குகளை சுருட்டிக் கொள்ள வந்தனர். இப்போது அவர்கள் எமக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முன்வரவில்லை".

அரசாங்கத்தின் அசட்டையும் இந்த மோசமான வெள்ளப் பெருக்குக்கு ஒரு காரணம். பருவப் பெயர்ச்சி காலத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களை சுற்றியுள்ள தாள்நிலப் பிரதேசங்கள் ஆண்டு தோறும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகின்றன. முந்தன் ஆறு, மகளவதவன் ஆறு போன்ற பல ஆறுகள் 100 கி.மீ. நீளமான வாவியினுள் பாய்கின்றன. ஆனால் தண்ணீர் கடலுக்குச் செல்வது, வாவியினுள் திரண்ட மணல் அடைப்பதால் தடைப்பட்டு விடுகின்றது.

நவம்பர் நடுப்பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக பெய்த கடும் மழை ஆறுகளையும் பல சிறிய குளங்களையும் நிரம்பி வழியச் செய்தது. இலங்கையின் பெரியதும் நீண்டதுமான மகாவலி ஆறு மட்டக்களப்பு மாவட்ட எல்லைகளுடாகப் பாய்கிறது. அதன் கரைகளை வெடிக்கச் செய்து சுற்றிவர உள்ள பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கச் செய்கிறது. அகஸ்தியர் குளம், தரவைக் குளம் உட்பட்ட மூன்று குளங்கள், அணைக் கட்டுக்கள் பலவீனமான இடங்களில் வழிந்தோடியது. பெரும் அளவிலான தண்ணீர் வாவியினுள் பாய்ந்தது. இது கடலினுள் ஓடமுடியாது செய்ததோடு தாள்நிலப் பிரதேசங்களை வேகமாக வெள்ளக் காடாக்கியது.

பல வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், இந்த மாவட்டத்தில் ஒரு ஒழுங்கு முறையான வடிகாலமைப்பு முறையை நிர்மாணிக்கச் செய்த சிபாரிசுகளை புறக்கணித்தன. உரிய பராமரிப்பு இல்லாததன் காரணமாக குளங்கள், வீதிகள், குகைகள், வாவிகள் எல்லாம் பாதிக்கப்பட்டன. எம்முடன் பேசிய ஒரு உயர் அரசாங்க அதிகாரி, இந்த நிலைமைக்கு யுத்தமே காரணம் எனக் கூறினார்.

இன்றும் சரி நேற்றும் சரி அரசாங்கங்கள் நாடு பூராவும் உள்ள ஏழை விவசாயிகள், மீனவர்கள் தொடர்பாக பூரணமான பாகுபாடு காட்டி வந்துள்ளதே அவர்களின் இன்றைய தலைவிதிக்கான காரணம். அதுதான் உண்மை.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved