WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lankan president puts negotiations with the LTTE
back on the agenda
இலங்கை ஜனாதிபதி
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை நிகழ்ச்சி
நிரலில் மீண்டும் சேர்த்துக் கொண்டுள்ளார்
By Wije Dias
18 November 2000
Back to screen
version
நவம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தை திறந்து
வைத்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, நாட்டின்
17 வருடகால உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு முடிவு கட்ட பிரிவினைவாத
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு பேச்சுவார்த்தையை நோக்கித்
தனது அரசாங்கம் செல்வதாக ஒரு கவனமான ஆனால் தெளிவான
சமிக்கையை காட்டிக்கொண்டுள்ளார். அவர் "தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கான கதவை நாம் எதுவிதத்திலும் அடித்து மூடிவிடவில்லை.
நாம் அந்த அமைப்புடன் கலந்துரையாடல்கள் நடாத்த தயாராகவுள்ளோம்"
என்றுள்ளார்.
குமாரதுங்க ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது
தடவையாக கடந்த டிசம்பரில் தெரிவு செய்யப்பட்ட போது
விடுத்த அழைப்பில் உள்ளவற்றை மீள ஊர்ஜிதம் செய்துகொண்டுள்ளார்.
"இந்த சபையில் உள்ள கெளரவ அங்கத்தவர்கள் அவர்கள்
எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பினும் குறுகிய அரசியலையும்
அற்பசொற்ப வேறுபாடுகளையும் பொறாமைகளையும் ஏனைய
சகல போட்டிகளையும் கைவிடுமாறும் எமது நாட்டில்
அவசரமானதும் அவசியமானதுமான சமாதானத்தை ஈட்டிக்
கொள்ள ஒன்றிணையுமாறும் நான் அழைக்கின்றேன்." என்றார்
நோர்வே சிறப்பு தூதுவர் எரிக் சோல்ஹெயிம்
தலைமையிலான தூதுக்குழு நவம்பர் 1ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள்
நடாத்தும் பொருட்டு வட இலங்கையில் உள்ள இராணுவ தடை
முகாம்களை கடந்து சென்றதன் பின்னர் ஒரு சாத்தியமான சமாதான
பேச்சுவார்த்தைகளைப் பற்றி அவர் முதல் தடவையாக வெளியிட்ட
கருத்து இதுவாகும். இந்தக் கலந்துரையாடல்களைப் பற்றிய
செய்திகள்-ஐந்து வருடங்களில் பிரபாகரனுடன் இடம்பெற்ற முதற்தடவையான
அனைத்துலக தொடர்பு லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பினால் வெளியிடப்பட்டது.
சோல்ஹெயிமினது விஜயத்தின் பெறுபேறுகளையிட்டு
குமாரதுங்க எதையும் திட்டவட்டமாகக் கூறாத போதிலும்
"பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகுவதற்கு முன்னர் "சில
நிபந்தனைகள்" பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன எனவும்
இவை இன்னமும் தீர்மானிக்கப்பட்டுவிடவில்லை எனவும் ஜனாதிபதி
தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் பற்றி எந்த ஒரு தீர்மானமும்
எடுப்பதற்கு முன்னதாக "தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய
நடைமுறைகளையும் மனப்போக்கையும்" அரசாங்கம்
கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது.
ஜனாதிபதியின் பிடி கொடுக்காத இந்த அரசியல்
அணுகுமுறையானது அவர் கையாண்டு வரும் ஈடாட்டம் கண்ட
அரசியல் சமபலநிலையினால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. அக்டோபர்
10 தேர்தல் பிரச்சார காலத்தில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்
புலிகள் அமைப்புக்கு எதிராக ஒரு முழு அளவிலான யுத்தத்தை நடாத்த
ஆதரவு தரும்படி சிங்கள சோவினிச தட்டுக்களுக்கு நேரடியாக
அழைப்பு விடுத்தது. இப்போது குமாரதுங்க பெரும் வர்த்தக
நிறுவனங்களின் கணிசமான பகுதியினரதும் அத்தோடு அமெரிக்கா,
பெரும் ஐரோப்பிய வல்லரசுகள் போன்றவற்றினதும் நெருக்குவாரம்
காரணமாக யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கான வழிவகைகளைத்
தேடும் பொருட்டு எதிர்க் கட்சியான யூ.என்.பி.யுடன் ஒரு உடன்பாட்டுக்கு
வருமாறு தள்ளப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய சமூகம் (European
Union) சோல்ஹெயிமின் இலங்கை விஜயத்தை
வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு அரசாங்கத்தையும்
தமிழீழ விடுதலைப் புலிகளையும் "பேச்சுவார்த்தை மூலமான தீர்வை
எட்டுமாறு" வேண்டிக் கொண்டுள்ளது.
வர்த்தக, கைத்தொழில் மன்றமும் முதலாளிமார்
சம்மேளனமும் வர்த்தகர் சங்கங்களும் சமீபத்தில் கூட்டாக
ஒரு 29 பக்க பத்திரத்தை வெளியிட்டு இருந்தன. "முன்னேறிச்
செல்வதற்கான மூலோபாயம்" என்ற தலைப்பிலான இப்பத்திரம்
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் உலக வர்த்தகம், சேவைகளில்
இலங்கையின் பங்கை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு ஒரு விரிவான
நிகழ்ச்சி நிரலை குறிப்பிட்டு இருந்தது. இந்தப் பட்டியலில் யுத்தத்துக்கு
"ஒரு பலம்வாய்ந்த நீண்ட காலத் தீர்வு" காண்பது முதல்
அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு விரைவுபடுத்தப்பட்ட
தனியார்மயமாக்கம், பொருளாதார மறுசீரமைப்பு மூலம் வெளிநாட்டு
முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு இது முக்கிய தடையாக
உள்ளதாக பெரும் வர்த்தக நிறுவனங்கள் கணித்துக் கொண்டுள்ளன.
யுத்த விவகாரம் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக
பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் இடையே பேச்சுவார்த்தைகள்
இடம்பெற்றுள்ளன. பாராளுமன்றம் கூடுவதற்கு ஒரு நாளுக்கு
முன்னதாக யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க "புதிய கலாச்சாரத்துக்கான
ஒரு பொது வேலைத்திட்டம்" என்ற கட்சிப் பத்திரத்தைச்
சுட்டிக்காட்டி ஒரு கூட்டு அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
அப்பத்திரம் "பொதுமக்கள் பெருமளவில் எமது அரசியல்
அமைப்பில் நம்பிக்கை இழந்து போகலாம்" என எச்சரிக்கின்றது.
"பெரும்பான்மைக் கட்சிகள் மோதுதலுக்கு ஒரு அரசியல்
தீர்வைக் காண தமது விருப்பை தெளிவாகக் காட்டிக் கொண்டுள்ளதை"
உணர்த்தும் விதத்தில் விக்கிரமசிங்க "அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையேயும்
ஒற்றுமையை உருவாக்கும் ஆக்கமான பணிகளில் ஈடுபடவும் நம்பிக்கையை
உருவாக்கவும்" அழைப்பு விடுத்திருந்தார்.
பாராளுமன்றத்தில் பேசிய யூ.என்.பி. பிரதித் தலைவர்
கரு ஜயசூரிய "சகலரும் சமாதானத்தை வேண்டுகின்றார்கள்.
தேசிய நெருக்கடியைத் தீர்த்து வைக்கும் எந்த ஒரு முயற்சிக்கும்
ஆதரவு வழங்குவதை நிறுத்திக் கொள்ள எவரும் விரும்பவில்லை"
எனக் கூறினார். ஆதலால் நாம் சகலரும் ஒன்று கூடி இந்த
நெருக்கடியை தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவோம்.
போதுமான அளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. நாம் நெருக்கடியைத்
தீர்த்து வைக்கும் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய
தருணம் இதுவே."
பெரும் வர்த்தக நிறுவனங்கள் பொதுஜன முன்னணிக்கும்
யூ.என்.பி.க்கும் இடையேயான உடன்பாடு இல்லாமல் யுத்தத்தை
முடிவுக்கு கொணர செய்யப்படும் பேச்சுவார்த்தைகள், தமிழீழ
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் நடாத்துவதையோ
இந்நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு ஏதேனும் சலுகைகள்
வழங்குவதையோ எதிர்ப்பதோடு, யுத்தத்தை உக்கிரமாக்கும்படி
கோரும் சிங்கள தீவிரவாதக் குழுக்களால் தகர்க்கப்பட்டுவிடும்.
ஆகஸ்ட் தொடக்கத்தில் குமாரதுங்க தனது
அதிகாரப் பரவலாக்கல் பொதி எனப்பட்டதை வாபஸ் பெறத்
தள்ளப்பட்டார். உயர்மட்ட பெளத்த பிக்குகளதும் ஜே.வி.பி. சிங்கள
உறுமய கட்சி (SUP)
போன்ற தீவிர வலதுசாரிக் குழுக்களதும் வெறிபிடித்த எதிர்ப்புக்களுக்கும்
ஆர்பாட்டங்களுக்கும் இது உள்ளானதைத் தொடர்ந்தே
வாபஸ் பெறப்பட்டது. அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்த பொதியானது
சிங்கள, தமிழ், முஸ்லீம் பிரமுகர்களிடையே ஒரு வரையறுக்கப்பட்ட
அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து கொள்வதை இலக்காகக்
கொண்டிருந்தது.
தேர்தல் பிரச்சார காலத்தில் அரசியலமைப்புச்
சட்ட பொதியை அடியோடு கைவிட்ட குமாரதுங்க இப்போது
யூ.என்.பி.யுடன் ஒரு தற்காலிகமான கொடுக்கல் வாங்கல்களுக்கும்
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவும் தயாராகி
வருகின்றார். இதே சமயம் ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில்
"நாம் நாட்டை பிரிக்க எவரையும் அனுமதிக்கமாட்டோம்"
எனவும் "இந்நாட்டை ஆயுத பயங்கரவாதத்தில் இருந்து
விடுவிக்க நாம்" உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் செயற்படுவோம்
எனவும் வலியுறுத்தினார். சிங்கள தீவரிவாதிகளை ஆகர்சிக்கும் வகையில்
குமாரதுங்க உயர்மட்ட பெளத்த பிக்குகள் எந்த ஒரு அரசியலமைப்புச்
சட்ட திருத்தத்தின் மீதும் கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்
எனவும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு
செல்லும் எந்த ஒரு நடவடிக்கையும் ஒரு புதிய சுற்று எதிர்ப்புக்களை
தூண்டிவிடும் என்பதை குமாரதுங்க நன்கு அறிவார். ஜே.வி.பி. நோர்வே
நாட்டின் இராஜதந்திர ஆரம்பிப்புக்களை கண்டனம் செய்து,
அதன் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. "நோர்வே எந்த
விதத்திலும் ஒரு சமாதான தரகராக செயற்படக்கூடாது. இலங்கையின்
தேசிய ஒருமைப்பாட்டை குழப்பியடிக்கக் கூடாது" எனக்
கடிதம் வேண்டிக் கொண்டுள்ளது. அக்கடிதம் "அசிங்கமான
நோர்வேகாரர்களே வெளியேறு! அங்கு செய்வதற்கு உங்களுக்கு
நிறைய உள்ளது" என்பன போன்ற சுலோகங்களை உள்ளடக்கிக்
கொண்டுள்ளது.
சிங்கள உறுமய கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவரான
திலக் கருணாரத்னவும் இதே பாணியிலேயே கடந்த மாதம்
பாராளுமன்றத்தில் பேசினார். "அரசாங்கம் நோர்வேக்காரர்கள்
எனப்படுபவர்களுடன் சேர்ந்து செய்ய பார்க்கும் மோசடி
என்ன?" என அவர் ஆக்ரோசத்துடன் கேட்டார். "அந்த
தூதுக்குழுவின் தலைவரான சோல்ஹெயிம் நோர்வேயில் உள்ள
ஒரு குட்டி இடதுசாரி அரசியல் கட்சியின் அங்கத்தவர். அவர்கள்
தமது மேதினக் கூட்டங்களை நடாத்தும்போது அவர்களுடன்
சேர்ந்து நடை போடுபவர்கள் நோர்வேயில் உள்ள விடுதலைப்
புலிகளே." எனவும் கருணாரத்ன மேலும் குறிப்பிட்டார்.
சிங்கள உறுமய கட்சிக்கு ஒரே ஒரு பாராளுமன்ற
அங்கத்தவரே இருந்து கொண்டுள்ள போதிலும் பொதுஜன முன்னணி,
யூ.என்.பி. கட்சிகளுக்குள் கருணாரத்னவின் சிங்கள சோவினிச உணர்வுகளைப்
பிரதிபலிக்கும் பலர் இருந்து கொண்டுள்ளார்கள். குமாரதுங்கவின்
எந்த ஒரு ஆரம்பிப்பாகும் (சமாதான) ஆளும் பொதுஜன முன்னணி
கூட்டரசாங்கத்தினுள்ளும் அவரின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் (SLFP)
உள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் இருந்து
கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் 10 பொதுத் தேர்தல்
இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் குமாரதுங்க பெளத்த
அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகள் கொண்ட ஒரு அரசியல்வாதியான
ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக்கினார்; இனவாத மக்கள்
ஐக்கிய முன்னணியை (MEP)
பொதுஜன முன்னணி கூட்டில் நுழைத்துக் கொண்டார்.
தேர்தல் பிரச்சார காலத்தில் விக்கிரமநாயக்க
இலங்கை நோர்வேயின் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து
ஈடுபடாது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன்
தலைவர் பிரபாகரனையும் "ஒழித்துக்கட்டுமாறும்"
அழைப்பு விடுத்தார். நவம்பர் 10ம் திகதி 'வீக்கென்ட் எக்ஸ்பிரஸ்'
பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் அவர் தாம் தமது நிலைப்பாட்டில்
இருந்து நழுவிவிடவில்லை எனக் குறிப்பிட்டார். இராணுவ, சிவிலியன்
நிலைகள் மீது சமீபத்தில் விடுதலைப் புலிகள் நடாத்திய ஒரு தொகை
தாக்குதல்களை பட்டியல் போட்டுக் காட்டிய விக்கிரமநாயக்க
"விடுதலைப் புலிகளின் ஜனநாயகத்திலன்றி பயங்கரவாதத்திலேயே
நம்பிக்கை கொண்டுள்ளது என்பதற்கு இது தாராளமான எடுத்துக்காட்டு...
பயங்கரவாதத்தை பேச்சுவார்த்தைகள் மூலம் ஒழித்துக்கட்ட
முடியாது. பயங்கரவாதத்தை யுத்தத்தின் மூலம் மட்டுமே துடைத்துக்
கட்ட முடியும்" என்றார்.
கடந்த வார இறுதியில் "சண்டே டைம்ஸ்"
பத்திரிகை கூறியது போல் "பொதுஜன முன்னணி அரசியலமைப்புச்
சட்டத்தை (திருத்தத்தை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்
போது அது மீண்டும் ஒரு இழுபறி நிலைக்கு முகம் கொடுக்கும்.
தலையெடுக்கும் பிரச்சினை என்னவென்றால் அரசாங்கம் சிங்களக்
கடும்போக்காளர்களான பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க,
மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்தன போன்றவர்களுடன்
தொடர்ந்து செல்ல முடியுமா என்பதேயாகும். மேலும் ஜே.வி.பி.யுடன்
சேர்ந்து சிங்கள உறுமய, பெளத்த பிக்குகள் பரந்தளவிலான
அதிகாரப் பகிர்வை எதிர்க்கவே செய்வர்".
பொதுஜன முன்னணி அரசாங்கம் ஏற்கனவே
பாராளுமன்றத்தில் ஒரு சிறு பெரும்பான்மையைக் கொண்ட
ஒரு ஈடாட்டம் கண்ட கூட்டரசாங்கமாக இருந்து கொண்டுள்ளது.
தனது சமத்துவம் இல்லாத சகல சகாக்களுக்கும் அரசியல்
சம்பளம் வழங்கும் முகமாக குமாரதுங்க 44 அமைச்சர்களையும்
35 பிரதி அமைச்சர்களையும் உள்ளடக்கும் விதத்தில் அமைச்சரவையை
விஸ்தரிக்க நேரிட்டது. இந்நிலையில் அரசாங்க கட்சியின் 37 பாராளுமன்ற
அங்கத்தவர்களே பின் ஆசன அங்கத்தவர்களாக இருந்து கொண்டுள்ளனர்.
குமாரதுங்க எந்த வழியில் திரும்பினாலும் அவர் ஒரு படுமோசமான
நிலைமைக்கே முகம் கொடுக்கின்றார். அரசாங்கக் கட்சியில்
இருந்து இடம்பெறும் எந்த ஒரு வெளிநடப்பும் அவரின் அற்ப
சொற்ப பெரும்பான்மையையும் பெரிதும் பாதிக்கச் செய்யும்.
Top of Page
வாசகர்களே: உலக
சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|