World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Globalisation: The Socialist Perspective

பூகோளமயமாக்கல்: ஒரு சோசலிசமுன்னோக்கு
By NickBeams
7 June 2000

Back to screen version

உலகசோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவினருள் ஒருவரும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான நிக் பீம்ஸ் அண்மையில் ஆறு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் வெற்றிகரமான சொற்பொழிவுச் சுற்றினை முடிந்திருந்தார். பீம்சின் சொற்பொழிவான-பூகோளமயமாக்கல்: சோசலிசமுன்னோக்கு- க்கு சிட்னி, மெல்பேர்ன், நியூகாசில் மற்றும் கான்பேராவில் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்விமான்கள் ஆகியோர் வருகைதந்திருந்தனர். உலக சோசலிச வலைத்தளம் தமிழில் இச்சொற்பொழிவின் மூன்று பகுதிகளில் இறுதிப்பகுதியான மூன்றாம் பகுதியை இங்கே வெளியிடுகிறது.

பகுதி மூன்று

கிறித்தவ மதத்தில், மத குருக்களின் கருத்துப்படி ஆன்மா உடலைவிட்டு நீங்கி மோட்சத்தை அடைகிறது. சந்தையின் தலைமை குருமார்கள் இத்தகைய ஒரு சித்தாந்தத்தையே போதிக்கின்றனர் பணமானது உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பணம் முடிவற்று சுரக்கும் நிதி மோட்சத்தில் நுழைகிறது என வாதிடுகின்றனர்.

பணம் முடிவே இல்லாமல் மேலும் மேலும் பணமாக மாறும் அதன் கனவை அடைவது மூலதனத்திற்கு சாத்தியமா? அல்லது இந்த நிகழ்ச்சிப் போக்கிற்கு உள்ளார்ந்த வரையறைகள் உள்ளனவா?

அதிக மூலதனம் சந்தைக்குள் பாயும் வரைக்கும் பங்கு நடவடிக்கைகைளில் பங்கு மதிப்புக்கள் தொடர்ச்சியாக உயர முடியும் இலாபமும் அதிகரிக்க முடியும். வேறுவார்த்தைகளில் சொல்வதானால் வருவாயும் இலாபமும் பிரமிட் திட்டம் அல்லது தொடர் எழுத்துப் போல் குவிய முடியும்.

அது தொடர்ச்சியாக உற்பத்தி மூலதனத்திற்கு மேலாக அதிகரித்தும் அதிசயமானதுமான விளைவுகளை உருவாக்குகிற அதேவேளை, எவ்வாறாயினும் ஊகமுலதனம் அதன் மூலத்தோற்றத்தில் இருந்து தப்பமுடியாது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து கறந்தெடுக்கப்படும் உபரி மதிப்பில் பெறப்படுகிறது என்ற உண்மையுடன் இது முரண்படுகிறது. இந்த ``புதிய பொருளாதாரத்துக்கு வக்காலத்து வாங்குவோரின்படி, பங்குச் சந்தையில் பங்கின் மதிப்புக்கள் ``பகுத்தறிவுக் கொவ்வாதது`` மட்டுமல்லாது குறிப்பாக அது வலைதளத்துடன் தொடர்புடைய புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதிலிருந்து வருகின்ற உற்பத்தித்திறன் மற்றும் இலாபங்களில் அதிகரிப்பின் எதிர்பார்ப்பும் ஆகும்.

புதிய தொழில் நுட்பங்கள் எதிர்காலத்தில் உழைப்பின் உற்பத்தித்திறனில் மாபெரும் அதிகரிப்பினைச் செய்யும் என்பதில் கேள்விக்கு இடமில்லை. ஆனால் நாம் பார்த்தவாறு இந்த உழைப்பின் உற்பத்தித்திறன் பிரச்சனையிலிருந்து வெளியேறுவதற்கான வழியைத் தராது.

அதன் விளைவாக திரளான ஊகமூலதனம் இறுதியாக இந்தக் கோரிக்கைகளை எதிர்நோக்கும் உற்பத்தி மூலதனத்துடன் பார்க்கையில் ஏற்றமும் இறக்கமும் உள்ள உபரிமதிப்பிற்க்கு உரிமைகோருவதால், பூகோள மூலதனத்தின் கட்டமைப்பானது தலைகீழான பிரமிட் (Pyramid) வடிவத்தை எடுக்கின்றது.

இந்த தோற்றப்பாட்டை விளக்கும் சில புள்ளிவிபரங்களை சுட்டிகாட்ட என்னை அனுமதியளிக்கவும். 1999ன் தொடக்கத்தில் 10,000 பேர் பணியாற்றிய America Online இன் சந்தையில் மூலதனமாக்கல் $ 66,400 கோடி. எவ்வாறிருப்பினும் ஆறு இலட்சம்பேரை பணிக்கு அமர்த்தியுள்ள ஜெனரல் மேட்டார்ஸ் இன் சந்தை மதிப்பு $52,400 கோடி ஆகும். அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்றாற்போல் மூலதனத்தின் இருபகுதிகளும் உபரிமதிப்பின் பங்கிற்கு உரிமைகோரும். மூலதனம் மொத்தத்திற்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கும் ஒட்டுமொத்த உபரி மதிப்பின் திரட்சிக்கு 10,000 பேர்களையே வேலைக்கு அமர்த்தியிருக்கும் America Online இன் பங்களிப்பு, 600,000 பேர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் ஜெனரல் மோட்டார்ஸை விட மிகக்குறைவாகும். America Online தொழிலாளர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 24மணி நேரங்கள் பணியில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கபடாவிட்டாலும் கூட ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களிடம் இருந்து எடுக்கப்படும் அதே அளவு உபரி மதிப்பை அவர்களால் பங்களிப்புச் செய்ய முடியாது.

Yahoo! வில் இந்த முரண்பாடு [ஒருபுறம் உபரி மதிப்பின் மீது மூலதனம் விடுக்கும் கோரிக்கைக்கும் மறுபுறம் அது உண்மையில் கறந்தெடுப்பதற்கும் இடையில் உள்ள இந்த முரண்பாடு] இன்னும் தெளிவானது. 673 பணியாளர்களை மட்டுமே கொண்ட Yahoo! 33,900 கோடி அமெரிக்க டாலர்களை சந்தை மதிப்பாகக்கொண்டிருந்தது.

பூகோள மூலதனத்தின் தலைகீழ் பிரமிட் வடிவ அமைப்புத்தான் அதன் பெரிதும் நிலையிலாத் தன்மைக்கு மூலகாரணம் ஆகும். பலகோடிக்கணக்கான டாலர் மூலதனமானது தனது திரும்பப் பெறும் வீதத்தை தக்கவைக்க வேண்டி உலகச்சந்தை முழுவதும் இலாபத்தைத் தேடி அலைபாய்கிறது.

பங்குகள், பங்குப்பத்திரங்கள் மற்றும் விற்பனை - ஆகிய சொத்து உரிமைகளுக்கான விலைகள் உயரும்பொழுது, அதனை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று இலாபம் பெறுகையில் மூலதனம் பாய்கிறது. ஒவ்வொருவரும் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வர். சந்தையில் தடுமாற்றம் ஏற்படும் பொழுது மூலதன மதிப்புக்கள் பரந்த அளவில் பணவீக்கமடைவது வெளிப்படையாகத் தெரியும். இதிலிருந்து வெளியேறுவதற்கான நெருக்கியடிப்பின் வடிவத்தை எடுப்பது ஒரேநாள் இரவிலேயே ஊக மூலதனம் மட்டும் அல்லாமல் உற்பத்தி மூலதனத்தின் மதிப்புக்களும் அழிக்கப்படும்.

1997-98 ஆசிய நிதி நெருக்கடிக்குப்பின் இது இந்தப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சூழ்நிலைகளின் விளைவாகும் என கருத்துரைக்க முயற்சிக்கப்பட்டது. உண்மையில் லட்சக்கணக்கான வேலைகள் அழிக்கப்பட்ட மற்றும் வங்கிகளும் நிறுவனங்களும் அவை திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் கடனை திடீரென எதிர்கொண்ட ஆசிய சீர்குலைவானது, ``ஆசியச் சூழ்நிலைகளின்`` வெளிப்பாடு அல்ல, மாறாக முழுமையான மூலதனச் சந்தையின் செயல்விளைவாகும்.

பங்குச் சந்தை மதிப்புக்களில் ஏற்றத்தைத் தூண்டுவதற்கு உதவியாக, பெருமளவு மூலதனம் ஆசியா மற்றும் ஏனைய சந்தைகளை விட்டு ஐக்கிய அமெரிக்கவினுள் பாய்ந்தது. அதன் மூலம் சந்தை மதிப்பேற்றங்கள் சீர்குலைந்ததனால் இலட்சக்கணக்கான மக்களின் ஒய்வூதியநிதிகள், சேமிப்பு நிதிகள் மற்றும் முதலீடுகள் போன்றவை உண்மையில் ஒர் இரவிலேயே துடைத்துக்கட்டப்பட்டதை எதிர் கொண்டார்கள்.

ஒரு எழுத்தாளர் அண்மையில் குறித்தபடி, விஞ்ஞான புைைனகதை எழுத்தாளர்களின் தீயகனவான மனித குலம் எந்திர மனிதர் மற்றும் இயந்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது, யதார்த்தமாகிவிட்டது. அது இயந்திரங்களின் ஆதிக்கத்தால் அல்ல இது நிதி மூலதனத்தின் அமைப்பு முறையின் ஆதிக்கத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது.. நிதிச்சந்தையானது கூட்டாக முதலாளித்துவ வாதிகளின் -மூலதனம்- பொதுவாக உலகம் முழுமையாக மனிதகுலத்தின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒருவகை தானியங்கி முறையாகி அனைத்து வாழ்க்கை நிலைமைகளையும் கடைசித்துளி உபரிமதிப்பை திரட்டுவதற்கான ஈவு இரக்கமற்ற ஓட்டத்துக்குக் கீழ்ப்படுத்தும் முறை ஆகும். இந்த மேலாதிக்கத்திற்கான வேர்கள் தொழில் நுட்பமல்ல மாறாக மதிப்பு தானே பெருக்கமடைவதை [the self-expansion of value] அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளின் அமைப்புமுறை ஆகும்.

மனித வரலாற்றில் முதன்முறையாக உண்மையான மனித சுதந்திரம் இனியும் கற்பனாவதமல்ல மாறாக அடையக்கூடியதே என்ற முன்னோக்கிற்கு வழிவகுக்கும் -மனித குலத்தின் விடுதலைக்குத் தேவையான சடரீதியான அடித்தளத்தை வழங்கும் உற்பத்தி சக்திகளும் தொழில்நுட்பமும், செல்வத்தை உற்பத்தி செய்யும் பெரும்பாலானோரின் ஏழ்மைக்கு காரணமான புறநிலை தர்க்கவியல் தேவையான உற்பத்தி முறைக்கு அடிபணியவைக்கிறது என்பதுதான் மனித குலம் எதிர்கொள்ளும் நெருக்கடியாகும்.

உலகம் முழுவதும் பரந்த மக்கள் இப்போது எதிர்கொள்கின்ற சூழ்நிலையை தனது கூர்மையான முன்னறிதலால் மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன்பே பின்வருமாறு எழுதினார்: ``வரலாற்றில் இன்றுவரை தனிநபர்கள், அவர்களின் நடவடிக்கையை உலக வரலாற்று நடவடிக்கையாக விரிவு படுத்தியதுடன், அவர்களுக்கு அன்னியமான சக்தியின் கீழ் மேலும் மேலும் அடிமையாகி வருகின்றனர். அந்த சக்தியானது மேலும்மேலும் பெரிதாகி இறுதியில் உலகச் சந்தையாக மாறிவிட்டது என்பது நிச்சயமான அனுபவரீதியான உண்மையாய் இருக்கிறது.`` 1

இந்த உலக சந்தையின் பண்பை ஒருகணம் எண்ணுகையில் நிதியின் பரந்த அளவு இயக்கம் இங்கு ஆலைகளை மூடவும் அங்கு வேலைகளை பேரளவில் அழிக்கவும் அதிகார ஆணயிடுகிறது. மனித வரலாற்றில் மகத்தான உற்பத்தி முன்னேற்றங்களின் மத்தியில், சுகாதார சேவைக்கும் கல்விக்கும் போதுமான பணம் இல்லை என நியாயப்படுத்தி, ஒரு நாட்டில் சமூக சேவைகளை வெட்டச் சொல்லியும் மற்றொரு நாட்டில் ``கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து கொள்ள`` வும் கோருகிறது. அதன் பிரதிநிதிகள் கூறுவது போல் இது கடவுளின் உற்பத்திப் பொருளுமல்ல இயற்கையின் கொடையுமல்ல. அது மனிதகுலத்தின் சமூக உற்பத்தி திறனின் அந்நியப்பட்ட வெளிப்பாடு ஆகும்.

சோசலிச முன்னோக்கு

எப்படி இந்த அந்நியமாதலை வெற்றி கொள்வது? இதற்கு இரண்டு நடைமுறை முன்நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்ஸ் வலியுறுத்தினார்.

``அதனைப் பொறுத்த மட்டில் `சகிக்க முடியாத` அதிகாரமாக ஆகிறது. அதாவது அந்த அதிகாரத்திற்கெதிராக மனிதர்கள் புரட்சியை நடத்துகிறார்கள். அது நிச்சயம் பெரும் மனிதகுலத்தினை சொத்துடைமை அற்றவர்களாக மாற்றியிருக்கும் அதேவேளை, அது முரண்பாடாக செல்வம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த இன்றைய உலகைப் படைத்துள்ளது. இந்த இரு நிலைமைகளுமே ஒரு உயர்ந்த வளர்ச்சி மட்டத்தையும் உற்பத்திச் சக்தியில் ஒருபெரும் அதிகரிப்பையும் முன்னனுமானிக்கிறது``. 2

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதில் கேள்விக்கே இடமில்லை. உற்பத்தி பூகோளமயமாக்கலானது சில தசாப்தங்களுக்கு முன்னால் உலகின் பிராந்தியங்களில் எங்கு தொழிற்சாலை அரிதாக அமைந்தனவோ அங்கெல்லாம் கோடிக்கணக்கில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியில் பெருக்கத்தை ஏற்படுத்தியது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் மக்கட்தொகையின் மொத்தப் பகுதியில் ஒரு சமயம் நடுத்தர வர்க்கமாகக் கருதப்பட்டவை சக்தி வாய்ந்த முறையில் பாட்டாளி வர்க்கமயமாகி உள்ளன. உலகம் முழுவதிலும் தொழிலாளர் போராட்டங்கள், அவை பல்வேறு வடிவங்களை எடுத்திருக்கலாம் ஆயினும், ஒவ்வொரு தேசியப் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பூகோளச் சந்தையின் நடவடிக்கையிலிருந்து மற்றும் நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கோரிக்கைகளின் நடவடிக்கையிலிருந்து இவை எழுகின்றதுடன், உண்மையில் புறநிலை ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

தற்போதய முக்கியப் பிரச்சினை, பூகோள முதலாளித்துவத்துக்கு எதிரான எவ்வகையான வேலைத்திட்டமும் முன்னோக்கும் தற்போது முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதுதான். கடந்த மாதங்களில் உலக வர்த்தக அமைப்புக்கு எதிராகவும் கடந்த மாதத்தில் சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கிக்கு எதிரான வரிசையான எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பங்கு மதிப்புக்களில் உயர்வுமற்றும் வெறிபிடித்த சந்தை ஆரவார வெற்றிகளுக்கும் மத்தியில், உலகம் முழுவதும் உள்ளபரந்த மக்கள் தற்போதுள்ள சமூக ஒழுங்கின் மீது மிக அதிருப்தி அடைந்துள்ளதுடன் மேலும் வெறுப்படைந்து வருகின்றனர். அந்த எதிர்ப்பின் வெளிப்பாடு ஆளும் வட்டங்களில் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

இந்த இயக்கங்களின் வெளிப்பாட்டின் ஒரு சில வாரங்களுக்குள்ளேயே உலகவர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியம் எதிர்ப்புகள் மீதான அறிக்கைகள் மற்றும் பேராசிரியர் மைக்கேல் சோசுடோவ்ஸ்கியுடன் உலக சோசலிச வலைதளத்தின் மீதான அண்மைய விவாதங்கள் ஆகியவற்றில் நாம் ஆய்வு செய்த விஷயங்கள் அதாவது -வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு பற்றிய விஷயங்கள் முன்னுக்கு வந்துள்ளன.

தற்போது காணப்படும் இந்த எதிர்ப்பு இயக்கங்களினை மேலாதிக்கம் செய்யும் சக்திகளின் அரசியல் முன்னோக்குகளுக்கிடையில் என்ன தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், அவை சர்வதேச நாணய நிதியமும் பூகோள முதலாளித்துவத்தின் ஏனைய நிறுவனங்களும் "சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்`` அல்லது ``மூடப்பட வேண்டும்`` எனபதாகவும், பூகோள நிதி அமைப்பின் மேலாதிக்கத்திற்கு எதிராக தேசிய இறையாண்மையை மீட்டுவித்தல் அவசியமானது என்பதாகவுமே அது இருக்கின்றது.

பேராசிரியர் சோசுடோவ்ஸ்கி ``சுதந்திரசந்தையின் ஒரே வாக்குறுதி`` மக்களின் வாழ்வில் பொருளாதார சீர்குலைவுகளைச் செய்வதுதான் என்று மிகச் சரியாகச்சுட்டிக் காட்டுகிறார். அவரது முன்னோக்கை விரிவாக்கும் பொழுது அவர் உறுதிபடக் கூறுவது என்னவெனில் ``நாம் உண்மையை மீட்க வேண்டும், நாம் நமது நாடுகளதும் மற்றும் நம் நாட்டு மக்களதும் இறையாண்மையை மீள நிலை நாட்ட வேண்டும்``.

இங்குதான் பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிச ரீதியிலான எதிர்ப்பான, தேசிய எல்லைகளைக் கடந்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான முயற்சிக்கும், தேசிய அரசின் அதிகாரத்தை மீட்கும் ``பூகோளமய`` த்துக்கு எதிரான குட்டி முதலாளித்துவ தேசிய எதிர்ப்புக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு உள்ளது.

பின்னர் கூறப்பட்ட முன்னோக்கு அந்த பதத்தின் ஆழமான வரலாற்று அர்த்தத்தில் சாராம்சத்தில் பிற்போக்குத் தன்மையானது ஆகும். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உற்பத்தி சக்திகள் புரட்சிகரமயப்படுத்தலின் விளைவாக எழும் சமூக எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, முன்னர் இருந்த நிலைக்குத் திரும்புவதற்காக இவ் இயக்கங்கள் எழுகின்றன.

தொழில்துறை முதலாளித்துவ அபிவிருத்தியின் முதல்கட்டத்தில், விவசாயப் பொருளாதாரமும் குட்டிமுதலாளித்துவ கைவினை உற்பத்தியும் அழிவதையிட்டு குறைகூறினர். கடந்த நூற்றாண்டின் திருப்பத்தில் இராட்சத முதலாளித்துவ இணைவுகளின் உருவாக்கம் மற்றும் ஏகபோக சகாப்தத்தில், அதற்கு முந்தைய காலகட்டத்தில் சிறு அளவிலான உற்பத்தியை மீளக் கொணர்வதற்கான கோரிக்கைகளுடன் இயக்கங்கள் முன்னணியில் வந்தன. தற்பொழுது, முதலாளித்துவ அபிவிருத்தியின் அண்மைய நிலையில், தேவைக்கோரிக்கைகளை அடித்தளமான கெயின்சியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட போருக்குப் பிந்தைய செழுமைக்கால தேசிய ரீதியாக ஒழுங்மைக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு திரும்புவதற்கு கோரிக்கை எழுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம்.

நவம்பர் 30, 1999 ``பூகோளமுதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கத்துக்கு அரசியலே முதல்கொள்கை`` என்று தலைப்பிடப்பட்ட நமது அறிக்கையில், ``பூகோளமயம்`` மற்றும் ``பூகோள முதலாளித்துவம்`` ஆகியவற்றை அடையாளம் காண்பது அடிப்டைக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தன என்று நாம் சுட்டிக் காட்டினோம்.

உற்பத்தி மற்றும் பொருட்கள் பரிவர்த்தனையின் அதிகரித்துவரும் பூகோளத் தன்மையையும், மற்றும் கணனி அறிவியல், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்தில் புரட்சிகர முன்னேற்றங்களால் தூண்டிவிடப்பட்ட முற்போக்கு அபிவிருத்திக்கும் - சமூக ரீதியாக அழிவு விளைவுகள் பூகோளமயப்படுத்தலினால் எழவில்லை மாறாக தனியார் இலாபத்தின் அராஜக ஓட்டத்தினால் இயக்கப்படும் முறைக்கு தொடர்ச்சியாக பொருளாதார வாழ்க்கையைக் கீழ்படுத்தியமையிலிருந்து மற்றும் காலத்திற்கு ஒவ்வாமற்போய்விட்ட அரசியல் அமைப்பின் தேசியவடிவத்துடன் இணைந்துள்ளதிலிருந்து எழுகின்றது என்பதற்குமிடையில் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமானது என நாம் அதில் வலியுறுத்தினோம்.

இன்றைய முக்கிய பிரச்சினை அபிவிருத்தியை, தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதார வாழ்க்கையை உடைய ஏதோ வகை புராண காலத்துக்கு எப்படி சுருட்டி எடுத்துக் கொண்டு போவது என்பதல்ல, பூகோள பொருளாதாரத்தை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? யாருடைய நலன்கள் தீர்மானிக்கப் போகின்றன? அதன் பெரிய தொழில் நுட்ப மற்றும் கலாச்சார திறமைகள் எப்படி பயன்படுத்தப் படுகின்றன? என்பதுதான் இன்றைய பிரச்சனை..

பொருளாதாரத்தை தேசிய அரசினுள் கட்டுப்படுத்தவிளையும் இந்தக் கோரிக்கையை நாம் அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் நோக்குவோம். தேசிய அரசு என்பது முதலாளித்துவ வர்க்கத்தால் அது உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்ய முயலுகையிலும் அது கொண்டுவர முயன்ற புதிய சமூக ஒழுங்கின் தேவைகளுக்கு ஏற்ப உலகை மறுவடிவமைக்க அதனால் உருவாக்கப்பட்டது. ஆனால் தேசிய அரசு அமைப்பானது உற்பத்தி சக்திகளினால் பூகோளமயமாக்கலினால் படு பிற்போக்கானதாகி வருகிறது. ஆகையால் தேசிய இறையான்மையை மீளக் கொண்டுவருவதற்கான கோரிக்கை மீதான அரசியல் முன்னோக்கை அடிப்படையாகக் கொள்வது என்பது, நிலப்பிரபுத்துவ ஒழுங்கை பராமரிப்பதை வலியுறுத்துவதன் மூலம் முதலாளித்துவத்துக்கு எதிர்ப்பை வழங்கிய அந்த இயக்கங்களின்அதே நிலைப்பாட்டை எடுப்பதாகும்.

கடந்த காலத்தைப் பார்க்கும் குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராக, பூகோள முதலாளித்துவத்துக்கு சோசலிச ரீதியிலான எதிர்ப்பானது எதிர்காலத்தினை நோக்குநிலைப்படுத்துகிறது. அல்லது இன்னும் துல்லியமாக கூறினால் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம் நாகரீகத்தை முன்னேற்றவும் உயர்ந்த சமூக ஒழுங்கின் அபிவிருத்திக்காக வழியைத்தயார் செய்து கொண்டிருக்கும் புறநிலை நிகழ்ச்சிப் போக்கின் மீது தனது முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

முதலாளித்துவ உற்பத்தியின் அபிவிருத்தி எப்போதும் எங்கும் முதலாளித்துவ வர்க்கம் இலாபத்தை குவிக்கவும் வர்க்கச் சுரண்டலை உக்கிரப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் உற்பத்தி சக்திகளின் இதே அபிவிருத்திதான் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை கீழறுப்பதுடன் அதனைத் தூக்கி எறிவதற்கான சூழ்நிலையையும் தயாரிக்கிறது. மார்க்ஸ் கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை JTM விளக்கியவாறு, முதலாளித்துவ வர்க்கம் இன்னும் சொல்லப்போனால் மந்திரவாதியைப் போல ``அவரது மந்திரத்தால் உருவாக்கிய பாதாள உலகத்தின் சக்தியை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது``. போலாகியுள்ளது.

உற்பத்தியினதும், நிதியினதும் பூகோளமயமாக்கல் பூகோள முதலாளித்துவத்துக்கு சர்வதேசத் தொழிலாள வர்க்கம் என்ற வடிவில் புதைகுழியை மட்டும் தோண்டாததோடு, திட்டமிட்ட உலகசோசலிசப் பொருளாதாரத்துக்கான புறநிலை அடித்தளங்களையும் தயார்செய்துள்ளது.

அதனது விரிவான திட்டமிடல், தகவல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்குமுறையுடன் நவீன நாடு கடந்த கூட்டு நிறுவனம் (TNC) முதலாளித்துவத்துக்குள் அபிவிருத்தி அடைந்துவரும் சோசலிச திட்டமிடல் மற்றும் உற்பத்தி வடிவங்களின் முன்னறிவிப்பாளர் இல்லை எனில் வேறு என்ன? இன்று சரக்குகள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை நாடுகடந்த நிறுவனங்கள் மூலம் நாடுகளையும் கண்டங்களையும் கடந்து ஒழுங்கமைக்க முடியும் என்றால், அவற்றுள் பெரும்பாலானவற்றின் பொருளாதார வெளிப்பாடு (Economic out put) முழு தேசிய பொருளாதாரங்களையும் விட அதிகமாக இருக்கிற நிலையில், நாளை மனிததேவையை நிறைவு செய்வதை அடிப்படையாகக் கொண்ட பூகோள அளவிலான சோசலிசதிட்டமிடல் நிறைவேற்றலை சக்திமிக்கவகையில் நடைமுறைப்படுத்தமுடியும். அதில்தான் உற்பத்தி சக்திகளை உபரிமதிப்பைத் திரட்டுவதற்கான ஈவிரக்கமற்ற தர்க்கத்திலிருந்து விடுவித்து, அதனை மேலாதிக்கம் செய்வதற்கான கருவியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மனித குலத்திற்கு சேவை செய்வதாய் ஆக்க முடியும்.

பூகோள நிதிச் சந்தைகளின் அபிவிருத்தி மற்றும் அதனோடு தொடர்புடைய தொடர்பு முறைகளின் அபிவிருத்திமூலம் பூகோளத்தின் எந்த மூலையிலும் நிகழும் பொருளாதார செயற்பாட்டின் மீதான அன்றன்றாடைய தகவலை அளிப்பது சாத்தியமெனில், வரலாற்றில் முதல் முறையாக பரந்த மக்கள் பொருளாதார வாழ்க்கையைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல் மற்றும் கட்டுப்படுத்தலில் சக்தி மிக்க வகையில் பங்கேற்கத் தேவையான செய்தித்தொடர்பையும் தகவல்களையும் அபிவிருத்தி செய்வது முழுவதும் சாத்தியமானதே.

இந்த இலக்கிற்குத்தான் சோசலிச இயக்கம் போராடுகிறது- இந்த இலக்கு உலக ரீதியான சீர்திருத்தக்காரரின் இந்த அல்லது அந்த திட்டங்களில் இருந்து பெறப்படுவதல்ல, மாறாக நமது கண் முன்னேயே நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளில் இருந்து பெறப்படுகிறது.

ரஷ்யப்புரட்சி

இந்த முன்னோக்கினைச் சாதிப்பதற்கான அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புவது இருபதாம் நூற்றாண்டின் அரசியல் படிப்பினைகளை, எல்லாவற்றுக்கும் மேலாக அதன் மாபெரும் நிகழ்வான 1917 ரஷ்யப் புரட்சி பற்றிய படிப்பினைகளை உள்ளீர்ப்பதை தேவையாகக் கொண்டிருக்கிறது.

புரட்சி பரவாமல் போனதும், அதன்விளைவாய் முதலாவது தொழிலாளர் அரசு ஸ்ராலினிச சர்வாதிகார ஆட்சியாக சீரழிந்ததும், அதனை அடுத்து முதலாளித்துவ புனருத்தாரணமும் பெரும் குழப்பத்தையும் அரசியல் வழிவிலகலையும் உருவாக்கியிருக்கிறது.

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேற்றமடைந்த சக்திகளையும் அறிவு ஜீவிகளையும் மற்றும் அவர்களூடாக வெகுஜனங்களையும் தெளிவூட்டுவதற்கான புறச் சூழ்நிலைமைகள் பூகோள முதலாளித்துவத்தின் அபிவிருத்தியால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ரஷ்யப் புரட்சியானது தெளிந்த நீல வானத்திலிருந்து தோன்றவில்லை. அதன் எழுச்சியும் வெடிப்பும், 19ம் நூற்றாண்டின் முடிவில் முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் முதல் கட்டத்தில், மார்க்சிச இயக்கத்தால் முன்னனுமானிக்கப்பட்டு செயல் முனைப்புடன் தயார் செய்யப்பட்டது.

பூகோள முதலாளித்துவம் மனித குலத்தை காட்டுமிராண்டித்தனத்தினுள் மூழ்கடிக்க இருந்ததை முறியடிப்பதற்கான முதலாவது முயற்சி தோல்வியில் முடிந்தது. முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடிந்ததுடன் புரட்சியும் சீரழிந்தது.

ஆனால் நாம் இந்த முதல் முயற்சியை, பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் வைத்து நோக்குவோம். அதனை உருவாக்கிய அனைத்துச் சூழ்நிலைகளும் மீண்டும் ஒருமுறை பக்குவமடைந்து கொண்டிருக்கின்றன. வரலாறு மீண்டும் அதேபோல் நிகழாது விட்டாலும் கூட ரஷ்யப் புரட்சியைத் தோற்றுவித்த வரலாற்று முரண்பாடுகள் ஒன்றுகூட தீர்க்கப்படவில்லை. கடந்த நூறு வருடங்களில் முதலாளித்துவத்துக்கு உற்பத்தி சக்திகளின் ஒருங்கிசைந்த அபிவிருத்தியை உறுதிப்படுத்தலூடாக உலக மக்களின் பரந்த பகுதியினருக்கு சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடிந்திருந்தால், நாங்கள் சர்வதேச சோசலிசம் அடையப்படமுடியாத ஒன்றெனவும் , கற்பனாவாத முன்னோக்கெனவும் கூறலாம்.

ஆனால் அது அப்படி அல்ல என்பது தெளிவாகியுள்ளது. இந்தநூற்றாண்டின் முதற் பகுதியின் புரட்சிகர போராட்டங்களை உருவாக்கிய முதலாளித்துவத்தின் அனைத்து வரலாற்று முரண்பாடுகளும் மிக வெடிக்கும் வடிவத்தை எடுத்திருக்கின்றன. ரஷ்யப் புரட்சியை வழிநடாத்திய வரலாற்று முன்னோக்கான -சர்வதேச சோசலிசப் புரட்சியினூடாக உலகை மறு ஓழுங்கமைப்பதுதான் பூகோள முதலாளித்துவம் மனித குலத்தை முட்டுச்சந்துக்குள் இட்டுச்செல்வதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே ஒரு சாத்தியமான வழி. இந்த முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தலைமையை பலமாக ஒன்றிணைப்பதுதான் இன்றைய அவசியமான பணியாகும். இதனைச் சாதிப்பதுதான் சோசலிச சமத்துவக் கட்சியினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் இலக்காகும்.

குறிப்புகள் :-

1. மார்க்ஸ்-ஜெர்மன் சித்தாந்தம்குறித்து, பக்கம்49
2. மேற் சொன்னஅதே நூல், பக்கம் 46

[பூகோளமயமாக்கல்: ஒரு சோசலிச முன்னோக்கு. - பகுதி 1]

[பூகோளமயமாக்கல்: ஒரு சோசலிச முன்னோக்கு.- பகுதி 2]

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved