நீஸின் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு பெரிய
நாடுகளின் பலத்தை அதிகரிக்கின்றது
By Peter Schwarz
13 December 2000
Use
this version to print
நீஸ்சில் (பிரான்ஸ்) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின்
தலைமைகளின் உச்சிமாநாடானது ஒரு ''உடன்பாட்டுடன்'' திட்டமிட்டதற்கு
மாறாக ஒன்றரை நாள் பிந்தி முடிவடைந்தது. இவ் உடன்பாடானது
இதில் கலந்து கொண்டவர்களின் விருப்பப்படி இம்மாநாட்டை
எந்த நிலைமைகளின் கீழும் தோல்வியடையவிடக்கூடாது என்பதன்
வெளிப்பாடாகும். ஆனால் பிரச்சனைக்குரிய எந்தக் கேள்விகளும்
உண்மையாக தீர்க்கப்படவில்லை.
இம்மாநாட்டின் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின்
தகமையை அதிகரிப்பதும், புதிய அங்கத்தவர்களுக்கான வசதிகளை
உருவாக்குவதற்காக கட்டுமான சீர்திருத்தங்களை செய்வற்கான
நடவடிக்கைகளை எடுப்பதுமாகும். இதன் இறுதியில் அம்ஸரடாம்
நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்க உள்மட்ட
மாநாட்டில் ஒன்றிணைக்கமுடியாத பிரச்சனைகளால் விடுபட்டுப்போன
கேள்விகளுக்கு தீர்வுகாணுவதுமாகும். நீஸ் இதனை ஓரளவிற்கு சமாளித்துள்ளது.
இது ஜேர்மனின் முன்மொழிவால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலத்தினை
மீளக் கட்டுப்படுத்துவதற்கான 2004 இல் அரசாங்க உள்மட்ட
மாநாட்டினை கூட்ட எடுத்த முடிவால் தெளிவாகியுள்ளது.
நீஸ் மாநாடு பிரச்சனைக்குரிய கேள்விகள் தொடர்பாக
பின்வரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது;
*2005 இல் இருந்து பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து,
ஜேர்மனி என்பன தமது இரண்டாவது ஐரோப்பிய ஆணையாளர் பதவியை
இழக்கின்றன. எவ்வாறிருந்தபோதும் புதிய அங்கத்துவ நாடுகள்
உட்பட அனைத்து நாடுகளும் ஆணைக்குழுவில் ஒரு பிரதிநிதியை
கொண்டிருக்கும். ஆணைக்குழுவின் அளவை குறைத்தலும், சிறப்பாக
ஒழுங்கமைத்தலும் பிற்போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்
அங்கத்துவம் 15 இலிருந்து 27 ஆக அதிகரிக்கும் பட்சத்திலேயே
அதனது ஆணைக்குழுவின் அளவை குறைத்தல் தொடர்பாக மீண்டும்
கலந்துரையாடப்படும்.
*அமைச்சரவையின் சபையில் ஒவ்வொரு நாட்டினதும்
வாக்களிக்கும் பலம் பற்றிய புதிய ஒழுங்மைப்பு ஒன்று தொடர்பாக
இணக்கம் காணப்பட்டுள்ளது. இது சிறிய அங்கத்துவ நாடுகளுடன்
ஒப்பிடுகையில் பெரிய நாடுகளுக்கு கூடிய பலத்தை வழங்குகின்ற
போதும், அவர்கள் எதிர்பார்த்த அளவு வழங்கப்படவில்லை. தற்போது
கூடிய, குறைந்த வாக்குகளுக்கு இடையிலான விகிதம் 1:5
ஆக உள்ளது. இது 1:7
1/4
ஆக மாற்றமடைகின்றதே தவிர திட்டமிட்டபடி 1:10
ஆக மாறவில்லை. ஜேர்மன் கூடிய மக்கள் தொகையை கொண்டிருக்கின்றபோதும்
பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகியவற்றிற்குள்ள வாக்குத்தொகையையே
பெற்றுள்ளது. எதிர்காலத்தில் தற்போதுள்ள பெரும்பான்மை
வாக்களிப்பு முறையின் கீழ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற அமைச்சரவையின்
73% வாக்குகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்களின் 62% வாக்குகளும்
தேவையாகும். இது தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்மானங்களை
தடைசெய்வதற்கான வசதியை பெரிய நாடுகளுக்கு வழங்குகின்றது.
*வீட்டோ உரிமையை பாவிக்ககூடிய தேசிய உரிமையானது
இதுவரை பிரயோகிக்ககூடிய விடயங்களில் இருந்து அரைவாசியாக
குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் குறிப்பிட்ட பெரும்பான்மை வாக்களிப்பு
அடித்தளத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம். எவ்வாறிருந்தபோதும்
இவை இரண்டாம் பட்சமான விடயங்களாகும். முக்கிய விடயங்களான
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால தகமை தொடர்பான நடவடிக்கைளுக்கு
ஒருமனதாக முடிவு எடுக்கும் கொள்கை நடைமுறையில் இருக்கும்.
இங்கிலாந்தும் சுவீடனும் தமது வரிவிதிப்பு, சமூகநல கொள்கைகள்
தொடர்பான வீட்டோ உரிமையை பாதுகாத்துக்கொண்டன. அங்கத்துவ
நாடுகள் அகதிகள், குடியேற்ற தொடர்பான கொள்கையில் ஒருமனதான
முடிவெடுக்கும் பட்சத்தில் மட்டுமே அவை தொடர்பான வீட்டோ
உரிமையை இல்லாது ஒழிக்கும் என உறுதியளித்துள்ளது. கட்டுமான
கொள்கை தொடர்பாக -பிரதேசங்களுக்கான மில்லியன் கணக்கான
நிதியுதவியை பங்கிடுவதில் அதிக உதவியை பெறும் நாடான ஸ்பெயினின்
வலியுறுத்தலின் கீழ் 2007 வரை வீட்டோ உரிமை நடைமுறையில் இருக்கும்.
பிரான்சின் வலியுறுத்தலின் கீழ் வர்த்தக கலாச்சாரம் தொடர்பாக
வீட்டோ உரிமை தொடர்ந்தும் இருக்கும்.
மாநாட்டு முடிபுகள் அனைத்தும் தேசிய பாராளுமன்றங்களால்
உறுதிப்படுத்தப்படவேண்டும். இது மட்டும் உறுதியானது. ஐரோப்பிய
பாராளுமன்றம் தனது எதிர்ப்பை தெரிவித்தாலும் அதனால் இம்
மாநாட்டின் தீர்மானங்களை தடுக்கமுடியாது. ஐரோப்பிய
பாராளுமன்றம் இவ் உடன்பாட்டை உறுதிப்படுத்துவதை நிராகரித்தாலும்
தான் அதற்கு எதிராக வாக்களிக்கும் என இத்தாலிய பாராளுமன்றம்
தெரிவித்தது.
சக்திகளின் புதிய சமநிலை
உண்மையான அதிகாரத்துவத்திற்கும், ஆழுமைக்குமான
முக்கியமானதான அமைச்சரவையின் வாக்குகளின் பலம் தொடர்பாகவே
காரசாரமான விவாதம் நீஸில் இடம்பெற்றது. அங்கு தமது
கூடிய மக்கள் தொகை கவனத்திற்கு எடுக்கப்படவேண்டும்
என்ற ஜேர்மனிக்கும், தனக்கும் இடையிலான சம உரிமைக்கு
முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற பதட்டம் பிரான்சிற்கு மட்டுமல்லாது
பெரிய, சிறிய அங்கத்தவர்கள் மத்தியிலும் கூட கூரிய முரண்பாடுகள்
காணப்பட்டது.
பெரிய நாடுகளுக்கு கூடிய ஆழுமை வழங்கப்பட
வேண்டும் என்ற பிரான்சின் முன்மொழிவானது சிறிய நாடுகளிடமிருந்து
பாரிய எதிர்ப்பை பெற்றது. போர்த்துக்கல் தலைவரான Antonio
Guterres பிரான்ஸ் ''சட்டபூர்வமான சதி''
ஒன்றை செய்வதாக வெளிப்படையாக குற்றம்சாட்டியது. லக்ஸ்சம்பேர்க்கின்
பிரதமரான Claude Junker ஐரோப்பிய
ஒன்றியத்தின் நிலையான உடையும் தன்மை இம்மாநாட்டில் காணப்பட்டது
போல் தான் எப்போதும் காணவில்லை எனத்தெரிவித்தார்.
ஜேர்மன் தூதுக்குழு இந்நிலைமையை தமக்கு
சாதகமாக பாவித்துக்கொண்டு தாம் சிறிய நாடுகளின் பிரதிநிதியாக
காட்டிக்கொண்டது. அவர்கள் சனத்தொகையில் ஒத்த ஸ்பெயினின்
ஓரளவான உதவியுடன் போலந்தின் அங்கத்துவத்திற்கான உரிமையை
பெற்றுக்கொள்ள உதவியது. பிரான்ஸ் குறைந்த வாக்குரிமை வழங்குவதற்கு
பிரேரித்திருந்தது. ஜேர்மன் பிரதமர் Schröder
பெல்ஜியத்திற்கும் ஒல்லாந்துக்கும்
சமமான வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என உறுதியாக
நின்று அடுத்தநாள் காலைவரை பேச்சுவார்த்தையை இழுத்தடித்தமைக்காக
பெல்ஜிய பிரதமரான Guy
Verhofstadt இனை புகழ்ந்துரைத்தார்.
ஒல்லாந்தினது சனத்தொகை பெல்ஜியத்தினை விட கூடுதலாக இருந்தபோதும்
அவர் ஜேர்மனியையும் பிரான்சையும் ஒப்பிட்டு தனது கோரிக்கையை
நியாயப்படுத்தினார். இதன் மூலம் பிரான்சின் நிலைப்பாட்டை
மறைமுகமாக தாக்கினார்.
பல பத்திரிகைகள் பிரான்ஸ் தர்மசங்கடமான முறையில்
பேச்சுவார்த்தைகளை நடாத்தியது தொடர்பாகவும், ''புல்டோசர்''
என்ற பட்டப் பெயரை நீண்டகாலமாக கொண்ட, நீஸில் காரசாரமான
விவாதத்திற்கு காரணமான Jacques
Chirac இன் இராஜதந்திரமற்ற
அணுகுமுறை தொடர்பாகவும் விமர்சித்திருந்தன. உண்மையில் இதில்
முக்கியமான அடிப்படையான பிரச்சனைகள் இதில் உள்ளடங்கியிருப்பதுடன்,
பிரான்ஸ் ஐரோப்பாவில் தனது ஆழுமைமிக்க நிலையை இழந்துபோவது
தொடர்பாக பயமடைந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவை நோக்கி பரவலாக்குவதானது
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அதிகார சமநிலையில் தவிர்க்கமுடியாதபடி
மாற்றத்தை ஏற்படுத்தும். ஜேர்மனி அடர்த்தியான சனத்தொகையும்
பொருளாதார பலமும் உடையது மட்டுமல்லாது அதன் மறு
இணைப்பின் பின்னர் பூகோளரீதியாக ஐரோப்பாவின் மத்தியை நோக்கியும்,
புதிய கிழக்கு அங்கத்தவ நாடுகளையும் நோக்கி நகர்ந்துள்ளது.
பாரிஸ் பேர்லினில் இருந்து 1000 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதுடன்,
வார்ஸோ அதைவிட அரைவாசியிலும், பிராக் மூன்றில் ஒரு பங்கு
தூரத்திலேயை உள்ளது. ஜேர்மனி ஏற்கெனவே கிழக்கு ஐரோப்பிய
நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார தொடர்புகளை
கொண்டுள்ளது.
போலந்தினதும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய
நாடுகளினதும் அங்கத்துவத்தை ஆகக்குறைந்தது 2003இல் இருந்து
சாத்தியமாக்கியது தொடர்பாக இம்மாநாடு குறித்து ஜேர்மனியில்
பாரிய வெற்றியாக கொண்டாடப்பட்டது. எவ்வாறிருந்தபோதும்
ஜேர்மன் பிரதமர் Schröder குறிப்பிட்ட
படி ஜேர்மன் அரசாங்கம் கூடுதலாக எதிர்பார்த்திருந்தது. Schröder
பேச்சுவார்த்தையை கையாண்டவிதம்
தொடர்பாக எதிர்க்கட்சிகளும் புகழ்ந்திருந்தன.
வாக்குகளின் தாக்கம் குறித்த தொலைத்தொடர்பு
சாதனங்களின் சாகசவேலைகளின் பின்னர் மறைந்து போன வீட்டோ
உரிமையை ''இலகுவாக வளையக்கூடியதாக'' [Flexible]
மாற்ற மாநாடு தீர்மானித்தது Schröder
இற்கு கிடைத்த இன்னொரு வெற்றியாகும்.
''இலகுவாக வளையக்கூடியதானது'' இக்கூட்டினுள் சிறிய
நாடுகளை இன்னொருகூட்டாக இயங்கவும் வற்புறுத்துகின்றது.
இது முன்னணி வகிக்கும் நாடுகளின் உதவியுடன் மற்றைய நாடுகளை
முன்தள்ளிக்கொண்டு போகக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது.
இதுவரை ஏனைய நாடுகள் எதிர்க்காவிட்டால் மட்டுமே இக்கூட்டுறவு
சாத்தியமாக இருந்தது.
ஜேர்மன் அரசாங்கம் தனது நோக்கங்கள்
அனைத்தும் நீஸில் சாத்தியமாகவில்லை என அதிருப்தி அடையத்தேவையில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புக்களின் பலவீனமானது ஏனைய
நாடுகளுக்கு, ஜேர்மன் ''இலகுவாக வளையக் கூடியதாலும்'',
தனது பொருளாதார பலத்தாலும் தனது நோக்கங்களை
நிறைவேற்றிக்கொள்ள விரும்புவதுடன் இணைந்து போவது இலகுவானதாக
இருக்கவில்லை.
நீஸ் மாநாடு ஒரு விடயத்தை தெளிவாக்கியுள்ளது.
ஐரோப்பாவின் அரசியல் நிகழ்வுகள் அதிகரித்துவரும் அவநம்பிக்கையாலும்,
போட்டியான எதிராளிகளாலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஐரோப்பிய
ஒன்றியத்தின் ஆசீர்வாதத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றிணைவுப் போக்கினால்
ஐரோப்பிய மக்களை சமாதானமான முறையில் ஒன்றிணைக்க
முடியாதுள்ளது. அது சிக்கலான தலைவிதியை கொண்ட இருதலைக்கொள்ளி
எறும்பின் நிலைமையான ஐரோப்பாவை பலதடவை அழிவிற்கு இட்டுச்சென்ற
தேசியவாத சுயநலத்திற்கும், வர்த்தக சார்பான புறூஸல்சின்
அதிகாரத்துவத்தின் கட்டளைக்கும் இடையில் அகப்பட்டுள்ளது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஐரோப்பிய மக்களினுடைய ஜனநாயக
உரிமைகளும், சமூக நலன்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய இராணுவம்
இம் மாநாடு விரைவாக ஐக்கியப்பட்ட
ஒரேயொருவிடயம் இராணுவம் தொடர்பானதாகும். கடந்த
வெள்ளிக்கிழமை அரசாங்கத் தலைவர்கள் பொதுவான வெளிநாட்டு,
பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பாக தீர்மானங்களை
நிறைவேற்றினர். இது நீண்டநாட்களுக்கு முன்னர் திட்டமிட்ட
ஐரோப்பிய துரிதமாக இயங்கும் படையை உருவாக்குவதை உத்தியோகபூர்வமாக
ஏற்றுக்கொள்கின்றது. இது பலநாடுகளை சேர்ந்த 60,000
பேரைகொண்டிருப்பதுடன், 2003 இல் இருந்து இயங்கக்கூடியதாக
இருக்கும்.
பிரித்தானிய பிரதமர் Tony
Blair உடன்பாடு தொடர்பாக நீண்ட
பந்தி ஒன்றை எதிர்பாராத விதமாக வாசித்தபோது இவ்விடயத்திலும்
எதிர்பார்த்திராத சிக்கல்கள் எழுந்தன. Saint-Malo
இல் 1998ம் ஆண்டு Tony
Blair பிரான்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து
ஆரம்பத்தில் இப்படையினை முன்னெடுத்திருந்தார். ஆனால் தற்போது
இது நேட்டோவில் இருந்து மிகவும் சுயாதீனமாகிவிடுமோ என பயமடைந்துள்ளார்.
இவ்விடயத்தில் Tony Blair
அமெரிக்காவிடமிருந்தும், பிரித்தானியாவின் ஐரோப்பிய
ஐயுறவுவாத பழமை பாதுகாப்புவாதிகளிடமிருந்தும் அழுத்தத்தை
எதிர்நோக்குகின்றார்.
Tony Blair இறுதியில்
தனது கருத்தை வெற்றி கொண்டபோதும், மாநாட்டு இராஜதந்திரிகள்
இது எவ்வகையிலும் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை மாற்றவில்லை
என தெரிவித்தனர். முன்னர் பகிரங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டது
தற்போது சிறிய எழுத்துக்களில் மறைக்கப்பட்டுள்ளது. இப்படை
நேட்டோவில் தங்கியுள்ளதா அல்லது சுயாதீனமானதா என்ற விவாதம்
பெருமளவில் இன்னும் தத்துவார்த்த அளவிலேயே இருக்கின்றது. தற்போதைய
நிலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் படைகள் நேட்டோவின்
உதவியின்றி சர்வதேச ரீதியாக இயங்கத் தேவையான தொழில்நுட்ப,
மூலோபாய முந்நிபந்தனைகள்
இல்லாதுள்ளன. தனது சொந்த அரசியல், இராணுவத்தை தீர்மானிக்கும்
கட்டமைப்பை உருவாக்குவதென்பது நேட்டோவிற்கு ஒரு மாற்றீட்டை
உருவாக்குவதற்கான முதல்படியாகும்.