முன்னோக்கு

இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் தாக்குதலை பைடென் ஆதரிக்கையில், நெதன்யாகு ரஃபா இரத்தக்களரிக்கு தயாராகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வாரத்தில், அமெரிக்கா எங்கிலுமான பொலிஸ் படைகள், பைடென் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் திட்டமிட்ட இனப்படுகொலையை எதிர்த்ததற்காக கல்லூரி வளாகங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அடித்து கைது செய்துள்ளன.

காஸா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் இடிபாடுகள், ஏப்ரல் 1, 2024 திங்கட்கிழமை. [AP Photo/Mohammed Hajjar]

வியாழனன்று ஓவல் அலுவலகத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் தாக்குதலை ஆதரித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான இத்தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையில் மக்கள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தினார்.

“இந்த போராட்டங்கள் பிராந்தியம் தொடர்பான கொள்கைகள் எதையாவது மறுபரிசீலனை செய்ய உங்களை கட்டாயப்படுத்தியுள்ளதா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. பைடன் “இல்லை” என்று உறுதியாக கூறினார்.

செய்தி தெளிவாக இருந்தது: நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்கையில், பைடன் நிர்வாகம் காஸா இனப்படுகொலைக்கு ஆயுதம் அளித்தல், நிதியளித்தல் மற்றும் அரசியல் ரீதியாக ஆதரித்தல் மற்றும் அதன் குற்றவாளிகளைப் பாதுகாத்தல் என்ற அதன் கொள்கையைத் தொடரும்.

இந்த சூழலில், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் புகுந்துள்ள காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான தனது நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் நகரத்தின் மீதான தாக்குதல் நடைபெறும் என்று நெதன்யாகு கூறினார்.

திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக ரஃபா குடிமக்களை வெளியேற்றுவதற்கான அதன் திட்டங்கள் குறித்து இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்காவிடம் விளக்கியுள்ளது. இது மத்திய காஸாவில் அது கட்டியுள்ள கூடார நகரங்களுக்குள் அவர்களை தள்ளுவதற்கு கட்டாயப்படுத்துகிறது என்று பொலிடிகோ தெரிவித்துள்ளது.

“இராணுவத்தினர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்று கூறிய இஸ்ரேலின் வெளியுறவு விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் ஃப்ளூர் ஹசன்-நஹூம், “நாம் ரஃபாவுக்குப் போவோம்” என்று கூறினார். அதே நாளில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸ் அதிகாரிகள் அதன் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் அல்லது ரபா அழிவை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி, ஒரு வார காலக்கெடுவை அதற்கு விதித்துள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் இராணுவத் தாக்குதல்களில் இருந்து தப்பி 1.2 மில்லியனுக்கும் மேலான இடம்பெயர்ந்த மக்கள் தற்போது நகரத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கருத்துப்படி, ரஃபாவில் உள்ள அகதிகளுக்கு “சாப்பிடுவதற்கான உணவு மிகக் குறைவாகவே உள்ளது, கிட்டத்தட்ட மருத்துவ கவனிப்புக்கான அணுகல் இல்லை, தங்குமிடங்கள் உட்பட பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியாது.”

வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், குட்டெரெஸ், “ரஃபா மீதான ஒரு இராணுவத் தாக்குதல் தாங்க முடியாத விரிவாக்கம் ஆகும். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று நூறாயிரக்கணக்கான மக்கள் வெளியேறும்படி கட்டாயப்படுத்தும்” என்று எச்சரித்தார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் திட்டமிட்ட படையெடுப்பு நடந்தால் “இரத்தக்களரி” உருவாகும் என்று எச்சரித்தார், அதேவேளையில் யுனிசெஃப் ரஃபா மீதான படையெடுப்பு “பேரழிவுக்கு மேல் பேரழிவைக் கொண்டுவரும்” என்று கூறியது.

ஆனால் ரஃபா மீதான தாக்குதல் தொடங்குவதற்கு முன்னரே, காஸாவில் நிலைமை பேரழிவுகரமாக உள்ளது:

  • கடந்த ஏழு மாதங்களில் குறைந்தபட்சம் 34,622 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளின் கீழ் புதையுண்டுள்ளனர், இதன் அர்த்தம் உண்மையான இறப்பு எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாக உள்ளது என்பதாகும். குறைந்தபட்சம் 254 தொண்டு ஊழியர்கள், 492 சுகாதார ஊழியர்கள் மற்றும் 141 பத்திரிகையாளர்கள் இஸ்ரேலிய குண்டுகள் அல்லது தோட்டாக்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

  • 1.7 மில்லியன் மக்கள், அல்லது அந்த குறுகிய நிலப்பகுதியின் மக்கள்தொகையில் 75 சதவிகிதத்தினர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அகதி முகாம்களில் இடம்பெயர்ந்தவர்களில், சராசரியாக ஒரு நபருக்கு 1 சதுர மீட்டர் இடம் மட்டுமே உள்ளது.

  • ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, 1.1 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையின் “பேரழிவுகரமான” மட்டங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். வடக்கு காஸாவில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • காஸாவின் மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஓரளவு செயல்படுகின்றன. எஞ்சியுள்ள மருத்துவ வசதிகள் “மட்டுப்படுத்தப்பட்ட திறன்களுடன் இயங்குகின்றன, அவை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன, மேலும் எரிபொருள், மருந்துகள், பொருட்கள் மற்றும் பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன,” என்று ஐ.நா. அறிவிக்கிறது.

  • அல் ஷிபா மருத்துவ வளாகம் மற்றும் நாசர் மருத்துவ வளாகம் உட்பட காஸா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாசரில் மட்டும் 390க்கும் மேற்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில் பல உடல்கள் விசாரணையின்றி மரண தண்டனைக்கு உள்ளான அறிகுறிகளைக் கொண்டிருந்தன.

  • உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. அறுபது சதவீத குடியிருப்பு கட்டிடங்களும் 80 சதவீத வணிக வசதிகளும் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

காஸா இனப்படுகொலை ஏற்கனவே காஸாவில் மனித வளர்ச்சியை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னோக்கி தள்ளியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

பைடென் நிர்வாகமும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் இவை அனைத்திற்கும் நிதியளித்து, ஆயுதமளித்து, நியாயப்படுத்தியுள்ளனர். இன்றுவரை, அமெரிக்கா இஸ்ரேலுக்கு 100 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆயுத ஏற்றுமதிகளை வழங்கியுள்ளது. பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பான அவற்றின் உள்ளடக்கங்கள், பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. கடந்த மாதம், காஸாவின் மக்களைக் கொல்லவும், பட்டினி போடவும், இடம்பெயரவும் கூடுதல் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியாக பல்லாயிரக்கணக்கான டாலர்களை காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது.

மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court – ICC) விசாரணையில் இருந்து இஸ்ரேலை அமெரிக்கா தீவிரமாக பாதுகாத்து வருகிறது. பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி மற்றும் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகு ஆகியோருக்கு எதிராக ICC கைது ஆணைகள் உடனடியாக பிறப்பிக்கப்படலாம் என்று இஸ்ரேலிய ஊடக ஆதாரங்கள் சமீபத்திய நாட்களில் தெரிவித்தன.

இந்த நீதிமன்றத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன்-பியர் கூறுகையில், “ஐசிசி விசாரணை குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அதை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு அதிகார வரம்பு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை” என்றார்.

ரஃபா மீது திட்டமிடப்பட்டுள்ள தாக்குதலை எதிர்பார்த்து, அமெரிக்க அதிகாரிகள் மத்திய கிழக்கில் களத்தில் தீவிரமாக ஒருங்கிணைந்து வருகின்றனர். புதன்கிழமை, வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலுக்கு பயணித்தார், அதைத் தொடர்ந்து CIA இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் எகிப்துக்கு விஜயம் செய்தார்.

அவரது பயணத்தின் போது, பிளிங்கன் ஒரு பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஊக்குவித்தார், அதை அவர் அபத்தமாக “போர்நிறுத்தம்” என்று குறிப்பிட்டார். பிளிங்கன் இந்த முன்மொழிவை “அசாதாரணமான தாராள மனப்பான்மை” என்று அழைத்தார், ஹமாஸ் “காஸா மக்களுக்கும் போர்நிறுத்தத்திற்கும் இடையிலான ஒரே தடை” என்று கூறினார்.

இந்த “அசாதாரணமான தாராளமான” முன்மொழிவு, காஸா மீதான தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பையும், அத்துடன் காஸா மக்களை இஸ்ரேல் வேண்டுமென்றே பட்டினி போடுவதையும் தொடரும். உண்மையில், பிளிங்கனின் அறிக்கைகளின் நோக்கம், ரஃபா மீதான இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கான பழியை பாலஸ்தீனியர்கள் மீதே சுமத்துவதாகும்.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க போரின் பாகமாக, ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கை மறுஒழுங்கு செய்வதற்கான அதன் முயற்சிகளின் ஓர் ஒருங்கிணைந்த பாகமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் “பாலஸ்தீன பிரச்சினைக்கான இறுதி தீர்வை” காண்கிறது.

உலகெங்கிலும், காஸா இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன போராட்டங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த வெகுஜன எதிர்ப்புக்களை போருக்கு எதிரான பரந்த போராட்டத்துடனும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்களை பாதுகாக்க நடத்தும் போராட்டத்துடனும் இணைப்பது அவசர தேவையாகும். காஸா இனப்படுகொலை மற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கு முன்வருமாறு நாங்கள் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறோம்.

Loading