காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக சோர்போனில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஐரோப்பிய தேர்தல்களுக்கான ஒரு பிரச்சார உரையை நடத்திக் கொண்டிருந்த நிலையில், ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழகங்களில் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பின் மீதான பொலிஸ் ஒடுக்குமுறையைக் கண்டிக்க சோர்போன் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பேராசிரியர்களும் அங்கு இருந்தனர்.

ஏப்ரல் 25 வியாழனன்று ஜனாதிபதி வழங்கிய ஐரோப்பா குறித்த உரையை ஒட்டி சோர்போன் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட பேரணி உள்ளூர் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இறுதியாக பிளேஸ் டு பாந்தியனில் நடந்தது. சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டனர். ஜனாதிபதி முன்னிலையில் சுற்றுவட்டாரத்தை சுற்றி வளைக்க வந்த ஏராளமான பொலிஸ் அதிகாரிகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

ஹஃபிங்டன் போஸ்ட் (Huffington Post ) வெளியிட்ட தகவலில், கூட்டு மாணவர் சங்கத்தின் செயலாளர் எம்மி (Emmy) கூறினார்: “மாணவர்கள் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்பதைக் காட்ட நாங்கள் ஒன்றிணைகிறோம், ஆனால் எங்கள் அரசாங்கத்திடமிருந்து பதில்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மாநாடுகள் இரத்து செய்யப்பட்டாலும் சரி அல்லது பாரிஸை ஆக்கிரமிக்க முயன்ற பாலஸ்தீன சார்பு மாணவர்கள் வெளியேற்றப்பட்ட போதும் சரி, இந்த விடயத்தில் பல்கலைக்கழகங்களில் தற்போது அடக்குமுறை இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை சுமார் அறுபது மாணவர்கள் அரசியல் விஞ்ஞானத்துறை (Sciences Po) வளாகத்தை ஆக்கிரமித்திருந்தனர். பாரிஸ் பல்கலைக் கழகங்களில் பெரும் மோதல் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய போலீசார் உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்பை முறியடித்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றினர்.

காஸாவில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பிற்கு மக்ரோனின் வருகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ரோமெய்ன் (Romain) மற்றும் மனல் (Manal) என்ற இரண்டு மாணவர்களையும் ஹஃபிங்டன் போஸ்ட் நேர்காணல் செய்தது: “உண்மையில் அவரது விவாதத்தை முன்மாதிரியாகக் கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. பாலஸ்தீன மக்களையும் அவர்களின் துயரங்களையும் வெளிப்படையாகக் காட்டுவதே இதன் நோக்கம். உலகில் சில செயல்கள் கவனிக்கப்படாமல் போக நாம் அனுமதிக்க முடியாது, அவற்றுடன் நாங்கள் உடன்படவில்லை என்று சொல்ல வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஏகாதிபத்திய நேட்டோ சக்திகளின் ஆதரவுடன் இஸ்ரேலிய அரசால் நடத்தப்பட்டுவரும் காஸா மீதான இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் உட்பட சர்வதேச அளவில் பாரிய போராட்டங்களின் ஒரு பின்புலத்தில் இந்த பேரணி நடைபெறுகிறது.

மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள், அல்லது சுமார் 1.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ள ரஃபா நகரத்தின் மீது ஒரு உடனடி தாக்குதலுக்கு நெதன்யாகு ஆட்சி தயாரிப்பு செய்து வருகிறது. வரவிருக்கும் படையெடுப்பின் அரசியல் தாக்கங்களைக் கண்டு அஞ்சி, அரசாங்கங்கள் காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் யூத-விரோதத்தால் உந்தப்பட்டுள்ளதாக கூறி, ஒடுக்குமுறை மற்றும் அவதூறுகளின் ஒரு கொடூரமான மற்றும் திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

நியூயோர்க் பல்கலைக்கழகத்தில், கலகப் பிரிவு போலீசார் திங்களன்று இரவு ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்தும், மிளகு தூவியும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களையும் பேராசிரியர்களையும் கைது செய்தனர். யேல் பல்கலைக்கழகத்தில் 47 மாணவர்கள் திங்களன்று கைது செய்யப்பட்டனர். Cal Poly Humboldt இல், கலகம் அடக்கும் பொலிசார் பல்கலைக்கழகக் கட்டிடத்திற்குள் நுழைந்து மாணவர்களைக் கைது செய்தனர். மினசோட்டா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்பது மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரான்சில், காஸா இனப்படுகொலை குறித்து கூட்டங்களை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் அதிவலதுசாரி குண்டர்களால் திட்டமிட்டு தணிக்கை செய்யப்படுகின்றன அல்லது சீர்குலைக்கப்படுகின்றன. ஐரோப்பிய தேர்தல்களில் அடிபணியா பிரான்ஸ் கட்சி (La France Insoumise LFI) வேட்பாளரான ரீமா ஹசன் மற்றும் மொரெனிச குழுவான நிரந்தர புரட்சி (Révolution Permanente - RP) இன் அனாஸ் காசிப் ஆகிய இருவருமே “பயங்கரவாதத்திற்கு மன்னிப்பு” வழங்குபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்க நிர்வாகி ஜோன்-போல் டெலெஸ்கோவிற்கு (Jean-Paul Delescaut) ஓராண்டு தடை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடிபணியா பிரான்ஸ் கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன் டெலெஸ்கோவைப் பாதுகாப்பதற்கான அவரது கூட்டங்கள் தடைசெய்யப்பட்டன. அக்டோபர் 7, காஸா எழுச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர் ஒரு அறிக்கையை விநியோகித்ததன் அடிப்படையில் டெலெஸ்கோவிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.  இஸ்ரேலின் 16 ஆண்டுகால ஆக்கிரமிப்பு மற்றும் காஸா மீதான முற்றுகை சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான தீர்ப்புகளை அவர் குறிப்பிட்டார்.

இறுதி ஆய்வுகளில், இந்த போலீஸ் ஒடுக்குமுறையும் அவதூறும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தையும் இலக்காகக் கொண்டதாகும். மருத்துவமனைகளிலும், அகதிகள் முகாம்களிலும் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்படும் போதும் பத்தாயிரக் கணக்கான நிராயுதபாணியான அப்பாவி மக்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதற்கு எதிராக பிரான்சிலும் வெளிநாட்டிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் பாரிய எதிர்ப்பின் எந்தவொரு வெளிப்பாட்டையும் மௌனமாக்குவதற்கு மக்ரோனும் ஏகாதிபத்திய அரசாங்கங்களும் முனைகின்றன.

மக்ரோனையும் வெளிநாடுகளில் உள்ள அவரது சகாக்களையும், ரஃபா மீதான உடனடி படையெடுப்பு, அவர்கள் மௌனமாக்க முனையும் ஒரு சமூக வெடிப்பைக் கண்டு அஞ்ச வைத்துள்ளது. தொடங்கியுள்ள ஒரு மூன்றாம் உலகப் போரில் ஏகாதிபத்திய சக்திகளை நேரடியாக ஈடுபடுத்துவதற்கான ஒரு இராணுவ தீவிரப்பாட்டிற்கு அரசாங்கங்கள் தயாரிப்பு செய்து வருகின்றன. இதற்கு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

சர்வதேச அளவில் மே 1968 இன் அச்சுறுத்தல் மக்ரோனையும் வெளிநாடுகளையும் அச்சுறுத்துகிறது. ஜெனரல் டு கோலின் பழமைவாத ஆட்சிக்கு எதிராக, மே 1968ல் மாணவர் இயக்கம் தொடங்கியது. பாரிசில் இலத்தீன் பகுதியில் மாணவர்களையும் இளைஞர்களையும் வன்முறையில் தாக்கிய போலீசாரின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் நுழைந்ததை அடுத்து பொது வேலைநிறுத்தம் வெடித்தது. அடக்குமுறைக்கு இராணுவத்தை நம்ப முடியாமல் இருந்த டு கோல், ஒரு புரட்சியைத் தடுக்கவும் கோலிச ஆட்சியைக் காப்பாற்றவும் CGT மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இன் எந்திரங்களை நம்ப வேண்டியிருந்தது.

இன்று காஸாவில் இனப்படுகொலை மற்றும் நேட்டோ சக்திகளால் நடத்தப்பட்ட போர்களுக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்தியப் போர் ஆகியவை சர்வதேச மூலோபாயம் தேவைப்படும் உலகளாவிய பிரச்சினைகள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

காஸா இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை குறிவைத்து அதிகரித்து வரும் பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக, மே 68ன் உதாரணம் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகிறது. ஒடுக்குமுறையில் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள, இனப்படுகொலை மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறன் கொண்ட ஒரேயொரு புரட்சிகர சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எச்சரிப்பதும் அணிதிரட்டுவதும் அவசியமாகும். மாணவர்களும் இளைஞர்களும் பணியிடங்களுக்குச் சென்று இனப்படுகொலை குறித்தும், மற்றும் இனப்படுகொலை எதிர்ப்பை குறிவைத்து தாக்கும் பொலிஸ் அரசின் நடவடிக்கைகளை குறித்தும் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இயக்கம் ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச அளவில் கட்டியெழுப்பப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என்பன, இனப்படுகொலைக்கு எதிராக வளர்ந்து வரும் சர்வதேச எதிர்ப்பு இயக்கத்தை ஐக்கியப்படுத்த இலக்காக கொண்டிருக்க வேண்டும். இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுத்ததிற்காக, பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் தொழிலாளர்களும் இனப்படுகொலையைக் கண்டித்த பின்னர் ஒடுக்குமுறையைக் கொண்டு அச்சுறுத்தப்பட்ட அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களும் இதில் உள்ளடங்குவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச புரட்சிகர மார்க்சிச தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். LFI அல்லது CGT தொழிற்சங்க அதிகாரத்துவமானது அத்தகைய இயக்கத்தைத் தொடங்கும் வரை தொழிலாளர்கள் காத்திருக்க முடியாது, அதை அவர்கள் ஒருபோதும் செய்யப் போவதில்லை. அவர்கள் கோலிச ஆட்சியைக் காப்பாற்றிய சக்திகளிடமிருந்து வந்தவர்கள் ஆவர்.

இந்த விடயங்கள் தொடர்பான தலைப்பில், சனிக்கிழமை, மே 4 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தின் இணையவழி பேரணியில் பங்கேற்குமாறும், இந்த இணையவழி பேரணியை (wsws.org/mayday) ஊக்குவிக்குமாறும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

Loading