முன்னோக்கு

பைடெனின் பல்கலைக்கழக வளாக ஒடுக்குமுறை - ஜனநாயகக் கட்சி மீண்டும் அதன் கோரப் பற்களை வெளிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சில நாட்களாக, மாணவர்கள் மீதான பொலிசாரின் வன்முறை தாக்குதல் நடத்தும் காட்சிகளாக அமெரிக்காவின் கல்லூரி வளாகங்கள் மாறிவிட்டன. காஸாவில் நடந்து வரும் (அதன் ஆறாவது மாதத்தில், ஏற்கனவே வரலாற்றின் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்று) இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர்கள், 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போர்க் கருவிகள் மற்றும் குதிரைகளுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வளாக கட்டிடங்களில் குறிபார்த்து துப்பாக்கி சுடும் படையினர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலைமையில், மாணவர்களை போலீசார் தாக்கி வருகின்றனர். எமோரி பல்கலைக்கழகத்தில், மாணவர்களைப் பாதுகாக்கும் பேராசிரியர்கள் வன்முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 25, 2024 வியாழக்கிழமை, அட்லாண்டாவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது எமோரி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு எதிர்ப்பாளர் ஒரு போலீஸ் அதிகாரியால் கைது செய்யப்படுகிறார். [AP Photo/Mike Stewart]

இந்தக் காட்சிகள் ஈரானில் நடந்திருந்தால், அமெரிக்க ஊடகங்களில் முழுப் பரப்புரையும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க “மனிதாபிமானத் தலையீடு” பற்றிய ஒரு முழு நேரமும் கோரிக்கைகள் வந்திருக்கும். ஆனால், இது அமெரிக்கா. எனவே, படுகொலைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மாணவர்களை “யூத விரோதிகள்” என்று ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கண்டிக்கின்றனர். முரட்டுத்தனமான, மற்றும் வெளிப்படையான குழப்பம் என்னவென்றால், பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்பை எதிர்ப்பது என்பது யூத-விரோதமாகும்.

வெள்ளைமாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து இந்த தாக்குதல் மற்றும் போலீஸ் அடக்குமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஏப்ரல் 22) ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது போராட்டங்கள் பற்றி கேட்டதற்கு, “நான் யூத எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கிறேன்” என்று பைடென் கூறினார். ஒரு நாள் முன்னதாக, பைடென் “யூத-எதிர்ப்பு தவறானது என்றும் கல்லூரி வளாகங்களில் அதற்கு இடமில்லை” என்றும் அறிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார்.

“யூத-எதிர்ப்பை எதிர்ப்பதற்கான தேசிய வியூகம்” என்று ஓர்வெல்லியன் பெயரால் அழைக்கப்படும் வளாகங்களைக் கண்காணிக்க ஒரு புதிய பொலிஸ் அதிகாரத்துவத்தை உருவாக்குவதாக அறிவித்து, “யூத சமூகத்தைப் பாதுகாப்பதற்கு கூட்டாட்சி அரசின் அனைத்து சக்தியையும் பயன்படுத்துவதாக” பைடென் உறுதியளித்தார்.

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை முறியடிப்பதில் வெள்ளை மாளிகை குடியரசுக் கட்சியின் உண்மையான யூத எதிர்ப்புவாதிகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது. இதன் மூலம், அமெரிக்காவிலிருந்து வெள்ளை கிறிஸ்தவர்களை அகற்ற யூத சதி இருப்பதாக கூறும் “பெரிய மாற்றுக் கோட்பாட்டின்” வக்கீல்கள் உட்பட, யூத விரோதம் மீதான பைடெனின் அக்கறை அம்பலமானது. கிழக்கு ஐரோப்பிய யூதர்களை படுகொலை செய்த ஹிட்லரின் உக்ரேனிய பின்பற்றாளர்களுடைய மிகப் பெரிய தேசிய ஹீரோ ஸ்டீபன் பண்டேராவைக் கொண்டாடும் உக்ரேனில் உள்ள அரசாங்கத்திற்கு முடிவில்லாத, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள கொலை இயந்திரங்களை பைடென் வழங்கியுள்ளார்.

நிச்சயமாக, பைடெனை அவரது சொந்த கொள்கையில் இருந்து பிரிக்க அசாதாரண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், அவர் நசுக்க முயற்சிக்கும் எதிர்ப்புகளை எப்படியாவது “கேட்கும்படி” செய்துவிடலாம் என்று அபத்தமான புனைகதைகள் ஊக்குவிக்கப்படும். உண்மையில் ஜனநாயகக் கட்சிக்குள் ஒரு பிரிவாக இருக்கும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் போன்ற அமைப்புகளின் சிறப்பு இதுதான்.

ஆனால், பைடென் நிர்வாகம் என்ன, அது என்ன செய்யத் தயாராக உள்ளது (ஜனநாயகத்தை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அதனை அழிக்கிறது) என்ற யதார்த்தத்தை இந்த இடதுகளில் உள்ள அதன் ஆதரவாளர்கள் நம்ப விரும்புவதில்லை. உண்மையில் இது, ஜனநாயகக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்களிலிருந்தும், உண்மையில் அந்தக் கட்சியின் முழு வரலாற்றிலிருந்தும் வெளிப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியானது, உலகின் மிகப் பழமையான முதலாளித்துவ தேர்தல் கட்சியாகும். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, அதன் நீண்டகால குணாதிசயங்கள் சில ஏற்கனவே வெளிப்பட்டிருந்தாலும், (எடுத்துக்காட்டாக, தொழிலாள வர்க்கத்தை கையாளுவதற்கு இனவாத சித்தாந்தத்தை ஊக்குவிப்பது) நவீன ஜனநாயகக் கட்சியானது, 1820கள் மற்றும் 1830களின் ஜாக்சன் சகாப்தத்திற்கும் இன்று பைடென் நிர்வாகத்திற்கும் இடைப்பட்ட ஒரு கட்டத்தில், உட்ரோ வில்சனின் (1913-1921) நிர்வாகத்தின் போது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டது.

இந்தத் தருணத்தில்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பமான கட்சியாக ஜனநாயகக் கட்சி உருவானது. பல தசாப்தங்களாக ஒவ்வொரு பெரிய போரும் வெள்ளை மாளிகையில் இருந்த ஒரு ஜனநாயக கட்சியை சேர்ந்தவரால் தொடங்கப்பட்டது என்பதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது: முதலாம் உலகப் போர் (வில்சன்); இரண்டாம் உலகப் போர் (பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்); கொரியப் போர் (ட்ரூமன்); மற்றும் வியட்நாம் போர் (கென்னடி மற்றும் ஜோன்சன்).

இந்தப் பெரும் போர்களுக்கு பொருளாதாரத்தை மறுசீரமைப்பதும், தொழிலாளர் சக்தியை ஒழுங்குபடுத்துவதும் தேவைப்பட்டது. இதில், முக்கிய பங்கு எப்போதும் தொழிலாளர் அதிகாரத்துவத்தால் ஆற்றப்படுகிறது. ட்ரொட்ஸ்கியின் சொற்றொடர் குறிப்பிட்டதுபோல், இது, துல்லியமாக யுத்தத்தின் தருணங்களில் ஜனநாயகக் கட்சியின் மூலம் அமெரிக்காவில் “ஏகாதிபத்திய அரசின் எஃகு அரவணைப்பில் விழுந்தது.”

AFL இன் சாமுவேல் கோம்பர்ஸ் முதலாம் உலகப் போரின் போது வில்சனுக்கு இந்த சேவையை வழங்க முயன்றார். மேலும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) வால்டர் ரியுதர் (பல தொழிற்சங்கத் தலைவர்களுடன்) ரூஸ்வெல்ட், ட்ரூமன், கென்னடி மற்றும் ஜோன்சன் ஆகியோருக்கும் இதைச் செய்தார். தற்போது UAW இன் ஷான் ஃபைன் இந்த பாத்திரத்திற்கான ஒத்திகையில் மும்முரமாக இருக்கிறார்.

20 ஆம் நூற்றாண்டின் பெரும் போர்களில் அரசியல் பேச்சு மற்றும் சிந்தனையை கட்டுப்படுத்தும் இராணுவ கலாச்சாரத்தை திணிக்க வேண்டியிருந்தது. தாராளவாத புத்திஜீவிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஜனநாயகக் கட்சியினர் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க செல்வாக்கு, குடியரசுக் கட்சியினரை விட இந்த நோக்கத்திற்காக அவர்களை மிகவும் பயனுள்ளதாக ஆக்கியுள்ளது. 1917 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது, ராண்டால்ப் பார்ன் கூறியது போல், “போர் ஆவியின் சாக்கடை வெள்ளம் நம்மை மூழ்கடிக்கும்போது மதகுகளைத்” திறப்பது அறிவுஜீவிகளின் பங்கு.

ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் புத்திஜீவிகளின் ஏகாதிபத்தியப் போருக்கான விசுவாசம், எப்போதும் இருண்ட, முற்றிலும் அடக்குமுறை பக்கத்தைக் கொண்டுள்ள ஜனநாயகக் கட்சியால் மட்டுமே அடையக்கூடியது. வியட்நாம் போரில், கென்னடி மற்றும் ஜோன்சன் நிர்வாகங்கள் இரகசிய COINTELPRO அமைப்பை வியத்தகு முறையில் விரிவுபடுத்தியது. அதன் முதன்மையான இலக்கு போருக்கு எதிரான அமைப்புகளை சீர்குலைப்பதாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது, ஸ்மித் சட்டத்தைப் பயன்படுத்தி, போருக்கு எதிராக உள்நாட்டில் வெடித்தெழுந்த எதிர்ப்பைத் சட்டவிரோதமாக்கிய ரூஸ்வெல்ட் நிர்வாகம், FBI இன் தகவல் வழங்குபவர் என்று பின்னர் தெரியவந்த ஜோசப் ஹேன்சனின் குறிப்பிடத்தக்க விதிவிலக்கைத் தவிர, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கைத் தொடுத்தது.

ஆனால், முதலாம் உலகப் போருக்கு எதிரான எதிர்ப்பை நசுக்க வில்சன் நிர்வாகத்தின் பாரிய நடவடிக்கையே தொடர்ந்து நடந்த அனைத்திற்கும் முன்னுதாரணமாக இருந்தது. இன்னும் நடைமுறையில் புத்தகங்களில் உள்ள அவரது உளவுச் சட்டம், ஜூலியன் அசாஞ்ச் மீதான எந்தவொரு வழக்கு விசாரணைக்கும் அடிப்படையாக இருக்கலாம். இத்தகைய நடவடிக்கை, இராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக வலியுறுத்துவதன் மூலம், போருக்கு எதிரான எதிர்ப்பை சட்டவிரோதமாக்குகிறது. அமெரிக்க சோசலிசத்தின் ஸ்தாபகரான யூஜின் டெப்ஸின் புகழ்பெற்ற கேன்டன் உரையின்போது, அமெரிக்கா போருக்குள் நுழைவதை எதிர்த்ததற்காக, அவர் மீது வழக்குத் தொடுத்து சிறையில் அடைக்க இந்த உளவு சட்டம் பயன்படுத்தப்பட்டது.

ஜூன் 16, 1918 இல், யூஜின் டெப்ஸ் முதலாம் உலகப் போருக்கு எதிராக தனது கேண்டன் உரையை ஆற்றுகிறார். அவரது கருத்துக்களுக்காக உளவுச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

உளவு சட்டம் மற்றும் மாநில அளவில் இயற்றப்பட்ட இதே போன்ற சட்டங்களின் கீழ், நூற்றுக்கணக்கான சோசலிஸ்டுகள் மற்றும் தொழிலாளர் ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வெளிநாட்டு மொழிப் பத்திரிகைகள் அதன் அனைத்து வெளியீடுகளின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளையும் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு சமர்ப்பிக்க வேண்டும். வில்சன் நிர்வாகம், தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும் தீவிர அமைப்புகளின் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்திய அமெரிக்க பாதுகாப்பு லீக் (American Protective League) என்று அழைக்கப்படும் ஒரு பாரிய விழிப்புணர்வு அமைப்பை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தியது.

போருக்குப் பின்னரும் தொடர்ந்த இத்தகைய தந்திரோபாயங்கள், அமெரிக்க படையணி மற்றும் கு க்ளக்ஸ் கிளான் (Ku Klux Klan) போன்ற அமைப்புக்களின் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டன. குறிப்பாக தீவிரமயப்பட்ட குடியேற்றவாசிகள் இவர்களால் குறிவைக்கப்பட்டனர். வில்சனின் “பால்மர் முற்றுகைகளின்” போது சுற்றி வளைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில், போருக்கு பிந்தைய மாதங்களில் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

வில்சன் எதிர்கொண்ட மற்றும் இன்று பைடென் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், போருக்கு எதிரான எதிர்ப்புடன் தொழிலாள வர்க்கம் ஒன்றிணைவதைத் தடுப்பதாகும். கோம்பர்ஸின் முயற்சிகள் இருந்தபோதிலும், வில்சன் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வேலைநிறுத்த அலைகளை எதிர்கொண்டார். 1917 மற்றும் 1918ல் 1 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறினர். பின்னர், 4.5 மில்லியன் தொழிலாளர்கள் 1919 இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், போல்ஷிவிக் புரட்சி ரஷ்யாவில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டது, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ் “போருக்கு எதிரான போர்” அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமைகளின் கீழ், வில்சனின் அடக்குமுறை திட்டம் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக இருந்தது, ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ், ரஷ்யாவில் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட போல்ஷிவிக் புரட்சி, “போருக்கு எதிரான போர்” என்று அறிவித்தது. இந்த நிலைமைகளின் கீழ், ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக இருந்த வில்சனின் அடக்குமுறை திட்டம், தொழிலாள வர்க்கத்தின் மீதிருந்த சோசலிசத்தின் செல்வாக்கை முறியடிக்க, ஓரளவு மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க முதலாளித்துவம் வில்சனின் காலத்தில் உயர்ந்தது. இனி அப்படி இல்லை. பல தசாப்தங்களாக, அமெரிக்க முதலாளித்துவம் அதன் இராணுவ மேலாதிக்கத்தை பெருகிய முறையில் வன்முறையில் உறுதிப்படுத்துவதன் மூலம் அதன் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்ய முயன்றது. 1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதில் இருந்து, வாஷிங்டனும் அதன் பினாமிகளும் இடைவிடாத தொடர் போர்களை நடத்தி வருகின்றனர்: ஈராக், சோமாலியா, சேர்பியா, ஆப்கானிஸ்தான், யேமன், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் காஸா ஆகியவை, இரத்தம் சிந்தும் பகுதிகளாகும். இந்தப் போர்கள் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றும், இடம்பெயரவும் வைத்துள்ளன, பில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன, மேலும் அமெரிக்க கலாச்சாரம் மற்றும் அறிவுசார் வாழ்க்கையை விஷமாக்கியுள்ளன. ஆயினும்கூட, அவை அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியை துரிதப்படுத்தியுள்ளன. சமீபத்தில் உலக இருப்பு நாணயமாக டாலரின் நிலை குறித்தும் கூட கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்தப் போர்கள் மூன்றாம் உலகப் போருக்கான ஆயத்தமாக (மத்திய கிழக்கில் ஒரு புவியியல் மையத்துடன் யூரேசியாவைச் சுற்றி ஒரு வளைவை உருவாக்குகிறது) இருக்கின்றன என்பது இப்போது தெளிவாகிறது, உண்மையில் இது ஏற்கனவே ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

மற்றொரு பாரிய போர் நிதியுதவிக்கு பைடென் சட்டத்தில் கையெழுத்திட்டது குறித்து, ஒரு சமீபத்திய எமது முன்னோக்கு கட்டுரையில் நாங்கள் குறிப்பிட்டது போல,

உக்ரேன், இஸ்ரேல் மற்றும் தைவானுக்கான போர் செலவுகளை ஒரே சட்டத்தில் இணைப்பதன் மூலம், பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஆளும் உயரடுக்கும் ஒட்டுமொத்தமாக இந்த மோதல்களை தனித்தனியாகவும் தனித்துவமாகவும் பார்க்கவில்லை என்பதை இந்த மசோதா குறிக்கிறது. மாறாக, அவை ஒரு பூகோளரீதியான போரில் இணைக்கப்பட்ட அரங்குகளாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஆர்க்டிக் பெருங்கடலில் இருந்து கருங்கடல் வரையிலும், பின்னர் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா ஊடாக சீனா மற்றும் பசிபிக் வரையிலும் நீண்டுள்ள ஒரு பரந்த போர் முனைகளில் சண்டையிட்டு வருகிறது.

உலக மேலாதிக்கத் திட்டம் எவ்வாறு முன்வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே, கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது.

எனவே, இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இளைஞர்கள், தேவையான அரசியல் முடிவுகளை எடுத்து, ஜனநாயகக் கட்சியுடனும், அதைச் சுற்றியிருக்கும் அரசியல் சக்திகளுடனும் ஒரேயடியாக முறித்துக் கொள்ள வேண்டியது அவசரமான, அவசியமானதாகும். போரையும், அதை வளர்க்கும் முதலாளித்துவ அமைப்புமுறையையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளையும் உந்துதலையும் கொண்ட புரட்சிகர சக்தியை நோக்கி அவர்கள் நனவுடன் திரும்ப வேண்டும்: அது அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

Loading