காஸாவில் பஞ்சம் "தலைவிரித்தாடுகிறது" என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில் வசிக்கும் 2.2 மில்லியன் மக்களை வேண்டுமென்றே பட்டினி போடுவதற்கான ஒரு திட்டமிட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு மத்தியில், ஒட்டுமொத்த மக்களும் பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“வடக்கு காஸாவில் பஞ்சம் ஒரு நிஜமாக மாறுவதற்கு நெருக்கமாக உள்ளது” என்று உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை எச்சரித்தது. “மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள், நோய்வாய்ப்படுகிறார்கள். கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உணவு பெரியவர்களையும் குழந்தைகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமானதாக இல்லை” என்று அமைப்பு செவ்வாய்க்கிழமை ஒரு சமூக ஊடக இடுகையில் தெரிவித்துள்ளது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இன்றுவரை, காஸாவில் கடுமையான ஊட்டச் சத்தின்மையால் 23 குழந்தைகள் உட்பட 27 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். திங்களன்று, 12 பாலஸ்தீனியர்கள் கடலில் விமானம் மூலம் வீசப்பட்ட உணவை எடுப்பதற்கு தீவிரமாக முயன்றபோது, கடலில் மூழ்கினர் என்று காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், உத்தியோகபூர்வ ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் கூடிய உலகளாவிய அமைப்பு, காஸாவில் “பஞ்சம் தவிர்க்க முடியாதது” என்று கண்டறிந்தது, இது “இறப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் பெரும் தீவிரத்திற்கு” இட்டுச் சென்றுள்ளது.

காஸாவில் 1.1 மில்லியன் மக்கள் பேரழிவுகரமான பட்டினி நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. மேலும் தற்போதைய வழி முறையின் தொடக்கத்தில் இருந்து இதுவரை பதிவு செய்யப்படாத அதிக எண்ணிக்கையிலான மக்கள் பஞ்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

“எங்கும், எந்த நேரத்திலும் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு அமைப்பால் பதிவு செய்யப்பட்ட பேரழிவு தரும் பட்டினியை எதிர்கொள்ளும் அதிக எண்ணிக்கை இதுவாகும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு, காஸாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள்தான் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை 12.4 முதல் 16.5 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. “வடக்கு ஆளுநர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பஞ்சம் உடனடியாக உள்ளது மற்றும் மார்ச் நடுப்பகுதி மற்றும் மே 2024 க்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று ஐ.நா. ஆதரவு அமைப்பு கூறியுள்ளது.

கடந்த வாரம், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமையான UNRWA வின் ஆணையர் ஜெனரல் பிலிப் லஜாரினி, “முற்றுகை, பசி மற்றும் நோய்கள் விரைவில் காஸாவில் முக்கிய கொலைகாரர்களாக மாறும்” என்று கூறினார்.

முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு எதிரான அதன் இனப்படுகொலை தாக்குதலின் ஒரு பகுதியாக, மக்களை பட்டினி போடும் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் வேண்டுமென்றே காஸாவிற்குள் உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் செல்வதை தடை செய்துள்ளது.

காஸா மக்கள் பட்டினியால் வாடுவதற்கு முக்கிய சூத்திரதாரியாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் கூற்றுப்படி, “காஸாவில் அனைத்து மனிதாபிமான பதில்களின் முதுகெலும்பாக” செயல்படும் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் முக்கிய வழங்குநரான UNRWAக்கான நிதியை வெட்டும் ஒரு செலவின தொகுப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கடந்த வார இறுதியில் கையெழுத்திட்டார்.

பைடென் நிர்வாகம் நெதன்யாகு அரசாங்கத்தை சமீபத்தில் பகிரங்கமாக விமர்சித்த போதிலும், திரைக்குப் பின்னால் அமெரிக்கா இனப்படுகொலைக்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்கி வருகிறது.

பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று விவரிப்பதில் இழிபுகழ் பெற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், கடந்த வார இறுதியில், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை திட்டமிடுவதற்கு, அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் உட்பட முன்னணி அதிகாரிகளை சந்திக்க வாஷிங்டன் டி.சி.க்கு விஜயம் செய்தார்.

ஆஸ்டின் பிரகடனம் செய்வதன் மூலம் கூட்டத்தைத் தொடங்கினார். “ஜனாதிபதி பைடென் தெளிவாக இருக்கிறார்: வேறெந்த நாட்டையும் போலவே இஸ்ரேலுக்கும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. எனவே, அக்டோபர் 7 போன்ற ஒரு அட்டூழியம் மீண்டும் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

கேலண்ட் மற்றும் ஆஸ்டின் இடையேயான சந்திப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையில், “நாங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் மற்றும் அந்த கருத்துருக்களின் அடிப்படையில் நாங்கள் அபிவிருத்தி செய்து வரும் கூடுதல் யோசனைகள் என்பன, தற்போது ரஃபாவில் இருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் ரஃபாவில் இருக்கும் ஹமாஸ் பட்டாலியன்களைத் தோற்கடிப்பது என்ற இரட்டை நோக்கங்களை அடையும் திறனை நாங்கள் கொண்டுள்ளோம் என்று நம்புகிறோம்” என்று பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக மேற்கோளிடப்பட்டுள்ளது.

“ரஃபாவில் இருக்கும் ஹமாஸ் பட்டாலியன்களைத் தோற்கடிப்பது” அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு நோக்கம் என்று அறிவிப்பதன் மூலம், பைடென் நிர்வாகம் திட்டமிட்ட தாக்குதலில் கையெழுத்திடுகிறது.

புதனன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் “மூடிய கதவுகளுக்குப் பின்னால், அமெரிக்கா ரஃபா நடவடிக்கையை நிறுத்துவதற்கு அல்ல, வடிவமைக்க அழுத்தம் கொடுக்கிறது” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. கடந்த வார இறுதியில், கேலண்ட் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் நோக்கம், ரபா மீது திட்டமிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு அமெரிக்கா தனது ஒப்புதல் முத்திரையை வழங்குவதற்கான ஒரு வழிவகையை தீர்மானிப்பதாகும் என்று அது விளக்கியது.

“இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவருக்கும் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கும் இடையிலான இரண்டு நாள் சந்திப்புகளில், தெற்கு காஸாவில் இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மீதான விவாதங்கள் அதை எவ்வாறு நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்தவில்லை, மாறாக அது செயல்படுத்தப்படும்போது அப்பாவி மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதன் மீது கவனம் செலுத்தின” என்று ஜேர்னல் எழுதியது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ரஃபா மீது தனது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக மேலும் அது தெரிவித்தது.

புதனன்று வெள்ளை மாளிகை, நெத்தன்யாகு அரசாங்கம் அமெரிக்காவுடன் ரபா மீதான திட்டமிட்ட தாக்குதல் பற்றி மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக உறுதிப்படுத்தியது. “ரஃபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கூட்டத்தை மாற்றியமைக்க பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது, எனவே வசதியான தேதியை நிர்ணயிக்க நாங்கள் இப்போது அவர்களுடன் பணியாற்றி வருகிறோம்” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரின் ஜோன்-பியர் கூறினார்.

ரபா மீதான அதன் திட்டமிட்ட தாக்குதலை எதிர்பார்த்து, இஸ்ரேல் அன்றாடம் இரவிலும் நகரத்தின் மீது குண்டுவீச்சுக்களை நடத்தி வருகிறது அங்கு ஒரு மில்லியனுக்கும் மேலான இடம் பெயர்ந்த மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். செவ்வாயன்று, ஐக்கிய நாடுகள் சபை, “குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 18 பாலஸ்தீனியர்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், வடக்கு ரஃபாவில் முசாபே பகுதியில் உள்ளக இடம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு வீடு தாக்கப்பட்டதில் பத்துப் பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது” என்று அறிவித்தது.

புதன்கிழமை, யூரோ-மெட் மானிட்டர், வடக்கு காஸாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் ஒரு வார கால முற்றுகையின் போது குழந்தைகளை குறிவைத்து சுட்டுக் கொண்டிருப்பதாக அறிவித்தது. “ஒரு வாரத்தில், அல்-ஷிஃபா மருத்துவமனை மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் 13 குழந்தைகளை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுள்ளது” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பாலஸ்தீனிய இஸ்லாம் அலி சலூஹாவின் சாட்சியமும் அடங்கியிருந்தது. இஸ்ரேலிய துருப்புக்கள் அவருடைய குடும்பத்தை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து தப்பி ஓடுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அதில் அவருடைய இரண்டு மகன்களான ஒன்பது வயது அலி மற்றும் ஆறு வயது சயீத் முஹம்மது ஷேக்கா ஆகியோரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

“இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக பல நாட்களாக உணவு கிடைக்காமல் இருந்த அவரது மகன் அலி, அந்த களத்தில் குற்றவியல் மரணதண்டனை பாணியில் கொல்லப்பட்டார் என்று சலூஹா குறிப்பிட்டார். அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள மரணதண்டனைகள் நிறைவேற்றப்படும் கொலைக் களமாக மாறியுள்ளது என்றும், தெருக்களில் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் அதற்கு ஆதாரங்களாக செயல்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக”, யூரோ-மெட் மானிட்டர் அறிவித்தது,

இந்த அறிக்கைகள் பாலஸ்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸின் கண்டுபிடிப்புகளை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அவர் இந்த வார தொடக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கான அளவுகோல்களுக்கு பொருந்துகின்றன என்ற கூற்றை ஆதரிக்க நிறைய ஆதாரங்கள் உள்ளன என்று கூறினார்.

அல்பனீஸின் அறிக்கை, “இஸ்ரேலின் இனப்படுகொலையை குறிக்கும் வரம்பு எட்டப்பட்டதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன” என்று தெரிவிக்கிறது.

Loading