மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல்: உக்ரேனிய தடயம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மாஸ்கோவில் ராக் இசை நிகழ்ச்சி ஒன்றில் குறைந்தது 137 உயிர்களைக் கொன்று 180 பேருக்கு மேல் காயங்களை ஏற்படுத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு, மேற்கத்திய பத்திரிகைகள் பெரும்பாலும் அடுக்கடுக்காக வசைபாடுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் இந்த நடவடிக்கையின் பின்னணி பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், அனைத்து கருத்துக்களும் இஸ்லாமிய அரசு (IS) என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது என்றும் உக்ரேன் மற்றும் நேட்டோ சக்திகளின் எந்தவொரு பொறுப்பும் மற்றும் உடந்தையையும் இதில் உள்ளடங்கவில்லை என்றும் கூறுகின்றன.

மார்ச் 23, 2024, சனிக்கிழமையன்று ரஷ்யாவின் புலனாய்வுக் குழு வெளியிட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், ரஷ்யாவின் மாஸ்கோவின் மேற்கு விளிம்பில் உள்ள குரோகஸ் சிட்டி ஹால் கட்டிடத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு எரிந்த இசைநிகழ்ச்சி அரங்கில் தீயணைப்பு வீரர் பணியாற்றுகிறார். [AP Photo/AP Photo / Russlands etterforskingskomité]

வர்ணனையாளர்களால் இந்த தாக்குதலை திருப்திகரமாக மறைப்பதென்பது கடினமானது. “புட்டின் ஆட்சியானது அனைத்து வெளிப்புற மற்றும் உள் எதிரிகளிடமிருந்தும் மக்களை திறம்பட பாதுகாக்கிறது” என்று கூறி அதன் ஆட்சியை சட்டப்பூர்வமாக்க முயல்கிறது என்று ஜேர்மன் சுவிஸ் Neue Zürcher Zeitung பத்திரிகை எழுதியது. இப்போது இதில் “ஒரு அப்பட்டமான தோல்வி” ஏற்பட்டுள்ளது.

இந்த தோல்வியில் இருந்து கவனத்தை திசை திருப்ப புட்டின் உக்ரேனை பலிகடா ஆக்கி வருகிறார்.“ அப்படியானால் புட்டின் ஏன் உக்ரேன் வாசனையை பரப்புகிறார்?” என்று ஜேர்மன் வெளியீடான t-online ஆச்சரியப்படுத்துகிறது. “ஏனெனில், கிரெம்ளினில் பலம் பொருந்தியவர் என்று கூறப்படும் நபர், தனது மக்களைப் பாதுகாப்பதற்காக அளித்த பெரும் வாக்குறுதியில் தோல்வியடைந்துவிட்டார்.... உக்ரேனில் மாஸ்கோவின் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த புட்டின் மாஸ்கோவில் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துகிறார். இது முற்றிலும் நேர்மையற்றது.

இதே தொனியை எதிரொலிக்கும் டசின்கணக்கான ஒத்த கருத்துக்கள் உள்ளன. “ஜனநாயக” ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவை எந்த அளவிற்கு போர் பிரச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன என்பதை இது காட்டுகிறது. உண்மையில், இந்த தாக்குதல் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல், “சிஐஏ மற்றும் அதன் பினாமிகளின் அடையாளங்களை எல்லா இடங்களிலும் கொண்டுள்ளது”.

ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது அதன் கிளை அமைப்புக்களில் ஒன்று உண்மையில் மாஸ்கோவில் தாக்குதலை நடத்தியிருந்தால், இது உக்ரேன் மற்றும் நேட்டோவிற்கு உடந்தையாக இருந்ததே தவிர அதற்கு எதிராக இருக்கவில்லை. 1980 களில் சோவியத் துருப்புக்களை எதிர்த்துப் போரிட ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தாவை CIA அமைத்ததில் இருந்து, IS உட்பட அதன் ஏகாதிபத்திய இலக்குகளை அடைய அமெரிக்கா பலமுறை இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களைப் பயன்படுத்தியது.

காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தற்போது உக்ரேனில் செயல்பட்டு வருகின்றனர். IS இல் போர் அனுபவத்தைப் பெற்ற அவர்கள், எதிரிகளின் எல்லைகளுக்கு பின்னால் உட்பட இராணுவம் மற்றும் உளவுத்துறையின் உத்தியோகபூர்வ மறைப்புடன் ரஷ்யாவிற்கு எதிரான சண்டையை தொடர்கின்றனர்.

மேற்கத்திய ஊடகங்களில் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரிதான விதிவிலக்குகளில் ஒன்று, மார்ச் 23 அன்று Süddeutsche Zeitung ஆல் வெளியிடப்பட்ட “உக்ரேனின் தடயங்கள்?” என்ற கட்டுரை ஆகும். இப்பத்திரிகையின் நீண்டகால வெளிநாட்டு நிருபர் டோமாஸ் அவெனாரியஸ், “உக்ரேனிய இரகசிய சேவைகள் IS வலையமைப்பில் இருந்து காகசியன் தீவிரவாதிகளைப் பயன்படுத்தி, “புட்டின் ஜனாதிபதியாக போலித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ரஷ்யர்கள் மற்றும் உலகம் முழுவதும் அவரை முட்டாளாக்கினர் என்ற ஊகம் அர்த்தமுள்ளதாகும்” என்று குறிப்பிடுகிறார்.

“ஆக்கிரமிப்பு ரஷ்ய படையினர்களுக்கு எதிரான போரில், காகசியன் முஸ்லீம் மற்றும் ரஷ்ய தன்னார்வலர்களின் படைகள் உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிடுகின்றன. அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பதாக” அவெனாரியஸ் தெரிவிக்கிறார். அவர்கள் செச்சினியா, இங்குஷெட்டியா அல்லது தகஜிஸ்தான் போன்ற ரஷ்யாவைச் சேர்ந்த காகசஸ் பகுதிகளிலிருந்து வந்தனர். பலர் செச்சினியாவில் ரஷ்யர்களுக்கு எதிராகப் போரிட்டனர், “பின்னர் அரபு நாடுகளில் நடந்த போர்கள் மற்றும் கிளர்ச்சிகளில் ஐ.எஸ் பயங்கரவாத வலைப்பின்னலின் ஒரு பகுதியாக மாறினர்.

“இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, காகசஸில் இருந்து புட்டின் எதிர்ப்பு ஆயுததாரிகள், உக்ரேனில் தங்கள் தோல்வியுற்ற போரைத் தொடர்கின்றனர்” என்று அவெனாரியஸ் கூறினார். பலர் ஏற்கனவே “செச்சினியாவில் நடந்த போரின் போது தீவிர இஸ்லாமியவாதிகளாக இருந்தனர், பின்னர் மாஸ்கோவின் கூட்டாளியான அசாத் ஆட்சிக்கு எதிராக சிரியாவில் போரிட்டனர். இந்த காலகட்டத்தில், அவர்கள் அடிக்கடி IS இல் சேர்ந்தனர்”.

அவெனாரியஸுக்கு இது தெரியும். அவர் பல ஆண்டுகளாக மாஸ்கோ மற்றும் மத்திய கிழக்கில் உள்ள Süddeutsche Zeitung செய்தித்தாளின் நிருபராக இருந்ததோடு, 2003 இல் இரண்டாவது செச்சென் போர் குறித்து விருது பெற்ற அறிக்கையையும் எழுதினார்.

மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹால் மீதான தாக்குதல் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. உக்ரேனின் இராணுவம் தோல்வியை எதிர்கொள்ளும் நேரத்தில் இது வருகிறது மற்றும் நேட்டோ தனது சொந்த தரைப்படைகளை நிலைநிறுத்துவது மற்றும் ரஷ்யாவிற்குள் ஆழமாக ஊடுருவுவது உட்பட, போரை அதிகரிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது.

WSWS கூறியது போல், “மாஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கு மூன்று குறிக்கோள்கள் உள்ளன: முதலாவதாக, தன்னலக்குழு மற்றும் அரசு எந்திரத்திற்குள் புட்டின் ஆட்சிக்கு எதிர்ப்பை ஊக்குவித்து வலுப்படுத்துதல், இரண்டாவதாக, கிரெம்ளினின் பதிலடி இராணுவ தாக்குதலைத் தூண்டிவிடுதல், அது நேட்டோவினால் போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான சாக்குப்போக்காகச் செயல்படும்; மூன்றாவதாக, ரஷ்யாவிற்குள் இன மற்றும் மத பதட்டங்களை வளர்த்தல், அது ஆட்சியை சீர்குலைக்கும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளால் முழு பிராந்தியத்தையும் துண்டாடுவதற்கு வசதியாக இருக்கும்”.

பயங்கரவாத தாக்குதலுடன் மேற்கத்திய போர் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அது “சிவப்புக் கோடுகளை” அங்கீகரிக்கவில்லை மற்றும் அனைத்து ஐரோப்பாவையும் உலகின் பெரும் பகுதிகளையும் அழிக்க அச்சுறுத்தும் அணு ஆயுத விரிவாக்கத்தின் அபாயத்தை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.

ஞாயிற்றுக்கிழமை Süddeutsche Zeitung ஆல் வெளியிடப்பட்ட, ஐரோப்பாவில் அமெரிக்க தரைப்படைகளின் முன்னாள் தளபதி பென் ஹோட்ஜஸ் எழுதிய விருந்தினர் கட்டுரை ஒரு பொதுவான உதாரணம் ஆகும். உக்ரேனை ஆதரிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் போதுமான அளவு உறுதியாக இல்லை என்று ஹோட்ஜஸ் குற்றம் சாட்டினார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் “உக்ரேனின் வெற்றியை தங்கள் மூலோபாய இலக்காக அறிவிக்க வேண்டும்”, “இணைக்கப்பட்ட கிரிமியாவை ரஷ்யர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக மாற்ற வேண்டும்” மற்றும் “உக்ரேனுக்கான ஆயுத உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அவர் கோரினார்.

ஜேர்மனியின் ஆயுதப் படைகளின் (Bundeswehr) தலைமைத் தளபதி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர், ஜேர்மனி ஐந்து ஆண்டுகளில் “போருக்கு தயாராக” இருக்க வேண்டும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்த முடியும் என்று தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். Bundeswehr சிறப்பு நிதியான €100 பில்லியன் யூரோக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது, இது “Bundeswehr ஐ மறுஆயுதமாக்குவதற்கான தொடக்க நிதியுதவி” மட்டுமே. “பாதுகாப்பு செலவினங்களை ஒருங்கிணைத்தல்” மற்றும் பயனுள்ள ஏவுகணை தற்காப்பு வளர்ச்சியும் இதில் உள்ளடங்கும்.

ஜேர்மனியை “போருக்கு ஏற்றதாக” மாற்றும் முயற்சி இராணுவத் துறைக்கு மட்டும் அல்ல. மத்திய அமைச்சகம் ஒன்றன் பின் ஒன்றாக தனது பணியை இந்த இலக்கிற்கு கீழ்ப்படுத்துகிறது.

சுகாதார மந்திரி கார்ல் லாட்டர்பாக் (சமூக ஜனநாயகவாதிகள், SPD) ஜேர்மன் சுகாதார அமைப்பை “இராணுவ மோதல்களுக்கு” தயார் செய்ய விரும்புகிறார். கோடைக்காலத்துக்கான சட்ட வரைவை அவர் அறிவித்துள்ளார். “நாங்கள் ஒரு இராணுவ மோதலுக்கு தயாராகவில்லை என்று சொல்வது முட்டாள்தனமாக இருக்கும், பின்னர் அது வராது,” என்று அவர் Osnabrücker Zeitung இடம் கூறினார். “ஒன்றும் செய்யாமல் இருப்பது ஒரு விருப்பமல்ல. சுகாதாரப் பாதுகாப்புக்கும் நமக்கு ஒரு ‘புதிய சகாப்தம்’ தேவை. குறிப்பாக, ஒரு கூட்டாளிக்கு ஆதரவு தேவைப்படும் சூழ்நிலையில், ஜேர்மனி மற்ற நாடுகளில் இருந்து காயமடைந்த மற்றும் காயமடைந்தவர்களை கவனித்துக்கொள்வதற்கான ஒரு மையமாக மாறும்.

பேர்லினில் நடந்த ஒரு மாநாட்டில், பொருளாதார மந்திரி ராபர்ட் ஹேபெக் (பசுமைக் கட்சி) “தரை வழிப்போர்” ஐரோப்பாவில் திரும்பிவிட்டதாக அறிவித்தார். எனவே ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தேசிய பாதுகாப்பு வரிசைப்படுத்தல் காட்சிகளை மீண்டும் செயல்படுத்துவது அவசியம். “அது ஒரு விலையில் வரும். இதைப் பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

உள்துறை மந்திரி நான்சி ஃபேசர் (SPD) ரஷ்ய போர்-எதிர்ப்பு பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து, உள்நாட்டில் அரச அடக்குமுறையை திட்டமிட்ட முறையில் கட்டியெழுப்புவதுடன் போர் மற்றும் சமூக வெட்டுக்களுக்கான எதிர்ப்பை அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

ரஷ்யாவை கலப்பினப் போர் என்று அவர் குற்றம் சாட்டினார். “பொய்கள் மூலம், பாரிய தவறான தகவல் மூலம் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளை நாங்கள் காண்கிறோம்,” என்று அவர் Süddeutsche Zeitung பத்திரிகையிடம் கூறினார். உளவாளிகளும் சுறுசுறுப்பாக உள்ளனர், என்று அவர் மேலும் கூறினார். அதே நேரத்தில், கிரெம்ளின் அகதிகள் இயக்கங்களை வேண்டுமென்றே ஊக்குவிப்பதாகவும், இடம்பெயர்வு மூலம் மேற்கு நாடுகளை சீர்குலைப்பதாகவும், “ரஷ்ய ஆக்கிரமிப்பினால் ஏற்படும் அச்சுறுத்தல்களின் புதிய பரிமாணத்தை நாங்கள் உண்மையில் அனுபவித்து வருகிறோம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேற்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் செல்வாக்கிற்கு எதிராக ஜேர்மன் அரசாங்கம் இன்னும் வலுவாக ஆயுதம் ஏந்தும் என்று அவர் கூறினார். தவறான தகவல் பிரச்சாரங்களுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். உள்துறை அமைச்சகத்தில் ஒரு புதிய போலிச் செய்திகளை முன்கூட்டியே கண்டறிதல் பிரிவு, பொய்கள் “ஒரு பெரிய அலையாக மாறுவதற்கும் இணையத்தில் வெள்ளம் பாய்வதற்கு” முன் அவற்றை அம்பலப்படுத்த வேண்டும் என்று ஃபேசர் கூறினார். நடைமுறையில், இது சமூக ஊடகங்களில் தேவையற்ற காட்சிகளை தணிக்கை செய்வதாகும்.

அதே சமயம், இஸ்லாமியர்களின் தாக்குதல்களை தடுக்கும் சாக்குப்போக்கின் கீழ், பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. பிரான்சில், அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை மிக உயர்ந்த பயங்கரவாத எச்சரிக்கை அளவை அறிவித்தது. கனரக ஆயுதம் ஏந்திய படையினர்கள் தற்போது மீண்டும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலந்து மீதான படையெடுப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் தொடங்கி எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மன் ஆளும் வர்க்கம் அதன் குற்றவியல் மற்றும் இராணுவவாத மரபுகளுக்குத் திரும்புகிறது. இந்த பைத்தியக்காரத்தனத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஆதரிக்கின்றன. போருக்கான எதிர்ப்பை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தால் மட்டுமே அதை நிறுத்த முடியும்.

Loading